26. மேகலா தேவராஜன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மனதின் பாரம் தாங்காமல் உண்மையை கூறிய எழில் குற்ற உணர்வுடன் தலைகுனிந்து நின்றாள்.

”யாரை காப்பாத்தடா நீ பழியை உன் மேல போட்டுக்கிற..? நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. உன்னை பத்தி எனக்கு தெரியும்..!!  நீ யாரையும் பொய் சொல்லி காப்பாத்த வேண்டாம்..! ”  என்று மகள் கூறிய வார்த்தையை நம்ப மறுத்தார் திவ்யா.

தன் அன்னையின் நம்பிக்கையை உடைக்க போகிறோம்.. என்ற வேதனையில்,

“அயோ அம்மா.. நான் சொல்றது எல்லாம் உண்மை..! எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை..! எவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கலை... என்னென்னவோ பேசி என்னை சம்மதிக்க வச்சுட்டீங்க...

இருந்தும் எனக்கு இப்போ வேண்டாம்னு உங்கக்கிட்ட சொல்ல வந்தப்ப.. நீங்க இந்த சம்பந்தத்தை நினைச்சு ரொம்ப சந்தோசத்துல இருந்திங்க.. உங்க சந்தோசத்தையும் கெடுக்க கூடாது.. அதே சமயம் இந்த நிச்சயமும் நடக்க கூடாதுன்னு நினைச்சு.. நான் தான் இப்படி செஞ்சேன்..! ஆனால் நான், இப்படி ஆகும்னு சத்யமா நினைக்கலம்மா..! நான் விளையாட்டா செய்ய போய் இப்படி என்னென்னவோ நடந்திருச்சு..” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுத எழிலை அதிர்ச்சியாக பார்த்தார் திவ்யா..!

இங்கு நடந்த அனைத்தையும், எழிலின் அறைவாசலில் நின்று கேட்டு கொண்டிருந்த அவளின் தந்தை, அதிர்ச்சியில் உறைந்து போனார்.

“பார்த்திங்களா உங்க பொண்ணு செஞ்சிருக்க காரியத்தை.. ஒரு பொய்யான நாடகம் நடத்தி ஒரு நல்ல மனுசனை கலங்கப்படுத்தி, அவரோட வாழ்க்கையை கெடுத்ததும் இல்லாம, இத்தனை நாள் நாம் எல்லாம் இவளை நினைச்சு கஷ்டப்பட்டுட்டு அந்த அப்பாவி மனுஷனை வாய்க்கு வந்தபடி பேசினப்பக்கூட அதை பற்றிய குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம எப்படி அமைதியா இருந்திருக்கா..‼ “ என்று அகரன் ஆதங்கத்தோடு பேச, எழில் கதறிவிட்டாள்.

தமக்கையின் அழுகையை காண முடியாமலும்,  அதே சமயம் அவளின் தவறை மன்னிக்க முடியாமலும் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தவன், இறுதியில் பாசமே வென்றிட, எழிலின் அருகில் வந்து அவளின் தலையை வருடிவிட்டான் அந்த பாசக்கரத் தம்பி..!    

அதில் மேலும் உடைந்தவள், அவன் வயிற்றில் முகம் புதைத்து, “டேய் அகி! நான் வேணும்னு எதுவும் செய்யலைடா..‼ என்னை மன்னிச்சிருடா..! அவருக்கு இவ்வளவு பெரிய தலைகுனிவு வரும்னு நினைக்கலடா... என்னோட பொய்யால அவர் எப்படி எல்லாம் அவமான பட்டிருக்கார்ன்னு இப்போ நான் உணர்றேன்.. நான் எல்லார்க்கிட்டயும் உண்மை சொல்லிடறேன்..‼ என்னை கதிர் வீட்டுக்கு கூட்டிட்டு போடா.“ என்று தேம்பி தேம்பி அழுதாள்.

“ஷ் போதும் கா விடு..! நடந்ததை இனி மாத்த முடியாது, உன் பேர் கெடக்கூடாதுன்னு தான் கதிர் சாரே அமைதியா இருக்கார்.. பார்ப்போம்.. என்ன நடக்குதுன்னு” தமக்கைக்கு ஆறுதல் சொன்னவன் ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தான்.

அப்போழுது தான் திகைத்த தோற்றத்தில் அமர்ந்திருந்த தன் அன்னையை பார்த்தவன்,  பதறி எழிலை விட்டு விலகி, “ம்மா..! என்னாச்சுமா..?” என்றான்.

”என் பொண்ணாடா இப்படி செஞ்சா..? கொஞ்சம் அழுத்தி சொல்லியிருந்தால், நாங்களே இந்த நிச்சயத்தை நிறுத்தி இருப்போமே டா.. அதுக்காக ஒருத்தரோட ஒழுக்கத்தையே கேள்விகுறியாக்கிட்டாளே.. என் வயிற்றில் பிறந்த பொண்ணு.. இப்படி செய்வான்னு ஒரு நாளும் நாங்க கனவுலகூட நினைக்கிலையே... ஒரு வேளை என் வளர்ப்பு தப்போ..??

என் பொண்ணு எது செஞ்சாலும், அதுல ஒரு நியாயம் இருக்குன்னு நம்பினேன் டா..!! ஆனால் இப்போ எல்லாத்தையும் நாசமாக்கிட்டு வந்திருக்காளே பாவி..‼ அவங்க கிட்ட ஒரு மன்னிப்பு கேட்கக் கூட தகுதி இல்லாம ஆக்கிட்டாளே..

இந்த பாவத்தை எந்த கோவில்ல போய் எத்தனை முறை தலைமுழுகினாலும் தீராதே... நாங்க என்ன பாவம் பண்ணோம்... இப்படி ஒருத்தி எங்களுக்கு பிறக்க?” என்று கதறினார்.

"அவ்ளோ பேர் கூடியிருந்த சபைல ஆண் பிள்ளைன்னு கூட பார்க்காம. உன் அப்பா, நான், நீ எல்லாரும் மாத்தி, மாத்தி அந்த பையனை திட்றப்ப கூட அமைதியா இருந்தாளே..‼ எவ்ளோ ஒரு கல் நெஞ்சகாரியா இருந்திருப்பா? அவரோட வாழ்க்கையே போகும்னு தெரிஞ்சும் வாயே திறக்காமல் இருந்த அந்த மாதிரி ஒரு பிள்ளையை வாய்க்கு வந்தபடி சபிச்சுட்டேனே...” என்று திவ்யா ஆற்றமையுடன் புலம்ப, எழில் இன்னும் அதிகமாக தேம்பிக்கொண்டே இருந்தாள்.

உள்ளே வந்த எழிலின் தந்தை, “நீ இப்படி செய்வேன்னு நினைச்சு பார்க்கல எழிலரசி..‼ உனக்கு செல்லம் கொடுத்து, நீ எது செஞ்சாலும் அதுக்கு ஆதரவா நின்ன எங்களுக்கு, நல்ல பேர் வாங்கி கொடுத்துட்ட.. உன்னை நினைச்சு எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு..! எந்த உண்மைய வெளிய தெரிஞ்சா நாங்க எல்லாம் தாங்கமாட்டோம்னு அந்த பையன் நினைச்சானோ? நாளைக்கு அது வெளிய தெரிஞ்சா இந்த குடும்பத்தோட எதிர்காலம் அஸ்தமனமாகிறது உறுதி." என்றார்.

"நாளைக்கு உன் தம்பி எப்படி தலைய நிமிர்த்தி வெளிய போவான்? சின்ன புள்ள உன் தங்கச்சி எப்படி எல்லார் முகத்துலையும் முழிப்பா... உனக்காக நாங்க ஆதரவா நின்னதுக்கு நீ தந்த பரிசு ரொம்ப பெரிசு. எங்க வாழ்நாள்ல மறக்க முடியாது... வேற என்ன நான் சொல்ல?” என்று விரக்தியாக சொன்னவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

தன் பெற்றோர் கோபமாக பேசியிருந்தால் கூட தாங்கியிருப்பாள். ஆனால், அவர்கள் தங்களையே வருத்தி கொள்வதை தாங்க முடியாமல், அழுது கரைந்தாள்.

எழிலின் சிறு முகச்சுளிப்பை கூட தாங்காத அந்த குடும்பம், இன்று அவள் கதறி அழுவதை பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருந்தது..

**************

இங்கு கதிரின் வீட்டில், அவன் அன்னை, பிரியங்காவை திருமணம் செய்ய வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

அவரிடம் கதிர் மறுத்து கொண்டிருக்க, அவனின் அலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது, எடுத்து பார்த்தவன் அது பிரியங்காவிடம் இருந்து வந்திருப்பதை அறிந்து, மனம் இல்லாவிட்டாலும், வேண்டா வெறுப்பாய் அதை திறந்து பார்க்க,

‘நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது மாமா..‼ இந்த ஜென்மத்தில் உனக்கு நான் தான்.. அதுக்கான அஸ்திவாரத்தை நான் பலமா  போட்டுட்டேன்.. இப்போ கூட அத்தை உன்கிட்ட என்னை கல்யாணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திட்டு இருக்காங்க போல.. காத்துவாக்குல செய்தி வந்தது..

என்ன நடந்தாலும் அந்த எழில்கூட உனக்கு கல்யாணம் நடக்க விடமாட்டேன்... நேரம் இப்போ என் பக்கம்... மாம்ஸ்... நீ வேணா அவளை காதலிச்சிட்டே இரு... ஆனா கல்யாணம் என்கூட மட்டும் தான்... என்னா பேச்சு பேசுறா அவ... பாவம்... உன்னை ரொம்ப லவ் பண்றா போல... ஹா.... ஹா... ஹா... சரியான முட்டாள் தான் அந்த எழிலு... அவ அப்படி பேசினா உன்னை வெறுக்குறான்னு மத்தவங்க வேணா நம்பலாம்... இந்த பிரியங்கா நம்ப மாட்டா... அதனால என்னோட வேலையை சிறப்பா செஞ்சுட்டேன்... ரெடியா இரு மாம்ஸ் நாம கல்யாண மேடையில் சந்திப்போம்..’  என்று கதிரும், அவளும் மணக்கோலத்தில் இருக்குபடி ஒரு புகைப்படத்தை கிராஃபிக் மூலம் செய்து அதை கதிருக்கு அனுப்பி இருந்தாள்.

அதை பார்த்த கதிருக்கு கோபம் எல்லை கடந்தது.

'லூசு மாதிரி உலறிக்கிட்டு இருக்க.. என் அழகி என்னை விரும்பிருந்தா இந்நேரம் எங்க கல்யாணம் நடந்திருக்கணுமே... இவளுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு... யார் இருக்க வேண்டிய இடத்தில் யார் இருப்பது..? என் அழகி இருக்க வேண்டிய இடம் அது..! இந்த ஜென்மத்துல இல்லை.. நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு நான் இல்லை.. காதல்ங்கிறது கட்டாயத்தால வரக்கூடாது.. நான் அமைதியா இருக்கிறதால நீயும், அந்த அழகியும் என்னை விளையாட்டு பொம்மைன்னு நினைச்சிட்டிங்கள்ல...?? இனி தான் இந்த கதிர் யாருன்னு பார்க்க போறிங்க.. என் மாமன் மகளே பிரியா..! முதல்ல உன்னை சரி பண்றேன்.. அடுத்து அந்த அழகியை கவனிக்கிறேன்..' என்று மனதில் கறுவினான்.

திருமணத்திற்கு சம்மதிக்காத மகனின் மேல் கோபம் கொண்டு அங்கிருந்த இருக்கையில் முகத்தை உம்மென்று வைத்து அமர்ந்திருந்த அன்னையை பார்த்து லேசாக சிரிப்பு வந்தது.

அன்னையின் அருகில் வந்து அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவரின் கைகளை பிடித்துக் கொண்டு, ”ம்மா எதுக்கு இந்த கோபம்..?” என்றவனை முறைத்து பார்த்தவர், “ஏன்னு உனக்கு தெரியாதா..?” கோபத்தோடு சொல்ல

”என்னால பிரியாவை கல்யாணம் செய்ய முடியாதும்மா பிளீஸ் புரிஞ்சிக்கோங்க..?” என்றான் தன்மையாக.

  “ஏன் அவளை கல்யாணம் செய்ய முடியாது..? அவ அழகா இல்லையா..? உன்னை கட்டிக்க முறைதான் இல்லையா.. உனக்காக உயிரையும் விட துணிஞ்சிருக்கா இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்,? இங்க பாரு கதிரு, நாம விரும்பறவங்களை விட நம்மளை விரும்பறவங்களை கல்யாணம் செஞ்சா வாழ்க்கை நொம்ப சந்தோசமா இருக்கும் டா.. அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. நம்ம பிரியாவையே கட்டிக்கடா..” என்றார்.

”நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனால், நான் பிரியாவை அப்படி நினைக்கலையே.. எனக்கு காயு எப்படியோ அப்படிதான் பிரியாவும், சின்ன வயசில இருந்தே அவளை அப்படி பார்த்துட்டு இப்போ திடீர்ன்னு மனைவியாக பாருன்னா எப்படிம்மா முடியும்..?” என்று வராத கண்ணீரை கர்ச்சீப்பால் துடைத்து விட்டு அதன்வழியே தன் அன்னையை ஓரக்கண்ணால் பார்த்தான்.

தன் மகன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து "என்னடா என்னென்னவோ  சொல்ற.?” என்றார்.

’கதிர் வொர்க்கவுட் ஆகுதுடா இதையே மெயின்டெயின் பண்ணு..’ தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், “உண்மை தான் மா..! எனக்கு காயுவும், பிரியாவும் வேற வேற இல்லம்மா.. முறைக்கு வேணா அவ எனக்கு மாமன் மகளா இருக்கலாம்.. ஆனால், எனக்கு பிரியமான தங்கச்சிம்மா அவ,  காயுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து, எப்படி சீரும் சிறப்புமாக கல்யாணம் செஞ்சு கொடுப்பமோ... அதேமாதிரி, நம்ம பிரியாவுக்கும் எல்லா சீரும் செஞ்சு நானே நல்ல மாப்பிள்ளையா பார்த்து  கலயாணம் கட்டி கொடுக்கணும்னு கனவு கண்டுட்டு இருக்கேன்.. ஆனால், நீங்க அந்த மாப்பிள்ளையாக நீயே இருடான்னு சொன்னால் எப்படிமா..?”  என்றபடி மீண்டும் கர்ச்சீப்பை முகத்திற்கு கொண்டு சென்றான்.

கதிர் பேச பேச, கதிரின் அன்னை, அவன் தலையை வருடி கொடுத்தவாறே, “ டேய் கதிரு..! நீ பிரியாவை தங்கச்சி மாதிரி நினைச்சிருக்க... ஆனால், நான் வேறமாதிரி நினைச்சிட்டேன் டா..” என்றார் வருந்தமாய்.

“விடுங்கம்மா.. நான் இதை உங்கக்கிட்ட முதல்லயே சொல்லிருக்கணும்.. நான் பிரியாவை இப்படி நினைக்கிறேன்னு உங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்?” என்று அன்னைக்கு ஆதரவாக பேசினான்.

“அம்மா இனி என்னை பிரியாவை கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்த மாட்டிங்கள்ல..? நீங்க எவ்வளவு வற்புறுத்தினாலும் நான் தூக்கி வளர்த்த குழந்தையை நான் எப்படி... என்னால முடியாதும்மா...” என்றான்.

“இல்லை டா இனி அப்படி கேட்க மாட்டேன்.. உன் மனசு புரியாம அம்மா இப்படி கேட்டுட்டேன்.. மன்னிச்சுக்கோடா..” என்று வருந்தினார்.

கதிர் மனதில் பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது.. அன்னை அறியாமல் பெருமூச்சை வெளியிட்டவன், அவரை புன்னகையுடன் ஏறிட்டான்..

அன்னையின் முகம் தெளியாமல் இருப்பதை அறிந்து, “இன்னும் என்னமா..?” என கேட்க, “உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு பார்க்க ரொம்ப ஆசைப்பட்டேன். அந்த பொண்ணு செஞ்ச காரியத்தால உன் பேரும் கெட்டு போய், உனக்கு பொண்ணும் அமைய மாட்டிங்குதே..!!” ஆற்றாமையுடன் புலம்பினார்.

“அம்மா..!! எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? எனக்குன்னு பிறந்தவ இங்க தான் எங்கேயாவது ஒளிஞ்சிருப்பா..! நேரம் வரும்போது அவளே தேடிவருவா கவலையை விடுங்க..!” என்ற மகனை ஆச்சரியமாக பார்த்தார்.

நேற்று வரைக்கும் நடந்ததை நினைத்து, வருத்தப்பட்டு கொண்டிருந்த தன் மகன் இன்று தனக்கே ஆறுதல் சொல்வதை நினைத்து வியந்தார்.

தன் அன்னை தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்து, “என்னம்மா.. என்னையே பார்த்துட்டு இருக்கிங்க..?” என கேட்டான்.

“நேத்து வரைக்கும் நீ உம்முன்னு இருந்த.. இன்னைக்கு உன் முகத்துல மாற்றம் தெரியுதுடா.. ஆனால் இது நல்லா இருக்கு.. நீ எப்பவும் இப்படியே இருடா..!! நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும் என் ராஜா”  என்று நெற்றியை வருடியவாறு கூறினார்.

“ம்மா இப்படியே இருந்தால் முட்டி வலிக்கும்.. சோ நான் எழுந்து உட்கார்ந்துக்கிறேன்..” என்றான் குறும்பாக.

மீனாட்சி கதிரின் தலையில் வலிக்காமல் கொடினார்.. “அம்மா நான் உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்..” என்றவனை என்னவென்று அவர் பார்த்தார்.

“அம்மா என்னை பத்தி உங்களுக்கு தெரியும் தான.. நான் மத்தவங்க சொன்ன மாதிரி.. பொறுக்..” என்றவனின் வாயை மூடி, “என்ன பேச்சு பேசற..? நீ என் புள்ளைடா உன்னை நாங்க நம்பலேன்னா அது எங்களையே சந்தேகப்பட்ற மாதிரி டா..”  என்றவரின் கையை தட்டி கொடுத்தான்.

”இந்த நம்பிக்கையை வெளியேயும் காட்டுங்கம்மா.. யாரோ என்னை பத்தி என்னமோ சொன்னாங்கன்னு மயக்கம் போட்ற அளவுக்கு போயிருக்கீங்க.. என்னை பத்தி தப்பா பேசறவங்க கிட்ட தலைநிமிர்ந்து சொல்லுங்கம்மா.. 'என் பையனை பத்தி எனக்கு தெரியும்..!’னு அதை விட்டுட்டு நீங்களும் அவங்க பேசினது உண்மைங்கிற மாதிரி மயக்கம் போட்டு விழுந்து இருக்கிங்க.. அதோட அவசரமாக கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்றிங்க!” என்றான் ஆதங்கத்துடன்.

கதிர் குடும்பத்தாருக்கு தாங்கள் செய்த தவறு புரிந்தது.. தன் பிள்ளை மேல் தவறில்லாத பட்சத்தில் தாங்கள் ஏன் தலைகுனிய வேண்டும்..? என்று உணர்ந்து, “டேய் கதிர் நாங்க செஞ்சது தப்புதான் டா.. இனி இப்படி இருக்க மாட்டோம்..” என்ற கதிரின் தந்தை அவனை அணைத்து கொண்டார்.

“ப்பா அப்போ இருந்து ஒரே பாச போராட்டமாக இருக்கு.. போதும்.. போதும் எல்லாரும் வாங்க சாப்பிட போகலாம்..” கதிரின் அக்கா ஷ்யாமளா அழைத்தாள்.

“அடிப்பாவி அக்கா..!! எல்லாரும் பிழிய பிழிய வசனம் பேசி இருக்கோம்.. நீ ஒரே வார்த்தையில் சோறுதான் முக்கியம் சொல்லிட்டியே..! தன் தாடையை குத்தியபடி சொல்ல, கதிர் சொன்ன பாவனையில் அனைவருக்கும் சிரிப்பு வர, சிரித்தவாறே அனைவரும் உணவு மேஜையை  நோக்கி செல்ல, எதேட்சையாக வாசலை பார்த்த மீனாட்சி திகைத்து நின்றார்..

ஏனெனில் அங்கு வாசலில் எழிலின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது..

**********

பிரதிலிபி ஐ.டி: மேகலா தேவராஜன்
**********

கதிரின் குடும்பம், எழில் செய்த செயலை மன்னிக்குமா..?

கதிர் தன் அழகியை ஏற்றுக் கொள்வானா..

எழில் தன் காதலை எப்பொழுது உணர்வாள்.?

அனைத்தும் இனி வரும் பதிவுகளில்.. எங்கள் எழுத்தாளர்களின்.. கைவண்ணத்தில்..



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro