அலை 🌊 30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அலை 30

ரகு முழுதாய் சொல்லி முடிக்கவும், தேவராஜ் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி இருந்தார்.

கார்த்திக் ரேவதியுடன் திருமண கோலத்தில் வந்து நின்றதுமே மனம் சுருக்கென்று தைத்தாலும் ஏதோ பலமான காரணம் உள்ளதென்னு அனுமானித்திருந்தார்.

ஆனால் இதை முற்றிலுமாக எதிர்ப் பார்க்கவில்லை ரேவதியை நினைத்து சற்று வருத்தமாகக் கூட இருந்தது.

தேவராஜின் யோசனையான முகத்தை பார்த்தான் ரகு,

“கார்த்திக் சார் தவிர்க்க முடியாத சூழ்நிலையில தான் ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிட்டார் பாஸ் “  

எங்கே கார்த்திக்கின் மனம் இவருக்கு தெரிந்துவிடுமோ என்ற எண்ணத்தில் தேவராஜிடம்  உரைத்திருந்தான் ரகு.

அவருக்கு தெரியாதா பிள்ளையின் மனம் பற்றி முன்னர் சந்தேகமாக இருந்தது இப்போது உறுதியாகி விட்டதே, மெல்லிய சிரிப்புடன் ரகுவின் முதுகில் தட்டிக் கொடுத்தவர்,

“கார்த்திக் மேல அவ்வளவு அக்கரையோ”  கிண்டலுடன் ரகுவை பார்த்தார்.,

அவர் பேச்சும் செயலும் அவனுக்கு ஒருவித கிலியை கொடுத்திட,  “பாஸ்…” என்றான் பதறிக்கொண்டு…

“நான் உங்க கார்த்திக் சாரோட அப்பன் ரகு....”  மெலிதாக சிரித்தார் தேவராஜ்.

அவர் சிரிப்பும் இந்த இலகுத்தன்மையும் ரகுவிற்கு ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஒருசேர கொடுத்தது.

‘ஒருவேளை இவருக்கு கார்த்திக் சாரை பத்தி முன் கூட்டியே தெரிந்து இருக்குமோ’ சந்தேகமாக அவரை  பார்த்தான்.

அவனின் ஆராயும் பார்வையும் குழப்ப முகத்தையும்   பார்த்தவர் 'என்ன...?' என்பதாய் புருவம் சுருக்க,

தேவராஜின் பார்வை மாற்றத்திலேயே அவரின் கேள்வியை அறிந்துக் கொண்டவன்,

"ந... நத்திங் பாஸ் "

ரகு திணறிட அவனை,  தட்டிக்கொடுத்து சரி நீ கிளம்பு என ரகுவை அனுப்பியவர்  மனைவியை  தேடிச் சென்றிருந்தார்.

…..

கூடத்தில் முகம் வாட கண்களில் நீர் திரண்டு,  மகளைப் பற்றிய நினைப்புடனே அமர்ந்திருந்தார் காஞ்சனா.

விழிகளில் மட்டும் நீர் நில்லாமல் வெளியேறியது. அன்னையின் அழுத்தத்தில் குடிக்க தண்ணீரை கொண்டு வந்து நீட்டினான் சிவா…

அதை கூட கவனத்தில் கொள்ளாது காஞ்சனா தன் நிலையிலேயே உழன்றிருந்தார்.

கஜாவின் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் தாய் தவிக்கிறார், உள்ளுக்குள் மறுகுகிறார்‌ என்பதை உணர்ந்திருந்தவன், தண்ணீர் சொம்பை கீழே வைத்து விட்டு அவரது அருகில் அமர்ந்தான்.

காஞ்சனா மகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை…. 

கஜா செய்ததில் இடிந்து போய் இருந்தவருக்கு தன்னை நினைத்தே அதித வெறுப்பு.

‘படுபாவி இப்படி என் தலையில் நெருப்பை அள்ளி கொட்டி விட்டானே, என் பிள்ளைகளை எவ்வளவு வாட்டி இருக்கான்…
மகளுக்கு நேர்ந்த அவமானங்களெல்லாம் அவனால் தானே…. கேட்க கூடாத கேள்வியெல்லாம் அவனால் தானே  கேட்க நேர்ந்தது....

கூடவே இருந்து தன் மகள் மீதே வெறி பிடித்து அலைந்துள்ளானே... அந்த பாவியை நல்வன்னு நம்பி  பாலுக்கு பூனையை காவல் வைத்தது போல கூடவே வைத்து இருந்திருக்கிறேனே....  அவன் எண்ணம் தெரியாமல் மகள் மீது அல்லவா கோபத்தை காட்டினேன்' 

தன் முட்டாள் தனத்தையும் அறியாமையும் நினைக்க நினைக்க அந்த தாயுள்ளம் கண்ணீரை தான் சிந்தியது.

காஞ்சனாவின் இந்நிலை சிவாவிற்கு வருத்தத்தை கொடுத்தது.

"அம்மா...."  என அழுத்தமாக அழைத்தான்.

தலையை உயர்த்தி மகனை பார்த்தவருக்கு மீண்டும் கண்ணீர் உடைப்பெடுத்தது.

ம்மா….  தாயை சலிப்பாக பார்த்தான்.

“நடந்ததையே நினைச்சி அழுதுட்டே இருக்காதம்மா... அடுத்தது என்னன்னு  பாரு…” என தாயின் கண்ணீரை துடைத்தான்.

மகனின் பேச்சு அவரை மேலும் குற்றவுணச்சியில் தள்ளியதில்,

“அவனைக்  கூட பிறந்த பிறப்பா நினைச்சேன் சிவா... எனக்கு அப்புறம் உங்களுக்கு துணையா இருப்பான்னு நம்பி தானே டா இருந்தேன்.... தாய் மாமானா இருப்பான்னு பார்த்தா, ரேவதி மேல வெறி பிடிச்சி போய் இல்லடா அவன் இருந்து இருக்கான்... அது தெரியாம அவனுக்காக எத்தனை முறை நான் பெத்த பொண்ணு கிட்டயே சண்டை போட்டு இருக்கேன்... இப்படி நடிச்சி நம்ப வைச்சி கழுத்து அறுத்துட்டானேடா….”

என்றவருக்கு அவனை நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் கொதித்தது.

“அவனைப் பத்தி அக்காவும் அப்போ அப்போ சொல்லிட்டு தானே மா இருந்துச்சி உனக்கு தாம்மா அந்த ஆளைப் பத்தி தெரியல.... இனியாவது வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்காதம்மா எல்லாரும் உன்ன போலவே இருக்க மாட்டாங்க” என்றான் அன்னையை  சமாதானம் செய்யும் விதமாக...

“என் மனசு ஆறவே இல்ல.
என் பொண்ணு  எப்படியெல்லாம் துடிச்சி போய் இருந்து இருக்காடா..?”

மேலும் கார்த்திக்கின் இல்லத்தில் என்ன நடக்குமோ என ஒரு பக்கம் மகளுக்காக காஞ்சனாவின் மனம்  பரிதவித்திட,

“ அந்த தம்பி வீட்டுல என்ன நடக்கும்னு நினைச்சாலே என குலையே நடுங்குது டா” என்றார் குரல் தழுதழுக்க....

“பச்.... ம்மா... கார்த்திக் சார் அக்காவை நல்லா பாத்துக்குவாரும்மா... நீ பயப்புடாதா... அக்கா ஒரு நல்ல இடத்துக்கு தான் போயிருக்கா... அவரை தவிர யாராலையும் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்து இருக்க முடியுமா "  மனம் நிறைந்து கூறினான் சிவா.

ஏற்கனவே சிவாவின் மனதில் கார்த்திக் உயர்ந்து  அல்லவா நிற்கிறான்... இன்று காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் வேறு அவனை இன்னும் உயர்த்தி காட்டியது.

மகனின் சந்தோஷ முகத்தை  வருடியவர்,

“அவர் நல்லவரு தான் சிவா அவரை எதுவும் சொல்லல நமக்கு ஒரு கஷ்டம்னு இருக்கும் போது கடவுள் மாதிரி வந்து நின்னவரு… நான் பயப்படுற விஷயமே வேற... ஏற்கனவே அவருக்கு நிச்சயம் ஆகி இருக்க இந்த நேரத்துல, இந்த கல்யாணம் என்ன பிரச்சனைய கொண்டு வருமோன்னு தான் பயமா இருக்கு... அவங்க அந்தஸ்துக்கு முன்னாடி நாம எல்லாம் ஒன்னுமே இல்லடா...  அப்படி இருக்கும் போது இந்த கல்யாணத்தை ஏத்துக்குவாங்களா...? அதை நினைச்சி தான் சிவா என் மனசு பதறுது… என் பொண்ணுக்கு அந்த கடவுள் ஏன் தான் இப்படி ஓர வஞ்சனை செய்யுறானோ…?” என நெஞ்சம் குமுறினார்..

"ம்மா... என்னம்மா இது...?" சிவா தடுத்தும் காஞ்சனா அழுகையை தொடர்ந்தட,

பதட்டத்துடன் ரேவதியின் வீட்டிற்குள் வந்த திவ்யா அவர்களின் அழுகையை பார்த்து விட்டு

"என்ன ஆச்சி சிவா...? அப்பா அம்மா என்னென்னமோ சொல்றாங்க... ரேவதிய பத்தி" என்றாள்  முகம் வெளிறி

ரகு போன் செய்ததில் இருந்து கூறிய சிவா ஸ்டேஷனில் நடந்ததையும் விளக்க "அவனை எல்லாம் செருப்பாலையே அடிச்சி இருக்கனும்... சும்மா விட்டு வந்து இருக்கிங்க..? உங்கள சொல்லனும்,  ரேவதி சொல் பேச்சி கேட்காம தம்பி தம்பின்னு தலையில தூக்கி வைச்சி ஆடுனதுக்கு நல்லா செஞ்சிட்டான்" என்றாள் குறையாத கோபத்தோடு...

திவியின் திட்டுக்கள் காதில்  விழுந்தாலும் ரேவதியின் நினைவில் தவித்தவர், மனபாரத்தோடு சுவற்றில் தலையை சாய்த்தார்.

அவரது செய்கையில் திட்டுவதை நிறுத்தியவள், *என்னாச்சிடா..?" என்றாள் சிவாவிடம்,

"கார்த்திக் சார் வீட்டில் என்ன நடக்குமோன்னு அம்மா அக்காவை நினைச்சி பயப்புறாங்க திவ்யா அக்கா"   என்றான் இறங்கிய குரலில், தாயின் தவிப்பு ஒரளவு அவனுக்கும் புரிபட  முகம் விழுந்து குரல் உள்ளே சென்று விட்டது.

"அதெல்லாம் கார்த்திக் சார் பாத்துக்குவார்... நீயேன் இப்படி இருக்க...? இப்ப வரைக்கும் கூட இந்த கல்யாணம் ஆனதை என்னால நம்ப முடியல சிவா…."

"ஆனா ரேவதிக்கு கார்த்திக் சார் மாதிரி ஒருத்தர்  கணவரா வந்தது தான் சந்தோஷமான விஷயம் கெட்டதுலையும் ஒரு நல்லது நடந்து இருக்கு…" என்றாள் உள்ளார்ந்த மகிழ்வோடு,

ரேவதியை நினைத்து கலங்கி போனாலும், அவளது வாழ்க்கை கார்த்திக்கோடு அமைந்ததில் மகிழ்ந்த மற்றொரு ஜீவன் திவ்யா தான்.  அந்த நேரம் ராகவ் எல்லாம் அவள் நினைவிற்கு வரவே இல்லை... அவன் ஆடிய ஆட்டம் என்வென்று  தெரிந்திருந்தால் இன்னுமே வெடித்திருப்பாள்.

இவ்வளவு சொல்லியும் காஞ்சனாவின் முகமும் உடன் பிறந்தவன் முகமும் தெளியாதிருக்க அங்கே என்ன நடந்தது என  தெரிந்துக் கொள்ள ரேவதியின் எண்ணிற்க்கு அழைத்தாள் திவ்யா.

ரேவதியின் போன்  அலுவலகத்தில் அடித்து அடித்து ஓய்ந்து விட  கார்த்திக் எண்ணிற்கு அழைக்க, அது எடுப்பாரற்று அனாதையாக இருந்தது…  மிகுந்த யோசனையுடன்  "வேற‌ யாருடைய நம்பராவது தெரியுமா சிவா…?" என்றாள் தன்னுடைய மொபைலில் எண்களை தேடியவாறு

சட்டென நினைவு வந்தவனாக "ரகு சார் நம்பர் இருக்கு திவ்யா க்கா"  சிவாவின் பதிலில்,.

அவனா … சற்று யோசித்தவள் வேறு வழியில்லததால் "சரி கொடு" என்றாள் விருப்பமேயற்று  ஒரு இரண்டு அழைப்புகளுக்கு பிறகு போன் எடுத்த ரகு,  "யாரு....?" என்றான்.

"நா.ன் ரேவதி ப்ரெண்டு திவ்யா பேசுறேன்…"

"திவ்யா..?" அவன் யோசனையில் மௌனமாக,

"பச் அன்னைக்கு கூட எங்கள ஃபாலோவ் பண்ணிட்டு வந்து அடி வாங்குனிங்களே" அவள் அன்று இரவு நடந்த முதல் சந்திப்பை விளக்க,

அந்த நாள் நினைவு வரவும் பல்லை கடித்தவன், "இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணி இருக்க...?" ரகு எரிச்சலாக,

"ம் உங்க கூட கொஞ்சி குலாவ மூச்சியை பாரு" எரிச்சாலாக முனுமுத்தவள்  "கார்த்திக் சார் ரேவதி யாருமே போன் எடுக்கல... அங்க என்ன நடந்ததுன்னு தெரியாம  இங்க  நாங்க தவிச்சிட்டு இருக்கோம் என்னம்மோ ரொம்ப தான் பொங்குறிங்க"  அவனுக்கு சலைக்காத எரிச்சலோடு இவளும் பேசினாள்.

இவளிடம் பேசினால் இன்னுமே தான் டென்ஷன் ஏறும் என்பதை உணர்ந்த ரகு 

"நீங்க பயப்படுற அளவுக்கு அங்க எதுவும் நடக்கல… அவங்க நல்லாதான் இருக்காங்க….  மேடம் தான் கொஞ்சம் கோவமா இருக்காங்க மத்தபடி பெருசா எந்த பிரச்சனையும் நடக்கல” நடந்ததை சுருக்கமாக கூறி அவளது மனதை குளிர்வித்தான் ரகு.

"ம் இதை சொல்ல இவ்வளவு சலிப்பா...! சரி நாங்க அங்க எப்போ வர்றது...? சார் வேற போன் எடுக்க மாட்டறார்... அவளுக்கு ஏதாவது தேவைன்னா எப்படி..."  இன்னுமே சந்தேகத்துடன்.  "அவளும் போனை எடுக்கவில்லை" என்றாள்  குறையாக,

மாலை அலுவலகத்தில் வைத்து தானே இத்தனை களேபரங்களும்  நடந்தது ஒருவேளை  ரேவதியின் போன் ஆபிஸ்ல இருந்து இருக்குமோ? என சந்தேகம் வர "அவங்க போன் ஆபீஸ் ல மாட்டி இருக்கும் நான் கொண்டு வந்து கொடுக்குறேன்…"  என்றான்.

"சரி  இப்போ எப்படி அவ கிட்ட பேசுறது"  சற்று உரிமை கலந்த கோவத்தோடு,

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும் மதியத்திலிருந்து அந்த பொண்ணுக்கு அடிமேல அடி" அவன்  எரிச்சலாக முனுமுனுக்க,

"என்ன...என்ன ஆச்சி மதியம்...? என்ன ஆச்சி..?" என்றாள்  சற்று அதிர்ந்தவளாக

உஃப் என வாயில் ஊதி காற்றை வெளியேற்றியவன்  ராகவ் வந்ததையும் அவன் மனைவி நடந்துக்கொண்ட முறையையும் கோபத்துடன் சொல்லி முடிக்க

"அந்த விளங்காதவன் இப்படி எல்லாம்‌ என் ரேவதியை டார்ச்சர் பண்ணானா...? அவன் பொண்டாட்டி அதுக்கு மேல ஆடி இருக்கா..? அவ மட்டும் என்‌ கையில கிடைச்சா அந்த தலைய மாவு ஆட்டுறா மாதிரி ஆட்டி விட்டுவேன்..." என புசுபுசுவென மூச்சி வாங்க கோபத்துடன் பேசிய  திவ்யாவின் பேச்சில் அதிர்ந்தவன் சிலையாக சமைந்துவிட,

"ஹலோ… ஹலோ… யோவ் லைன்ல இருக்கியா?" அவன் அமைதியில்  திவ்யா  அதட்டலுடன் அழைத்தாள்.

மரியாதை எல்லம் கொடுக்கும் பழக்கம் அவள் சரித்திரத்தில் இல்லையென்பதை உணர்ந்த ரகு  "என்ன...?"  என்றான். அதே எரிந்து விழும் பாவனையில்,

"ம்... உன் சொத்தையா எழுதி கேட்டேன்....? இப்படி எரிஞ்சி விழற...? ரேவதிக்கு .ஆறுதல் சொல்லனும் அவளை பாக்கனும்... சார் கிட்ட பேசனும்... அதுக்கு  எப்போ வர்றதுன்னு கேட்க போன் பண்ணா  ரொம்ப பேசுற" அவள்  தோரணையாக பேச்சில் இவன் வாய் பிளக்க,

“இது விடாது கருப்புப் போல டா ரகு…”  ரகு மனதிற்குள்  திவியை பற்றி எண்ணம் ஓடியது.

“என்ன பதிலையே காணும் யோவ் பீஏ இருக்கியா…? அதிகாரமாக அழைத்தாள் திவி.

அவள் அழைப்பில் பல்லை கடித்தவன்  “இப்போ அங்க நிலைமை சரியில்லை… நீ ஒன்னும் போய் கிழிக்க வேண்டாம் கார்த்திக் சார் எல்லாத்தையும் சரிபண்ணிட்டு கூப்பிடுவாரு”  படபடவென பொரிந்து விட்டு போனை அடைத்து பாக்கெட்டில் வைத்தான்.

"சுண்டெலி மாதிரி இருந்துக்கிட்டு என்ன வாயி டா சாமி… கொஞ்சம் கூட மரியாதை இல்லாம என்ன பேச்சு பேசறா...?" சத்தமாகவே முனுமுனுத்தவன் அவள்‌ மேல் இருந்த கோபத்தையெல்லாம் வண்டியில் காண்பித்து கிளம்பியிருந்தான்.
…..

மூடியிருந்த அறைக்குள் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி… அதீத அமைதி…

அவளே எதிர்ப்பார்க்காதது,
அத்தனையும் ஒரே நாளில் நடந்து முடிந்து  விட்டதில் மனம் ஒரு நிலையில் இல்லை.

ஏசியின் குளுமையிலும், சுழலும் மின் விசிறியின் காற்றிலும்,  உடல் சில்லிட்டாலும் உள்ளுக்குள் நெருப்பாய் சில விஷயங்கள் கனன்று கொண்டு தான் இருந்தது…

ரேவதியின் முகத்தையே பார்த்திருந்தாள் சுஜா… அவளின் அமைதி, கலைந்த தலை, நலுங்கிய தோற்றம், வாடிய முகம், களைத்த கண்கள்,  பெரிய இக்கட்டில் இருந்து மீண்டு வந்திருக்கிறாள் என்ற செய்தியை சொல்லாமல் சொல்லியது அவளுக்கு,

ரேவதியின் அருகில் அமர்ந்தாள் சுஜா. கதவு தட்டப்பட்டதில் நிமிர்ந்து வாசலை பார்த்தாள்.

"கொண்டு வாங்க..."  வாசலில் காபியுடன் நின்றிருந்த பணிப் பெண்ணிடமிருந்து காபியை வாங்கிக் கெண்டவள் அவரை அனுப்பி வைத்து கதவை மூடி விட்டு வந்தாள்.

“ரே….  அவளை பெயர் வைத்து  அழைக்க வந்தவள் தலையை இடவலமாக  அசைத்து "அண்ணி…”  என அழைத்தாள்‌ அவளின் இத்தனை நாள் ஆசை இன்று நிஜமானது ஆனால் யாரின் மனதிலும்  துளி சந்தோஷமில்லை…

கல்லாய் அமரந்திருந்தவள் சுஜாவின் ஒற்றை அழைப்பிற்கு உடைந்து அழுது விட்டாள் ரேவதி…

“அண்ணி அழாதிங்க ப்ளீஸ் “ சுஜாவின் சாமாதனங்கள் எதுவுமே எடுபடவில்லை . அழுகை அழுகை மட்டுமே அவளிடம்.

தன் அமைதியின் அபத்தம், இப்போது பூதாகரமாக மாறி அவளை இறுக்கியது… கழுத்து தாலி அதன் கணத்தை கூட்டி அவளை குற்றவாளியாக்கி சித்திரவதை செய்தது.

'தப்பு பண்ணிட்ட ரேவதி... அவர் கல்யாணத்திற்கு சம்மதம் கேட்ட போது நீ அமைதியா இருந்து தப்பு பண்ணிட்ட...' உள்ளுக்குள் ஒரு குரல் அவளை உயிரோடு கொன்றுக் கொண்டிருந்தது.

'இல்லை... நான்... எனக்கு...'  தனக்குள்ளே வாதங்கள் தொடங்கி விட்டது.

'அவர் உனக்காக பேசினாலும், அங்க நீதானே பேசுப் பொருள் உன்னால உன்னை காப்பத்திக் கொண்டிருக்க முடியாதா…? கார்த்திக்  யார்..? அவர் இன்னோருத்திக்கு  நிச்சயமான மாப்பிள்ளை  அவர் கையால் தாலி கட்ட எப்படி சம்மதிச்ச…? உன்னால சுஜாதாவின் வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கிட்ட… அவரையே நம்பி இருந்த பொண்ணோட வாழ்க்கை, நீ தட்டி பறிச்சிட்ட ராகாவின் மனைவி  மீனாட்சி சொன்னதெல்லாம் நீ உண்மையா ஆக்கிட்டயே…'. மனசாட்சி  முகத்தில் அறைவது போல அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றியது.

மனம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து துடித்தவள்,

“தப்பு… பண்ணிட்டேன்…. நான் தப்பு பண்ணிட்டேன் ….அவர் கையால் தாலி கட்ட விட்டு இருக்க கூடாது…”  முகத்தை மூடி அழுத்தாள் பெண்.

தங்கையை காண வந்த கார்த்திக் இதை கேட்டு உடல் விறைத்து முகம் கசங்கியவன் சத்தமில்லாது வெளியே சென்று விட்டான்.

அண்ணி ஏன் இப்படி உங்களையே காயப்படுத்திக்கிறிங்க…  சுஜா அவள் கை பற்றிக்கொள்ள,

"நா….ன் என்னால உங்க வாழ்க்கை..." அவள் முழுவதும் முடிக்காமல் திணறவும் ரேவதியின் மனம் புரிந்து இருந்தது சுஜாதாவிற்கு,

அவளை அமர்த்தி  அவள் பக்கத்தில் உட்கார்ந்தவள் "வலிக்குது இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்… ஆனா என்னால உங்க சூழ்நிலையை புரிஞ்சிக்க முடியுது அண்ணி…  இத்தனை நெருக்கடி இருந்தும்,  உங்களை எங்க அண்ணா கல்யாணம் பண்ணி இருக்காருன்னா அதுக்கு பலமான காரணம் இருக்கும் இப்போ அதை கேட்டு உங்கள சங்கடப்படுத்த விரும்பல…."

"சஞ்ஜய்… அவர் எனக்கு தான்னு விதி இருந்தா கண்டிப்பா அதை யாராலும் மாத்த முடியாது…  நீங்க நடந்ததை நினச்சி வருத்திக்காதிங்க.... அப்புறம் எங்க அண்ணன் பண்ண விஷயத்துக்கு வேல்யூ இல்லாம போயிடும்  போங்க போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க" அவள் கபோர்டிலிருந்து புதிதாக எடுத்த சுடிதாரை கொடுத்தாள்.

சுஜாவின் அமைதியான முகத்தையே பார்த்தாள் ரேவதி….  "போங்க அண்ணி"  வலுக்கட்டாயமாக கரங்களில் துணியை கொடுத்து உள்ளே அனுப்பி  வைத்தவள் சூடாக அவளுக்கு இரவு உணவை வரவழைத்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro