அலை 🌊 29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மருத்துவமனையில் பெட்டில் கையில் கட்டுடன்‌ கண்களை மூடியபடி சோர்வாக அமர்ந்து இருந்தான் கார்த்திக்.

ரகு அவன் அருகில்  நிற்க பெருமூச்சுடன் விழிகளை திறந்தவன் “ரேவதி எப்படி இருக்கா ரகு…?” என்றான் அவனிடம்

“கண் முழிச்சிட்டாங்க சார் ஆனா  ஒன்னுமே பேசல பக்கத்து ரூம்ல தான் இருக்காங்க…” தளர்ந்து போய் வந்தது ரகுவின் பதில்.

அவனும் ரேவதியிடம் என்னவெல்லாமோ பேசி பார்த்து விட்டான், ஆனால் அவள் ஒரு வார்த்தையை கூட பேச வில்லையே… எதையோ வெறித்தபடி தானே அமர்ந்திருந்தாள்.

ரகு கூறவும் அதிர்ந்தவன்,  “ஏன் ஏன் பேசல..? அவளுக்கு வேற எங்கேயாவது அடிப்பட்டு இருக்கா…? டாக்டர் என்ன சொன்னாங்க..? அவ சேஃபா இருக்கால்ல…?”  என்றான் பதற்றம் குறையாத த்வனியில்.

ரகுவிற்கு கார்த்திக்கின் மனம் தெளிவாக புரிந்து விட்டது…  ஆனால் இது சாத்தியமா..? நடக்கின்ற விஷயமா…? இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் செய்து விட்டு இப்போது இப்படி ரேவதியின் மீது அதிகப்படியான அக்கரையையும் அன்பையும் பொழிவதில் ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்தவன், 

“அவங்களுக்கு அதிர்ச்சியில் மைன்ட் அப்சட் ஆகியிருக்கும் சார்… சோ கொஞ்ச நேரத்துல  அவங்களே சாதரணமா ஆகிடுவாங்க..” என்றவன் போனை அவனிடம் நீட்டி “வீட்டுல இருந்து நிறைய முறை கால் பண்ணிட்டாங்க சார்” என்றான் இறைஞ்சுதலாக, மறுபடியும் அழைப்பு வந்தால் என்ன சொல்லி சமாளிப்பது… இப்போதே முழி பிதுங்கி அல்லவா நிற்கிறான்.

தலையை இடவலமாக ஆட்டி போனை அணைத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் கார்த்திக். 

அவளை இந்த நிலைமையில் விட்டு வீட்டிற்கு செல்லும் மனநிலையிலோ அல்லது நிஷாவிடம் பேசும் நிலையிலோ கார்த்திக் சுத்தமாக இல்லை…. 

உடனே அவளை பார்க்க வேண்டும் என‌ மனம் உந்த  "அப்புறம் பேசுறேன் ரகு... இப்போ ரேவதிய பாக்கனும் வா போகலாம்...” என்றான் மற்றவையெல்லாம் பின்னுக்கு தள்ளி, 

போலாம் என எழுந்து நிற்பவனை இதற்கு மேல் தடை சொல்ல முடியுமா என்ன…?

“இதோ சார்… டாகடர் கிட்ட கேட்டுட்டு வரேன்…” என வேகமாக வெளியே சென்றவன், அடுத்த ஐந்து நிமிடங்களில் அறைக்குள் நுழைந்து ரேவதி இருக்கும் இடத்திற்கு கார்த்திகை அழைத்து சென்றான்.

ராகவின் மனைவி மீனாட்சி அறைந்ததில் ஒரு பக்கம் கன்னத்தில் கை தடம் பதிந்து சற்று வீங்கி இருக்க… முகம் சிவந்து  முடி கலைந்து, அலங்கோலமாக  காட்சி அளித்தாள் ரேவதி

காலையில் இருந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தாக்கியதில் நிலை குலைந்து விட்டாள். தைரியமான பெண் தான்… குடும்பத்தையே தாங்கியவள் தான்... ஆயிரம் பேருக்கு மத்தியில் நிமிர்வாய் சென்றவள் தான்…  ஆனால் ஒரு அளவுக்கு மேல் சூழ்நிலையின் கனத்தை தாங்க முடியாமல் மனதளவிலும் உடலளவிலும் மொத்தமாக தொய்ந்துப்போய் விட்டாள்.

ரேவதி அறை வாசலின் முன் வந்து நின்றவன் அவளையே சில கணங்கள் கூர்ந்து பார்த்தான்.  

தான் வந்ததற்கான எந்த ஒரு பிரதிபலிப்பும் அவளிடம் இல்லை… குறைந்தபட்சம் சின்ன புருவ சுருக்கத்தையாவது எதிர்ப்பார்த்தான்.  நீ யாரோ என்ற நினைப்பில் இருந்தவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பெண்ணவளிடம் எதையோ எதிர்ப்பார்த்து ஏமாற்றம் கொண்டது ஆடவனின் மனம்.

“ரேவதி…”   என அழைத்தான். 

அழுத்தமாக வந்த கார்த்திக்கின் அழைப்பில்,  தலையை உயர்த்தி அவனை பார்த்தாள். நெஞ்சில் முள் குத்தியது போல உணர்வை கொடுத்தது  அவளது பார்வையும் கோலமும். அழுந்த கண்களை மூடி தன்னை சீராக்கி, “வா போகலாம்” என்றவன் முன்னே செல்ல  பொம்மை போல அவன் பின்னோடு நடந்து வர அவர்களுக்கான மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு  ரகு அவர்களை பின் தொடர்ந்தான்.

…..

“அம்மா… ரகு சார்… கால் பண்ணி இருக்காரு இந்தாங்க பேசுங்க…” சிவா போனை காஞ்சனாவிடம் கொடுத்தான்.

“அவரு எதுக்கு போன் பண்றாரு சிவா… இன்னும் உங்க அக்கா வேற வீட்டுக்கு வரலை…. ஒரு மாதிரி படபடன்னு வருதேடா” பயத்துடன்  தான் அலைபேசியை வாங்கினார் காஞ்சனா.

“சொல்லுங்க சார்…”  தயக்கத்துடன் ரகுவிடம் பேசினார் காஞ்சனா.

“ஹலோ நான் ரகு பேசுறேன்… ரேவதி வேலை செய்ற ஆபிஸ்ல தான் நான் வேலை செய்றேன்…” காஞ்சனாவிடம் ரகு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, 

“தெரியும் சொல்லுங்க தம்பி… “ என்றார் காஞ்சனா.

“நான் சொல்றதை கேட்டு பதட்டப்படாதிங்க… பயப்படாதீங்க… நீங்க உடனே நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன் வரீங்களா” என்றான். சிறு குரலில், 

“என்னது போலீஸ் ஸ்டேஷனா…? என அதிர்ந்தவர்,  என்ன தம்பி… என்ன விஷயம்…? ரேவதி எங்க…? அவ இன்னும் வீட்டுக்கு வரல…? அவளுக்கு என்ன ஆச்சு…?  காஞ்சனா பயத்துடனும் படப்படப்புடனும் ரகுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, 

“பயப்பட‌ ஒன்னுமில்லைங்க… ரேவதி எங்க கூடத்தான் இருக்காங்க… ஒரு சின்ன பிரச்சனை அவ்வளவு தான்”  என்றவன் மேலும் எதுவும் சொல்லி அவரை  கலவரப்படுத்தாமல் போனை வைத்து விட காஞ்சனாவிற்கு தான் வயிற்றில் புளியை கரைத்தது. 

அம்மாவின் படப்படப்பை பார்த்த சிவா “என்னம்மா என்ன சொன்னாங்க ரகு சார்?” என்றான் 

“என்னன்னு  தெரியல டா விவரமா எதுவும் சொல்லல உன் அக்கா இப்போ எதுல மாட்டி இருக்காளோ 
அய்யோ என்ன ஆச்சின்னு தெரியலையே…! போலீஸ் ஸ்டேஷனுக்கு வேற வரச் சொல்றாங்க ரகு தம்பி”  கண்களில் நீருடன் காஞ்சனா புலம்பினார்.

“ம்மா ஒன்னும் இருக்காது” என்றவனுக்கும் பயத்தில் வியர்த்து வழிந்தது.

“ நீங்க ரெடியாகுங்க நான் இதோ வந்துடுறேன்” என்றவன் அம்மாவிற்கு தெரியாமல் ரகுவின் எண்ணிற்கு அழைத்து விசாரித்தான் சிவா.

சிவாவை ஏற்கனவே கண்டு இருந்த காரணத்தால் அவனிடம் சற்று தெளிவாகவே ரேவதியின் நிலையை விளக்கிய  ரகு அவர்களை சீக்கிரம் வந்து விடுமாறு கூறி வைத்தான்.

…..

ரேவதியை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்த கார்த்திக்கின் முகம்  அங்கிருந்தவர்களின் நிலையை கண்டதும் கோபத்துடன் இறுகியது..

ராஜ தோரணையுடன் இன்ஸ்பெக்டரின் முன்னே கஜா அமர்ந்து இருக்க, அடியாட்கள் ஓரமாக இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.

இவையெல்லாம் பார்வையில் பதிந்த போதும் எந்த வித உணர்வுகளும் இன்றி ரேவதி அவன் அருகில் நின்றிருந்தாள்.

ரேவதியை கையை பிடித்து அழைத்துக்கொண்டு வேக எட்டுகளுடன் இன்ஸ்பெக்டரின் முன் போய் நின்றவன்,

“என்ன சார் இது…?  கஜாவை கை காட்டி, இவனுங்க பண்ண வேலைக்கு அடிச்சி லாக்கப்புக்கு உள்ள தள்ளாம இப்படி வெளியே உட்கார வைச்சி உபச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கிங்க… ?” கொதிப்புடன் வார்த்தைகளை  வெளியேற்றினான் கார்த்திக்.

அவனை மேலிருந்து கீழாக பார்த்த இன்ஸ்பெக்டர், 

“யாரை எங்க வைக்கனும்னு எனக்கு தெரியும்…. அதை நீங்க சொல்ல தேவை இல்லை மிஸ்டர்… முதல்ல நீங்க யார்  … என் ஸ்டேஷன்ல வந்து கத்திக்கிட்டு  இருக்கிங்க…” என்றார் கொஞ்சம் அதிகார தோரணையுடன்,

கார்த்திக்குடன் ரேவதியை பார்த்த கஜாவிற்கு ஆத்திரமாக வந்தது… உரிமையாக அவள் கையை பிடித்தது வேறு எரிச்சலைக் கொடுக்க, அவர்களை முறைத்துக்கொண்டு இருந்தான். 

அவன்‌ பார்க்காத போலீஸா இல்லை ஜெயிலா… இது எல்லாம் சர்வ சாதாரணம்… பாவம் இது தெரியதா கார்த்திக்கோ நீதி நேர்மை நியாயம் என்று  நேர் வழியில் செல்ல, அவன் குறுக்கே புகுந்து இன்ஸை சரிகட்டி எப்படியாவது அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவுடன் அல்லவா அமர்ந்திருந்தான். 

அவர் கேட்கவும் சப் இன்ஸ்பெக்டர் வந்து அவரின் காதில் ஏதோ சொல்ல,  யோசனையுடன் அவனைப் பார்த்த இன்ஸ்பெக்டர்,  

‘ஓ… அதான் இவன் இந்த துள்ளு துள்ளுறானா!!. இவனை டீல் பண்ற விதத்துல தான் டீல் பண்ணனும்’ மனதிற்குள்ளயே கணக்கை போட்டவன், 

“இப்போ என்ன நடந்துடுச்சின்னு இப்படி பாஞ்சிக்கிட்டு வறிங்க நிதானமா உட்காருங்க… எல்லாம் பேசி தீக்குற விஷயம் தான்” என்றார் சற்று மிடுக்காகவே… கேட்டவனுக்கோ கை முஷ்டிகள் இறுகியது.

‘இவனெல்லாம் ஆள் முழுங்கி இவனிடம் போய் மாட்டிக் கொண்டனரே!!! எப்படியெல்லாம் திரித்து பேசப்போகிறானோ’ என அடியாட்களை  கைது செய்து ஏற்றி வந்த சப்_இன்ஸ்பெக்டர் தலையில் அடித்துக்கொண்டு ஒதுங்கி நின்றுக்கொள்ள, அவரின் தோரணையில் தெரிந்து விட்டது  இங்கு நியாயம் என்பது குதிரை கொம்பு தான் என்று… அதுவும் கால் மேல் கால்  போட்டு அமர்ந்திருந்த கஜாவின் தோரணையில் பல்லை கடித்த கார்த்திக்,,.

“என்ன  பேச போறிங்க சார்…  இதுல உட்கார்ந்து பேச என்ன இருக்கு…? வயசு பொண்ணை கடத்திட்டு போயிருக்காங்க… அவனுங்களை அடிச்சி வெளுக்கறதை விட்டுட்டு உட்கார்ந்து சமரசம் பேச கூப்பிடுறிங்க”  கார்த்திக் கொதித்திட,

“ஹலோ என்ன ரொம்ப துள்ளுறிங்க…? கொஞ்சம் அடக்கியே பேசுங்க… இது என் ஸ்டேஷன்… குரல உசத்துனா  நடந்தது இல்லன்னு ஆகிடுமா? என்னென்னமோ பேசுறிங்க…” இன்ஸ்பெக்டர் அதிகாரத் தோரணையில் கார்த்திக்கை கண்டிக்க, 

“அப்படி கேளுங்க சார்… நான் எவ்வளவோ முறை சொல்லி இருக்கேன் இந்த தொழிலை விட்டுடுன்னு இன்னைக்கு நான் வந்தது நல்லதா போச்சி இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்”

 கஜா ரீலை சுத்திக் கெண்டிருந்தான். கேட்ட கார்த்திக்கிற்கு தான் அவன் மீது கொலைவெறியே வந்தது…

இதற்கு மேல் அவனுக்கு பொறுமை போய் விட சற்று ஒதுங்கி வந்தவன் உடனே தீபக்கிற்கு அழைத்து விட்டான்.

“சொல்லு மச்சா” 

“தீபக் கொஞ்சம் நீலாங்கரை ஸ்டேஷன் வரை வாடா இங்க நடக்குறது ஒன்னும் சரியா படல”  

“என்னடா..?  என்ன நடந்தது…? நீ எதுக்கு அங்க போன” தீபக்கின் அடுத்த அடுத்த கேள்விகளுக்கு எல்லாம் வேலையே வைக்காமல் மடமடவென்று எல்லாவற்றையும் கூறியவன் உடனே தீபக்கை புறப்பட்டு வருமாறு அழைத்தான்.

“நான் இங்க பக்கத்துல தான் இருக்கேன்… இதோ உடனே கிளம்பி வர்றேன் “ தீபக் உடனடியாக வருவதாக கார்த்திகிடம்‌ ஒப்புக்கொள்ள கார்த்திக் கொஞ்சம் தெளிந்தான்.

பச்சையாக ரேவதியை பார்வையால் மேயந்துக் கொண்டிருந்தான் கஜா. கூடவே குறையாத கோபமும் இருக்க ‘ராங்கி புடிச்சவ என்ன நினைச்சிட்டு அவன் கூட ஜோடி போட்டு சுத்திக்கிட்டு இருக்கா…  இந்நேரம் நான் நினைச்சபடி நடந்திருந்தா இப்போ  நீ என் மடியில இருந்து இருப்படி… இப்பவும் ஒன்னும் கெட்டு போகல நீ எனக்கு தான்…’ வில்லச் சிரிப்புடன் அவளையே ஆளை முழுங்குவது போல பார்த்து வைத்தான்…

“ரகு நீ போய் ரேவதி அம்மா வர்றாங்களான்னு பாரு நான் ரேவதி கூட இருக்கேன்…” அவன் விலக எத்தனிக்க, 

“சார் விஷயம் ரொம்ப சீரியஸா போகுது போல இருக்கு… எதுக்கும் நம்ம பாஸ் கிட்ட ஒரு முறை விஷயத்தை சொல்லிடுவோமா..”

“வேண்டாம் ரகு வீட்ல சஞ்ஜய் இருக்காரு…” கார்த்திக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே  சிவா தாயை அழைத்துக்கொண்டு ஸ்டேஷன் வந்து விட்டான்.

“கார்த்திக் சார்.. அக்கா அக்காவுக்கு என்ன..?” பதற்றத்துடன் கார்த்திக்கின் கையை பிடித்துக் கொண்டான் சிவா. 

“பயப்படாத சிவா…உங்க அக்காவுக்கு ஒன்னுமில்லை உள்ள தான் இருக்கா வா…” என சிவாவை அழைத்தவன்,  “வாங்க…” என காஞ்சனாவையும் அழைத்துச் சென்று  சற்று ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த ரேவதியை காட்டினான். 

“என்ன ஆச்சி ரேவதி…? என்னடி இதெல்லாம்…? எதுக்கு இங்க வந்து இருக்க” காஞ்சனா அழுதிட சிவா “அக்கா…” என கையை பிடித்துக் கொண்டான். காஞ்சனாவிடம் ரகு ஒன்று விடாமல் கூறிட, அவருக்கு நெஞ்சில் பாரம் ஏற மகளை நினைத்து அழுகையில் கரைந்தார்.

தலையை குனிந்த படியே நின்றிருந்தவள் தாய் தம்பியை பார்க்கவும் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் கீழே இறங்கியது. யாரையும் ஏறெடுத்து‌ பார்க்கும் சக்தி இல்லை 

“அக்கா  அழாதக்கா உனக்கு ஒன்னுமில்லை…  நா… நாங்க இருக்கோம் கா…” ரேவதிக்கு தைரியம் செல்லியபடியே அவள் விழி நீரை துடைத்து விட்டான் சிவா.

சிவாவின் செயல் கார்த்திக்கை துவளச் செய்தது… அவளை அணைத்து ஆறுதலை தர முடியாத அவள் கண்ணீரை துடைக்க முடியாத தன் நிலையை முற்றிலும் வெறுத்து போனான் கார்த்திக்.

அவளைக் காப்பாற்றும் வரையிலும் எதை பற்றியுமே சிந்திக்காதவன் ரகு போனை கொடுக்க அதில் தவறிய அழைப்புக்களை பார்த்த பிறகு தான் தவறையே உணர்ந்தான்… இருந்தும் தன்னை அறியாமலேயே உடலும் உள்ளமும் அவளுக்காக பதறத்தான் செய்தது. இப்போதும் அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. 

அழுதபடியே இருந்த காஞ்சனா  திரும்பி கார்த்திக்கை பார்க்க அவனுக்கு பின்னே கஜா அமர்ந்திருப்பதை பார்த்தவர்,  தங்களுக்காக தான் தம்பி வந்துள்ளானோ என நினைத்து “கஜா…” என அழைத்துக்கொண்டு அவன் அருகில் சென்றார்.

“அக்கா …” பாசாங்கு கலந்தே அழைத்தான் கஜா

“பாருடா என் பொண்ணை… எப்படி வந்து நிக்குறான்னு… யாரோ கடத்தி என்னல்லாமோ ஆயிடுச்சி…” அவர் சொல்லிக் கொண்டே அழ இன்ஸும் கஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீ அழாதக்கா… அதான் நான் வந்துட்டேன் ல” அவன் ஹீரோவை போல பேச, சிவாவின் கைகள் அவனை அடித்து விட துடித்தது.

“இன்னும் என்ன இன்ஸ்பெக்டர் பாக்குறிங்க… நாங்க கம்பிளைன்ட் கொடுக்குறோம் இவனுங்களை அரஸ்ட் பண்ணுங்க” என்றான் கார்த்திக் பொறுமை இழந்து.. 

அதுவும் கஜா நடிப்பை பார்க்க பொறுக்க முடியாமல் இன்ஸ்பெக்டரிடம் நேரடியாக வந்து பேசினான்.

“ஹலோ என்னன்னு கம்பிளைன்ட் கொடுப்பிங்க…  இவனுங்க என்ன சொல்றானுங்க தெரியுமா..? அந்த பொண்ணு அடிக்கடி இவனுங்க கூட போகுமாம்… இப்பவும் அதுக்கு தான் இவனுங்க கூட போயிருக்கு, அங்க காசு தகராறுல சண்டை வந்து இருக்கு அப்படின்னு சொல்றானுங்க இதுல எதை நம்பி நான் கம்பிளைன்ட் எடுக்குறது… கருமம் கருமம் என் கழுத்தை அறுக்கவே இப்படி எல்லாம் கேசு வருது” அவர் சடைத்துக் கொண்டு ரேவதியின் மீது அபாண்டமாக பழியை போட்டார். 

கேட்டு கொண்டிருந்தவள் அந்நாளில் இரண்டாவது முறையாக அவமானத்தில் செத்தே போனாள்.

இன்ஸ்பெக்டரின் பேச்சை கேட்டதும் காஞ்சனாவிற்கு ஈரக்குலை பதறி துடிக்க “அடிப்பாவி என்ன பேர்டி வாங்கி இருக்க…?  இதுக்கு தானே தலப்பாடா அடிச்சிக்கிட்டேன் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் வேண்டாம்னு… ஆடுறேன் ஆடுறேன்ன்னு குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைச்சிட்டியே டி பாவி” 

அவர் தலையாலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டது மட்டுமில்லாமல் ரேவதியின் மீதும் இரண்டு அடிகள் விழ சிவா அவரை தடுத்து அந்த அடிகளை தாங்கிக் கொண்டான்.

கார்த்திக்கின் இரத்தமெல்லாம் கொதித்தது இன்ஸ்பெக்டரை கையோடு அடிக்கவே பாய்ந்து விட ரகு தான் அவனை தடுத்து “சார் என்ன சார் இது… இது போலீஸ் ஸ்டெஷன் நாம எது பண்ணாலும் தப்பா ஆகிடும் கொஞ்சம் பொறுமையா  பண்ணுங்க” என்றான் தவிப்பாக.

அதே நேரம் தீபக்  ஸ்டேஷனுக்கு வந்து விட்டான். அவனின் காக்கி உடையை  கண்டதும், இன்ஸ்பெக்டர் எழுந்து நிற்க, ஒரு சின்ன தலை அசைப்புடன் விரைப்பாக நின்றவன் “என்ன ஆச்சி கார்த்திக்” என்றான்…

ஏற்கனவே கேட்டு அறிந்து இருந்தாலும் இன்ஸ்பெக்டர் முன்னால் கேட்டான்.

நடந்ததை விளக்கிட “என்ன இன்ஸ்பெக்டர் இதெல்லாம் தகுந்த ஆதாரம் இருந்தும் நீங்க எப்படி ஆக்ஷ்ன் எடுக்காம உட்கார வைச்சி இருக்கிங்க” என்றான் தீபக் சற்று கோபமாக

“சார் இது ஒரு பக்கம் மட்டுமே விசாரிக்க முடியாது… இவங்களும் அந்த பொண்ணு பேல பழி சொல்றாங்க” என்றார் இன்ஸ்பெக்டர் சற்றும் தயங்காமல்,

“என்ன…?” தீபக் அதிர்ந்தான்.

“ஆமாம் சார், இவங்களுக்கும் இந்த பொண்ணுக்கும் ஏற்கனவே பழக்கம் போல… அடிக்கடி போயிட்டு வந்துட்டு தான் இருந்து இக்கா இப்போ பணப் பிரச்சனையில  இவங்க மேல கம்பிளைன்ட்” என்று கூறிக்கொண்டே வர கார்த்திக் கோபத்தில் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து விட்டான்.

“டேய் கார்த்திக் கொஞ்சம் இருடா” தீபக் அவனை விளக்கி விட, இன்ஸ்பெக்டர் அவன் மேல் கொலைக்காண்டில் இருந்தான்.

“என்ன தைரியம் இருந்தா போலீஸ் மேலேயே கையை வைப்ப” இன்ஸ்பெக்டர் எகிறி வர அவரை தடுத்த தீபக் “நீங்க பேசினதும் தப்பு இன்ஸ்பெக்டர்…” என்றான் சற்று கடுமையாக

“ரேவதியை கடத்திட்டு போனதை பார்த்த  சாட்சி ஆதாரங்கள் இருக்கும் போது,  எப்படி ஆதரமே இல்லாம அந்த பொண்ணு மேல பழியை போடுவிங்க…?”  அவன் விசாரணையில் சற்று ஜெர்க் ஆன கஜா 

“சார் இது பொண்ணு மேட்டரு காது காதும் வைச்சி முடிக்கறதை விட்டுட்டு கேஸ் அது இதுன்னு ஏன் பெரிசு ஆக்குறிங்க…” என்றான் பரிந்து வந்து…

இவனை யார் என்பது போல தீபக் பார்க்க கார்த்திக் கஜாவை முறைத்தான்.

“என்னடா தம்பி இது?”  காஞ்சனா தம்பியிடம் சொல்லி அழ,

“நான் பாத்துக்குறேன் கா… நீ இரு..” கஜா அவரை சமாதானம் செய்வது போல பேசி, அவனை நல்லவனாக காட்ட முயன்றுக் கொண்டிருந்தான்.

அதுதான் கார்த்திக்கிடம்  நடக்காதே “தீபக் ரேவதியை கடத்துனதுல  முதல் அக்கீயூஸ்டே இதோ நிக்குறானே இவன் தான்… இவன் தான் எல்லாத்துக்கும் காரணம்…” கஜாவை பற்றிய உண்மையை கூறவும் கேட்டுக் கொண்டிருந்த காஞ்சனாவிற்கு அதிர்ச்சி.

“இல்ல தம்பி… நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கிங்க… அவன் ரேவதிக்காக தான் இங்க வந்து இருக்கான்…” தம்பிக்கு காஞ்சனா நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்க,

“அம்மா நீ சும்மா இரும்மா கார்த்திக் சார் யாரு மேலேயும் பொய்யா பழி போட மாட்டாரு உண்மை இருக்கப் போய் தான் சொல்றாரு இந்த ஆளு மேல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல அக்காவை இவன் தான் கடத்தி இருப்பான்” அவன்  கஜாவின் மீது பார்வையை பதித்துக் கொண்டே சொல்லவும்,

ஏற்கனவே அக்கா மகனின் பேச்சு ஒரு மாதிரி தான் இருக்கும், இன்றும் அதே தோணியில் இருக்க, 

“உன் பிள்ளைகள் எதுவும் நம்மை பேச்சை கேக்குறது இல்லக்கா… என்னமோ நான் என் குடும்பம்னு வந்தா இப்படித்தான் மூக்கு அறுபட்டு உட்காந்து இருக்கனும்… பாரு இந்த குட்டியை பெயரை கெடுத்து வைச்சிருக்கு இந்த விஷயம் எல்லாம் வெளியே தெரிஞ்சா இப்போ யார் இவளை கல்யாணம் பண்ணிக்குவா…” வேண்டுமென்றே காஞ்சனாவின் மனநிலையை குழப்பி விடும் வேலையை செய்தான் கஜா…

அவன் பேச பேச தீபக்கின் சந்தேக வட்டத்தில் விழுந்தான் கஜா 

“ஏய் யார் நீ… உனக்கு அங்க ரேவதியை கூட்டிட்டு போன விஷயம் எப்படி தெரியும்” பொறுமை இழந்த தீபக்  அவனை விசாரிக்க ஆரம்பிக்க,

“சார் இது என் ஸ்டேஷன் கேஸ்… உங்க சோன்(zone) இது இல்லை… என் ஸ்டேஷன்ல நீங்க விசாரணையை பண்ண முடியாது…” என தீபக்கின்  விசாணையை இன்ஸ்பெக்டர் தடை செய்ய, 

“கார்த்திக் இது வேற மாதிரி போகுது இவன் ஏதோ பிளான் பண்றான்‌ இந்த ஸ்டேஷன் என் லிமெட் ல வராது… சோ கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணனும்” என்றான் தீபக் கார்த்திக்கிடம் ரகசியமாக.

“இப்போ என்னதான்டா சொல்றாங்க கம்பிளைன்ட் பைல் பண்ணுவாங்களா மாட்டாங்களா” கார்த்திக் கோபத்துடன் கத்த

“நீங்க சொல்றதை எல்லாம் எடுக்கனும்னு இருந்தா முதல்ல இந்த பொண்ணுக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் தான் எடுக்கனும்…”  என்றதும் காவல் நிலையம் என்றும் பாராமல் ரேவதி மடங்கி அழவே ஆரம்பித்து விட்டாள். 

அதை கண்ட சிவா அவளை சாமாதனம் செய்ய, ஒன்றும் புரியாத காஞ்சனா “என்னடா சிவா அவரு ஏதோ சொல்றாரு இவ ஏன்டா இப்படி ஒடஞ்சிப்போய் அழகுறா? என்னடா என்ன சொல்லிட்டாரு அந்த போலீஸ்காரர்?” என்றார் மகள் அழுவது காண முடியாமல் மகனை கேள்வியில் துளைத்தார்.,

கார்த்திக்கின் நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. இதை சற்றும் எதிர்ப்பார்க்க வில்லை என்பது அவன் அதிர்விலேயே தெரிய சட்டென்று ரேவதியின் பக்கம் தான் அவன் கண்கள் சென்றது. 

“அம்மா அது வந்து  அது…” வெகுவாக தயங்கியவன், “அக்கா கன்னி தன்மையோட இருக்கா இல்லையான்னு அக்காவுக்கு டெஸ்ட் பண்ணனும்னு சொல்றாங்கம்மா” என்றான் கண்கள் கலங்க குரல் தழதழுக்க 

இன்னும் எத்தனை ஏச்சு பேச்சுக்களைத்தான் வாங்குவாள் மடங்கி  அழும் மங்கையின் அழுகையை காண முடியாமல் ஒற்றை கையை பிடித்து அவளை எழுப்பி நிறுத்தியவன் “நீ ஏன் அழுகுற ரேவதி… அவன் சொல்லிட்டா அப்படி செய்ய விட்டுடுவேனா” என்றான் கொந்தளிக்கும் மனதுடன்.

“என் பெண்ணு வாழ்க்கையே போச்சே…  அய்யா அய்யா என் பொண்ணை விட்டுடுங்க அய்யா இப்படியே கூட்டிட்டு போயிடுறேன் அவளை வார்த்தையால கொல்லாதிங்க”  காஞ்சனா அந்த மனசாட்சியற்ற இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சலுடன் கதறிட,

“அடச்சே  முதல்ல இந்த டிராமவை நிறுத்துமா… உன் பொண்ணை பத்தி  எல்லாம் தெரிஞ்சிதாம்மா பேசுறோம் இதோ இவனுங்கள கேளு உன் பொண்ணோட வண்டவாலத்தை புட்டு புட்டு வைப்பானுங்க” அங்கிருந்த ஒருவனை இன்ஸ்பெக்டர் கை காட்டினான்.

“பாருடி பாரு எவ்வளவு சொன்னேன் இதெல்லாம் வேணாம் எவனையாவது ஒருத்தனை கல்யாணம் பண்ணி தொலை தொலைன்னு… உன்னை எப்படி டி இன்னொருத்தன் கையில பிடிச்சு கொடுக்குறது…  அப்பவே அவன் பாத்த மாப்பிள்ளையை  கல்யாணம் பண்ணி இருந்தா இப்போ இந்த பழி வந்து இருக்குமா… அபாண்டமா சொல்றானுங்களே… டேய் டேய் கஜா பாருடா நம்ம புள்ளைய என்னனவோ சொல்றாங்க…”

தம்பியை தான் இப்போதும் துணைக்கு அழைத்தார் காஞ்சனா.

கார்த்திக்கிற்கால் இதற்கு மேலும் ரேவதி அவமானப்படுவதையும் அவளது கற்பு விமர்சிக்கப் படுவதையும் பார்க்க முடியவில்லை… 

உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… என்றான் காஞ்சனாவிடம் தீர்மானமாக…

ரகுவும் தீபக்கும் அதிர்வாக கார்த்திக்கை பார்க்க,  

சிவா கார்த்திக்கின் கைகளை பிடித்து கண்களில் ஒத்திக்கொண்டு கண்ணீரை வடித்தான். 

காஞ்சனா கேட்டது உண்மை தானா என விளங்காத பார்வை பார்த்திட,

தெனாவட்டாக அமர்ந்திருந்த கஜா அதிர்ச்சியில் இருக்கையை விட்டு எழுந்தே விட்டான்.

“ஏய் என் வீட்டு பொண்ணை கட்டிக்க நீ யாரு… யாருக்கு கட்டிக் கொடுக்கனும்னு எங்களுக்கு தெரியும்… நீ கிளம்பு… அக்கா என்ன இது…? எவன் எவனோ குட்டிய கட்டிக்க கேக்குறான்” என்ன பேசுவது அவனை எப்படி விரட்டுவது என தெரியாமல் கஜா கண்மண் தெரியாமல் கத்த தொடங்கினான். 

அவனை தொடர்ந்து இன்ஸ்பெக்டரோ  “இது என்ன போலீஸ் ஸ்டேஷன்னு நினைச்சிங்களா இல்ல கல்யாண மண்டபம் னு நினைச்சிங்களா உங்க இஷ்டத்துக்கு எல்லாம் இங்க எதுவும் நடக்காது கிளம்புங்க கிளம்புங்க” என்றார் அதட்டலாக…

முதலில் அதிர்ந்தாலும் கார்த்திக்கின் உறுதியை பார்த்த தீபக் “ஏன் ஏன் முடியாது? எத்தனையோ பேருக்கு போலீஸ் ஸ்டேஷன்ல கல்யாணம் ஆகிருக்குன்னு தெரியுமா…  எத்தனையோ காதல் ஜோடிய இந்த போலீஸ் ஸ்டேஷன் சேத்து வைச்சி இருக்கு தெரியுமா …” என்றான் நக்கலாக,

“ரகு…”  இன்னும் அதிர்வு விலகா பாவனையில் இருக்க, அவனை அழைத்த தீபக் எதையோ காதில் சொல்லி அனுப்பினான். போன பத்தே நிமிடத்தில் வேகமாக வந்தவன் தீபக்கிடம் கொடுக்க அதனை‌ புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.

இத்தனை கலேபரத்திலும் தலையை குனிந்த படியே நின்றிருந்தாள் ரேவதி… மடையுடைந்து நீர் வெளியேறுவது போல  கண்களில் நீர் நில்லாமல் வெளியேறிக் கொண்டிருந்தது… 

இப்படியே இந்த நொடியே பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என மனம் ஏங்கியது… ஒரு வார்த்தைக்கூட பேச முடியாமல்  உள்ளுக்குள்ளயே மனம் வெதும்பி ஊமையைப் போல நின்றிருந்தாள் பேதை. 

பேசி என்ன பயன் இதற்கு மேலும் நான் சுத்தமானவன்னு யாருக்கு நிறுப்பிக்கனும் சிந்தனையில் ஓட ஜென்மமே செத்து விட்டது அவளுக்கு.

யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் ரேவதியை மட்டுமே பார்த்திருந்தான் கார்த்திக். 

அவள் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன், என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்றான் நிறுத்தி நிதானமாக 

அவன் கேட்கவும் மலுக்கென்று கண்களிலிருந்து நீர் முத்துக்கள் கன்னத்தில் உருண்டோட  தன்னிச்சையாக இமை மூடி திறந்தாள். அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன் தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மங்கையவளின் கழுத்தில்  அணிவித்தான் அவள் மணவாளன். 

விழி எடுக்காமல் அவனையே பார்த்தாள் ரேவதி… அவள் விழி நீரை தன் பெருவிரல் கொண்டு கார்த்திக் துடைக்க. 

தன் கையில் இருந்த மஞ்சள் கிழங்கு வைத்து  கட்டிய தாலி கயிற்றை கார்த்திக்கிடம் கொடுத்து “இதை கட்டு” மச்சான்‌ என்றான் தீபக் இன்ஸ்பெக்டரை பார்த்துக் கொண்டே,

அவருக்கோ முகத்தில் ஈ ஆடவில்லை கஜாவை வைத்து ஏதேதோ கற்பனை கோட்டை கட்டியிருக்க அதை இடித்து தரைமட்டம்  ஆக்கி இருந்தான் கார்த்திக்.

கையில் இருந்த மஞ்சள் கயிற்றை பார்த்தான். அவளை‌ப் பார்த்தான். ஒரு நிமிடம் கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவன், அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டு அவளை பார்த்தபடியே பாவையின் பளிங்கு கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாய் ஆக்கிக்கொண்டான் ஆடவன்.

அவளை திருப்பி தன் தோளோடு சேர்த்து நிற்க வைத்தவன் “இப்ப இருந்து அவ மிசஸ் ரேவதி கார்த்திக்… இனி நீங்க எந்த இடத்துக்கு டெஸ்ட்க்கு கூப்பிட்டாலும் இந்த கார்த்திக் கூட இருப்பான். மைன்ட் இட்…” கார்த்திக் விரல் நீட்டி எச்சரித்த சமயம், கஜாவின் மனைவி மீனா, ஓட்டமும் நடையுமாக காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள்.

காஞ்சனாவின் கையை பிடித்தவள்‌ “அண்ணி ரேவதி ரேவதிய கடத்திட்டு போயிட்டதுல அந்த படுபாவிக்கும் பங்கு இருக்கு” மூச்சு வாங்க விட்டு விட்டு வார்த்தைகளை வெளியேற்றினாள்….

“புரியல மீனா யாரு…. தெளிவா சொல்லு” காஞ்சனா பதற மீனாவை பார்த்த கஜாவிற்கு கைகால்கள் ஆட்டம் கண்டு விட்டது.

“வேற யாரு… எல்லாம் என் புருஷன் தான்… நேத்து ரேவதியை கடத்த திட்டம் போட்டது காலையில பேசினது வரை எல்லாம் எனக்கு தெரியும்.. எங்க நான் சொல்லிடுவேனோன்னு என்னை அடைச்சி வைச்சி விஷம் வைக்க டிரை பண்ணான் கா இவன்‌” என்றாள்‌ அழுதுக் கொண்டே, 

உண்மையை  நம்ப முடியாமல் காஞ்சனா தம்பியை‌  பார்க்க “அக்கா அவ பொய் சொல்றாக்கா” என்றான் சற்றும் தயங்காமல்.

அவர்களின் உரையாடலை கேட்டு முன்னே வந்த தீபக் “நீங்க சொல்லுங்கமா என்ன நடந்தது என்ன விஷயம்” என்று  அவளிடம் விசாரித்தான்.

“சார் நான் இதோ நிக்குறாரே இந்த ஆள் கஜேந்திரனோட பொண்டாட்டி… இந்த ஆளு ரேவதி மேல இருக்க ஆசையில எனக்கு விஷத்தை கலந்து இந்த ஆள் கூட்டாளி குமார் கிட்ட கொடுத்து விட்டு இருக்கான்  என் நல்ல நேரம் அதுல இருந்து எப்படியோ தப்பிச்சிட்டேன்  இந்த ஆள் ரேவதிய கடத்த போறேன்னு போன்ல ரவுடிக்கிட்ட பேசினதை என் காதால்  கேட்டேன்… விஷயத்தை ரேவதி அம்மா கிட்ட சொல்லலான்னு வரும் போது தான் நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறது தெரிஞ்சிது… அதான் நானே வந்துட்டேன்… இவனை ஜெயில்ல பிடிச்சி போடுங்க சார்.. இவன் அந்த பொண்ணை அடையத்தான் சார் இவ்வளவையும் பண்ணன்… என்னையும் சாகடிக்க பாத்தான்* என்றாள் குமுறி குமுறி அழுதுக் கொண்டே….

“நாசமா போறவனே நீ நல்லவன்னு நினைச்சேனேடா என் உடன் பொறந்த பொறப்பா  நினைச்சேனடா… என் புள்ளைக்கே துரோகம் செய்துட்டியே டா” என காஞ்சனா மனம் ஒடிந்து அழுதிட,

“அந்த ஆளை பத்தி இப்போவாவது தெரிஞ்சிதே… இனி தம்பி கிம்மின்னு உருகி கிட்டு இருந்த அவ்வளவு தான்மா இனியாச்சும் திருந்து மா… “ என்றான் சிவா அழும் அன்னையிடம்.

“என்ன இன்ஸ்பெக்டர் இன்னும் ஆதாரம் தேவைப்படுதா..?” என தீபக் இன்ஸ்பெக்டரை முறைக்க “நோ நோ சார்” என்றவன் கஜாவையும் அவனது ஆட்களையும்‌ சிறையில் அடைத்தான். 

“அய்யா சாமி என் பொண்ணை அந்த கேடு கெட்டவன் கிட்ட இருந்து காப்பாத்திட்டிங்க”  என கார்த்திக்கை பார்த்து  காஞ்சனா கையெடுத்து கும்பிட அவர் கரங்களை‌ இறக்கி விட்டவன்,

“ சிவா அம்மாவை அழைச்சிட்டு போ வெளியே போ நான் கம்பிளைன்ட் எழுதி கொடுத்துட்டு வரேன்” என்றவன் தீபக்குடன் முறையாக அனைத்தையும் முடித்து விட்டு ரேவதியுடன் வெளியே வரவும் காற்று வீசவும் சரியாய் இருந்தது. 

ஸ்டேஷன் வாசலில் இருந்த கொன்றை மரத்தில் இருந்த மலர்கள்

அவர்கள் மீது  மஞ்சள் மலர்களை தூவி தன் நல்லாசிகளை வழங்கிட காஞ்சனா கண்களில் நீருடன் மகளை கண்ணாற கண்டார்.

சிவா ரேவதியின் கைகளை‌ பற்றிக் கொள்ள அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்‌ ரேவதி. 

“அக்கா நீ எவ்வளவு தைரியமா இருப்ப… ஏன்‌ ஒரு வார்த்தை கூட பேசல… அவனை நீ‌ நாக்கை புடுங்குற‌ மாதிரி கேட்டு இருக்கனும்”  சிவா கொதிக்க 

“சிவா…”  என்றான் கார்த்திக் அழுத்தமாக

கஜாவின் பெயர் ரேவதியின் முன் பேசப்படுவதில் கார்த்திக்கிற்கு உடன்பாடு இல்லை என்பதை புரிந்து கொண்டு அமைதியாகி விட,

“சாரி சார்… என் அக்கா எவ்வளவு கஸ்டப்பட்டு இருக்கா அந்த ஆளால” என்றான் குரல் கமர ரேவதியை நினைக்கையில் அவனுக்கு தொண்டை அடைத்தது. 

“விடு நான் பாத்துக்குறேன்…. சிவாவை சமாதானம் செய்தவன், மனைவியின் முகத்தை பார்த்தான். குழப்பத்தையும் வலியையும் பிரதிபலிக்க,

“ சிவா நீ அம்மாவையும் இவங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ நான் சொல்றேன் அப்போ நம்ம வீட்டுக்கு கிளம்பி வாங்க” என்றான் தன்மையாக அவன்ஜக்ஷ நிலையும் புரிய சிவா காஞ்சனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

வீட்டில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்தவன் அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறினான் 

“கார்த்திக் நீ சமாளிச்சிக்குவியா?” தீபக் தான் கேட்டான்  

“சமாளிக்க முடியும்னு நினைக்கிறேன் இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு நீ கெளம்புடா நான் பார்த்துக்கிறேன்” 

“ரகு நான் கிளம்புறேன்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி வந்தவனுக்கு‌ இன்னும் சஞ்ஜயும் நிஷாந்தியும் இங்கு தான் இருப்பார்கள் என‌ தெரியாமல் போனது…

நடந்ததை எல்லாம் நினைத்தவனுக்கு ரேவதி தன் உடன் இருப்பதே பெரிய விஷயமாக தெரிந்தது. இதயத்தில் சொல்லொன்னா அமைதி பரவ நிம்மதியாக  கண்களை‌ மூடிக்கொண்டான்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro