அலை 🌊 40

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திவியின் அலைபேசியில் இருந்த புகைப்பட பதிவுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. 

“பச்… எவ்வளவு நேரம்டி இதையே பார்த்துட்டே இருப்ப….  ரெண்டு பேரும் அழகா தான் இருக்கிங்க… போனை கொடுத்துடு தாயே… நீ பாத்து பாத்தே என் போன் தேஞ்சிடும் போல இருக்கு?” 

திவியின் கிண்டலில் கோபம் வர, அவளிடம் போனை நீட்டி இருந்தாள் ரேவதி.

‘எவ்வளவு நேரம் பார்த்தாலும் அதிலிருப்பது எதுவும் மாறிவிடப் போவது இல்லையே…’ நிகழ்ந்த சம்பவங்களால் வருத்தத்தையே பிரதிபலித்தது ரேவதியின் முகம்.

“இப்போ என்ன ஆகிடுச்சின்னு முகத்தை இப்படி தூக்கி வச்சிக்கிட்டு இருக்க…?” திவியின் தொடர் நச்சரிப்பின் அழுத்தம் தாங்காமல் வாய் திறந்தாள் ரேவதி.

“இதுக்கு மேல ஆக வேற ஏதாவது இருக்கா…? இதுவே என்னென்ன பிரச்சனைய இழுத்து விடும்மோன்னு பயமா இருக்கு திவி…”  ஒரு வித கலக்கத்தோடு கண்களை மூடிக்கொண்டவளுக்கு,

நடந்தது எல்லாம் காட்சிகளாக மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

கஜா தொடர்பான வழக்கில்  விசாரணை என்று ரேவதியை  அன்று கோர்ட்டிற்கு வர சொல்லி இருந்தான் ரகு.

சிவாவிடம் சொல்லிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்த ரேவதி, தோளில் வழிந்த  துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டே திவியின் வண்டியின் பின் பக்கம் ஏறி அமர்ந்திட,

“ரொம்ப நேரம் ஆகிடுச்சா ரேவதி…?”

 தோழியை  கேட்டுக்கொண்டு  வண்டியின் தலையில் சாவியை சொறுகி இருந்தாள் திவ்யா. 

“இல்ல திவி… நேரத்துக்கு போயிடலாம் ரகு சார் இந்த டைம் தான் வர சொல்லி இருந்தார்…” 

“ஓ….. அந்த உம்மனா மூஞ்சி தான் டைம் சொல்லுச்சா… ஏன் இங்க  வந்து நம்மளை கூட்டிட்டு போறதை விட  அங்க என்ன வெட்டி முறிக்கும் வேலை பாக்குதாம்… சும்மா கையில் ஒரு பையிலை வைச்சிக்கிட்டு சீன் போட்டு சுத்த வேண்டியது…”  

ரகுவை கழுவி ஊற்றிக் கொண்டே வாகனத்தை உயிர்பித்தாள் திவ்யா.

“போதும்டி ரகு சாரை திட்டினது… உனக்கும் அவருக்கும் எப்ப தான் பிரச்சனை தீருமோ… வளவளன்னு பேசுறதை விட்டுட்டு ரோட்டை பாத்து வண்டியை ஓட்டு… ”  ரேவதி அவளை எச்சரிக்கும் நேரம் அவர்களை வழி மறித்து நிறுத்தியது ஒரு வாகனம்..

சடன் பிரேக் இட்டு வாகனத்தை நிறுத்தியவள் “எவன் அவன் இப்படி வண்டியை குறுக்கால நிறுத்துறது…” எரிச்சலாக ஸ்கூட்டியில் இருந்து இறங்கிய திவ்யா, டிரைவர் சீட்டு பக்கம் இருந்த கண்ணாடியை தட்டி திட்ட ஆரம்பித்தாள்,

கோர்ட்டிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டதில் “ஏய் திவி நிறுத்து டி” தோழியின் கையை பிடித்து அவளை தடுத்துக் கொண்டிருந்தாள் ரேவதி…

அவள் கையை உதறி விட்டு முன்னேறியவள்,

“நீ இருடி இந்த ஆளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, இப்படி குறுக்கால புகுந்து வண்டியை நிப்பாட்டி இருப்பான்… ஏதோ நானா இருக்க போயி ஸ்டடியா நின்னு பிரேக் அடிச்சேன்… இல்லன்னா நம்மோட நிலமை இந்நேரம் பைசா செலவு இல்லாம பரோலகத்துக்கு டிக்கெட் வாங்கி இருப்போம்… “

அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டு போகவும் அவளை முறைத்துக் கொண்டே கார் கண்ணாடியை இறக்கினான் ரகு. 

அவன் பற்கள் கோபத்தில் கடிபடுவதை பார்த்தும் திவியின் வாய் நிற்காமல் வசைபாடியது.

ரகுவை பார்த்ததும் கூடுதலாக இன்னும் ரெண்டு திட்டுகள் அதிகமாக விழ, காரின் மறு பக்கத்திலிருந்து கதவை திறந்துக்கொண்டு  இறங்கி இருந்தான் கார்த்திக்… 

ரகுவை கண்டதும் ரேவதியின் விழிகள் கார்த்திக்கை தான் தேடியது.  வீம்புக்கு அவள் ரகுவிடம் கேட்காமல் நின்றிருக்க, கார்த்திக்கை பார்த்த கணத்தில் அகம் மலர்ந்து விட. அதை முகத்தில் காட்டாமலிருக்க அத்தனை பாடுபட்டாள்.

கார்த்திக் ரேவதியை பார்த்தாலும், அங்கு ஒருத்தி நின்றிருப்பதையே கவனிக்காதது  போல காட்டிக் கொண்டவனின்  பார்வை முழுவதும் ரகு  திவியிடமே இருந்தது.

அவன் தன்னை கண்டு கொள்ளாததில் மனம் சுணங்கிட, கண்கள் கலங்கி, கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள் ரேவதி. 

“கார்த்திக் சார் நீங்களா‌…?” இனிப்பான வியப்பில் ரகுவை திட்டியதை நிறுத்திய திவி,  தோழியின் தோளில் இடித்து, “சார் வருவாருன்னு சொல்லவே இல்ல…” என்றாள் ரேவதியிடம் குறும்பான சிறு குரலில்.

கலங்கிய விழிகளையும் நொடியில் சுருங்கி விட்ட முகத்தையும் இயல்பாக்கிக் கொண்டவள்  “பச் பேசமா இரு திவி…”. எரிச்சலுடன் யாருக்கும் கேட்கா வண்ணம் திவியை அதட்டியவள்,  “வண்டியை எடு கிளம்பளாம் நேரமாகிடுச்சி “  திவியை அவசரப்படுத்தினாள் ரேவதி. 

தன் முதல் காதல் அவனை உறுத்தவதில் வந்த ஒதுக்கம் என தவறாய் கற்பித்துக் கொண்டவளுக்கு அவனுடன் செல்லும் எண்ணமில்லை.

ரகுவை திட்டி கொண்டிருந்துவிட்டு,  தன்னை பார்த்தும் சட்டென மாறிய வானிலை போல திவ்யா பேச்சை மாற்றியதில் சிரித்தபடியே அவளை பார்த்தான் கார்த்திக். 

“நீங்க இங்க எங்க சார்…?” வழக்கமான துடுக்குத்தனத்துடன் கேள்வி பறந்தது திவியிடமிருந்து.

“எல்லாம் கோர்டுக்குத்தான் மா… நீங்களும் அங்க தானே… உன் ப்ரெண்டை கூட்டிட்டு வண்டியில் ஏறுமா” என்றான் கனிந்த குரலில்…

ரேவதிக்கு உள்ளுக்கும் குபுகுபுவென எரிந்தது. இப்போதும் தன்னிடம் நேரிடையாக பேசாமல் திவியிடம் கூறி வண்டியில் வர சொல்லவும், இன்னுமே அவளது முகம்  சிறுத்து விட்டது . 

ரேவதியின் மனநிலை தெரியாமல் “வாவ்… நம்ம இதுல தான் போகப் போறோமா…”  என்றபடியே  ரேவதியின் வீட்டு முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு வந்த திவி, “வா ரேவதி கார்லயே போயிடலாம்…” என்றாள் சிறுப்பெண்ணின் குதூகலுத்துடன்.

‘ஏய் திவி… பைத்தியமே… அவரு கூப்பிட்டவுடனே போறதை பாரு வந்ததிலிருந்து என்னை பாக்கவும் இல்ல பேசவும் இல்ல எந்த முகத்தை வைச்சிக்கிட்டு இந்த வண்டியில் வர்றது…?” உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு வர, மனதில் திவியை வறுத்தவள் “என்னால கார்ல எல்லாம் வர முடியாது… நாம ஸ்கூட்டியிலையே போயிடலாம் போ போய் வண்டியை எடு” காரில் ஏறாமல்  வீம்புக்கு நின்றாள் ரேவதி.

அன்று கார்த்திக் தாலியை பார்த்து விட்டு பேசியதிலிருந்து, அவன் மீது எல்லையற்ற கோபத்துடனே சுற்றிக் கொண்டு இருந்தாலும்,

அவன் அன்பும் அக்கரையும் நிறையவே பிடித்ததிருந்தது. 

அதை இழக்கவும் மனமில்லை அதை ஏற்கவும் துணிவில்லை…   ஏதோ ஒரு காரணத்தை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தவள், இப்போதும் தன்னை அவன் கண்டு கொள்ளவில்லையே என தன் கோபத்தின் வெப்பத்தை அவன் மீது பாய்ச்சினாள். 

தான் செய்து வைத்த செயலில் கோவப்படுவாள் எப்படியும் வர மாட்டாள் முரண்டு பிடிப்பாள் என அறிந்து வைத்திருந்தவன், 

“கெட்டின் ரேவதி கோர்ட்டுக்கு நேரமாச்சி உன்கூட சண்டை போடுற மூடில் நான் இல்லை…” சற்று குரலை உயர்த்தி நேரடியாக அவளிடம் பேசவும், அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவளை சலைக்காமல் பதில் பார்வை பார்த்து வைத்தான் கார்த்திக். 

உன்னை நான்‌ அறிவேன் என்னும் செய்தி இருந்ததோ என்னவோ,  வேகமாக அவனை ரசிக்கும் பார்வையை மாற்றிக் கொண்டவள், தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.

“ஏற்கனவே நேரமாச்சின்னு சொல்லிட்டு இருந்தல்ல… கார்த்திக் சாரே வண்டியை கொண்டு வந்துட்டாரு அடம்பிடிக்காம ஏறு ரேவதி…” திவி  ரேவதியை கட்டாயப்படுத்தவும் வேறு வழியில்லாமல் அவனை முறைத்தவாறே  காருக்குள் ஏறி அமர்ந்தாள்.

ஓட்டுனர் இருக்கையில்  ரகுவும், அவனுக்கு பக்கத்து இருக்கையில் கார்த்திக்கும் அமர்ந்து விட, பின் பக்க இருக்கையில் ரேவதியும் திவியும்  அமர்ந்திருந்தனர்.

ரகுவிற்கு திவியை கண்ட நொடியில் இருந்து கடுப்புத்தான்… ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சண்டை தொடங்கி விடுகிறது…

இதோ இப்போது ஆரம்பித்தது போல, அதனாலையே அவளிடம் வாயை திறக்காமல் தப்பித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் அமைதியாக வந்தான், 

கார்த்திக்கின் பார்வை முழுவதும் கண்ணாடி தடுப்பின் வெளிப்புறம்  பதிந்திருக்க, ரேவதியின் விழிகள் ரியர் வியூவ் மிரரில் தெரிந்த கார்த்திகையே பார்த்திருந்தது.

ஏதேச்சையாக கண்ணாடியின் பக்கம்  திரும்பியவன்,ரேவதி  தன்னையே கவனித்து கொண்டிருப்பதை  பார்த்து விட்டு,  ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க,

சட்டென முகத்தை சுளித்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் ரேவதி.

அவள் முகத்திருப்பலிலும்  இதழ் சுளிப்பிலும் லயித்தவன் அகமும் முகமும் மனைவியின் செயலில் நொடியில்  மலர்ந்து விட்டது , அவளை ரசித்து பார்த்தான்.. 

என்ன ஸ்பீடா திரும்புறா… அவள் கோபத்தையும் கண்டு சிரித்தவன், வரும் போன்களில் கவனத்தை திருப்பி விட்டான், 

இதற்கு மேல்  வரும் சோதனைகளை தாங்க அவனுக்கு இஷ்டமில்லையே முயன்று தன் பார்வையை அவளிடமிருந்து விலக்கி கொண்டான்…

‘பேசுறதை எல்லாம் பேசிட்டு இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி எவ்வளவு சாதாரணமா பாக்கறதை பாரு  சரியான நெஞ்சழுத்தம் பிடிச்ச மனுஷன்… உம்மனாமூஞ்சி…’ ஆற்றமையுடன் வாயிற்குள்ளே முனங்கிக் கொண்டாள் ரேவதி,

அவள் பேசிய வார்த்தைகள் திவியின் செவிகளில் விழாமல் போகவும் “என்னடி பேசுற…? ஒன்னும் புரிஞ்சி தொலைக்க மாட்டேங்குது…!!” தோழியின் முனுமுனுப்பில் திவி கேள்வி எழுப்பினாள்,

“பச் பேசாம அமைதியா வா…  ஏதாவது பேசினா… பிரெண்டுன்னு கூட பாக்க மாட்டேன்  கொன்னே போட்டுடுவேன்…” அவன் மேல் இருந்த கடுப்பில் திவியின் கழுத்தில் கையை வைத்து சத்தமில்லாமல்  மிரட்டினாள் ரேவதி.

அத்திபூத்தார் போன்று வரும் ரேவதியின் திடீர் கோபத்தை கண்டு மிரண்டவள், அதன் பிறகு‌ ஏன் வாயை திறக்க போகிறாள்,  கப்சிப் என  வாயில் கைவைத்து திருதிருவென முழித்துக் கொண்டு திவி அமைதியாகி விட,

மறுபடியும் கார் கண்ணாடியில் தெரிந்த கணவனை முறைத்துக் கொண்டும் அவளுக்கே தெரியாமல் ரசித்துக் கொண்டும் வந்தாள் ரேவதி.

அவன் சிரிக்கும் கண்கள், பறந்த நெற்றி, அளவான நாசி, அவன் சிரிப்புக்களை தனக்குள்ளே அடைகாத்துக் கொள்ளும் அடர்த்தியான  மீசை, என்று  வலம் வந்த அவளது கண்கள் தன் மெல்லிய உதடுகளை உரசிய அழுத்தமான அதரங்களை கண்டு உடலில் மின்சாரம் பாய, முகம் குப்பென சிவந்து விட்டதில், சட்டென பார்வையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டவள் நிதிமன்றம் வரும் வரை தலையை உயர்த்தவே இல்லை…

அவளின் செய்கைகளை கண்டும் காணாமலும்  கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் பார்வை புதுவித உணர்வுகளை மேலேழுப்பி விட,. அதை  இதழ்கடித்து மீசையில் மறைத்துக் கொண்டவன் தன் விழிகளை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.

அதற்குள் நிதிமன்ற வளாகமும் வந்து விட “ரகு  கார் பார்க்கிங் பண்ணிட்டு வந்துடு” என்றவன் அலைபேசியில் வக்கீலை தொடர்புக் கொள்ள முயன்றான்.

அவன் பேசிக்கொண்டிருந்த நேரம் ரகுவும் வந்து விட, “அட்வகேட் உள்ளதான் இருக்காரு வா போகலாம்” என்றான் ரேவதியிடம் ,

“அவர்கிட்ட எந்த வக்கீல்னு கேளு திவி நாம போகலாம்”...

அவனிடம் காலையில் இருந்து நேராக வார்த்தையாடமல் திவியின் மூலம் ரேவதி பேசிக் கொண்டிருக்க, அதில் கடுப்பானவன்,  கண்களை மூடி இருவிரல் கொண்டு நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டான்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ரகு.

கார்த்திக்கிற்கும் ரேவதிக்கும் என்ன பிரச்சனை என்று தெரியாது. ஆனால் ஏதோ நடந்து இருக்கிறது மட்டும் அவனுக்கு தெரிந்திருந்திருந்தது. அலுவலகத்தில் ரேவதியோடு பேசுவதை முற்றிலுமாக தவிர்த்திருந்தான் கார்த்திக்,  ஆனால் இன்று அவனாக ரேவதியிடம் பேசவும் அவள் தவிர்ப்பதையும் பார்த்தவன் 

இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திட நினைத்தான்.

ரேவதியின் பின்னோடு திவியும் சுற்றிக் கொண்டிருக்க, அவர்களின்  நெருக்கத்திற்கு இடையூராக இருந்த திவியை பார்த்தவன், 

இதை  எப்படியாவது அப்புறப்படுத்தனுமே கூப்பிட்டா வராது இந்த நியூசன்ஸ்… தகரடப்பவுக்குள்ள‌ புகுந்த எலி மாதிரி கத்தி உசிர வாங்கிடுமே…  பரவாயில்லை சாருக்கவும் ரேவதிக்காவும் தானே மனதை தேற்றிக் கொண்டவன், 

“சார் நீங்க மேடமை கூட்டிட்டு போய்  வக்கீல் கிட்ட பேசிக்கிட்டே வாங்களேன்…  அங்க இவங்க எதுக்கு…  அதுவும் இல்லாம கல்யாணம் ஆகாத வயசு பொண்ணு… இங்க எல்லாம் வேண்டாமே மேடமுக்கு நீங்க இருக்கிங்க பாத்துப்பிங்க… அவங்கள யார் பாத்துக்கறது” ரகு  திவியை பார்த்து பரிதாபமாக கூறவும்,

கார்த்திக் ரகுவின் பேச்சில் புருவம் உயர்த்தி பார்த்தானென்றால், திவி ரகுவை  முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள். ரேவதி இது என்னடா புது வதந்தி என்பது போல பார்த்து வைக்க,

“நீ யாரு அதை சொல்ல… எனக்கு கல்யாணம் ஆகுது ஆகல அதை பத்தி உனக்கு என்ன கவலை”  எரிச்சலில்

திவி பேச்சினை ஆரம்பிக்கவும்,

‘பச் கத்த ஆரம்பிச்சிடுச்சே இந்த எலி’ மனதில் சலித்தவன், அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து நிற்க வைத்து, அவர்கள் இருவரும் அறியாது ரேவதியையும் கார்த்திக்கையும் கண்களால் சுட்டி காட்டினான்.

இருவரும் அருகருகே இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் எதிரும் புதிருமாக நின்றதை பார்த்தவளுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. 

“நாம எதுக்கு அவங்களுக்கு நந்தி மாதிரி  இம்சை பண்ணிக்கிட்டு, நாம  இல்லன்னா ரெண்டு பேரும் பேசி தானே ஆகனும்” என்றான் சிறு குரலில்.

கார்த்திற்கு ரகுவின் ப்ளான் புரிந்து விட்டதில் கை கட்டி அவர்களை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தான். இருவரும் சிறு குரலில் குசுகுசுவென பேசிக் கொள்வதில் ரேவதிக்குத் தான் மண்டை காய்ந்திட,  “என்ன நடக்குது இங்க ரகு சார்…? அவள் வாய் திறந்தே கேட்டு விட்டாள்.

“அது… வந்து…. அவங்களுக்கு ரொம்ப பசிக்குதாம்” ஏதோ ஒரு காரணத்தை கூறி  திவியை பார்த்தான்.

ரேவதியையும் கார்த்திக்கையும் பார்த்து விட்டு “ம் ஆமா..”.கவலையுடன் தலையை ஆட்டியவள், “ஆனா நீ என் கையை பிடிச்சி இழுத்த…” என்றாள் ரகுவைப் பார்த்து கோவமாக.

“இந்த மேட்டரை நாம அப்புறம் பேசி சால்வ் பண்ணிக்கலாம் முதலில் இங்கிருந்த கிளம்பலாம்”. அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறியவன், 

“நீங்க போங்க சார் எதிர்ல இருக்க ஹோட்டல்ல ஏதாவது வாங்கி கொடுத்து கூட்டிட்டு வர்றேன்” என்றவன் கார்த்திக்  சரி என்பதற்குள் திவியை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான் ரகு.

ரகு இப்படியெல்லாம் நடந்துக் கொள்ளும் ரகம் இல்லையே அதுவும் திவிக்கும் அவனுக்கு ஏழாம் பொருத்தமாயிற்றே நடந்த நிகழ்வில் ரேவதி திகைப்பில் இருந்து மீள்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தது. 

மனைவியின்  திகைத்த பாவத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது… 

ரேவதியின்  முகத்திற்கு நேரே  சொடுக்கிட்டு  அவளை நிகழ்விற்கு மீட்டவன், அவள் என்னவென்று உணரும் முன் அவள் கையை  பிடித்திருந்தான்.

தன் கையுடன் இணைந்திருந்த அவன் கரத்தையும் அவனையும்  மாறி மாறி பார்த்தவளுக்கு பேச்சே எழுவில்லை…

இப்போதும் அவன் பேசாமல் என்னவென்று புருவம் உயர்த்தி கேட்கவும், அதிர்வில் கண்கள் விரிந்து கொள்ள, அவன் செய்கையில் அத்தனை படபடப்பு வந்தது பெண்ணுக்கு. 

“ரொம்ப ஹாட்டா இருக்கோ” அவன் சாதரணமாக தான் கேட்டான்.

ஆனால் அவன் ஏதோ புரியாத தேவ பாஷை பேசியாதை போல ஹான் என திகைத்த பார்வையோடு அவனை பார்த்தாள் .

கார்த்திக்கின் கண்கள் குறும்பில் கூத்தாட இதழ் கடித்து சிரிப்பை உள் அடிக்கிக் கொண்டவன் அவளை அழைத்துக் கொண்டு வக்கீலினை காண சென்றான்.

..

வக்கீல் கூறிய செய்தியில் இருவருக்குமே முகம் மாறி விட்டது.

“என்ன சொல்றிங்க சார்…? அதெப்படி முடியும்… அவனோட வொய்ஃப் மீனாவின் சாட்சியம் தான் இருக்கே… அதுவும் இல்லாம பாதிக்கப்பட்ட ரேவதியோட சாட்சியம் முக்கியம் இல்லையா…?” கார்த்திக் சந்தேகமாக வக்கீலை கேட்க, 

இதற்கு‌என பதில் சொல்வரோ என ரேவதியின் முகம் சோர்ந்து விட்டது… அவள் எதிர்ப்பார்த்து போல தான் அவரும் பேசி இருந்தார்.

“நான் முக்கியம் இல்லைன்னு சொல்லல கார்த்திக்… கொஞ்சம் ஸ்ட்ராங்கா வேணும்னு தான் சொல்றேன்… இப்போ என்ன பிரப்ளம்னா அவனோட வொய்ஃப் சொன்ன சாட்சியம் நேடியா கேட்ட சாட்சியம் இல்லை வேற ஒருத்தர் மூலியாமா கேட்டது…  அந்த அளவுக்கு ஸ்ட்ராங் இல்லைன்னு தான் சொல்ல வந்தேன்… 

அப்புறம் ரேவதி … அவங்க தான் விக்டிம் சோ பாதிக்கப்பட்ட அவங்களே சொன்னாலும் அதை உண்மையா இல்லையான்னு விசாரணை இருக்கும் அன் தென் நீங்க…” சிறிது இடைவெளி விட்டவர்,   “சம்பவம் நடந்து இருக்கும் போது அவங்க யாரோ நீங்க யாரோ… ஆனா இப்போ ரெண்டு பேரும்  கணவன் மனைவிங்குற உறவக்குள்ள  இருக்கிங்க… உங்க மனைவிக்காக  இல்லை ரேவதியை காப்பத்தன்னு நீங்க பொய் சொல்றதா கேஸை திசை திருப்ப  நிறைய சாத்திய கூறுகள் இருக்குன்னு தான் சொல்றேன்…” என்றார் அவர் விளக்கமாக, 

“ஓ.,... ஓகே… சார் இப்போ என்ன பண்ணனும்னு சொல்லுங்க” என்றான் ரேவதியின் முகம் வாடியதை பொறுக்க முடியாமல்,

“இதுக்கு ஒரு வழி இருக்கு… அவங்க சொல்றது எல்லாம் பொய்யின்னு நீங்க நிறுப்பீக்க நினைச்சா கோர்ட்டில் வெர்ஜினிட்டி டெஸ்ட்டுக்கு கேட்கலாம்”  என்றார் யோசனையாக,

ரேவதியின் முகம் கலக்கமாகி  விட்டது… இன்னும் எதை எல்லாம் கேட்க வேண்டுமோ என, கூனி குறுகி அமரந்திருக்க, “இல்ல இது வேண்டாம்” என்றான் சட்டென…  

கார்த்திக் கூறியதும் தலையை உயர்த்தி அவனை பார்த்தாள் ரேவதி… 

அவள்  கண்கள் கலங்கி சிவந்திருக்க, ரேவதியின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தவன் கண்களை மூடி  அவளை அமைதி கொள்ள செய்தான்.

“வேற ஏதாவது வழி இருக்கா சார்…?” அவள் கரங்களை விடாமலே பேச்சினை தொடர ரேவதிக்கு,  அந்த செயலே அவள் சமன்பட போதுமானதாக இருக்க, மெல்ல ஆஸ்வாசம் ஆனாள்.

“ம்… இருக்கு…  அவங்க கூடவே இருந்த யாராவது ஒருத்தர் அப்ருவர் ஆனா கண்டிப்பா கேஸ் ஸ்ட்ராங் ஆகிடும்…” என்றார் நம்பிக்கையாக,.

“சரிங்க சார் நான் பார்த்துக் கொள்கிறேன்” என அவன் எழுந்துக்கொள்ள வாக்கீலும், “வாங்க ஜட்ஜ் வர்ற நேரமாச்சி நாம போகலாம்” என எழுந்துக் கொண்டார்.

இன்று முதல் கட்ட விசாரணை இருக்க,  காவல் துறை வேனில் இருந்து கஜாவும் அவனது கூட்டாளிகளும் இறங்கி இருந்தனர். கூடவே நான்கு காவலர்களும் இறங்கி இருக்க, வேட்டை நாய் பளப்பளப்புடன் இருந்தது அவனது கண்கள்.

ஏற்கனவே கஜாவின் தோற்றம் பயம் கொள்ள வைப்பது போல தான் இருக்கும்…  இன்று இன்னும் மோசமாகி இருக்க அவனைப் பார்த்த அறுவறுப்புடன் கார்த்திக்கின் பின் புறம் நின்று கொண்டாள்

ரேவதி…

ரேவதியின்  கையை கெட்டியாக பிடித்து இழுத்து  கார்த்திக் தன் கைவளைவில் நிறுத்திக் கொள்ள கஜாவின் முகம் பாறையாக இறுகி கண்கள் பழியுணச்சியுடன்  குரூரமாக காட்சியளித்தது.

வாங்க இங்கிருந்து போயிடலாம்… அந்தாளை பாக்கவே சகிக்கல கணவனை  அங்கிருந்து இழுத்து செல்ல பார்க்க, 

“என்ன பண்ணுவான்னு இப்படி  பயப்புடுற ரேவதி…” அவளை விட‌ அழுத்தமாக கேட்டு, அவளை எங்கேயும் போக விடாமல் தன்னுடனே நிறுத்திக் கொண்டான் கார்த்திக்.

இருவர் கவனமும் சுற்றுபுறத்தை விட்டு  விலகி தங்கள் எதிரில் இருக்கும் இணைகளின் மேல் பதிந்திருந்தது. 

ஏதோ சத்தத்தில் கவனம் சிதறியவள், யாரும் எதிர் பார்க்காத சமயம் கார்த்திக்கை பதம் பார்க்க இருந்த கத்தியை தன் வலது கையில் பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தாள்.

வலியில் கண்கள் கலங்கியது, இதழ் கடித்து அந்த வலியை பொறுத்துக் கொண்டவள், தன்னவனை தாக்க வந்தவனிடமிருந்து கத்தியை வாங்க போராடிக் கொண்டிருந்தாள்.

நொடியில் நிகழ்ந்து விட்ட சம்பவத்தில் அதிர்ச்சியின் பிடியில் கார்த்திக் சிக்கிக் கொள்ள, ரேவதி தடுத்து  பிடித்திருந்தவனை கார்த்திக்,  ஒரே அடியில் தாக்கி கீழே விழ்த்தி  வைத்திருக்க, போலீஸ் வந்து அவனை பிடித்துக்கொண்டு சென்றனர்,.

ரேவதியின் உள்ளங்கை முழுவதும் ரத்தம்… கூரிய கத்தி  நன்றாக பதம் பார்த்து விட்டிருந்ததில் மெல்ல மெல்ல மயக்கத்திற்கு சென்றுக் கொண்டிருந்தவளை அணைத்து பிடித்துக் கொண்டான் கார்த்திக். இந்த செய்தி தான் வளைதள பக்கங்களில் பலவிதமாக பரவி இருந்தது.

“ரேவதி… ரேவதி…”  அவன் கன்னத்தை தட்டி விழிக்க வைக்க முயல, அவள் கண்ணை திறக்கவே இல்லை… 

அதற்குள் சற்று கூட்டம் கூடிவிட “சார் அதிர்ச்சியில் மயங்கி இருப்பாங்க  ரத்தம் வேற வருது ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க கேஸை நான் பாத்துக்குறேன்… இதுவும் அவனோட வேலையா கூட இருக்கலாம்” என்றார் வக்கீல்…

“ம்…  பார்த்துக்கோங்க சார் நான் ரேவதியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்…  என வக்கீலிடம் சொல்லிக் கொண்டு ரேவதியை தூங்கி வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்க, அதன் பிறகு தானே இவையணைத்தும்.

அவளுக்கு நடப்பது எல்லாம் கனவு போல இருந்தது… கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவள் எதற்கு பயந்தாளோ அதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடந்துக் கொண்டிருக்கின்றதே…  இன்னும் என்ன என்ன குண்டு வெடிக்க காத்திருக்கிறதோ என்ற தவிப்பில் ரத்த பசையின்றி  வெளிறிக் கிடந்தது முகம்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது கார்த்திக் அண்ணா அப்படியெல்லாம் உன்னை தனியா தத்தளிக்க விட்டுட்டு ஓடி போயிட மாட்டாரு” கார்த்திக்கிற்கு ஆதரவாக விட்டுக் கொடுக்காமல் பேசிய திவியை அழுத்தமாக பார்த்தவள்,

“அதனால தான் திவி பயமா இருக்கு…. அவர் தங்கச்சிக்கும் அவருக்கும்  கல்யாணம் நிச்சயமாகி நடக்க இருக்கும் இந்த நேரத்தில் , என்னால ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு திக்குதிக்குன்னு  இருக்கு…” அந்த வார்த்தைகளை சொல்லக்கூட அத்தனை அச்சப்பட்டாள். 

ஆனால் அவன் வக்கீலிடமே தனக்கும் ரேவதிக்கும் திருமணம் ஆகி விட்டது என சொல்லி இருந்ததை வசதியாக மறந்து விட்டவள் கணவனுக்கு வேறு பெண்ணை ஜோடி சேர்க்க அத்தனை பாடுபடுகிறாள்.

ரேவதியின் பேச்சில் கோபம் வந்தாலும் பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்திய திவி,

“நீ தேவை இல்லாம பயப்புற ரேவதி… நீ பேசாமல் படு அண்ணா எல்லாத்தையும் பாத்துக்குவாறு” போர்வையை போர்த்தி விட்டு ரேவதியின்  அருகில் அமர்ந்து கொண்டாள் திவி.. 

இதற்கு மேல் பேசினால் தானும் ஏதாவது பேச வேண்டி வருமோ என அமைதியாகி விட்டாள் ரேவதி ‌.

மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து தூங்க  முயன்றவளுக்கு அது முடியாமல் போக, கட்டு போட்டிருந்த  தன் வலது கையை அசூயையாக பார்த்தாள் ரேவதி. 

சே… நேத்து மட்டும் இது நடக்காமல்  இருந்திருந்தால், இந்த பிரச்சனையே வந்திருக்காது… முகம் சோர்ந்து விட,  நடந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து விடுபட முயன்றுக் கொண்டிருந்தாள்… 

“என்ன ரேவதி வலிக்குதா…?”  அவள் முகம் போன போக்கை பார்த்து விட்டு திவி தான் கேட்டாள்.

நினைத்ததை எல்லாம் அப்படியே வெளியே சொல்லி விட முடியுமா என்ன…?  முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவள், 

“பச் அதெல்லாம் எதுவும் இல்ல திவி… எனக்கு தூக்கம் வரல… நீயும் தான் எவ்வளவு நேரம் தான் எனக்காக  இங்க இருப்ப டாக்டர் கிட்ட கேட்டுட்டு வா நாம வீட்டுக்கு கிளம்பலாம்… எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல”  

சலிப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டவளின் நினைவுகள் மொத்தம் கார்த்திக்கை சுற்றியே வட்டமடித்தது. காலையில் இருந்து பார்க்கவில்லை… காஞ்சனா உணவு தயாரிக்க வீட்டிற்கு சென்று விட, சிவா காலையில் அக்காவை பார்த்துவிட்டு பள்ளிக்கு சென்றிருந்தான்..

“எங்க போகனுமா மா…? உன் பிரெண்டுக்கு…?”  ரேவதியை முறைத்துக் கொண்டு,  அறைக்குள்  நுழைந்தான் கார்த்திக்.

அவனை கண்ட திகைப்பில் முழித்து கொண்டிரு‌ந்த ரேவதி, கார்த்திக்கின்  முறைப்பில் தலையை குனிந்துக் கொண்டாள்.

தோழியின் செய்கை திவிக்கு சிரிப்பை தான் கொடுத்தது.. அதை அடக்கிக் கொண்டே 

“உங்க ஆளுக்கு  தான் அண்ணா…  வீட்டுக்கு போகனுமாம்  இங்க இருக்க பிடிக்கலையாம்…” விளையாட்டாக அவளை போட்டுக் கொடுத்தாள் திவி…

மெல்ல தலையை திவியின் பக்கம் உயர்த்தி ஹேய்… எருமை உன்னை திவியை முறைத்தாள் ரேவதி.

“மார்னிங்கல இருந்து நீதான் இங்க இருக்கமா நீ வீட்டுக்கு போயிட்டு ரிப்ரெஷ் ஆகி ரெஸ்டு எடு… மேடமை நான் பாத்துக்குறேன்” இலகுவாக டீஷர்டின் கையை உயர்த்தியவன் போனை எடுத்து ரகுவை அழைத்தான்.

அழளது இதயத்தின் ஓசை காதுக்கே கேட்பது போல கார்த்திக்கை கலவரமாக பார்த்தவள், “இல்ல… திவி இருக்கட்டும்…. நீங்க… உங்களுக்கு வேலை இருக்குமே‌… அவனை தவிர்க்க காரணங்களை திக்கி திணறி அடுக்கினாள் ரேவதி…

கார்த்திக்  ரேவதியை அழுத்தமாக பார்த்தான்.  அவனது அழுத்தமான பார்வையில் வாயை மூடிக்கொண்டவள் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்து விட்டாள்.



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro