40.ஆர்த்தி பார்த்திபன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

40 ஆர்த்தி பார்த்திபன்

எங்கும் பசேலென இருந்த அந்த மலையின் இயற்கை எழிலும், ஆங்காங்கே பூத்துக் குலுங்கிய வண்ண பூக்களும் கதிரின் மனநிலையை மாற்றி இருந்தன. அவன் நண்பர்கள் அனைவரும் கூச்சலிட்டு, பாட்டு பாடி உற்சாகமாக இருந்த போதும் கதிரின் மனதில் மட்டும் எழிலின் நினைவுகளே ஓடிக் கொண்டிருந்தன.

அவள் கல்லூரியில் இருந்து கிளம்பி மூன்று நாட்கள் கழிந்து இருந்தது. அந்த மூன்று நாட்களில் அவள் அவனிடம் ஒருமுறை கூட பேசவும் இல்லை, அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் எதையும் பார்த்ததாகவும் தெரியவில்லை, இதெல்லாம் அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தன.

"என்ன பாஸ், நாங்க இங்க இவ்வளவு ஜாலி பண்ணிட்டு இருக்கோம், நீங்க என்னடான்னா இவ்வளவு சைலண்ட்டா வரீங்களே!" என்றான் பாலாஜியின் நண்பனான லோகேஷ்.

"அவரோட மனசு இங்க இருந்தா தானே, அதுதான் ஹாஸ்டல்ல இருந்து வேலூருக்கு போயிருக்கே, அதான் அவரு எதையும் ரசிக்குற மூட்ல இல்ல" என்றான் முகில் சிரித்து கொண்டே.

"ஓ! உங்களுக்கும் லவ் பிராப்ளமா? இதோ இருக்கானே ரமேஷ் இவனுக்கும் அதே பிராப்ளம் தான். ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் இவன் லவ் பிரேக் அப் ஆச்சு, அதுக்காக தான் இந்த ட்ரிப்புக்கே பிளான் பண்ணுனோம், பிரேக் அப் பார்ட்டி" என்றான்.

கதிர் அவர்கள் முகத்தை வினோதமாக பார்த்தான்.

"டேய்! கொஞ்ச நேரம் அமைதியா வாங்க டா, நானே கஷ்டப்பட்டு அவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன் நீங்க எதாவது சொல்லி அவனை கடுப்பேத்தி இங்க இருந்து கிளம்ப வச்சுறாதீங்க" என்றான் பாலாஜி. அதற்கு பிறகு அவர்கள் கதிரிடம் எதுவும் பேசவில்லை.

ஒருமணி நேரத்திற்குள் அவர்கள் தங்க வேண்டிய ரிசார்ட்டை அடைந்தார்கள்.

கதிர் எதிலும் ஈடுபாடு இல்லாமல் தனியாக நின்று எதை பற்றியோ தீவிரமாக யோசித்து கொண்டு இருப்பதை கவனித்த பாலாஜி அவன் அருகில் வந்தான்.

"ஏன் டா, டூர் வந்த இடத்துல இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு? ஏன் இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்தை மேலும் மேலும் யோசிச்சு மனசை குழப்பிக்குற?" என்றான் பாலாஜி அவன் தோளை பற்றி.

"எழில் அவ வீட்டுக்கு போனதுல இருந்து ஒரு ஃபோன் கூட பண்ணல டா! எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. ஒரு மெசேஜ் பண்ணி இருந்தா கூட நான் நிம்மதியா இருந்திருப்பேன், அதுக்கூட இல்ல" என்றான் கதிர் வருத்தமாக.

"அவளுக்கு அங்க சூழ்நிலை எப்படியோ அது படி தானே நடந்துக்க முடியும். ஏற்கனவே மதுரா சொல்லிருக்கா அவ அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுனு. அப்படி இருக்கும் போது, அவளால எப்படி பேச முடியும்? அப்புறம் அவ இருக்கிறது கிராமம் வேற, அவளால தனியா வந்து கூட பேச முடியாத சூழ்நிலை இருக்கலாம்ல, அப்படி எதாவது ஒரு காரணம் இருக்கும்னு நம்பு.

மதுராவும் இப்படி தான், இதுவரைக்கும் அவ வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் எங்கிட்ட பேசுனதே இல்ல" என்றான் பாலாஜி.

"ஹம்! அதுவும் சரிதான். அவளுக்கு அங்க என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது" என்று கூறி அவன் அந்த கருத்தை ஏற்றுக் கொண்டான் கதிர்.

"சரி வா, இப்போ போய் அவுங்க பார்ட்டில கலந்துக்கலாம்" என்று கூறி அவனை அந்த ரிசார்ட்டின் பின்புறத்துக்கு அழைத்து சென்றான் பாலாஜி.

அவர்கள் செய்யும் கலாட்டாவை பார்த்து விட்டு, "பிரேக் அப்க்கு எல்லாம் பார்ட்டி தரது கொஞ்சம் ஓவரா இல்லையா டா! அந்த பொண்ணு இதை எல்லாம் பார்த்தா வருத்தப்பட மாட்டாளா?" என்றான் கதிர்.

"அவ ஏன் வருத்தப் பட போறா, அவ தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு அமேரிக்கால செட்டில் ஆக போறேன்னு கிளம்பிட்டாளே! இவன் தான் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தான். இவனை நார்மல் ஆக்க தான் இப்படி ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கோம்! இதனால அவன் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தாலும் எங்களுக்கு ஹேப்பி தான்" என்று கூறி கதிர் கையை பிடித்து இழுத்து சென்று அவர்களுடன் சேர்ந்து ஆட வைத்தான்.

அவனுக்கு ஆரம்பத்தில் அதில் உடன்பாடு இல்லாத போதும், அவர்களின் செயல்கள் அனைத்தைம் அவனையும் கவலை மறந்து சிரிக்க வைத்திருக்க, அவனும் அவர்களுடன் சேர்ந்து அந்த இரவை மகிழ்ச்சியுடன் கழித்தான்.

மறுநாள் காலை எழுந்திருக்க முடியாமல் அவன் தலை வலித்தது. ஆனால் அவன் உறக்கத்தை வலுக்கட்டாயமாக கலைத்தது அந்த கைபேசி அழைப்பு.

கண்களை திறக்காமலே அதை எடுத்து பேசினான் கதிர்.

"கதிர்! நான் எழில் பேசுறேன்" பதட்டத்துடன் ஒலித்த அவள் குரலை கேட்டு அவன் தூக்கம் முழுவதும் கலைந்து போனது.

கைபேசியின் திரையைப் பார்த்து அது அவளின் எண் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, 

"என்னாச்சு எழில்? நீ எங்க இருக்க? இது யாருடைய நம்பர்?" என்றான்.

"கதிர் நான் உங்களை காதலிக்குற விஷயம் என் அப்பாவுக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு" என்றாள் பதட்டமாக.

அந்த பதட்டமான சூழலிலும் அவள் அவனை காதலிப்பதாக சொல்லியதை கேட்டு அவன் மனம் ஆனந்தத்தில் குதித்தது.

"கதிர்! கேட்குதா?" அவள் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தான்.

"கவலை படாதே எழில்! எப்படியாவது அவரை சமாதானம் செஞ்சுக்கலாம்" என்றான்.

"ஐயோ கதிர்! உனக்கு என்னோட அப்பா பத்தி தெரியாது, அவருக்கு இந்த காதல் எல்லாம் சுத்தமா பிடிக்காது. என்ன காலேஜ்ல சேர்க்கும் போதே, இப்படி எதாவது ஒரு விஷயம் அவர் காதுல விழுந்தா என்ன காலேஜுக்கு அனுப்ப மாட்டேன், படிப்பை நிறுத்திடுவேனு சொல்லி தான் என்ன அங்க சேர்த்து விட்டாரு" என்றாள்.

"இப்போ காலேஜ்ல இருந்து நிறுத்திட்டாரா? காலேஜ் போகக் கூடாதுன்னு சொல்லிட்டாரா? நீ இனி காலேஜ் வரமாட்டயா?" என்றான் மிகவும் பதட்டமாக.

"அது மட்டும் செஞ்சிருந்தா பரவாயில்ல... அவர் ஒரு படி மேல போய், என் மாமன் மகன் கூட எனக்கு கல்யாணமே பேசி முடிச்சுட்டாரு. நான் இங்க வந்ததும் என் ஃபோனை வாங்கி உடைச்சுட்டாரு! என்னால உன்கிட்ட பேச முடியாம செஞ்சிட்டாரு! என்னை சுத்தி வீட்ல பயங்கர காவல் போட்ருக்கார். என்னால எதுவுமே பண்ண முடியல… நா சொல்றது எதுவுமே அவர் காதுல விழவே இல்ல… அவரே எல்லாம் பேசி உடனே கல்யாணம் முடிவு செஞ்சு இன்னும் ரெண்டு மணி நேரத்துல எனக்கு கல்யாணம்" என்று அவள் கூறியதை கேட்டு அதிர்ந்து போனான் கதிர்.

"நீ இப்போ கிளம்பினாலும் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி இங்க வந்துரலாம். சீக்கிரம் கிளம்பி வா.. என்னை உன் கூட கூட்டிட்டு போயிடு கதிர். என்னால உன்னை தவிர என் புருஷனா வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல…   மனசுல உன்னை நினைச்சுட்டு வேறோருத்தர் கூட காலம் பூராவும் என்னால வாழ முடியாது! அப்படி ஒருவேளை என்னை வேற ஒருதன்கூட அவ்ளோ சீக்கிரம் வாழ்ந்துருவேன்னு தப்பு கணக்கு போட்டு இந்த கல்யாணத்தை நடத்திருலாம்னு நினைச்சாங்கன்னா என் பிணத்தை தான் பார்ப்பாங்க அவங்க.

எப்படியாவது வந்து என்ன கூட்டிட்டு போயிடு. எனக்கு நீ வேணும், நீ மட்டும் தான் வேணும், எனக்கு வேற எதுவுமே வேண்டாம், வந்து என்ன கூட்டிட்டு போ!" என்றாள் அழுது கொண்டே, கதிரின் கண்களிலும் கண்ணீர் பெருகி இருந்தது.

"நான் வரேன் கண்மணி! என்மேல நம்பிக்கை வச்சு தைரியமா இரு! நான் நிச்சயம் அங்க வந்து அந்த கல்யாணம் நடக்காம தடுத்திருவேன்" என்றான் உறுதியான குரலில்.

"ஐ…" அவள் ஏதோ சொல்ல வர அதற்குள் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

கதிர் வேகமாக பாலாஜியை எழுப்பி நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தான். 

"நல்ல வேளை நாம இங்க இருக்கோம், இங்க இருந்து சரியா ஒன்றரை மணி நேரத்துல எழில் இருக்க கிராமத்துக்கு போயிடலாம். நீ ஒன்னும் கவலை படாதே, நாங்க எல்லாரும் இருக்கோம். எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி, அவ அப்பாவுக்கு இதை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்" என்று கூறி அவன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

"யார் கிட்ட டீ பேசிட்டு இருக்க? ஓ! உன் காலேஜ் ரோமியோ கிட்டயா! இங்க பாரு, இனிமேல் அவன் கிட்ட பேசனும்னு நினைக்காத, இன்னிக்கு உனக்கு கல்யாணம், அதை மறந்து இப்படி எல்லாம் செஞ்சுட்டு இருக்காத! அவன் இங்க வரதுக்கு வாய்ப்பே இல்ல, அப்படி வந்தாலும் நம்ம சொந்தகாரங்க போதும் அவனை அடிச்சு இங்கிருந்து ஓட விடுறதுக்கு. 

அதனால வீணா பகல் கனவு காணாம போய் கிளம்பி தயாரா இரு, இன்னும் அரைமணி நேரத்துல கோவிலுக்கு கிளம்பனும்" என்று கடுமையாக கூறி விட்டு அங்கிருந்து சென்றான் அவளின் தமையன் நெடுமாறன்.

"அம்மா! ஒருவேளை நீ உயிரோடு இருந்திருந்தா, நீயாவது என்னுடைய ஆசை, விருப்பம் பற்றி யோசிச்சு எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு அப்பா கிட்ட பேசி இருப்ப, இப்போ நீ இல்லாம நான் இங்க ரொம்ப கஷ்டப்படுறேன் மா" என்று அவள் தாயின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்தாள்.

"கதிர் வந்திருவாரு" என்று அவள் எண்ணி கொண்டு இருந்த போது தான் அந்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்தாள்.

"நண்பண் காதல் முறிவை பார்ட்டி கொடுத்து கொண்டாடிய நண்பர்கள், புதுவகையான வேடிக்கை நிகழ்வு, நேற்று நீலகிரியில் நடந்தது. காதல் முறிந்து சோகத்தில் இருந்த நண்பனை உற்சாகப்படுத்தி அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வர சக நண்பர்கள் கொடுத்த பார்ட்டி இன்றைய இளைஞர்கள் இடையே பேசு பொருளாக மாறியுள்ளது" என்று ஒளிபரப்பப்பட்ட செய்தியை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் எழிலினியா. 

ஏலகிரி என்று சொல்வதற்கு பதில் நீலகிரி என்று அவர்கள் வாசித்த செய்தியால் இங்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையே பறிபோக போகிறது என்று அந்த செய்தியாளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

கதிர் மகிழ்ச்சியாக அவன் நண்பர்களுடன் சேர்ந்து சிரித்து விளையாடி கொண்டிருந்த காட்சி அவள் மனதில் பதிந்தது.

நீலகிரியில் இருந்து அவள் கிராமத்துக்கு வர வேண்டும் என்றால் எப்படியும் ஆறு மணி நேரம் ஆகும். கதிர் பறந்து வந்தாலொழிய அவன் முகூர்த்த நேரத்திற்குள் அங்கு வந்து சேர்வது சாத்தியம் இல்லை என்று அவளுக்கு உறைத்தது.

கண்களில் பொங்கி வந்த கண்ணீரை தன் கரத்தால் துடைத்து கொண்டு, மனதில் தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்திருந்தாள்.

கதிர் அந்த எண்ணிற்கு மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தும் அது பலனளிக்காமல் போனது. எப்படியும் அங்கு சென்று அவளுக்கு திருமணம் நடைபெறாமல் காப்பாற்றி விடலாம் என்று உறுதியாக நம்பி இருந்தான்.

அவன் எண்ணியது போல் ஒன்றரை மணி நேரத்தில் அவள் கிராமத்தை அடைந்தார்கள்.

அது மிகவும் சிறிய கிராமம் ஆதலால் அவள் இல்லத்தை தேடி கண்டுபிடிக்க எந்த சிக்கலும் ஏற்படவில்லை அவர்களுக்கு.

அவர்கள் அங்கு சென்ற போது, அவள் வீட்டு வாயிலில் பலர் நின்று கொண்டு இருந்ததை பார்த்து, திருமணத்திற்கு வந்த சொந்தகாரர்ள் என்று தான் நினைத்தான் கதிர்.

அவர்களை விலக்கி விட்டு வேகமாக அவள் இல்லத்திற்குள் நுழைந்தான்.

அப்போது தான் முற்றத்தில், திருமண கோலத்தில், உயிருக்கு போராடிய நிலையில் படுக்கவைப்பட்டிருந்த எழிலை பார்த்தான். 

அவள் வாயில் நுரை தள்ளி கொண்டு இருக்க, அவள் அருகில் அமர்ந்திருந்த வயதானவர் ஏதேதோ மூலிகைகளை அவள் வாயில் திணித்து கொண்டு இருந்ததை பார்த்து வேகமாக அவளிடம் ஓடி சென்று, அவள் அருகில் அமர்ந்து, அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டான்.

அவனை பார்த்ததும் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் இதழ்கள் பேச துடித்தன, அவனிடம் பேசுவதற்காக மிகவும் சிரமப்பட்டாள்.

"க.. கதிர்…!" அவள் திக்கி திணறி அவன் பெயரை உச்சரிக்க, "ஏன் டீ இப்படி அவசரப்பட்ட! நான் தான் வரேன்னு சொன்னேனே, என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாம போயிருச்சா உனக்கு?

ஏன் இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ணுன" என்று அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவன் கதறியதை பார்த்து அங்கிருந்து அவன் நண்பர்கள் அனைவரும் கண்கலங்கி அங்கு நின்றிருந்தார்கள்‌.

"அப்பா! இவன் தான் இதுக்கெல்லாம் காரணம். இவனை இங்கிருந்து அடிச்சு விரட்ட சொல்லுங்க" என்று கோபமாக கூறினான் நெடுமாறன். ஆனால் அவளின் தந்தையோ எதுவும் பேசாமல் சிலை போல் அமர்ந்திருந்தார்.

"இந்த பொண்ணு பிழைக்குறது இனி நட்க்காது! மேல ஆக வேண்டிய காரியத்தை பாருங்க" என்று அந்த வயதானவர் கூற, கதிர் அவரின் சட்டையை பிடித்தான்.

"நான் அவளை காப்பாற்றுவேன். பாலாஜி, கார எடு! சீக்கிரம் ஹாஸ்பிடல் போனா எழிலை காப்பாற்றிடலாம்" என்று கூறி எழிலை அவன் கையில் ஏந்தி கொண்டான். நெடுமாறன் அவனை தடுக்க நினைக்க, அவனின் தந்தை அவனை அவ்வாறு செய்யாமல் தடுத்து விட்டார்.

கதிர் அவளை மடியில் படுக்க வைத்து கொண்டு, அவள் முகத்தை அடித்து அவள் சுயநினைவை இழக்காமல் பார்த்து கொண்டான். 

"கதிர்… நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்! என்ன நினைச்சு நீ வருத்தப் பட்டுட்டு இருக்க கூடாது" என்று அவள் தடுமாற்றத்துடன் கூற,

"இப்படி எல்லாம் பேசாத எழில், உனக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்" என்றான் அவள் கர்த்தை இறுக்கமாக பிடித்து கொண்டு.

"ஐ லவ் யூ கதிர்.." என்று கூறியவள் கண்கள் தானாக மூடிக் கொண்டன.
.
.
இந்த தொடரை பற்றிய உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும். உங்கள் ஒவ்வொரு கருத்தும் எங்களின் உத்வேகம்!

**********

வாட் பேட்: Aarthi_Parthipan
பிரதிலிபி: Arthi Rohini
அமேசான்: ஆர்த்தி பார்த்திபன் / Arthi Parthiban

**********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro