அத்தியாயம் (17)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கார் சஞ்சனாவின் வீட்டு வாசலில் சென்று நின்றது. வேலைக்காரி வந்து சஞ்சனாவுக்காக கதவைத் திறந்து விட்டாள். சஞ்சனா நேராக தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு கட்டிலில் விழுந்தாள். கட்டிலில் விழுந்த ஒரு சில நிமிடங்களில் நன்றாக உறங்கியும் விட்டாள். மறு நாள் காலை அவள் எழுந்திருக்கையில் மணி பிற்பகல் 12:30. இரவு பார்டி முடித்து தாமதமாக வீடு வந்திருந்த காரணத்தினால் அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

நித்திரை விட்டு எழுந்தவள் குளித்து உடை மாற்றிக் கொண்டு ஹாலில் சென்று அமர்ந்து கொண்டாள். 'சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா' என்று கேட்ட தாயிடம் தனக்கு ஒரு காபி மட்டும் போட்டு தருமாறுக் கேட்டுக் கொண்டாள். சஞ்சனாவின் முகம் அவள் இருக்கும் மனநிலையை உணர்த்த அப்போதைக்கு யசோதா அவளை ஒன்றும் கேட்கவில்லை. தன்னிடம் பகிர்ந்துக் கொள்ளக் கூடிய விஷயமாக இருப்பின் சஞ்சனாவாக தன்னிடம் கூறுவாள் என்று நம்பினாள்.

நாட்கள் கடந்தன. சஞ்சனா எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தது போலவே காணப்பட்டாள். அதன் பின் சமரத் அவளை தொடர்பு கொள்ளவே இல்லை. சமரத் தனது தொலைபேசி இலக்கத்தைக் கூட மாற்றி இருந்தான். அவன் ஊரில் இருக்கிறானா இல்லையா என்ற தகவல் கூட ஒருவருக்கும் தெரியவில்லை.

சஞ்சனாவுக்கும் சமர்த்துக்கும் எதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்ட சஞ்சனாவின் பெற்றோர் அவர்களாக சென்று சஞ்சனாவிடம் விசாரித்துப் பார்த்தனர். அப்படிக் கேட்ட பொழுது ஒன்றும் இல்லை என்று சஞ்சனா மறுத்து விட்டாள். ஆனால் அவள் கண்களில் ஜீவன் இல்லை, அவள் உடல் தான் அந்த வீட்டில் இருந்தது அதில் உயிர்ப்பில்லை.

சஞ்சனா அப்படி இருந்தது சஞ்சனாவின் பெற்றோரை மிகவும் கலங்கடித்தது. அவசியம் ஏற்படின் மாத்திரமே அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை வெளியே வரும். மற்ற நேரங்களில் எல்லாம் எங்கோ வெறித்துப் பார்த்து யோசனை செய்து கொண்டு இருந்தாள்.

அவளை எதாவது காத்து கருப்பு பிடித்துக் கொண்டதோ என்று கூட யசோதா ஒரு முறை பயந்து விட்டாள். அதன் பின்னர் வந்த நாட்களில் எதோ ஒரு காரணம் இல்லாத பயத்தினால் யசோதா சஞ்சனாவின் அருகிலேயே இரவு படுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டாள். அதற்க்குக் கூட சஞ்சனாவிடம் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை.

சமர்தின் வீட்டில் விருந்து நடந்து சரியாக ஒரு மாதம் பத்து நாட்கள் ஆகிய நிலையில், ஒரு நாள் இரவு 2:30 மணியளவில் ''நோ...................'' என்று உரத்த சத்தமிட்டு கத்தியவாறு சஞ்சனா படுக்கையில் இருந்து பதறி எழுந்து அமர்ந்து கொண்டாள். சஞ்சனா போட்ட கூச்சலில் அவள் அருகே படுத்து இருந்த யசோதாவும், தத்தம் படுக்கை அறைகளில் படுத்து இருந்த சஞ்சனாவின் தந்தை மட்டும் வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் என அனைவரும் பதறியடித்து ஓடி வந்தனர்.

படுக்கையில் எழுந்து அமர்து கொண்ட சஞ்சனா பெருங்குரல் எடுத்து கதறி அழ ஆரம்பித்தாள். அவள் அழுத அழுகையில் அந்த வீடே ஸ்தம்பித்து நின்றது. அவளது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. அவளது பெற்றோரும் கூட அவளை நெருங்கி ஏன், எதற்கு என கேட்க்க அச்சம் கொண்டனர். அந்த அழுகுரல் அவ்வளவு பயங்கரமானதாக இருந்தது.

சஞ்சனா அழுதாள், வாய் விட்டு கதறி அழுதாள், நேரம் காலம் தெரியாமல் அழுதாள், சுற்றம் சூழ்நிலை பார்க்காமல் அழுதாள். ஒன்றரை மாத காலமாக மனதுக்குள் அழுத்தி அழுத்தி வைத்து இருந்த சோகம் தீரும் வரை கதறிக் கதறி அழுதாள். தங்கள் மகள் படும் துன்பம் தாளாமல் அந்த பெற்றோரும் சேர்ந்து அழுதனர். சிட்டுக் குருவியை போல அந்த வீட்டுக்குள் பறந்து திரிந்த, ஈ எறும்புக்கும் கூட தீங்கு நினையாத பெண் இப்படி நிலைகுலைந்து அழுவதைக் காண அந்த வீட்டில் இருந்த வேலையாட்களுக்கும் கூட கண்களைக் கரித்தது.

எவ்வளவு நேரம் அழுதாள் என்பது தெரியாது அவள் அழுது முடிக்கையில் விடிந்து இருந்தது. அழுது களைத்தவள் அப்படியே தன் தாயின் மடியில் உறங்கியும் போனாள். விஷயம் தங்கள் கையை மீறிப் போய் விட்டது என்பதை உணர்ந்த சஞ்சனாவின் பெற்றோர் மறுநாள் தொடங்கி அவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர். மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர்கள் அழைத்த இடங்களுக்கெல்லாம் அவர்களுடன் சேர்ந்து சென்றாள்.

சஞ்சனாவுக்கும் அவள் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான மனநல மருத்துவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் சஞ்சனா ட்ரீட்மென்ட் மற்றும் கவுன்சலிங்குக்காக அழைத்து செல்லப் பட்டாள். சஞ்சனாவுக்கும் சமர்துக்கும் இடையே நடந்த பிரச்சனை பற்றி சஞ்சனாவின் பெற்றோர்கள் டாக்டர் மூலமாக அறிந்து கொண்டனர்.

அவர்கள் வாழ்க்கையில் எடுத்த அவசர முடிவு இன்று அவர்கள் மகள் வாழ்கையில் விளையாடி விட்டதென்பது அவ்விருவருக்கும் மிகுந்த வேதனையை அளித்தது. இருவரும் இதற்கு என்ன முடிவு என்று யோசனை செய்ய ஆரம்பித்தனர். இதன் நடுவே சஞ்சனா தினமும் ''நோ.............'' என்று பலத்த சத்தமிட்டவாறு தூக்கத்தின் நடுவே திடுக்கிட்டு விழித்துக் கொள்வதும் அதன் பின்னர் பேய் பிடித்தவள் போல யாருக்கும் அடங்காமல் நடந்து கொள்வதும் வழக்கமாகி இருந்தது.

சமர்த்தின் தந்தை ''ஷி இஸ் நாட் மேரேஜ் மெட்டிரியல்'' என்று கூறிய வார்த்தை சஞ்சனாவின் இதயத்தில் ஆழமாக பதிந்து விட்டது என்பதும் அது தினமும் அவளுக்கு தூக்கத்தில் கேட்பதும் தான் சஞ்சனா இரவு நேரங்களில் ''நோ'' என்று சத்தமிட்டவாறு எழுவதற்க்கு காரணம் என்பதும் ட்ரீட்மென்ட்டில் தெரிய வர அவள் தன் வாழ்கையில் சமர்துடன் பழகிய நாட்களை மறக்கவும், இரவில் நன்றாக உறங்கவும் அவளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

இரவில் விழித்துக் கொண்ட சஞ்சனா வெறி பிடித்தவள் போல நடந்து கொண்டாலும். மற்ற நேரங்களில் அவள் சாதாரணமாகவே இருந்தாள். யசோதாவுடன் கோவிலுக்கும், யோகா வகுப்புகளுக்கும் தொடர்ச்சியாக சென்று வந்தாள். காலப் போக்கில் அவள் தூக்கத்தில் விழித்துக் கொண்டு கத்துவதும் கூட நின்று போனது. மருத்துவமனைக்கு சென்று வர தொடங்கினாள், முதன் முதலாக தனியாக ஒரு பிரசவத்தை பார்த்தாள்.

காலம் கடந்தது. ஆனால் சமர்த்தை தொலைத்த அந்த நிமிடம் அவள் தன்னையும் தொலைத்து இருந்தாள். அவள் யார் அவளுக்கு என்ன தேவை அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதை அவளே மறந்து போய் இருந்தாள். அப்படியிருக்கையில் தான் யசோதாவுக்கு அந்த எண்ணம் தோன்றியது. சஞ்சனாவை பூம்பொழிலுக்கு அனுப்பி வைப்பது என்று. சஞ்சனா பழைய சஞ்சனாவாக மாற வேண்டும் எனில் அவள் வாழும் சூழ்நிலை மாற வேண்டும், மற்றும் அவள் தனக்குப் பிடித்ததை செய்ய வேண்டும்.

அவ்விரண்டும் நிறைவேற ஒரே வழி அவள் பூம்பொலிலுக்கு செல்வது மாத்திரம் தான். யசோதா பல வருடங்களுக்குப் பின்னர் தன் வீட்டுடன் தொடர்பு கொண்டாள். அவள் செய்த தவறுக்கு அழுது மன்றாடி மன்னிப்புக் கேட்டாள். தாய் தந்தையர் செய்யும் தவறுகள் தங்கள் பிள்ளைகள் வாழ்வை காவு வாங்கி விடுகின்றன என்று சொல்லி மனம் நொந்து அழுதாள். தன் குழந்தையை காப்பாற்றித் தருமாறு தன் அண்ணனிடமும் தன் அண்ணியிடமும் வேண்டிக் கொண்டாள்.

யசோதாவின் வார்த்தைகள் முத்துப்பாண்டி, வாசுகி தம்பதியின் இருதயத்தை உடைத்து. சஞ்சனாவை இப்பொழுதே அனுப்பி வைக்குமாறும் சஞ்சனாவை தாம் பெற்ற பிள்ளைக்கு மேலாக பார்த்துக் கொள்வதாகவும் வாக்களித்தனர். இப்படித் தான் சஞ்சனா பூம்பொழில் வந்து சேர்ந்தாள்.

''இது தான் ஷக்தி நடந்தது. உன்கிட்டே எதையுமே நான் மறைக்கனும்ன்னு நினைக்கலை. அனால் இது பத்தி என் அம்மா அப்பா கிட்டே கூட நான் வாய் திறந்து சொன்னதில்லை. நான் மறக்க நெனச்ச ஒரு சம்பவத்தை இப்போ உனக்காக மறுபடி என் ஞாபகத்துக்குள்ள கொண்டு வந்து சொல்லி இருக்கேன்'' என்று கூறி ஒரு பெருமூச்சை வாங்கிக் கொண்டு அமைதியானாள் சஞ்சனா.

ஷக்திக்கு பேச்சு எழவில்லை. சஞ்சனாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

''என்ன ஒண்ணுமே சொல்லாமல் இப்படி என்னையே பார்த்துட்டு இருக்கே??'' என்றாள் அவளாக.

''இப்படி வா'' என்று அவளை தன்னை நோக்கி அழைத்தான்.

சஞ்சனா அவன் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

சஞ்சனாவின் கண்களில் இரண்டு துளிக் கண்ணீர் எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்க தன் இரு பெருவிரலாலும் ஷக்தி அந்த கண்ணீர்க் கரையை அழுந்தத் துடைத்து விட்டான். பின்னர் சஞ்சனாவின் இடது கரத்தை தன் வலது கைக்குள் வாங்கி பூட்டிக் கொண்டான்.

''இவ்வளவு நாளா இதை உன் மனசுக்குள்ளயே பூட்டி வச்சு இருந்து இருக்க. டாக்டர் கூட உன்னை மயக்க நிலைக்கு கொண்டு போய் தான் உன்கிட்ட இருந்து விஷயத்தை கேட்டு தெரிஞ்சிட்டு இருக்காரு. ஆனால் எப்போ நீ உன்னோட சுயநிலைலே இருந்து இதை என்கிட்டே ஷேர் பண்ணிட்டியோ அப்போவே அந்த பாரம் உன் மனசை விட்டு போயாச்சு'' என்று சொல்லி விட்டு அங்கு தரையில் கிடந்த ஒரு சிறு கல்லை எடுத்து சஞ்சனாவின் கைகளில் கொடுத்தான்.

என்ன என்பதைப் போல ஷக்தியைப் பார்த்து விழித்த போதும் கூட சஞ்சனா தன் கையை நீட்டி அந்த கல்லை தன் கையில் வாங்கிக் கொண்டாள்.

''உன்னோட மனசுல உள்ள மொத்த பாரத்தையும் இந்த கல்லுலே இறக்கி வச்சிடு, அப்புறமா உன்னோட மொத்த பலத்தையும் கொண்டு உன்னால இந்த கல்லை எவ்வளவு தூரமா வீச முடியுமோ அவ்வளவு தூரமா வீசிடு. அதோட எல்லாமே முடிஞ்சிது.

இந்த இடத்தை விட்டு நம்ம கிளம்பும் போது நீ, நீயா என்கூட வரணும். நீ எங்கே உன்னை தொலைச்சியோ அந்த இடத்துல இருந்து உன்னை மீட்டுட்டு வரணும்'' என்றான் மிகத் தெளிவாக.

சஞ்சனா ஷக்தியைப் பார்த்தாள், பின்னர் தன் கையில் கொடுக்கப் பட்ட அந்த கல்லைப் பார்த்தாள். தன் கண்களை ஒரு சில வினாடிகள் மூடிக் கொண்டாள், எதை எண்ணியோ ஒரு நொடி உதடு துடிக்க விசும்பினாள். பின்னர் தன் கண்களை மறுபடியும் திறந்து கொண்டாள். ஷக்தியின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

ஷக்தியும் அவளுடன் கூட எழுந்து கொண்டான். சஞ்சனா தன்னால் முடிந்த வரை விசிறி அந்த கல்லை எறிந்தாள். அது இரவின் காரிருளில் தொலைந்து ஒரு பள்ளத்தாக்கில் போய் விழுந்தது.

சஞ்சனாவுக்குள்ளோ எதையோ பெரிதாக சாதித்து விட்டதைப் போல ஒரு நிம்மதி. நேற்று வரை தன் கழுத்தின் நுனியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கூர் வாள் தன் கழுத்தை விட்டு அகற்றப் பட்டதைப் போன்ற ஒரு விடுதலை. தன்னைச் சுற்றியிருந்த காரிருள் எல்லாம் ஒரே நொடியில் மறைந்து தன்னைச் சுற்றிலும் ஒரு ஒளிவட்டம் சூழ்த்து கொண்டதைப் போல உணர்ந்தாள்.

தனக்குள் உண்டான புது சந்தோஷத்தை வெளிப் படுத்தும் வண்ணம் ஷக்தியை கட்டி அணைத்துக் கொண்டாள். ஷக்தியும் அழுகிற குழந்தையை அணைத்து ஆறுதல் சொல்வது போல அவளை ஒரு நிமிடம் ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

அணைப்புக்கு நடுவே மென்மையாக ''கிளம்பலாமா??'' என்றுக் கேட்டான்.

சஞ்சனாவும் சரி என்று தலை அசைக்க, அவளை அணைத்தவாறே வண்டி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றான். வண்டியில் செல்லும் போது இருவரும் வழமை போல சகஜமாக பேசிக் கொண்டு சென்றனர். மிக தாமதமாக வீடு வந்து சேர்ந்த பொழுதும் வாசுகி அவர்களை கேள்வி ஒன்றும் கேட்கவில்லை.

இருவரும் தத்தம் அறைகளுக்குள் நுழைந்து கொண்டனர்.. சஞ்சனா பல நாட்களுக்குப் பின்னர் நிம்மதியாக உறங்கினாள். ஷக்தி அன்று இரவு முழுவதும் விழித்து இருந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro