அத்தியாயம் (10)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனாவின் அழகைக் கண்ட ஷக்தி ஒரு கணம் கிறங்கித் தான் போனான். ஆனால் சஞ்சனா அறியாமல் அவளது சம்மதம் பெறாமல் மேற்கொண்டு முன்னேற அவன் மனம் அவனுக்கு இடம் அளிக்கவில்லை. எப்படியாவது தன் காதலை சஞ்சனாவிடம் சொல்ல வழி தேடினான் அவன்.

மாலை மங்க ஆரம்பிக்க இருவரும் வீடு நோக்கி நடந்தனர். சஞ்சனா டெல்லியில் வளர்ந்த பெண். அவளுக்கு ஆண் நண்பர்கள் ஏராளம் இருந்தனர். நண்பர்களில் ஆண்பால் பெண்பால் என அவளொருபோதும் பிரித்து பார்த்ததில்லை. தனக்கு கிடைத்த நண்பர்களில் ஒரு சிறந்த நண்பனாக ஷக்தியை கருதினாள் அவள். ஆனால் அவள் எண்ணங்களில் மருந்துக்கும் காதல் என்பது இருக்கவில்லை!!! சில சமயம் நம் ஆழ்மனதில் இருப்பது என்னவென்று நமக்கே புரிவதில்லை.

வீட்டுக்கு சென்ற இருவரும் வாசுகி, முத்துப்பாண்டி சகிதம் குடும்பமாக அமர்ந்து இரவு உணவு உட்கொண்டனர். இரவு உணவு முடிந்ததும் இருவரும் ஒன்றாகவே பேசிச் சிரித்தவாறு மாடிப் படியேறி அவரவர் அறைக்கு செல்வது வழக்கம். அன்றும் அது போல மாடி வராந்தாவில் நின்று ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு இருவரும் அவரவர் அறைக்குள் புகுந்துக் கொண்டனர்.

சஞ்சனாவைக் கண்ட நாள் முதல் ஷக்திக்கு தூக்கம் தொலைவாகி இருந்தது. அன்று இரவு சஞ்சனாவிடம் எப்படித் தன் காதலைத் தெரிவிப்பது என்ற குழப்பதில்லேயே சென்றது அவனுக்கு. எப்பொழுது விடியும் எனக் காத்து இருந்தான் மறுபடி அவள் முகம் காண.

சஞ்சனா எப்பொழுதும் போல வெந்நீரை உடலுக்கு ஊற்றிக் கொண்டு உறங்கச் சென்றாள். கட்டிலில் விழுந்த ஒரு சில நிமிடங்களில் தூக்கம் அவளை தழுவிக் கொண்டது. டெல்லியில் இருக்கும் போது இரவு உறங்குவதற்கு தூக்க மாத்திரை உபயோகித்த பெண் பூம்பொலிலுக்கு வந்ததன் பின்னர் தலையணையில் தலை வைத்த ஒரு சில நொடிகளில் தூங்கிவிடுவது வழக்கமாய் இருந்தது. இரவு முழுவதும் விழித்திருந்தே கனவு கண்ட ஷக்தி விடிந்ததும் தெரியாமல் தூங்கி விட்டு இருந்தான். எழுந்து நேரத்தை பார்த்தவன் திடுக்கிட்டான். கடிகாரம் நேரம் காலை 9 மணி எனக் காட்டியது.

எவ்வளவு களைப்பாக வீடு திரும்பி இருந்தாலும், ஓய்வு நாட்களிலும் கூட ஷக்தி காலை 6 மணிக்கே எழுந்து விடுவது வழக்கம், அன்று 9 மணி வரை தூங்கியவன், இந்நேரம் சஞ்சனா காலை உணவை முடித்து விட்டு கிளம்பி இருப்பாளே எனத் தோன்ற அவசர அவசரமாக குளித்து முடித்து தயார் ஆகினான். ஷர்ட்டின் கையை மடித்து விட்டுக் கொண்டு வேக வேகமாக படி இறங்கியவன் பாதிப் படிகளிலேயே கண்டு கொண்டான் சாப்பாட்டு மேஜை காலியாக இருந்ததை. சஞ்சனா வந்த நாள் தொடக்கம் மூன்று வேளையும் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுவது வழக்கமாகிப் போய் இருந்தது. அந்த நேரத்தில் தான் இருவரும் அதிகமாக பேசிக் கொள்வது, ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வது.

ஆகவே அந்த நேரத்துக்காக காத்திருப்பது ஷக்திக்கு வழக்கமாகிப் போனது. சஞ்சனா காலை உணவை முடித்துக் கொண்டு மறுபடி தன் அறைக்கு சென்றிருப்பாள் எனத் தெரிந்ததும் நேரம் காலம் தெரியாமல் உறங்கியதை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டவன் நடையில் சோர்வுடன் சமையல் கட்டிற்குள் நுழைந்தான்.

ஷக்தி சமையற்கட்டிற்க்குள் நுழைந்த சமையம் வாசுகி கஷாயம் வைத்துக் கொண்டு இருந்தாள். ஷக்தியை கண்டவள்,

''என்னப்பா இவ்வளவு நேரம் தூங்கிட்ட?? உடம்புக்கு முடியலையா??'' என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

''அதுலாம் ஒன்னும் இல்லம்மா. ராத்திரி சரியா தூங்கல விடிஞ்சு எத்தனை மணிக்கு தூங்கினேன்ன்னே தெரியலை. எழுந்து பார்க்குறேன் மணி 9'' என்றான் சோர்வுடன்.

''ஒஹ்.. சரிப்பா நீ போய் அப்படி உட்காரு. நான் இதோ சாப்பாடு எடுத்துட்டு வரேன்''

ஷக்தி சென்று அமர்ந்ததும் காலை உணவை எடுத்து வந்து பரிமாறினாள் வாசுகி. பொங்கலை சட்னியில் தொட்டு வாயில் போட்டுக் கொண்டவன் தட்டை பார்த்துக் கொண்டே கேட்டான்.

''சஞ்சனா சாப்பிட்டு மாடிக்கு போயாச்சாம்மா??''

''உனக்குத் தெரியாதா?? சஞ்சனாவுக்கு ஜுரம்ப்பா. உடம்பு நெருப்பா கொதிக்கிது. பால் சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கிட்டு படுத்து இருக்கா மாடில''

அவள் நேற்று மாலை பனியில் நனைந்த வண்ணம் தோட்டத்தில் உல்லாசமாக படுத்து இருந்தது கண் முன்னே வந்து போனது ஷக்திக்கு. அதன் பின்னர் சரியாக சாப்பாடு இறங்கவில்லை அவனுக்கு. அரைகுறையாக சாப்பிட்டு முடித்து மாடிக்கு சென்றான். மாடிக்கு சென்றவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது எப்படி சஞ்சனாவின் அறைக்குள் செல்வதென்று. ஷக்தி பெண்கள் விஷயத்தில் மிகவும் யோசிப்பான். ஒரு பெண்ணின் அறைக்குள் எப்படி நுழைவது என்று புரியவில்லை அவனுக்கு. என்ன செய்வது என்று தெரியாமல் சஞ்சனாவின் அரை வாசலில் குட்டி போட்ட பூனையைப் போல நடந்தான்.

மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சஞ்சனாவின் அறைக் கதவை மெதுவாக தட்டினான். அவன் தட்டிய சத்தம் அவன் காதுக்கே கேட்கவில்லை. கையில் அழுத்தத்தை அதிகமாக கொடுத்து இம்முறை சற்று சத்தமாக தட்டினான் பதில் இல்லை. வேறு வழி இல்லை என்றதும் கதவை திறந்து கொண்டு, இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

சஞ்சனா தன்னை முழுவதுமாக சுருட்டிக் கொண்டு படுத்து இருந்தாள். போர்வைக்குள்ளே இருந்து அவளது முகம் மட்டும் எட்டிப் பார்த்தது. ஷக்தியை கண்டதும் ஈனஸ்வரத்தில் முனகினாள். ஷக்தி அவள் படுத்து இருந்த கட்டிலை நெருங்கியதும் கஷ்டப் பட்டு தன் உடலை அசைத்து இடம் செய்து கொடுத்தாள் ஷக்திக்கு அமர்வதற்க்கென.

சஞ்சனா இருந்த நிலை கண்டதும் ஷக்திக்கு எல்லாம் மறந்து போனது. சற்றும் தயக்கம் இல்லாமல் அவள் சரிசெய்து கொடுத்த இடத்தில் அவளருகே அமர்ந்து கொண்டான். தன் கையை அவள் நெற்றியிலும் கழுத்துக்கு அடியிலும் வைத்து காய்ச்சல் பார்த்தான்.

''உடம்பு ரொம்ப கொதிக்கிது. வா சஞ்சனா போய் டாக்டர்ட்ட காட்டிட்டு வரலாம். வண்டில போனால் அரை மணி நேரத்துல போயிறலாம் எழுந்திரு''

''வேண்டாம் ஷக்தி நான் மாத்திரை சாப்பிட்டேன் சரி ஆயிரும்'' வார்த்தை குழறியது அவளுக்கு.

''வெறும் காய்ச்சல் தலைவலின்னா பரவால்லைடா. உன்னை தொட்டுப் பார்க்கவே பயமா இருக்கு அவ்ளோ கொதிக்கிது. உனக்கு இந்த கிளைமேட் ஒத்துக்கலைன்னு நெனைக்கிறேன். அடம் புடிக்காம வா போய் சீக்கிரம் டாக்டரை பார்த்துட்டு அவந்துரலாம்.''

தலையை ஆட்டி வேண்டாம் என மறுத்தவள் சக்தியின் கையை தன் போர்வைக்குள் இழுத்து தன் கழுத்துக்கு கீழே வைத்து கண்கள் இரண்டை மூடிக் கொண்டாள். ஷக்திக்கு அப்படியே அவளை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும் போல கைகள் பரபரத்தது. தன்னை அடக்கிக் கொண்டான்.

''சஞ்சனா.......... நான் சொன்னா கேட்க்க மாட்டியா நீ??''

இல்லை என்பதற்கு அறிகுறியாய் தலையை மட்டும் ஆட்டினாள் அவள். ஷக்திக்கு அவள் செய்கைகள் ஒவ்வொன்றும் சிரிப்பாகவும் இருந்தது. அவளது நிலை கண்டு மனதுக்கு கஷ்டமாகவும் இருந்தது. அன்பாக சொன்னால் அடம் பிடிப்பாள் என்று கோபத்தை காட்டினான் ஷக்தி.

''நான் சொன்னால் நீ கேட்க்க மாட்ட நான் கிளம்புறேன்'' என எழுந்திருக்க முயற்சித்தான். ஆனால் அவன் கையோ இன்னும் சஞ்சனாவினிடதில் இருந்தது.

கட்டிலை விட்டு எழுந்திருந்தவனை ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள் அவள். அதற்க்கு மேல் அவள் மீது கோபம் கொண்டது போல் நடிக்கக் கூட முடியவில்லை அவனால். மறுபடி அமர்ந்து கொண்டான் அவளருகே.

''சொல்லு உனக்கு என்ன பண்ணுது?? என்ன வேணும்உனக்கு??'' அவள் கண்களைப் பார்த்து கேட்டான் அவன்.

''எனக்கு உடம்புக்கு முடியலைனா எங்கம்மா என்கூடவே இருப்பாங்க. என் பக்கத்துலயே இருக்கியா நீ??'' தத்தித் தத்தி கேட்டாள் அவள்.

சஞ்சனா வாயால் அதை சொல்லி கேட்டதும் ஷக்தி என்ன செய்து இருப்பான் என்பதை சொல்லவா வேண்டும்?!?! அதன் பின் அந்த இடத்தை விட்டு அசையவில்லை ஷக்தி. சஞ்சனா உறங்கும் வரை அவள் அருகிலேயே அமர்ந்து இருந்தான்.

மாத்திரை போட்டு இருந்ததினால் சஞ்சனா சிறிது நேரத்திலேயே தூங்கிப் போனாள். சஞ்சனா நன்றாக உறங்கி விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு தன் கையை அவள் கைக்குள் இருந்து மெதுவாக பிரித்தெடுத்துக் கொண்டான். அவள் தலையில் கை படாத வண்ணம் மெதுவாக அவள் தலை முடிகளைத் தடவிக் கொடுத்தான்.

அவள் உறங்குவதையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் வசதியாக உறங்கும் படியாக கட்டிலில் இருந்து எழுந்து ஒரு நாற்காலியை அருகில் போட்டு அமர்ந்து கொண்டான். அன்றைய தினத்தில் அவனுக்கு வந்திருந்த மெயில்களை போனில் பார்த்து அவற்றுக்கு பதிலளித்தான்.

சஞ்சனா எழுந்து கொண்டதன் பின்னர் இடைக்கிடை வாசுகி வந்து அவளுக்கு நீராகாரங்கள் புகட்டினாள். சஞ்சனா கூறியிருந்த 2 வகை மாத்திரைகளை சின்னா மெடிக்கல் ஷாப் சென்று கொண்டு வந்து கொடுத்தான். சஞ்சனாவை கைத்தாங்கலாக பிடித்து எழுப்பி அவள் மருந்து உட்கொள்ள ஷக்தி உதவி செய்தான். மொத்தத்தில் அந்த குடும்பமே சஞ்சனாவை தங்கள் கைகளில் வைத்து தாங்கியது.

விஷயம் கேள்விப் பட்ட முத்துப் பாண்டி ஒரு படி மேலே சென்று, மாலை டாக்டரை வீட்டுக்கே அழைத்துக் கொண்டு வந்து இருந்தார். சஞ்சனாவை பரிசோதித்த டாக்டர் இன்னும் சில மருந்துகளைக் கொடுத்து விட்டு நாளை காலை ஜுரம் குறைந்து விடும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்று இரவு வாசுகி சஞ்சனாவுக்கு துணையாக கூட படுத்துக் கொண்டாள்.

மூன்று வேளையும் உட்கொண்ட மருந்தும், அந்த குடும்பத்தின் கவனிப்புமாக மறுநாள் சஞ்சனாவுக்கு ஜுரம் பாதிக்கு பாதி குறைந்து இருந்தது. அன்றும் காலை உணவை முடித்துக் கொண்ட ஷக்தி நேராக சஞ்சனாவின் அறைக்கு சென்று அவளுக்குத் துணையாக இருந்தான். அன்று சஞ்சனா அதிகம் தூங்கவில்லை. கட்டிலில் சாய்ந்து இருந்த வண்ணம் ஷக்தியோடு பேசிக் கொண்டே பொழுதைக் கழித்தாள்.

காய்ச்சலில் படுத்துக் கொண்ட இரண்டு தினங்களில் ஷக்தியின் மீது தனக்கு ஒரு உரிமை வந்து இருப்பதைப் போல உணர்ந்தாள் சஞ்சனா. ஷக்தி எனக்கு பசிக்கிது அத்தையை சாப்பாடு கொண்டு வரச் சொல்றியா?? ஷக்தி என்னை கொஞ்சம் எழுப்பி விடறியா?? என உரிமையாக கேட்கத் தொடங்கி இருந்தாள் அவள்.

ஷக்தியும் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவளைத் தொட்டுப் பேச ஆரம்பித்து இருந்தான். களைந்து போயிருந்த அவள் கூந்தலை அவள் கேட்காமலேயே உயர்த்திப் பிடித்து கட்டி விட்டான். அவள் கட்டிலில் சாய்ந்து கொண்டதும் போர்வையால் நன்றாக போர்த்தி விட்டான். தன் காதலையும் தாண்டி மெய்யான அக்கறையுடன் அவளை கவனித்துக் கொண்டான் ஷக்தி.

இருவரும் மனம் திறந்து பேசிக் கொண்டனர். தன் குடும்பம் பற்றியும் தன் குழந்தை பருவம் பற்றியும் சஞ்சனா ஷக்திக்கு கூறினாள். தன் சிறுவயது சம்பவங்களைக் கூறும் போது சிறுமியாகவே மாறிப்போனாள் சஞ்சனா.
ஷக்தி தன் பிசினெஸ் பற்றி சஞ்சனாவோடு பகிர்ந்து கொண்டான். தன் இளமைப் பருவம் பற்றியும் தன் நண்பர்கள் பற்றியும் கூறி கேலி பேசினான்.

இவர்களுக்குள் நடப்பவற்றை தள்ளி நின்று பார்த்து ரசித்தனர் வாசுகியும், முத்துப்பாண்டியும். ஆனால் கண்டும் காணாதது போல இருந்தனர். அவர்கள் இருவரது சுதந்திரத்திலோ தனிமையிலோ அந்த வீட்டில் யாருமே தலையிடவில்லை. ஆனால் சுந்தரபாண்டியனின் வீட்டில் வேறு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டு இருந்தது.

பூம்பொழில் கடை வீதியின் குடியிருப்புப் பகுதியில் அமைந்து இருந்தன அங்கு கடை வைத்து இருப்போரின் பெரும்பாலான வீடுகள். அங்கிருந்த 10 வீடுகளில் கம்பீரமாக உயர்ந்து நின்றது சுந்தரபாண்டியனின் வீடு. கிரனைட் பதித்த சுவர்களும் மொசைக் பதித்த தரையுமாக பளபளத்தது அந்த வீடு.

சாப்பாட்டு மேஜை ஏழு வகை உணவுகளால் நிரம்பி இருக்க அவற்றை ஒரு வழிப் பண்ணிக் கொண்டு இருந்தார் சுந்தரம். அவரது அருகில் அவரது அடுத்த கட்டளைக்காக செவிமடுத்தவாறு நின்று கொண்டு இருந்தாள் அவரது தர்ம பத்தினி.

''சீமைல இருந்து வந்த டாக்டர் அம்மாவைப் பார்க்க வண்டி கட்டி போயிருந்திங்களே, என்ன சொல்றா உன் அக்கா பெத்த ரத்தினம்??'' சாப்பாட்டுக்கு நடுவே நக்கலாகக் கேட்டார் சுந்தரம்.

''அவள் என்னத்தை சொல்றது?? ரொம்ப பயந்த சுபாவம். வாயைத் தெறந்து பேசறதுக்கே பயப்படரா பாவம்'' என்று சொல்லி மழுப்பினாள் கனகா.

சுந்தரபாண்டிக்கு பணம் பண்ணுவதில் ஆர்வம் அதிகம். வியாபார மூளை அவருக்கு. எதையுமே இலாப நோக்கில் பார்த்து பழகியிருந்தார். முத்துவேல் பாண்டியனின் குடும்பம் போல பரம்பரைப் பணக்காரர் அல்ல. ஆகவே பணத்தின் அருமை அறிந்தவர். பணத்தைப் பெருக்குவதில் மாத்திரமே குறியாக இருந்தார்.

முத்துப்பாண்டி குடும்பம் ஊரில் பெரிய குடும்பம். கணக்கிட முடியாத சொத்து. சொத்து வெளியே போகாமல் இருக்க தன் பெண்ணை எப்படியாவது ஷக்திக்கு பேசி முடித்து விட வேண்டும் என்பது அவரது இலட்சியமாக இருந்தது. ஆனால் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். சத்தம் போடாமல் காய் நகர்த்தும் வித்தை தெரிந்து இருந்தது அந்த வியாபாரிக்கு.

கனகாவின் வாயெல்லாம் வீட்டுக்கு வெளியில் தான். புருஷன் முன்னாள் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவாள். அத்தனைக்கும் சுந்தரபாண்டி சத்தம் போட்டுக் கூட பேச மாட்டார். ஆனால் அவரது சரி பாதி ஆயிற்றே அவர் அமைதியாக இருந்த போதிலும் அவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதை அவள் அறிவாள். இதைத் தான் பாம்பின் கால் பாம்பறியும் என்று சொன்னார்கள் போலும்!!

சஞ்சனாவின் வருகைப் பற்றி அறிந்ததும் சுந்தரத்தின் அனுமதியுடன் தான் கனகா அங்கு சென்று இருந்தாள். ஆனால் இலகுவில் பெண்களோடு பேசாத ஷக்தி சஞ்சனாவோடு பேசிச் சிரித்தவாறு வந்ததைக் கண்டதும் அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. சஞ்சனாவின் அழகும் அந்தஸ்தும் அவள் பயத்தை அதிகரித்து இருந்தது.

அபிராமிக்கு ஷக்தியிடம் எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதை விட சஞ்சனாவுக்கு அவனிடத்தில் உரிமை அதிகம். ஷக்திக்கு அபி என்பது கனகாவின் குடும்பத்து பல காலக் கனவு. ''வெண்ணை திரண்டு வர நேரத்துல பானையை உடைச்சதப் போல நல்ல நேரத்திலுல வந்து சேர்ந்து இருக்கு பாரு சனியன்'' என்று சஞ்சனாவை சபித்தாள் அவள்.

சஞ்சனா மற்றும் ஷக்தியின் நெருக்கத்தை பற்றி கணவனிடம் கூறுவது ஆபத்து. இந்த சிக்கலை நாமாகத் தான் மெதுவாக சரி செய்ய வேண்டும் என எண்ணியே சுந்தரம் சஞ்சனாவைப் பற்றி கேட்ட பொழுது அப்படி சொல்லி வைத்தாள். ஷக்தியும் சஞ்சனாவும் ஜோடி போட்டு கடைக்கு சென்றிருந்ததை அறியாதவள்.

''ஷக்தி கூட அந்த பொண்ணு நேத்து நம்ம கடைக்கு வந்து இருந்திச்சு'' மெதுவாக ஆரம்பித்தார் சுந்தரம்.

அதைக் கேட்ட கனகாவுக்கு ஒஹ்..வென்றிருந்தது. ஆச்சியும் கூட ஒரு மூலையில் அமர்ந்து கொட்டைப்பாக்கை இடித்தவாரு தன் காதை சுந்தரத்தின் புறம் தீட்டினாள்.

சுந்தரம் தொடர்ந்தார்,

''அது டெல்லில வளர்ந்த பொண்ணு ரொம்ப தாராளமா நடந்துக்குது. எனக்கு என்னமோ நமக்கு முதலுக்கே நஷ்டமாகிடுமோன்னு தோணுது'' அதிலும் வியாபாரம் பேசினார் அவர்.

''தாராளமா நடந்துக்கிட்டாலாம்ல தாராளமா.. என்னத்தை பண்ணி வச்சா அந்த பொண்ணு இவர் கண் முன்னாடி'' அதை தெரிந்து கொள்ளவும் கனகாவுக்கு ஆர்வமாக இருந்தது. ஆனால் அதை கேட்டு தெரிந்துக் கொள்ளவும் பயமாக இருந்தது. கணவன் கூறுவதையே மிக சிரத்தையாக கேட்டுக் கொண்டும் தலை ஆட்டிக் கொண்டும் இருந்தாள் அவள்.

''இன்னிக்கி ஐயாவை பார்த்தேன். ரெண்டு நாள்ல அந்த பொண்ணு ஆஸ்பத்திரி தொடக்க விழாவாம். அந்த பொண்ணு ஆஸ்பத்திரி ஆரம்பிச்சா இந்த ஷக்தி பயல் அங்கன தான் சுத்திக்கிட்டு இருப்பான். அதுனால அபியும் படிச்சிட்டு வீட்டோட தானே இருக்கு அந்த டாக்டர் பொண்ணுக்கு உதவியா அபியை வேணா அனுப்பி வைக்கட்டான்னு ஐயாவைக் கேட்டேன்.

அதுக்கென்ன தாராளமா அனுப்பி வைப்பான்னு சொன்னாரு. அபிகிட்ட பக்குவமா எடுத்து சொல்லி அவளை அங்க அனுப்பி வைக்கிற வழியப் பாரு'' என்று நீளமாக பேசி முடித்தவர் அவள் பதிலுக்கு காத்திராமல் எழுந்து கை அலம்பச் சென்றார்.

சுந்தரம் சொன்ன யோசனை கனகாவுக்கும் ஆச்சிக்கும் மிகச் சரியாகப் பட்டது. சஞ்சனா டாக்டருக்கு படித்து இருந்தது அவர்கள் இருவருக்கும் பொறாமையாகவே இருந்தது!! அபியும் சஞ்சனாவோடு கூட அந்த ஆஸ்பத்திரியில் பணி புரியப் போகிறாள் என்றதும் தங்கள் மகளும் டாக்டர் ஆகிவிட்டாள் என எண்ணிக் கொண்டனர் அந்த படிப்பறிவில்லாத இரு பெண்கள்.

அபியின் அறைக்குள் நுழைந்த கனகாவும் ஆச்சியும் மெதுவாக விஷயத்தை அபியின் காதில் போட்டு வைத்தனர்.

''அம்மாடி அபி, இன்னிக்கி ஐயா போன் பண்ணி இருந்தாரும்மா. இன்னும் 2 நாள்ல அந்த சஞ்சனா பொண்ணோட ஆஸ்பத்திரி தொடக்க விழாவாம்'' என்று ஆரம்பித்தாள் கனகா.

''அட அதுக்கிடையில வேலை எல்லாம் ஆயிடிச்சா??'' என நிஜமாக சந்தோஷப் பட்டாள் அபி.

''ஆகாதா பின்ன?? உன் மச்சான் தான் சஞ்சனா காலால சொன்ன வேலைய தலையால செஞ்சு முடிக்கிறான்ல..'' இது கனகா.

''நல்ல காரியத்துக்காக தானேம்மா அவ்ரு ஓடறாரு. அதுக்கு ஏன் நீ இப்படி சலிச்சுக்கற??''

''நீ இப்படியே கிறுக்குத் தனமா பேசிட்டு இருடி. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதையா அந்த சிறுக்கி சஞ்சனா உன் மச்சான தூக்கிட்டு போகப் போறா'' கடுகடுத்தாள் கனகா.

''என்னம்மா நீ என்னென்னமோ பேசுற?? அப்படிலாம் ஒன்னும் நடக்காது. எனக்கு ஷக்தி, அவருக்கு நான்னு ஏற்கனவே பேசி முடிச்சது தானே??''

''சரிம்மா உன் வார்த்தை பலிக்கட்டும். அந்த பொண்ணுக்கு உதவியா நீ ஆஸ்பத்திரிக்கு வர முடியுமான்னு ஐயா கேட்கறாரு. நீயும் வீட்ல சும்மா தானே இருக்க போயிட்டு வரியா??'' என மெதுவாக விஷயத்தை அபியின் காதுக்குப் போட்டாள் கிழவி.

அபிக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. அபியை பள்ளிக் கூடத்துக்கு கூட அனுப்ப மறுப்பு சொன்ன ஆச்சியா பேசுவது என்ற ஆச்சர்யம் ஒரு புறம். சஞ்சனாவோடு நாளெல்லாம் பேசிக் கொண்டு அவளிடம் கொஞ்சம் கொஞ்சம் வேலையும் கற்றுக் கொள்ளலாமே என்ற ஆர்வம் ஒரு புறம்.

''நான் போயிட்டு வாரேன் ஆச்சி. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு'' என்றாள் வெள்ளையாக.

''போயிட்டு அந்த சஞ்சனா முன்னாடி கையை கட்டிக்கிட்டு நிக்காம பார்த்து பதவிசா நடந்துக்கடி. உன் ஷக்தி மச்சான் ஒன்னும் வாயில கையை வச்சா சப்பத் தெரியாத பாப்பா கெடையாது. அடி மேல அடி வச்சா அம்மியும் நகரும். அம்மியை அவ நகர்த்தரதுக்கு முன்னாடி நீ முந்திக்க. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்.'' என்று சொல்லி முடித்தாள் கனகா.

தன் தாயின் கொச்சை வார்த்தைகளுக்கு பழக்கப் பட்டு இருந்த அபி, தன் வீட்டை விட்டு முதன் முறையாக அவளுக்கு பறந்து செல்ல அனுமதி வழங்கப் பட்டதை எண்ணி அமைதியாக தன் தாயின் சொல்லைக் கேட்டுக் கொண்டாள். அவளும், சஞ்சனாவும், ஷக்தியும் பேச்சும் சிரிப்புமாக பொழுதைக் கழிப்பதை போல கனவு காணத் தொடங்கினாள்.

ஒருவாறாக நர்சிங் ஹோம் ஆரம்பிக்கும் அந்த நாளும் வந்தது. காலையில் இருந்து ஒரே பரபரப்பாக இருந்தாள் சஞ்சனா. ஷக்தி அவள் கண்ணில் கூட தட்டுப் படவில்லை. சஞ்சனாவுக்கு மேல் பிஸியாக இருந்தான் அவன்.

காலை 10:10 க்கு முத்துப்பாண்டி நர்சிங் ஹோமை திறந்து வைப்பதாக குறிக்கப் பட்டு இருந்தது. காலை 9:45 அளவில் சஞ்சனாவும் வாசுகியும் சின்னாவும் முத்துப் பாண்டியுடன் காரில் நர்சிங் ஹோமை நோக்கி சென்றனர். சஞ்சனா ஷக்தியை தொலை பேசியில் பிடிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தாள். ஷக்தி போனை தூக்கவில்லை.

வண்டி நர்சிங் ஹோமை சென்றடைய வண்டியில் இருந்து அனைவரும் இறங்கிக் கொண்டனர். புதிதாக சுண்ணாம்பு பூசப்பட்டு பளிச்சென்று இருந்தது நர்சிங் ஹோம். இனி பூம்பொழிலில் பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும் சமர்ப்பணமாக பூந்தளிர் மருத்துவமனை என்று நர்சிங் ஹோமுக்கு பேர் சூட்டி பேர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. முத்துப்பாண்டி மற்றும் சஞ்சனாவுக்காக அந்த பகுதி அமைச்சரும், சில பிரபலங்களும் வந்து காத்திருந்தனர்.

வருகை தந்து இருந்த பிரபலங்களுக்கு நடுவே ஒருவாராக ஷக்தியை தேடிக் கண்டு கொண்டால் சஞ்சனா. ஆனால் சஞ்சனாவைக் கண்ட ஷக்தி தான் மதி மயங்கிப் போனான். ஷக்தியின் காதல் தேவதை முதன் முறையாக அன்று புடவையில் காட்சி கொடுத்தாள்.

சாம்பல் வர்ண காட்டன் புடவை அணிந்து இருந்தாள். அதில் ஜானளவு சிவப்பு ஜரிகை பார்டர் ஓடியது. அதே சிவப்பில் மேட்ச்சிங் ஜாக்கெட் அணிந்து இருந்தாள். கையில் டாக்டர் கோட்டும் ஸ்டெதஸ்கோப்பும் வைத்து இருந்தாள். ஷக்தி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்க, இருவரும் கண்களால் பேசிக் கொண்டனர்.

மருத்துவமனை திறப்புவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. சுந்தரத்தின் உறவில் ஒரு துக்கம் நடந்திருக்க சுந்தரம் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். சுந்தரத்தின் குடும்பத்தின் சார்பாக எவரும் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. திறப்பு விழாவுக்கு வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக திரும்பி செல்ல ஊர் மக்கள் வருகை தர ஆரம்பித்தனர். ஊரில் உள்ள கர்பிணிப் பெண்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப் பட போவதாக முன்னறிவித்து இருந்ததை ஒட்டி ஊரில் உள்ள மொத்த கர்பிணிப் பெண்களும் தங்கள் கணவன் சகிதாமோ, மாமியார் சகிதாமோ தங்கள் வயிற்றையும் சுமந்து கொண்டு வருகை தந்து இருந்தனர்.

தன்னை அறிமுகம் செய்து கொண்ட சஞ்சனா அன்று வருகை தந்திருந்த கர்பிணிப் பெண்களையும் பேர் வாரியாக அறிந்து கொண்டு அவர்களைப் பற்றிய விபரங்களை பட்டியலிட்டுக் கொண்டாள். பின்னர் பிரசவகாலத்தில் பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அந்த மலை ஜாதிப் பெண்களுக்கு வழங்கினாள்.

1 - 6 மாத கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் மாதம் ஒரு முறையும், 7 - 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் வாரம் ஒரு முறையும் இலவச பரிசோதனைக்கு கட்டாயமாக வர வேண்டும் என வலியுறுத்தினால்.

தினமும் இரவு உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளுமாறு கூறி வந்திருந்த அனைவருக்கும் போலிக் அமில மாத்திரைகளையும் இன்னும் சில கால்சியம், அயர்ன் மாத்திரைகளையும் பங்கிட்டுக் கொடுத்தாள். அவசர உதவிக்காக எந்த நேரமும் அவளை அணுகலாம் எனவும் நர்சிங் ஹோமில் அவள் இல்லாத நேரங்களில் அவளை துறை பங்களாவில் கண்டுகொள்ளலாம் எனவும் கூறினாள்.

எந்த வித தற்பெருமையும் இல்லாமால் எந்தவொரு இலாப நோக்கும் இல்லாமல் தங்கள் நலனுக்காகவே சிந்தித்து, எப்பொழுதும் முகத்தில் புன்னகையை பூசிக் கொண்டு அனைவரையும் அன்பாக விசாரிக்கும் சஞ்சனாவை அங்கு வருகை தந்து இருந்த அனைவருக்கும் பிடித்து இருந்தது. வந்திருந்த அனைத்து பெண்களையும் வயது வித்தியாசம் பாராமள் அவள் அம்மா என்று அழைத்த அழைப்பில் அந்த பெண்கள் எல்லோரும் உருகி விட்டிருந்தனர்.

ஆறு குழந்தை பெற்றவள் போல் அங்கிருந்த அனைத்து பெண்களுக்கும் பேறுகால அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்த சஞ்சனாவை தள்ளி நின்று பார்த்து ரசித்துக்கொண்டு இருந்த ஷக்தி அந்த ஹிந்தி பாடலைக் கேட்டு திரும்பினான்.

Hum tere bin ab reh nahi sakte
Tere bina kya wajood mera
Tujse juda gar ho jayenge
Toh khud se hi ho jaayenge judaa

அது ஒரு கையடக்கத் தொலைபேசியின் மணியோசை. திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த யாரோ தான் செல்போனை தவற விட்டு இருக்க வேண்டும் என்று எண்ணியவன் பாடல் வந்த திசையில் தன் பார்வையை வீசினான்.

Kyunki tum hi ho
Ab tum hi ho
Zindagi ab tum hi ho
Chain bhi, mera dard bhi
Meri aashiqui ab tum hi ho

திறப்பு விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு குளிர்பானம் ஆயத்தப் படுத்தப் பட்டிருந்த மேஜையின் கீழ் இருந்தது அந்த ஐபோன். ஷக்தி அதை கண்டெடுத்த போது தொலைபேசிக்கு வந்த அந்த அழைப்பு நின்று போய் இருந்தது.

அந்த பெரிய ஃபோனின் பெரிய திரையில் ஹிந்தி நடிகனை ஒத்த வாலிபன் ஒருவன் சஞ்சனாவின் கன்னங்களில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்திருக்க சஞ்சனா அதை கண்மூடி ரசித்துக் கொண்டு இருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro