🌚8🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பல உணர்ச்சிகளின் கலவை தான் மனிதன்.

அன்பு,கோபம்,ஆனந்தம், இன்பம்,மகிழச்சி, ஆசை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, அமைதி, பயம்,கவலை,எதிர்பார்ப்பு, ஆச்சரியம், வெட்கம்,இரக்கம், பாசம்,காமம்,காதல்,அரிப்பு, சலிப்பு, குற்றுணர்வு மற்றும் மனவுளைச்சல்(ஸ்ட்ரெஸ்) என்பன மனிதனுக்கே உரிய வெவ்வேறுபட்ட உணர்ச்சிகளாகும்.

உணர்ச்சிகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டமாகக் கூட பலநேரம் வாழ்க்கை அமைந்து விடுகின்றது.

இந்த உணர்ச்சிகளின் எழுச்சியே பலபோது மனிதப் புனிதனைக் கூட கொடியவனிலும் கொடியவனாக மாற்றிவிடுகின்றது. அந்த நிலை ஏற்படாமல் இருக்கவே நிதானம் என்ற ஆயுதம் அவசியமாகின்றது. இந்த ஆயுதத்தினால் மாத்திரமே உணர்வுகளின் எழுச்சியை சமநிலைக்கு கொண்டுவர முடிகின்றது.

நம் நாயகன் நவநீதனின் நிலை சற்றே வித்தியாசம் ஆனது.
அவன் வித்தியாசமானவனும் தான்.
எந்த நிலையிலும் அவன் இதுவரை தன் நிதானத்தை இழந்தது இல்லை.
அவன் அவ்வாறுதான் அவனுக்கான பயிற்சியை இதுவரை காலம் அளித்து வந்துள்ளான். மனிதன் என்ற அடிப்படையில் சிலபோது நிதானம் தவறிப்போகின்ற நிலைமையும் ஏற்படும். ஆனால் அவனைப் பொறுத்தவரையில் அந்த நிலைமைக்கு இடமேயில்லை.

நவா "கோபம்" என்ற உணர்ச்சியின் பிடியில் இன்று மாட்டிக்கொண்டுள்ள போதும் அவனது அதே இயல்பான நிதானத்தோடு தான் அவன் உள்ளான். அதுவும் தான் யாரை வெறுக்கிறானோ அவர்கள் வீட்டுக்கு தன் தங்கைமார் இருவரும் போய் வந்திருப்பது தெரிந்தும் தனக்கு அவர்களது இரகசிய பயணம் தெரியும் என்பதை காட்டிக்கொள்வதற்காக இந்த இடத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறானே தவிர அவன் ஒன்றும் அவர்களைப் பெரிதாக தண்டித்து விடப்போவதில்லை.

தன் அக்காவைப் பார்த்து கண்களை ஒரு சுழற்சியில் சுற்றி உதட்டை சுளித்த நிஷ்மிதா இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற பாவனையில் அண்ணனை நோக்கி பவ்யமாக திரும்பினாள்.

"அண்ணா..!" -நிஷ்மிதா

"எங்க போய்ட்டு வறீங்க" -நவா

"நவாண்ணா...
நாங்க..."
என்று ஆரம்பித்த சனாவை கண்களாலேயே நிறுத்தியவன்,

"குட்டிமா நீ சொல்லு.
எங்க போன?" -நவா

தன் அக்காவைப் பார்த்து நொடியில் விழித்தும் இடையில் முறைத்தும் வைத்தவள்,
"அது,
நாங்க பவித்ரா அக்கா வீட்டுக்கு போனோம்ணா."
என்றாள்.

"ஓஓஹ். நம்ம ஹரிஷ் வீட்டுக்கா?"
நவாவின் குரலில் என்ன இருந்தது என்பதை இருவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு நொடி விழித்த சின்னவள் வேகமாக,
"ஆமாண்ணா. ஹரிஷ் அண்ணா வீட்டுக்கு தான்."என்று சொல்லி முடிக்கும் போதே "போச்சு" என்பது போல் தலையை மறுபுறம் திருப்பிக்கொண்டாள் சனா.

அவளுக்கல்லவா தெரியும் பவித்ரா குடும்பம் சகிதம் அவர்களது சொந்த ஊருக்குப் போய் இரண்டு வாரங்கள் ஆகின்றது என்பதும்,
அவர்களது இந்த பயணம் நவாவுக்கும் நன்றாக தெரியும் என்பதும்.
பாவம் வாயாடி கடைக்குட்டிக்கு தான் இது தொடர்பாக எதுவும் தெரியாமல் இருந்தது.

இளையவள் இவ்வாறு சொன்னதும் நவா ஏதோ சொல்ல ஆரம்பிக்க,

அப்பொழுது சரியாக அவனின் கைப்பேசி ஒலி எழுப்ப அந்த இடைவெளியில் தன் அக்கா தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை அறிந்தும் அதற்கு விடாமல் தான் முந்திக்கொண்டு,
"முழுசா இன்னும் ஏழு கழுதையிட வயசு கூட ஆகல.
நம்மல எப்டி நிக்க வெச்சு கேள்வி கேக்குறான் பாரு. எல்லாம் அப்பா இல்லாத தைரியம் தான்."
என்று கூறி தன் சிறிய சொற்பொழிவை நிறுத்தினாள் நிஷ்மிதா.

"ஹேய்.
அண்ணாக்கு மரியாத கொடுத்து பேசனும்னு உனக்கு எத்துன வாட்டி சொல்றது.
இரு அண்ணா மாடிக்கு போகட்டும் அம்மா கிட்ட உன்ன போட்டு கொடுக்குறேன்.
எப்போ பாரு அவன் இவன்னு சொல்லிட்டு"
தங்கையின் காதை கடித்தாள் பெரியவள்.

தன் அக்காவின் பேச்சை சட்டை செய்யாததுபோல்,
"சரி அதைவிடு,
எப்டி நான் சூப்பரா சமாளிச்சிட்டேனா?"
தன் புருவங்கள் இரண்டையும் உயர்த்தி சனாவைப் பார்த்து ஆர்வமாக கேட்டாள் இளையவள்.

அவளை முறைத்து வைத்த பெரியவள்,
"கிழிச்ச"
பல்லைக்கடித்துக்கொண்டே சொன்னாள் சனா.

"என்னது?
கிழிச்சேனா..."
என்று கோபத்தோடே ஏதோ ஆரம்பித்தவள் முடிக்கும் முன்னரே தன் தொலைபேசி உரையாடலை முடித்திருந்தான் நவா.

அக்காவுக்கும் தங்கைக்கும் இடையில் சத்தம் வெளியில் வராமல் நடக்கும் உரையாடலை அம்மாவும் மகனும் காணாமல் இல்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

தன் உரையாடலை முடித்துக்கொண்டு கைப்பேசியை டீப்பாயில் வைத்தவன்,
"எங்க போனான்னு சொன்ன குட்டிமா?"
தன் நெற்றியை தேய்த்தபடி கேட்டான்.

"அக்கா சொன்னது போல நாம நிஜமாவே ஏதாவது சொதப்பிட்டோமோ"
என்ற யோசனையோடே எச்சிலை விழுங்கியவள் வேகமாக
"ஹரிஷ் அண்ணா வீட்டுக்குணா."
என்றாள்.

"ஹாஹ்ஹா"
என்று வாய்விட்டே சிரித்தவன்,
"ஏன் சனா, எங்க போய்ட்டு வறோம்னு எப்டி சொல்லணும்னு குட்டிமாக்கு சொல்லி கொடுக்களையா நீ?" -நவா

"அண்ணா..." -சனா

"வெயிட் வெயிட். நானே சொல்றேன்.
நீங்க ரெண்டு பேரும் மிஸ்டர்.நகுலேஷ்வரன் வீட்டுக்கு தானே போனீங்க.
ரைட்.
உங்க ரெண்டு பேரயும் வெச்சு என்னைய மடக்க ஏதாவது புதுசா பிளான் பண்ணிருக்காராமா என்ன?"
அவனது குரலில் எந்த உணர்வும் இல்லாமல் இருந்தாலும் முகம் சற்றே கோபத்திலும் ஆத்திரத்திலும் சிவந்து தான் இருந்தது.

அவனது இப்பதிலை கேட்டு மகள்மார் இருவரோடும் சேர்ந்து நிகிழினியும் அதிர்ந்து தான் போனார்.

"ஹேய். என்னடா கண்ணா சொல்ற?"
ஒருவித பதட்டத்தோடே கேட்டார் நிகிழினி.

"அத உங்க பொண்ணுங்க ரெண்டு பேர் கிட்டயே கேளுங்கமா"
என்றவன் இவர்கள் இருவருக்கும் அருகில் வந்து சனாவின் கையில் இருந்த கார் சாவியை பிடுங்கி,
"இனிமே வீகெண்ட்ஸ்ல எங்கயாவது போகனுமா இருந்தா என் கூட தான் போகணும்.
அண்ட் வீக்டேஸ்ல எங்கயாவது போறதா இருந்தா சுதாவோட தான் போகணும்.
நான் சுதாக்கு எல்லாம் சொல்லி தான் இருக்கேன். ஓகே"
என்றவன் வேகமாக மாடிப்படிகளில் ஏறி மறைந்தான்.

நவா இப்படித்தான்.
கோபத்தில் தன் நிதானத்தை இழக்காமல் இருப்பதற்கு நவா எப்போதும் தனிமையையே தேடிச்செல்வான். அவனைப் பொறுத்தவரையில் அந்த தனிமை தான் அவனது கோபத்திற்கான குறைப்பான். இன்றும் அதே தனிமையை தேடி மறைந்தான் நவா.

"சனா உண்மைய சொல்லு.
எங்க போய்ட்டு வர்ற?"
சற்றே கடுமை தாய் நிகிழினியின் குரலில் வெளிப்பட்டது.

"அம்மா.."-சனா

மூத்தவள் இழுக்கும் போதே முந்திக்கொண்ட அடுத்தவள்,
"பெருசா தத்துவம் பேசி என்னையும் கூட்டிக்கிட்டு போனஇல்ல.
இப்போ மட்டும் எதுக்கு இவ்ளோ பயந்து சாகுற சனா. அம்மாவுக்கு இது தெரிஞ்சா தான் சரியாகும்.
அம்மா,நாங்க சித்தப்பா வீட்டுக்கு தான் போய்ட்டு வர்றோம்மா. நவாண்ணா சொன்னது தான் உண்ம. நாங்க அங்க தான் போனோம்." - பட்டென்று சொன்னாள் நிஷ்மிதா.

சின்னவள் இப்படி சொன்னதும் நிகிழினிக்கு பழைய ஞாபகங்கள் வந்து மனதை பிழிந்து கண்களை கலங்கச்செய்தது. சுமார் ஐந்து வருடங்களின் பின்னர் மீண்டும் அந்த உறவைத் தேடி தன் மகள்மார்கள் இருவரும் சென்றிருப்பது அவருக்கு ஏதோ மனதில் கலக்கத்தை தோற்றுவித்தது.

ஐந்து வருடங்களாக சித்தப்பா என்ற ஒரு உறவு இவர்களுக்கு இல்லை. தங்களுக்கு இரண்டு சித்தப்பாமார் இருந்தும் நவா அவர்களை ஒரு உறவாகவே எண்ணுவதில்லை. உறவாக இருந்து ஒத்துழைக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் துரோகிகளாகவே இவர்களுக்கு செயற்பட்டிருக்கின்றனர்.
அவர்களது பிள்ளைகளோடு உயிருக்கு உயிராக சகோதர பாசத்தோடு அவ்வளவு காலம் பழகியிருந்தாலும் மனதை கல்லாக்கிக்கொண்டு, அவை அனைத்தையும் துறந்தே நவா இன்று இந்த வயதில் தனி ஆளாக வெற்றிகளைக் குவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அவனைப் பொருத்த வரையில் அவனது தந்தையின் தம்பிமார்களும் சரி அவர்களது குடும்பத்தவர்களும் சரி, அவர்கள் அனைவருமே இவர்களது வாழ்வின் முடிந்து போன அத்தியாயம். அவர்களுக்கு இனிமேல் எந்த இடமும் இல்லை.

இப்படித்தான் இவ்வளவு காலமும் சனாவும் நிஷ்மிதாவும் இருந்தனர். ஆனால் திடீரென்று இவர்கள் இருவரும் அவர்கள் வீட்டுக்கு சென்றிருப்பது, அவனைப் பொருத்தவரையில் அது தவறே. அதுவும் யாரிடமும் சொல்லாமல் தனியாக சென்றிருப்பது வேறு அவனை ஆத்திரமூட்டியிருந்தது.

நிகிழினியின் யோசனையும் இதே போல் தான் இருந்தது. நவா சொல்வது போல் மீண்டும் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இவர்களைக் கொண்டு காய்நகர்த்துகிறார்களோ என்றும் அவரை சிந்திக்க வைத்தது.

இதை எதையும் கவனிக்காத இந்த இரண்டு ஜீவன்களும் செவ்வனே அவர்களது பனிப்போரை ஆரம்பித்திருந்தனர்.

"ஓஹோ.
அண்ணா மாடிக்கு போனதுக்கு அப்புறம் தான் நான் பயந்து செத்துட்டு இருக்குறது உனக்கு புரிஞ்சுதா"
என்று சின்னவளின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் சனா.

"ஆமா. அதுவர நானே செத்துட்டு இல்ல இருந்தேன்.
ஹீ ஹீ.
அதான் உன்ன கவனிக்க கிடைக்கல"
என்றவள் அவளது தலைக்கு கொட்டியிருந்தாள்.

எரிச்சல் மேலோங்க,
"நிப்பாட்டுங்க உங்க சண்டைய. எப்போ பாரு சின்ன கொழந்தைங்க மாதிரி சண்டபோட்டுக்கிட்டு.

எதுக்கு அங்க போனீங்க?
அவங்க நம்மள நடு ரோட்டுல நிக்கவெச்சது போதாதுன்னு திரும்ப அவங்க கூட உறவு பாராட்ட போய்ட்டீங்களா?
எதுக்குடி அங்க போன"
என்று கலங்கிய கண்களோடு சனாவின் தோள்களை பிடித்து உலுக்கினார் நிகிழினி.

அம்மாவின் கண்கள் கலங்கியிருப்பதையும் அவரில் ஒருவித பதட்டத்தையும் அப்பொழுது தான் சனாவும் நிஷ்மிதாவும் கண்டனர்.

தன் தாயிடம் வேகமாக திரும்பிய சனா.
"ஐயோ என்னமா நீங்க,
கண்ணெல்லாம் கசக்கிக்கிட்டு.
இப்போ எதுக்கு அழுகுறீங்க?"
அம்மாவின் தோளில் கைபோட்ட வண்ணமே கேட்டாள்.

அவளது கையை வேகமாக தட்டிவிட்டவர்,
"நீ எதுக்கு அங்க போனன்னு முதல்ல சொல்லு பார்க்கலாம்."
மகளை கடிந்துகொண்டார்.

"எதுக்குமா இவ்ளோ கோபப்படுறீங்க?என்ன இருந்தாலும் அது நம்ம சித்தப்பா வீடு.
அவங்க பசங்க கூட நாம எவ்ளோ க்ளோஸா பழகினோம்.
அம்மு தான் அடிக்கடி வர சொல்லி கூப்பிடுவா.
அதான் ஒரு தடவ போய்ட்டு வரலாமேன்னு போனோம்......"

"நீ...."
என்று ஆரம்பிக்கப்போன தன் அம்மாவிடம்,

"நான் பேசி முடிச்சிக்கிறேன்மா.
சின்ன சித்தப்பா எவ்ளோ பாசமா பேசினாங்க தெரியுமா.
நாங்க இவ்ளோ நாளா அவர தப்பா தான்மா புரிஞ்சிக்கிட்டிருக்கோம்.
சின்ன சித்தப்பாவுக்கு தெரியாம பெரிய சித்தப்பா தான் எல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?
நவாண்ணாகூட சின்ன சித்தப்பா எத்தனையோ தடவ பேச ட்ரை பண்ணிருக்காரு.
அண்ணா தான் அவர கண்டுக்குறதே இல்லையாம்."
சனா ஆதங்கத்தோடு சொல்லி முடிக்கவும் நிகிழினியின் கை தடம் அவளது கன்னத்தில் பதியவும் சரியாக இருந்தது.

"பேசுவடி நீ நல்லா பேசுவ.
உங்களுக்காக சின்ன வயசுல இருந்து அவன் விருப்பு வெறுப்பு எதையும் கவனிக்காம, உங்க அப்பா இருந்தா எப்டி எப்டி எல்லாம் நடந்துகிட்டு இருப்பாரோ அப்டி அப்டியெல்லாம் பார்த்து பார்த்து செய்றான் இல்ல அவனையே குறை சொல்ற இல்ல.
அவன் எது செஞ்சாலும் சரியா தான் செய்வான். அவன பத்தி ஏதாவது ஒரு வார்த்த இனி குறையா பேசின நா நானாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோ.
இனிமே...
இனிமே இந்த வீட்ல உன் சித்தப்பாமார பத்தி எதுவும் பேசக்கூடாது.
அங்க போகவும் கூடாது. மீறி போனா நடக்குறதே வேற."
தன் மகளமார் இருவரையும் ஒற்றை விரல் நோக்கி எச்சரித்தவர் தன் அறையில் நுழைந்து கொண்டார்.

என்றுமே அனுபவித்தில்லாத ஒரு இறுகிய சூழ்நிலை. இவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்த போது இருந்த சூழ்நிலையும் இப்பொழுது உருவாகியுள்ள சூழ்நிலையும் ஒன்றுக்கு ஒன்று முரணானது.

"சித்தப்பா வீட்டுக்கு போனது இவ்வளவு பெரிய குற்றமா? அம்மா இவ்வளவு கோபப்படுறாங்களே, அண்ணா கூட அவ்ளோ கோபப்படவில்லையே"
என்று தன் யோசனையில் இருந்தவளை நடப்புக்கு மீட்டி எடுத்தாள் இளையவள்.

"அக்கா இதுக்குத்தான் அப்பவே நா போக வேணாம்னு சொன்னேன்.
நீ கேட்டியா? பெரிய இவளாட்டமா என்னையும் இழுத்துட்டு போய்ட்ட. இப்போ அண்ணாவும் அம்மாவும் ரெண்டும் பேருமே அப்செட் ஆகிட்டாங்க.
எல்லாம் உன்னால தான்." -நிஷ்மிதா

"ஏய் இப்போ எதுக்கு என்னைய மட்டும் தனியா மாட்டிவிட்ற.
நீயும் தான் கூட்டுசேர்ந்து போக வந்த இல்ல.." -சனா

"சரி அத விடு.
அம்மா கோபத்துளயும் ஆத்திரத்துளயும் நம்மல
ஹார்ஷா பேசினாலும் நவாண்ணா நம்மல அப்டி ஒன்னும் சொல்லவே இல்ல பார்த்தியா.
நாம தான் அவங்கள ஹேர்ட் பண்ணிட்டோம்."
முகம் விழுந்த நிலையில் சொன்னாள் சின்னவள்.

"ம்ம்ம்.
ஆனாலும் இப்டியே இருக்க முடியுமா என்ன.
அண்ணாவுக்கு உண்மை தெரிஞ்சு ஆகனுமில்ல." -சனா

"உண்மை தெரிஞ்சாலும் அண்ணா சித்தப்பாவ ஏத்துப்பானான்னு சந்தேகம் தான்.
கொஞ்ச நாளேக்கி எதுவும் வேணாம்கா.
பேசாம விட்டுறலாம்." -நிஷ்மிதா

"பார்ப்போம்.
அண்ணாக்கு அவங்க மேல ஏதோ ஒரு அழிக்க முடியாத அளவுக்கு வெறுப்பு இருக்கு.
அது என்னன்னு முதல்ல கண்டுபிடிக்கணும்.
அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கலாம்.
ஹும். வா நாம போய் அம்மாவ பார்க்கலாம்.
அழுதுட்டு இருப்பாங்க.
அதுக்கப்புறம் நவாண்ணாவ பார்க்கலாம்"
என்று வருத்தமாக கூறியவள் முன்னே செல்ல அவள் பின்னோடே சென்றாள் அவ்வீட்டின் கடைக்குட்டி.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro