41. செவ்வந்திதுரை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

41. செவ்வந்திதுரை:

ராஜேந்திரன் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு பின்னால் சாய்ந்தார். குண்டடி பட்ட இடத்திலிருந்து செந்நிற ரத்தம் கொட்டியது.

"அப்பா.." ஜீவா, துருவ், விஜய் மூவரும் தன்னிலை மறந்து அவர் அருகில் ஓடினர்.

சஞ்சனாவும் நவீனும் அதிர்ச்சியோடு துப்பாக்கி குண்டு வந்த திசை நோக்கி திரும்பினார்கள். ரவி ராபர்ட் தன் துப்பாக்கியை ஒரு சுழற்று சுழற்றினான்.

"என்னங்கடா இது..? அவன் என்னமோ என் பசங்கதான் என் எதிரிங்கன்னு உங்களை கொல்லுறதை மட்டுமே வாழ்நாள் குறிக்கோளாக வச்சிருக்கான்.. ஆனா நீங்க அவன் குண்டடிப்பட்டதும் அப்பான்னு அலறுறீங்க.." என்றான் அவன் நக்கலாக.

அவன் இதை சொல்லியபிறகே மூவரும் தாங்கள் எந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தனர்.

அப்பா என ராஜேந்திரனை அழைத்து விட்டோமே என எரிச்சலோடு எண்ணிய விஜய் தரையில் கையை குத்தினான். அவன் மீண்டும் கையை குத்திக் கொள்ளும் முன் அவனது கையை பற்றிக் கொண்டான் துருவ்.

"இதுக்கு ஏன் அவமானப்படுற விஜய்..? இது ஒரு சரியான தாயின் வளர்ப்பு.. இவர் மேல நம்ம மூணு பேருக்குமே கோபம் இருக்கு.. ஆனா அதையும் தாண்டி பெத்த பாசம் கொஞ்சமா ஒட்டிட்டு இருந்திருக்கு.. இவரை கொல்ல ஆசைப்பட்ட அதே நெஞ்சோரத்துல இவர் திருந்திடணும்ன்னு ஆசை இல்லையா சொல்லு..?" தரையை பார்த்து கேட்டான் துருவ்.

"அண்ணா.." என்றான் ஜீவா. அவன் குரலில் சோகம் கலந்திருந்தது.

துருவ் ஜீவாவை கேள்வியாக நிமிர்ந்து பார்த்தான். ஆனால் பதில் ஏதும் சொல்லாமல் அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டான் ஜீவா.

"யூ ஆர் பெஸ்ட்.. இந்த ஆளை அப்பான்னு கூப்பிட்டதுக்கு ஒரு செகண்ட்ல எவ்வளவு பீல் பண்ணிட்டேன் தெரியுமா..? ஆனா நீங்க சொன்ன பிறகுதான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்..‌ ஏனா இந்த ஆளுக்கு நம்ம பாசத்துல ஒரு பர்சண்ட் கூட இல்ல..?" என்ற ஜீவாவின் கண்ணிலிருந்து இரு துளி கண்ணீர் வழிந்தது.

"இந்த ஆளுக்கு பிறந்த பாவம்.. தகப்பன் பாசம் இல்லாம வாழணும்ன்னு இருக்கு.." என்ற துருவ் அவனை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

ஆதுவும் மாதுவும் தங்கள் சிறு வயது நினைவுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். சொல்ல மறந்த கதைகள் பலவற்றை பரிமாறிக் கொண்டனர்.

"ஒருமுறை பப்புவும் நானும் டிராயிங் பண்ணிட்டு இருந்தோம்.. நான் குட்டி பூ வரைஞ்சி அவனுக்கு தந்தேன்.. அவன் என்னை மாதிரியே ஒரு உருவம் வரைஞ்சி தந்தான்.." என்ற ஆதுவை பார்த்து சிரித்தாள் மாது.

"மாமா மேல நீ எவ்வளவு லவ் வச்சிருக்கன்னு தெரியுது.. ஆனா இப்படி அநியாயத்துக்கு ரீல் விடாத.."

"நீ நம்பல இல்ல..? சரி இரு வரேன்.." என்றவள் தனது அறைக்கு ஓடினாள். சில நொடிகளில் திரும்பி வந்தவள் மாதுவிடம் தன் கையிலிருந்த டைரியின் முதல் பக்கத்தை மட்டும் காட்டினாள்.

மனம் வருடும் ஓவியமே.. என்று தலைப்பிடப்பட்டு அழகாக ஓவியமாக வரையப்பட்டிருந்தாள் ஆதர்ஷினி. மாது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. ஆனாலும் தன் சகோதரியை ஓர கண்ணால் பார்த்தாள்

"சின்ன வயசுலயே நீ இவ்வளவு பெருசா வளர்ந்துட்டியா..?" என்றாள் சிரிப்போடு. அவள் அதிகம் சிரிக்கும் முன்னால் அவள் கையில் கசங்கிய காகிதம் ஒன்றை வைத்தாள் ஆது. கசங்கிய காகிதம் எப்போது வேண்டுமானாலும் கிழியும் நிலையில் இருந்தது. அழுத்தி தொட்டாலே துகள் துகளாய் உதிர்ந்து விடும் தாளில் சின்ன வயது ஆதர்ஷினி பென்சில் ஓவியமாக இருந்தாள். இப்போது ஆதுவின் கண்கள் ஆச்சரியத்தில் மேலும் விரிந்தது.

"சான்ஸே இல்ல.. இது நிஜமாவே மாமா வரைஞ்சதா..? எப்படி..?" மாது தன் கண்களை நம்ப முடியாமல் அமர்ந்திருக்க ஆது அவள் கையிலிருந்த தாளை வாங்கி‌ டைரியின் உள்ளே பத்திரப்படுத்தினாள்.

"பாசமா இருக்கலாம்.." என்றவளின் அலைபேசி அதே நேரத்தில் ஒலித்தது.

"ஹலோ.." என்றபடியே தனது அறைக்கு நடந்தாள் ஆது.

"ஆது.. கம்பெனியில் கொஞ்சம் பிரச்சனை.. என் ஒருத்தனால் சமாளிக்க முடியாது.. துருவ் ஃபோன் ரீச் ஆக மாட்டேங்குது.. நீ உடனே ஆபிஸ் கிளம்பி வரியா..?" என்றான் சுகந்த்.

"இதோ இப்போதே கிளம்பி வரேன்.." ஆது டைரியை பத்திரப்படுத்திவிட்டு கம்பெனிக்கு கிளம்பினாள்.

விஜய் தரையில் கிடந்த ராஜேந்திரனை உற்று பார்த்தான். "உன் மேல எங்க அம்மா உயிரையே வச்சிருந்தாங்க.. அவங்களை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்தது..? அம்மாவுக்கு இப்ப எங்க மூணு பேரை தாண்டி வேற உலகமே இல்ல.. ஆனா உனக்கு இப்படி ஒரு செகண்ட் கூட தோணவே இல்லயே..!? இப்ப கூட நீ செத்துட்டன்னு அழறது உன் மேல இருக்கற பாசத்தால இல்ல... எங்க அம்மா வளர்த்த வளர்ப்புக்கு மரியாதை இருப்பதால்தான்.." என்ற விஜய் தன் கண்ணோரம் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

"நாம வீட்டுக்கு போகலாம்.. எழுந்து வா அண்ணா.. இந்த ஆளுக்கு கொள்ளி வைக்க கூட எனக்கு விருப்பம் இல்ல.. இவன் இங்கேயே நாறி சாகட்டும்.."

"வாவ்.. வாவ்.. செம ஃபேமிலி டிராமா.." என கை தட்டி சிரித்த ராபர்ட்டை முறைப்பாக பார்த்தபடி எழுந்து நின்றனர் அண்ணன் தம்பி மூவரும்.

"உனக்கு என்னடா வந்தது..? எதுக்குடா இந்த ஆளை நீ சுட்ட..? என் அண்ணனுங்க ஜெயிலுக்கு போறதுல உனக்கென்னடா லாபம் இருக்கு..? இவன் யாரை எரிச்சான்னு தெரிஞ்சிக்கிட்டு இந்த ஆளை சட்டத்து முன்னாடி நிறுத்தி என் அண்ணனுங்க மேல இருக்கற பொய் பழியை நீக்கலாம்ன்னு இருந்தேன்.. அத்தனையிலும் மண்ணை வாரி போட்டுட்டியே.." என்ற ஜீவா அவனை நோக்கி கோபமாக பாய அவனை பிடித்து நிறுத்தினான் துருவ்.

ஆது அலுவலகம் நுழைந்த நொடியே அவளை மீட்டிங் நடக்கும் அறைக்கு இழுத்து சென்றான் சுகந்த்.

"என்ன பிரச்சனை..?" குழப்பமாக கேட்ட ஆதுவை மீட்டிங் அறையின் வெளியில் நிறுத்தியவன் "நம்ம கம்பெனி நம்ம கையை விட்டு போக போகுது.. துருவ் தன் அப்பாவோட சதியில் இருந்து தப்பிக்க போராடிட்டு இருந்தான். ஆனா கம்பெனியோட பிரச்சனைகளை கவனிக்க தவறிட்டான்.. கம்பெனியோட ஷேர் முழுக்க எங்கக்கிட்ட இருக்குன்னு ஒரு கூட்டம் கிளம்பி வந்து போர்ட் மீட்டிங்க்ல உட்கார்ந்திருக்கு.." என்றான். தனது நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான்.

"எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே தெரியல ஆது.." என குழப்பமாக இருந்தவனின் தோளை தொட்டாள் அவள்.

"அவங்க ஜெயிக்க முடியாது.. நான் இதை பார்த்துக்கறேன்.." என்றவள் போர்ட் மீட்டிங் நடக்கும் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

ஜீவாவின் கரம் பற்றினான் துருவ்.
"அவன் ஏதோ ப்ளான்ல இருக்கான்.. இப்படி கோபப்பட்டு அவன் வலையில் நீயாகவே போய் சிக்கிக்காத.." அவன் காதோரம் கிசுகிசுத்தான் துருவ். ஜீவா தன் மொத்த ஆத்திரத்தையும் கட்டுப்படுத்த படாத பாடுபட்டான்.

"ஒற்றுமையில் எதையும் சாதிக்கலாம்.." என்று ஜீவாவிடம் மெல்லிய குரலில் கூறிய விஜய் அருகிலிருந்த நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்தான்.

"நீ என்ன கதை வச்சிருக்கியோ சொல்லு.. ஜெயிலுக்கு போகும் முன்னாடி அதையும் கேட்டுட்டு போறோம்.." என்றான் கையிலிருந்த தூசியை ஊதியபடி.

'இவனுங்க முடிச்சிட்டு பேசுறவங்களாச்சே.. இன்னைக்கு ஏன் எதுவுமே செய்யாம செண்டிமெண்டா பேசிட்டு இருக்காங்க..?' எப்போதும் தாம் தூம் என குதிக்கும் அண்ணன் தம்பிகள் இன்று எதற்காக இப்படி எதிரியை அலட்சியமாக கையாளுகிறார்கள் என புரியாமல் குழப்பமாக நின்றுக் கொண்டிருந்தான் நவீன்.

"என் கதை உங்களுக்கு எதுக்குடா..? உங்க அப்பன்தான் செத்தான்னு நிரூபிக்க நான் ஒரு பொணத்தை ஏற்பாடு செஞ்சி கொடுத்திருக்கேன்.. அந்த வீட்டையே தீயை வச்சி கொளுத்திட்டு இந்த ஆளுக்கு இங்கே பாதுகாப்பு தந்திருக்கேன்.. இதுக்கு மேல என்னை பத்தி தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்னடா பண்ண போறிங்க..?" என்ற ராபர்ட் தன் துப்பாக்கியை மீண்டும் ஒரு முறை ஸ்டைலாக சுழற்றினான்.

ஜீவாவின் கண்கள் திடீரென மின்னியது. தன் அருகே இருந்த துருவின் கையை சுரட்டினான். துருவ் என்னவெனும் விதமாக பார்க்க ராஜேந்திரனையும் ராபர்ட்டையும் மாறி மாறி பார்த்து அண்ணனுக்கு கண் சைகை காட்டினான்.

"இதுக்கு இந்த ஆளு உனக்கு எவ்வளவு பணம் தந்தான்..?" வெறுப்பாக கேட்டான் விஜய்.

"இந்த ஆளுன்னு சொல்லுறியே.. உனக்கு அறிவிருக்காடா..? என்னதான் இருந்தாலும் இவர் நம்ம அப்பாடா.. இவர் உயிரோடு இருக்கும் போது மதிக்கலன்னாலும் இப்ப மரியாதை கொடுட்டா.. இதுதான் அம்மா உன்னை வளர்த்த லட்சணமாடா..?" என்றான் ஜீவா விஜயிடம்.

விஜய் குழப்பமாக அவனை பார்க்க ராஜேந்திரன் புறம் கண்ணை காட்டினான் ஜீவா. அவன் கண் காட்டிய திசையில் பார்த்தவன் அந்த நொடி பொழுதில் தன் தந்தையை மொத்தமாக வெறுத்து விட்டான்.

ராபர்ட் மீதே தன் முழு கவனத்தையும் வைத்திருந்த சஞ்சனா ஜீவா கூறிய வார்த்தைகள் கேட்டு முதலில் அதிர்ந்து போய் விட்டாள். ஆனால் ஜீவாவின் கண் சைகையை கவனித்தவள் அதன் பிறகே கீழே ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேந்திரனை கவனித்து பார்த்தாள். உடனடியாக ராபர்ட் சுழற்றி கொண்டிருந்த துப்பாக்கியையும் பார்த்தாள்.

ராஜேந்திரன் திடீரென குண்டடி பட்டு விழுந்ததில் அவளுக்கு ஏற்கனவே பயங்கர சந்தேகம்தான். தான் உயிர் வாழ தன் மகன்களை கொல்ல முயன்றவர் இன்று யாரோ ஓர் அந்நியன் கையால் இறந்து விட்டதன் காரணம் புரியாமல் நின்றிருந்தவள் இப்போது அனைத்தும் புரிந்து கோபத்தை அடக்க பற்களை கடித்தாள்.

போர்ட் மீட்டிங் நடந்துக் கொண்டிருந்தது. ஆது ஏதாவது பேசுவாளா என அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் சுகந்த். அவளோ தன் நகங்களின் வண்ணப்பூச்சை ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.

"இந்த கம்பெனியோட மொத்த ஷேரையும் நாங்க வாங்கி இருக்கோம்.. அதுக்கான பேப்பர்ஸ் இது.." என ஒருவன் பெரிய சைஸ் பைல் ஒன்றை சுகந்த் முன்னால் வைத்தான்.

சுகந்த் குழப்பமாக அதை கையில் எடுத்தான். அதை அவனிடமிருந்து பறித்த ஆது பைலை தரையில் தூக்கி வீசினாள்.

"ஏய்.. யார் நீ..? கம்பெனியோட போர்ட் மீட்டிங் நடக்கற இடத்துல உனக்கு என்ன வேலை..?" என ஒருவன் எழுந்தான்.

மேஜை மீது தன் இரு கையையும் தட்டி விட்டு எழுந்து நின்றாள் ஆது. "நான் யாருன்னே தெரியாமதான் என் கம்பெனியை நீங்க வாங்கிட்டதா சொல்லி பேப்பர்ஸ் தயார் பண்ணிட்டு வந்திங்களா..?" என கேட்டாள்.

'இவ என்ன புதுசா எதையோ சொல்லுறா..?' என புரியாமல் பின்னந்தலையை சொறிந்தான் சுகந்த்.

"இது என் கம்பெனி.. இதுக்கு ஷேர் ஏதும் கிடையாது.. லீகலா என் ஒருத்தி பேருல மட்டும்தான் இந்த மொத்த சொத்தும் இருக்கு.. நான் கையெழுத்து போடாம இந்த கம்பெனிக்கு சொந்தமான ஒரு சிங்கிள் பேனாவை கூட வெளியே விற்க முடியாது.." என்றவள் சுகந்த் பக்கம் திரும்பினாள்.

"பப்பு கம்பெனி விசயத்துல அதிகம் கவனம் செலுத்துலதான்.. ஆனா அதோட பாதுகாப்புல கவனமா இருந்தான்.." என மெலிதாக நகைத்தவளை கண்டு பெருமூச்சு விட்டபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் சுகந்த். அப்பாடா என எண்ணி அவன் நெஞ்சில் கை வைத்தது கண்டு ஆதுவின் புன்னகை இன்னும் அதிகமானது.

ராபர்ட் தன் மொபைல் ஒலிக்கவும் அதை எடுத்து பேச ஆரம்பித்தான். சஞ்சனா அந்த நேரத்தை பயன்படுத்தி தன் மொபைலுக்கும் தன் கையில் இருந்த கேமராவுக்குமான இணைப்பை ஆன் செய்தாள். கேமராவில் பதிவான அனைத்தையும் அவள் தனக்கு வேண்டிய ஒரு இடத்தில் லைவ்வாக ஒளிப்பரப்பு செய்ய ஆரம்பித்தாள்.

'சாவுங்கடா.. என் ஜீவாவையா இவ்வளவு டார்ச்சர் பண்றிங்க..? உங்க எல்லோருக்கும் ஒரிஜினல் டார்ச்சரை நான் காட்டுறேன்டா..' என உள்ளுக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள் சஞ்சனா.

ராபர்ட் ஃபோனை பேசி முடித்ததும் துருவ்வை பார்த்தான்.

"உன் கம்பெனி உன் பேர்ல இல்லையா..?" என கேட்டான்.

துருவிற்கு அவன் கேட்டது முதலில் புரியவில்லை. அதன்பிறகே விசயம் புரிந்து தன்னை மறந்து சிரித்தான்.

"ஓ.. என்கிட்ட மிரட்டி கையெழுத்து வாங்கதான் இத்தனை டிராமாவுமா..?" என்றவன் ஜீவாவை விட்டு விலகி வந்து ராஜேந்திரனை ஆச்சரியமாக பார்த்தான்.

"அடேய் தகப்பா.. இது உன் மானங்கெட்ட மூளை பார்த்த வேலையாடா..?" என்று வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் துருவ்.

"அடச்சீ.. எழுந்து உட்காரு.. உன் நடிப்பும் கேவலமா இருக்கு.. நீ கை கோர்த்த ஆளோட துப்பாக்கியும் பொய்யாவே இருக்கு.. போலிஸ்‌ எனக்கே ஒரிஜினல் துப்பாக்கி எது டூப்ளிகேட் எதுன்னு கொஞ்ச நேரத்துக்கு புரியாம போயிடுச்சி..." என்றான் ஜீவா எரிச்சலாக.

"ப்ளட் செட் பண்ணது ஓகே.. ஒரிஜினல் ப்ளட் உடனே உறைஞ்சி போயிடும், உன் பொய் ரத்தம் உறையாதுங்கற அறிவு கூடவா இல்ல..?" என நக்கலாக கேட்டபடி அருகே வந்து ராஜேந்திரன் காலை மெல்லமாக உதைத்தான் விஜய்.

ராஜேந்திரன் சட்டையை கழட்டியபடியே எழுந்து அமர்ந்தார். "இது வேற கசகசன்னு இருக்கு.." என்றவர் துருவை பார்த்து கலகலவென சிரித்தார்.

"அடேய்.. உன் அப்பன்டா நான்.." என்றபடியே எழுந்து நின்றார்.

"உன் புள்ளை பேருல சொத்து இல்லை.. உன் மருமக பேர்லதான் இருக்கு... உன் ப்ளான் சூப்பரா ஒர்க் அவுட் ஆகிடுச்சி.. அந்த பொண்ணு இப்ப நம்ம ஆளுங்க கையில்தான் இருக்கா.. ஆடு வந்து தானா மாட்டிக்கிச்சி.." ராபர்ட் கட்டை விரல் உயர்த்தி சொன்னான்.

"டேய் பிஸ்கோத்து.. நானெல்லாம் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா..? இவனுங்களை இங்கே திசை திருப்பி வைக்கதான்டா இந்த உதவாதே ப்ளானை போட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்தில இவனோட மொத்த சொத்தும் என் பேருக்கு வந்துரும்டா.." என்ற ராஜேந்திரன் தன் ஃபோனை எடுத்து நம்பரை டயல் செய்து காதில் வைத்தார்.

"குட்டிம்மா.. துருவ் பொண்டாட்டி பேர்லதான் மொத்த சொத்தும் இருக்கும்ன்னு நான் சொன்னது சரிதானே..?" என்றவர் சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தார். "ஒன்னும் பிரச்சனை இல்ல..? உன் புருசன் உயிர் வேணுமா இல்ல இந்த சொத்து வேணுமான்னு கேட்டு கையெழுத்தை வாங்கிடு.. நான் இங்கே என் மத்த இரண்டு. மகனுங்ககிட்டயும் கையெழுத்தை வாங்கிடுறேன்.." என்றவர் ராபர்ட்டுக்கு சைகை காட்டினார்.

துருவ், விஜய், ஜீவா மூவரும் அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ராபர்ட் தன் பாக்கெட்டிலிருந்து ஒரிஜினல் துப்பாக்கியை எடுத்தான்.

"அதோ அந்த கேமராகாரியை பிடி.. அவ கண் அசைச்சாதான் என் மூணாவது மகன் கையெழுத்தை போடுவான்..." என்றவர் மகன்கள் புறம் திரும்பினார்.

"டேய் பசங்களா.. எனக்கே ஸ்கெட்சா..? நீங்க அப்பான்னு கூப்பிட்ட உடனே திருந்திடலாம்ன்னு கூட ஒரு செகண்ட் யோசிச்சிட்டேன்டா.. ஆனா பாருங்க நீங்க தர அஞ்சி பத்தை வச்சி நான் ஆசைப்பட்ட சொகுசு வாழ்க்கை வாழ முடியல.. சொத்து முழுக்க என் பேருக்கு எழுதி தரீங்களா..? இல்ல என்னை கொன்னுட்ட பழிக்கு ஜெயிலுக்கு போறிங்களா..?" என்றவர் பக்கம் பக்கமா இருந்த பைல் ஒன்றை கையில் எடுத்தார்.

***********
எழுதியவர்: செவ்வந்திதுரை

ஐடி: sevanthidurai

***********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro