பாகம் 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மனிதனாக பிறந்த யாரும் 100% சரியானவர்களாய் இருக்க முடியாதில்லையா? மதுரதியிடம் இரண்டு குறைகள் இருந்தன. பேரின்பமாக மாற வேண்டி இருந்த அவளது இல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாய் மாறப் போகும் அந்த இரண்டு குணாதிசயங்கள். ஒன்று மதுவுக்கு எப்பொழுதுமே தன்மீதான தன்னம்பிக்கை என்பது 0% தான். அவளுக்கு எப்போதுமே அவள் மீது self doubt இருந்து கொண்டே இருக்கும். தன்னை எப்பொழுதும் அவள் குறைத்தே மதிப்பிட்டாள். இரண்டாவது அவள் ஒரு ஏமாளி. பெரிய விஷயங்களில் அவளுக்கு இருக்கும் தெளிவு சிறு சிறு விஷயங்களில் அவளுக்கு இருப்பதில்லை. அவளது மனதை மாற்றுவதென்பது யாராலும் முடியுமான ஒன்றாக இருந்தது அவளை manipulate செய்வது மிக எளிது. நீங்கள் ஒரே விஷயத்தை டிசைன் டிசைனாக அவள் காது கேட்க சொல்லி விட்டால் போதுமானது மது எளிதாக influence ஆகி விடுவாள். ஆனால் அதற்கு காரணம் அவள் இல்லை. இந்த சமுதாயம் அவளை அப்படி ஆக்கி இருந்தது. சிறு வயது முதல் இன்றளவேனும் இது அவள் வாழ்வில் நடந்து கொண்டே இருந்தது.

வித்யா தொடங்கி அவளை பார்க்க வந்து விட்டு பதில் சொல்லாமல் எழுந்து சென்ற மாப்பிள்ளைகள் வரை இதை தான் அவளுக்கு பழக்கப்படுத்தி இருந்தனர். மதுவை எப்பொழுதும் ஒரே மன நிலையில் நீங்கள் பார்க்கவே முடியாது. இந்த நொடி ஒரு மன நிலையில் இருப்பாள் அடுத்த நொடியே வேற நிலைக்கு தாவி விடுவாள். இந்த திருமணத்திலும் அவள் நிலை அதுவே. அவளுக்கு மதனை மிகவும் பிடிக்கும். ஊர் உலகுக்கெல்லாம் பிடிக்கும் ஒருவனை எப்படி அவளுக்கு மட்டும் பிடிக்காமல் போகும். ஆனால் அவள் எண்ணங்களிலோ அவள் முடிவுகளிலோ அவளுக்கே ஒரு ஸ்த்தீரத் தன்மை இல்லை. காற்றில் பறக்கும் காற்றாடி போல அவள் எண்ணங்களும் உணர்வுகளும் ஊசலாடிக் கொண்டிருந்தன. மூளை ஒன்றை ஆபத்தென எச்சரிக்கும் ஆனால் மனமோ அதையே அடையத் துடிக்கும் அப்பொழுது மதுரதிக்குள்ளும் அதுவே நிகழ்ந்து கொண்டிருந்தது.

நிச்சயதார்த்தம் நடந்து சரியாக ஒரு வாரத்தில் பொன் உருக்கு. மதுவைத் தவிர மொத்தக் குடும்பமும் பொன் உருக்குக்காக மதனின் வீட்டுக்கு சென்றிருந்தனர். கோபால புரத்தில் அமைந்து இருந்தது மதனின் வீடு. வீடு என்று சொல்வதை விட பார்வைக்கு ஒரு பங்களா போல காட்சி அளித்தது. ஏழடிக்கு கருப்பு சென்சார் கேட் மற்றும் அருகிலேயே செக்யூரிட்டி மானிட்டர். நடுவே கார் செல்வதற்கான சிமெண்ட் பாதை இரு புறமும் வண்ண வண்ண போகன்வில்லா செடிகள். இடப்புறம் கார் பார்க் மற்றும் ஒரு சிறு பத்துக்கு பத்து காங்கிரீட் கட்டிடம். நடுப்புறம் போர்ட்டிகோவுடனான வெள்ளை மாளிகை போன்ற வீடு. சிவராமன் தம்பதிகளுக்கே இந்த வீட்டில் சம்பந்தம் கலக்க நமக்கு தகுதி உண்டா என்பது போல ஆகி விட. கூட சென்றிருந்த சிலருக்கோ சென்றிருந்த இடம் பற்றிய பெருமை இன்னும் சிலர் முகத்திலோ எப்பேர்ப்பட்ட இடம் என்ற பொறாமை. வந்த அனைவரையும் சாரதா வாசலுக்கே சென்று வரவேற்றாள். சாரதாவுக்கு மதுரதியைப் போலவே அவள் தாய் ரேணுகாவையும் ரொம்பவும் பிடித்து விட்டது. தன்னை விட ரேணுகா வயதில் மிக சிறியவளாக இருந்ததாலும் தானாக உருவான ஒரு பாசத்தினாலும் சாரதா ரேணுகாவை பேர் சொல்லியே அழைக்க, வயது காரணமாகவும் அவர்கள் பெண் கொடுப்போர் என்பதை மனதில் வைத்தும் ரேணுகா சாரதாவை சம்பந்தி அம்மா என்றே அழைத்தாள்.

விது தன்னிடம் இருந்த புடவைகளிலேயே மிகவும் விலையுயர்ந்த ஒரு புடவையையும் நகைகளையும் அணிந்து கொண்டு பியூட்டி பார்லர் சென்று தன்னை அலங்கரித்துக் கொண்டு தன் குடும்பத்துடன் மதனின் வீட்டுக்கு பொன்னுருக்குக்கென்று கிளம்பி சென்றாள். அவளது கணவன் வேலை நிமித்தமாக டெல்லி செல்ல வேண்டி இருந்ததால் தங்கையின் திருமணம் வரை உடனிருக்குமாறு கூறி விதுவை தாய் வீட்டிலேயே விட்டு விட்டு சென்றிருந்தார். அக்காவின் திருமணத்துக்காக போட்டதை போட்டபடி போட்டு விட்டு இங்கு வந்து விட்டவளை பிறந்த வீட்டில் பெருமையாய் பார்த்தார்கள்.

சிறு வயது முதலே முழு குடும்பத்துக்கும் விது தான் செல்லம். சிறு வயதில் வெள்ளை வெளேறென்று கொளுக் மொளுக் கன்னங்களுடன் அமுல் பேபி போன்று இருந்தவளை தூக்கிக் கொஞ்சாத ஆளே கிடையாது, பாடசாலை பிராயத்தில் அவளுக்கென்று ஒரு கேங்கே வைத்திருந்தாள். அவளது நண்பர்கள் அனைவரும் எப்பொழுதும் சொல்வது ஒன்றென்றாள் 'என்னடி உனக்கும் உங்க அக்காவுக்கும் சம்மந்தமே இல்லை' என்பது தான். காலேஜ் காலத்தில் மதுவின் நண்பர்களும் கூட விதுவோடு தான் அதிகமாக பழகுவார்கள், ஆண்கள் விஷயத்தில் இவள் தன் அக்காவுடன் நடந்து வரும் போது எத்தனை ஆண்கள் விதுவிடம் கொடுக்கும் படி மதுவிடம் வந்து லெட்டர் நீட்டி இருப்பார்கள், மதுவுக்கு வரன் தேட ஆரம்பித்த நாளில் இருந்து மதுவை பார்க்க வந்து விட்டு விதுவை சைட் அடிக்காமல் சென்ற மாப்பிள்ளையே கிடையாது. கடைசியில் அக்காவை பார்க்க வந்த மாப்பிள்ளைகளில் ஒருவனையே அவள் திருமணமும் செய்து கொண்டாள்.

அவளது திருமண வாழ்க்கை கூட குறை சொல்வதற்க்கில்லை அமோகமாகவே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் மது மதன் திருமணம் பற்றி கேள்வி பட்ட நாள் தொடங்கி விது அவளாக இல்லை. ஒரு வேலை அவள் திருமணம் முடிக்காமல் இருந்து இருந்தாள் மதனும் கூட மதுவுக்கு பதிலாக தன்னைத் தான் விரும்பி இருப்பானோ என்கிற எண்ணத்தை அவளால் என்ன செய்தும் தடுக்க முடியவில்லை. அவள் தன் கணவனுக்கு கனவிலும் துரோகம் நினைக்கவில்லை ஆனால் இத்தனை காலமாக தனக்கு பின் தான் தன் தமக்கை என்று பழக்கப் பட்டவளால் இந்த ஏமாற்றத்தை கொஞ்சம் கூட தாங்க முடியாது இருக்க இன்று இவளிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறானென மதனிடம் கொஞ்சம் பேசித் தான் பார்ப்பது என்று மனதில் நினைத்த படி அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் விது. வீட்டின் பிரம்மாண்டமே அவளுக்கு முதல் ஏமாற்றமாக இருந்தது.

மதன் ஆனால் எல்லோரையும் பொதுவாக வரவேற்றதோடு சரி அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சத்யாவை அருகில் வைத்து பேசிக் கொண்டு இருந்தான். சமயம் பார்த்து அமர்ந்திருந்தவள் சத்யா மதனின் அருகில் இருந்து நகர்ந்த அடுத்த வினாடி சகஜமாக வந்து அமர்வது போல அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

"அப்பறம் சொல்லுங்க மாப்பிள்ளை சார்" என்றாள் பொதுவாக.

"அச்சச்சோ மரியாதைலாம் வேண்டாம். என்னை மதன்னே கூப்பிடு" என்றான் சகஜமாக ஒருமையில்.

அவன் ஒருமையில் அழைத்தது மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்க "மது பேசினாலா?" என்றாள்.

"இல்லை. அவ என்கிட்ட சரியாவே பேச மாட்றா. என்னால இன்னுமே அவளை சரியா புரிஞ்சிக்க முடியலை. ஒரு நேரம் நல்லா சந்தோஷமா பேசறா ஒரு நேரம் பயப்படறா ஒரு நேரம் ரொம்ப ஒதுங்கிப் போறா" என்றான் அவன் மனதுக்குள் இருப்பதை பகிர்ந்து கொள்ள இவள் தான் சரியான ஆள் என்பது போல்.

இவளானால் சட்டென்று "காதலாகட்டும் கல்யாணமாகட்டும் புரிதல் தானே இரண்டுக்குமே பிரதானம். உங்களுக்குள்ள சரியான புரிதலே இல்லைங்கறப்ப எதுக்கு கல்யாணத்துக்கு அவசரம்?" வாய்க்கு வந்ததை உளறி விட்டாள்.

ஒரு நிமிடம் விதுவின் முகத்தை உற்று நோக்கியவன் பின்னர் "கல்யாணத்துக்கு பின்னாடி அவளை சரி பண்ணிடலாம்னு நம்புறேன். பார்க்கலாம்." என்றான்.

அவனது முகமாற்றத்தை கவனித்தவள் "அவ மேல தப்பில்லை மதன். திடீர்னு இவ்ளோ பிரமாண்டத்தை அவளால ஏத்துக்க முடியாம இருக்கது சகஜம் தான். நீங்க சொல்றது போல போகப் போக சரி ஆகிடுவா" என்றாள்.

ஒரு வேளை விது சொல்வது போல இந்த பணமும் பிரமாணடமும் தான் அவளை பயம் கொள்ள செய்கிறதா அவளை அவனிடம் நெருங்க விடாத படி செய்கிறதா என யோசித்தவன் மதுவின் இடத்தில் இருந்து விது கூறுவது சரியாகத் தான் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவனாக,

"இந்த பணம் பிரம்மாண்டம் எல்லாம் இன்னைக்கி என்னோடதா இருக்கலாம். ஆனா நாளைக்கு இதுக்கெல்லாம் அவ தானே சொந்தக்காரி ஆகப் போறா. இதைலாம் பார்த்து அவ பயப்படறதுக்கு ஒன்னுமே இல்லை. இதுக்கு அவ அவளை பழக்கப் படுத்திக்கணும் அவ்வளவு தான். அவ கிட்ட கொஞ்சம் பேசி புரிய வைக்க பாரு விது" என்றான் முகத்தில் கேள்வியும் கவலையுமாக. அதன் பின்னர் அவனிடம் சகஜமாக பேச்சுக் கொடுக்க முடியாததால் எழுந்து சென்று ஏனைய சடங்குகளில் கலந்து கொண்டாள் வித்யா. பொன்னுருக்கு விழா இனிதே நிறைவுற்றது.

சாதாரண திருமணம் என்றால் சொந்த பந்தங்களுக்குத் தான் அழைப்பு விடுவார்கள் ஆனால் சினிமாத்துறையை சேர்ந்த திருமணம் என்றால் ப்ரெஸ்சை கூட்டி பத்திரிகையாளர்களுக்கு முதலில் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் முன்னுக்கு பின் முரணாக எதையாவது எழுதி வைப்பார்கள். அன்று ப்ரஸ் மீட் வைத்து இத்தனையாம் தேதி திருமணம். வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்பட்ட சினிமா பின்புலம் அற்ற குடும்பம். போன்ற சில பொதுவான  தகவல்களை மட்டும் சொல்லி நிறுத்தினான் மதன். மறு நாள் social media எங்கும் மதன் மது திருமண செய்தி தான். எவ்வளவு தான் முறையாக ப்ரஸ் மீட் வைத்து தகவல் சொன்னாலும் சில சில்லறை யூட்டியூப் சேனல்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் ஒரு லைக் ஒரு வியூவிற்காக மதனையும் மதுவையும் கூறு போட்டு விற்றார்கள். மதனுக்கானால் இந்த சில்லறை செய்திகள் பற்றி எந்த கவலையும் இல்லை அவற்றை நின்று நிறுத்தி பார்ப்பதற்கான நேரமும் அவனிடத்தில் இல்லை. ஆனால் மதுவுக்கு அந்த செய்தி அப்படி இருக்கவில்லை.

"மதன் சக்கரவர்த்திக்கு இப்படி ஒரு காதலியா??"

"மதன் சக்கரவர்த்தி எதற்காக ஒரு சராசரிப் பெண்ணை மணக்க சம்மதித்தார். நடந்தது என்ன??"

"உண்மை காதல் நிறம் முகம் அறியாது என நிரூபித்து காட்டினார் மதன் சக்கரவர்த்தி"

"யார் இந்த மதுரதி??"

"ஒரு கருப்பு வெள்ளை காதல்"

என்று தங்கள் இஷ்ட்டத்துக்கு சில சில்லறை சேனல்களில் செய்தி வர ஒவ்வொன்றாக விது எடுத்து வந்து காட்ட காட்ட கொதித்துப் போனாள் மது. கோபமும் இயலாமையும் அவமானமுமாய் மதனை ஃபோனில் அழைத்தாள். நாள் பூராகவும் லைன் கிடைக்கவில்லை. இறுதியாக இரவு 1:30 மணிக்கு மேல் அவனாகவே அழைத்தான். அவளும் எழுந்து தான் இருந்தாள். இவள் ஆன்சர் செய்த கையோடு

"சாரிமா.. கொஞ்சம் டைட் ஷெட்யூல் இந்த வாரம். கல்யாணத்துக்காக ஒரு வாரம் லீவ் போட்டிருக்கேன்ல. அதுக்கு முன்னாடி பண்ணிக் கொடுக்க வேண்டிய ஷூட் சிலது இருக்கு" என்றான்.

"ப்ரஸ் கிட்ட பேசுனீங்களா??" என்றாள் அவன் சொன்னதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல்.

"ஆமா.. நேத்திக்கு"

"என்கிட்ட கேட்டீங்களா??"

"என்ன கேட்கணும்??" புரியவில்லை அவனுக்கு.

"ப்ரஸ்ல பேச முன்னாடி என்னை கேட்டீங்களா???"

"ஓ.. உன்னை கலந்துக்கிட்டு அப்பறமா பேசி இருக்கணும்னு எதிர்பார்த்தியா?? என் மிஸ்டேக் தான் சாரி" என்றான்.

"ஏன் மதன் என்னை இப்படி ஊர் உலகம் முன்னாடி அசிங்கப் படுத்துறீங்க???"

"ஓய்... என்ன ஆச்சு? ஏன் இப்போ டென்ஷன் ஆகற???" என்றான். அவனுக்கு சுத்தமாக புரியவில்லை மது ஏன் டிஸ்ட்டர்ப்டாக இருக்கிறாள் என்று.

"என்னோட ஃபோட்டோ குடுத்தீங்களா??"

"இல்லை நான் தரலை. ஏன் ஃபோட்டோ தேடி போட்டுட்டாங்களா??" என்றான்.

"ஃபோட்டோ மட்டும் போட்டா பரவால்லை. இஷ்ட்டத்துக்கு எழுதி வச்சிருக்காங்க மதன்" குரல் கம்மியது அவளுக்கு.

"என்ன எழுதி இருக்காங்க??" என்றான் அவன் குரலிலும் இப்பொழுது தீவிரம்.

"உங்களை மாதிரி ஆளுக்கு என்னை மாதிரி பொண்ணு தேவையான்னு கேட்டிருக்காங்க" என்று சொல்லும் போது அழுதே விட்டாள்.

"அழறியா??" என்றான்.

அழுகையை அடக்கி "இல்லை" என்றாள்.

"பின்ன??"

"பின்ன என்ன பின்ன இதுக்காக தான் நான் தலையால அடிச்சிட்டேன். இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்க எங்க நாங்க எங்க? விஷயம் கேள்விப் பட்டா ஊருக்குள்ள கைக் கொட்டி சிரிப்பாங்கன்னு. நீங்க பணக்காரங்க உங்களுக்கு இதெல்லாம் பெருசில்லை. நாங்க மிடில் கிளாஸ் எங்ககிட்ட இருக்கதெல்லாம் மானம் மரியாதை ஒன்னு தான். எனக்கும் உங்களுக்கும் ஒத்தே வராது மதன். நீங்க ரொம்ப பெரிய உயரத்துல இருக்கீங்க நாங்க உங்களை அதிசயமா அண்ணாந்து பார்க்கறவங்க. எதுக்கு எங்களை தேடி வந்தீங்க? அவமானப் படுத்தவா???" கண்ணீரின் மத்தியில் மனதில் இருந்த அனைத்தையும் போட்டு உடைத்தாள் மது.

"ப்ச்... அழாத. சரி இப்போ என்ன பண்ணலாங்கற??" என்றான் அமைதியாக.

"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை. இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்" என்றாள்.

"ஹ்ம்ம்... நிறுத்திடலாம்.

மறுமுனை அமைதியானது. ஒரு வேலை இந்த பதிலை அவள் எதிர்பார்க்கவில்லையோ அத்தனை சீக்கிரமாக.

"ஓய்.. இருக்கியா??" என்றான் அவள் மறுமுனையில் இருக்கிறாளா என உறுதி செய்து கொள்ள.

"சொல்லுங்க" என்றாள் வெறுமனே.

"நீ தான் ஏதோ சொல்லீட்டு இருந்த" என்றான் விட்டேத்தியாக.

அந்த பதிலில் கோபமுற்றவளாக "இது தான் மதன் இது தான். நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா ஏதோ சொல்லீட்டு இருந்தேங்குறீங்க. அது தான் சொல்றேன். உங்களால கடைசி வரை இந்த மிடில் கிளாஸ் மனப்பான்மையை புரிஞ்சிக்கவே முடியாது. நம்மக்குள்ள எந்த பொருத்தமும் கிடையாது. இதை நிறுத்திடலாம் மதன்" இம்முறை வார்த்தைகள் சீரியசாக வெளிவந்தது.

"நிறுத்திடலாம்னு தான் நானும் சொல்றேன். ஆனால் கடைசியா ஒரு தடவை மீட் பண்ணிட்டு நிறுத்திடலாம்"

"நான் என்ன பேசுறேன்னு உங்களுக்கு புரியுதா? நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க? என்னாலல்லாம் எங்கயும் வர முடியாது" அவள் குரலில் எரிச்சல் கோபம் கண்ணீர் அனைத்தும்.

"ஆனால் என்னால முடியுமே"

"ஆ??"

"எழுந்து வாசலுக்கு வா. நான் வெளில தான் இருக்கேன்"

பேச்சு வரவில்லை அவளுக்கு. அவசரமாக கட்டிலில் எழுந்து அமர்ந்து திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். வீட்டு வாசலில் அவனது கருப்பு நிற Audi நின்றிருந்தது. கார் மீது சாய்ந்த வண்ணம் காதுக்கு ஃபோனை கொடுத்த படி அவன் நின்றிருந்தான்.

அவளது ஃபோனில் நேரம் 1:45AM எனக் காட்டியது. அருகில் விது படுத்து இருந்தாள். எதையும் பொருட்படுத்தாது வெளியே வந்தாள். மெதுவாக கதவைத் திறந்து வெளியே ஓடி வந்தவளை அவன் பாய்ந்து தன் கைகளுக்குள் சிறை பிடித்துக் கொண்டான். காலையில் இருந்து அடக்கி வைத்திருந்த மொத்த சோகமும் அந்த அணைப்பில் ஆறிப் போகும் போல் தோன்ற அவன் அணைப்பிற்குள் அடங்கி அழுது தீர்த்தாள்.

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro