32. சஹானா ஹரிஷ்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தவறு செய்பவர்களுக்கு அதைச் செய்யும் போது இல்லாத பதட்டம் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ளும் போது தானாய் வந்துவிடுகிறது..

அந்த நிலையில் தான் இருந்தார் அம்சவேணி, என்ன தான் கோபங்கள் இருந்தாலும் தன் தமையனின் மகள், அதுவும் தான் ஆசையாய் தூக்கி வளர்த்த சின்ன சிறு பெண், அவளுக்கு அப்படி ஒரு கொடூரத்தை செய்ய துணிந்தது எதனால்? இந்த கேள்வியை பலமுறை கேட்டும் தனக்குள் எழுந்த ஆதங்கமே அதற்கான காரணம் எனத் தெள்ள தெளிவாக உரைத்தது மனம்.

இந்த விஷயம் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிந்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் தயாளனுக்குத் தெரிந்து விட்டால்? அதை நினைக்கும் பொழுதே கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் முத்துக்கள்.

நடப்பது நடக்கட்டும் என அந்த முகம் தெரியாத நபர் சொன்ன இடத்திற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்து விட்டு வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

இங்கே, அழகியிடம் கதிர் பேசிய வார்த்தைகள் தயாளனின் காதுக்குள் ரீங்காரமிட்டது.

'அம்சவேணி அப்படிப்பட்டவள் இல்லை என பாசம் கொண்ட மனமோ வாதிட்டது, ஆனா மூளையோ அவன் ஏன் அப்படி செய்திருக்க மாட்டாள்?'எனக் குழப்பி விட்டது..மொத்தத்தில் கதிர் காலையில் வந்து சென்றதிலிருந்து அவரின் மனம் நிலையில்லாமல் தவித்தது.

திவ்யாவிற்கு வீட்டு வேலைகள் இழுத்துக் கொண்டு இருக்க தயாளனின் குழப்பமான முகமும், அழகியின் யோசனையான முக மாற்றமும் கண்ணிற்கு தெரியவில்லை, அகரனும், வருணாவும் வீட்டிலில்லாததால் அவர்களுக்கும் இது தெரிய வாய்ப்பில்லை.

அங்கே, கதிரின் மனமும் குழம்பி தவித்தது, மொத்த பிரச்சனையும் முடிந்தது எனச் சிறிது காலம் கூடச் சந்தோஷப்பட முடியாமல் போனது இந்த அம்சவேணி சித்தியால்.

இதற்கு ஒரு முடிவுக் கட்ட வேண்டும் என யோசிக்கையில் அதற்கான வழி மட்டும் கிடைப்பேனா எனச் சிரித்தது. காலை கல்லூரி கிளம்பும் நேரம் வரை யோசித்தவனுக்கு தலைவலியே மிஞ்சியது.

கல்லூரியில் முக்கியமான வகுப்பு இருக்க தலைவலியைப் பொருட்படுத்தாமல் விரைவாக கிளம்பிச் சென்றான் கலைவாணி அழைப்பது கூடத் தெரியாமல்.

'என்ன ஆச்சு இவனுக்கு? இதுக்கு முன்ன தான் பிரச்சனை இப்ப என்ன யோசனையில இருக்கான்? எப்ப அந்த அழகி பொண்ணு பேச்சு இந்த வீட்டுக்குள்ள வந்ததோ அப்ப ஆரம்பிச்சது இந்த வேதனை.. ஆண்டவா என் பையன் வாழ்க்கைய காப்பாற்று' கதிர் செல்லும் வழியைப் பார்த்துப் பார்த்து மனதிற்குள் புலம்பித் தவித்தார் அந்த தாய்.

கல்லூரிக்கு வந்தவனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை, எதேச்சையாக அதைக் கவனித்த மாறன் வேறு ஒரு பேராசிரியரை அவரிடத்தில் நிற்க வைத்து விட்டு கதிரைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான் கேண்டீன் பக்கம்..கதிருக்கு மாறனிடம் பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும் எனத் தோன்ற மறுக்காமல் இதோ வந்துட்டான் அவனுடன்.

இரண்டு காபி மற்றும் தனக்கு தேவையான திண்பண்டங்களை ஆர்டர் செய்தவன் கதிர் பக்கம் திரும்பினான் "கதிர் அண்ணா என்ன பிரச்சனை?" நேராக கேள்வியைக் கேட்டு விட்டான் அவன்.

ஆனால் இவனுக்கு தான் தர்மசங்கடமாய் இருந்தது.. 'என்ன தான் அம்சவேணி தவறு செய்திருந்தாலும் அவர் எழிலின் அத்தை, அவர்கள் குடும்ப விவகாரம், மாறன் நண்பனாக இருந்தாலும் இன்னும் முழு உரிமையுடன் அவர்கள் வீட்டில் ஒருவன் என தான் ஆகாத பொழுது இதை இவனிடம் பகிர்ந்துக் கொள்வது எவ்விதம் சரியாக இருக்கும்?' சிந்தித்தவனின் சிந்தையை கலைத்தது மாறனின் கேள்வி.

"என்ன?" இவன் மறுமுறைக் கேட்க " எல்சா புடவையை பற்ற வச்சது யாருன்னு கண்டுபிடிச்சாச்சு போல?" அவன் கண்களில் அத்தனை கூர்மை.

"உனக்கு எப்படி இது தெரியும்?"  கதிரின் கேள்வியில் இருந்தது நிச்சயம் அதிர்ச்சியே.

"அகி சொன்னான், ஆரம்பத்தில் இருந்தே அவங்க அத்தை மேல எனக்கு ஒரு சந்தேகம், அதனால அவங்கள கவனிச்சிட்டே இருந்தேன், பட் நான் எதிர்பாராத விஷயம் எல்சா புடவையில தீ பிடிச்சது, அங்க அப்ப அவளுக்கு எதுவும் ஆககூடாதுன்னு மட்டும் தான் தோணிச்சு, சோ அதை அப்படியே விட்டுட்டேன், பட் அகி நீங்க இந்த மாதிரி அவங்க அத்தையை பற்றி சொன்னதும் என்கிட்ட சொன்னான், எனக்கும் நீங்க சந்தேகப்படுற மாதிரி இருக்குமோன்னு டவுட் வந்தது,

ஆதாரம் இல்லாம நீங்களோ, நானோ சொன்ன அவங்க ஒத்துக்க மாட்டாங்க, அதுவும் இல்லாம தயாளன் அங்கிள்க்கு அவங்க மேல பாசம் அதிகம் சோ அன்னைக்கு பங்ஷன்ல எடுத்த போட்டோ எல்லாத்தையும் எடுத்துப் பார்த்தேன், புடவை எரிஞ்ச சமயத்தில் என்னோட மொபைல் அகி கிட்ட இருந்தது அவன் செல்ஃபி எடுத்துட்டு இருந்தான், அதுக்காக திரும்பின செகண்ட் தான் அப்படி ஆச்சு..அதுக்கு அப்பறம் எனக்கு வேலை வந்ததுனால உங்க நிச்சியத்துல கூடக் கலந்துக்கலன்னு உங்களுக்கே தெரியுமே"

" அதான் நடக்கலையே அதைவிடு, அப்ப அந்த செல்ஃபில அவங்க எழில் புடவைய பற்ற வச்சது?"

" தெள்ள தெளிவா இருக்கு"

" இது போதுமே மாறா.. அவங்களோட முகத்திரையை கிழிக்க"இவன் மகிழ்ச்சியில் தன்னிலை மறந்து கத்த,

" அவசரப்பட வேண்டாம் அண்ணா என்கிட்ட ஒரு பிளான் இருக்கு, அதை எக்ஸிகியூட் பண்ணிட்டேன்"

"என்ன சொல்ற மாறா?" இவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

" ஆமா அண்ணா, அவ அவங்க பையன வேண்டாம்னு சொன்னதிலிருந்து மத்தவங்க முன்னாடி ஒரு மாதிரியும் தனியா இருக்கும் போது ஒரு மாதிரியும் அவ கிட்ட நடந்துகிட்டத நான் பார்த்தேன், எனக்கு அப்ப தப்பா தெரியல, ஏன்னா சொந்தத்தில பொண்ணு எடுக்க முடியலன்ற வருத்தம் இருக்கும்னு நினைச்சி விட்டுட்டேன், அதுவும் இல்லாம அது அவங்க குடும்பம் விசயம், என்ன தான் நான் பல வருஷ பிரண்ட்டா இருந்தாலும் இதுல தலையிடுறது தப்புன்னு பட்டது"

கதிர் பேச்சில் இடையிட்டான்" அப்பறம் ஏன் பிளான் அது இதுன்னு சொல்ற?"உண்மையில் புரியாமல் கேட்டான்.

" அண்ணா நான் இப்ப கூட அவங்க குடும்பத்துல எந்த பிரச்சனையும் பண்ண நினைக்கல, தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கூட கிடைக்காமல் போகலாம், ஆனா தான் பண்ணது தப்புன்னு உணரனும் இல்லையா? அதுக்காக ஒரு சின்ன மிரட்டல்"என்றவன் தான் செய்த காரியத்தை கதிரிடம் விவரித்தான்.

"பட் இதனால நீ மாட்டிக்க போற மாறா.. ஏன்னா உன்னை அவங்களுக்கு நல்லா தெரியும், அதுவும் இல்லாம மாமா கிட்ட எதாவது ஏடாகூடமாக சொல்லி வச்சா அவர் தங்கச்சி பாசத்துல உன்னை ஏதாவது சொல்லிட்டா?"

" அய்யோ அண்ணா நான் புட்டீ தான் அதுக்காக மூளை இல்லாதவன்னு நினைச்சிட்டீங்களா?"

" ஐயோ மாறா அப்படி இல்ல" அவசரமாக மறுத்தான் கதிர்.

சிரித்தவன்" நீங்க கேட்ட கேள்வி எல்லாம் சரி தான் ஆனா இதையெல்லாம் யோசிக்காமல் நான் செய்யல, எனக்கு தப்ப அவங்களே உணர்ந்து அங்கிள் கிட்ட மன்னிப்பு கேட்கணும், அதுவரை என்கூட இருக்கவங்க இம்சை பண்ணுவாங்க" சொல்லி விட்டு பெருத்த தொப்பைக் குலுங்க சிரித்தான் மாறன்.

"பட் இதனால அவங்க ரிலேஷன்ஷிப்ல ப்ராப்ளம் வந்தா?"

" அது அவங்களோட பிரச்சனை அண்ணா, எனக்கு எல்சா சந்தோஷம் தான் முக்கியம், எவ்வளவு பண்ணி இருக்காங்க அவ நிம்மதிய கெடுக்க?" அவன் கண்களில் அத்தனை தீவிரம்.

கதிர் இத்தனை ஆண்டுகளில் மாறனை அவ்வாறு கண்டதில்லை.. தான் காதலித்த பெண் தன்னை விரும்பவில்லை என்றாலும் அவளுக்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என நினைக்கும் மனது எப்பேர்ப்பட்டது? சிந்திக்கும் போதே மாறன் அவன் மனக்கண்ணில் பெரும் உயரத்தில் இருந்தான்.

"ஆனா மாறா உன்கூட இருக்க அந்த இன்னொருத்தர் யார்? அகியா?" என்றவனிடம் இல்லை என்பது போல் தலையசைத்தவன் "சஸ்பென்ஸ், உங்களுக்கு தெரிஞ்சவங்க தான் ஆனா ஆள் யார்னு போக போக தெரியும் அண்ணா" புதிர் போட்டான் மாறன்.

"சரி" என்றவன் "தாங்க்ஸ் மாறா மனசு கொஞ்சம் தெளிவா இருக்கு இப்ப தான்"

"அது உங்கள பார்த்தாலே தெரியுது அண்ணா, ஹாப்பியா கல்யாண வேலைய பாருங்க, அப்பறம் நான் ஒரு லோகேஷன் அனுப்பறேன் ஈவினிங் அங்க வாங்க செம எண்டர்டெயின்மெண்ட் இருக்கு" என்றவனிடம் சரி எனத் தலையசைக்க இருவரும் பேசியபடியே தம் தம் வேலைகளுக்கு சென்றனர்.

மாலை 5 மணி,

அம்சவேணி திரு திருவென முழித்தபடி இருக்க கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த வர்ஷிகாவிற்கு தாயின் இந்த குழப்பமான முகம் புதிதாக தெரிந்தது.

" அம்மா என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி திரு திரு முழிச்சிட்டு நிக்கற?"

அதில் சுய உணர்வு பெற்றவர் "நான் நல்லா தான் இருக்கேன், போ உள்ளே போய் எதையாவது கொட்டிக்கிட்டு படி" எரிச்சலாய் கத்தினார் அம்சவேணி.

அவரின் இந்த எரிச்சலான பேச்சு எப்போதும் இருப்பது தான் என்பதால் அவள் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

அதே நேரம் அலைபேசி அழைக்க இவருக்கு கைகால் உதறல் எடுக்க ஆரம்பித்தது. அழைப்பது யார் என்று தெரிந்ததும் முகம் முழுவதும் வேர்வைத் துளிகள்..சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றார்.

"என்ன மேடம் உங்களுக்காக எவ்வளவு நேரம் இங்க வெயிட் பண்றது? வரீங்களா இல்ல இந்த போட்டோவ உங்க அண்ணன் நம்பருக்கு அனுப்பி வைக்கவா?" அதிகாரமாய் வந்தது அந்த குரல்.

"இல்ல இல்ல வேண்டாம், எங்க அண்ணன் என் மேல ரொம்ப பாசம் வச்சி இருக்கார், எனக்கும் அவர்ன்னா ரொம்ப இஷ்டம், நீ ஏதாவது செய்ய போய் அவர் என்னை வெறுக்கற மாதிரி ஆகிட கூடாது" பதறியபடி பதில் அளித்தார்.

" ஹும் அவ்வளவு பயம் இருக்கவங்க, நான் சொன்ன நேரத்திற்கு முன்னாடி இங்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டாமா?"

" தப்பு தான்.. இதோ வரேன்"

" பத்து நிமிடம் பார்ப்பேன் இல்லன்னா இந்த போட்டோ உங்க அண்ணனுக்கு போயிடும்.. என்ன வரீங்களா?"

"அப்படி எல்லாம் செய்யாத இதோ கிளம்பிட்டேன், இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல வந்துருவேன்" என வாசலுக்கு ஓடியவர் எதன் மீதோ இடித்து விழ அதில் எரிச்சலானவர், அங்க நின்றவனைக் கண்டு அதிர்ச்சியினை தத்தெடுத்துக் கொண்டார்.

" என்ன சித்தி இவ்வளவு அவசரமா எங்க போறீங்க?" கதிர் அவரைத் தூக்கி விட்டபடி கேட்டிருந்தான்.

'இவன் ஏன் இங்க வந்தான்? அதுவும் உரிமையா சித்தின்னு கூப்பிடுறான்? அதான் இவனுங்களுக்குள்ள எதுவும் இல்லன்னு ஆகி போச்சே!'

"என்ன சித்தி யோசிக்கிறீங்க? இவன் ஏன் இங்க வந்து உரிமை கொண்டாடுறான்னா?" அவர் மனதில் நினைத்ததை இவன் சொல்லவும் அவர் எதுவும் பேசாமல் நின்றார்.. இவனே மேலும் தொடர்ந்தான்..

"வீட்டுக்கு வந்தவங்கள வாசல்ல நிக்க வச்சி தான் பேசுவீங்களா?" கதிர் கேட்க,

' இவன் வேற நேரம் காலம் தெரியாம கிளாஸ் எடுக்கிறான்' எனச் சலித்துக் கொண்டவர் அதனை முகத்தில் காட்டாது புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு "வா கதிர்" என்றவர் அவனோடு உள்ளே செல்ல எத்தனிக்கையில் மறுபடியும் கைபேசி அதிர, இவர் முகத்தில் பயத்தின் சாரல் கதிர் முகத்திலோ மென்னகை..

அம்சவேணி என்ன செய்வார்? கதிர் எதற்காக அவரைப் பார்க்க வந்தான்? இதெல்லாம் மாறனின் திட்டமா? பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.

*********

பிரதிலிபி ஐ.டி: சஹானா ஹரிஷ்

*********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro