அத்தியாயம் (11)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனா நம்மில் பலரைப் போல எந்நேரமும் ஃபோனை கைக்குள்ளேயே வைத்துக் கொண்டு சுற்றும் ரகம் அல்ல. சஞ்சனாவின் ஃபோன் முக்கால் வாசி நேரம் அவள் தலையணைக்கு அடியில் தான் இருக்கும்.

ஆகவே சஞ்சனா என்ன மாடல் ஃபோன் வைத்து இருக்கிறாள் என்று ஷக்தி சரியாக கவனித்ததில்லை அந்த ஃபோனை தரையில் இருந்து கண்டெடுத்த போதும் கூட அது சஞ்சனாவுடையதாக இருக்கும் என அவன் கொஞ்சம் கூட நினைத்து இருக்கவில்லை. ஆனால் அந்த ஃபோனின் டிஸ்ப்ளேயில் இருந்த சஞ்சனாவின் ஃபோட்டோ அது அவளுடைய ஃபோன் தான் என்பதுடன், அவளோட கூட இருந்த ஆண் அவளுக்கு என்ன உறவாக இருக்கும் என்பதையும் ஷக்திக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

சஞ்சனாவின் முகத்தில் அவன் இன்று வரை கண்டிராத ஒரு சந்தோஷத்தினை அந்த ஃபோட்டோவின் வழியாக அவன் கண்டான். ஷக்தியால் அவன் கண்களையே நம்ப முடியாது இருக்க, கண் இமைக்காமல் அந்த ஃபோட்டோவையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது காதல் முளையிலேயே கருகுவதை அவன் மூளை உணர்ந்தது, இதயம் அதை ஏற்க மறுத்தது. சஞ்சனாவோடு கூட இருந்த ஆண், அவளது ஆண் தோழனாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அது சிந்தித்துக் கொண்டு இருந்தது.

அவனது மூளைக்கும் இதயத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில் அவனுக்கு கண்ணைக் கரித்தது. ஷக்திக்கு அவன் புறந்தலை வலிப்பதைப் போல இருந்தது. தன் இரு கைகளாலும் அவன் தன் தலையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அவன் பார்த்துப் பார்த்து ஆசைக் கொண்ட பெண் சஞ்சனா. அவனுக்குள் ஒளிந்து இருந்த காதலனை வெளியே கொண்டு வந்தவள் சஞ்சனா. அவன் முதன் முதலாகக் கண்ட காதல் கனவுகளின் கதாநாயகி சஞ்சனா.
அவன் தன் தாய்க்கு அடுத்த படியாக நினைத்து இருந்த பெண்ணும், தன் தாயின் ஸ்தானத்தை கொடுக்க நினைத்த பெண்ணும் சஞ்சனா... சஞ்சனா.... சஞ்சனா....

இப்பொழுது அவன் இதயத்துக்குள் சோகத்தையும் மீறி ஒரு ஆத்திரம் வந்து அமர்ந்து கொண்டது. இவ்வளவு நாளாக அவனோடு ஒட்டி ஒட்டி பழகியவள், அவனைப் பற்றி முற்றும் முழுதுமாக கேட்டு அறிந்து கொண்டவள், அவனிடம் மட்டும் பொய்யாக நடந்து கொண்டு இருக்கிறாள். அவளைப் பற்றிய உண்மைகளை முற்றிலுமாக மறைத்து அவனை முட்டாள் ஆக்கி இருக்கிறாள். இது ஷக்தி தன் வாழ்வில் சந்தித்த முதல் தோல்வி. பெரும் தோல்வியும் கூட. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்பதும் கூட அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அவன் அந்த ஃபோனை எந்த மேஜையின் கீழிருந்து கண்டெடுத்தானோ அதே மேஜையின் மேல் அதை விட்டு விட்டு, ஷக்தி அந்த இடத்தை விட்டு கிளம்பினான். வண்டியில் ஏறி அதை வேகமாக ரிவர்ஸ் செய்து கொண்டு வண்டியை அசுர வேகத்தில் கிளப்பிக் கொண்டு சென்றான் ஷக்தி.

ஷக்தி தன் வண்டியை ஒரு குழந்தைப் போல பார்த்துக் கொள்வான். வண்டியில் ஒரு தூசு, அழுக்கு பட விட மாட்டான். தன் வண்டியில் வேறு யாரும் கை வைக்க அனுமதிக்க மாட்டான். வண்டியை கழுவும் வேலையை கூட அவனே தான் செய்வான். சில சமயங்களில் தடவியும் கொடுப்பான். ஒரு போதும் தன் கோபத்தை வண்டியின் மீது காட்டியதும் இல்லை, வண்டியை இவ்வளவு வேகமாக இயக்கியதும் இல்லை. ஆனால் இன்று நர்சிங் ஹோமில் வேகம் எடுத்தவன் அன்று ரோட்டைப் பார்த்து வண்டியை செலுத்தவே இல்லை. அவன் கண்களுக்குள் இன்னுமும் அந்த ஃபோட்டோ தான் இருந்தது. ஏதோ அனுமானத்தில் ஒரு வழியாக தொழிற்சாலையை சென்றடைந்தவன் வண்டியை ஒரு பெரிய கருங்கல் பாறையின் மீது விட்டான்.

பூம்பொழில் தேயிலை தொழிற்சாலையின் இரு புறமும் தேயிலை தோட்டங்களால் சூழப் பட்டு காணப் பட்டது. தேயிலை தொழிற்சாலைக்கு பின் புறம் பெரிய பெரிய பாறைகளாலும் புதர்களாலும் ஆன காடு. அந்த தொழிற்சாலையில் கார் பார்க் வசதி கிடையாது. வண்டி வைத்து இருப்போர் அனைவரும் தொழிற்சாலையின் பின் புறம் இருந்த இடத்தில் தங்கள் வண்டிகளை நிறுத்துவது வழக்கம். ஷக்தி அவன் வண்டியை வழமையாக நிறுத்தும் இடத்தில் தான் இன்றும் நிறுத்தினான். ஆனால் அவன் வண்டியை ஓட்டி வந்த வேகம், ரிவர்ஸ் செய்த வேகம் வண்டியின் பின் புறம் அங்கு இருந்த ஒரு பெரிய கருங்கல் பாறையின் மீது முட்டி நின்றது. வண்டி சற்று மேலெழுந்து கீழே வந்ததும் தான் ஷக்தி நிதானத்துக்கு வந்து நடந்த அசம்பாவிதத்தை உணர்ந்தான்.

வண்டிக்கு அடி பட்டு விட்டது என்று அவனுக்கு புரிந்த மறு கணம் அவன் வண்டியை நிறுத்தி விட்டு வேக வேகமாக இறங்கி வண்டியின் பின்னால் சென்று பார்த்தான். அந்த ஜீப் வண்டியின் பின் புறத்தில் ஒரு மேலதிக வண்டிச் சக்கரம் பொருத்தப் பட்டு இருக்கும். அது உடைந்து தொங்கிக் கொண்டு இருந்தது.
அது தவிர வண்டியின் பின் புறக் கதவும் கூட இடி பட்டு காணப் பட்டது. ஷக்தி மனம் உடைந்து போனான். அடி மேல் அடியை தாங்கும் வலிமை அந்நேரம் அவன் இதயத்துக்கு இருக்கவில்லை. சோர்ந்து போய் வண்டியின் மீது சாய்ந்து கொண்டான்.

வண்டி பாறையின் மீது மோதிய சத்தம் கேட்டு அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த சில பெண்களும், தொழிற்சாலைக்கு வெளியே இருந்த சில ஊழியர்களும் ஓடி வந்தனர். தனக்கு எந்த அடியும் படவில்லை, வண்டிக்கு தான் சிறிய சேதம் என அதை அவர்களுக்கு உறுதிப்படுத்தி அவர்கள் அனைவரையும் அமைதிப் படுத்தி அனுப்பி வைத்தான் ஷக்தி.

பின்னர் சிறிது நேரம் கண்களை மூடி, தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஒரு பெரிய மூச்சை இழுத்து வெளியே விட்டு விட்டு வண்டியை பழுது பார்ப்பதற்கென டவுனுக்கு எடுத்து சென்றான்.
தொழிற்சாலை இயந்திரங்களினால் உண்டாகும் இரைச்சலினால் ஷக்தி வண்டியை பாறையின் மீது மோதிய போது உண்டான சத்தம் தொழிற்சாலைக்கு உள்ளே இருந்தவர்களுக்கு கேட்கவில்லை. ஆனால் ஊழியர்கள் வாய்க்கு வாய் போன விஷயம் கடைசியாக முத்துப் பாண்டியின் காதுக்கும் போனது.
ஷக்திக்கு எந்த அடியும் படவில்லை என்று கண்ணால் கண்டவர்கள் கூறிய வார்த்தைகளில் திருப்தி அடைந்தவர், ஷக்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஷக்தி தன் வாயாலேயே அவனுக்கு ஒன்றும் இல்லை என சொல்லிக் கேட்ட பின்னர் தான் அவரால் இயல்பாக இருக்க முடிந்தது. அவர் மனதில் நினைத்ததையே ஷக்தியும் அவரிடத்தில் கூறி இருந்தான்.
வாசுகியிடம் எதையும் தெரிவிக்க வேண்டாம் எனவும், விஷயம் கேள்விப் பட்டால் தன் தாயார் வீணாக கலவரம் அடைந்து இரத்த அழுத்தத்தை கூட்டிக் கொள்வாள் எனவும் தன் தந்தையிடம் வேண்டிக் கொண்டான் ஷக்தி.

சஞ்சனா மனதில் எந்த சலனமும் இல்லாமல் தனது நர்சிங் ஹோமுக்கு வருகை தந்து இருந்த கர்பிணிப் பெண்களோடு பேசிக் கொண்டு இருந்தாள். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவள் நேசிக்கும் தொழிலை அவள் கனவு கண்ட பிரகாரம் நிறைவேற்றிக் கொள்ள கிடைத்தது அவளுக்கு அளவிட முடியாத ஆனந்தத்தை கொடுத்து இருந்தது. அவளது கனவு சாத்தியம் ஆவதற்கு உறுதுணையாக நின்ற ஷக்தியை அவள் மனதார நினைத்துக் கொண்டாள்.

வயிற்றில் ஒன்றும் இடுப்பில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாக குழந்தைகளுக்கு தாயான ஒரு மலை ஜாதிப் பெண்ணுக்கு அவள் இடுப்பில் இருந்த குழந்தையை வாங்கி தன் மடி மீது அமர்த்திக் கொண்டு குடும்பக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை எடுத்து சொல்லிக் கொண்டு இருந்தாள் சஞ்சனா. அவள் தன் முகத்தில் எந்த உணர்சியையும் காட்டாமல் அந்த பெண்ணின் கண்களை நேராகப் பார்த்து பேசிக் கொண்டு இருக்க, இவ்வளவு அந்தரங்கத்தை யாரிடமும் மனம் விட்டு பேசியறியாத அந்த பெண் தான் ஏகத்துக்கும் வெட்கப்பட்டுப் போனாள்.

வண்டி வேகமாக ரிவர்ஸ் செய்யப் படும் சத்தம் கேட்டதும் சஞ்சனாவும் அந்த பெண்ணும் ஒரே நேரத்தில் வாசலை திரும்பி பார்த்தனர். ஷக்தி தான் அவ்வளவு வேகமாக வண்டியை கிளப்பிக் கொண்டு இருந்தான். சஞ்சனா தன்னையும் அறியாமல் அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து குழந்தையையும் தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி ஓடிச் சென்றாள். அனால் அதற்குள் ஷக்தி வண்டியை கிளப்பி புறப்பட்டு இருந்தான்.
சஞ்சனாவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எதற்கு இந்த ஷக்தி தன்னிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் இவ்வளவு வேகமாக வண்டியை கிளப்பிக் கொண்டு செல்கிறான் என்று. ஆனால் எதோ சரியில்லை என்பது மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது. சஞ்சனா ஷக்தியை அறிந்த வரை அவன் மிகவும் நிதானமானவன், எதற்கும் பதறுகிறவன் அல்ல. அவன் இவ்வளவு வேகமாக கிளம்பி செல்கிறான் என்றால் யாருக்கேனும் ஆபத்தோ என்று அவள் மனம் படபடத்தது.

சரி ஃபோன் செய்து பார்க்கலாம் என்று நினைத்த மாத்திரம், அங்கு இருந்த மேஜையின் மேல் இருந்த தனது ஃபோனை கண்டாள். கண்டதும் அதை எடுத்து ஷக்தியின் எண்ணை அழுத்தினாள். அவள் இருந்த பரபரப்பில் அவளது செல் ஃபோன் எப்படி அந்த மேஜையின் மீது வந்து இருக்கும் என்பதையோ, அதில் இருக்கும் ஃபோட்டோவை ஷக்தி பார்த்திருக்கக் கூடும் என்றோ அவளுக்கு கொஞ்சம் கூட எண்ணத் தோணவில்லை. சஞ்சனாவுக்கு தன் அத்தை பையன் ஷக்தியை மிகவும் பிடித்து இருந்தது. அவனைப் போன்ற ஆண்களை இவ்வுலகில் காண்பது அரிது என அவள் எப்போதும் எண்ணிக் கொள்வாள். ஆனால் அது அவன் மேல் அவளுக்கான மரியாதையை மட்டுமே அதிகரித்தது. ஷக்தி போன்ற ஒரு அற்புதமான ஆணுக்கு, அப்பழுக்கற்ற தேவதை போன்ற ஒரு பெண் தான் துணையாக கிடைக்க வேண்டும் என அவள் ஆசை பட்டாள். தன்னை ஷக்திக்கு இணையாகவோ துணையாகவோ கற்பனை பண்ணிக் கூட பார்த்ததில்லை அவள்.

அப்பொழுதும் கூட வேறு எதோ பிரச்சினையாக ஷக்தி போகிறான் என்று எண்ணி தான் சஞ்சனா அவனை தொலைபேசியில் அழைத்தாள். தொடர்ந்து மூன்று முறை அழைத்தும் ஷக்தி பேச மறுத்ததினால் அவனுக்கு என்ன அவசரமோ என எண்ணி சஞ்சனா அந்த முயற்சியை கை விட்டாள். ஆனால் அவளுக்கு மனசு கேட்கவில்லை. துரை பங்களாவுக்கு அழைத்து அங்கு அனைவரும் நலம் என்று சின்னா மூலம் கேட்டு அறிந்து கொண்டாள். ஷக்தி தொழில் சம்பந்தமான ஏதேனும் அவசரத்திற்குத் தான் சொல்லிக் கொள்ளாமல் கூட சென்று இருப்பான் என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். பதட்டத்தை கைவிட்டு விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள். சஞ்சனா திரும்பி வந்ததும் பரிசோதனைக்கு வந்திருந்த வள்ளி என்று பேர் கொண்ட அந்த பெண் சஞ்சனாவிடம் இருந்து தன் குழந்தையை பெற்றுக் கொண்டு கிளம்பத் தயார் ஆனாள். சஞ்சனாவும் வள்ளியும் மாத்திரமே அப்போதைக்கு அங்கு இருந்ததினால் சஞ்சனா அந்த குழந்தையைக் கொஞ்சியவாறு அந்த பெண்ணோடு வாசல் வரை எழுந்து சென்றாள். ஆனாள் வள்ளி வாசலில் தயங்கித் தயங்கி நிற்பதைப் போல அவளுக்கு தோன்றியது. சஞ்சனா வள்ளியை கேள்வியாக பார்த்தாள்.

தயக்கத்தோடும், ஆர்வத்தோடும், தயங்கித் தயங்கி வள்ளி கேட்டாள்,

''டாக்டர் அம்மா... நீங்க தான் ஷக்தி ஐயாவை கல்யாணம் பண்ணிக்க போறீகளா???''

அந்த திடீர் கேள்வியை, நேரடியான கேள்வியை, முகத்துக்கு முகம் பார்க்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்வியை சஞ்சனா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த கேள்வியின் அர்த்தத்தை தன் மூளைக்கு அனுப்பி அதை புரிந்து கொள்ள அவளுக்கு சில நொடிகள் ஆயிற்று. அதன் அர்த்தம் அவளுக்கு புரிந்த போது அவளுக்கு பேச்சு வர மறுத்தது. அந்த கேள்விக்கான விடையை அவளது மூளை வெவ்வேறு விதமாக சிந்தித்து பார்த்தது. "இல்லை'' என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்து விட வேண்டிய பதிலை அவள் ஏன் அவ்வளவு தூரம் யோசித்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. இவ்வளவு நேரமாக தன் கண்களைப் பார்த்து சரளமாக பேசிய டாக்டர் அம்மா கன்னம் சிவந்து அசடு வழிவதை சம்மதத்திற்கு அறிகுறியாக நினைத்த வள்ளி அதற்கு மேல் டாக்டர் அம்மாவை வெட்கி சிவக்க வைக்க மனம் இல்லாமல் கள்ளச் சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அன்றைய தினம் முழுவதும் நர்சிங் ஹோமுக்கு பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தது. சஞ்சனாவுக்கான மதிய உணவை சின்னா எடுத்து வந்து கொடுத்தான். சின்னா சாதாரணமாக நடந்து கொண்டதினால் சஞ்சனா ஷக்தியைப் பற்றி தேவை இல்லாமல் விசாரித்து அவனை குழப்ப விரும்பவில்லை. ஆனாள் அன்றைய நாள் முழுவதும் ஷக்தி சொல்லாமல் கொள்ளாமல் வண்டியை எடுத்துக் கிளம்பியதும், அந்த மலை ஜாதிப் பெண் சஞ்சனாவை பார்த்து கேட்ட கேள்வியும் சஞ்சனாவுக்கு மாறி மாறி நினைவில் வந்து கொண்டே இருந்தது. மாலை ஐந்து மணி அளவில் தன்னை அழைத்துச் செல்ல வர முடியுமாவெனக் கேட்க அவள் ஷக்தியை மறுபடியும் தொலைபேசியில் அழைத்தாள். இம்முறையும் மூன்று முறை அழைத்தும் பதில் இல்லை. என்ன செய்வது என்று சஞ்சனா யோசனை செய்து கொண்டு இருக்கும் பொழுது ஐயாவின் காரோட்டி சூசைப்பிள்ளை வாசலில் வந்து நின்று ஹார்ன் அடித்தார். பின்னர் இறங்கி வந்து சஞ்சனாவுக்கு நர்சிங் ஹோமை சாத்துவதற்கு உதவி செய்து சஞ்சனாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டுக்கு வந்தவள் வாசுகியிடம் கொஞ்ச நேரம் அன்றைய தினத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தாள். பின் வாசுகியிடம் இருந்து மாலை தேநீரை வாங்கி அருந்தி விட்டு மாடிக்கு குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வந்த சிறிது நேரத்தில் சின்னா பாடம் சொல்லிக் கொள்ள வந்து இருந்தான்.

ஒரு மணி நேரம் அவனுக்கு ஆங்கிலத்தில் சிறு சிறு வசனங்கள் அமைக்க கற்றுக் கொடுத்தாள். பின்னர் வழமை போல 8:30 மணி அளவில் இரவு உணவுக்காக கீழ் தளத்துக்கு வந்தாள். சாப்பாட்டு மேஜையில் தட்டு வைத்து ஆயத்தமாக இருந்தது. வாசுகி சமையற் கட்டிற்கும் சாப்பாட்டு மேஜைக்குமாக பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு நடந்து கொண்டு இருந்தாள். வீட்டில் ஷக்தி இருப்பதற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை. சஞ்சனா அமர்ந்து கொண்டதும் இன்று வாசுகியும் அவளோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள். சஞ்சனாவுக்கு பரிமாறிவிட்டு தனக்கும் தட்டில் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டு வாசுகி பேசத் தொடங்கினாள்,

''ஐயாவும் ஷக்தியும் ஒரு மீட்டிங்குக்கு கிளம்பி போய் இருக்காங்களாம். சாப்பிட்டு தான் வருவாங்களாம். நம்மளை சாப்பிட்டு படுத்துக்க சொன்னாங்க''

''ஒஹ்...'' என்று சொல்லி கேட்டுக் கொண்டாள் சஞ்சனா. இது அவள் எதிர் பார்த்தது தான்.

''நாளைல இருந்து உனக்கு துணைக்கு அபி வருதாமாம். அவளை, கூட மாட உதவிக்கு வச்சுக்கறதுல உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே...???''

''இதுல என்ன பிரச்சனை இருக்கப் போகுது அத்தை. மாமா கூட என்கிட்டே இது பத்தி பேசினார். அவ வந்தா எனக்கும் பேச்சுத் துணையா இருக்கும்.''

இது போன்ற பேச்சுக்களின் ஊடே இருவரும் உண்டு முடித்து உறங்கச் சென்றனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro