உறவு 30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஐடி துறையில் பணி புரிபவர்களுக்கு மனஅமைதி முக்கியமாக வேண்டும்..அவர்களின் அதிக மன அழுத்தத்தால் தங்களது நிறுவனத்தில் நட்டம் வரக்கூடாது என்ற காரணத்தால் அடிக்கடி இலவசமாக சுற்றுலாத்தளங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வகையில் இந்தமுறை ஏற்காடு வந்திருந்தனர்.

காலையில் கிளம்பித் தயாராகி பெண்களும் ஆண்களும் ஒன்றாக கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு சென்று தங்களது மொத்த சக்தியும் வடியும்வரை அருவியில் ஆட்டம் போட்டுத் திரும்பினர். அங்கிருந்த மிதமான வெப்பநிலை மனதி்ற்கு இதமாக இருந்தது ..

அடுத்து கரடிக்குகைக்கு செல்ல முடிவெடுக்க, தர்ஷு பலமுறை அங்கே சென்றிருந்ததால் அபியை பிடித்து வைத்துக்கொள்ள மற்றவர்கள் மட்டும் செல்ல இருவர் மட்டும் அருவியின் அருகிலிருந்த சிறு ஒத்தையடிப்பாதையில் நடக்கத் துவங்கினர்..

" எவ்ளோ அழகா இருக்குல மூட்டைப்பூச்சி.. இங்க வா. ஒரு செல்பி எடுத்துக்கலாம்.. " என அவனை அழைக்க அவனோ மும்மரமாக ஒரு மரத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

" லூசு அங்க என்ன பண்ற.. " என்ற கேள்விக்கு அவனது ஆயிரம் வாட்ஸ் புன்னகையினை பரிசளித்தவன் " இங்கப்பாரு " என மரத்தை சுற்றியிருந்த கொடியைப் பறித்தெறிந்துவிட்டு ஒரு இடத்தை சுட்டிக் காண்பித்தான்.
அதில் எம் எஸ் என எழுதி இருந்தது..அதைப் பார்த்தவளுக்கு சொல்லாமலே தாங்கள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் சுற்றுலாவிற்கு இங்கே வந்திருந்த போது
இருவரும் ஒன்றாக இந்த மரத்தில் இருவரின் நினைவாக , அபி சோன்பப்டியின் முதலெழுத்தான எஸ்ஸையும் , தர்ஷு மூட்டைப்பூச்சியின் முதலெழுத்தான எம்மையும் செதுக்கியது நினைவு வந்தது.. தானாக கண்கள் கலங்க,

" என்ன தர்ஷு நீ.. இதுக்குப்போய் அழுதுட்டு..இப்போ எடுக்கலாம் வா செல்பி " என அந்த மரத்தின் அருகில் அவளின் தோளில் கைப்போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டான். அவன் அந்த புகை்படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க இவளோ அந்த மரத்திற்குப் பின்னால் அவனுக்குத் தெரியாமல் செதுக்கிய இதய வடிவம் இருக்கிறதா என்பதைத் தடவிப் பார்த்தாள். மரத்தில் பட்டை உரிந்திரிந்ததால் அந்த இதயம் இரண்டாகப் பிழந்து காட்சியளித்தது. அதற்கு முத்தம் கொடுத்தவள் திரும்பி நடக்க, அவள் செய்கையில் ஓரக்கண்ணால் கண்டு கொண்டிருந்தவன்
அவள் சென்றதும் அவனும் அந்த இதயத்தினை தொட்டுப்பார்த்து அது இன்னும் தெளிவாகத் தெரியுமாறு கல்லை எடுத்துக் கீறினான். தற்போது பிரிந்த இதயம் ஒன்றாகியது.. அதனை புகைப்படம் எடுத்தவன் அவள்பின்னால் ஓடினான்.

இருவரும் வண்டி நின்ற இடத்திற்கு வர அங்கே வண்டி இல்லை.. காலை உணவும் வண்டியோடு போக பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கே அசைவ ஹோட்டல்கள் வரிசையாக இருக்க தேடிக் கண்டுபிடித்து சைவ விடுதிற்கு அவளை அழைத்து வந்தான்.

வரும்வழியில் அசைவ உணவுகளின் வாசம் மூக்கைத் துழைக்க இவனோ அங்கெல்லாம் செல்ல விடாது கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு இங்கே கூட்டிவந்தான்.

" டேய் மூட்டைப் பூச்சி ஏன்டா இப்படி பண்ற.. "

" தர்ஷு இன்னைக்கு கிருத்திகைடி.. நான் மட்டும் இன்னைக்கு நான் வெஜு சாப்டது தெரிஞ்சுது துளசி பேயாட்டம் ஆடிருவா.. இன்னைக்கொரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி..
" எனக் கெஞ்ச,

" அவளுக்கு தான்டா அது.. எனக்கென்னடா வந்துச்சு.. நான் போய் சாப்பிடறேனே " என எழப்போக, அவன் முகம் சுருங்கிப் போனது. அவனை திட்டிக்கொண்டே இட்லியை கடித்தவளால் கடிக்க முடியாமல் போக மீண்டும் முயற்சித்தாள். ஆனாலும் தோல்வியே ஆனது.. அவனோ அவள் முகத்தைக்கூட பாராமல் கடும் சிரத்தையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் தலையில் ஓங்கிக் கொட்டியவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர " ஹேய் இங்கப்பாரு.. ஒரு இடத்துக்கு வந்தா வீட்ல இருக்கமாறியே சாப்பாடு இருக்கும்னு எதிர்பார்க்க கூடாது.. எங்க மெஸ்ல சாப்பாடு இதை விட மோசமா இருக்கும்டி. பேசாம சாப்பிடு " என அதட்ட கஷ்டப்பட்டு உணவை உள்ளே தள்ளினாள்.

அவன் சாப்பிட்டுக் கைக் கழுவ சென்றிட அவனது அலைபேசியில் அவர்கள் நண்பர்கள் தாங்கள் எங்கே இருக்கிறார்கள் எனக் கேட்டிட, அதற்கு பதிலளித்தவள் போனை தன் கைப்பையில் போட்டுக்கொண்டாள்.
அவனும் ஞாபக மறதியில் கேட்காமல் விட, அவளும் விபரீதம் தெரியாமல் வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டு விட்டாள்.

🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒🕒

வீட்டிற்குள் அசோக்கை எதிர்பாராதவன் அசோக்குடன் ஐசுவும் ஒன்றாக நிற்பதைப் பார்த்து அவர்கள் சமாதனமாகிவிட்டனர் என்பதை உணர்ந்து கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றான் கதிர். ஆனால் அவன் குடித்த மது வேலையைக் காட்டியது.. தள்ளாடியபடியே
" வாங்க அசோக் சார்.. இருங்க பிரசப் ஆயிட்டு வரேன் " என பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

சிறிதுநேரத்தில் வெளியே வந்தவன் கண்கள் நன்றாகவே சிவந்திருந்தது..
அவன் வந்ததும் அவனுக்கு ஐசு தேநீரைக் கொடுக்க அதனை வாங்கிக் கொண்டவன் அசோக்கை நலம் விசாரித்தான்.. அசோக்கும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தான்.. அவன் பார்வை முழுக்க சமையலறையில் இருந்த ஐசுவின் மீதே இருக்க,
கதிர் அவர்கள் பேசட்டும் என்று தனதறைக்குள் புகுந்து கொண்டான்..

அசோக் அவளுடன் பேசுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் வாயையே திறக்கவில்லை.

நேரமாக ஆக அசோக்கிற்கு ஐசு அடித்த அடிகளால் ஆங்காங்கே இரத்தம் கட்டி வலிக்கத் துவங்கியது. அவன் வலியில் நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் தாங்காதவள் அவனை உள்ளறையில் படுக்கச் சொல்லிவிட்டு சுடுதண்ணீர் கொண்டுவந்து ஒத்தடம் வைத்துவிட்டாள். அவன் வலியில் முனக முனக அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலானது..

" ஐசு.. வலிக்குது... கொஞ்சம் மெதுவா " என்றதும் " சாரி அசோக் இவ்ளோ நாள் இருந்த கோபத்தால ஏதோ ஒரு வேகத்துல அடிச்சிட்டேன்.. ரொம்ப வலிக்குதா.. ஹாஸ்பிடல் போலாமா " என அவள் அக்கறையாய் கேட்க,

" கரெக்டா சொன்ன ஐசு.. அப்போதான பொண்டாட்டி கைல நான் அடிவாங்குனது ஊருக்கேத் தெரியும்..அதான உனக்கு வேணும்.. ஐயோ மெதுவா வைடி.. தண்ணி கொதிக்குது.. அப்பறம் எதுக்கும் கதவை சாத்தி வை.. கதிருக்கு நான் அடி வாங்குனது தெரிஞ்சா என மானமே போயிரும்" என ஆரம்பிக்க,

" ம்ச்.. அடி வாங்கியும் உனக்கு வாய் அடங்குதா பாரு.. மாமா எப்பவும் யாரையும் தப்பா நினைக்க மாட்டாங்க.. ரொம்ப நல்லவரு " என கதிருக்கு ஐசு சப்போர்ட் பண்ண,

" ஆமா ஆமா நல்லவர்தான் ரெண்டு பொண்ணுங்க இருக்குற வீட்ல குடிச்சிட்டு வருவாரா.. இதையே நான் பண்ணருந்தா நீ என்ன ஆட்டம் ஆடிருப்ப.. என்ன குடும்பம்டா இது " என அவனது தற்போதைய நிலையை மறந்துவிட்டு வழக்கம்போல ஐசுவின் குடும்பத்தை மட்டம்தட்ட, அதுவரை பொறுமையாக இருந்தவள் அடிப்பட்ட இடத்திலே அடித்துவிட்டு
" கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு..நான் சமைச்சிட்டு வரேன் " என்று வெளியே சென்று விட்டாள்.. அவளே அப்போதுதான்அவனுடன் சகஜமாக பேச முயற்சித்திருக்க, அவனது திருவாயே அவனுக்கு வினையாக முடிந்தது .

மணி 6.30 ஆகியும் கனி இன்னும் வராமல் இருக்க, தேவி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகம் சோகமாக வாடி இருப்பதையும் கண்டு கொள்ளாதவர் வந்ததும் அடி வெளுக்கத் துவங்கி விட்டார். அவர் மிரட்டலில் கதிர் வெளியே வர கனி அடி வாங்குவதை தாங்க முடியாமல்
" அக்கா விடுக்கா.. " என அவரைத் தடுக்க முயல
" நீ பேசாதடா, அவ உன்னாலதான் இப்படி யாரையும் மதிக்காம இருக்கா..இப்படியே போனா இவ வாழக்கைதான் வீணாகும்.. தயவு செஞ்சு இந்த விசயத்துல மட்டும் நீ தலையிடாத.. " என்றவர்

" இனிமே ஒழுங்கா நேரத்துக்கு வீட்டு வரியா.. லேட்டானா இன்பார்ம் பண்றியா.. சொல்லுடி.. நீ பாட்டுக்கு லேட்டா வர, இங்க வயசுப்பொண்ண வெளிய அனுப்பிட்டு நெருப்பக் கட்டிட்டு இருக்கேன்.. அதைக் கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்கிறியா " என அழுக ஆரம்பித்தவர் இன்னும் வாயைத் திறக்காமல் கதிரைப் பார்த்தவாரே நின்றிருந்த கனியைக் கண்டதும் மீண்டும் அடிக்க கையோங்க இந்தமுறை அசோக் வந்து தடுத்தான்..

" அத்தை என்னத்தை நீங்க.. எதுக்கெடுத்தாலும் அடிச்சிக்கிட்டு. அன்பா சொல்லுங்க புரிஞ்சிக்குவா " என்று அவளை தன் முதுகின்புறம் மறைத்தவன் " இனிமே அடிக்காதீங்க.. " என்று தேவியை எச்சரித்துவிட்டு அவளை மாடிக்கு அழைத்துச் சென்றான். ஐசுவும் அவர்கள் பின்னே செல்ல, கந்தன் தேவியை சமாதனப்படுத்த துவங்கினார்

" ஏங்க நான் என்ன அவள வேணும்னாங்க அடிச்சேன்.. பேப்பர்ல நியூஸ்ல எவ்ளோ பார்க்குறோம்.. அந்த பயத்துலதானங்க அடிச்சேன் " என அவர் நிலையை எடுத்துரைக்க,

" விடு தேவி.. பெத்தவங்க எப்போவும் குழந்தைகளுக்கு கெட்டது நினைக்க மாட்டாங்கனு ஒருநாள் அவுங்க புாிஞ்சிப்பாங்க..இனிமே நீ அமைதியா எடுத்து சொல்லு. அவ நம்ம பொண்ணும்மா.. அவளே புாிஞ்சிப்பா "என கந்தன் ஆறுதல் சொன்னார் .

ஆனால் உண்மையாக ஆறுதல் தேவைப்படும் இதயம் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தது..
அவள் வார்த்தைகள் அவன் நெஞ்சைக் கிழித்து கூறு போட்டிருக்க, அவன் சகோதரியின் வார்த்தை அவனை கொன்றேபோட்டு விட்டது எனலாம்..அழுதுகொண்டே தூங்கியும் விட்டான்.

மதிய சாப்பாட்டு நேரத்தில் அசோக் அழைத்ததால் சாப்பிடாமல் சென்றவனது வயிறு பசியால் கூச்சலிட தூக்கம் தெளிந்தவன் மணியைப் பார்க்க அது 9 என காட்டியது.. முகம் கழுவிவிட்டு வெளியே வரும்போது அனைவரும் உறங்கச் சென்றிருந்தனர். தேவி மட்டும் அடுக்களையை ஓர வைத்துக் கொண்டிருந்தார்.

மனம் கேட்காதவன்
" அக்கா.. கனி சாப்பிட்டாளா " என்க,
" சாப்பிட்டாடா.. நாங்களும் சாப்பிட்டோம்.
உன்னை எழுப்பலாம்னு பார்த்தேன்..தூங்கிட்டு இருந்தியா.. அதான் விட்டுட்டேன்.. உட்காரு.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. " என்றதும் சாப்பிட அமர்ந்தான்.

" மாப்பிள்ளை முன்ன மாறி இல்லடா.. எங்க கூட நல்லா பேசறாரு.. கனிய சொந்த தங்கச்சி மாறி பார்த்துக்கறாறு.. சாப்பாடு வேனான்னு சொன்ன கனிக்கு ஊட்டி சாப்பிட வெச்சார்னே பார்த்துக்கோயேன்.. ஐசு கூட சிரிச்சிட்டே இருந்தா.. அவுங்க இதே மாறி சந்தோசமா இருந்தாலே போதும்டா..வேற எதுவும் வேணா " என சந்தோசத்தில் கூறிக் கொண்டிருந்தவர் மனது தனது தம்பியை மறந்திருந்தது..

இரவு தாமதமாகி வந்தாலும் தனக்காக காத்திருந்து, அவன் ஊட்டினால்தான்
உண்ணுவேன் என்றிருந்த காலங்கள் காதல் வந்ததும் அடியோடு மாறிவிட்டதை எண்ணி அவன் இதழ்கள் வரட்டு புன்னகையை உதிர்த்தது..

" நீ போக்கா..நான் எடுத்து வெச்சிக்கிறேன்.." என்று தேவியை அனுப்பியவன் ஒரு வாய் கூட உண்ணாமல் சென்று படுத்துவிட்டான். ஏனோ இன்று வாழ்க்கை மிகவும் வெறுமையாகத் தோன்றியது.. தனது இத்தனை வருட வாழ்வு வீணென்று தோன்றியது. கனி சொன்னது போல அவள் வாழ்க்கையையும் சேர்ந்து நான் வாழ்கிறேனோ அவளை அடிமை படுத்துகிறோனோ என யோசிக்கும்போது அவனுக்கோ அவளை தனது பிள்ளை போல நினைத்து பாசம் வைத்ததை தவிர்த்து
வேறு எந்தக் காரணமும் தெரியவில்லை. ஒருவேளை அவள்பார்வையில் தான் தவறாக தெரிந்துவிட்டேன் போல எண்ணிக் கொண்டான்..தேவி சொன்னதை
போல இனி அவள் வாழ்க்கையில் தலையிடாமலே இருப்பது நல்லது என மூளை அறிவுறுத்த அவன் மனதோ அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.

சிந்தனைகளில் உலன்றவாரே இருந்தவனை தூக்கம் தழுவிக்கொள்ள இருந்த நேரம் அவனது அலைபேசி அழைத்தது. இந்நேரத்தில் யார் என எடுத்து பார்ததவன் புதிய எண்ணைக் கண்டதும் போனைக் காதில் வைக்க அதில் கேட்ட செய்தியில் வந்த தூக்கம் காற்றில் பறந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro