33.தீபா செண்பகம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


"தன்னெஞ்சறிவது பொய்யற்க , பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்" இது வள்ளுவர் வாக்கு.

ஆனால் பொய் சொன்ன பிறகும், அதற்காக வருந்தாமலும் , திருந்தாமலும், தனக்கு அதனால் ஆபத்து என ஒன்று வரும் வரை, மௌனம் காப்பதும் தற்போதைய காலத்தில் மனித இயல்பாக மாறி வருவது துரதிர்ஷ்டவசமானது.

இங்கு அம்சவேணியும், தனது சுயநலத்திற்காக தன் சொந்த அண்ணன் மகள் எனவும் பார்க்காமல் எழிலழகியின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டார்.

தான் செய்த செயலின் பலனாக திருமணம் மட்டும் தடைப்படும், பிறகு ஏதாவது நாடகமாடி தன் மகனுக்கு அவளை மணம் முடிக்கலாம் என்பது மட்டுமே அவளது நோக்கமாக இருந்ததே தவிர, இன்று இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருக்கவில்லை...

மாறனுடன் பேசும் பொழுது அவனின் திட்டத்தை அறிந்த கதிர், "தேவையில்லாம என்னால நீ எந்த பிரச்சனையிலும் சிக்க வேண்டாம் மாறா. சோ, நான் ஒரு முயற்சி செய்ய போறேன். அதுக்காக தொடர்ந்து அம்சவேணியம்மாவை மட்டும் உன் பிரெண்ட்கிட்ட மிரட்டச் சொல்லு" என்றான்.

"அதையும் உங்க பிரண்டு தான் செய்வாரு அண்ணா" என்று புன்னகைத்தபடி பாலாஜியை கை காட்டினான் மாறன்.

"டேய் பாலா!" என நண்பனைக் கட்டியணைத்துக் கொண்ட கதிர், "ஏன்டா வெளிநாட்டு வேலைன்னு போனவன், எப்ப வந்த? சொல்லவே இல்லை. மாறனை  உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேள்விகளை அடுக்கினான்.

" உனக்குத் தான் தெரியுமே, அப்போவோட ஹோட்டல் பிஸ்னஸ், எனக்குச் செட்டாகாதுன்னு தான் ஸ்டேட்ஸ் போனேன். ஆனால் இந்தக் கம்யூட்டர் ஃபீல்டு ஓர்க் ப்ரஸர் தாங்கலை. இல்லாத வியாதி எல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சு. அதான் நம்ம ஊருக்கே விட்டா போதும்னு திரும்ப ஓடி வந்துட்டேன். அப்பாவுக்கும் இப்போ எல்லாம் உடம்புக்கு முடியலை, அது தான் அவர் பிஸ்னஸை, என் ஸ்டைல்ல கொஞ்சம் மாத்தி செய்யலாம்னு "foodies food" னு, உலகத்தில உள்ள எல்லா சாப்பாடு வகைகளையும், ஒரே இடத்தில் கிடைக்கிறமாதிரி ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்து இருக்கேன்" என்று அவன் தனது கதையைச் சொல்லவும். கதிர் மாறனைப் பார்த்து சிரித்தபடி, "உனக்கு வேட்டை தான்" என்றான்.

"வாழ்த்துக்கள் டா. நீ இங்கேயே வந்து செட்டில் ஆனது எனக்கு ரொம்பச் சந்தோஷம். மனசில இருக்கிறதை, ஷேர் பண்ண கூட ஆள் இல்லாமல் இருந்தேன்டா. இப்ப தான் நீ வந்துட்டியே" என மீண்டும் இருவரும் கட்டியணைத்துக் கொள்ளவும்.

"அண்ணா! உங்க பிரெண்டைப் பார்த்துட்டோம்ன்னு என்னைக் கழட்டி விட்டுடாதீங்க" என்று மாறன் புலம்பவும், சிரித்த கதிர், "உன்னைக் கழட்டி விட முடியுமா மாறா? இவன் இல்லாத குறைக்குத் தான் உன்கிட்ட புலம்பிட்டு இருந்தேன்" என்றான்.

"அப்ப இனிமே நான் தேவையில்லை அப்படித் தானே " என்று முறைத்தான் மாறன்.

" ஹேய் நோ, நோ. நம்ம கேங் பெரிசாகுது அவ்வளவு தான். அப்புறம் நான் உன் எல்சாவை சமாளிக்க, எனக்கு இன்னும் நிறைய சப்போர்ட் வேண்டாமா? இன்னும் என்னன்ன புலம்ப வைக்கப் போறாளோ?" என்றான் கதிர் எழிலை நினைத்து சிரித்தபடி.

மாறன் மூலம் விவரமறிந்த பாலாஜியும் , "கதிர், உண்மையில எனக்கு ரொம்பச் சந்தோசம். உன் கல்யாண விசயம் தெரிஞ்சா, மதுராவும் ரொம்ப ஹேப்பியாயிடுவா " என சொல்லவும், அதிர்ச்சியான கதிர், "என்னடா சொல்ற,? மதுரா இப்ப எங்கிருக்கா?" என விசாரித்தான்.

அசடு வழிந்த பாலாஜி , "சாரிடா, மச்சான் சொல்லைனு அடிக்க வராத, ஸ்டேட்ஸ்ல திரும்ப மீட் பண்ணமா,? அவளுக்கும் யாரும் இல்லை, அவளைச் சிங்கிளா பார்க்கவும் மனசு கேட்கலை, வேண்டாம், வேண்டாம்னவ ஒத்துக்கிட்டா, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப அவ ஐஞ்சு மாசம், அது தான் அப்பா கைல, காலில் விழுந்து , இங்க கூட்டிட்டு வந்து, குடும்பத்தோட ஒண்ணா சேர்ந்துட்டேன்" என தனது காதல் காவியத்தைச் சொல்லவும்,

"அடப்பாவி" என கையில் வைத்திருந்த மேகசினால் அடி வெளுத்தவன், "உங்களால நொந்தவன் ஒருத்தன் இருக்கேன். எனக்குக் கூடச் சொல்லனுமுன்னு தோனலைல" என கதிர் கோவித்தான்.

" டேய் மச்சான் சாரிடா, என் நிலைமையைப் புரிஞ்சுக்கடா, உன்னை எந்த முகத்தை வச்சிக்கிட்டு வந்து பார்க்கிறதுன்னு ஒரே யோசனை. அப்பத் தான் மாறன் நம்ம "ff" க்கு வந்தார். காலேஜ் பெயரைக் கேட்கவும், உன்னைப் பத்திக் கேட்டேன். நெருங்கிட்டோம். உன் பிரச்சனையை அவர் சொல்லவும், தங்கச்சியோட அத்தையை ஒரு வழியாக்குறதுன்னு முடிவெடுத்தோம். விசயத்தை முடிச்சிட்டு உன்கிட்ட சொல்லாம்னு பார்த்தால், அதுக்குள்ள மாறன், உன்கிட்ட மாட்டிவிட்டுட்டாப்ல" எனப் பாலாஜி நடந்ததை விளக்கினான் .

" உங்க ப்ளான் எல்லாம் சரி தான். ஆனால் நான் சொல்ற மாதிரி நடக்கனும். மெயின் பிச்சர்ல நான் இருந்துக்குறேன். எந்தப் பிரச்சனை வந்தாலும், அதில உங்க பேரு அடிபடுறதில்ல எனக்கு விருப்பமில்லை" என்ற கதிர், தங்கள் திட்டப்படி அம்சவேணி வீட்டுக்கு வந்தான்.

பதட்டமாகக் கிளம்பிக் கொண்டிருந்த அம்சவேணி முன் எதிர்பாராத விதமாகக் கதிர் சென்று நிற்கவும், முதலில் யோசித்தவர், பின் அவன் கேள்வியில் அதிர்ச்சியை மறைத்து வரவழைத்த புன்னகையோடு, "வா கதிர்" என அழைக்கவும், உள்ளே வந்து சோபாவில் சட்டமாக அமர்ந்தான் கதிர்.

அதற்குள் மீண்டும் அலைப்பேசி அழைக்கவும், "வர்ஷிகா, இந்தா உன் காலேஜ் வாத்தியார், கதிர் தம்பி வந்திருக்கு பாரு." என மகளுக்குக் குரல் கொடுத்து விட்டு, தான் வெளியே கிளம்ப முற்பட்டார் அம்சவேணி.

ஆனால், அம்மாவின் மேல் கோபமாக அறைக்குள் சென்றவள், காதில் ஹெட் செட்டை மாட்டியிருந்தவளுக்கு, தாயின் குரல் கேட்கவே இல்லை. கதிர் புன்னகை மாறாமல், "நான் வர்ஷிகாவைப் பார்க்க வரலை. உங்களைப் பார்க்கத் தான் சித்தி வந்தேன்" எனவும்,

"என் அண்ணன் மகளை ஏமாத்தின உன்னோட எனக்கு என்ன பேச்சு? வர்ஷிகா வாத்தியாருங்கிறதால தான் வீட்டுக்குள்ளயே விட்டேன். உன்கிட்ட பேச எதுவும் இல்லை நீ கிளம்பலாம்" எனப் பேச்சைக் கத்தரித்து கதிரை வெளியே அனுப்பப் பார்த்தார் .

"அப்படிச் சொல்லிட்டா எப்படிச் சித்தி? ஒரு ஆளைப் பார்த்தவுடனே அவுங்க எப்படின்னு உங்க அனுபவத்தில் தெரிஞ்சிடாது. உங்க அண்ணன் மகள் மேலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க. நீங்க தான் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கனும் " எனக் கதிர் வினயமாகவே கேட்கவும். எரிச்சலானவர்.

" நான் சொல்லி, அவ கேக்கிறதா இருந்தா, என் மகனுக்கே கட்டி வச்சிருக்க மாட்டேன். அதெல்லாம் அந்தத் திமிரெடுத்தவக் கேட்கமாட்டா. நீ வேற நல்ல பொண்ணா பார்த்துக்க. இப்ப கிளம்பு" என்றார்.

" என்ன சித்தி? உங்க அண்ணன் மகளை இப்படிப் பொசுக்குனு திமிரெடுத்தவன்னு சொல்லிட்டிங்க. எழிலழகி ரொம்ப நல்லவ" என கதிர் தாங்கிப் பேசவும்.

"நல்லவளா? உன்னையவே நம்பாமல், உன்னையும், உன் குடும்பத்தையும் அசிங்கப் படுத்தினவ அவ. பேசாமல் வேற பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிட்டு போவியா? அதை விட்டுட்டு அவளையே கட்டிவையின்னு வந்து கேட்கிற?" என்று கோபமாக பேசி அவனையே எழிலுக்கு எதிராக தூண்டிவிட்டார்.

"அதுதான் சித்தி பிரச்சனையே. எழில் என் மேல பழி போட்டதால வேற பொண்ணே எனக்குக் கிடைக்க மாட்டேங்குது. நீங்க தான் எப்படியாவது அவுங்களைச் சம்மதிக்க வச்சு, இந்தக் கல்யாணத்தை நடத்திக் கொடுக்கனும்" என்று கதிர் மீண்டும் வலியுறுத்தவும் , அம்சவேணிக்கு இழுத்துப் பிடித்த பொறுமை காற்றில் பறந்தது.

" ஏய்! நீ ஒருத்தன்.. மனுச அவசரம் புரியாமல் பேசிக்கிட்டு நிக்கிற. எழிலை மறந்துட்டு வேற வேலை இருந்தா பாரு. எனக்கு உன்னோட நின்னு வெட்டியா பேச நேரமில்லை. வெளியில முக்கியமான வேலையிருக்கு" என அவசரப்படுத்தினார்.

"என்ன சித்தி வேலை? சேலையில நெருப்புப் பட்ட மாதிரி அவசரப்படுறீங்களே. இல்லை அடுத்து வேற யார் சேலைக்கும் நெருப்பு வைக்கப் போகனுமா?" என்று கதிர் அசால்டாக ஒரு குண்டைத் தூக்கிப் போடவும், அரண்டு முழித்தவர், தன்னைச் சமாளித்து , "என்ன உளற? என்ன சேலை?? நெருப்புன்னு கண்டபடி பேசிற?" என உள்ளுக்குள் நடுங்கினாலும், வெளியே வரவழைத்த தைரியத்தில் கதிரை மிரட்டலாகக் கேட்க, அவரது செல்போனையே பிடுங்கி, மாறன் அனுப்பிய போட்டோவை, அவர் கண்முன் காட்டினான்.

உள்ளே சகலமும் ஆட, பயந்து போன அம்சவேணியின் அறிவுக்கு, 'அப்ப இவன் தான் போன் பண்ணினதா?' என்ற கேள்வி ஓட அதையே வார்த்தைகளிலும் "அப்ப அந்தப் போன் போடுறவன் நீ தானா?" எனப் பதறியபடி கேள்வி எழுப்பினார்.

அவன் பேசாமல் அமர்ந்திருக்கவும் "நீ நல்லா இருப்ப. எழிலை விட நல்ல பொண்ணை நானே பார்த்துத் தர்றேன். என் அண்ணன் கிட்ட, இந்தப் போட்டோவைக் காட்டிடாத தம்பி" எனக் கதிரின் கையைப் பிடித்தார்.

அவரை முறைத்தவன், பிடித்த கையை உதறியபடி,

"நீங்க தூக்கி வளர்த்தப் பொண்ணை தீ வச்சாவது கொல்லனும்னு அப்படி என்ன உங்களுக்கு வெறி?" என்று நேரடியாகவே கேட்கவும். நடுங்கிய வேணி,

"அய்யோ சாமி, கொல்லனுமுன்னு எல்லாம் நினைக்கலை பா. லேசா தீப்பட்டாலே, அபசகுணமின்னு போயிடுவீங்க. கல்யாணம் நின்னுடும்னு தான் நினைச்சேன். ஆனால் அதுனால கல்யாணம் நிக்கலையே. உங்க நடத்தை சரியில்லையின்னு தானே, கல்யாணத்தை நிறுத்துனாங்க." என்று அம்சவேணி பேச்சை திசை திருப்ப பார்த்தார்.

" அதுக்குக் காரணமும் நீங்க தான். என் அழகியோட மனசில, அவள் ராசியில்லாதவ.. கூட இருக்கவங்களுக்கு ஆபத்துன்னு ஒரு போலியான பயத்தை உருவாக்கல நீக்க?" என்றான் கண்ணில் தீ பறக்க.

தலை கவிழ்ந்த அம்ச வேணி, "ஆமாம் நான் தான் செஞ்சேன். என் பையனை வேண்டாம்னு சொல்லி என் பையன் மனசை நோகடிச்சுட்டு அவ மட்டும் நிம்மதியா யாரையும் கல்யாணம் பண்ணிட்டு போகக்கூடாதுன்னு நினைச்சேன். எழில் மனசில கல்யாண ஆசையே வரக்கூடாதுன்னு அப்படிச் செஞ்சேன். கொஞ்ச காலம் போனால், எங்க அண்ணன், அவளுக்குக் கல்யாணம் செய்யனும்னு போராடி தோற்றுப் போய் நிற்பார். அந்த நேரம் அவங்ககிட்ட பேசி என் மகனுக்கே அவளைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன்" என்று உண்மையை ஒத்துக் கொண்டவர்,

"இதெல்லாம் பாவமன்னிப்பு கேக்குற மாதிரி உன்கிட்ட சொல்லிட்டேன் தம்பி. எல்லாம் ஒரு தாய்பாசத்தில, என் மகனுக்கு எழிலைக் கட்டி வைக்கனுமுன்னும் சொந்தம் விட்டுபோகக்கூடாதுன்னும் செஞ்சது தான் என்னை மன்னிச்சிடுங்க" என அவர் கதிர் முன்னால் கை கூப்பி நிற்கவும்.

"ம்கூம், தாய்பாசம்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? உங்க மகனுக்காக, அடுத்தவங்க பெத்த பொண்ணுக்கு கெட்டது செய்யறதுக்குப் பேரு தாய்ப்பாசம் இல்லை. உங்களை தன் பொண்ணு போல வளர்த்த உங்க அண்ணன் மகளுக்கே தீ வச்சது சொந்தவிட்டு போககூடாதுன்னும் இல்ல. எல்லாம் உங்களோட சுயநலம்" என்றவன்.

"நீங்க எழிலழகி ஜாதகத்தைப் பார்த்து ஜோசியரை மாற்றிச் சொல்லச் சொன்னது, அவள் சேலையில் தீ வச்சதுன்னு எல்லாத்துக்கும் ஆதாரம் என்கிட்ட இருக்கு. இப்ப நினைச்சாலும் போலீஸ்க்கு போகவோ, இல்லை, உங்க அண்ணன்கிட்ட உங்களை வெளிப்படுத்தவோ முடியும்." எனக் கதிர் மிரட்டவும், "அய்யோ தம்பி, அப்படி எல்லாம் செஞ்சுபுடாதீங்க" அவன் காலில் விழப்போனார் அம்சவேணி. அவரைத் தடுத்து நிறுத்தியவன்,

"என் கால்ல விழுந்து, எனக்கும் பாவத்தைச் சேர்க்காதீங்க. எங்க அம்மா வயசில் இருக்கீங்களேன்னு, பேசாமல் விடுறேன். இந்த விசயமெல்லாம் உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா அவர் எப்படித் துடிப்பார்னு யோசிச்சிங்களா? அவர் பண்டிகை, விசேஷம்னு வந்தா, மகள்களுக்குச் செய்யும் முன்ன உங்களுக்கு தான் செய்வாராமே, அகரன் சொன்னான். அந்தப் பாசத்தைக் கூட நீங்க நினைச்சு பார்க்கலை." என வெறுப்பைக் கண்களில் உமிழ்ந்தவன், "இனி உங்களால என் அழகிக்கோ, அவள் குடும்பத்துக்கோ எதாவது தப்பா நடந்துச்சு, இந்த ஆதாரம் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிடும். உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு, அதை மறந்திடாதீங்க" எனக் கதிர் இதுவரை யாரிடமும் காட்டாத தனது ரௌத்திரமான முகத்தை அம்சவேணியிடம் காட்டி எச்சரித்துக் கிளம்ப நினைத்த வேளை,

அம்சவேணியின் கணவர் மாதவன் தயாளனோடு உள்ளே வந்தவர் ஆக்ரோஷமாக வந்து மனைவியை ஓங்கி இரண்டு அறைவிட்டார்.

"உன்னை எல்லாம், இரண்டு பிள்ளைகளைப் பெத்த அம்மான்னு சொல்லிக்காதடி" என உருமியபடி, அவர் அடித்து கீழே சுருண்டு விழுந்து கிடந்தவரை காலால் மிதிக்கப் போக, கதிர் நடுவில் புகுந்து அவரைத் தடுத்து நிறுத்தினான்.

தயாளன், ரத்தக் கண்ணீர் சிந்தாத குறையாகக் கண்ணீர் சொரிய அதிர்ச்சியில் நின்றவர், "உன்னை, என் மகளாட்டம் தானே வளர்த்துக் கட்டிக் கொடுத்தேன் அம்சா. எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு?" என்றார்.

"அண்ணே! என்னை மன்னிச்சிருங்க அண்ணே. கடைசி வரைக்கும், நம்ம சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு தான் இப்படி செஞ்சுட்டேன். எழிலை என் வீட்டுக்கு மருமகளா கூடிவந்து ராணி மாதிரி வச்சுக்கனும்னு நினைச்சு தான் இப்படிப் புத்திக் கெட்டுப் போய் செஞ்சுட்டேன் " எனத் தலையில் அடித்துக் கொண்டும், அண்ணன் காலைப் பற்றிக் கொண்டும் அம்சவேணி கதறவும், தங்கை கண்ணில் தூசிப்பட்டால் கூடக் கலங்கும் தயாளன், அவரையே புறக்கணித்து தங்கையிடமிருந்து தன்னை உருவி கொண்டு கதிரிடம் வந்தார்.

"மாப்பிள்ளை, உங்களுக்கு உண்மை தெரிஞ்சும். ஆதாரம் எல்லாம் வச்சிருந்தும், என் மனசு கஷ்டப் படக்கூடாதுன்னு நினைச்சிங்களே, உங்களைப் போயி தப்பா நினைச்சமே" என வேதனைப் பட்டார். அவர் கையைப் பிடித்துக் கொண்டவன்,

" மாமா, உங்க மனசு கஷ்டபடும்னு தான், நானே அவுங்களை எச்சரிக்க வந்தேன். நீங்க எப்படி மாமா, இங்க வந்தீங்க?" என்றான் வருத்தமாக.

" நீங்க காலையில எழில்கிட்ட கேள்வி கேட்டிங்களே, அதை நானும் கேட்டேன். அப்பவே மனசை அரிச்சது. அப்படி இருக்காது, இருக்கக் கூடாதுன்னு சாமியை வேண்டிக்கிட்டே வந்தேன். உங்க வண்டியைப் பார்க்கவும், வெளியே மறைஞ்சு நின்னேன். இவ வாயாலையே கேட்க கூடாதெல்லாம் கேட்டுட்டேன்" எனச் சட்டெனப் பத்து வயது முதிர்ந்து, தளர்ந்து நின்றவரிடம், மாதவன் "மச்சான், மன்னிச்சிடுங்ன்னு உங்களைக் கேட்க கூட எனக்கு அருகதை இல்லை" எனத் தயாளன் முன் கையைக் கூப்பி அழவும்.

அவர் தோளைத் தட்டிக் கொடுத்தவர், "என்னால முடியலை மாப்பிள்ளை. நான் வர்றேன்" எனக் கிளம்பியவரை, கதிர் கை தாங்கலாக அழைத்து வந்து தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, அவர் வண்டியை அவனுடன் வந்து, திரை மறைவில் அம்சவேணி வாக்கு மூலத்தைப் பதிவு செய்த தனது நண்பன் பாலாஜியை அழைத்து எடுத்து வரச் சொன்னான்.

அங்கு நடந்தவைகளைப் பாலாஜி மூலமாக மாறனும், அகரனுமாக லைவ் ரிலே பார்க்க, எதேச்சையாக வர்ஷிகாவுக்குப் போன் செய்த அபினவும், அவள் சிக்னல் கிடைக்காமல் பேசுவதற்காக வெளியே வந்தவள், டயனிங்கில் மறைந்திருந்து அத்தனையும் கேட்டாள் . தன் அம்மாவின் சுயரூபம் தெரியவும், மிகவும் நொந்து போனாள். அவளோடு போனில் பேசிக்கொண்டிருந்த அபினவுக்குத் தான் இவற்றையெல்லாம் கேட்டு, தன் மனம் கவர்ந்தவளின் அதிர்ச்சி, அழுகையைத் தாங்க இயலவில்லை. போனில் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் அவள் அழுகை நிற்காமல் இருக்க, வண்டியை எடுத்துக் கொண்டு நேராக அவள் வீட்டுக்கே சென்று விட்டான்.

ஆனால், உள்ளே அவளின் அப்பா மாதவனுக்கும், அப்போது தான் வந்து சேர்ந்த அவளது அண்ணன் தர்ஷித்துக்குமாகப் பெரிய வாக்குவாதம் ஓடிக் கொண்டிருந்தது. வெளியே இருந்தே வேடிக்கை பார்த்த அபினவுக்கு, தன்னவளை எப்படியாவது இந்தச் சந்தைக்கடை வீட்டிலிருந்து மீட்க வேண்டும் என்ற உறுதி வந்தது. கதிர் இருக்கும் இடம் தேடி சென்றான்.

********

கதிர், தயாளனை அழைத்துக் கொண்டு அவர் சொற்படி ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்ல, ஏற்கனவே மனைவி மகளை அங்கு வரச்சொல்லி இருக்க... எழிலழகி, தன் அம்மாவின் உதவியோடு, ஒரு விரற்கடை மெல்லிய தங்க ஜரிகை வைத்த, ஊதா வண்ணச் சீலையில் அழகோவியமாக நின்றிருந்தாள்.

கதிருக்கு அவளைப் பார்க்கவுமே , மெய் மறந்துவிட்டது. தயாளன் இரண்டு முறை அழைத்துப் பார்த்தவர், அவன் நிலையைக் கண்டு, தன்னை மறந்து சிரித்தவராக உள்ளே செல்ல, கதிரின் பாதங்கள் எழிலம்மன் தரிசனத்துக்காகப் பிரகாரத்தில் தூண் அருகில் அமர்ந்திருந்தவளிடம் நேராக வந்து நின்றது.

சற்றுமுன் சுவாமி சன்னதியில் அவனுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்திருந்தவள் முன் சாட்சாத் கதிரானந்தரே வந்து நிற்கவும், அவளுக்கும் மனது குளிர்ந்து போனது.

தயாளன், மனைவியிடம் தனது அதிர்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சென்று விட, இளம் ஜோடிகள் எதிரெதிரே நின்றனர்.

வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்திருந்த, வாத்தியாரைப் பார்த்தவள், கையிலிருந்த பூவை அவன் மீது விட்டெறிந்து, "ஹலோ நெட்டக் கொக்கு, இது கோவில். அம்மன் அங்க இருக்காங்க... தரிசனம் அங்க தான்... போங்க" என்றாள் மெல்ல இதழ் விரித்து புன்னகைத்தபடி.

கண்ணைச் சிமிட்டி தன்னிலை அடைந்தவன், "எழிலம்மனை தான் தரிசனம் பண்ணிட்டு இருக்கேன்" என அவன் முணுமுணுக்கவும், அவன் காலில் மிதித்தவள்.

" ரொம்பத் தான் பண்ற, எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க. போயா" எனப் பல்லைக் கடித்தாள். சுற்றிப் பார்த்து அசடு வழிந்து, தன் சிகையைக் கோதிக் கொண்டவன், "அம்மனை தரிசிக்கத் தான் வந்தேன், மனசு நிறைஞ்சிடுச்சு" என்றவன், "அழகி, அழகியாவே இருக்கியே, உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டு போகனும்.

இரு பெர்மிஷன் வாங்கிட்டு வந்துடுறேன்" என வருங்கால மாமனார், மாமியார் நின்ற இடம் விரைந்தவன், "ஸாரி பார் த டிஸ்டபென்ஸ், நான் அழகியைக் கூட்டிட்டு போறேன். இரண்டு மணி நேரத்தில் உங்க வீட்டில் கொண்டு வந்து விட்டுடுறேன்" எனத் தகவலை மட்டும் சொல்லி விட்டு, அவர்கள் சம்மதமும் பெறும் முன் ஓடிவந்தான். இந்தக் கதிர், அவனே அறியாத கதிர்.

அவனையே பார்த்திருந்த எழில், "இது தான் நீங்க பர்மிஷன் வாங்குற இலட்சணமாக்கும். வாத்தியார் மாதிரி இல்லை, திடீர்னு ஸ்டுடன் மாதிரி பிஹேவ் பண்றீங்க..." என்றாள் இடையில் கரம் வைத்து பொய் கோபத்துடன்.

"உனக்கு மேட்ச் ஆக வேண்டாமா அதுக்குத் தான்" என்றவன், அவள் நடக்கச் சிரமப்படுவாள் எனக் கைகளில் ஏந்த வர, "யோவ்! என்ன பண்ற? தலை கால் புரியாம அட்டகாசம் பண்ற" என்று அதட்டவும்.. "ரொம்ப தாண்டி வாய் உனக்கு" என்று முணுமுணுத்தவன், எழிலின் எதிர்ப்பை மீறி கரங்களில் ஏந்திக்கொண்டு  வந்து தனது வண்டியில் அமர்த்த, "யோவ் நெட்டக் கொக்கு, என்னா திடீர்னு ரொமான்டிக் ஹீரோவாகுற. என்ன விசயம்?" என்றாள்.

"சர்ப்ரைஸ்" என்றவன், அவளைப் பாலாஜியின் "FF " ரெஸ்டாரண்டுக்கு அழைத்து வந்தான். பாலாஜி, மதுராவுடன் மாறனும் இருக்க, குழப்பமாகப் பார்த்த அழகிக்கு , கதிர் அவர்களை அறிமுகப் படுத்தினான்.

பாலாஜியும் , மதுராவுமாக எழிலழகியை ஆவலாகப் பார்த்து, கதிரின் கல்லூரிக் காலப் பிரதாபங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, எழில் வியந்தும், மாறன் கதிரைப் பற்றி ரசித்தும் அதோடு உணவு வகைகளை ருசித்தும் கேட்டுக் கொண்டிருந்தான்.

கதிருக்கு ஒரு போன் கால் வந்தது, புது எண்ணைப் பார்க்கவும் குழப்பமாக அதற்குச் செவி கொடுக்க,"டேய் பங்காளி, வயசான பொம்பளையை வந்து மிரட்டி விசயத்தைக் கரந்துட்டா, நீ பெரிய ஹீரோ ஆகிடுவியா..? இவ்ளோ நாள் அமைதியா இருந்தது என் எழில் சம்மதத்தோட கல்யாணம் பண்ணனும் தான்.. ஆனா இடையில புகுந்து எங்க ஆட்டத்தை நீ கலைச்சுட்ட... இனி யார் சம்மதமும் வேணாம் எனக்கு... இப்ப நேருக்கு நேர் சேலஞ்ச் பண்றேன்டா, என் மாமன் மகள் எழிலழகி எனக்குத் தான். உன் கண்ணு முன்னாடியே நான் அவளைத் தூக்கறேனா இல்லையா பாருடா?" என்றான் தர்ஷித் சவாலாக.

"டேய், அறிவில்லாம வளர்ந்தவனே... அவளுக்காக என் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிக துணிஞ்சவன்... இப்போ அழகி மனசுல நான் தான் இருக்கேன்னு தெரிஞ்சபிறகு சும்மா இருப்பேனா? என் அழகி பேரைச் சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல. என்னை மீறி அவள் நிழலை என்ன அவளோட நகத்தைக் கூட உன்னால் தொட முடியாது. வாடா பார்ப்போம்.." என்று பதில் சவால் விட்டான் கதிர்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது, அமைதியாக நேர்வழியில் வாழ்க்கை நடத்தும் படித்தவனை சீண்டினால் அவன் எப்படித் தன்னவளைக் காத்து, பல எதிர்ப்பாளர்களை மீறி கதிரழகியை கைப்பிடிப்பான் எனப் பார்ப்போம்.

*********

பிரதிலிபி ஐடி: தீபா செண்பகம்

**********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro