35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வீட்டிற்கு இவர்கள் வர அங்கே வித்யாவும் ரவீர்ந்தரும் இருந்தனர். இவர்களைக் கண்ட சாரதாவும் ஜீவாவும் வாய் பிளந்து நிற்க, வித்யா இவர்களை பார்த்து வாய் பிளந்தாள்.

ஆண்கள் இருவரும் ஹாலில் இருக்க, சாரதாவை இழுத்துக் கொண்டு கிட்சனுக்குள் வித்யா புகுந்தாள்.

" டார்லிங்க், என்ன நடக்குது இங்க. உன் வீட்டுக்கு எந்த ஆம்பளையையுமே நீ அனுமதிக்க மாட்ட. ஆனா ஜீவா கூட வெளியில அதுவும் தனியா போயிட்டு வர" என்று கூற சாரதா அமைதியாக இருந்தாள். ஆனாலும் அவள் அமைதியில் ஒரு வெட்கம் இருந்தது. ஜனனி நாசூக்காக இவர்களுக்கு தனிமையை கொடுத்து அவளின் அறையில் புகுந்து கொண்டவள் வித்யாவை மனதுக்குள் திட்டினாள்.

' இதுங்க ரெண்டும் என்ன பேசினதுன்னு தெரிஞ்சிக்க நான் ஆவளா இருந்தா, இந்த கரடி வித்யா மிஸ் வந்து கெடுத்துட்டாங்களே'.

சாரதா வித்யாவிடம் அவள் ஜீவாவிடம் பேசிய அனைத்தையும் கூற வித்யா தலையில் அடித்துக் கொண்டாள்.

" சரியான லூசு சாரதா நீ. பத்து வருசம் அவன காத்திருக்க சொல்லிருக்கியே உனக்கே இது நியாயமா இருக்கா? ஜனனிக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அவன் தனியா இருக்கனுமா? ஏன் இப்படி பண்ற. சரி ஒரு விசயம் யோசிச்சிப்பாரு. ஜனனி கல்யாணத்துக்கு அப்புறம் நீ எப்படி வேணா இருக்கலாம்னு யோசிச்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் தெரியுமா? சரி அவ கல்யாணத்துக்கு அப்புறமா நீ வாழ்க்கைய தேடிக்கிட்டா அவ புருசன் வேணும்னா அதை ஏத்துக்கலாம். ஏன் அவளுக்கு வரப் போற மாமனார் மாமியார் கூட ஏத்துக்கலாம். ஆனா, கூட இருக்குறவங்க என்ன பேசுவாங்கன்னு யோசிச்சியா. அது ஜனனி வாழ்க்கைய ஏதோ ஒரு வகையில பாதிக்கும்தானே. ஆனா இப்பவே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தீங்கன்னா, ஒரு இரண்டு வருசத்துக்கு ஊரு பேசும். அப்புறமா அது சாதாரன விசயமா ஆகிடும். அதுக்கு அப்புறமா ஜனனிய கட்டிக்க வர்றவன் உன் கடந்த காலத்தையும் ஏத்துக்குவான். எல்லா விசயத்துலயும் கரக்டா யோசிக்கிற நீ ஏன் இதுல கோட்டை விட்ட. சரி இதுக்கு ஜீவா என்ன சொன்னான" என்று கேட்டாள்.

" அவருக்கு இதுல விருப்பம்தான். நான் கேட்டதுக்கு எதுவுமே மறுப்பு சொல்லல" என்று கூற வித்யா,

" அட எருமைங்களா, ஜாடிக்கு ஏத்த மூடி. இரு இதை இன்னைக்கே பேசி தீர்த்துக்கலாம்" என்றவள் ஹாலுக்கு வந்தாள்.

" ஜனனி எங்க" என்று கேட்க ரவீந்தரும் ஜீவாவும் அவள் அறையை காட்டினர்.

" ரவீந்தர் நீங்க போய் சாப்பிட ஏதும்  வாங்கிட்டு வாங்க. ரொம்ப அவசரம்லாம் இல்ல. பொறுமையாவே வாங்க" என்று கூற வித்யா தன்னை அங்கிருந்து கிளம்ப சொல்கின்றாள் என்று அவனுக்கு புரிந்தது. மறு பேச்சு  எதுவும் கூறாமல் அவன் வித்யாவை பார்த்து " என்னன்ன வாங்கனும்னு லிஸ்ட்ட மெசேஜ் பண்ணுடா. எனக்கும் ஒரு ப்ரெண்ட பார்க்கனும். நான் அவன பார்த்துட்டு ஒரு இரண்டு மணி நேரத்துல வரேன்" என்று கூற அவளும் சரி என்றாள்.

ஜனனியின் அறைக்குள் வந்த வித்யா " கொஞ்சம் ஹாலுக்கு வா" என்றாள்.

நால்வரும் இப்போது ஹாலில் இருந்தனர். யார் பேச்சை தொடங்குவது என்ற தயக்கம் எல்லோருக்கும். வித்யாவே நடந்தவற்றை ஜனனியிடம் எல்லோர் முன்னிலையிலும் கூற ஜனனிக்கு கடுப்பாகியது.

" ஏன் ஜீவா, எங்கம்மாவுக்குத்தான் அறிவில்லன்னு பார்த்தா உனக்கு எங்க போச்சி. இதுல இவரு எனக்கு வேற அட்வைஸ் பண்ணுவாரு. இப்போ என்ன, நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதுதான் உங்க ரெண்டு பேருக்கும் ப்ராப்ளமா? பேசாம நான் கன்னிகாஸ்த்திரியா போயிடவா" என்று கூற சாரதா ஏதோ பேச வந்தாள்.

" ஏதாச்சும் பேசின வாய தைச்சு வெச்சிடுவேன். அம்மான்னு மரியாதை கொடுத்தா அதுக்கு ஏத்த மாதிரியா நீ நடந்துக்குற. நல்ல வேலை வித்யா மிஸ் இருந்தாங்க. இல்லைன்னா நீங்க ரெண்டு பேரும் பண்ண போற அதி மேதாவி தனத்தால எல்லோருக்கும் மறுபடியும் கஷ்டமாகி இருக்கும். இதோ பாருங்க, உங்க ரெண்டு பேருக்கும் சொல்றேன். என் கல்யாணத்துக்கு அப்புறமாத்தான் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவீங்க. அதுதானே உங்க பளான். சரி எனக்கு பதினெட்டு வயசாகுற அன்னைக்கு ரோட்ல போற எவனையாச்சும் கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்குறேன். அதுக்கு இன்னும் மூணு வருசம் தான் இருக்கு. நான் சொன்னா அதை செய்வேன்னு உனக்கு தெரியும்ல மா. சோ யோசிச்சி முடிவெடு" என்றாள்.

சாரதாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவள் அமைதியாகவே நின்றாள். ஜீவாதான் பேச ஆரம்பித்தான்.

" ஜனனி நான் ஆனந்திக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன், அவ கல்யாணத்துக்கு அப்புறமாத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு. அதுக்கு இன்னும் ஒரு மூனு நாலு வருசமாகும். சோ அதுவரைக்கும் இந்த பேச்சு இப்படியே இருக்கட்டுமே. நானும் கொஞ்சம் என்னோட பொருளாதார நிலமையில முன்னுக்கு வந்துடுவேன். அந்த நேரத்துல எல்லாமே கரக்ட்டா அமையும். எனக்கும் இப்போ எடுத்த உடனே கல்யாணம் பண்ணிக்க முடியாது. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்" என்றான்.

ஜீவா கூறியதில் இருந்த நிதர்சனம் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் சாரதாவுக்கு மட்டும் அவன் தன்னை காப்பாற்ற இப்படி பேசுகின்றான் என்று தெரியாமல் இல்லை. ஜீவா சாரதாவின் மனதின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். ஒரு பெண்ணின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வது என்பது சாதாரன காரியமில்லை. மகள்களின் மனதில் தந்தைகள் சரவசாதாரனமாக அந்த சிம்மாசனத்தை இட்டு விடுவர். ஆனால் காதலனோ அல்லது கணவனோ அந்த சிம்மாசனத்தை இடுவதற்கு பல பிரயத்தனங்கள் செய்ய வேண்டும்.

" இது நீங்க மூனு பேரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. நான் இப்போ போறேன். நாளைக்கு ஒழுங்கா ஒரு முடிவ சொல்லுங்க" என்று கூறி தன் கணவனுக்கு கால் செய்த வித்யா இவர்களுக்கு தனிமையை கொடுத்து அங்கிருந்து நகர்ந்தாள்.

வித்யா அங்கிருந்து சென்ற சில நிமிடங்கள் அமைதியாகவே இருந்தது. மீண்டும் அமைதி. சாரதாவுக்கு தான் ஏதும் பேசினால் ஜனனி திட்டுவாள் என்ற பயம். எழுதும் எனக்கே சிரிப்பே உள்ளது. காதல் விடயத்தில் மகளுக்கு பயந்த தாய். ஆனால் இனியும் இதில் பயந்து பயந்து இருக்க முடியாது என்று நினைத்தாலோ என்னவோ சாரதா பேசிவிட்டாள்.

" இங்க பாரு ஜனனி, நீ சொல்ற எல்லாத்துக்கும் என்னால தலை ஆட்ட முடியாது. ஜீவாவ கட்டிக்க சொன்ன. நான் அதுக்கு சம்மதம் சொல்லிட்டேன். ஆனா உன் கல்யாணம் நடக்காம நான் அதை பண்ணிக்க மாட்டேன். இதுதான் என்னோட நிலைப்பாடு. ஜீவாவுக்கும் அதுல சம்மதம் இருக்கும்னு நினைக்கிறேன். இல்லைன்னா கூட பரவாயில்ல. அவரு வாழ்க்கைய அவரு பார்த்துக்கலாம். நான் யாருக்கும் அழுத்தம் கொடுக்கல. அவங்க அவங்க வாழ்க்கை. அவங்க அவங்க இஷ்டம். உடனே நீ முந்திரிக் கொட்ட மாதிரி ஏதும் பேச வந்திடாத. என் நிலமையையும் கொஞ்சம் புரிஞ்சிக்க. இதுல இன்னும் ஒரு விசயம் இருக்கு. ஒரு இருபத்தேழு வயசு பையனால பதினைஞ்சி வயசு பொண்ணுக்கு அப்பாவா இருக்க முடியாது. ப்ரெண்டா வேணும்னா இருக்கலாம். இதை நான் ஏன் தெரியுமா சொல்றேன், எந்த அப்பாவும் தன் பொண்ணுகிட்ட போய் மயிருன்னு பேசமாட்டாங்க. ஆனா ஜீவா அன்னைக்கு கோபத்துல உன்கிட்ட அப்படி பேசினத நான் கேட்டேன். நான் யாரையும் தப்பு சொல்லல. நம்ம இருக்குற நிலமையில எல்லாமே சுமூகமாக கொஞ்ச நாள் வேணும். ஜீவா சாதாரனமா என்ன கட்டிக்கிறதுன்னா எந்த ப்ராப்ளமும் இல்லை. ஆனா அவரு என்னோட சேர்த்து என் பொண்ணையும் ஏத்துக்க போறாரு. அதுக்கு முதல்ல அவரும் தயாராகனும்.  என்னால எல்லா விசயங்களையும் ஓபனா பேச முடியாது ஜனனி. இதுக்கு மேலயும் நீ என்ன போர்ஸ் பண்ணின்னா.. சாரி அதுக்கு ஆளு நான் இல்ல" என்றவள் தனதறைக்கு சென்றுவிட்டாள்.

ஜனனிக்கு கடுப்பாக இருந்தது. தன் தாய் எதற்கு மறுபடியும் ஒரு குழப்பத்தை கொண்டிருவருகின்றார்  என்று. சாரதாவை மனதை சரியாக இப்போதுதான் ஜீவா கணித்தான்.

" ஜனனி இங்க பாருடா. உங்கம்மா என்ன பேச வர்றாங்கன்னு புரியுதா உனக்கு. எனக்கே இப்போதான் புரிஞ்சது. நீ சின்ன குழந்தை இல்ல. நாங்க ரெண்டு பேரும் இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுல சில சிக்கல்கள் இருக்கு ஜனனி. வெளிப்படையாவே சொல்றதுன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் நீ எங்க கூடத்தான் இருக்க போற. இப்படி வளர்ந்த ஒரு பொண்ண வெச்சிக்கிட்டு சாரதாவால எப்படி என்கூட நெருக்கமா இருக்க முடியும். அப்கோர்ஸ் நீ என்ன யோசிக்கிறேன்னு தெரியுது. பொதுவா எல்லா வீட்லயும் அவங்க அம்மா அப்பாலாம் நெருக்கமாத்தானே இருப்பாங்கன்னு யோசிக்கிற. தட்ஸ் பைன். ஆனா இங்க நான் உனக்கு அப்பாதான். இருந்தாலும் மத்த வீட்ல இருக்குற மாதிரி காலம் காலமா உங்க கூட ஒன்னா வாழந்து வந்த அப்பா இல்லையே. உங்கம்மா மனசுக்குள்ள எவ்வளவு புழுங்கி இருந்தா இதெல்லாம் யோசிச்சி முடிவெடுத்திருப்பாங்க. உங்கம்மா உன் கல்யாணம் முடிய பத்து வருசம்னு சொன்னாங்க. வேணும்னா நம்ம அதை ஆறு வருசமாக்கிக்கலாம். நீ காலேஜ் போ. நல்லா படி. உனக்குன்னு ஒருத்தன் வருவான். அவன்கிட்ட நம்மல பத்தி எல்லாமே சொல்லலாம். அவங்க வீட்லயும் நம்மல இப்படியே ஏத்துக்கிட்டாங்கன்னா கல்யாணம் பண்ணிக்க. உன்னை எல்லாம் ஒருத்தன் காதலிச்சான்னா அவன் எக்காரணத்துக்காகவும் உன்ன விட்டு போக மாட்டான். எங்க காதலையும் அவன் மதிப்பான் ஜனனி. எதுக்கு எடுத்தாலும் அம்மாவ எடுத்தெறிஞ்சி பேசாத. அம்மா பாவம்டா" என்றான்.

ஜீவா பேசியதில் இருந்த நிதர்சனம் ஜனனிக்கு புரிந்தது. ஜீவாதான் ஆரம்பத்தில் இருந்தே சாரதாவை விரும்பினான். ஆனால் சாரதாவுக்கு இது திடீர் திருமனம். எப்போதும் சங்கடங்களை எதிர்கொள்வது பெண்கள் தானே.

" உனக்கொன்னு தெரியுமா ஜனனி, எனக்கு உன் முன்னாடிதான் இப்படி எல்லாம் பேச வருது. உங்கம்மா முன்னாடி ஒரு வார்த்தை கூட வருதில்ல. இப்பவே பொண்டாட்டி தாசன் ஆகிட்டேன் போல" என்று நிலமையை சுமூகமாக்க ஜீவா காமடியாக பேசினான்.

" ஹலோ எங்கம்மா வேணும்னா அவங்க சொல்றத கேட்டுத்தான் ஆகனும். பிகாஸ் சீ இஸ் மை மாம். த க்ரேட் சாரதா" என்றவள் " இதுக்கு அப்புறமாச்சும் கொஞ்சம் மெச்சூரிட்டி வந்த மாதிரி நடந்துக்க ஜீவா. அது வரலன்னா கூட வந்த மாதிரி நடி. எங்கம்மா என்ன சொல்லிட்டு போறாங்க பார்த்தியா. அந்த அமுக்குனி சாரதா எல்லா சின்ன சின்ன விசயத்தையும் நோட் பண்ணிருக்கு" என்றாள்.

ஜனனி கூறியதை சரி கண்டவன் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு தனது வீடு சென்றான். சாரதாவும் ஜனனியும் தனிமையில் விடுபட ஜனனி சாரதாவை அவளின் அறைக்குள் சென்று அவளை பின்னிருந்து இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டாள். ஆனால் இருவரும் எதுவுமே பேசவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro