24. மீரா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


24. மீரா:

அவளது மனம் விழித்துக்கொள்ள இருந்தும் கண்கள் தான் பிடிவாதமாய் திறக்க மறுத்திட இமைகளும் பிரியாது நெற்றிச்சுருக்கத்தின் தலைமையில் போர் புரிந்திட ஆரம்பித்தன. முயன்று நடந்ததை யோசித்து கண்முன் கொண்டு வந்தவளுக்கு கடைசியாய் பார்த்த அந்த முகம், தனது முகமே தான் நினைவில் இருந்தது. சோர்வையும் வலியையும் அந்த கணமே பின் தள்ளிவிட்டு விழியின் பிடிவாதம் வென்று கண்களை திறந்தாள் ஆதர்ஷினி.

ஆனால் அவள் கண்டது என்னவோ பக்கவாட்டில் அவளை பார்த்திடும் ஆவல் தோற்றுப்போக ஒரு கணமும் நிற்காது சென்ற காரின் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மரங்களை தான் இல்லை இவர்கள் தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள்..அப்போ என சிந்தித்தவண்ணம் இவள் காரின் அசைவில் சமாளித்துக்கொண்டு எழுந்தமர அங்கு முன்னிருக்கையில் லாவகமாக கார் ஸ்டியரிங்கை ஒரு கையால் பற்றிக்கொண்டு மறுகையால் அடங்க மறுத்த தலை முடியை கோதிவிட்டுக்கொண்டிருந்த துருவ்வை தான்.

எழுந்தமர்ந்த ஆது சற்று முன்னே சாய்ந்து.."அவள நான் பார்க்கனும் காரை திருப்புங்க.." என்றாள் குரலில் ஆவலும் ஒழிந்திருந்ததோ என எண்ண வைக்கும் குரலில்.

கை ஒரு நொடி திடீரென ஒலித்த அவள் குரலில் தலையில் நின்று மீண்டும் தன் வேலையை செய்ய ஆரம்பிக்க ஆனால் பதில் தான் அவனிடம் இல்லை.

மீண்டும் சற்று எரிச்சல் தெளித்தது போல்.."உங்களை தான.." என ஏதோ தொடங்கியவள் அப்போது தான் அவன் முகத்தை சரியாக கவனித்தாள் ..முன்னே இருந்த கட்டு இல்லை சிறு காயம் கூட இல்லையே தலையில்.. ஏதோ தோன்ற அவனை பின்னிருந்து வெறித்துப்பார்த்து.."விஜய்.." என்றாள் ஆது.

இதை எதிர்பார்க்காத அவன் தடுமாறி மூளையையும் தடுமாற்றிட அதன் பயனாக சடன் பிரேக் போட்டது அவனது கால். சில கணங்களின் பின் சுதாரித்துக்கொண்டு அவன் காரை எடுக்க அது நகர ஆரம்பிக்க அதன் வேகத்திற்கே ஆதுவிற்கும் கோபம் சுரு சுரு என ஏறியது..

"ஏய் மரியாதையா துருவ்கிட்ட கூட்டிட்டு போ..அவருக்கு மட்டும் தெரிஞ்சிது நீ உயிரோட இருக்க மாட்ட.." தான் அப்போதும் ஏன் அவனையே காவலாய் எதிர்பார்க்கிறோம், இவனை காதலித்திருந்தால் இப்போது ஏன் இவனிடம் இந்த பயம் பதட்டம் என அவள் எண்ண தவறிட ஆனால் அதை மறக்காது தனக்குள் குறித்துக்கொண்டான் விஜய்.

ஏதேதோ சொல்லிப்பார்ததும் அவன் ஒரு சொல் கூட பதில் பேசாமல் இருக்க எரிச்சல் பொங்க சீட்டில் சாய்ந்து கொண்டவள்.."என் துருவ்கிட்ட இருந்து யாருக்கும் என்ன பிரிக்க முடியாது.." என்று கோபமாய் கூறிவிட்டு எப்படியும் அவன் தன்னை மீட்டு விடுவான் என எந்த சந்தேகமும் இன்றி இதயம் ஒவ்வொரு துடிப்பிலும் உள்ளே முரசு அடித்திட அதற்கு எதிர்மாறாய் அமைதியாய் வெளியில் நோக்கினாள் ஆது.

அதே நேரம் விஜயின் மனம் நூறாவது தடவையாக தான் செய்வது சரி தானா என குழப்பிட முயன்றிட தலையை உலுக்கிக்கொண்டவனது நினைவு அவன் அனுமதியின்றியே ஒரு மணி நேரம் முன்பு நடந்ததை அசைபோடத்தொடங்கியது.

துருவும் விஜயும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். துருவ் விஜையையும், மாதுவையும் ஒரு முறைப் பார்த்து விட்டு ஆதுவின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் சென்றதும் மாதுவின் பக்கம் திரும்பிய விஜய் அவளது முகத்தையே இமைக்காது பார்த்திருந்தான். அவனையறியாதே அவன் சற்று முன் பதட்டத்தில் அந்த நர்ஸிடம் கூறியது மீண்டும் ஒரு முறை மனக்கண் முன்னே ஓடியது..
"என்ன பேசுறிங்க? என் வைப் இங்கே இருக்கா"..அந்த வரிகளை மீண்டும் மீண்டும் நினைத்து புன்னகைத்தவன் தன் கைகளுக்கு இடையே சிறைப்பட்டிருந்த அவளது கரத்தை எங்கே வலித்து விடுமோ என்ற பாவனையில் மெதுவாக வருடிக்கொடுத்தான்.

தலையில் இருந்த கட்டும் கண்ணில்பட அவள் கரத்தை ஒரு கையில் அடக்கிக்கொண்டு மற்றைய கையால் தலையிலிருந்த கட்டின் மேல் வருட அந்த கட்டின் கீழ் கண்ணிற்கு மறைந்திருந்த காயத்தை கைகள் வழி இதயம் உணர்ந்தது போல் சுருக்கென வலித்தது அவனது இதயம்.

அந்த வலியிலும் அதன் பின் மறைந்திருந்த உணர்வை அவன் சரியாக உணர்ந்து கொள்ள அந்த நொடி இவளை தவிர ஏதும் இனி இல்லை என்று தோன்ற கண்களை மூடி அந்த தருணத்தை அனுபவித்தான் விஜய்.

அப்போது அங்கு அறைக்கதவை யாரோ திறக்க கண்திறந்து பார்த்தவன் முன் கழுத்தை சுற்றிய ஸ்டெதஸ்கோப்புடன் ஒருவர் குழப்ப இரேகை முகத்தில் படர நின்றிருக்க..அவர் சொல்லாதே அவரின் குழப்பத்திற்கான காரணம் ஊகித்த விஜய் பேச வாய் திறக்க அந்த நேரம் சட்டென உதித்தது ஒரு எண்ணம்..மனமும் அதையே ஆமோதிக்க இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாதவன்..

"சார் இவங்க இரண்டு பேரும் சிஸ்டர்ஸ் தான்..ரொம்ப நாள் கழிச்சி கண்டாதால அவங்க மயங்கிட்டாங்க..அவங்க கண்முழிக்க எவ்வளவு நேரம் போகும்..?" என்றான் அங்கு துருவ்வை தான் கண்டதையும் அந்த நர்ஸ் கூறியதையும் வைத்து ஓரளவு ஊகித்து.

"ஓஹ்..இன்னும் டூ ஹவர்ஸ்ல அவங்க முழிச்சிடுவாங்க..இவங்களுக்கு தலையில் சின்ன காயம் தான் இப்ப கண்ணு முழிச்சிடுவாங்க..எழுந்ததும் இந்த டெப்லேட்ஸ கொடுங்க அப்புறம் நார்மல் வார்ட்க்கு மாத்திடலாம்.." என்று விட்டு அவர் சென்றிட டூ ஹவர்ஸ் என தனக்குள் அவசர அவசரமாக கணக்கிட்டுபார்த்தவன் அறையிலிருந்து வெளியேறப்போகவும் திடீரென வெளியில் இருந்து வந்து அவன் வழியை மறைத்து நின்றாள் ஒரு பெண். இவன் யாரென்று பார்க்க அவன் பார்வை புரிந்தது போல்.."நான் சுபா..மாதுவோட ப்ரன்ட்.." என்று அவள் கூற அவள் கூற்றிலே நீ யாரென்ற பதில் கேள்வியும் தங்கியே இருந்தது.

"ஐம் விஜய்.." என இவன் பதிலுக்கு புன்னகைக்க அது யார் என்ற அறிமுகம் அவளுக்கு தேவையாய் இருக்கவில்லை...இவன் தான் செய்ய போவதை விளக்கி முடியவும்.."கண்டிப்பா நான் ஹெல்ப் பன்னுறன் அதுவும் உங்களுக்கு அது நல்லதுதான்னு இருக்கப்போ.." என ஒலித்தது ஒரு குரல்.

அது சுபாவிடமிருந்து இல்லை என புரிந்ததும் விஜய் பின்னால் திரும்ப நினைத்தது போலவே மாது தான் மயக்கம் தெளிந்து எழுந்தமர்ந்திருந்தாள்.

சுபாவையும் மாதுவையும் முதலில் அனுப்பி வைத்த விஜய், துருவ் அறையிலிருந்து வெளியேறிய நொடி ஆதுவின் அறைக்குள் நுழைந்து அவளை கையிலேந்தி மருத்துவமனையின் பின்பக்க வழியால் வந்து தன் காரில் ஏற்றினான். அடுத்த நொடி அவன் அவசரம் புரிந்தது போல் அந்த காரும் பிரதான பாதையில் கொஞ்ச தூரம் சென்று பின் கிளைப்பாதையில் திரும்பி அங்கிருந்து பக்கவாட்டில் இருந்த காட்டுவழியில் வேகமெடுத்தது.

காரில் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடிவழி ஆதுவை பார்த்த விஜய் அவளது சுருங்கிய முகம் கண்டு தன்னையும் மீறி இலேசாக சிரித்து விட்டு காரில் ஏசியை அணைத்து விட்டு யன்னல்களை திறந்து விட்டான்.

கார் கண்ணாடி காற்றிற்கு வழிவிட எஜமானின் உத்தரவிற்கு அமைய திறந்து கொண்டது ஆனால் அதில் சாய்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த ஆதுவின் தலையோ அவள் அனுமதியின்றியே சரிய கோபமாய் நிமிர்ந்து அவன் பார்த்துக்கொண்டிருந்த அதே கண்ணாடிவழியே அவனை முறைத்தாள்.

அவன் முறைக்கும் அவள் கண்களில் இருந்து பார்வையை திருப்பிட இவளும் உன்ன துருவ் சும்மா விட மாட்டான் என கண்களாலே பொரிந்து விட்டு வெளியில் பார்வையை திருப்பினாள்.

அங்கு இவளை வரவேற்க என மரங்கள் மழை நின்ற பின்னும் தன் கிளைகளை அசைத்து அதில் ஒட்டியிருந்த துளிகளை சிதறவிட அந்த அழகில் தன்னையும் மறந்து கைகளை வெளியில் நீட்டி அந்த துளிகளை சிறைப்பிடிக்க முயன்றவண்ணம் அந்த சுத்தமான காற்றை கண்மூடி ஆழ உள்ளிழுத்தாள் ஆது.

அந்த நொடி தன்னுள் உதித்த முதல் காதல், குழப்பம், திடீர் திருமணம், துருவ் மற்றும் கடைசியாய் தான் கண்ட முகம் என அனைத்தையும் மறக்கடிக்க மீண்டும் மீண்டும் அந்த சுகத்தை அனுபவித்தாள் ஆது.

அவள் செயலை கண்ணாடிவழி பார்த்த விஜயும் நிம்மதி பரவ மிதமான வேகத்தில் காரை ஓட்ட கடைசியாய் அது அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு வந்து பிரேக் போட்டது.

கார் நிற்கவுமே அந்த மாயையிலிருந்து விடுபட்ட ஆது சுற்றி நோட்டம் விட அந்த பாதை..உண்மையில் அதை பாதை என்று கூற முடியாது புல் பூண்டுகள் குடியேறி பல ஆண்டுகள் இருக்கும் போல பின்னே இது காடு அல்லவா..தனக்குள் எண்ணங்கள் விரிய தானாகவே கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினாள் ஆது.

உயர்ந்த மரங்கள் தான் எங்கு திரும்பினாலும் நின்றிருந்தது. காட்டிற்கே உரிய மணம் நாசியை துளைக்க பச்சை நிறம் கண்களை நிறைக்க மலைத்த வண்ணம் காதில் ஒலித்த ஏதோ வண்டுகளினதும் பறவைகளினதும் ஓசையில் தன்னை தொலைத்து நின்றிருந்தாள் ஆது.

அவளருகில் வந்த விஜய்.."ஆது.." என அழைக்க அப்போதுதான் அவனை பார்த்தாள். அவன் பின்னே அவளுக்கு நேரெதிரில் சூழலுக்கேற்ற நிறம் கொண்டிடும் ஓணான் போல அந்த சூழலின் நிறத்தையே தத்தெடுத்து நின்றிருந்தது ஒரு சிறிய அழகான மர வீடு.

அவள் பார்வையில் தெரிந்த வண்ணங்களின் வகைகளை கண்ட விஜய் கண்கள் கனிய அவளை மீண்டும் அழைக்க அப்போதுதான் அவன் இருப்பது மீண்டும் மூளையில் உறைக்க..அவனை முறைத்துக்கொண்டு.."துருவ்கிட்ட கூட்டிட்டு போ.." என்றாள் ஆது.

"பிடிக்காது பிடிக்காதுன்னு மூச்சுக்கு முந்நூறு தடவ சொல்ல வேண்டியது ஆனால் அடம் பிடிக்கிறது துருவ் துருவ்ன்னு..." முணுமுணுத்து விட்டு அந்த வீடு இருந்த பக்கம் திரும்பிய விஜய் அவளை திரும்பி பார்த்து "வா.." என்று விட்டு நடக்க தொடங்க திமிராகவே அவனை பின்தொடர்ந்தாள் அவள். அந்த திமிரும் தன்னவன் தன் நினைவில் இருப்பதால் என்பது தான் பாவை அறியாமல் போனது.

***********

எழுத்தாளர்: மீரா

ஐடி:  _meera97

***********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro