1. மீனா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng






"அம்மா"

"ம்ம்ம்"

"அம்மாஆஆஆ... என் ப்ளூ டீஷர்ட் எங்க? ப்ளாக் ஜீன்ஸும் காணலை.... ஓ காட்!"

"அங்கே தான் இருக்கு. பொறுமையா தேடு. நான் தோசை கல்லை அடுப்புல வச்சிட்டு வர முடியாது அம்மு"

சட்னிக்கு அரைத்ததை வழித்து கிண்ணத்தில் போட்டு தாளித்துவிட்டு, சப்பாத்திகளை இரண்டு டிபன் பாக்ஸிலும் கட்டி வைத்து, மிக்ஸி ஜாரை தேய்த்து கழுவி குர்மாவுக்கான மசாலாவை அரைக்க தொடங்கினாள் மீனா.

"மாம் இங்க வரியா இல்லையா? ஒரு துணி கூட ஒழுங்கா வைக்க முடியாதா?" பேசி முடிக்கும் முன் மீனா அவள் அறை வாயிலை அடைந்தாள்.

என் தேவதை என தந்தை சுகுமாரன் கொஞ்சும் மகள் ப்ரியாவின் பார்வை அனலை கக்கியது.

"என் ப்ளூ Levis டீ ஷர்ட்.."

மீனா அமைதியாய் தரையில் கிடந்த துணி குவியலை தாண்டி வார்ட்ரோப்பை அடைந்தார். கண்ணால் ஜாடை காட்டிய மீனாவிடம் மகள் கண்ணாலேயே என்ன என்கவும்

"இதுக்கு பேரு என்ன ப்ரியா?" என கண்ணெதிரே ஹாங்கரில் மகள் தொங்கவிட்டிருந்த நீல நிற டீஷர்ட்டை காட்டினார்.

"நீ தானே நேத்து ராத்திரி இஸ்திரி போட்டு எடுத்துட்டு வந்தே மறந்துட்டியா? சரி, துணியெல்லாம் எடுத்து வச்சிட்டு கிளம்பு மரியாதையா" என  நின்று பேசி கொண்டிருந்தவருக்கு குக்கரின் இரண்டாவது விஸில் மாரடைப்பை கொடுக்க, சமையலறையை நோக்கி ஓடினார்.

"அய்யே! மெல்லமா கா...நான் குக்கர் அடுப்பை நிறுத்திட்டேன். சொல்லிட்டு தான போனீங்க.." பாத்திரம் கழுவி கொண்டிருந்த பொன்னம்மா.

"எங்க சின்னவரு.."
பொன்னம்மாளின் வாய் முகூர்த்தம் அடுத்த அலறல். திரும்பி அவளை அலுப்போடு ஒரு பார்வை பார்த்தாள் மீனா, "ஐய்ய! இன்னாகா நா இன்னாவோ ஹரி பையனை கத்த சொன்னாங்காட்டி என்னிய மொறக்கிற".

இளையவனானலும் கணீரென குரல் கொடுத்தான் ஆண்பிள்ளை என நிரூபிக்கும் வண்ணம்.

"மா என் புக் எங்க?" அடுத்த தேடும் படலத்துக்கு தயார் ஆக சிறிது அவகாசம் தேவை என்பதால் சமையலில் கவனம் செலுத்தினாள் அல்லது செலுத்த முயன்றாள் மீனா. கைகைள் வேலையை தன் போல் செய்ய, மூளை தன் போல் வீட்டை ஸ்கேன் செய்தது புத்தகத்திற்காக.

"எந்த புக்?"

ஏதோ ஒரு பெயரை சொல்லி "இங்க்லீஷ் நாவல், அது லைப்ரரி புக் மா".

சாதாரணமாக புத்தகத்தை அவன் வைக்கும் இடத்தையெல்லாம பட்டியலிட்டு நினைவுபடுத்தினாள் சமையலறையில் இருந்தபடி. எல்லாவற்றுக்கும் இல்லை என்ற பதிலே கிடைத்தது.

இடையில் வாசலில் கீரை விற்பவர் குரல் கேட்க "பொன்னு ஒரு கட்டு அகத்திகீரையும், பாலக்கீரையும் வாங்கிட்டு வா. சில்லரை உப்பு டப்பா பின்னால இருக்கு பாரு".

கடிகாரத்தை பார்த்து அவசரமாக அடுப்பில் பாலை வைத்து கணவனின் காபியை தயார் செய்தாள். கடிகார முள் ஏழு பதினைந்தை தொடவும் கணவர் ஜாகிங்க் முடிந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது, காபியும் தண்ணீர் பாட்டிலுமாக அவர் முன்னே ட்ரேயில் வைத்து, அன்றைய தினசரியும் மேஜைமீது வைத்ததும்.

"அப்பா..." கணவனின் கேள்வி முடியும் முன்னமே

"மாமா குளிக்கிறாங்க காபி குடுத்துட்டேன். இன்னிக்கு டிபன் சாப்பிடுறேன்னு சொன்னாரு. இட்லி செஞ்சிட்டேன். டாக்டர் குடுத்த மருந்து நல்லா வேலை செஞ்சுதாம், கான்ஸ்டிபேஷன் சரியாகிடுச்சாம்".

சுகுமாரன் கேட்க நினைத்த அனைத்து கேள்விக்கும் பதில் கிடைத்துவிட்டது சிரமமில்லாமல்.

மீண்டும் மகனின் அறையிலிருந்து அரைகூவல், பேப்பரிலிருந்து சுகுமாரன் நிமிர்ந்து அவளை கடுமையாக ஒரு பார்வை பார்க்க, 'மனுஷன் நிம்மதியா ஒரு நியூஸ் படிக்க முடியுதா? காலைல இவ்வளவு அமைதியில்லாம நாளை தொடங்கினா எப்படி ஃபுல் டேவும் வேலை செய்ய முடியும்?'

தினம் கேட்டு பழகிய கேள்வி மீனாவின் காதில் எதிரொலித்தது.

ஒரு வினாடி ஓடி சென்று அடுப்பை நிறுத்தி விட்டு மகனின் உதவிக்கு சென்றாள் மீனா. அடுத்த குப்பை கூளம்!  இங்கு துணியோடு புத்தக அலமாரியில் இருந்தவையும் சேர்ந்து இறைந்து கிடந்தது மட்டுமே வித்தியாசம்.

"பச்ச்ச்...ஹரி..இஸ்திரி பண்ண துணியெல்லாம்...." சுருக்கென வந்த கோவத்தை அடக்கி கொண்டு மகனை பார்த்தாள்.

"வாட்? லைப்ரரி புக் காணலை மா" என தோளை குலுக்கினான்.

"ஹரி அதுக்கும் வார்ட்ரோப்புக்கும் (wardrobe) என்னடா சம்மந்தம்?" பாடிஸ்பிரே பாட்டிலை டிரெஸ்ஸிங்க் டேபிள் மீது வைக்கும்போது தான் தலையில் ஈரத்துண்டை இரண்டு மணிநேரமாக வைத்திருப்பது நினைவு வந்தது.

துண்டை அவிழ்த்தபடி, "என்ன புக்கு? என்ன மாதிரி அட்டை?" என அடையாளம் கேட்டாள். அவன் கூறியதும் அதிர்ந்து விழித்தவர்,  அவன் கை பற்றி  தரதரவென ஹாலுக்கு இழுத்து போனார். இரவு பால்கனி மூங்கில் ஊஞ்சலில் ஆடியபடி புத்தகம் படித்து கொண்டிருந்துவிட்டு அங்கேயே போட்டு விட்டு தூங்கபோனது நினைவு வந்ததும், நாக்கை கடித்தான்.

"ஓகே மா முறைக்காத. மறந்துட்டேன்!  ரூமை ஈவினிங்க் க்ளீன் பண்றேன். பொன்னக்கா என் ரூம்ல வேலை செய்ய வேண்டாம்" என வாசலில் கீரை வாங்கி கொண்டிருந்தவளிடம் உரத்த குரலில் உத்தரவிட்டு அன்னையின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான். தலையில் அடித்து கொண்டு மீனா உள் வேலையை கவனித்தாள்.

மாமனாருக்கு இட்லி, மற்றவர்களுக்கு தோசை. அதிலேயே கணவருக்கு செட் தோசை போல மிருதுவாக, மகனுக்கு நெய் ரோஸ்ட், மகளுக்கு ஹோட்டல் போல முருகலாக ஆனால் எண்ணை அதிகமில்லாமல். இரண்டு வகை சட்னி, பொடி என எல்லாம் மேஜையில் தயாராக இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் மூவரும் காலை உணவை முடித்துகொள்ள அவரவர் மதிய சாப்பாடும் மேஜை மீது ஆஜாரானது. அதிலும் கணவனுக்கு மசாலா உணவு வார நாட்களில் உண்ண பிடிக்காது, ஆகையால் பிள்ளைகளுக்கு மட்டும் சப்பாத்தி குருமா.

ப்ரியா பாதி தோசையை விழுங்கியதும் அவள் தோழி அழைக்க, மீதியை அவள் ஷூ அணிந்து கொண்டிருக்கையில் பிடிவாதமாக ஊட்டிவிட்டு கையில் டிபன் பாக்ஸ் திணித்தாள்.

"மாம் ஈவ்னிங் பன்னீர் சாண்ட்விச் ப்ளீஸ், நேத்து சொன்ன ரெஸிபி ஓகே?". மீனாவை தவிர அனைவருக்கும் டாட்டா சொல்லிவிட்டு சிட்டுக்குருவியாய் பறந்தாள்.

அடுத்து மகன் பள்ளி பேருந்து சத்ததில் டப்பாவை மறந்துவிட, விரட்டி கொண்டு ஓடினாள் மூச்சிறைக்க.

உள்ளே வந்ததும் மாமனார் மேஜை அருகே உட்கார்ந்திருந்தார், "அப்பா எவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்காரு எங்கே போன?"

கைபேசியில் கருத்தை வைத்திருந்த கணவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பது தெரிந்த விஷயம். மாமனாருக்கு காலை உணவை பறிமாறினாள். இடையில் கணவனுக்கு சூடான இரண்டாவது காபியும் வந்தது, குடித்துவிட்டு அவர் புறப்பட, கார் எடுக்க வசதியாக பெரிய கேட்டை திறந்துவிட்டு புறப்பட்டதும் பூட்டிவிட்டு உள்ளே வந்தாள்.

"மாமா மோர் குடிக்கறீங்களா"?

அவர் வேண்டாம் என்றதும் எண்பதைந்து வயது மாமனாருக்கு மேஜையிலிருந்து எழந்து கை கழுவ உதவி செய்து. அவருக்கான சாய்வு நாற்காலியில் அமர செய்தாள். மூக்கு கண்ணாடியும் அன்றைய தினசரியும் அவர் கைக்கு போனது, பின்னோடு அவரின் மருந்துகளும். "நீயும் சாப்பிடு மா மீனா".

"அக்கா.. கீரையை சுத்தம் பண்ணி வைச்சிட்டேன். நான் பெரிய அய்யா ரூமை பெருக்க போகவா?" என்றாள் பொன்னம்மா.

ஒரு வினாடி யோசித்த மீனா "ஐயோ உனக்கு காபியே குடுக்கலையே பொன்னு. இரு உக்காரு" என்று அவளுக்கும் தனக்கும் காபியை கலந்து அவளிடம் நாலு இட்லியை சட்னியோடு தட்டில் வைத்து நீட்டிவிட்டு. "சப்பாத்தி குர்மா வச்சிருக்கேன். உன் பசங்களுக்கு எடுத்துட்டு போ போகும் போது" காபி தம்ளரோடு தரையில் அமர்ந்தாள் மீனா, சுவற்றில் தலை சாய்த்து.

கொல்லைபுர படிக்கட்டில் உட்கார்ந்த பொன்னம்மா, "யக்கா நீயி?"
பதில் வராமல் போகவே.
"இன்னிக்கு என்ன விரதம்?"
பதிலாக புன் முறுவல் மட்டுமே கிடைத்தது.

" சர்தான். நீயும் உன் பூசையும்.. இன்னாவோ போ...
நீயும் பாதி நேரம் சோறு துண்ணாம தான் கீர...இதுல என்னிய வைய்யுற"
இரண்டு துண்டு இட்லி உள்ளே போனதும்
"நீ சாமி பேரை சொல்லிகினு பட்னி கடக்கிற நான் இல்லாததால பட்னி கடக்கறேன். ஆனா ரெண்டு பேரும் குடும்பத்துக்காக தான் பட்னி.."

பெண்களின் மனப்போக்கை மிக எளிதாக கூறி வீட்டு எழுந்து சென்ற பொன்னம்மாவை பார்த்து புன்னகைத்தாள் மீனா.

சுகுமாருக்கு செய்த சாம்பாரும் பொரியலும் போதும் மாமனாருக்கு, பன்னிரெண்டு மணி சுமாருக்கு சூடாக சாதம் வடித்தால் போதும் என தீர்மானித்து பிள்ளைகள் அறையை ஒழித்து சுத்தம் செய்ய போனாள். இரண்டு மணி நேரம் பிடித்தது கண்ணாடி போல வீட்டை சுத்தம் செய்து நிமிர்ந்த போது.

இருக்கும் இடத்தை துப்புரவாக வைக்க, தன் வேலைகளை தானே செய்து கொள்ள, துணி கூட துவைக்க பிள்ளைகளுக்கு கற்று கொடுத்திருந்தாள் மீனா அமெரிக்காவில் இருந்தபோது.

அங்கே வேலைக்கு பொன்னம்மாவெல்லாம் கிடைக்கமாட்டாள். கிடைத்தாலும் சம்பளம் டாலர்களில் கட்டுபடியாகாது. ஆனால் ஏழு வருடம் முன்பு இந்தியா வந்த பிறகு மாமியார் சீராட்டுவதாய் நினைத்து, கெடுத்து வைத்தார். 

'ஏன் சின்ன பசங்களை வேலை வாங்குற? உன் வீட்டுல தான் வேலைக்கு ஆள் வைக்க வக்கு இல்லை எங்க வீட்டுல அப்படி ஒண்ணும் குறைஞ்சு போயிடலை'.

சீறாட்டுவதாய் நினைத்து பழக்க வழக்கங்களை மாற்றி மூன்று ஆண்டுகளில் அவர் கண்ணை மூடிவிட்டார். இப்போது பிள்ளைகள் என்ன சொன்னாலும் செய்வதில்லை.

சுகுமாரனோ 'அதுங்க கிட்ட நூறு தரம் கத்துற நேரம் நீ செஞ்சுட்டு போயிடலாம். சத்தமாச்சு குறையும் வீட்டுல..' என்று மடி கணினியில் மூழ்கி விடுவான்.

இல்லையெனில் 'வீட்டையும் பிள்ளையும் சமாளிக்க தெரியாத ஒரு பொம்பளை எதுக்குடீ கல்யாணம் கட்டுற?'

என ரௌத்திர பாவமாக ஆடுவான். இதே வாய் தான் பிற்காலத்தில் மகளைப்பற்றி புகுந்த வீட்டினர் குற்றம் சொன்னால் மீண்டும் பிள்ளை வளர்ப்பு பற்றி பாடம் நடத்தும்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி. பொம்பளைக்கு மட்டும் எங்க திரும்பினாலும் அடி!

பொன்னம்மா அடிக்கடி சொல்லுவதை நினைத்து ஒரு வறட்சியான புன்னகை இதழோரத்தில் பூத்தது.

சாயம் போக கூடியதையும், கணவனின் அலுவலக உடுப்பையும் தனித்தனியே இவள் கையால் துவைக்க, மற்றவைகளை இயந்திரம் துவைத்தது. அதுவும் வேலைக்காரி துவைத்தால் சுகுமாரனுக்கு பிடிக்காது. மாமனாரின் வேட்டி, முண்டா பனியனும் வெள்ளை மாறாமல் இருந்தால் தான் அவருக்கு பிடிக்கும் என அவற்றையும் வென்னீரில் நனைத்து துவைத்து முடித்து, மூன்று வாளி நிறைய துணிகளை மொட்டை மாடியில் இருவருமாக சேர்ந்து  காயவைத்து விட்டு  வரும் போது பதினொன்று முப்பது என கடிகாரம் அறிவித்தது. அவசரமாக உலை வைத்தாள் அடுப்பில், குக்கர் சாதம் பிடிக்காது மாமனாருக்கு.

பொன்னம்மா தோட்டம் பெருக்கி கொண்டிருந்தாள். சோர்வாக இருந்தது மீனாளுக்கு. இருபது வருடமாக அனுசரிக்கும் செவ்வாய்கிழமை விரதம் இன்று, சுகுமாரனுக்காக அத்தை சொல்படி ஆரம்பித்தது.

"மீனா" மாமனாரின் குரல் பலகீனமாக ஒலிக்க ஓடினாள் அவர் அறைக்கு. மெல்ல கைதாங்கலாய் அழைத்து ஓய்வரையில் கொண்டு விட்டு, கதவை சாற்றி வெளியே நின்றாள். பொன்னம்மா வீட்டுக்கு புறப்பட அவள் குழந்தைகளுக்காக வைத்த சாப்பாட்டை கொடுத்து அனுப்பினாள். மீண்டும் மாமனார் அழைக்க, உள்ளே சென்று உதவி செய்து அவரை அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்தாள். ஒரு வயதுக்குமேல் பெரியவர்களும் குழந்தைகள் தான், தன் மகனுக்கு செய்ததை போல நினைத்து அனைத்து வேலைகளையும் முகம் கோணாமல் செய்து வந்தாள் மீனா.

கைகளை சுத்தப்படுத்தி கொண்டு வந்து "மாமா சாப்பாடு ஆயிடுச்சு, சூடா இருக்கையிலயே எடுத்து வைக்கவா" என்றாள்.

"ஒரு பத்து நிமிஷம் போகட்டும் மா" கண்ணை மூடி சாய்ந்தார்.

"என்ன செய்யுது மாமா?" நாற்காலி அருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.

"ஒண்ணுமிலலை மா. உன் அத்தையோட திதி வருது மா. இந்த முறை அவ பர்த்டே அன்னைக்கே வருது".

"ஏதாச்சும் ஏற்பாடு செய்யணும்னு ஆசைபடுறீங்களா? திதி குடுக்குறதை பத்தி ஐயரு கிட்ட பேசிட்டேன் அது எப்பவும் போல நடக்கும். நீங்க வேற எதாச்சும் செய்யணும்னு பிரியபட்டா சொல்லுங்க".

"ஹும்" என கனைத்து "குமாரு வர லேட்டகுமா? எட்டு மணிக்குள்ள வந்துட்டா என்னை பாக்க சொல்லு மா."

அவருக்கு உணவு பரமாறி முடித்து, மருந்துகளை கொடுத்துவிட்டு, அவர் உறங்கியதும்.

சமையல் அறையை சுத்தம் செய்து முடிக்கவும் அவள் கைபேசியில் சுகுமார் அழைக்கவும் சரியாக இருந்தது. கைபேசியை இயக்கியபடி படுக்கை அறையை அடைந்தாள்.

"எங்க போய் தொலைஞ்ச? வீட்டுலேருந்து மனுஷன் கிளம்பியாச்சுனா, சனியன் ஒழிஞ்சுதுன்னு பொம்பளைங்கள்ளாம் சீரியல் பாக்க உக்காந்துடுங்க" கைபேசி அமிலத்தை கக்கியது. அமைதியாக இருந்தாள் மீனா.

ஆண்களுக்கு மட்டும் கோபம் எனும் உணர்ச்சியும், பேச்சு சுதந்திரமும் பட்டயம் எழுதி கொடுக்க படவில்லை ஆனால் அவளும் பேச தொடங்கினால் முடிவில்லாமல் ரசாபாசமாக போய்கொண்டிருக்கும்.

அதையும் சில வருடங்கள் முன்பு முயற்சி செய்து பார்த்து பலனில்லாமல் ஓய்ந்து போய் தான் அமைதியை தத்து எடுத்து கொண்டிருக்கிறாள் கிட்ட தட்ட ஐந்து வருட காலமாக.

"என்ன பதிலை காணோம் இருக்கியா செத்து தொலைஞ்சிட்டியா?" அருமையான வார்த்தைகள், பிறந்த நாள் அன்று கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தொண்டையில் முள் குத்துவது போல இருந்தது. "ம்ம்ம்..சொல்லுங்க கேட்டுட்டு தான் இருக்கேன்".

"அரை மணி முன்ன போன் பண்ணேன் ஏன் எடுக்கலை? தூக்கமா?"

சீற்றம் குறையவில்லை. இதே கேள்வியை இயல்பாய் கேட்க முடியாதா? ஏன் முயற்சிப்பது இல்லை? அல்லது எப்படி கேட்டாலும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் தைரியத்தினாலா?

தலை விண்ணென்று தெறித்துவிடுவது போல வலிக்க தொடங்கியது.

"மாமாவை பாத்ரூமுக்கு கூட்டிட்டு போனேன். அவரு ரூம்ல இருந்ததால போன் அடிச்சது காது கேக்கலை."

"நொண்டி சாக்கு சொல்லு. ஈவெனிங்க் ஒரு கம்பெனி பார்ட்டி இருக்கு. சீனியர் மேனேஜ்மென்ட்ல  எல்லாரையும் பேமிலியோட இன்வைட் பண்ணியிருக்காங்க. ஆறு மணிக்கு நீயும் பசங்களும் ரெடியா இருங்க. உங்க உறவுகாரங்க கல்யாணத்துக்கு போகலை கொஞ்சம் ஒழுங்கா டீசெண்டா டிரெஸ் பண்ணு, கம்பெனி CEO, CFO லெவல்ல எல்லாரும் வருவாங்க."

"திடீர்னு சொன்னா மாமாவை எப்படி தனியா விடுறது? பொன்னம்மா புருஷன் கூட ஊர்ல இல்லை சாதாரணமா அவனை வர சொல்லுவோம்.."

"எல்லாத்துக்கும் எதாவது இடைஞ்சல், ஒரு எக்ஸ்க்யூஸ், ச்ச்சை போனை வை. ஜடம்!"

மெல்ல அலமாரி கதவோடு சரிந்து தரையில் உட்கார்ந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலில் இருந்த வலி இப்போது உள்ளேயும் ஊடுருவியது. வலிப்பது எது என்று தான் விளங்கவில்லை?

இதயமா? மனமா? மூளையா? அல்லது சர்வமும் என்னுடையது என கூடலின் போது அவன் உரிமை கொண்டாடியதால் அவை அத்தனையும் அவன் கொடுத்த வலியை உள் வாங்கி கொண்டனவா?

அடி வயிற்றில் சங்கடம் பரவியது. மெனோபாஸ் எனப்படும் இயற்கையான உடலியல் மாற்றம் பல்வேறு விதமாய் அலைகழித்து கொண்டிருந்தது அவளை பல மாதங்களாய்.

மெல்ல ஓய்வறைக்கு சென்று திரும்பினாள், நான்கு நாட்கள் இடைவெளி விட்டு இதோ மீண்டும் உதிரபோக்கு தொடங்கிவிட்டது. மருத்துவர் கொடுத்த மருந்தை வெறும் வயிற்றில் எடுக்கலாகாது என்பதால் காலையில் உட்கொள்ளவில்லை. இப்போது விரதத்தை தொடர இயலாது, சாப்பிட்டு மருந்து உட்கொள்ள வேண்டி தட்டில் உணவை எடுத்து போட்டதும்.
மாமனார் அறையிலிருந்து முனகல் சத்தம் கேட்டது.

உறக்கத்திலேயே  படுக்கை ஈரமாகிவிட்டிருந்தது. சிறுநீரகத்திலும் சிறுநீர் பையிலும் மூப்பின் காரணமாக கோளாறு ஏற்பட்டிருந்ததால் அவ்வப்போது அவரை அறியாமல் இப்படி நேர்ந்து விடுகிறது. பெரியவர்களுக்கு அணிவிக்கபடும் டயாப்பர் அவருக்கு தோல் ஒவ்வாமையை கொடுத்ததால் இப்படி ஒரு அவஸ்தை. அவரை எழுப்பி, குளியலறைக்கு அழைத்து போய் மாற்று துணியும், சுடுதண்ணிரும் வைத்து விட்டு வந்தாள். அவர் ஸ்டூலில் உட்கார்ந்தபடி தன்னை சுத்தபடுத்தி கொண்டு, உடுத்தி கொண்டதும் அழைத்து வந்து ஹாலில் அமர வைத்து அவருக்கு பழங்களை நறுக்கி கொடுத்துவிட்டு தொலைகாட்சி பெட்டியை இயக்கினாள்.

"ஸாரிம்மா" அவரது குரல் கம்மியது "ரொம்ப சங்கடப்படுத்தறேன்" கண் கலங்கியது.

"மாமா எத்தனை முறை சொல்றது? இது யாரோட கன்ட்ரோல்லையும்  இல்லாத ஒரு விஷயம். இந்த மாதிரி உடல கோளாறு நாளைக்கு எனக்கே கூட வரலாம். விடுங்க.."

"அதெல்லாம் பேசக்கூடாது, பிறந்த நாளும் அதுவுமா.." மீனாவின் கண்கள் பனிக்க.
"நல்லாயிரு மா, சந்தோஷமா இரு" அவளது தலையை தொட்டு ஆசிர்வதித்தார்.

படுக்கை விரிப்பையும், அதனடியில் போட்டிருந்த ரப்பர் ஷீட்டையும் மாற்றி, சுடு தண்ணீரில் போட்டு துவைத்து மாடியில் காய வைத்து விட்டு;  பாத்ரூமை சுத்தம் செய்து நிமிர கண்ணை இருட்டி கொண்டு வந்தது. குழாய் திறந்து சில்லென்ற தண்ணீரை முகத்தில் அடிக்க சற்று தெளிந்தது. அவர் அறையை துர்நாற்றம் போக சுத்தம் செய்து, பிள்ளைகள் வரும் முன் அவசரமாய் குளித்து, துவைத்து வெளியேறினாள். இத்தனைக்கு பிறகு உணவை பார்க்கும் போதே குமட்டியது, ஏனோ தானோவென்று அரைவயிறு உண்டு விட்டு எழுந்தாள்.

ஹரி வந்ததும் வராததுமாய் நேரே "ஹாய் தாத்தா" என அவரை நோக்கி போக,

"ஹரி கை கால் கழுவிட்டு ப்ளீஸ்... தாத்தாவுக்கு ஈஸியா இன்பெக்ஷன் ஆகும் பா" என அவனை தடுத்தாள்.

முகம் சுழித்து, அவள் சொன்னதை தாத்தாவுக்காக செய்தான். சற்று நேரம் பேசியிருந்துவிட்டு அவரை கொண்டு போய் அறையில் அவனே விட்டு வந்தான், பதினாறு வயது ஆன பிள்ளை ஆனால் பார்க்க இருபது வயது இளைஞனை ஒத்த வளர்ச்சி. பள்ளி சீருடை இல்லாமல் பார்த்தால் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் ப்ரியாவுக்கு மூத்த சகோதரன் போல தோன்றும்.

மாலை பொன்னம்மா வந்தாள்.
உலர்நத துணிகளை அவரவர் அறையில் மடித்து வைத்து விட்டு, பாத்திரம் தேய்க்க அவளிடம் பேசி கொண்டு பிள்ளைகளுக்கு மாலை உணவை தயார் செய்தாள்.

ப்ரியா சிடுசிடுத்து கொண்டே உள்ளே நுழைய அவள் வாசித்த குற்றப் பத்திரிக்கையை காதில் வாங்காமல் உள்ளே சென்றாள் மீனா. பிள்ளைகளிடம் மாலை உணவை கொடுத்ததும், மூத்தவாரிசு தந்தைக்கு தப்பாமல் சுள்ளென விழுந்தது பொன்னம்மா எதிரிலேயே.

"அப்பா உன்னை ஜடம்னு திட்டுறது கரெக்ட்டு தான். எதாச்சும் புரியுதா உனக்கு? நான் உன்னால் தான் டென்ஷன்ல இருக்கேன் வெறுப்பேத்துற மாதிரி சான்ட்விச்சை நீட்டுற?"

"நீ தானடீ காலைல  இதை செய்ய சொல்லிட்டு போன? இப்ப என்ன? வேஸ்ட் பண்ண முடியாது ப்ரியா. சாப்பிடு" என வற்புறுத்த.

"வேஸ்ட் பண்ண முடியாதுன்னா நீ தின்னு. என்னை இரிடேட் பண்ணாத!"

"ப்ரியா ஷட் அப், அம்மாவை.." இளையவன் அன்னைக்கு பரிந்து கொண்டு பேச தொடங்கியதும், பொன்னம்மா இங்கிதம் கருதி வெளியேறினாள்.

"நீ வாயை மூடுடா இடியட், மைண்ட் யுவர் ஓன் பிஸினஸ். ஷிட்! நான் டாட் கிட்ட பேசிக்கறேன்"

அறை கதவை அறைந்து சாத்தி கொண்டாள். மகன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.  நெஞ்சில் பலமான அடிவிழுவது போல ஒரு உணர்வு.

அடித்து பார்த்தாகி  விட்டது, கண்டித்து பார்த்தாகி விட்டது, அன்பாக பேசி புரிய வைக்க முயன்று... ம்ஹும்!

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழைய மொழி. பதின் பருவம் நொடிக்கு நொடி கொல்லும் இது இன்றைய காலத்து நிதர்சனம், அனேகமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் தினசரி நிகழ்வு தான்.

ஆனால் உடலும் மனமும் தளர்ந்து போகும் நேரத்தில், எல்லாமே மலைப்பாக தோன்றுவது இயல்பல்லவா?

அன்பும், மதிப்பும் இல்லாத இடத்தில் எத்தனை நாள் தான் சுமூகமுமாய் குடும்பம் நடத்த இயலும்?

என்ஜின் தடையில்லாமல் ஓட ஆயில் ஊற்றுவது இல்லையா? ஆது போல தானே அன்பு மற்றும் பாச பரிமாற்றமும்.

வயிற்று வலி அதிகமாக காபியோடு வலி மாத்திரையை விழுங்கினாள். மேஜையிலிருந்த அவள் கைபேசி கணவனின் அழைப்பை அறிவித்தது.

"சொல்லுங்க... ம்ம்ம் இப்ப தான்....இல்லை ஹரி இன்னும் க்ளாஸுக்கு  கிளம்பலை.."

"ஹரி.. அப்பா கூப்பிடுறாங்க".

கைபேசியை வாங்கியவன் அன்னையின் கண்களை துடைத்துவிட்டான்.

"ஓகே பா. இல்லை பா நான் வரலை. எனக்கு மேட்ச்சுக்கு ப்ராக்டிஸ் இருக்கு பா மிஸ் பண்ண முடியாது" போனை திரும்ப அவளிடம் கொடுத்தான்.

"ப்ரியா" அவள் அறை கதவை இடித்தான். "அப்பா ரெடியாக சொன்னாங்க" என்று விட்டு "அம்மா நான் ப்ராக்டிஸ்க்கு போறேன். அவங்க ரெண்டு  பேரு மட்டும் பார்ட்டிக்கு போறாங்களாம்."

வீட்டு வேலையில் மீண்டும் மூழ்கி போயிவிட்டாள் மீனா. சற்று நேரத்திற்கெல்லாம் சுகுமாரன் வந்து தயாராகி மகளை அழைத்து கொண்டு புறப்பட்டார். மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. புறப்படும் முன் தந்தையை பார்க்க அறைக்கு சென்றான்.

"குமார் மீனாவுக்கு என்ன உடம்புக்கு? காலைலேருந்தே என்னவோ போல இருக்கு. நீ கொஞ்சம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ டா" தந்தையாக அக்கறையோடு உதிர்ந்தது வார்த்தைகள்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை பா சின்ன ஆர்க்யுமென்ட் அதான் முகத்தை தூக்கி வச்சிருக்கா. நான் பார்ட்டி முடிஞ்சு வந்து பேசறேன்".

ஏழரை மணி சுமாருக்கு சுகுமாரின் கைபேசியில் புதிய நம்பரிலிருந்து பல முறை அழைப்பு வந்தது, பார்ட்டியில் மூத்த அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை. எட்டு மணி அளவில் குறுஞ்செய்தி.

'மனைவி மீனா தீவிர சிகிச்சை பிரிவில் உடனே **** மருத்துவமனைக்கு வரவும்'  ஹரி என்று பெயர் போட்டு வேறு ஒரு நம்பரிலிருந்து வந்தது. அந்த எண்ணிற்கு அழைக்க அது மருத்துவமனை எண், மீனா அங்கு அனுமதிக்கபட்டிருப்பது உறுதியானது.

பதறிய சுகுமாரன் வீட்டிற்கு அழைக்க, பொன்னம்மா எடுத்தாள், "ஐயா அம்மா ஏதோ மயக்கமாகிட்டாங்கன்னும் வீட்டுக்கு வந்து  பெரிய ஐயாவை பாத்துக்க சொல்லி எனக்கு தம்பி போன் பண்ணுச்சு. விவரம் தெரியலைங்க" என்றவளின் கைபேசி எண்ணை வாங்கி கொண்டான். மருத்துவமனைக்கு விரைந்தனர். தீவிர சிகிச்சை பிரிவு வாயிலில் நிலைகுலைந்து நின்றிருந்தான் ஹரி.

விவரம் கேட்ட தந்தையிடம், "நீங்க அவங்க புருஷன் தானே" அக்காவிடம்  "நீ பொண்ணு தானே? ஈவு இரக்கம் இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்? அம்மாவுக்கு மட்டும் எதாவது ஆச்சு உங்க ரெண்டு பேரையும்...." ஆத்திரத்தில் அவனை அறைந்தார் சுகுமாரன். டாக்டர் அறையை நோக்கி அவரை இழுத்து சென்றான் ஹரி.

"எனக்கு உங்களை என்ன கேட்கிறதுனு தெரியலை சார். தயவு செஞ்சு இந்த ஃபார்ம்ல சைன் மட்டும் பண்ணுங்க. மைனர் பையன் சைன் வச்சி இவ்வளவு சீரியஸ் சர்ஜரி பண்ண முடியாது. கால் பண்ணா எடுக்க மாட்டேங்கறீங்க. கமான் ஹரிஅப்!"

புரியாமல் விழித்தவரிடம், "உங்க மனைவிக்கு கர்ப்ப பையில பைப்ராய்டுனு (FIBROID) சொல்ற நார் திசுக்கட்டி ரொம்ப பெருசா வளர்ந்திருந்தது தெரியுமா? இதன் காரணமாக தான் அவங்களுக்கு அடிக்கடி அதாவது ஒரு வாரம், பத்து நாட்களுக்குள்ள ஹெவி பிரீயட்ஸ் ஆகிட்டு இருந்தது, கிட்ட தட்ட ஒரு வருஷமா. ஒண்ணு கட்டியை ரிமூவ் பண்ணணும் இல்லைனா கர்ப்ப பை எடுக்கணும்னு சொல்லி அனுப்பிச்சேன் போன வாட்டி. சொன்னாங்களா?"

அதிர்ந்த முகங்களை வைத்தே நிலையை புரிந்து கொண்டார் டாக்டர்.

"எதோ செக் அப் போகணும் கூட வா னு சொன்னாங்க ரெண்டு நாள் முன்ன. நான்..." ப்ரியா மென்று விழுங்கினாள்.

மிக சிரமபட்டு தன்னை கட்டுபடுத்திய  டாக்டர், "மீனாவுக்கு அந்த பைப்ராய்டு ரப்ச்சர் (rupture) ஆகிடுச்சு, இதுல அதிக அளவு ரத்தபோக்கு ஏற்பட்டு மயக்கமாகிட்டாங்க.  உங்க மகன் தான் பாத்துட்டு ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி, வீட்டுல மெடிக்கல் பைலை தேடி எடுத்து, என் கிட்ட ட்ரீட்மெண்டு எடுக்கறாங்கனு  தெரிஞ்சு கூட்டிட்டு வந்தான்.

ஹெவி ப்ளட் லாஸ், இப்ப ரத்தம் ஏத்தியிருக்கோம். ரொம்ப அபூர்வமான கேஸ்ல இப்படி ஆகும். அவசரமா ஆபரேஷன் பண்ணி கர்ப்ப பை எடுக்கணும். உங்க மகன் மட்டும் கவனிக்கலைன்னா அவங்க உயிருக்கு ஆபத்தாகி இருக்கும்.

சைன் பண்ணுங்க. ப்ளீஸ்!"

அறுவை சிகிச்சை நடந்தது.

மீனாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்த சுகுமாருக்கு மலை உச்சியிலிருந்து அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது போல இருந்தது.

'ஓராண்டு காலமாக மீனா இந்த பைப்ராய்டு கட்டியால் அவதியுற்று வருகிறாளா?

அலுவல், தொழில் ரீதியான பயணம், பதவி உயர்வு, சௌகரியமான வாழ்க்கை, பிள்ளைகள் கனவு.... இதெல்லாம் என் முக்கியத்துவ பட்டியலில். ஆனால் அவள்?'

அவள் உடல் நலம் சரியில்லை என சொல்ல முயன்ற போது 'உன் பிரீயட்ஸ் பத்தி தெரிஞ்சு நான் என்ன செய்ய? நான் என்ன லேடி டாக்டரா? எதுனாலும் நீ மேனேஜ் பண்ணிக்கோ '

அவள் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தது..

தான் விரும்பிய போது மனைவி உடன்படவில்லை எனும் போது ஆத்திரத்தில் மதியிழந்தது...

'எப்ப கேட்டாலும் பிரியட்ஸ்னு சொல்லுற, உண்மையா? பொய்யா?'

ஒரு முறை வெளிநாடு பிரயாணம் புறப்படும் முன் முரட்டுதனமாய் அவளை பலவந்தபடுத்த, தன்மானம் காயப்பட்ட உடைந்து அழுதாள்.

'ஏன் பாய் பிரண்டு எதும் பிடிச்சிட்டியோ புருஷனை வேணாங்குற? நாய் மாதிரி உன் பின்னால் வரேன்னு ரொம்ப எகத்தாளம்டீ. பொண்டாட்டியா கூட நடந்துக்க முடியலை. நீ இருந்து என்ன யூஸ்? வெளியே போகும் போது அங்க எவளையாவது பாத்துக்குறேன்'.

மனத்தின் வக்கிரம் ஏவுகணைகளாய் ரணமாக்கியிருக்கிறது அவளை பல சந்தர்ப்பங்களில்.

'எத்தனை செருக்கு, பணத்திமிர், அகம்பாவம், சுயநலம், ஆணாதிக்க சிந்தனை... இத்தனை ஈனப்பிறவியாய் எப்படி ஆனேன்? '

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது இது தானோ?

இத்தனையின்  விளைவு மீனா உயிருக்கு போராடும் அளவு வந்து நிற்கிறது. தன் தாய் அவளிடம் கனிவாக நடந்து கொண்டதில்லை என தெரியும் இருப்பினும் அவரை இறுதி காலத்தில் முகம் கோணாமல் அவள் தான் கவனித்து கொண்டாள். இப்போது அப்பாவையும் குழந்தை போல பாவித்து  அவருக்கு அவள் தான் எல்லா பணிவிடையும் செய்து வருகிறாள். எல்லாம் தெரியும். ஆனால் அங்கீகரித்தது இல்லை அவளது அர்ப்பணிப்பை. படுக்கையை பங்கு போட துடித்தவனுக்கு, அவளது சுமைகளை பங்கு போட தோன்றவில்லை.

அறுவை சிகிச்சை முடிந்து வெளியை வந்த மருத்துவர் அவர்களிடம் அந்த கர்ப்ப பையோடு சேர்ந்து வளர்ந்து கட்டியை காண்பித்தார்.

சுகுமாரன் திகைத்து, "என்ன டாக்டர் இப்படி எல்லார்கிட்டேயும்.."

"ஏன் சார்? இந்த உறுப்போட எல்லாருக்குமே தொடர்பு இருக்கே? என்ன தயக்கம்?"

சுகுமாரனுக்கு சுரீரென்றது.

"நாம எல்லாரையுமே இந்த கருப்பையில தான அம்மா சுமக்கறாங்க?"

"இது கிட்ட தட்ட ஆறு மாச கருவோட வளர்ச்சி SIZEல இருக்கு. இதுல சின்ன சின்ன Cyst வேற..." சுட்டி காண்பித்தார்.

"ஒண்ணு புரிஞ்சுக்கோங்க."
ஹரியை பார்த்து "முக்கியமா நீ, ஒரு பெண்ணுனா வெறும் உடல் இச்சையை தீர்க்குற, வீட்டு வேலை செய்யிற  மெஷின் இல்லை, அவ ஜடமும் இல்லை. அவளும் உங்களை மாதிரி மனித பிறவி தான். மீனாவுக்கு டிப்ரெஷன் இருக்குனும் தெரிஞ்சிருக்காது இல்லை?"

மேலும் அதிர்ந்தனர் மூவரும். "என்னதான் தவறு இருந்தாலும் ஒரு மனுஷிய இப்படியா வதைப்பீங்க?
அடிச்சு துன்புறுத்துவது மட்டும் குடும்ப வன்முறை (domestic violence)  இல்லை சார். வார்த்தைகளால தேள் கொட்டுற மாதிரி கொட்டுனா கூட abuse தான். இந்த மாதிரி அவங்க நலன்ல அக்கறை இல்லாம இருக்குறதும் abuse தானா.

"ஏன் ப்ரியா, நீ பொண்ணு தானே உன்னால கூடவா அவளை புரிஞ்சுக்க முடியலை? அவளை அரவணைச்சு நடக்கமுடியலை?

கை உறையை கழற்றி, கைகளை சுத்தம் த
செய்து,
  "நாளைக்கு உங்க மகளை அவ புருஷன் இது மாதிரி நடத்தினா? ஏன் ப்ரியா உனக்கு ஓகேவா?"

அவரின் வார்த்தை சாட்டையை சொடுக்கியது போன்ற வலியை கொடுத்தது, கற்பனையில் கூட.

"எந்த மனுஷப் பிறவியும் பர்ஃபெக்ட் இல்லை. ப்ளஸ் மைனஸோட துணையை அறவணைச்சுகிறது தான் நல்ல தாம்பத்தியம், குடும்பம்."

"ஆன்டி அம்மாவை பாக்கலாமா?"
ஹரி இயல்புக்கு திரும்ப போராடிக் கொண்டிருந்தான்.

"ஸாரி! சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருந்தேன். அவங்க கண் முழிச்ச உடனே எமோஷனலா பேச வேண்டாம், பொறுமையா நடந்துக்குங்க. ஐசியூ ல இருக்கா இப்போதைக்கு வெளிலேருந்து பாக்கலாம்".

அவர்களை அனுப்பிவிட்டு, தன் பணியில் இதுபோல் பல பெண்களை சந்திக்கும் அவலத்தை நினைத்து கண்ணீர் உகுத்தார் அந்த மருத்துவர்.

எதிரே சுவற்றில் முண்டாசு கவிஞன் ஆக்ரோஷமாக முறைத்து கொண்டிருந்தான்,
'சிறந்த மகளிர் மருத்துவர்' என அறிவித்த ஒரு பரிசு கேடயத்திலிருந்து. மேஜையில் மீனா கையொப்பமிட்ட விவாகரத்து பத்திரம், காத்திருந்தது.

மருத்துவர் சொன்ன விஷயங்கள் யாருக்கு புரிந்ததோ இல்லையோ ஹரியின் மனதில் திடமாக பதிந்தது. அவன் வருங்காலத்தில் எப்படி பட்டவனாக இருக்கவேண்டும் என்ற விதை ஆழமாக விழுந்து வேர் விட தொடங்கியது. இதுவே ஆரம்பம்!

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?'

              


Word count: 2801

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro