அத்தியாயம் (29)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனா சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஷக்தி சஞ்சனாவின் மீது கவிழ்ந்து இருந்தான். சஞ்சனாவின் மனம் ஷக்தியை கணவனாக ஏற்றுக் கொண்டு இருந்த பொழுதும் அவள் மனமோ உடலோ இந்த உறவுக்கு இன்னும் தயாராக இல்லை. சஞ்சனாவின் மீது கவிழ்ந்தவனுக்கு அவளது இதயத் துடிப்பு நன்றாக கேட்டது, அந்த துடிப்பு ''என்னை விட்டு விடு!!! விட்டு விடு!!!'' என்று கதறியதும் அவனுக்குக் கேட்டது. ஆனால் அவன் அவ்வளவு சுலபமாக அவளை விட்டு விடுவதாக இல்லை. தன் உதடுகளை அவள் கூந்தலுக்குள் நுழைத்து அவளது காதோரம் சென்று ''ஹாப்பி பர்த்டே சஞ்சு'' என்றான்.

தன் காதில் கேட்ட வார்த்தைகளை சஞ்சனாவால் நம்ப முடியவில்லை. விழி பிதுங்க ஷக்தியயையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள். அதற்குள் ஷக்தி அவள் மீது இருந்து எழுந்து அவள் அருகே அமர்ந்து கொண்டு இருந்தான். சமர்த் அவள் வாழ்க்கையை விட்டு சென்றதில் இருந்து சஞ்சனா அவளது பிறந்த நாளை கொண்டாடியதே கிடையாது. கடந்த ஓரிரு வருடங்களாக அவளுக்கு அவளது பிறந்த தினம் நினைவில் வருவதும் கூட கிடையாது. இன்று வேறு எதையோ நினைத்து அவள் பயந்து கொண்டு இருந்த சமயம் ஷக்தி அவளுக்கு இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததை அவளால் இன்னும் கூட நம்ப முடியவில்லை.

அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு நடப்புக்கு வர ஒரு சில நொடிகள் ஆனது. ஆனால் நடப்புக்கு வந்த பொழுது இன்பமும் இல்லாத துன்பமும் இல்லாத ஒரு இனிய வேதனை அவள் இதயத்தை வந்து அடைத்துக் கொள்ள ஷக்தியை அவளாகவே இறுக அணைத்துக் கொண்டாள். அதன் பின் சில நிமிடங்கள் அங்கு நிசப்தம் நிலவியது. இதுவரை பேசிக் கொள்ள தவறிய அனைத்தையும், ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ள நினைத்த அனைத்தையும் அவர்கள் மௌனத்தால் பேசிக் கொண்டனர். அந்த அணைப்பில் காதல் இல்லை, காமம் இல்லை, அவை அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு அன்பு அதில் கலந்து இருந்தது.

மனதில் உள்ள பாரத்தை நம்மால் தனியாக சுமக்க முடியாத பொழுது நம் அனைவருக்கும் தேவைப் படும் அணைப்பு. ''ஆல் இஸ் வெல்'' என்று சொல்கிற அணைப்பு. இதுவும் கடந்து போகும் என்று சொல்கிற அணைப்பு, உனக்கு நான் இருக்கிறேன் என்ற தைரியத்தை நம் ரத்தத்தில் ஏற்றி விடுகிற மாதிரியான இறுக்கமான அணைப்பு. அந்த அணைப்பில் நமக்குள் உள்ள எல்லா இறுக்கங்களும் கட்டவிழ்ந்து போகும். மனது லேசாகி வானில் பறப்பதைப் போல இருக்கும். அந்த இரவில், அந்த அறைக்குள் இருந்த அந்த இருவருக்குள்ளும் அது தான் நடந்து கொண்டு இருந்தது.

ஷக்தியை இறுக அணைத்துக் கொண்ட சஞ்சனாவே தான் தன்னை முதலில் சுதாகரித்தும் கொண்டாள். அந்த கட்டிப்பிடி வைத்தியத்தின் மகிமை அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்து இருவரும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்க ஷக்தி தான் முதலில் பேசத் தொடங்கினான்.

''உனக்கு வாங்கித் தர்றதுக்கு இந்த காட்டுல ஒண்ணுமே கிடைக்கல. ஊருக்கு போனதும் நீ என்னலாம் வாங்கி கேக்குறியோ எல்லாம் வங்கித் தாறேன். டீல்???'' என்று சஞ்சனாவை நோக்கி தன் உள்ளங்கையை நீட்ட, சஞ்சனா தன் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்து விட்டு தன் கையை ஷக்தியின் கைக்குள் வைத்துப் பூட்டி ''டீல்'' என்றாள்.

அதன் பின்னர் பல வருடங்கள் பிரிந்து இருந்த நண்பர்கள் சந்தித்தால் பேசிக் கொள்வது போல இருவரும் கட்டிலில் சாய்ந்து இருந்து மணிக் கணக்கில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டனர். ஆக மொத்தம் பல நாட்களுக்குப் பின்னர் இருவரும் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தனர். பேச்சின் நடுவே எப்பொழுது தூங்கினோம், யார் முதலில் தூங்கியது என்று தெரியாமலேயே தூங்கியும் போனார்கள். காலை 7 மணி ஆன பின்னரும் கதவு திறக்கப் படவில்லை, ஷக்தியும் உள்ளே தான் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட மாணவிகள் தான் ''நேற்று வெளியே படுத்துக் கொண்டதற்கும் சேர்த்து ஐயா உள்ளே விடிய விடிய பூஜை நடத்தி இருப்பார்'' என்று தங்களுக்குள் கேலி பேசிக் கொண்டு காலையில் ஷக்தி, சஞ்சனாவின் அறைக் கதவைச் சென்று தட்டினார்கள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதில் முதலில் விழித்துக் கொண்டது ஷக்தி தான். ஷக்தி விழித்துப் பார்த்த பொழுது சஞ்சனா பூனைக் குட்டி போல அவனது நெஞ்சில் ஒட்டிக் கொண்டு தன்னை சுருட்டிக் கொண்டு படுத்து இருந்தாள். அவளை அப்படிப் பார்க்கும் பொழுதெலாம் அவனது காதல் மனது என்னவோ செய்யும். தனக்கும் சஞ்சனாவுக்கும் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைகள் யாரைப் போல இருக்கும் என்று சிந்தித்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான் ஷக்தி. மறுபடியும் கதவு தட்டப்பட தன் காதலியின் தூக்கம் களைந்து விடப் போகின்றது என்று கதவு தட்டியவர்களை சபித்தது அவனது காதல் கொண்ட மனது. சஞ்சனாவின் தூக்கம் களைந்து விடக் கூடாதே என்று அவனே கை கால் அசைக்காமல் அவள் அருகே இன்னும் படுத்தே இருந்து அவளை ரசித்துக் கொண்டு இருக்க, அது பொறுக்க முடியாத யாரோ தான் கதவை இப்படித் தட்டுவது என்று அவன் மனம் திட்டித் தீர்த்து.

ஆனால் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் இப்பொழுது ஜன்னல் வழியாக அறைக்குள் சிந்தத் தொடங்க சஞ்சனா தானாகவே உடலை அசைத்து, கண்களை மிகவும் கஷ்டப் பட்டுத் திறந்து கொண்டு உறக்கம் களைந்து எழுந்து இருந்தாள். தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டவள், இன்னும் கட்டிலை விட்டு எழுந்து இருக்காது, இப்பொழுது ஷக்தியின் நெஞ்சின் மீது சொகுசாக தன் தலையை சாய்த்துக் கொண்டு ஷக்தியின் முகம் பார்த்த படி சுருண்டு படுத்துக் கொண்டு ''குட் மார்னிங் பாய் ஃப்ரெண்ட்'' என்றாள்.

அதற்குள் மறுமுறை கதவு ''படார் படார்'' என தட்டப் பட,

''அது யார் பாய் ஃப்ரெண்ட் கதவை அப்படி ஒடயிறா மாதிரி தட்டறது??'' என்றாள்.

''எல்லாம் நம்ம காதலுக்கு எதிரிங்க தான் கேர்ள்ஃப்ரெண்ட்'' இது ஷக்தி.

''எனக்கு என்னவோ நம்ம இதுக்கு மேல டிலே பண்ணா இப்போ கதவுல விழற இந்த அடி அடுத்து நம்ம ரெண்டு பேர் மண்டை மேல விழும்னு தோணுது. உனக்கு??''

''எனக்கும் அதே தான் தோணுது'' என்று ஷக்தி பதில் அளிக்க.

இருவரும் கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டனர். சஞ்சனா கண்ணில் குறும்பு மின்ன ஷக்தியைப் பார்க்க, ஷக்தி அதே குறும்புடன் சஞ்சனாவைப் பார்க்க இருவரும் அதற்க்கு மேல் அடக்க மாட்டாமல் கலகலவென்று சிரித்து வைத்தனர். அதன் பின்னர் சஞ்சனா குளியல் அறைக்குள் நுழைந்து கொள்ள, ஷக்தி கதவைத் திறக்கும் படியாக வெளியே சென்றான். வெளியே மாணவிகள் அனைவரும் குளித்து தயார் ஆகி இவர்கள் இருவரும் வரும் வரை காலை உணவு உண்ணாமல் காத்திருக்க, அதன் விளைவு தான் கதவு அவ்வளவு வேகமாக தட்டப் பட்டது என்று புரிய இப்பொழுது ஷக்திக்கே கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது. இதில் நடக்கவே நடக்காத ஒன்று நடந்ததாக எண்ணி அந்த பெண்கள் அவனைப் பார்த்த பார்வை வேறு...

''வாங்க மாப்பிள்ளை சார். உடம்பு எப்படி இருக்கு??'' என்றாள் ஒருத்தி.

''கூட இத்தனை சின்ன பொண்ணுங்க தங்கி இருக்கோம், கொஞ்சம் பார்த்து நடந்துக்க வேணாம்?? என்ன சார் இப்படி பண்றீங்களே சார்'' என்றாள் இன்னொருத்தி.

இப்படி ஆளாளுக்கு ஷக்தியை அர்ச்சனை பண்ணிக் கொண்டு இருக்க ஷக்தி ஒரு கேவலமான சிரிப்பை பதிலாகக் கொடுத்து எதிர் தாக்குதல் புரிந்து கொண்டு இருந்தான். அதற்குள் சஞ்சனா குளித்து உடை மாற்றி வர, இப்பொழுது அனைவரது பார்வையும் சஞ்சனாவின் பக்கம் திரும்பியது. இளநீல வண்ண காட்டன் புடவை, அதில் மெல்லிசாக இழையோடிய தங்க ஜரிகை, ஈராக் கூந்தலில் இருந்து இன்னும் நீர் சொட்டிக் கொண்டு இருந்தது, நெற்றியில் செக்கச் சிவப்பில் ஸ்டிக்கர் பொட்டு. அப்படியே முதல் இரவை முடித்து விட்டு வந்த புதுப் பெண் போலவே சஞ்சனா காட்சி அளிக்க, அது கூட அவர்கள் எதிர்பார்த்தது தான். ஆனால் அவர்கள் இம்மி அளவும் கூட எதிர்பாராதது சஞ்சனாவின் புடவைக்கு மேலே தொங்கிக் கொண்டு இருந்த புதுத் தாலி.

அதைக் கண்டு அந்த மாணவிகள் அனைவரும் முழி பிதுங்க ஷக்தியும் தான் சஞ்சனாவை முதன் முறை தொங்கும் தாலியுடன் கண்டதும் வாய் பிளந்து போனான். சஞ்சனா சாதாரணமாகவே பேரழகு என்றாள் அந்த கோலத்தில் அவள் கொள்ளை அழகாகத் தெரிந்தாள். மாணவிகளுக்குக் குழப்பம் இந்த திடீர் தாலி ஒரே இரவில் எங்கு இருந்து வந்தது என்று. ஷக்திக்கு ஆச்சர்யம் இத்தனை அழகும் அவனுக்கா என்று. இவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் வந்த வேகத்தில் சமையல் அறைக்குள் நுழைந்து அங்கு ஷக்திக்கும் சஞ்சனாவுக்கும் தயாராக வைத்து இருந்த காபி கோப்பைகளை கையில் எடுத்துக் கொண்டு வந்து ஷக்தியின் கையில் ஒரு கோப்பையை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டாள் சஞ்சனா.

அங்கு அரங்கேறிக் கொண்டு இருந்த காதல் நாடகத்தை அதற்க்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத லாவண்யா என்ற மாணவி ஆர்வம் தாங்காமல்,

''நேத்திக்கு ராத்திரி ரூமுக்குள்ள போனப்ப சிங்கிளா இருந்த உங்க ஸ்டேடஸ் எப்படி டாக்டர் ஓவர் நைட்ல மேரீடா மாறிச்சு??'' என்றாள்.

வெகு சாதாரணமாக காபியை உறிஞ்சிய வண்ணம் ''யார் சொன்னா நான் நேத்திக்கு ராத்திரி ரூமுக்குள்ள போறப்போ என்னோட ஸ்டேடஸ் சிங்கிளா இருந்திச்சின்னு??''

''ஏன் டாக்டர் அல்ரெடி குழம்பி போய் இருக்க எங்களை இன்னும் கன்ஃபியுஸ் பண்றீங்க?? நீங்க ரெண்டு பேரும் யாரு?? என்று அழாத குறையாக கேட்டாள் இன்னொருத்தி.

''இது என்ன கேள்வி?? இவரு என்னோட புருஷன். நான் இவரோட பொண்டாட்டி'' என்று சொல்லி அவள் ஷக்தியின் முகத்தைப் பார்க்க ஷக்தி காபியை உரிந்தவாறு பெருமையாக சஞ்சனாவின் தோளில் கையைப் போட்டு அவளை அவன் புறம் இழுத்துக் கொண்டான்.

மாணவிகள் அனைவரும் சப்பா...... என்று சொல்லி தங்கள் கண்களையும் காதுகளையும் மூடிக் கொள்ள அதற்க்கு மேல் அவர்களை சோதிக்க விரும்பாமல் ஷக்தி அந்த இடத்தை விட்டு அகன்றான். அதன் பின்னர் சஞ்சனா தான் தங்களுக்கு நடந்த திடீர் திருமணத்தைப் பற்றி அந்த மாணவிகளிடம் மேலோட்டமாக சொல்லி வைத்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro