3. சிவால்யா கிருஷ்ணவி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

3. Shivalya krishnavi

வெள்ளி முத்துக்களை கருந்தரையில் சிதறவிட்டு சென்றிருந்த ஆதவனை மனதில் திட்டியபடியே மெல்ல தன் மேகவறையில் இருந்து எட்டிப் பார்த்த  நிலமகள் அவற்றை தன் கண்களால் எண்ணிக் கொண்டிருந்தாள் தன் வெண்ணிற ஒளியை வீசி...

மேகத்தின் இடையில் மறைந்தும் வெளியே வந்தும் அவள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தால் முகிலும் பிரகாசமாக வெள்ளி கோடிட்டு காட்சியளித்தது.

அந்த அழகான வானக் காட்சியைப் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் பரவசமும் உற்சாகமும் தோன்றியது மகேந்திர வர்மனுக்கு. இரவு உணவை பெற்றோருடன் சேர்ந்து சாப்பிட்டவன் தனதறைக்கு வந்ததும் அறையில் வீசிய நிலவொளியால் ஈர்க்கப்பட்டு பால்கனிக்கு வந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இது இவனது வழக்கம்தான்.

சில்லென வீசிய தென்றலும் இவன் மேனியில் பட்டு இதமளிக்க அந்த ரம்யமான பொழுதில் அந்த வெண்ணிலவை வெறித்தவனுக்கோ அந்த பால் நிறம் இன்று மிருணாளினி அணிந்திருந்த வெள்ளை சுடிதாருடன் ஒத்துப்போனதைப்போல அவளை நினைவுபடுத்தியது.

அவளது சாந்தமான முகம், கனிவான பேச்சு, எதிர்ப்பார்ப்பில்லா குணம், எதையும் கண்டு அஞ்சா மனம் என அனைத்தையும் அவளை பார்த்த கணமே அவள் பேச்சையும்  செயலையும் வைத்து கனித்திருந்தான். காவல்துறை அதிகாரி ஆயிற்றே!

இதுவரை எந்த பெண்களையும் ஏறெடுத்தும் பார்த்திராவனை ஒரே சந்திப்பில் இந்தளவுக்கு மனதில் பதிய வைத்தவளை எண்ணி இவனும் வியந்துதான் போனான். அவளது முகம் இவன் மனக் கண்ணாடியில் அழகான பிம்பமாக பிரதிபலித்தது. அதை நினைக்கும்போது இவனது மனம் கொண்ட உற்சாகம் இவன் முகத்தில் புன்முறுவலாய் பிரசவித்தது. அந்த உற்சாகத்துடனேயே துயிலுக்கு சென்றான்.

வழக்கம்போல் தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு வந்த மிருணாளினி வரும் வழியல் அனைவருக்கும் வணக்கத்தை செலுத்தியவள் அவளறைக்கு சென்று அமர்ந்தாள்.

அன்றையதினம் பரிசோதனைக்காக வந்த  குழந்தைகளுடன் நேரத்தை கழித்தவள் பணிநேரம் முடிந்ததும் அவள் விடுதி நோக்கி பயணித்தாள். சாலையில் தனது ஸ்கூட்டியில் பயணித்துக் கொண்டிருந்த பாதையில் காவலர்கள் சிலர் நின்று வந்த வண்டிகளை எல்லாம் திசை திருப்பி விட்டுக் கொண்டிருந்தனர்.

ஏதோ விபத்து நேர்ந்ததாக எண்ணி அனைவரும் வேறு வழியில் சென்றுகொண்டிருந்தனர். இவளும் திரும்பிச் செல்லும்போது காவலர்களைத் தாண்டி எட்டிப் பார்க்கையில் அதே கம்பீரமான உயரம், அழுத்தமான முகம், அனல் பறக்கும் கண்களை இன்று கருப்பு கண்ணாடியில் சிறை வைத்திருந்தான். அன்று சாதாரண உடையில் இருந்தவன் இன்று அவன் கட்டுக்கோப்பான உடலும் ஆஜானுபாகுவான புஜங்களும் பார்ப்பவரை கவர்ந்திழுத்து அச்சத்தில் சிக்கவைக்கும் அளவுக்கு கம்பீரம் குறையாமல் காவல்துறை காக்கி உடையில் காட்சியளித்தான் மகேந்திர வர்மன்.

அவனது பேச்சில் இருந்த கர்ஜனை சுற்றி நின்ற காவலர்கள் பதறியடித்து அங்குமிங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்ததிலேயே தெரிந்தது.

ஏனோ அவனது திறமையான விசாரணையை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது மிருணாளினிக்கு. ஆனால் அங்கு நின்றிருந்த காவலாளி ஒருவர் கத்தி அவளை சுய நினைவுக்கு கொண்டு வந்தார்.

"ஏம்மா! சீக்கிரம் போங்கம்மா. இங்கயே நின்னு கூட்டம் சேக்காதீங்க. சார் பாத்தா எங்களத்தான் திட்டுவாரு. போங்க...போங்க..." என்று அங்கிருந்தவர்களை விரட்டிடவே அதில் நிகழுலகம் வந்தவள் அவனைப் பார்த்து மனதில் புன்னகைத்தபடியே அவள் விடுதி நோக்கி பயணமானாள்.

இருமனங்களுக்குள் புதைபட்ட நேச விதை துளிர்விட்டு காதல் செடியாகி ஆனந்த பூக்கள் மலர்வது எப்போது???

எழுத்தாளர்: சிவால்யா கிருஷ்ணவி
ஐடி : சிவால்யா கிருஷ்ணவி

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro