10. மீரா ஜோ

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அத்தியாயம் -10.

  மகேஷ், விக்ரம், அமிர்தா அனு கோவிலை நோக்கி இரண்டு அடிகூட எடுத்து வைத்திருக்கமாட்டார்கள்.

திடீரென்று சூறைக்காற்று பலமாக வீச, 

கதிரவனோ, வேகமாகச் சென்று மேகத்தினுள் ஒழிந்து கொண்டான்.

அதனால் சட்டென்று இருள் சூழ்ந்ததும் நால்வருக்குமே, 'ஏதோ சரியில்லை' என்று தோன்றிய வினாடி அந்த ஊரே அதிரும் அளவிற்கு அகோரிப் பெண்ணின் சிரிப்புச் சப்தம் கேட்டது.

"அனு! அமிர்தா! விக்ரம்! என் பின்னாடி வாங்க.. நாம முதல்ல கோயிலுக்குப் போயிடுவோம.... சீக்கிரம் ." என்று கூறி அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு மகேஷ் வேகமாக கோயில் இருக்கும் திசையை நோக்கி ஓடினான்.

'அகோரியிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதே முதல் வேலை.' என்பதை உணர்ந்த விக்ரமும் அனுவின் கையை அனிச்சையாகப் பிடித்துக் கொண்டு மகேஷைப் பின்தொடர்ந்தான்.

சட்டென்று தன் கையை அனு விக்ரமின் பிடியிலிருந்து உதறினாள்.

எதிர்பாராமல் அனு இவ்வாறு செய்ததால் விக்ரமும் சில அடிகள் தடுமாறி, பிறகு தன்னை நிதானப் படுத்திக் கொண்டு, அனுவை முறைத்துப் பார்த்தான்.

"சரி! நீ என் முன்னாரடி ஓடு. நான் பின்னால் வருகிறேன்." என்று கூறினான்.

அதற்குள் அகோரி அனுவை நெருங்கி அவளின் துப்பட்டாவைத் தொட்டதும், 

'இவளோடு வழக்காட இது சமயமில்லை.' என்று உணர்ந்த விக்ரம், அனுவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.

சுற்றிலும் சூழ்ந்துள்ள கரிய இருளால், அவர்களுக்கு முன்னால் ஓடிய மகேஷையும், அமிர்தாவையும் காணவில்லை.

"நீ என்ன செஞ்சுட்ட பாரு… அவங்க ரெண்டு பேரையும் காணேம்… இந்த இருட்டுல கோயில் எந்தப் பக்கம் இருக்குன்னு கூடத் தெரியாது எனக்கு." என்று அனுவைத் திட்டிக்கொண்டே விக்ரம் ஓட,

"எனக்குத் தெரியும் வா!" என்று கோபத்தைவிட உயிர் பிழைப்பதே முதல் காரியமென்று உணர்ந்த அனு விக்ரமின் கையைப் பற்றிக்கொண்டு ஓடினாள்.

சில நோடிகள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான விக்ரம்,

தன் கையை இறுகப் பற்றியிருந்த அனுவின் கையைப் பார்த்தபடி அவளுடன் இணைந்து ஓடினான்.

விக்ரமிற்கு தற்போதைய நிலை மறந்து, இத்தனை வருடங்களாக தன்னிடம் கோபம் கொண்டு, இருந்தவள், இப்போது அவளாக வலிய தன் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவும்,

சுற்றிலுமிருந்த மையிருட்டு வேளையிலும், விக்ரமனின் மனதில் பூக்களின் கதம்ப நறுமணத்தைத் தாங்கி வரும் குளிர்ந்த தென்றல் வீசி, அதன் சுகந்தம் தேகமெங்கும் பரவ, வானத்துத் தேவதைகள் தங்கள்மேல் பூச்சொரிய, திடீரென்று தங்களுக்கும் இறக்கைகள் முளைத்து பறப்பது போல் தோன்ற...

"டேய் எரும… என்ன திடீர்னு எரும கணம் கனக்குற?" என்று கூறியபடி திரும்பிப் பார்த்த அனு,

வீல் என்று வீரிட்டு கத்தினாள்.

தான் பிடித்துக்கொண்டு ஓடுவது அகோரியின் கையை என்று உணர்ந்தவள், தன் கையை எடுத்துவிட்டு அரண்டு பின்வாங்கினாள்.

"இத்தனை வருடங்களாக காவு வாங்கக் காத்திருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் காதல் கேட்குதோ?" என்று அலறியபடி,அனுவின் கூந்தலைப் பற்றித் தூக்கினாள்.

அகோரியின் மறுகையில், வான்வெளியில் ரெக்கைகட்டிப் பறப்பது போன்ற இன்பக் கற்பனையுடன், இமைகளைமூடி விக்ரம் பறந்து கொண்டிருந்தான்.

கோயிலுக்குள் சென்றதும் மூச்சு வாங்க அப்படியே கோயில் திண்டில் சாய்ந்தனர் மகேஷும், அமிர்தாவும்.

நெஞ்சே வெடித்துவிடும் அளவு, நுரையீரலில் காற்று இருப்பதுபோல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி நின்றவர்கள், 'விக்ரமும் அனுவும் வருகிறார்களா?: என்று தெரு முனைவரை பார்வையை ஓட்ட,

கோயில் மட்டுமே வெளிச்சமாகவும், கோயிலுக்கு அப்பால் இருந்த வீதிகள் கரிய ஆடை உடுத்தினார்போல் இருந்தது.

மிக வேகமாக ஓடிவந்ததில் இரு கால்களும் வெடவெடவென நடுங்கியதால் கோயில் திண்டில் ஏறி அமர்ந்து தன் கால்களை நீவி விட்டுக்கொண்டிருந்த அமிர்தாவை, 

வியர்வையால் குளித்த தனது முகம், கழுத்துப் பகுதிகளை தனது சட்டையைக் கொண்டே துடைத்தபடி பார்த்த மகேஷுக்கு, 

அமிர்தாவின் அழகிய வதனமும், பிறை நெற்றியிலிருத்த கடுகு போன்ற பொட்டும், 

கண்சிமிட்டும் போது, அடர்ந்த மயிர்களை உடைய இமைகளின் அசைவு, தோகை விரித்து ஆடும் மயிலையும்,

வியர்வையால் நனைந்திருந்த சங்குக் கழுத்தோ, எலுமிச்சைத் தோளால் துலக்கிய வெண்கல செம்புபோலவும், அதற்குக் கீழே…

"டேய் ஆந்தக்கண்ணா! கண்ணு எங்க போகுது? பணியாரத்த திருப்புற மாதிரி திருப்பிடுவேன் ஆமா… மூஞ்சிய பாரு மூஞ்சிய… விக்ரமையும் அனுவையும் காணோன்னு பதறிக்கிட்டிருக்கேன். இப்பதான் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடைய பார்த்த மாதிரி, ஈஈஈ னு இளிச்சுக்கிட்டு பார்க்கிறான்."

"ஏய் என்ன ரொம்ப ஓவரா பேசுற?"

"பின்ன? இன்னும் கால்வாசி கிணறுகூட தாண்டாத நிலைல இருக்கோம்ங்கிறத மறந்துட்டு, பத்துநாளா பட்டினி கிடந்தவன் வெடக்கோழிய வெறிச்சுப் பார்க்கிற மாதிரி முழிபிதுங்கி நின்னா, எப்படி பேசுவாங்களாம்?"

"ரொம்ப அலட்டிக்காத, நான் வெறிச்சுப் பார்க்குற அளவு நீ ஒன்னும்…" என்று மகேஷ் பேசும்போதே,

"அவங்க ரெண்டு பேரையும் இன்னும் காணோம்… நீ என்னோட வழக்காடிட்டிருக்க." என்று அமிர்தா கத்தினாள்.

தன்னிலை அடைந்த மகேஷ் கோயிலின் நிலை வாசலை நெருங்கிச் சென்று வீதியை உற்று நோக்கினான்… 

வீதியில் இருந்த எதுவுமே கண்களுக்குப் புலப்படாததால், அப்பொழுதுதான் அசுவாசமான இதயம், ரயில் எஞ்சினைப் போல் வேகமெடுத்தது.

"விக்ரமுக்கு வழி தெரியலைனாலும் அனுவுக்குத் தெரிஞ்சிருக்குமே?... ச்சே என்ன மடத்தனம் பண்ணிட்டேன்… அவங்கள முன்னாடி போகச்சொல்லிட்டு, நான்ல பின்னால வந்து இருக்கணும்." என்று தன்மீதெழுந்த கோபத்தில் தலையில் அடித்துக்கொண்டவனுக்கு, 'அவர்களுக்கு எதுவும் ஆகிவிட்டதோ?' என்ற நினைவில் வயிறு கலங்கியது.

பயத்தில் தன் அருகில் வந்து கையைப்பற்றிக் கொண்ட அமிர்தாவைப் பார்த்தான்.

அவள் மகேஷின் கையைப் பற்றிய உணர்வே இல்லாமல், 'விக்ரமும் அனுவும் வரவில்லையே' என்று பரிதவித்து நின்றிருந்தாள்.

"என்னாச்சுன்னு தெரியலையே மகி! எனக்கு ரொம்ம்ப பயமாயிருக்கு… இங்க நின்னு காத்திருக்கிறத விட வந்த வழியில் திரும்பிப் போய் பார்த்து டலாமா?" என்று பதட்டத்தில் அமிர்தா கேட்டாள்.

அவள் தன் பெயரை சுருக்கி 'மகி' என்றழைத்ததில் மகேஷ் உச்சி குளிர்ந்து போனான்.

"பயத்தில் ஒறைஞ்சு போய் நிற்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா நீ என்ன இப்படி சிலையாக நின்னுட்டு இருக்க?... சீக்கிரம் வா! அவங்களத் தேடிப் போகலாம்." என்று அவனை பிடித்து விளையாட்டாக, அமிர்தா வாசலை நோக்கித் தள்ளிவிட,

மகேஷும் சிரித்துக்கொண்டே கோயிலின் நிலை வாசலைத் தாண்டி போய் தடுமாறி நின்றான்.

அதைக் கண்டு சிரித்தபடியே கோயில் வாசல் நிலைப்படியைத் தாண்டுவதற்காக அமிர்தா காலை எடுத்த நேரத்தில், 

மகேஷ் அப்படியே அந்தரத்தில் பறந்தான்.

என்ன ஆயிற்று என்று புரியாமல் அமிர்தாவிற்கு பயமும் அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்க, வேகமாக நிலைப் படியைத் தாண்ட எத்தனித்தவள் தடுமாறி கோயிலுக்குள்ளேயே விழுந்து எழ முயற்சிக்கையில்,

தோள் சுருங்கிய முதிய கரங்கள் அவளைத் தொட்டு தூக்கியது.

நிமிர்ந்த அமிர்தா தன்னைப் பிடித்திருந்த கையைப்பார்த்து, பயந்து உதறி, பின்னோக்கிச் சென்றவள், மீண்டும் நிலைப்படியில் தட்டித் தடுமாறி கோயிலுக்கு வெளியே விழப் போனவளை, ஓடிவந்து பிடித்தார் மகேஷின் தாயார்.

"அவளை நிலைவாசலைத் தாண்ட விடாதம்மா!" என்று முதிய பெண்மணி பதற,

மகேஷின் அம்மா அமிர்தாவை உள்ளிழுத்து நிற்க வைத்தார்.

"அம்மா மகேஷ் ஆபத்தில் இருக்கான். வாங்க போய்க் காப்பாத்துவோம்…" என்று பதறிய அமிர்தாவிடம்,

"நீ வெளியே போகாதே அமிர்தா… நீ போகாதவரை மகேஷுக்கு எதுவும் ஆகாது…" என்றார் அம்முதிய பெண்மணி.

"இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாம எதாவது சொல்லாதீங்க. யார்ங்க நீங்க? நீங்க ஏன் என்னைத் தடுக்கிறீங்க?" என்று முதியவளிடம் வெடுவெடுத்த அமிர்தா, மகேஷ் அம்மாவிடம்,

"அம்மா... அங்கே மகேஷ் மட்டுமில்ல… விக்ரமையும், அனுவையும் கூட காணோம்…" என்று கூறியபடி மகேஷின் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு கோயில் வாசலை நோக்கிச் சென்றாள்.

"உனக்குத்தான் நடந்தது, நடப்பது எதுவுமே தெரியாது… நான் சொல்றதக் கேளு" என்று கூறிய முதியவளுக்கு புரையேறி, தொடர்ந்து இருமவும்,

அமிர்தாவைக் கையில் பிடித்தபடியே முதியவரை நோக்கிச் சென்றார் மகேஷின் அம்மா…

"அங்க மூனு உயிர் துடிச்சிட்டிருக்கு… இந்த பாட்டி இருமுதுன்னு ஓடுறீங்களே!" என்று மகேஷின் அம்மாவைத் தடுத்தாள் அமிர்தா.

"இந்த அம்மா இருந்தாதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்." என்று கூறிவிட்டு, அந்த முதியவளின் அருகில் சென்று தலையை மிருதுவாகத் தட்டி, முதுகைத் தடவிக் கொடுத்தார்.

அமிர்தாவின் நிலைதான் நெருப்பில் நின்றதைப் போலிருந்தது…

'தன் மகனைக் காப்பாத்த‌ அவங்களும் போகம , என்னையும் போகவிடாம' என்று நொந்து புலம்பிக்கொண்டிருந்தாள் அமிர்தா…

அந்த நிமிடத்தில்தான், அவள் மகேஷ் மீது கொண்டிருந்த பிரியம் அவளுக்கே புரிந்தது… 

'மகேஷ் இல்லாத வாழ்வு, தனக்கு நிம்மதியைத் தரப்போவதில்லை' என்று திண்ணமாக புரிந்தவளின் கண்கள் உருகி அருவியாய்க் கொட்டியது.

"நமக்கு நேரமில்லை… ரெண்டு பேரும் ஓடிப்போய் அந்தப் பெட்டியை எடுத்துட்டு வாங்க!" என்று முதியவள் ஆணையிட, 

மகேஷின் அம்மா அமிர்தாவின் விருப்பத்தை அறியக்கூட முயலாமல் அமிர்தாவைத் தரதரவென இழுத்துக்கொண்டு கோயில் குளத்தை போக ஓட,

"அம்மா! உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று வேதனை மேலிடக் கேட்டாள்.

"என் மகனைக் காப்பாற்ற, என் உயிரையும் கொடுக்கத் தயங்காத நான், என் முழங்கால் வலியையும் பொருட்படுத்தாம இப்படி ஓடுறேன்னா, அதுக்கு ஒரு காரணமிருக்குன்னு கூடவா புரிஞ்சுக்க மாட்ட? உன்னோட போராடிக்கிட்டு இருக்க எனக்கு இப்ப நேரமில்ல... தயவுசெஞ்சு என்னோட வேகமா வா." என்று கூறியபடி மூச்சிரைக்க ஓடினார்.

அவரின் அந்தக்கூற்றில் இருந்த உண்மை அமிர்தாவைத் தாக்க, எண்ணமெல்லாம் அவர்கள் மூவரிடமிருந்தாலும் மகேஷின் அம்மாவோடு ஓடியவள்,

"சரிம்மா… எங்க போறோம்னாவது சொல்லுங்க…" என்று கேட்டாள்.

"அதோ… அங்க"

"அங்க ஏன்" என்று கேட்குமுன்பே,

"அங்கே ஒரு பெட்டி இருக்கு… அத உங்க நாலுபேர்ல ஒருத்தராலதான் எடுக்க முடியும்…"

"அம்மா… அந்தப் பெட்டிய காட்டிலிருந்து எடுத்து வந்துட்டோம்…"

"இது வேற, சின்னதா வெத்தலை பெட்டி மாதிரி இருக்கும்." என்று கூறியவர், பதட்டத்துடன், 'நீங்க கொண்டு வந்த அந்தப் பெட்டி எங்க?" என்று கேட்டார் ‌ 

"கோயில் வாசலுக்குப் பக்கத்துல நான் இருந்தேனே, அந்தத் திண்டுலதான் இருக்குது."

"ஷ்ஷ் அப்பா… நல்லவேளை!..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி,  ஓடியவருக்கு முழங்கால் எலும்பு விலகி வலியெடுக்கவே, அதற்குமேல் நிற்கக்கூட இயலாமல் விழுந்தார்.

அவரைத் தூக்கச் சென்ற அமிர்தாவிடம், "வேகமா ஓடிப்போய் அங்க இருக்கிற சின்ன பெட்டியையும் எடுத்துட்டு வா!" என்று பெட்டி இருக்குமிடத்தைக் கூறி கிட்டத்தட்ட அமிர்தாவை விரட்டினார்.

அவர் குரலிலிருந்த வேதனையும், அவசரமுமே, தன் மகனைக் காக்க போராடும் தாயின் மனதை எடுத்துக் காட்டியது…

பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் மகேஷ் அம்மா காட்டிய திசையில் ஓடினாள்…

"எதற்காக ஓடுகிறோம்? அந்த வெத்தலை பெட்டியில் என்ன இருக்கிறது? அதை எடுத்து மகேஷ் அம்மாட்ட கொடுத்துட்டு, அவங்க மூனுபேரையும் போய் பார்க்கனுமே…' என்று எண்ணிய அமிர்தா, 

"இந்நேரம் அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது தாயே!" என்று ஆலயத்தில் இருந்த அம்மனிடமும் கோரிக்கை வைத்தபடி ஓடினாள்…

மகேஷுக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அதற்கு மேல் தானும்உயிரோடு இருக்கக் கூடாதென்று முடிவெடுத்தபடி எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ எத்தனை வேகமாக காற்றைக்கிழித்துக்கொண்டு ஓடினாள்.

மகேஷின் அம்மா காட்டிய இடத்தில், கோயிலுக்குச் சொந்தமான குளம் இருந்தது.

குளக்கரையிலிருந்து இறங்கிய படியில் வேகமாக இறங்க எத்தனித்த அமிர்தாவிற்கு வழுக்கி விட, அருகில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டாள்.

பிறகு நிதானமாக படியில் இறங்கி, இடதுபுற சுவரை உற்று நோக்க, அதில் ஒரு கல்லில் மட்டும் சிவப்பு கலரில் சூலம் வரையப்பட்டிருந்தது.

மெல்ல அதனருகில் சென்று, அந்தக்கல்லை அசைக்க முற்பட்டாள். ஆனால் அந்தக் கல் கொஞ்சம்கூட அசையவில்லை…

அப்பொழுது யாருமில்லா அக் குளத்தில் திடீரென்று "குளத்து தண்ணிய எடுத்து அதுமேல ஊத்து" என்று எதிரொலித்ததும் பயந்து பின் வாங்கியவள், 

'குளத்துக்குள் கேட்கும் குரல் யாருடையது? யாரும் தண்ணிக்குள்ள இருக்கிறாரகளோ?' என்று பயந்து, குளத்திலிருந்த தண்ணீரையே உற்று நோக்க,

"அங்க என்னத்த வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்க? நமக்கு நேரமில்ல. மூனு உசுர காப்பாத்தப் போறதில்லையா?" என்று மீண்டும் அதே குரல் வரவும்,

'ஐய்யோ அவங்களக் காப்பாத்தனுமே?' என்ற நினைவே புது உத்வேகத்தைக் கொடுத்தது. 

வேகமாக மறுபடியும் சூலம் வரைந்த கல்லின் அருகில் சென்று, குளத்து தண்ணீரைக் கையிலெடுத்து, அந்தக் கல்லின் மீது மீண்டும் மீண்டும் ஊற்றினாள்.

அப்பொழுதும் கல் அசையவில்லை.

"அதோ... பக்கத்துல ஒரு இரும்புக்கம்பி இருக்கு பாரு. அத வச்சு அந்தக்கல்லைச்  சுத்தி இருக்கிற மண்ணை சுரண்டி எடு… சீக்கிரம்… வேகமா…"  என்று மீண்டும் குளத்திலிருந்து அந்த குரல் எதிரொலித்தது.

'இது யாரோட குரல்? திடீர் திடீர்னு கத்தி, என்னை பயமுறுத்திக்கிட்டிருக்கே' என்று நினைத்தாலும், 

அங்கே இருந்த ஒரு கூரான இரும்புக் கம்பியை எடுத்து, சூலம் வரைந்திருந்த கல்லைச் சுற்றி இருந்த மண்ணைச் சுரண்டி விட்டு, மீண்டும் தண்ணீர் ஊற்றிவிடவும் கல் அசைந்து கொடுத்தது. 

"யப்பா…" என்றபடி வேகமாக அந்தக் கல்லை உருவினாள்.

ஒரு அடி நீளத்துடனிருந்த கல் வெளியே வந்ததும், கல் இருந்த துவாரத்தைப் பார்த்தவளுக்கு, பயத்தில் தொண்டை அடைத்தது.

காய்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டே மீண்டும் கல் இருந்த துவாரத்தைப் பார்த்தாள்.

"எவ்வளவு நேரந்தான் இப்படியே பார்த்துட்டிருப்ப? அதுக்குள்ள தேள், பாம்பு, பூரான் எதுவுமே இருக்காது. கையை உள்ள விட்டு சீக்கிரமா பெட்டிய எடு." என்று மீண்டும் குளத்தில் குரல் எதிரொலித்தது.

'இந்தக் குரல் யாருடையது? ஒருவேளை அந்த அகோரியின் குரலாக இருக்குமோ? இந்தப் பொந்துக்குள்ள, பாம்பு ஏதுவும் இருந்து, அது என்னைக் கொத்தி சாகடிக்கட்டும்னு நினைக்கிறாளோ?' என்ற சந்தேகம் வர,

அமிர்தா மீண்டும் குளத்தைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

"நீ அந்தப் பெட்டியை எடுக்காட்டாலும் செத்து தான் போவாய்! அதுக்கு பதிலா, துணிஞ்சு கையை உள்ள விட்டு பெட்டியையாவது எடு!" என்று மீண்டும் கடுமையாகக் குரல் எதிரொலிக்கவே,

'என்ன நடந்தாலும் சரி!' என்ற முடிவுக்கு வந்த அமிர்தா, சட்டென்று உள்ளே கையைவிட்டு,  அதிலிருந்த பெட்டியை வெளியே எடுத்தாள்.

பித்தளையால் செய்த அழகான வேலைப்பாடுகளுடன் இருந்தது அந்த வெத்தலைப் பெட்டி.

ஆனால் பெட்டி முழுதும் பாசி பிடித்து பச்சை கலரில் இருந்தது. 

அந்தப் பெட்டியை அமிர்தா தொட்டதுமே, அமிர்தாவிற்கு மட்டுமல்லாமல், அகோரியின் பிடியிலிருந்த மகேஷ், அனு, விக்ரமிற்கும், மயில்விழி அகோரியான கதையிலிருந்து,

தாங்கள் நால்வரில், அமிர்தா, அன்னம்மாளின் மகள் மாதவிக்குப் பிறந்தவள் என்பதும்,

விக்ரம் அன்னம்மாளின் மகன் ஸ்ரீதரின் மகன் என்பதும், 

மகேஷும், அனுவும் பொன்னுத்தாய்க்குப் பிறந்த அமராவதியின் குழந்தைகள் என்பதும், 

நால்வரும், குடும்பத்தை இழந்து அனாதைகளாக ஆஸ்ரமத்தில் வளர்ந்தது முதல், அகோரி தங்களை விரட்டுவது வரை 

நால்வரின் கண்முன் மூன்றே நிமித்தில் விரிந்தது.

அனைத்தும் அறிந்ததில் மனம் சுமையாக, அசையாமல் நின்ற அமிர்தாவிற்கு அம்மூவரும் அகோரியின் வசம் இருப்பது நினைவு வந்து,

பெட்டியை எடுத்துக்கொண்டு அமிர்தா வேகமாக படிகளில் ஏறி, படிகளின் முடிவில் இருந்த எதோ ஒரு உருவத்தின் மீது மோதி, "ஆ….ஆ…" என்ற அலறியவள், மோதிய வேகத்தில் எழுந்த பயத்தாலும், அதிர்ச்சியாலும் கண்கள் இருட்ட, குளத்தின் படிகளில் உருண்டாள்.

"ஏய் என்ன பொண்ணு நீ? இப்படியா பயந்து போயி விழுவ? சீக்கிரம் எந்திரிச்சு வந்து தொலை!" என்று குளத்தின் படி முடிவிலிருந்த உருவம் குரல் கொடுத்தது. 

அந்தக்குரலே குளத்திலும் எதிரொலிப்பதை உணர்ந்த அமிர்தா,

படிகளில் உருண்டதால் ஏற்பட்ட வலியைப் பொறுக்கமுடியாமல், தானாக வழிந்த கண்ணீருடன் குளத்தின் மேலே நிமிர்ந்து பார்த்தாள். 

அங்கே அந்த முதிய பெண்மணி இருப்பதைக் கண்டாள். 

'இந்தக் கிழவி யாரு?.... இவங்களுக்கு எப்படி இங்க பெட்டி இருக்குன்னங தெரியும்?... கடவுளே எங்கள சுததி என்ன...என்னவோ நடக்குது, எங்க முன்னோர் சொஞ்ச தப்புக்கு நாங்க அனுபவிக்குறோம்! '' என்று தன் நெற்றியில் கை வைத்து அழுத்தியவளுக்கு, அகோரியிடம் மாட்டிக்கொண்ட மூவரின் ஞாபகம் வரவும், வேகமாக படிகளில் ஏறி குளக்கரையை அடைந்தாள்.

கையிலிருந்த பெட்டியை முதியவளான மாதவிடம்  கொடுத்துவிட்டு, 

வந்த வழியே மீண்டும் ஓடியவளை,

"நீ அங்கே போய் என்ன செய்யப் போற? நீங்க நாலுபேரும் உசுருபிழைக்கிறதுக்கு, என் கையில இருக்குற இந்தப் பெட்டிதான் வேணும்." என்று மீண்டும் மாதவி கூற, 

சட்டென்று நின்றவள். மாதவியைப் பார்த்து, "என்ன சொல்றீங்க? நாங்க நாலு பேரும் உயிரோடு இருக்க, இந்தப் பெட்டி தான் முக்கியமா? அப்ப நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுக் காட்டுலருந்து ஒரு பெட்டி எடுத்து வந்தமே அந்தப் பெட்டி?" என்ற அமிர்தாவைப் பார்த்தபடியே அவள் அருகில் வந்த முதியவள், 

மொதல்ல நாம அந்தப் பெட்டிக்கிட்ட போவோமா? என்று தள்ளாத வயதிலும் வேகமாக நடந்தாள் முதியவள். 

'இந்தப் பாட்டியும், எதுவும் சொல்லாம சஸ்பென்ஸ்சாவே என்னை வேலை வாங்குது…" என்று நினைத்த அமிர்தா வேறு வழியில்லாமல் அந்த முதியவளைப் பின்தொடர்ந்து சென்றாள்.

மகேஷின் அம்மா கோயில் வாசலில் வெளியே பார்த்தபடி கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தார்.

அமிர்தாவும் ஓடிச்சென்று பார்க்க, அங்கே யாருமே இல்லை… இருளைத்தவிர,

"நீ இங்க வாம்மா… இந்தப் பெட்டியத்திற…" என்று முதியவள் அழைத்ததும்,

ஓடிச்சென்று வெத்தலை பெட்டியைத் திறந்தாள் அமிர்தா. அதில் ஒரு தகடு சிவப்பு நூலால் சுற்றப்பட்டிருந்தது.

அது, ஒருமாதிரியாக எதிர்மறையான உணர்வைத் தர சட்டென்று அந்தப் பெட்டியைக் கீழே வைக்கப்போனவளை,

"என்ன செய்கிறாய்? இதைவைத்துத்தானே அந்த மூனு உசிர காப்பாத்தனும்? இது தரையில வைக்கலாமா?" என்று அதட்டிவர், மீண்டும் அந்தப் பெட்டியை அமிர்தாவின் கையில் வைத்தார்.

"இதுல ஏதோ தகடு மாதிரி இருக்கு பாட்டி!" என்று பதறியவளை,

"பாட்டியா?" என்று அதிர்ச்சியானவரின்  காதில், "சீக்கிரம் நேரமில்லை" என்ற குரல் கேட்டது.

உடனே பெட்டியிலிருக்கும் தகடை எடுத்து, "நீங்கள் கொண்டு வந்த பெட்டிக்குள் இன்னொரு பெட்டி இருக்கும், அதில் இந்த தகடை வைக்கிற மாதிரி அச்சு இருக்கும். அந்த அச்சுல இந்தத் தகட்டை வச்சா உள்ளே இருக்குற பெட்டி திறந்துடும்… முதல்ல அந்தப் பெட்டியத் திற. அப்புறம் என்ன செய்யலாம்னு சொல்றேன்." என்ற முதியவளுக்கு அதற்கு மேல் பேசமுடியாமல் மூச்சு வாங்கியது.

முதியவள் மாதவி கூறியதுபோலவே, அமிர்தா மந்திரித்த தகடை, அவர்கள் கானகத்திலிருந்து எடுத்து வந்த பெரிய பெட்டிக்குள் இருந்த பெட்டியின் அச்சில் வைத்தும் உள்பெட்டி திறக்கவில்லை… 

அனைவருக்குமே டென்சன் ஆகி 'ஏன்?' என்று பதைபதைக்க,

"முதல் பெட்டியைத் திறந்தது வழியில் திறப்பாய்!" என்று முதியவளின் காதில் குரல் ஒலிக்க,,

முதியவள், அமிர்தாவிடம், "முதல் பெட்டியை எப்படித் திறந்தீர்கள்?" என்று கேட்டார்.

"இதோ இதுல, கன்னிப்பையனின் ரெத்தம் வேல்ல பட்டு, அவனோட கன்னிகழியாத மனைவியின் நெற்றிமீது வைத்தபிறகுதான் திறக்கமுடியும்னு போட்டிருந்ததால, நானும் மகேஷும் அந்த இடத்துலயே காந்தர்வ முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து திறந்தோம்." என்று அமிர்தா கூறியதும்,

விரக்தியில் சக்தியெல்லாம் வடிய அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் முதியவள்,

அதைப்பார்த்து மகேஷின் அம்மா, "என்னம்மா இப்படி இடிஞ்சுபோய் உக்காந்துட்டீங்க? பிள்ளைகள் அங்கே என்னமாதிரியான அவஸ்தில் இருக்காங்களோ? எந்திரிங்க… முடியலைன்னா  என்ன செய்றதுன்னாவது சொல்லுங்க" என்று கதற,

"முதல் பெட்டியைத் திறந்ததுபோலத்தான் இந்தப் பெட்டியையும் திறக்கனும்… மகேஷ் இல்லாம இந்தப் பெட்டியை…" என்று மாதவி கூறி முடிக்கும்முன்,

"விசயம் முதல்லயே உங்களுக்குத் தெரிஞ்சும் ஏன் அமிர்தாவால திறக்கமுடியும்னு சொன்னீங்க?" என்று பதறினார் மகேஷ் அம்மா.

"எனக்கும் இப்பதான்மா தெரியும்."

"என்ன சொல்றீங்க?"

என் பிள்ளையும் அண்ணன் பிள்ளையும் அக்கா பிள்ளையும் எப்படி மயில்விழியிடமிருந்து காப்பாத்தச் சொல்லி இத்தனை வருசமா இந்த கோயிலே கதின்னு கிடந்ததால, பிள்ளைகளை காப்பாத்துற வழிய இந்தக் கோயில்ல குடி கொண்டுள்ள அம்மனே என் காதுல சொன்னா."

அமிர்தா அதிர்ச்சியில் உறைந்து விடடாள் "அப்படின்னா நீங்க எனக்கு யார்" என்று நடுக்கத்துடன் கேட்டாள்

"அம்மனா? ஆனா மகேஷ் நம்மோட இல்லையே பின்ன எப்படி பிள்ளைகள…" என்று கண்ணீரோடு மகேஷின் அம்மா கேட்கும் போதே

"ஹாஹ்ஹஹ்ஹஹ்ஹா…. இனி வழியே இல்லை... மீதி இருக்கும் அமிர்தாவையும் என்கிட்ட கொடுத்துடு மாதவி…" என்று ஊரே நடுங்கும் அளவு பெருங்குரல் எடுத்து அகோரி அலற,

"மாதவியா! அப்படின்னா நீங்க என் அம்மாவா" என்று கண்களில் கண்ணீரோடு கேட்டாள் அமிர்தா... "இத பத்தி அப்பறம் பேசலாங அமிர்தா" என்று மாதவி கூறி மிருதனிடம் பேச ஆரம்பித்தாள்...

"உன் வாழ்க்கைய அழிச்ச பாவத்திற்கான தண்டனையை எங்க குடும்பம் அனுபவிச்சுடுச்சே… குடும்பமே சின்னாபின்னமாகி இதோ குழந்தைகள் நாலுபேரும், அவங்க யாருன்னு அவங்களுக்கேத் தெரியாம அனாதையாக நிக்கிறாங்களே… இன்னுமா உன் பழி வெறி அடங்கல?..."

"இல்ல… அன்னைக்கே சொன்னேனே உன் அம்மா கிட்ட உன் பசங்கள எதுவும் பண்ண மாட்டேன் ஆனா அவங்களுக்கு பிறக்க போற பசங்கள வாழவும் விடமாட்டேன் சாகவும் விடம சாகடிப்பேன்னு அனுனுவா" என்று மிருதன் கூறினாள்,

"என்ன நடந்துச்சுன்னு கூடத் தெரியாத அப்பாவிகளை வதைக்கிறது பாவமில்லையா? நீயும் ஒரு பொண்ணுதானே? இரக்கம் காட்ட மாட்டியா?" என்று கேட்டாள் மாதவி..

"இரக்கம் காட்டவா இத்தனை வருசமா காத்திருந்தேன்?… அகோரியாவது அவ்வளவு எளிதானகாரியமா? மனசாலயும், உடலாலயும் எந்த அளவிற்கு வலி இருந்திருந்தா, இப்படி ஆயிருப்பேன்…ம்ஹும்... உனக்கு இது தேவையில்லாதது... எனக்கு ரெத்தப்பசி எடுக்குது… இது தீராப்பசி… ரெத்தத்தைப் புசிக்காம அடங்காது…"

"உனக்கு ரெத்தம்தானே வேணும்? இதோ என் உடலை எடுத்துக்கோ. குழந்தைகள் மூனுபேரையும்  விட்டுடு." என்று மாதவி கண்ணீர் விட்டுக்கதறி அழ,

" உன்னைத் தியாகம் செய்கிறாயா? ஆனா உன் ஒருத்திக்காக மூனுபேரையும் கேட்கிறது அநியாயமா இல்ல?" என்று அகோரி சிரிக்க,

'மகேஷ் மட்டும் வந்துவிட்டால் கூட பெட்டியைத்திறந்து விடலாம்' என்று யோசித்த மாதவி, "மகேஷை மட்டுமாவது கொடுத்து விடு!" 

"அது ஏன் மகேஷ் மட்டும்?"

"இந்தத் தாய்க்கு மகன் வேண்டும்… அவனின் மனைவியான அமிர்தாவுக்கு அவளுடைய கணவன் வேண்டும்…" என்று மகேஷை கேட்பதற்கான காரணத்தை மாற்றி, அன்னம்மாள் கூறவும்,

"சரி வா!" என்று அகோரி அழைத்தாள்.

"நில்லுங்கம்மா… ஏற்கனவே மூனுபேரோட நிலை என்னன்னு தெரியாம தவிக்கிறோம். இதுல நீங்களும் போயிடாதீங்க" என்று மகேஷின் தாய் தடுத்தார்.

அதைக் காதில் வாங்காமல் அகோரியிடம், "நான் உன்கிட்ட வரனும்னா நீ கொண்டு போன மூனு பிள்ளைகளையும் நாங்க பார்க்கனும்." என்று அன்னம்மாள் கேட்டார்.

"இதோ!" என்று அகோரி கை காட்டவும், 

அந்தப் பகுதியில் சூழ்ந்த இருள் குறைந்து,  விக்ரம், அனு, மகேஷ் மூவரும் தலைகீழாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது புலப்பட்டது.

அதைக் கண்டு அங்கமெல்லாம் பதறியபோதும், அதை வெளிக்காட்டாமல், 

"மகேஷை அனுப்பு, நான் அங்க வர்றேன்." என்றாள் மாதவி.

"இங்கு நான் தான் கட்டளை இடும் இடத்தில் இருக்கிறேன்… நீ கேட்கும் நிலையில் நிற்கிறாய்" என்று அகோரி கூறினாள்.

'இனி வாதாடுவது வேஸ்ட்' என்று உணர்ந்த மாதவி கோயிலை விட்டு வெளியேறியதும், 

மாதவியின் கூந்தலைப் பற்றி அந்தரத்தில் எழுந்த அகோரி,

"முட்டாளே! என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டாயே… ஹஹ்ஹஹ்ஹாஹா… இதோ உன்னை வைத்தே உன் மகளையும் வெளியே வரவழைக்கிறேன் பார்!" என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.

"கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டாயா?" என்று மாதவி கேட்க,

"நான் அகோரி. மனித ரெத்தம் புசிப்பவள். என்னிடம் வாக்கு, நியாயம்னு பேசுறது உனக்கே கிண்டலா இல்ல?" என்று சிரித்த அகோரி, 

அமிர்தாவிடம், "உன் அம்மாவை விட்டுடுறேன் நீ வெளிய வா!" என்று அலறினாள்.

உடனே பதறி, அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு,

"இப்ப மட்டும் சொன்னபடியா நீ நடந்துக்கிற?" என்ற மகேஷின் அம்மா கேட்டார்.

"அமிர்தாவ என்னோட அனுப்பிட்டா நான் போய்விடுவேன்… நாலுபேரையும் அணுஅணுவாய் ரசிச்சு உண்பேன்…" என்று கூறியவளிடம், 

மகிழன், "போதும்! அவங்கள விட்டுடு! அன்னம்மா பொன்னுத்தாயின் தியாகத்தை  உதாசீனம் செய்யாத… பல வருசங்களா இந்த கோயில்ல நிஷ்டையில் இருந்த மாதவி கிட்ட கடவுளோட விஷேச சக்தி, துணை இருக்கும்… மாதவிய கொன்னா அந்தப் பாவம் உன்னை சும்மா விடாது…" என்ற மகிழன்,

"இதுவரை உனக்காகவே உன் நிழலா வாழ்றேன். எனக்காகன்னு இதுவர நான் உன்கிட்ட, எதுவுமே கேட்டதில்ல… இன்னைக்கு இந்த மாதவிக்காக கேட்குறேன். நீயும் ஒரு பொண்ணு. ஒரு தாயோட பரிதவிப்பு உனக்குப் புரியவில்லையா? அவங்கள விட்டுடு..."

"எனக்காக என்னோட இருக்கிறேன்ற. ஆனா என் வலி உனக்குப் புரியலையா?" என்று ஆங்காரமாய் மகிழனிடம் அகோரி கேட்க,

"அது புரியாமலா இருக்கேன்… எனக்கு உன் மனநலமும் முக்கியந்தான் விழி… ஒரு நிமிசம் எங்கூட பழகின மயில்விழியா இருந்து யோசி… இவங்கள கொல்றதால உனக்கு சந்தோசம் கிடைச்சுடுமா?... அப்பாவிகள அழிக்கிறதுல சந்தோசப்படுறவளா நீ?"

"அப்பாவிகளா?"

" பின்ன? உன் வாழ்க்கைய அழிச்சவன்களும், அவனுங்க குடும்பமும்தான் அழிஞ்சுடுச்சே… இவங்க உனக்கு என்ன பண்ணாங்க?"

"இத்தன வருசமா இவங்களப் பழிவாங்கத்தான இப்படி அலையிறேன்." என்று தன் உருவத்தைக் காட்டிக் கூறியவளைப் பரிதாபமாக பார்த்தவன்,  

"அந்த மிருகங்கள் அழிஞ்சதுமே உன் பழி உணர்வு போயிடுச்சு விழி… அத நீதான் புரிஞ்சுக்கல… அன்னைக்கு இருந்த கோபத்துல, நீ சொன்ன வார்த்தையத்தான் இப்பவர நீ புடிச்சுக்கிட்டிருக்க... ஒரு தாயா அன்னம்மாவும் பொண்ணுதாயும் தியாகம் பண்ணும்போதே நிச்சயமா உன் மனசு இளகிடுச்சு... இல்லையா?"

"இல்ல… இல்லவேயில்லை...,நீ எனக்கு ஆதரவா பேசமாட்டியா மகிளா?" என்று ஏக்கத்தோடு கேட்டாள் மிருதன்...

"உனக்காகத்தான் பேசுறேன் விழி! உனக்குள்ள இருக்கிற என் விழிய எழுப்புறேன். என் விழி, நான் பார்த்து வளர்ந்த விழி, ரொம்ப நல்லவ, விலங்குகளுக்குக் கூட இரங்குறவ, கண்ணுல கருணையோட இருந்தவ"

"அவளத்தான் துடிக்கத்துடிக்க உயிரோட கொன்னுட்டாங்களே?"

"அவங்க மிருகம். மிருகத்துட்ட நல்லத எப்படி எதிர்பாக்க முடியும்? ஆனா நீ?"

"அப்புறம் ஏன் இதுவர எங்கூட இருந்த?"

"உன்னோட வலி தீரட்டும்னு காத்திருந்தேன்… என் விழிய மறுபடியும் பார்க்கத்தான் தவங்கிடக்கேன்…" என்று மகிழன் கூறவும் சற்று இரங்கியவள்,

மீண்டும் உக்கிரமாக கத்தினாள். "என்னைய பைத்தியக்காரின்னு நினச்சியா? இதோ இப்பவே எனக்கு இருக்குற பழிவெறிய இந்த மாதவியை வச்சே தீர்த்துக்கிறேன்." என்று மகிழனிடம் அலறிவிட்டு,

அந்தரத்தில் இருந்தபடி மாதவியை தன் மடியில் கிடத்தி மாதவியின் வயிற்றைக்கிழிக்க முயன்றவளை மகிழன் தடுப்பதற்காக நெருங்க,

அவளுகிருந்த ஆத்திரத்தில் மகிழனைப் பிடித்து முரட்டுத்தனமாக தள்ளிவிட்டாள் மிருதன்.

பிறகு மீண்டும் மாதவியின் வயிற்றை நோக்கி கையைக் கொண்டு போனவள் மீது ஏதோ  ஒரு பொருள் பட மிருதனின உடல் ஷாக் அடித்தது போல் ஆகோரோசமாக கத்தி கொண்டே மாதவியை தன் மடியிலிருந்து கீழே தள்ளி விட்டவள்.

அங்கே அமிர்தா, அனு, விக்ரம் மகேஷின் கையில், கபீர்தாசால் கொடுக்கப்பட்ட கயிறை மொத்தமாக இணைத்து கட்டி அதை மிருதனின் கழுத்தில் வசினாள் அமீர்தா...

மிருதன் தன் சக்கி அனைத்தையும் ஒன்று திரட்டி தன் கழுத்தில் இருந்த கயிறை அறுத்து எரிந்தாள்.... கோலத்துடன் கோவில் வாசலை பார்த்த மிருதன் அதிர்ச்சியாகி மகிழனை கண்டாள்..

அமிர்தா அருகில் மகேஷ், அனு, விக்ரம் நிற்பதைக் கண்டு, அதற்குக் காரணமான மகிழனை எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள்.

மீண்டும் மாதவியை பிடிக்க எண்ணித் தேட, மகேஷின் அம்மா, மாதவியை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி ஓடுவதைப் பார்த்து விட்டு, கோயில் வாசல்படியில் காலை வைத்த மாதவியின் மறுகாலை பிடித்துவிட்டாள் அகோரி.

அகோரியின் கூரான நகங்கள் முதிய சருமத்தை எளிதில் கிழிக்க, கால்களில் ரெத்தம் வடிந்து கோயில் வாசலில் விழுந்த வினாடியில் அதே நேரம், மகேஷ் அந்த பெட்டியின் மேல் மறுபடியும் இரத்தத்தை பட வைத்து அமிர்தா நெற்றியில் வைத்தான் மகேஷ்....

அப்போது பெட்டி திறந்து பொண்ணுத்தாய்  அன்னம்மாள்  இரத்தம் வெளியில் வந்து மாதவியின் உடலிலிருந்து மறுபடியும் விழ இருந்த இரத்தத்தை அன்னாம்மாள் பொண்ணுத்தாயீன் இரத்த உருண்டையோடு சேர்ந்து  பெரிய இரத்த துளியாய் உருவெடுத்தது... அதோடு நிற்காமல் வெத்தலை பெட்டியிலிருந்து எடுத்த தகரத்தின் மையத்தில் சக்கரம் போல் சுற்றி பூமியை சுற்றுவதை நிருத்த செய்தது...

அனைத்து ஜீவராசிகளும் அப்படியே உறைந்தது போல் நின்று விட்டது.. மிருதன்னும் மகிழன்னும் தவிர...

"என்ன காரியம் செய்ய இருந்தாய் மிருதா" என்று கோவமாக கேட்டது தக'டின் உள்ளே இருந்த இரத்தமாய் தவமிருந்து இறைவனிடம் அருள் வாங்கி கடவுளையே தன் வம்சத்தை பாதுக்காக்க அழைத்து வந்த  அம்பாளின் குரல் கேட்டது...

"எனக்கு நடந்த அநியாயத்திற்கு  நானே நீதி எழுதுகிறேன் தாயே" என்று காட்டமா கூறினாள் மிருதன்...

”அப்படி என்றால் ஒரு தவறும் செய்யாத அப்பாவி குழந்தைகளுக்கு நீதி வழங்க நான் வந்து இருக்கிறேன்”
என்று அம்பாள் கூறினாள்...

"இவர்கள் முன்னோர் செய்த பாவத்திற்கு தான் இவர்கள் தண்டனை அழிக்குறேன்" என்று அகங்காரமாய் அம்பாளிடமே கோவமாக பேசினாள் மிருதன்...

"அதான் நீயே கூறி விட்டாயே, இது அவர்கள் முன்னோர் செய்த பாவமென்று..., அதன் பிறகு ஏன் தண்டிக்க நினைக்குறாய்"

முன்னோரின் சொத்து அவர்கள் வழி வந்தவர்களு தான் சேரும்.... அது போலத்தான் அவர்கள் செய்த பாவம் அவர்கள் வழி வந்த பிள்ளைகளை சாரும்...... ஆகையால் இவர்களை கொன்று என் வன்மத்தை துறப்பேன்" என்று ஆக்ரோஷமாய் காத்துக்கொண்டு அவர்களிடம் சென்றாள்...

"நில்! மிருதா நீ கூறுவது நியாயம் தான்..... ஆனால் அதற்கு தான் நீ  அவர்கள் முன்னோருகளை கொன்று பழிதீர்த்து விட்டாயே.... அதன் பிறகு ஏன் அவர்கள் கொல்ல நினைக்கிறாய்.. நீ அவர்கள் நால்வரையும் தண்டிக்க உரிமையும் இல்லை நியாயமும் இல்லை" என்று அம்பாளின் குரல் பொருமையாக எடுத்து கூறியது...

ஆனால் அவ்வார்த்தைகளை கேட்கும் பொறுமையும் இல்லை அவள் பழிவாங்கும் எண்ணமும் அதை கேட்ட விடாமல் அவர்களை கொல்ல முன்னேரி சென்றாள் மிருதன்...

கோவம் கொண்ட அம்பாள் அந்த இரத்த துளியில் ஒரு பகுதியை மிருதனின் மேல் செலுத்தி துடிக்க வைத்தாள்..... மகிழன் "தாயே அவளை விட்டு விடுங்கள் அவளுக்கு நடந்த அநியாயத்தின் வெளிப்பாட்டால் அவள் அப்படி நடந்து கொள்கிறாள்.... அவளிடத்தில் இருந்து யோசித்தால் அது நியாயமா தெரியலாம்.... ஆனால் அவள் தன் இடத்தில் மட்டுமிருந்து ம தான் யோசிக்குறாளே தவிர அவர்கள் நால்வரின் இடத்திலிருந்து யோசிக்க தடுக்கிறது அவளின் பழி உணர்வு" என்று கூறினான்..

மறுபடியும் அந்த இரத்த துளிகளை அந்த தகரத்தில் எடுத்து கொண்டாள் அம்பாள்.... மிருதன் அந்த இரத்த துளிகள் முன் மண்டியிட்டு அமர்ந்து " என்னை மன்னித்து அருள்க! தாயே ஆனால் நான் என் வாழ்க்கை இழந்து இப்படி ஒரு நிலைமையில் நிற்பதற்கு காரணம் அவர்கள் நால்வரின் தாத்தா தானே" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்...

அம்பாளின் குரல் " ஆம்! உன் வாழ்க்கை ஆழிய காரணம் இவர்கள் முன்னோர்களாக இருக்கலாம் அதற்கு நீ பழியும் தீர்த்தும் விட்டாய்.... ஆனால் இப்பிரச்சினைக்கு சம்மந்தம் இல்லா இப்பிள்ளை தண்டிக்க நினைப்பது எவ்வகையில் நியாயம் ? கூறு மிருதா"

மிருதன் ஒரு நிமிடம் மௌனத்திற்கு பின் "நான் வாழ நினைத்த வாழ்கை என் கண்முன்னாடியே அழிந்து விட்டதே தாயே மறுபடியும் நான நினைத்தால் வாழ முடியுமா" என்று கோபமாகவும் ஆதங்கத்துடனும் " அதற்கு காரணம் இவர்கள் முன்னோர்கள் தானே" என்று கேட்டாள்..

” நீ இழந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வாய் ஆனால்; அடுத்த பிறவியில்... இப் பிறவியில் இருந்து உனக்கு முக்தி அழித்துறேன்" என்று அம்பாள் கூற, "தாயே! எனக்காக, என்னை மட்டுமே நினைத்து, என்னுடனே இருந்த என் மகிழனுக்கு நான் என்ன கைமாறு செய்ய.... நான் மட்டும் முக்தி அடைந்தால், என்னை நினைத்து..... எனக்கு அனைத்துமாய் இருந்த மகிழனை விட்டு நான் மட்டும் முக்கி
பெறுவாதா என்று அதிர்ச்சியாக கேட்டாள் மிருதன் என்னும் மயில்விழி...

அம்பாளின் குரல்" உனக்கு மட்டும் இல்லை மிருதனுக்கும் தான் முத்தி அளித்துறேன், உன்னை மட்டும் நினைத்து உனக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த உன் மகிழன் இப்பிறவியில் உன்னுடன் வாழ நினைத்த வாழ்வே அடுத்த பிறவியில் வாழ்வான்..... வாழ்வீர்கள்" என்று ஆசி வழங்கி....

அவர்கள் இருவரின் மீது ஒளி விழ அவர்கள் காற்றோடு காற்றாய் கலந்து வானத்தில் சென்று மறைந்தனர்..

உறைந்து போய் நின்றவர்களில் அவர்கள் நால்வரின் காதில் மட்டும் அவ்ஒளி கேட்டத்து "விக்ரமிற்கு மயில்விழியே மகளாகப் பிறப்பாள். அவளுக்கு மயில்விழி என்றே பெயரிடுங்கள். மகேஷுக்கு மகிழனே மகனாகப் பிறப்பான். அவனுக்கும் அதே பெயரிடுங்கள்‌ எக்காரணம் கொண்டும் அவர்கள் இருவரையும் பிரிக்காதீர்கள்." என்று கூறிய தாய்,

"யாரும் எக்காரணத்தினாலும் ஒரு பெண்ணிற்கு தீங்கு விளைவிக்காதீர்கள்… பெண்பாவமானது வம்சத்தையே ஆட்டிப்படைத்து விடும் என்பதை உணர்ந்து, நடந்துகொள்ளுங்கள்." என்று கூறி தகடும் அதிலிருந்து இரத்த துளிகளும் மறைத்தது. அதன் பிறகு அனைத்து ஜீவராசிகளும் உறைந்த நிலையில் இருந்து மீண்டு வந்தனர்...

அவர்கள் ஆறு பேருக்கு அங்கு நடந்தது எதுவும் தெரியவில்லை என்றாலும் கார் சூழ்ந்து இருந்த வானம் தெளிவு வந்ததிலும் அவர்கள் நால்வரின் காதில் கேட்ட வார்த்தையும் அவர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று உணர்ந்து கொண்டனர்....

மகேஷ் - அமிர்தா, விக்ரம் - அனு இரு ஜோடியும் நில மணிநேரத்தில் நடந்த விபரிதத்தின் மூலம் அவர்கள் துணை மீது அவர்கள் கொண்ட காதலை புரிந்து இனி வாழ்வில் ஒரு நாள் பிரிய மாட்டேன் என்று கூறும் அளவிற்கு இருகி கட்டியணைத்து கொண்டார்கள்...

 ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மிருதனின் அசுரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் தான் வேறு விதமாக இருக்கிறது...

மறுபிறவியில் இவர்களின் காதல் கைகூட இறைவனை வேண்டி விடைபெறுவோம்.

          🙏🏼வணக்கம்🙏🏼

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro