💖16💖

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மாலை ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சுபத்ரா, ஜிஷ்ணுவை பார்ப்பதை தவிர்ப்பதற்காக,

   'இனி நாளையிலிருந்து அலுவலகம் செல்லவேண்டாம்!' என்ற முடிவுக்கு வந்திருந்தாள்...

  'இதை எப்படி தாத்தாவிடமும் அப்பத்தாவிடமும் சொல்வது?' என்பதை யோசிக்க வேண்டியதாக இருந்தது... அதனால் வழக்கம்போல் மொட்டை மாடிக்குச் செல்கிறாள்...

'ஜிஷ்ணுவிற்கு தன்மேல் இருப்பது காதல் இல்லை..‌ ஆனால், தான், ஜிஷ்ணுவை தான் விரும்புகிறோம்!' என்பது சுபத்ராவிற்கு ரொம்ப தெளிவாக தெரிய...

"அம்மாடி! துணி கூட மாத்தாம, மாடிக்குப் போய் என்ன செய்ற?" கீழே இருந்து அப்பத்தாவின்  குரல் கேட்டது.

"லேசா தலை வலிக்குது அப்பத்தா! கொஞ்ச நேரத்துல் வந்துடுவேன்." என்று பதிலளித்தாள்.

"தல வலிக்குதா? கீழ வா! சுக்கு காபி போட்டுத் தர்றேன்... அமிர்தாஞ்சன் போட்டுகிட்டு படுத்தா சரியாயிடும்..." என்று அழைத்தார் அப்பத்தா.

"அ!அ!அ!" எனக்கிருக்கிற பிரச்சனைல இவங்க வேற...' என்று கடுப்பான சுபத்ரா,

"கொஞ்ச நேரம் வெளிக் காத்து பட்டாலே சரியாகிடும்... என்னை கொஞ்சம் தனியா விடுங்க அப்பத்தா!.... போட்டு உயிரை வாங்காம... " என்று சுபத்ரா சிடு சிடுத்தாள்.

'இந்த மாதிரி சிடு சிடுப்பது சுபத்ராவின் சுபாவம் கிடையாதே?' என்று யோசித்த அப்பத்தா, தாத்தாவிடம்,

"இவளுக்கு என்ன ஆச்சு? புதுசா கோபம் எல்லாம் வருது!!!" என்று நடந்ததை கூறுகிறார்.

"அவ எங்கே இருக்கா?" என்று தாத்தா கேட்க,

"மாடில தான் இருக்கா!" என்றார் அப்பத்தா.

சுபத்ரா மாடியில் இருப்பதும், சிடுசிடுவென்று விழுவதையும் கவனித்த தாத்தாவிற்கு சிறு கவலை வந்தது...

கீழே இருந்தபடியே, மாடியை பார்த்தவாறு தாத்தா, "சுபா!' என்று அழைக்கிறார்.

தாத்தாவின் குரல் கேட்ட சுபத்ரா,

"இந்த அப்பத்தா இருக்கே... தாத்தாட்ட போட்டுக்கொடுத்துருச்சு..."
என்று தன் அப்பத்தாவிற்கு அர்ச்சனை செய்தபடி கீழே வருகிறாள்...

தாத்தா, 'என்ன? எது?' என்று கேட்டால் தன்னால் உண்மையை மறைக்க முடியாது... எதையாவது உளறிக் கொட்டி விடுவேன்... என்பதை உணர்ந்த சுபத்ரா, 'தாத்தாவுக்கு சந்தேகம் வராதபடி ஒரு ஐடியா கிடைத்த பிறகு வேலையை விடுவது பற்றி கூறலாம்.' என்று முடிவுக்கு வந்தவள், தாத்தாவிடம் செல்ல தயங்கி, நேராக தனது அறைக்குச் சென்று படுத்துக் கொள்கிறாள்...

இவளின் இந்த செயல் தாத்தாவிற்கு, 'என்னைப் பார்த்துப் பேச கூட பயப்படும் அளவுக்கு அல்லது தயங்கும் அளவுக்கு அவள் மனம் குழம்பி இருக்கிறது... இதற்கும் காரணம் ஜிஷ்ணுதானோ?' என்ற சந்தேகம், மேலும் அவரை கவலை கொள்ளச் செய்தது.

அப்பத்தாவிடம், சுபத்ரா, அவளுடைய அறைக்கு செல்வதை கண்ணால் சைகை காட்டி,

"இதோ வந்துட்டா!... சுக்கு கசாயம் கொடுத்து, அமிர்தாஞ்சன் தடவி விடு!" என்று கூறி மனைவியை அனுப்பி வைத்தார்.

பின், ஹாலில் இருந்த ஊஞ்சலில் சாய்ந்து, மெல்ல ஊஞ்சலை ஆட்டிவிட்டபடி தனது பேத்தியின் எதிர்காலத்தை நினைத்து யோசித்தார்.

'சுபாவுக்கு, அவளோட மனக்குழப்பத்துக்கு காரணம் ஜிஷ்ணுதான் னு தெரிஞ்சுருச்சோ?....இத இப்படியே விடக்கூடாதே... என்ன பிரச்சினை னு அவ சொன்னாதானே ஏதாவது பண்ணலாம்... ' என்று பலதும் யோசிக்கலானார்.

அடுத்த நாள் சுபா வேலைக்கு சென்றதும் அப்பாத்தாவை அழைத்துக்கொண்டு, அகஸ்தியர் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு ஜோதிடரிடம் தன் பேத்தியின் ஜாதகத்தைக் கொண்டு போய் பார்த்தார்...

"சுபத்ராவின் கல்யாணம் சம்பந்தமாக, ஜாதகத்தை உறவினர்களிடம் கொடுத்து விடலாமா? அவள் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்று கேட்டார்கள்...

"சுபத்ராவுக்கு திருமணம் யோகம் வர, இன்னும் ஒரு வருடம் இருக்கிறது!...

....அவள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோசமாக இருக்கும்... ஆனால் அவன் விரும்பும் பையனை திருமணம் செய்ய , பல தடைகளை தாண்ட வேண்டிவரும்... அவளுக்கு மிகப்பெரிய கண்டம் ஒன்றும் இருக்கிறது...அது... சுபத்ரா வின் உயிருக்கே ஆபத்தாக முடியும்... அதிலிருந்து அவள் மீண்டு வந்தால் மட்டுமே, திருமணம் நடக்கும்." என்று ஜோதிடர் கூறினார்.

'அவ விரும்பும் பையனுடன் கல்யாணம் பண்றதுல மட்டும் தான் பிரச்சனை வருமா?... இல்ல... பெரியவங்க பார்த்து செய்யுற கல்யாணத்திலும் பிரச்சனையா?" என்று தாத்தா கேட்க,

"இல்லையில்லை... பெரியவங்க பார்த்து செய்யவதுல பிரச்சனை இருக்காது. உங்க பேத்தி யாரயாவது, காதலிக்கிறேன்... அது... இதுன்னு வந்து நிக்கிறதுக்குள்ள, பெரியவங்க ஒரு முடிவுக்கு வந்துடுங்க..."

தன் பேத்தியின் திருமணத்தில் இத்தனை சிக்கல் இருப்பதை அறிந்து, முதிய தம்பதியினர் துடிக்கின்றனர்...

அதை பார்த்த ஜோதிடர், "ராகுகாலத்துல துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கு போடச் சொல்லுங்க... கல்யாணத்த அந்த ஆத்தா பார்த்துக்குவா...

...உங்க நல்ல மனசுக்கு, எல்லாம் நல்லபடியாதான் நடக்கும். கவலை படாதீங்க..." என்று மேலும் சில பரிகாரங்கள் கூறி அனுப்பி வைக்கிறார்...

    அலுவலகத்துக்கு வந்த சுபத்ரா, 'இந்த வேலையை விடுவதற்கு என்ன காரணம் சொல்லலாம்?' என்ற யோசனையில் இருக்க,

"மகாராணி! எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு யோசனை?" என்று ஜிஷ்ணு தனது இருக்கையில் கூட அமராமல் குஷியாக கேட்க,

'இவன் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோசமாக இருக்கிறான்?' என்று எண்ணும் போதே,

'அவன் உன்னைப்போல், நடக்காத விஷயத்துக்கு ஆசைப்படல.' என்று சுபத்ராவின் மனசாட்சி நக்கலடிக்க,

'உன்னை நான் கேட்டேனா நீ ஏன் தேவையில்லாமல் நல்ல படம் பார்க்கும்போது, வரும் விளம்பரம் போல, அடிக்கடி வந்து நிற்கிற?'என்று எரிச்சலுடன் தன் மனசாட்சியை அடக்கினாள்.

தன் மனசாட்சியை அடக்கியவள் ஒன்றை அறிந்திருக்கவில்லை... மனசாட்சியுடன் அவள் வாய் திறந்து தான் பேசவில்லையே தவிர, அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டிக் கொண்டிருந்தது....

"என்னம்மா மறுபடியும் உள்ளே ஏதோ ஓடுது போலிருக்கே? சும்மாவே இருக்க மாட்டியா? எப்ப பார்ந்தாலும் எதையாவது யோசிச்சுக்கிட்டே தான் இருப்பியா? காலங்காத்தால இன்னைக்கு என்ன பிரச்சனை? உனக்கு புடிச்ச சட்னியை உங்க அப்பாத்தா அரைக்கலையா? இல்ல உன்னோட பாய்பிரண்ட்ஸ் உன்னோட டூ விட்டுட்டானுங்களா?"

"பாய் ஃபிரண்ட்ஸா?"என்ற சுபாவின் முகம் போன போக்கை பார்த்தத விஷ்ணுவிற்கு, சிரிப்பை அடக்க முடியவில்லை...

"இப்ப அப்படி என்ன கேட்டுட்டேன் மூஞ்சியை இப்படி வச்சுக்கிற?" என்று அவன் சிரிக்கவும்,

"என்ன கேட்டீங்களா?!! ஒரு பொண்ணுகிட்ட கேட்கிற கேள்வியா அதெல்லாம்? எவன் அவன் எனக்கு பாய் ஃப்ரெண்ட்டானவன்?"

"அதானே!! எவனாவது பேய கட்டி மாரடிக்க நினைப்பானா? அந்த கண்றாவி எல்லாம் நான்தான் பண்ணுவேன்!! இருந்தாலும் நான் பாய்பிரெண்ட் னு சொன்னது உன் கூட சுத்திக்கிட்டு திரிவானுங்களே நாலு குட்டிச்சாத்தான் அவனுங்கள..."

"ஓ!" என்றவளுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகே ஜிஷ்ணுவின், "பேய் கட்டி மாரடிக்கிற" என்ற வார்த்தைகள் நினைவுக்கு வர,
'அந்த வேலையை அவன்தான் செய்வான்' என்று கூறியதை மனம் உணரும் முன்,

'இவன் அதை மறந்தே தொலைக்க மாட்டானா?" என்ற சோர்வே கோபமாக மாறி,

  "காலம் பூரா இதையே சொல்லிச் சொல்லி என்னை நிஜமாவே பேயாக்காம விடமாட்டீங்களா?"

   அவள் எதைச் சொல்கிறாள் என்பது  தெரியாமல்,

  "ஹேய் லூசு! சின்னப் பசங்கள பாய்பிரண்ட் னு சொல்றதுக்கெல்லாமா இவ்வளவு பெரிய வார்த்தை  பேசுவ" என்று ஜிஷ்ணு கொஞ்சம் சீரியஸாகவே கிண்டல் செய்ய,

  "நான் என்ன சொல்றேன்? நீங்க என்ன புரிஞ்சு கிட்டு..... இதுல கிண்டல் வேற.." என்று சுபத்ரா பேசிக் கொண்டிருக்கும்போதே ஜிஷ்ணுவின் கேபின் கதவை திறந்துகொண்டு, உள்ளே வந்த தலைமை எழுத்தர்,

   "வீட்லதான் பொண்டாட்டி சத்தம் போடுறான்னு இங்கே வந்தா, நீங்க ரெண்டு பேரும், ஏன் புருஷன் பொண்டாட்டி மாதிரி சத்தம் போட்டு இருக்கீங்க!!!" என்று கிண்டல் செய்வதாக நினைத்து, அவரே சிரித்துக்கொண்டு கேட்க,

  யோவ்!" என்று ஆரம்பித்தவளை,

"ஓகே! ஓகே! கூல்.." என்று அவசரமாக சுபத்ராவை அமைதிப்படுத்திய ஜிஷ்ணு, தலைமை எழுத்தரை நோக்கி,

   "ம்ம்...சொல்லுங்க சார்!" என்று தன் இருக்கையை நோக்கி நடந்து கொண்டே, ஆபீஷியல் ஆக பேச ஆரம்பித்தான்.

   பாதியிலேயே சட்டென்று  நின்று போன வாக்குவாதத்தில் இருந்து, வெளிவராத சுபத்திராவுக்கு, என்ன செய்வதென்று தெரியாமல், ஜிஷ்ணுவையும், தலைமை எழுத்தரையும் முறைத்துவிட்டு, "கரடி! கரடி! எந்த நேரத்தில வந்து நிக்குது பாரு! அவனே நான் சொன்னத புரிஞ்சுக்காம என்னத்தையோ உளறி கிட்டு இருந்தான்!.. இதுல இது வேற," என்று முணுமுணுத்தபடி தன் இருக்கைக்கு   சென்று அமர்ந்து கொண்டாள்.

  "விஷ்ணுசார் உங்களிடம், அலுவலக ரகசிய ஃபைல் ஒன்று கொடுத்தாராம். அதை வாங்கிட்டு வரச்சொன்னார்." என்று கேட்க,

   'இதற்கு எதற்கு, விஷ்ணு இவரை அனுப்பனும்?'  என்று நினைத்த ஜிஷ்ணு,

   "அண்ணா வந்துட்டாரா?" என்று கேட்க,

  "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், சார் வந்தார் தம்பி! நீங்க ரெண்டு பேரும் கனஜோரா சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்களா? சிரிச்சுகிட்டே அவர் கேபினுக்கு போயிட்டார்... பிறகு என்னை கூப்பிட்டு வாங்கிட்டு வரச்சொன்னார்."

  "உஷ்ஷ்ஷ்....விஷ்ணு வந்தது கூட தெரியாமலா ரெண்டு பேரும் வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தோம்? ம்ச்சு!' என்று சங்கடப்பட்ட ஜிஷ்ணு,

  "பரவால்ல சார்! நீங்க போங்க! நான் போய் அண்ணன்கிட்ட கொடுத்துக்கிறேன்"... என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.

  அவர் சென்றதும் சுபத்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு,'ஆபீஸுக்கு வந்ததும், வராததுமா இவகிட்ட வாய் குடுப்பேனா?' என்று புலம்பிய படி,  விஷ்ணுவின் கேபினை நோக்கி நடந்தான்.

  தன் கேபினுக்குள்ளே வந்த ஜிஷ்ணுவை பார்த்த விஷ்ணு,     

    "என்னப்பா! விளையாட்டு எல்லாம் முடிஞ்சுதா? இது ஆபிஸ்!! அதாவது ஞாபக இருக்குதா?? ஆள் வர்றது கூட தெரியாம ரெண்டுபேருக்கும் அப்படி என்ன கசமுசா?"

  "இல்ல அண்ணா... அது... வந்து... இன்னைக்கி ஃபேக்டரிக்கு போவமா?... என்ன?... அப்படின்னு... ஆரம்பிச்சு ஏதோ..."

  "அப்படியா? எனக்கு அப்படி ஒன்னும் கேட்கலையேப்பா? எதோ பாய்பிரண்ட்... குட்டி சாத்தான்... என்ன அப்படீன்னுல்ல கேட்டுச்சு."என்ற  விஷ்ணுவின் கண்களை கூர்ந்து பார்த்த ஜிஷ்ணு,

  'இவன் எப்ப வந்திருப்பான்? நாங்க பேசினது எல்லாத்தையும் கேட்டு இருப்பானா?' என்று தங்களுக்குள் நடந்த விவாதத்தை மனதுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தான்.

  "என்ன யோசன? நீங்க என்ன பேசிட்டு இருந்தீங்கன்னு எனக்கு தெரிஞ்சு இருக்குமான்னா? எனக்கு தெரியறதால, ஒரு பிரச்சனையும் கிடையாது... ஆனால், நான் ஆபீஸ்குள்ள வரும்போது, ஒட்டுமொத்த ஆபீஸ் ஆட்களும் உங்க கேபின தான் பாத்துட்டு இருந்தாங்க... கிளியரா ஒன்னும் கேட்கலைன்னாலும், வெளியே இருக்கிறவங்களுக்கு உங்களுக்குள்ள எதுவோ காரசாரமான பேச்சுவார்த்தைனு மட்டும் தெரிஞ்சது. இதெல்லாம் நமக்கு வேற மாதிரியான பிரச்சனைகளை உருவாக்கும்... புரியுதா?" என்று தன் தம்பியிடம் ஒரு அண்ணனாக கேட்டான்.

   "ம்ம்....சரிண்ணா!"

  "ரொம்ப பேசுறேன்னு நினைக்காத, நம்ம நல்லதுக்கு தான் சொல்றேன். அந்த பொண்ணு கிராமத்து பொண்ணு. அவ்வளவு வில்லங்கம் தெரியாது... ஆனால் உனக்கு?!! அக்கம்பக்கம் பார்த்து பேசணும்னு தெரியணும். இல்லையா?"என்ற விஷ்ணு,

  "இந்த பைல் இப்போதைக்கு தேவை இல்லை... நீயே வச்சுக்கோ... அலுவலகம் உன்னை கவனிச்சுக்கிட்டிருக்குன்னு  தெரியபடுத்த தான், நான் எழுத்தர் ராகவனை உன் கேபினுக்கு அனுப்பினேன். அவர் நல்லவர்! ..." என்று யோசனையாக இழுத்தவன்,

"சரி ஃபேக்டரிக்கு போறீங்களா இன்னைக்கு? கிளம்பு...  டைம் ஆயிடுச்சு..' என்று  சிரித்தபடி கூறிவிட்டு தன் வேலையில் மூழ்கினான்.
  
💖  நீ வந்து தங்கிய நெஞ்சில்              நினைவலைகள் தொடரும் 💖   

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro