அத்தியாயம் (16)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனா டாக்டராக பதவியேற்று ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்து இருந்த தருணம், சமரத் தன் தந்தையின் மருத்துவமனையில் முழுப் பொறுப்பையும் ஏற்று இருந்த சமயம், அவர்கள் இருவருக்குள்ளும் அந்த அன்னியோன்னியம் வலுப்பெற்று இருந்தது. சமரத் வெகு இயல்பாக சஞ்சனாவின் வீட்டுக்கு போய் வந்த வண்ணம் இருந்தான். சஞ்சனாவும் சமர்த்தின் தாயாரோடு ஒரு சில முறைகள் தொலைபேசியினூடாக பேசி இருந்தாள்.

அப்பொழுது தான் சமர்த்தின் பெற்றோர்களின் 40 வருட திருமணநாள் வந்தது. அதை அவர்கள் குடும்பத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுவதாக முடிவாகி இருந்தது. கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும், தன் பெற்றோரை முதன் முறை சந்திக்க்கவுமென சமரத் சஞ்சனாவை விழாவுக்கு அழைத்து இருந்தான்.

திரு திருமதி ஆச்சார்யாவின் திருமணநாள் கொண்டாட்டமானது அவர்களது பாரம்பரிய இல்லத்தில் மிக விமரிசையாக நடந்து கொண்டு இருந்தது. அனேக சமூக பிரபலங்கள் தம்பதியரை வாழ்த்த அங்கு வருகை தந்து இருந்தனர். சஞ்சனாவும் தன் வருங்கால மாமனார் மாமியாரைக் காண மிகுந்த ஆவலுடன், ஒரு வட இந்தியப் பெண்ணைப் போல தன்னை அலங்கரித்துக் கொண்டு அங்கு சென்று இருந்தாள்.

காலப்போக்கில் சஞ்சனாவுடனான புரிதலின் காரணத்தாலும், அவர்களிடையே உருவாகியிருந்த அன்னியோன்னியத்தின் காரணமாகவும் சமர்த் சஞ்சனாவை சஞ்சனாவாக ஏற்றுக் கொள்ளப் பழகி இருந்தான். சஞ்சனாவின் தந்தை ஒரு வட இந்தியர் ஆகையாலும், அவர்கள் இப்பொழுது வட இந்தியர்கள் போலவே வாழந்து வந்ததாலும் சஞ்சனாவால் நிச்சயமாக தன் வீட்டு பாரம்பரியங்களை இலகுவில் கற்றுக் கொண்டு தன் குடும்பத்துக்கு ஒரு நல்ல மருமகளாக இருக்க முடியும் என்பதை நம்பினான்.

ஆயினும் சஞ்சனா ஒரு தமிழ் பெண் என்பதை தனது தாயிடம் தெரிவித்த அந்த கணமே அவனது தாயின் உள்ளத்தில் இருந்து சமர்த்தின் காதல் நிரந்தரமாக தூக்கி எறியப்பட்டது. ஆனால் அதை அவள் சமர்த்திடம் காட்டிக் கொள்ளவில்லை. அதை தன் மகனுக்கு உணர்த்த தக்க சமயம் வரும் வரை அவள் காத்து இருந்தாள். சமர்த் சஞ்சனாவை விழாவுக்கு அழைத்து இருந்தது தெரிந்த பொழுதும் கூட அவள் ஒன்றும் மறுப்புக் கூறவில்லை.

சஞ்சனா விழாவுக்கு வருகை தந்த பொழுது சமர்த் ஓடிச் சென்று அவளை வரவேற்றான். அவளை அழைத்துக் கொண்டு சென்று தன் தாயாருக்கு அறிமுகம் செய்து வைத்தான். சமர்த்தின் தாய் அனுபமா குடும்ப பெண்கள் சூழ அமர்ந்து இருக்க, அவன் அவளை தன் தாயின் பொறுப்பில் விட்டு விட்டு அங்கிருந்து நகர்த்து கொண்டான்.

அறிமுகம், நலம் விசாரிப்புக்குப் பின்னர் மெதுவாக சமர்த்தின் தாய் சஞ்சனாவிடம் சஞ்சனாவின் குடும்பம் பற்றி விசாரிக்கத் தொடங்கினாள்:

''அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்கம்மா??''

''நல்லா இருக்காங்க ஆண்ட்டி.''

''அவங்களையும் கூட கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல??''

''இருக்கட்டும் ஆண்ட்டி இன்னொருநாள் நிச்சயம் அழைச்சிட்டு வாரேன்.''

''உங்க அம்மா பேர் என்ன சொன்னே?? அவங்களுக்கு எந்த ஊர்??''

''என் அம்மா பேர் யசோதா. தமிழ் நாட்லே குன்னூர் பக்கத்துலே பூம்பொலிழ்ன்னு ஒரு கிராமம்.''

''ஒஹ்ஹ்........... உங்க அப்பா எங்க குலத்தை சேர்ந்தவருன்னு சமர்த் சொல்லி இருக்கான். உங்க அம்மா எப்படி??''

ஒஹ்ஹ்.. என்று அனுபமா இழுத்த பொழுதே அவள் எங்கு சுற்றி எதைத் தொடப் பார்க்கிறாள் என்று சஞ்சனாவுக்குத் தெரிந்து போனது.

''இல்லை ஆண்ட்டி எங்க அம்மா வேற கம்யுனிடியை சேர்ந்தவங்க.'' என்றால் சுரத்தில்லாத குரலில்.

அனுபமா சற்று நேரம் அமைதியாக இருந்து தன் எதிர்ப்பை சஞ்சனாவுக்கு உணர்த்தினாள். சஞ்சனா இது போன்ற சபையில் இந்த சபை நாகரீகமற்ற கேள்விகளை எதிர்பார்த்து வராததால் அவளும் பதில் சொன்னாலே தவிர நிலை குலைந்து போனாள். அமைதியை உடைத்தவாறு அனுபமாவே தொடர்ந்தாள்:

''இங்க பாரும்மா.. நீ படிச்ச பொண்ணு புரிஞ்சிப்பன்னு நெனைக்கிறேன். கல்யாணம்ங்கறது ரெண்டு தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப் பட்ட விஷயம் கிடையாது. அது ரெண்டு குடும்பங்களை ஒன்னா இணைக்கிற ஒரு உறவு. உங்க குடும்பத்துல எப்படின்னு தெரியலை. ஆனா எங்க குடும்பத்துல தனிக் குடித்தனம்லாம் கிடையாது. காலா காலமா நாங்க எல்லாரும் ஒன்னா தான் வாழறோம் ஒன்னா தான் வாழுவோம். நீ கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சா நாளை பின்ன உங்க அம்மா அப்பா எங்க வீட்டு விசேஷத்துக்கு வந்து போகணும். உங்க அம்மா வேற குலத்தை சேர்ந்தவங்களா இருக்கப்ப அவங்களை கண்டிப்பா எங்களால நல்லது கெட்டதுல முன்னாடி நிறுத்த முடியாது.......................''

''நிறுத்துங்க ஆண்ட்டி.............'' என்றாள் சஞ்சனா அனுபமாவை மேற்கொண்டு பேச அனுமதிக்காமல்.

''வாய்க்கு வந்த படி பேசாதிங்க. எங்க அம்மா ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி தாழ்ந்த ஜாதில இருந்து வரலை. நாங்களும் நல்ல ஜாதில வந்தவங்க தான். ஆனால் ஜாதிலே மட்டும் உயர்ந்து நின்னா போதாது ஆண்ட்டி, நம்ம எண்ணங்கள் உயர்வானதா இருக்கணும். உங்ககிட்ட எல்லாம் இல்லாத அந்த உயர்ந்த மனசு எங்க அம்மாகிட்ட நிறையவே இருக்கு''

சஞ்சனா உரத்த குரலில் கண்களில் கண்ணீர் பொங்க பதில் சொல்லவும் அங்கு சலசலப்பு அதிகமானது. சூழவிருந்த பெண்கள் சிலர் விழாவுக்கு வந்த சிறு பெண்ணிடம் அனுபமா அநாகரீகமாக நடந்து கொண்டதைப் பற்றி தமக்குள்ள கிசுகிசுத்துக் கொண்டனர்.

அனுபமாவின் உடன் பிறப்புக்கள் என்ன இந்த பெண் உன் வீட்டு விருந்துக்கு வந்து உன்னையே எதிர்த்துப் பேசுகிறாள் என்று அனுபமாவை மேலும் ஆத்திரமூட்டினர். தான் அவமதிக்கப்பட்ட ஆத்திரத்தில் அனுபமா சஞ்சனா பற்றியும் அவள் தாயார் பற்றியும் வாய்க்கு வந்த படி கத்த ஆரம்பிக்க வாக்குவாதம் மூண்டது. விருந்துக்கு வந்திருந்த அனைவரது பார்வையும் அங்கு திரும்பியது.

என்ன என்று பார்ப்பதற்காக சமர்த்தும் அவன் தந்தையும் அவசரமாக பெண்கள் அமர்ந்து இருந்த இடம் நோக்கிச் சென்றனர். அப்பொழுது நா தழுதழுக்க சஞ்சனா, சமர்த்தின் தாயார் அனுபமாவைப் பார்த்து எதோ கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள். கூட்டத்துக்குள் நுழைந்த சமர்த்தின் தந்தை ஆச்சார்யா ''நிறுத்துங்க'' என்று தன் குரலை உயர்த்தி சபையை அடக்கினார். சமர்த்துக்கு விபரீதம் புரிய ஆரம்பித்தது.

''என்ன அனுபமா? இங்கே என்ன நடக்குது? யார் இந்த பொண்ணு? யாரோட கெஸ்ட்? எதுக்கு இங்கே வந்து சத்தம் போட்டுட்டு இருக்கு?'' என்றார் சமர்த்தின் தந்தை ஒன்றும் புரியாதவராக.

கோபத்தின் உச்சியில் இருந்த சஞ்சனா, அனுபமா பதில் கூறும் முன்பு முந்திக் கொண்டு பேசினாள்:

''நான் ஒன்னும் சும்மா சத்தம் போடலை அங்கிள். இவங்க தான் கூப்பிட்டு வச்சு என்னைப் பத்தியும் எங்க அம்மா பத்தியும் தப்பா பேசறாங்க.'' என்றாள் சஞ்சனா.

''நீ யாரும்மா? உன் பேரென்ன? நீ யார் அழைச்சு இந்த விருந்துக்கு வந்தே? அனுபமா எதுக்கு உன்கிட்ட காரணம் இல்லாம சத்தம் போடணும்?'' என்றார் அவர் தொடர்ந்து குழப்பமாக.

''என் பேர் சஞ்சனா அங்கிள். சொல்லு சமர்த் என்னை யார் இங்கே அழைச்சா? நான் எதுக்காக வந்து இருக்கேன்னு நீயே சொல்லு'' என்றாள் சஞ்சனா இப்பொழுது அழுகையோடு.

பந்து தன்னை நோக்கி எறியப்பட ஒரு நிமிடம் திகைத்து நின்றான் சமர்த். இவ்வளவு பெரிய சபையில் சஞ்சனா ஏன் இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறாள் என்று அவனுக்கு ஆத்திரமாக வந்தது. வேறு வழியின்றி தன் தந்தைக்கு பதில் சொல்ல தன்னை தயார்ப் படுத்திக் கொண்டான்.

''அது வந்துப்பா சஞ்சனா என்னோட கெஸ்ட் தான்ப்பா. என்கூட படிக்கிறப் பொண்ணு, உங்களுக்கும் அம்மாவுக்கும் அறிமுகம் பண்ணி வைக்கலாமேன்னு நான் தான் வர சொன்னேன்.'' என்று சமர்த் நிலைமையை சமாளிக்க பட்டும் படாமலும் பதில் அளிக்க,

அவனது பதிலில் சஞ்சனாவின் கோபம் இன்னும் அதிகரித்தது. சமர்த்தின் குடும்பத்தின் முன் அவள் கைவிடப் பட்ட நிலையில் அவமானப் பட்டு நின்று கொண்டு இருக்க, அப்பொழுதும் கூட 'இவள் நான் காதலிக்கும் பெண்' என்று கூறி தனக்கு சார்பாகப் பேசாமல் இன்னுமா ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறான் என்று சஞ்சனா கோபத்தில் கத்தத் தொடங்கினாள்.

''யார்டா உன்கூடப் படிக்கிறப் பொண்ணு..?? நான் உன் கூட படிக்கிறப் பொண்ணுங்கறதை சொல்லத் தான் என்னை இவ்வளவு தூரம் வரும் படி சொன்னியா?? நானும் உங்க பையனும் லவ் பண்றோம் அங்கிள். இது ஆண்டிக்கும் தெரியும். எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு என்னை இங்கே வரும் படியும் சொல்லிட்டு இப்போ கூப்பிட்டு வச்சு என்னை அவமானப் படுத்துறாங்க'' என்று ஆத்திரத்தில் விஷயத்தை சபை நடுவில் போட்டு உடைத்தாள்.

சஞ்சனாவின் பதிலில் சமர்த்தின் தந்தை ஒரு நிமிடம் ஆடித் தான் போனார். சஞ்சனா அந்த இடத்தில் கத்திக் கூச்சலிட்டது அவருக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. சஞ்சனா இவ்வளவு தெளிவாக பேசுவதானால் இதற்க்கு எதோ பெரிய பின்புலம் இருக்கின்றது என்பது அவருக்கு தெளிவாகப் புரிந்தது. இதற்க்கு மேலும் இதைப் பற்றி சபை நடுவே பேசினாள் தன் குடும்ப மானம் தான் கப்பல் ஏறும் என்று கருதி,

''ஒகே பிரெண்ட்ஸ்.. சாப்பாடு ரெடியா இருக்கு. எல்லாரும் சாப்பிடுங்க. நான் உள்ளே போய் இந்த மிஸ்அண்டர்ஸ்டான்டிங்கை சால்வ் பண்ணிட்டு இதோ வந்துடறேன்'' என்று கூறிவிட்டு சமர்த், சஞ்சனா, மற்றும் அனுபமாவைப் பார்க்க அம்மூவரும் அமைதியாக அவரைப் பின் தொடர்ந்தனர்.

வீட்டு ஹாலுக்குள் நுழைந்தவர். வீட்டின் நடுவே இருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார். அவரை சுற்றிலும் மற்ற மூவரும் நின்று கொண்டனர்.

''சொல்லு அனுபமா.. என்ன நடக்குது இங்க? என்று அவர் கோபமாக கேட்க்க, சமர்த் மற்றும் சஞ்சனா பற்றியும் தனக்கும் சஞ்சனாவுக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றியும் அனுபமா கூறினாள்.

அனைத்தையும் அமைதியாக கேட்டு முடித்தவர் சஞ்சனவை தன் பக்கத்தில் அமரும் படி கூறினார். தயங்கித் தயங்கி சஞ்சனா அவர் அருகே அமர்ந்து கொண்டாள். சமர்த்தும் அவன் தாயாரும் இன்னும் நின்ற வண்ணம் இருந்தனர்.

''காதல் கல்யாணம்ங்கறதைலாம் தாண்டி ஒரு டாக்டரா உன்னோட இலட்சியம் என்ன?? இப்பொழுது ஒரு சக மருத்துவராக கேள்வி கேட்டார் டாக்டர் ஆச்சார்யா.

''எனக்கு தனியார் ஆஸ்பத்திரிலே பணத்துக்காக வேலை பார்க்கறதிலே இஷ்டம் இல்லை அங்கிள். மருத்துவ வசதிகள் இல்லாத ஒரு பிரதேசமா தேர்ந்தெடுத்து அங்க போய் அந்த மக்களுக்கு சேவை செய்ய ஆசைப் படறேன்''

''ஹஹஹா........ ஹஹஹஹா............... ஹா ஹா ஹா.......'' சஞ்சனாவின் பதில் கேட்டு வாய் விட்டு சிரித்தார் அந்த பெரிய மனிதர்.

அவர் போட்ட சத்தத்தில் சஞ்சனாவுக்கு இனம் புரியாத பயத்தால் மெய் சிலிர்த்தது. அந்த வீடே அதிர்வது போல தோன்றியது.

''சமூக சேவை பண்ண ஆசைப் படறியா?? அப்படின்னா பேசாம அன்னை தெரேசாவா போயிற வேண்டியது தானே?? உனக்குலாம் எதுக்கு இந்த காதல் கல்யாணம்லாம்?? நீ ஆரம்பத்துல சமூக சேவை பண்ணனும்ப, கல்யாணத்துக்கு அப்புறமா ஒரு குழந்தையை தத்தெடுத்து வளக்கலாம்ப இதைலாம் நீ தனியாவே இருந்து பண்ணிக்க வேண்டியது தானே?? சாமியாராப் போகலாம்னும் ஆசை, ஆம்பளை எப்படி இருப்பான்னு பார்க்கணும்னும் ஆசை இல்லை??'' என்றார் கண்களிலும் உதடுகளிலும் விஷத்தோடு அவளை நோக்கி..................

அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடியாக சஞ்சனாவின் காதில் விழுந்தது. அவர் பேசிய வார்த்தைகளில் அவள் கூனிக் குறுகி நின்றாள். அவளது மூளை வேலை செய்ய மறுத்தது, சப்த நாடியும் ஒடுக்கப்பட்டு, நடை பிணமாய் அமர்ந்து இருந்தாள். அவள் உடலுக்குள் உயிர் கொஞ்சம் மிச்சம் இருக்கின்றது என்பதற்க்கு சான்றாக அவளது உயிர்ப்புள்ள கண்கள் மட்டும் கண்ணீரை வார்த்துக் கொண்டே இருந்தது.

இப்பொழுது அவர் பார்வை சமர்த்தை நோக்கி சுட்டது.

''என்னடா பண்ணிட்டு வந்து நிக்குற?? யார் வீட்டுக்கு யாரை கூட்டிட்டு வந்து இருக்க?? பார்ட்டி நடுவில நின்னு காச் மூச்சுன்னு கத்துது இந்த பொண்ணு?? இவளை தான் நீ லவ் பண்றியா??

ஷி இஸ் நாட் மேரேஜ் மெட்டீரியல் சேய்!!!!!

ப்ளீஸ் கெட் ஹேர் அவுட் ஆப் திஸ் ஹௌஸ்'' என்று கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க கத்தினார் அவர்.

அவர் போட்ட கூச்சலில் சமர்த்தும் சமர்த்தின் தாயும் தான் அதிர்ந்து நின்றனரே ஒழிய சஞ்சனா அவள் அமர்ந்து இருந்த இடத்திலேயே எந்த சலனமும் இன்றி அமர்ந்து இருந்தாள்.

"ஷி இஸ் நாட் மேரேஜ் மெட்டீரியல்............... ஷி இஸ் நாட் மேரேஜ் மெட்டீரியல்.............. ஷி இஸ் நாட் மேரேஜ் மெட்டீரியல்............"

இந்த வார்த்தைகள் மாத்திரம் மீண்டும் மீண்டும் அவள் காதுகளுக்குள் ஒழித்துக் கொண்டே இருந்தன.

தந்தை அவ்விடம் விட்டு நகர்ந்ததும் சமர்த் மெதுவாக சஞ்சனாவின் அண்டை நெருங்கி அவள் தோளில் கை வைத்தான். அவளிடம் எந்த வித அசைவும் இல்லை.

''சஞ்சனா இப்போ நீ கிளம்பி வீட்டுக்குப் போ. நம்ம நாளைக்கு பேசிக்கலாம்'' என்று தயங்கித் தயங்கி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கூறினான் சமர்த்.

அப்பொழுதும் கூட சஞ்சனாவிடம் இருந்து எந்த வித அசைவும் இல்லை. இப்பொழுது அனுபமாவும் உதவிக்கு வந்தாள். சஞ்சனாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று வாசலில் தயாராக காத்திருந்த காரில் ஏற்றி, டிரைவரிடம் எதோ காதில் சொல்லி விட்டு சமரத் கார் கதவை சாத்திவிட்டான்.

அப்பொழுது சஞ்சனா கடைசியாக சமர்த்தை ஒரு பார்வை பார்த்தாள். மிகக் கூர்மையானதொரு பார்வை. அவள் கூற நினைத்தது அனைத்தயும் அந்த ஒரே பார்வையில் அவள் கூறி விட்டாள். அந்த பார்வை சமர்தின் இதயத்தை ஊடுருவிச் சென்றது. அந்த பார்வையின் கனம் தாங்காமல் அவன் தன் பார்வையை விளக்கிக் கொண்டான். கார் வேகமெடுத்து. சஞ்சனா கொஞ்ச கொஞ்சமாக சமர்த்தின் பார்வையை விட்டு மறையத் தொடங்கினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro