ஆம்பல்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திரண்ட காம்புகளைக் கொண்ட ஆம்பல் மலர் பசுமையான இலைகளுக்கு மேல் பரந்து காணப்படும் அந்த குளத்தில் தென்றல் வீசும் போதெல்லாம் மேலெழும் நீர்ச்சுழற்சியில் சிக்கி மூழ்கி மூழ்கி எழும் ஆம்பலைப் போலத்தான் பாவையவளின் காதலும்.
அவனின் காதலில் தினந்தினம் மூழ்கி எழ முடியாமல் தவிக்கின்றாள்.

"இங்கே வா மா " என்ற அய்யரின் அழைப்பில் எழுந்தவள் முகம் கொள்ளாப் புன்னகையுடன் சிவப்பு நிற ஜரிகை புடவையில் தன் நீண்ட கூந்தலை பின்னால் போட்டுக் கொண்டு அவர் அருகில் சென்று நின்றாள்.

கண்களால் கவிதை படைக்கும் பெண்ணவள்,இதழ்கள் கூட மொழி பேசும் அவளவனிடம் மட்டும்.
மாநிறத்தில் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்ளும் அழகி அவள்.

"எல்லாம் தயார் செஞ்சுட்டேன் ,மாப்பிள்ளை எங்கே " எனக் கேட்டவரை நோக்கி புன்னகை செய்தவள் தன் புடவை மடிப்பைத் தூக்கிக் கொண்டு ஓடினாள் கோவிலின் பின்புறம்.
அவளின் கால் கொலுசு ஒலி அவனுக்கு தேன் பாயும் சங்கீதம்...
அவனுக்கு பிடிக்குமென்றே நாள் முழுவதும் அவள் நடக்க , ஓடத் தயார்...

ஆரம்பத்திலிருந்த புன்னகை மறைந்து இப்போது வெட்கப்புன்னகையும் கலந்து கொள்ள அய்யர் முன் மூச்சு வாங்க நின்றவள் " ஆரம்பிங்கோ அய்யரே " எனக் கூற

" மாப்பிள்ளை காணோமே டா" என்றவர் அவள் பின்னால்  தேட 
தன் கைகளுக்குள் பொத்தி வைத்திருந்த அவன் புகைப்படத்தை அவர் முன் நீட்டியவள் "இதோ இருக்கார்.....என் மனசுலையும் இருக்கார் " என்றவள் " நீங்க மந்திரம் சொல்லுங்கோ " எனக் கூறியவள் அவனின் புகைப்படத்திலேயே தன் விழிகளைப் பதித்தாள்....

அவள் செய்கையைப் பார்த்து குழம்பியவர் " பெரியவா யாரும் வரலையா " எனக் கேட்க
அவரைப் பார்த்து சிரித்தவள் " நான் பைத்தியம்னு நினைச்சுட்டீங்களா அய்யர் " எனக் கேட்க அவர் திடுக்கிட்டார்...
ஆம் அவர் நினைத்தது அதுவே...

"இல்ல..இல்லை மா " என்று திக்கியவரை

" ப்ளீஸ் நல்ல நேரம் முடியப் போகுது மந்திரத்தைச் சொல்லி மாங்கல்யத்தை தரீங்களா ?...நான் பிறகு எல்லாம் சொல்லுகிறேன் " என்றவளின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவரை தலையசைக்க வைத்தது...

மாங்கல்யம் தந்துநானேந மம ஜீவன ஹேதுநா, 

கண்டே பத்நாமி சுபகே த்வம்ஜீவ சரத சதம்

என்ற அய்யரின் மந்திரமொழிகளில் தன்னவனை நினைத்துக் கொண்டவள் தன் பொற்கரங்களை அவன் கரங்களாக நினைத்துக் கொண்டு மாங்கல்யத்தைக் கட்டிக் கொண்டாள்....

இமைகளைத் தாண்டி வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் அய்யரை நன்றி கலந்த பார்வை பார்க்க அவரின் ஆராய்ச்சிப் பார்வையை எதிர்கொண்டவள் நேராக சன்னதியின் முன் சென்று நின்றாள்...

"கடவுளே என் மாமா நல்லாருக்கணும்"
இதுமட்டும் தான் என்றும் அவளின் வேண்டுதல்..

தெப்பக்குளத்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்தவள் அந்த ஆம்பல் மலரையேப் பார்த்துக் கொண்டிருக்க
"இப்போவாச்சும் சொல்லு மா ....மாப்பிள்ளை தம்பி எங்கே " என்று கேட்க தன்னவனின் நினைவில் முகம் மலர்ந்தவள் அவனைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்...

" டேய் வெற்றி....உன் அத்தைப் பொண்ணு கயல் உனக்காக தெப்பக்குளத்தில காத்திருக்காளாம்...உன்னை சீக்கிரம் வர சொன்னா" என்ற தன் நண்பனின் எரிக்கும் பார்வையில் சிரித்தவன்
" உன் தங்கச்சி நல்ல நல்ல வார்த்தைகளால் உன்னை புகழ்ந்துட்டா போலேயே...தங்கச்சினு சொல்லாம என் அத்தைப் பொண்ணுனு சொல்லுற என்ன சங்கதி" என்று கூறிக் கிண்டலடித்தவனை அடித்தவன்
பொண்ணா டா அவ "இப்ப என் மாமாவை மட்டும் வர சொல்லல உன் சாப்பாடுல விஷத்தை வெச்சுருவேன்" அப்படினு சொல்லுறா டா....
" என் சித்திக்கு இப்படி ஒரு பொண்ணா..." என்று சிலாகித்தவன் முகம் உடனே மாறி
"மாமா மாமானு உன்னையே தான் டா நினைச்சுட்டு இருக்கா...அவளை பத்திரமா பார்த்துக்கோ டா " என்றவனை அணைத்துக் கொண்டவன்
" அவ என் கயலு டா " என்று கூறிப் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தவன்  "மாமா"  என்ற சத்தம் கேட்டு திரும்ப அங்கு கயலோ இடுப்பில் கை வைத்து தன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள்...

"யம்மா கண்ணகி...உன் அண்ணா பாவம் மா என்னை முறைச்சே சாம்பலாக்கிடாத..." என்றவனிடம்
"இன்னைக்கு ராத்திரி சாப்பிட வீட்டுக்கு தானே வருவ...அப்போ கவனிச்சுக்கிறேன் " என்றவள் தன் மாமாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓட

" சிவநாண்டி பொண்ணு மாயாண்டி பையனை இழுத்துட்டு ஓடுறாளே " என்று நக்கலடித்தவனை கண்டு முறைத்தவள் கீழே குனிந்து கல் எடுத்து அவனை நோக்கி எறிய
" அய்யோ கொலை "என்று கத்தியவனை தன் தாவணியை எடுத்து இடுப்பில் சொருகி அடிக்க தயாரானவளை இழுத்தவன்
"அடியேய் கண்ணம்மா" என அழைக்க தன் மாமனின்  குரலில் வழிந்த காதலைக்  கேட்டு மயங்கித் தான் போனாள் மங்கையவள்...

"மாமா" அவளுக்கே கேட்காத குரலில் தன் மாமனுக்கு வலிக்குமோ என்று அவள் அழைத்த விதம் அவனை பாடாய்படுத்தியது...

இடுப்பில் சொருகிய மஞ்சள் நிற தாவணி அவள் இடை அழகை அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்ட
அவளை இன்னும் தன்னருகே இழுத்தவன் "கண்ணம்மா" என அழைக்க மயங்கி நின்றிருந்தவள் க்கீக்கீ என்ற ஒலியில் தன்னிலை வந்து முகச்சிவப்பை மறைத்துக் கொண்டு அவன் முகம் பார்க்காமல்  கையைப்  பிடித்து இழுத்துக் கொண்டு தெப்பக்குளத்திற்கு சென்றாள்...

அங்கே படிக்கட்டில் அவனை அமரச் செய்தவள் ஒரு படியிரங்கி கீழே அமர்ந்துக்கொண்டு அவன் மடியில் தலைவைத்துக் கொள்ள
" என்னாச்சு டி " என்றவனுக்குத் தெரியுமே அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று...

தன் மாமன் தெரிந்தே தான் இதைக் கேட்கிறான் என அறிந்துக் கொண்டவளும் " எப்போ மாமா கிளம்புற " எனக் கேட்க
அவளைப் பார்த்து புன்னகைத்தவன் "நாளைக்கு காலைல..." என்று கூற

"ஓஓ " என்றவளை அப்படியே அணைத்துக் கொண்டவன்
"இது அம்மாவோட ஆசை மட்டும் இல்லை கண்ணம்மா என்னோட ஆசையும்...நான் பிறந்ததிலிருந்தே என் அப்பா முகத்தைப் பார்த்ததில்லை....எனக்கு மூன்று வயசு இருக்கும்...என் அப்பா வந்துட்டாருனு எல்லாரும் சொன்னாங்க..
ஆத்தங்கரைல விளையாடிட்டு இருந்த நான் அப்பாவை பார்க்க ஓடிப் போனேன்...ஆனால் அவரு என்னைக் கண் திறந்து பார்க்க முடியாத நிலைல வந்தாரு...அம்மாவைப் பார்த்தேன்...அவங்க அழுகவே இல்லை ,என் கணவர் நாட்டுக்காக இந்த உயிரை விட்டுருக்கார், நான் அழ மாட்டேன் நீங்க ஏன் அழுறீங்க? அழுதா இங்கே இருக்க வேணாம் போங்கனு கத்த ஆரம்பிச்சுட்டாங்க...என்கிட்ட வந்து என் முகம் முழுவதும் முத்தம் கொடுத்துட்டு என் கணவன் நாட்டுக்காக உழைக்காம போயிட்டாரேனு கவலை பட்டேன் இப்போ என் பையன் இருக்கான்...." அப்படினு சொல்லி என்னை அப்பாக்கு இறுதி சடங்கு பண்ண கூட்டிட்டு போனாங்க...
அப்பாக்கு இதோ இந்த கையால தான் கொள்ளி வெச்சேன்...
எல்லாரும் திட்டுவாங்க புருஷனைத் தான் பலி கொடுத்த இப்போ புள்ளையையுமானு  ஆனாலும் அம்மா வருந்துனதே இல்லை...
ஒவ்வொரு வீட்டில இருக்கவங்களும் இப்படி நினைச்சா நாட்டை யாரு பாதுகாக்கிறதுனு சொல்லுவாங்க...
நானும் அப்படிதான் வளர்ந்தேன்...நீ " என்று ஆரம்பித்தவனை
"நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேனு நினைச்சியா மாமா...உனக்கு பிடிச்ச எல்லாத்தையும் தான் காதலிக்கிறேன்...நீ பத்திரமா போயிட்டு வா மாமா...நான் உனக்காக காத்திருக்கிறேன் " என்றவளை கண்டு வியந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட மெய் சிலிர்த்தது அவளுக்கு...

அவள் முகத்தைக் கைகளில் தாங்கியவன் "இதோ இந்த ஆம்பல் மலர் மாதிரி தான் டி நீ...அவ்வளவு அழகு...உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்"

" எவ்ளோ மாமா " என்று கண்ணடித்தவளை முறைத்தவன்
அந்த கண்களுக்கு தண்டனை கொடுத்தான் தன் இதழ்கள் மூலம்...

"இப்போவே மொத்தமா கொடுத்திடலாம் நினைச்சியா மாமா" என்றவளின் ஏக்கக் குரல் அவனை வதைக்க அவளை காற்று புகாதவாறு இறுக்கி அணைத்துக் கொண்டவன்
" நான் வருவேன் டி...நீ எப்பவும் கயல்விழிவெற்றிவேந்தன் தான் சரியா " என்றவனிடம் கண்ணீருடன் தலை அசைத்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க அவளைப் பார்த்து சிரித்தவனின் சிரிப்பில் மெய்மறந்து நின்றாள்.

"என் நியாபகம் வரும்பொழுது எல்லாம் இங்கே வா...நான் உன்கூடவே இருக்க மாதிரி உனக்கு தோணும் சரியா " என்றவன் என்ன கூறினாலும் அவள் தலை சரி என்று தான் ஆட்டும்.
அவளுக்கு அவனின் இந்த அணைப்பு வேண்டும்.
இனி எப்போது கிடைக்குமோ இந்த அணைப்பு என்று நினைத்தவள் அவனுள் புதைந்துக் கொண்டாள்.

"வா போலாம் " என்றவனை வேண்டாம் எனத் தடுத்தவள் பின் சிறிது புன்னகையை சிந்தி "வா மாமா போலாம்" என்று அழைத்துக் கொண்டு நடக்க திடீரென்று நின்றவள் அவன் இதழ்களை சிறை செய்ய அவளின் ஒட்டு மொத்த பிரிவின் வேதனையும் அதில் தெரிய அவளை நினைத்து வருந்தியவன் " லவ் யூ டி கண்ணம்மா" என்று கூற புன்னகைத்தவள் "சரி டா மாமா " என்று கூறி நாக்கைக் கடித்துக் கொண்டு ஓடிவிட்டாள்.
இல்லையென்றால் யார் அவள் மாமானிடம் கொட்டு வாங்குவது டா என்று அழைத்ததற்கு.

அந்த அதிகாலைப் பொழுதில் வெற்றி  அவனின் கண்ணம்மாவிற்கு காத்திருக்க அவள் வராமல் இவனுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்...
அவன் முன் வந்தால் கண்டிப்பாக அழுதுவிடுவாள்...
அவளை தேடிய அவன் விழிகளில் தெரிந்த காதலில் கண்கள் கரிக்க தூரத்தில் இருந்து தன் மாமனின் தேடலை ரசித்துக் கொண்டிருந்தாள் அவனின் கண்ணம்மா.

பேருந்து வந்து அவன் ஏறி விட இப்போது அதை நோக்கி ஓடிவந்தவளை கண்கள் முழுவதும் நிரப்பிக் கொண்டவன் தன் பயணத்தை ஆரம்பித்தான்.

மாதத்திற்கு ஒரு முறை வரும் அவனின் கடிதத்திற்காக அவள் மாதத்தின் ஒவ்வொரு நாளும் காத்திருப்பாள்.
அந்த தெப்பக்குளம் மட்டும் தான் அவளிடம் வாழிடம் என்றாகி விட அந்த ஆம்பல் அவளாகவும் நீர் அவனாகவும் மாறிவிட்டது அவளுக்கு.

ஆம்பல் தண்ணீரில் மூழ்கி எழுந்தால்
அவள் அவன் மாமனை அணைப்பது போல...
வேண்டும் என்றே கற்களை எறிந்து அவனின் மாமனை அணைத்துக் கொள்வாள் அவள்.

இவளின் காதலைக் கண்டு மெய் மறந்து நின்றவர் அடுத்து என்ன நடந்தது ஏன் இந்த  முடிவு என கேட்க வாயைத் திறக்க

ஆறு மாதத்திற்கு முன் ஒரு கடிதம் வந்தது அய்யரே  என்றவள் கண்கள் கலங்க அதைத் துடைத்துக் கொண்டவள் கூற ஆரம்பித்தாள்..

அடியேய் கயல் உன் மாமன்கிட்ட இருந்த கடுதாசி வந்துடுச்சு என்ற தன் தோழியின் சத்தத்தில் ஓடி வந்தவள் கண்களில் கண்ணீருடன் அதைப் படிக்க ஆரம்பித்தாள்.

"கண்ணம்மா எப்படி இருக்க? அம்மாவை பார்த்துக்கோ டி...நான் நல்லாருக்கேன்.
உன் நினைவுகள் மட்டும் தான் டி என்னை இங்கே உயிர்ப்போட இருக்க வைக்குது...உன்னோட அணைப்பு இப்போவே வேணும்னு தோணுது இப்போவே தெப்பக்குளத்துக்கு போறியா " என்ற வார்த்தையைப் படித்தவள் அப்பொழுதே ஓடினாள் தெப்பக்குளத்தை நோக்கி.

அங்கிருக்கும் படிக்கட்டில் அமர்ந்தவள் படிக்க ஆரம்பித்தாள்...
"நாங்க இப்போ காஷ்மீர் பார்டருக்கு போகப்போறோம் டி, மூன்று மாதம் கடிதம் எதுவும் வராது" என்ற இடத்தில் அவன் கண்ணீர் இருக்க இவளுக்கும் கண்ணீர் வழிந்தோடியது.

"உன் மாமா உன்னைத் தேடி வருவேன் டி,உன்கூடவே இருப்பேன்!நீ எப்போவும் கயல்விழிவெற்றிவேந்தன் தான்....ஆயிரம் முத்தங்களுடன் உன்னவன் " என்று அவன் கடிதத்தை முடித்திருக்க  அவள் அங்கேயே சிலைப் போல அமர்ந்திருந்தாள்.

மூன்று மாதம் அவளுக்கு நரகமென நகர அதற்கு பிறகும் அவளுக்கு கடிதம் வரவில்லை.
நேற்று அத்தை என் வீட்டுக்கு வந்தாங்க மாமா அவங்க அம்மாவுக்கு எழுதன கடிதத்தை காட்டுனாங்க அப்பாகிட்ட.

"நல்லாருக்கீங்களா அம்மா நான் நல்லாருக்கேன் மா...நான் காஷ்மீர் பார்டருக்கு போகப்போகிறேன் மா...ஒரு மூன்று மாதம் அங்கே தான்..அதற்கு பிறகு வந்து நான் கடிதம் எழுதுறேன்...அப்படி கடிதம் வரலான நானும் வரமாட்டேனு....உங்களுத் தெரியும்னு நினைக்கிறேன் மா..நம்ம நாட்டுக்காக நான் உயிரைக் கொடுக்க தயாராகிட்டேன் மா...ஆனால் என் கண்ணம்மா ??? அவ பாவம் மா...நான் வரலைனா எப்படியாவது அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திடுங்க மா " என்றவனின் அந்த கடிதத்தை படித்த கயலின் அப்பா அழுக " அழாதீங்க அண்ணா..
" இப்போ ஒரு தந்தி வந்துச்சு நாளைக்கு நம்ம வெற்றி வரானாம்" என்ற வார்த்தையை தன் அறையிலிருந்து ஒட்டுக் கேட்டு கொண்டிருந்தவள் மகிழ அடுத்து அவர் கூறிய வார்த்தை அவளை அப்படியே மண்ணுக்குள் உயிரோடு புதைத்தது போல் இருந்தது...

" நான் எப்பவும் என் மாமாவோட மனைவி தான் என் மாமா இப்போ வந்துருவாரு..நான் போறேன் அய்யரே" என்றவளிடம்

" போயிட்டு வரேனு சொல்லுடா " என்றவர் கண்கள் கலங்கி இருக்க
"வாழ்ந்தா என் மாமாவோட நினைவுகளில் வாழணும் செத்தாலும் மாமாவோட நினைவுகளில் தான் சாகணும்..." என்றவளின் விரக்தி புன்னகை அவள் என்ன கூறவருகிறாள் என புரியாமல் இருக்க அவள் ஆம்பல் மலரைக் காட்டி விட்டு சென்றாள்.

வெற்றிவேந்தனின் வீட்டில் கூட்டம் கூடியிருக்க தேசியக்கொடி போர்த்தப்பட்ட நிலையில் அவன் உடல் இருக்க அதைப் பார்த்தவாறு வந்த கயலின் தோற்றம் அனைவரையும் அதிரவைத்தது.

தன் கழுத்திலிருத்த மாலையை அவனுக்கு அணுவித்தவள் "மாமா " எனக் கூறி அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள அவளை எழுப்ப வந்த அனைவரையும் தடுத்து நிறுத்தியவள்
" நான் எப்பொழுதும் கயல்விழி வெற்றிவேந்தன் தான் மாமா ...நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்" என்றவள் அவன் நெற்றியில் இதழ் பதிக்க
" கண்ணம்மா கூப்பிட மாட்டியா மாமா" என்றவளின் ஏக்கம் அனைவரையும் கலங்க வைத்தது.

ஆன்மாவாய் சுற்றிக் கொண்டிருந்தவன் தன் கண்ணம்மாவின் அழுகையை பார்க்க முடியாமல் அவனும் அழுக அந்த முகிலும் அழுதது இவர்கள் காதலைப் பார்த்து.

அவன் நெஞ்சம் எனும் மஞ்சத்தில் தன்னை தொலைப்பவள் இன்று தன் உயிரையும் தொலைத்தாள்.

அவனின் ஒவ்வொரு அசைவையும் அறிந்திருப்பவள் இதை அறிய மாட்டாளா...அவளுக்காக கண்ணீர் சிந்தும் அவன் மாமாவின் கண்களை துடைக்க சென்று விட்டாள் அவளும் ஒரு ஆன்மாவாய்.

மழையின் தாக்கத்தில் அந்த தெப்பக்குளம் நிறைந்திருக்க கயலுக்காக ஆம்பல் மலரை எடுக்க வந்த அய்யர் கண்டது எல்லா ஆம்பலும் தண்ணீரில் மூழ்கி இருப்பதைத் தான்.
அதிலிருந்தே அவளின் நிலையை அறிந்து கொண்டவர் கண்களில் கண்ணீருடன் அவளைத் தேடிச் சென்றார்.

வெற்றியின்றி வாழ்வில்லை அவனின் கண்ணம்மாவிற்கு...

❤❤❤❤முற்றும்❤❤❤❤

திரைப்படத்தில் நாயக்கிக்காக அம்மாவிற்காக  போராடும் வீரர்களை கனவு நாயகர்களாக நினைக்கும் நாம் நாட்டுக்காக போராடும் வீரர்களை நினைத்துப் பார்ப்பதில்லை...
இன்னும் நிஜத்திற்கும் நிழலிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நாம் இனிமேலாவது அவர்களை மதிக்க வேண்டும்...
நாட்டுக்காக எதையும் நினைக்காமல் உயிரை விடுபவர்கள் பலர்...
நாம் யாரும் அவர்களின் குடும்பத்தைப் பற்றி யோசிப்பதில்லை...
நம் குடும்பத்தைப் பற்றியே யோசிக்காத நாம் எப்படி அடுத்தவரின் குடும்பத்தைப் பற்றி யோசிப்போம்😂...
என்ன சொல்ல என்று தெரியவில்லை...
தன் உயிரை துச்சமென நினைக்கும் இராணுவ வீரர்களுக்கும் இப்படி ஒரு காதல் கதை இருக்கும் என்பதை கூற தான் இந்த கதை...
மனதில் தோன்றியதற்கு வார்த்தை கொடுத்து பதிப்பித்து விட்டேன்...
வெற்றியின் நாட்டின் மீதான காதலையும், கயலின் வெற்றியின் மீதான காதலையும்...



ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro