35.பிரியமுடன் விஜய்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

35. ப்ரியமுடன் வி்ஜய்

"மாமா நீங்க சரியா பார்த்திருக்க மாட்டிங்க.." என்றான் அபினவ்.

“இல்லடா.. எழில் நம்ம பேசிட்டு இருக்கப்போ, இந்த கடைக்குள்ள வந்ததப் பார்த்தேன். வந்து ரொம்ப நேரமாச்சு, இன்னும் ஆளைக்காணோமேன்னு நினைச்சு தான் இங்கே வந்து பார்த்தேன். கடை முழுக்கத் தேடிட்டேன். எழிலை காணோம். அதான்” என்று படபடப்பாக கூறினான்.

“இன்னொரு முறை நல்லா தேடுவோம் மாமா. அக்கா, டிரையல் ரூம்ல கூட இருக்கலாம்ல? கொஞ்சம் தேடிப்பார்ப்போம் மாமா. இங்க தான் எங்கேயாவது இருப்பாங்க பதறாதீங்க.” என்ற அவன் வாய்மொழி தனக்கு இதமாக இருப்பதை உணர்ந்த இளங்கதிர்.

“சரி... வா இன்னொரு முறை இந்த கடைய அலசுவோம்.” என்று கூறியபடி அபினவுடன் சேர்ந்து அவனும் தேட ஆரம்பித்தான்.

இம்முறையும் தனக்கு ஏமாற்றம் மிஞ்சவே,

“மாமா. நல்லா பார்த்தீங்களா? அக்கா இதுக்குள்ள தான்  வந்தாங்களா?” என்று மீண்டும் அபினவ் வினவினான்.

“ஆமா அபி.” என்று பதிலுரைத்த கதிர், எழிலின் எண்ணைத் தொடர்புக் கொண்டான். ஆனால், அது அணைத்து வைத்திருப்பதாக கம்புயூட்டர் வாய்ஸ் கேட்கவே, அவனுக்கு தர்ஷித்தின் வார்த்தைகளே நினைவிற்கு வந்தது.

‘ஒருவேளை இதுக்கு பின்னாடி, தர்ஷித்தோட சதி திட்டம் ஏதுவும் இருக்கோ?’ என்று தோன்றவே... அபினவுடன் சேர்ந்து மீண்டும் அந்த மால் முழுவதும் தேடிப்பார்த்தான். ஆனால், அங்கும்  அவள் கிடைக்காமல் போகவே.... கதிருக்கு ஒரு நொடி உலகமே நின்றதைப் போன்று தோன்ற… அப்படியே மாலின் வாசற்படியில், தன் தலையை இரண்டு கைகளால் தாங்கிப் பிடித்தபடி உட்கார்ந்தான்.

கதிரின் கண்களில் கண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்த அபினவ்,

“நீங்க, அந்த தர்ஷித் பயலுக்கு கால் அடிச்சுப் பாருங்க மாமா. அவனுக்கு என்ன தான் பிரச்சனை...? விரும்பாத பொண்ண கட்டிக்க எவ்வளவு வேலைல்லாம் பண்ணுறாங்கன்னு நினைக்கும்போதே கடுப்பாகுது மாமா.” என்று தலையில் அடித்துக்கொண்டான். 

அவனை நிமிர்ந்துப் பார்த்த கதிர், “விடு அபி. இப்போ நமக்கு தெரிய வேண்டியதுல்லாம் எழில் எங்கே இருக்குறங்குறது தான்.” என்றவனின் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்த அபினவிற்கு மனம் வருத்தத்தியது.

பின்னர், திடீரென தனது கைப்பேசியை எடுத்து தர்ஷித்தின் எண்களை அழுத்தினான். ஆனால் அவன் எண்ணும் அணைத்திருக்கவே, ‘இதற்கு மேலும் பொறுத்திருப்பது சரி வராது’ என்ற எண்ணத்துடன், வேகமாய் எழுந்தான்.

“இது சரிவராது அபி. அந்த தர்ஷித்தோட நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்.” என்று கதிர் கூறினான்.

“இப்போ நம்ம என்ன செய்யுறது மாமா? போலீஸ்கிட்ட சொல்லுவோமா?” என்று வினவினான் அபினவ்.

“வேற வினையே வேணா. எனக்கு போலீஸ் மேல அபார நம்பிக்கை. தேடுறேங்கற பேர்வழில அவங்க, நம்மகிட்டயும் காசு வாங்கிட்டு, அந்த தர்ஷித்துட்டயும் காசு வாங்கிட்டு, எழில காணோம்னு முடிச்சிருவாங்க. அதுக்கு நாம, நம்ம ஸ்டைல்ல தேட ஆரம்பிப்போம்.” என்று கிளம்பியவன், தனது பைக் நிறுத்திய இடத்திற்கு அபினவுடன் சென்றான். 

தனது பைக்கை உயிர்பிக்கும் பட்சத்தில் அதனை ‘கிக் ஸ்டார்ட்’ செய்த கதிரை வர்சினி கடந்துப் போகவே, அதனை கவனித்த அபினவ்…

“மாமா... மாமா..! வர்சி... வர்சினி போறா பாருங்க.” என்று அவன் பைக் இருக்கையில் அமரமுடியாமல் பொங்கி பொங்கியழ... கதிருக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போன்றிருந்தது.

‘இந்த அபினவ் இருக்கானே!!! இந்த கலவரத்துலையும் கிளுகிளுப்பு கேக்குது இவனுக்கு. நான் என்னோட ஆளக் காணோம் ங்கற டென்சன்ல இருக்கேன். இவன், அவனோட ஆளப் பார்த்துட்டு பொங்குறான். இதுல நான் வேற அவளப் பார்க்கணுமாம்.’ என்றேண்ணியவன், அபினவ் காட்டிய திசையில் பார்க்காமல், எவ்வளவு உதைத்தும் தனது இருசக்கர வாகனம் உயிர்க்காமல் இருப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தினான். 

பின்னர் ஏதோ யோசனை வந்தவனாக... படக்கென்று தன் தலையை பின்பக்கம் திருப்பி, அபினவ் கைக்காட்டிய திசையில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த வர்சினியைப் பார்த்தான். அந்த நொடியில் தனக்கு பின்னால் அபினவ் அமர்ந்திருப்பதையே மறந்த இளங்கதிர், பைக்கினை அப்படியே கீழே விட்டுவிட்டு வர்சினியைப் பின்தொடர்ந்தான்.

பைக்குடன் கீழே விழுந்த அபினவ், எழும்ப முயன்றுக்கொண்டே தனது மாமன் தன் காதலியை ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்வதை கவனித்தான்.

‘நம்ம மாமாவுக்கு நம்ம மேல தான் எவ்வளவு பாசம்? அவங்க காதலியக்காணோம். ஆனால் நம்ம பிரச்சனையத் தீர்த்து வைக்க எவ்வளவு போராடுறாரு.’ என்று மனதிற்குள் கதிரை எண்ணி நெகிழ்ந்தவன், மெதுவாக தன் காலினை, பைக்கிலிருந்து உருவி விட்டு எழுந்தான். முதலில் தத்தித் தத்தி நடந்தாலும், பின்னர் தனது லேசான காயத்தினைக் கூட பொருட்படுத்தாமல் கதிரை பின்தொடர்ந்தான் அபினவ். தனது நடையில் வேகத்தைக் கூட்டிய அபினவ், கதிரை நெருங்கவும் அவந்னது தோள்பட்டையைப் பாசம் பொங்கப் பிடித்து,

“மா....மா......!” என்க. அவன் வந்துவிட்டத்தை அப்போது உணர்ந்த கதிர்,

“ஹான். வா அபி. அங்கே உன் ஆளு வர்சி போறா பாரு.” என்று தன் குரலில் படபடப்பை வெளிப்படுத்திய கதிர், அந்நொடியில் அபினவின் மனதில் மிகஉயரிய இடத்தைப் பிடித்தான். 

‘மாமா உண்மையாவே ரொம்ப பெரிய மனசுக்காரர் தான். தன்னுடைய பிரச்சனையிலும், என்னுடைய பிரச்சனையக் கண்டு அதுக்காக படபடக்குறார்.’ என்று மனதிற்குள் எண்ணியவன், “ஆமாம் மாமா! வர்சி போயிட்டு இருக்காள். உங்களோட இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னுடைய பிரச்சனையப் பத்தி யோசிக்குற நீங்க ரியலி கிரேட் மாமா.” என்று உதட்டில் நெழ்வு பொங்க கூறினான்.

ஏறயிறங்கப் அபியை பார்த்தான் கதிர். அவன் பார்வையே, ‘என்ன இவன் உளருறான்?’ என்று காட்டியது. தனது நடையில் மேலும் வேகத்தை அதிகரித்த கதிர் அபினவிடம்,

“கிரேட், பிரேட் லாம் அப்பறம் இருக்கட்டும். இப்போவே போய் வர்சினிய சமாதனம் பண்ணப் பாரு.” என்று கதிர் வார்த்தையைக் கேட்ட அபினவ், பாசம் பொங்க அவனைப் பார்த்தான்.

‘அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே...!!’ என்று தன் மனதிற்குள் கதிருக்காக பாட்டே பாடினான். “இதோ ஓடுறேன் மாமா. இதோ...” என்று கூறியவன் நகர எத்தனிக்க... அவனது கரத்தைப் பிடித்து நிறுத்தினான் கதிர்.

“நல்லா கவனி அபி. வர்சினி அவங்க வீட்ல நடந்த பிரச்சனையால ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்கா… நீ அவளை எப்படியாச்சும் சமாதானம் பண்ணிடு. எழில கண்டுபிடிக்க அவள் உதவி நமக்கு இப்போ தேவை. நீ என்ன பேசுவ எப்படி பேசுவனு எனக்கு தெரியாது. ஆனால், வர்சினி நார்மல் ஆகிடணும். புரிஞ்சுதா? என்று கண்டிப்பானக் குரலில் கதிர் பேசியதைக் கேட்ட அபினவின் மனதில் சோக கீதம் இசைத்தது.

‘அப்போ இது எனக்காக மட்டுமில்லையா? அவருக்காகவுமா?’ என்றவன், அபுர்வசகோதரர்கள் படத்தில் வரும் அப்புக்கமலைப் போல் பாவமாக கதிரைப் பார்த்தான். 

சட்டென்று எழிலின் நினைவு வரவே, கதிரின் பிரச்சனை தான் பெரிதென்று உணர்ந்தவனாய் ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு ஓடிச்சென்று வர்சினியைப் பிடித்தான். 

அவர்களிருவரையும் பேசவிட்டு அவர்கள் கண்பார்வை படும் தொலைவில் நின்றுக்கொண்டான் கதிர்.

அவர்களிருவருக்கும் இடையே நடந்துக்கொண்டிருந்த பேச்சு வார்த்தையை தொலைவில் நின்றுப்பார்த்து கொண்டிருந்த கதிர், நீண்ட நேரத்திற்கு பிறகு வர்ஷினி சமாதானம் ஆனதை கவனித்தான். 

சமாதானமான வர்சினியிடம் ஏதோ அபினவ் கூற, அவளோ அப்பொழுது தான் கதிர் நின்றுக்கொண்டிருந்த இடத்தைப் பார்த்தாள். 

தன்னை நோக்கிய வர்சினியைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தான் அவன். பின்னர், அவன் ஏதோ கூற... மீண்டும் கதிரைப் பார்த்தாள். சில நிமிடங்களிலேயே வர்சினியை அழைத்துக்கொண்டு கதிரிடம் வந்தான் அபினவ்.

தனக்கருகில் வந்து நின்ற அபினவின் காதைக் கடித்தான் கதிர். 

“எப்படி டா சமாதனம் பண்ண? என்னனு பேசுன?” என்று ரகசியக் குரலில் கதிர் வினவ…

“அதெல்லாம் அப்பறம் சொல்லுறேன் மாமா. வர்சி கிட்ட எழில் அக்கா பத்தி சொல்லிட்டேன். நீங்களும் ஒருமுறை பிரச்சனையப் பத்தி விளக்கமா சொல்லிடுங்க.” என்று அபினவும் கதிரிடம் கிசுகிசுத்தான்.

அபினவின் வார்த்தைபடி, கதிரும் எழிலும் தாமும் ஒன்றாக அம்மாலிற்கு வந்ததிலிருந்து, அபினவிடம் தான் பேசிக்கொண்டிருந்த வேளையில், அவள் பக்கத்து கடைக்குள் சென்றதையும் அதன் பிறகு அவள் திரும்பவில்லை என்பதையும்... எழிலின் கைப்பேசி எண்ணிற்கு தாம் அழைப்பு விடுத்த போது, அதில் அவள் எண் அணைத்துவைத்திருப்பதாய் வந்த செய்தியையும் கூறிமுடித்தான்.

“சரிங்கண்ணா... இதுல நான் எப்படி உதவ முடியும்....? அவன் என் அண்ணன் தான்… ஆனா இப்போ கொஞ்ச நாளா அவன் பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு பத்திக்கிட்டு வருது… நான் மட்டும் அவனுக்கு முன்னாடி பிறந்திருந்தேன் மண்டைல நறுக்கு நறுக்குன்னு கொட்டியே சரி பண்ணிருப்பேன் ” என்றாள்.

‘என்ன இவள் பொசுக்குனு இப்படி சொல்லிட்டா?’ என்றெண்ணிய கதிர், அவளிடம் வெளிபடையாய் கேட்கத் தயங்கி... “நல்ல்ல்ல்லா யோசிச்சுப் பாருங்க. எங்களுக்கு உதவக் கூடிய வழி ஏதாவது ஒரு விஷயமாவது உங்களுக்கு தெரியவரும்.” என்று கதிர் வர்சினியின் கண்களைப் பார்த்துக் கூறினான். 

அவன் கூறியதைப்போல் வர்சினியும் சற்று சிந்திக்க... ஏதோ யோசனை வந்தவளாய்,

“யெஸ்... எனக்கு ஒரு ஐடியா கிடைக்சிருச்சு“ என்று அவள் கண்கள் மின்ன கூறவும்…

“என்ன என்ன என்ன என்ன?” என்று அபினவ் ஜொள்ள... அவனை தன் கடைக் கண்ணால் பார்த்து முறைத்தான். கதிரின் மறைமுகமான முறைப்பைக் கண்டுக்கொண்ட அபினவோ, தனது அருவியை நிறுத்திவிட்டு, மெதுவாய்... “என்ன ஐடியா?” என்று கேட்கவும், ‘கழுக்’ என்று சிரித்தாள் வர்சினி.

“என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டோட அண்ணன் ஒருத்தர் போலீஸா இருக்கார்.. எனக்கும் அவரை நல்லா தெரியும்...” என்று அவள் கூறிமுடிக்கும் முன்னமே அபினவ் அவள் பேச்சைத் தடுத்து நிறுத்தினான்.

“அதெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன். எங்கள் மாமாவுக்கு இந்த பிரச்சனைல போலீஸ இழுக்குறது சுத்தமாக பிடிக்கல. அதனால இது ஒத்து வராது வேற ஐடியா சொல்லு.” என்று கூறவும் அதுவரை அவள் முகத்தில் தோன்றிய பிரகாசம் மறைந்து யோசனையாய் கதிரைப் பார்த்தாள். 

ஆனால் கதிரோ இம்முறை வெளிப்படையாகவே அபினவை முறைத்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையே, ‘ஏன் டா டேய்?!’ என்றது. இதனை உணர்ந்த அபினவ்.

“நம்ம அமைதியா இருந்துடுறது தான் நல்லது.” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான். 

சூழ்நிலையை சரிசெய்யும் விதமாக கதிர் வர்சினியிடம் மெதுவாக,

“அது மத்த போலீஸ் மா. இப்போ நீ சொல்லுறது உனக்கு தெரிஞ்சவர் தானே? நீ சொல்ல வந்தத முழுசா சொல்லி முடிம்மா. இவன் கிடக்கான்.” என்று அபினவை முறைத்தபடி கூறினான் பொறுமையாக.

“அதாவது, எனக்கு தெரிஞ்சவர் இன்ஸ்பெக்டரா இருக்கார். அவரால கன்ட்ரோல் ரூம் வரைக்கும் போய் பார்க்க முடியும். நீங்க சரின்னு சொன்னா, அவர்கிட்ட உதவி கேட்கலாம்.” என்று கதிர் மற்றும் அபினவின் முகத்தை மாற்றி மாற்றிப் பார்த்தவாறு வினவினாள்.

“ஆஹா! இது நல்ல ஐடியா தான். நீங்க அவர்கிட்ட இப்போவே நமக்கு இந்த உதவிய செஞ்சுத் தர முடியுமானு கேட்டு பாருங்களேன். அவங்க கிட்ட எழிலோட சிம் கடைசியா எந்த எடுத்துல ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு பார்த்து சொன்னா, நாம அவளத் தேட மிகப் பெரிய உதவியா அமையும். ” என்று குஷியும் கெஞ்சலுமாகக் கூறினான். 

அவன் கூறியது தான் தாமதம். தனது கைப்பேசியை வேகமாக எடுத்து, அதனினும் வேகமாய் தீயின் வேகத்தில் தனது போலீஸ் அண்ணனான அகிலேஷிற்கு அழைப்பு விடுத்தாள். மறுமுனையில் அவளது அழைப்பை ஏற்ற அகிலேஷோ,

“சொல்லு வர்சினி.” என்றதும், வர்சினி எழிலின் பிரச்சனையை விளக்கமாய் அவனிடம் கூறிமுடித்தாள். 

“அகிலண்ணா, நீங்க எனக்காக அவங்க சிம் கடைசியா எங்கே ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு பார்த்து சொல்ல முடியுமாண்ணா?” என்று கேட்கவும், மறுமுனையில்…

“கண்டிப்பா...மா..” என்று அகிலேஷ் அதற்கு ஒப்புக்கொள்ள...

“தேங்கஸ். அப்பறம், லெட் இட் பீ அன்-அஃபிசியல் அகிலண்ணா. காணாமல் போனது என்னோட ஓன் ரிலேசன்.” என்று வர்சினியின் குரலில் கெஞ்சல் தெரிய, அதற்கும் அவன்,

 “சரி சரி பா. நான் எங்கேனு பார்த்துட்டு உனக்கு கால் பண்ணி சொல்றேன்.” என்று கூறிமுடித்து அவளது அழைப்பை துண்டித்தான்.

“என்ன சொன்னாங்க?” என்று கதிர் பதட்டத்துடன் கேட்க…

“அவர் பார்த்துச் சொல்லுறேன்னு சொல்லிருக்கார். வெயிட் பண்ணுவோம்.” என்று அவனது கேள்விக்குப் பதிலுறைத்தாள். 

மூவரின் முகத்திலும் படபடப்பு அப்பட்டமாய் தெரிந்தது. சில நிமிடங்களிலேயே அகிலேஷிடமிருந்து அழைப்பு வரவே, அதனை ஒரே ரிங்கில் எடுத்தாள் வர்சினி.

“ஹலோ அகிலண்ணா! ஏதாவது தெரிஞ்சுதா?” என்று பதட்டத்துடன் வர்சினி கேட்க, அதற்கு மறுமுனையில்…

“ம்ம்ம்...! கடைசியா, ஹைப்பர் மால் தாண்டி உள்ள நேசனல் ஹைவேஸ்ல ஸ்விட்ச் ஆஃப் ஆகிருக்கு. நான் வேணும்னா உங்களுக்கு துணைக்கு வரவா?” என்று அகில் கேட்கவும்,

“இல்ல பரவாயில்லண்ணா. நாங்க என்னன்னு பார்த்துட்டு உன்கிட்ட சொல்லுறேன்.” என்று அவள் கூறவும் சரியென்று கூறிவிட்டு, அவளது அழைப்பைத் துண்டித்தான்.

கதிரிடம் விவரத்தைக் கூறிமுடித்தாள் வர்சினி. அவள் கூறக் கூற கதிருக்கு யோசனையெல்லாம் தர்ஷித்திடம் சென்றது. தர்ஷித் பற்றி எதுவும் கூறாமல், தனது பைக்கினை உதைத்து அதனை உயிர்பித்தான். அவனுக்கு பின்னால் அபினவ் அமரவும், வர்சினியைப் பார்த்த கதிர்,

“ரொம்ப தேங்கஸ் வர்சினி.” என்றான்.

 

“என்னண்ணா! அவ உங்களவிட எனக்குத் தான் நெருக்கம். என்னோட க்ளோஸ் ரிலேசன். அவள் காணோம்னா நான் தேட மாட்டேனா? இதுக்கு ஒரு தேங்கஸ் வேற...” என்றவள், “நானும் வரவா?” என்று கேட்டுவைக்க... அதற்கு அவ்விரு ஆடவர்களும் ஒருசேர,

“வேண்டாம்” என்றுரைத்தனர். பின்பு, கதிரே தன் பேச்சைத் தொடர்ந்தான்.

“இல்லை வர்சினி. நீங்கள் பத்திரமா வீட்டுக்குப் போங்க. நாங்கள் எழில எப்படினாலும் தேடிக் கண்டுப்பிடிச்சிடுவோம்.” என்று கூற... 

அதற்கு சரியென்பதுப் போல் தலையாட்டி வைத்தவள்.

“எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. நீங்கள் ரெண்டுப் பேரும் எப்படியாவது அவளக் கண்டுப்பிடிச்சிடுவீங்கனு எனக்குத் தெரியும்” என்று கூறினாள் வர்சினி. 

பைக்கினை எடுக்கப் போன கதிர், “ம்ம்... எழில் காணாமல் போன விசயத்த அவளோட பெத்தவங்க கிட்ட சொல்லிடாதீங்க.  இன்னைக்கு சாய்ந்திரத்துக்குள்ள அவள நாங்க கண்டுப்பிடிச்சிடுவோம்.” என்றான். 

“நிச்சயம் சொல்லமாட்டேன்.” என்று புன்னகையுடன் கூறினாள். அவளிடம் கைக்காட்டிவிட்டு இருவரும் நேசனல் ஹைவேஸ் நோக்கிப் பறந்தனர்.   

*********
Watpad id: @priyamudan_vijay

Pratilipi id:

ப்ரியமுடன் விஜய்
*********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro