அலை 🌊 42

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கல்யாணி ரேவதியை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டதில்,  எல்லையில்லா மகிழ்ச்சியில், திளைத்திருந்தான் கார்த்திக். 

அன்னை தன்னிடம் நேரிடையாக சொல்லவில்லை என்றாலும் கூட, நிறைந்த சபையினில் ரேவதியை மருமகள் என சொல்லியதில்,  வானமே வசப்பட்டது போல ஒரு மாயை… 

அந்த மாயையில் இருந்து விடபட சற்றும் அவன் மனம் விரும்ப வில்லை…  இப்போதே இந்த கணமே தன் மனையாளை காண வேண்டும் என உந்துதல் பிறக்க, தந்தையிடம் சொல்லிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியவனின் கவனத்தை, தன் புறம் திருப்பியது, தீபக்கிடமிருந்து வந்த அலைபேசியின் அழைப்பு.

“சொல்லு  மச்சி…”  உற்சாகமாக வந்த நண்பனின் குரலில் திகைத்தவன், பின் தெளிந்து “என்ன மாப்ள…? ரொம்ப ஹெப்பியா இருக்க போல இருக்கு… !! “ நண்பனின் உற்சாகம் தன்னையும் தொற்றிக் கொண்டதில்,  சிரித்தபடியே கேட்டிருந்தான் தீபக்.

“ஆமா தீபக்…  ரொம்ப ஹேப்பியான நீயூஸ் தான்…  என்னவா இருக்கும்… நீயே கெஸ் பண்ணி சொல்லு  பாக்கலாம்….” ஸ்டியரிங்கில் தாளமிட்டபடியே நண்பனிடம் புதிர் போட்டான் கார்த்திக்.

வெகு நாளைக்கு பிறகு கார்த்திக்கின் இந்த புது அவதாரத்தில் மகிழ்ந்தவன், “இந்த அளவுக்கு நல்ல மூடுல இருக்கன்னா அது ரேவதி சம்மந்தப்பட்ட விஷயமா தான் இருக்கனும்…. கரெக்டா…?” தோழனின் மனம் அறிந்து தீபக் பதிலை சொன்னான்.

தீபக்கின் பதிலில் நேரம் காலம் தெரியாமல், மனையாளின் மதி  முகம் மனக்கண்ணில் வலம் வர,  

நீர் பொய்த்து போன பாலைவனத்தில் நில்லாமல் கொட்டிய மழை நீரை போல, தன் வாழ்க்கையின் உயிருற்றாய் வந்தவளது, செவ்விதழ்கள் இரண்டும் தன் இதழுடன் உரசிக்கொண்ட  தேவ நிமிடங்கள் நினைவில் வந்ததில், தேகம் சிலிர்த்து,  உதட்டில் உறைந்த கள்ள புன்னகையில், முகம் விகாசித்தது…

“டேய் கார்த்திக் லைன்ல நான் இருக்கியா….?”

மனைவியின் நினைவில் நண்பனை மறந்து கனவு கண்டு கொண்டிருந்தான் கார்த்திக். 

தீபக்கின் காட்டுத் கத்தலில் சுயம் பெற்றவன், வெட்கப் புன்னகையுடன் தலை முடியை  அழுந்த கோதி கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தினை பார்த்தான்.

“என்னடா… பண்ற… கனவுல உன் ஆளுக்கூட டூயட்டுக்கு போயிட்டியா… ?” தீபக் நக்கல் செய்ததில், வெட்கம் வர தன்  சிவந்த  முகத்தை மறைக்க  நெற்றியை இருவிரல் கொண்டு நீவியவன், 

“என்ன‌ என்ன பண்ணேன்…? ஒன்னும் பண்ணலையே…!!!” சட்டென மோகவலை அறுந்துதில் இயல்பு நிலைக்கு வர முடியாது சற்று தடுமாறினான் ஆடவன்..

நண்பன் தடுமாற்றத்தில் வாய்விட்டு நகைத்தவன்,  “வழியுதுடா துடச்சிக்க…” தீபக் கேலி செய்ய,  அலைபேசி வழியே அவனை முறைக்க முடியாமல் சட்டென சிரித்து விட்டான் கார்த்திக். 

அவனுக்கும் தன் செய்கை எல்லாம் புதிதாக தான் இருந்தது. சிரிப்பையும் அடக்க முடியவில்லை… அவன் உணர்வுகளையும் அடக்க முடியவில்லை‌..

“டேய் கார்த்திக் இப்போவாவது சொல்லு விஷயம் என்னன்னு…!!” மண்டையை பிய்த்து கொண்ட தீபகின் கெஞ்சலில், மனமிறங்கிய கார்த்திக், அன்னை தங்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியை கூறினான். 

“டேய் உண்மையாவா… நம்பவே முடியலடா…”  ஆனந்த அதிர்வில் குதுகலித்த  தீபக்,  “வாவ் மச்சன் கங்ராட்ஸ் டா இனி உன் காட்டில் மழை தான் ” சந்தோஷத்தில் ஆர்பரித்தவன்,   நேரில் இருந்தால் நண்பனை இறுக்க தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பான். நண்பனின் வலியை பார்த்தவனாயிற்றே… அவன் வாழ்க்கை சீரானதில் அகமகிழ்ந்து போனான் ஆருயிர் தோழன்.

மலர்ந்த முகத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தவன்,  “என்னாலையும் தான் இதெல்லாம் நம்ப முடியல…‌ ஆனா‌  நடந்துடுச்சே… என் காத்திருப்புக்கு பலன் கிடச்சிடுச்சி… என் காதலுக்கும் விடை கிடைச்சிடுச்சி முதலில் விளையாட்டாய்  பேச்சினை தொடங்கினாலும், அதற்கு அடுத்து நெகிழ்ந்து வந்த வார்த்தைகளில் தன் மனதை திறந்திருந்தான் கார்த்திக்.

“உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா தான் நடக்கும் மாப்ள…”   நண்பனை தன் மனதார வாழ்த்தியவன் நினைவு வந்தவனாய்,

 “அப்புறம் நான் ஏன் போன் பண்ணேன்றதையே சொல்ல மறந்துட்டேன் பாரு…

கோர்ட்டுல வைச்சி உன்னை குத்த வந்தவனை விசாரிச்சதுல அவன் கூலிக்கு கொலைப் பண்றவன்னு ஒத்துக்குட்டான்… இதுக்கெல்லாம் காரணம் அந்த  கஜாதான் என்பதையும் ஒத்துக்கிட்டான்…” என்றான் மகிழ்வாய்…

“ஓ,...”. என்றவனுக்கு தாடைகள் இறுகி முகம் கடினம் பெற்றது…

கார்த்திக்கின் அமைதியில் யோசனையானவன் “என்ன கார்த்திக் ரொம்ப சாதரணமா எடுத்துக்குற…? உனக்கு விஷயம் தெரிஞ்சா சந்தோஷப்படுவன்னு பார்த்தா‌ சட்டுன்னு முடிச்சிட்ட….?” தீபக் புரியாமல், நண்பனை வினவினான்.

“இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு தீபக்… எங்க விஷயம் தெரிஞ்ச சின்ன குழந்தைக் கிட்ட கேட்ட கூட சொல்லும் இது எல்லாவற்றிக்கும் பின்னாடி கஜேந்திரன் தான்  காரணமா இருப்பான்னு…” பற்களைகடித்து ஆத்திரத்துடன்  கூறியவன்,  

“நான் ஏற்கனவே எதிர்ப்பார்த்தது தான் தீபக்…  அதான் எனக்கு இது எதுவும் ஆச்சர்யமா இல்லை…”   மனைவியின் கையிலிருந்த காயம் நினைவு வரவும்,   காஜேந்திரனை புரட்டி எடுக்கும் வேகம்‌ எழ,  அது முடியாது போனதில்,  அந்த கோபத்தை  எல்லாம் காரின் வேகத்தில் காட்டினான். 

கார்த்திக்கின் குரலிலையே  அவன் கோபத்தின் அளவை புரிந்து கொண்ட தீபக் “கூடிய சீக்கிரம் அவனுக்கான தண்டனை கிடைச்சிடும் டா நீ எதுக்கும் கவலைப்படாத…” நண்பனிடம்  நம்பிக்கையுடன் பேசினான். 

‘அது கிடைக்கனும் டா…  இல்லன்னா என் ரேவதிக்காக  நானே அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்’ மனதோடு சொல்லிக் கொண்டவன், ம் என்றான்  முனங்களாக…

“சரிடா  நீ வேலையை பாரு…”  தீபக் அழைப்பை துண்டித்து விட,  கஜாவை நினைத்து கோபம் கொண்ட உள்ளம், தற்போது மனையாளின் அருகாமையை தேடிய அவள் பின்னே நாய்க் குட்டியாய் சென்றது.

…..

அந்திவான சிவப்பினை அறையில் இருந்த வெள்ளை திரைச்சீலை அழகாய் பிரதிபலித்துக் கொண்டிருக்க, அவளது முகமும் அந்திவான சிகப்பிற்கு நிகராய் சிவந்து காணப்பட்டது. இது ஆதவனால் வந்த சிவப்பா…  இல்லை அவளவனின் நினைவால் வந்த சிவப்பா…!! என்பது  அவளுக்கு மட்டுமே வெளிச்சம்… 

கண்களை‌மூடி படுத்திருந்தவளின் கவனத்தை,  கதவு திறக்கும் சத்தம் ஈர்த்ததில், ஆவலாக வாசலை  பார்க்க, அங்கே  சிவா நின்றிருந்தான்.

சிவாவை கண்டதும் அவளது  மொத்த உற்சாகமும் வடிந்ததை போல் ரேவதியின் முகம் கூம்பு விட்டது. அதை தம்பிக்கு காட்டது மறைத்தவள், இயல்பாய் எழுந்து அமர முயன்றாள்.

“அக்கா…”. உற்சாகம் பொங்க ரேவதியை அழைத்துக் கொண்டே உள்ளே வந்தவன், அவள் படுக்கையிலிருந்து எழுந்து அமர்வதை பார்த்ததும்,

“தூங்கிட்டு இருந்தியாக்கா எழுப்பி விட்டுட்டேனா” என்றான் தவறு செய்து விட்ட குழந்தையின் முகபாவத்துடன்,  

“இல்ல சிவா…  சும்மாதான் படுத்து இருந்தேன்… ஆமா என்னடா நீ மட்டும் வந்து இருக்க… அவங்க எங்க…?”” என்றாள் அவன் பின்னால் எட்டி பார்த்து…

அக்கா யாரை தேடுகிறாள் என தெரிந்தும் தெரியாதது போல “யாரை க்கா தேடுற…?” தன் பின்னால் திரும்பி பார்த்தவன் அக்காவை கேள்வியாக பார்த்தான்…

“தெரியாத மாதிராயே கேளுடா…?” முகத்தை உர்ரென வைத்து   பார்வையை திருப்பிக் கொண்டாள் பாவை.

அக்காவின் செய்கைகளை    சன்ன சிரிப்புடன் பார்த்தவன், “வாய் தான் அம்மாவை திட்டுது மனசு அவங்களை தான் தேடுது போல” கேலியாக,  ரேவதியின்  மனதினை உரைத்தவண்ணம் அவளுக்காக கொண்டு வந்திருந்த காபியை கப்பில் ஊற்றி கொண்டிருந்தான் இளையவன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை உன் கூடவே வருவாங்களே அதான் கேட்டேன்…” நான் கேட்கவே இல்லையே என்ற பாவனையில் தம்பியிடம் முறுக்கிக் கொண்டாள் ரேவதி, 

இன்னும் தாயின் மேல் கோபமாக இருக்கும் தமக்கையை பார்த்து தலையை இடவலமாக அசைத்து அலுத்த கொண்டவன், “பாவம் கா அம்மா இப்போ எல்லாம் ரொம்ப புலம்பிக்கிட்டே இருக்காங்க அதுவும் உனக்கு கை அடிப்பட்டுதுன்னு தெரிஞ்சி அவங்களுக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சி இந்த ரெண்டு நாளா ஏதோ போல இருக்காங்க….”  தாயின் தவிப்பை உடன் இருந்து பார்த்தவன் என்பதால்  அதை அக்காவிடமும் பகிர்ந்துக் கொண்டான்.

ரேவதியின் மனதிற்கும்   தெரியும் தன் அம்மாவின் வருத்தம்…. இருந்தும், முன்புபோல் சகஜமாக அவரிடம் வார்த்தையாட வரவில்லை… ஏதோ ஒன்று விலக்கியே வைக்கிறது… அதுவும் காவல் நிலையத்தில் நடந்ததையெல்லாம் நினைத்தவளுக்கு தன்னையும் மீறி கண்கள் அன்னிச்சையாக கலங்கியது…

ரேவதி கலங்குவதை பொறுக்க மாட்டாமல் தவித்தவன், “  அக்கா ப்ளீஸ் அழாதக்கா… சாரிக்கா..,.. நான் ஏதோ பேச வந்து டாபிக் எங்கேயோ போயிடுச்சி… இனி அம்மாவை பத்தி பேசல…  சாரிக்கா” மனம் பதறியவனாய் அவளை சமாதானம் செய்து பக்கத்தில் அமர்ந்தவன் அவள் காபி அருந்துவதற்கு ஏதுவாக அந்த கோப்பையை  கைகளில் தாங்கிக் கொண்டான்.

வேண்டாம் என அவளிடமிருந்து கோப்பையை விலக்கி விட்டவள்,  “நீ பேசினது தப்பு இல்ல சிவா… ஆனா என்னால தான் நடந்ததை மறக்க முடியல…” என்றவள் தானே முன் வந்து தம்பியிடம் தன் மனம் திறந்தாள்.

“எனக்கு மட்டும் அவங்க மேல பாசம் இல்லையா சிவா… நீயே சொல்லுடா…???   அவங்க கிட்ட பேசாம இருக்கறது எனக்கு எவ்வளவு  கஷ்டமா இருக்கு தெரியுமா…? போலீஸ் ஸ்டேஷன்ல அம்மா பேசினதை கேட்ட தானே‌‌… பெத்த அம்மாவே என் மேல நம்பிக்கை வைக்கல  அப்புறம் நான் இருந்து யாருக்கு என்ன லாபம்…” மனம் வலிக்க வலிக்க தம்பியை பார்த்தாள். 

தமக்கையின் வலி அவனையும் தாக்க பதிலின்றி நின்றிருந்தான் சிவா.

“நான் யாருக்காக உழைக்கிறேன்….?  நமக்காக தானே…!!  நாம எல்லாம்  நல்லா இருக்கனும்னு தானே,  நான் வேலைக்கு போனேன்…? அது தப்பா…? ட்ரூப் டேன்ஸ் ஆடுறது தப்பா…??  இல்ல ஆடுற எல்லாருமே தப்பாதான் போவாங்களா…???” கேள்விகளால் துளைத்தவள்  தம்பியை அழுகையுடன் பார்த்தாள்….

அக்காவின் அழுகை அவனையும் கலங்கடிக்க, “அக்கா… ப்ளீஸ் அழாதயேன்…” அவன் ரேவதியை சமாதனம் செய்ய முயன்றான். 

தம்பியின் சமாதானம் எல்லாம் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள் ரேவதி…

“அவங்க பெத்த பொண்ணு தானே நானு…  என் மேல இல்லாத நம்பிக்கை  அவன் மேல வைக்கிறாங்க…!!  அவன் சொல்றதை கேக்குறாங்க…!! கார்த்திக் சார்… யாரோ எவரோ என்னை பத்தி எதுவும் தெரியாது… ஆனா நான் கலங்கி நின்னேன்னுற ஒரே காரணத்துக்காக என் கழுத்துல தாலியை கட்டி என்னை அந்த இக்கட்டில் இருந்து காப்பாத்தி கௌரவத்தோட அந்த ஸ்டேஷன்ல இருந்து வெளியே கூட்டிட்டு வந்தாரு…  ஆனா எனக்கு ஒரு கஷ்டமான  நிலை வரும் போது கூட அந்த ஆளு தானே நம்ம அம்மா கண்ணுக்கு தெரிஞ்சான்… என்கிட்ட என்ன ஏதுன்னு கூட விசாரிக்கலையே… நான் இப்படித்தான்னு அவங்களே நினைச்சிட்டாங்க இல்ல”  

இத்தனை நாளாக தன் மனதை அரித்த கேள்விகளை சிவாவிடம் வெளிப்படுத்த… அவனுக்குமே வருத்தமாகத் தான் இருந்தது.

அவளை விட சிறியவன் ஆயினும், அக்காவின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துக் கொள்ளாதவன் இல்லையே 

குடும்ப சுமையில் அவனும் அணிலை போல இந்த குடும்பத்திற்கு உதவியவன் தானே அவளின் ஆதங்கம் அனைத்தும் விளங்கத் தான் செய்தது… இருப்பினும் தாயின்  தவிப்பையும், துடிப்பையும், நேரில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் அக்காவிற்கு தாயின் தற்போதைய நிலையை விளக்க நினைத்தவன், 

“நான் என்னைக்குமே உன்னை தப்பு சொல்ல மாட்டேன் கா‌‌… நீ கோவமா இருக்கறது, எல்லாம் சரி தான்… உன்னை அம்மா கிட்ட பேசுன்னு சொல்லி கூட நான் கட்டாய படுத்தல… ஆனா இப்போ அம்மா நீ  நினைக்கிற மாதிரி  இல்லக்கா ரொம்ப மாறிட்டாங்க… உனக்கு கைல அடிபட்டது தெரிஞ்சதும் எப்படி  துடிச்சாங்க தெரியுமா…? காலையில அந்த ஆளுப்போய் பாத்து நல்லா கேட்டு தான் வந்து இருக்காங்க…. வந்ததுல 

இருந்து ஓரே அழுகை என் பொண்ணுக்கு நானே கஷ்டத்தை கொடுத்துட்டேன்னு… சொல்ல சொல்ல கேட்காமல் அழுது அழுது ப்ரஷரை அதிகமாகி படுத்துட்டாங்க…. அதான் நான் சாப்பாடு கொண்டு வந்தேன்…”  காஞ்சனாவின் நிலமையை வருத்தமாக கூறிக் கொண்டிருந்தான் சிவா….

தம்பியின் சொல்லில் அதிர்ந்து விழி விரித்தவள் “என்ன சிவா சொல்ற அந்த ஆளை எதுக்கு இவங்க போய் பாக்கனும்…  தேவையில்லாத வேலையை எல்லாம் ஏன் இவங்க செய்றாங்க…” அன்னைக்காக பரிந்துக் கொண்டு வந்தவள் காஞ்சனாவின் மகளாய் மாறி இருந்தாள்…

“பரவாயில்லை கா….  இப்போ ஓகே வாதான் இருக்காங்க…  ஆனா அந்த ஆள் சொன்னது ஏதோ அவங்களுக்கு ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கனும்னு நினைக்கிறேன்… அதான் இப்படி பயந்து போய் இருக்காங்க…” யோசனையுடன் கூறியவன் “ஆமா‌ மாமா வரலையாக்கா…?”  என்றான் கார்த்திக்கை பார்க்காததில்.

ஏற்கனவே அவனை எதிர்ப்பார்த்து ஏமாந்து இருந்த கோவத்தில் “உனக்கு இப்போ என்ன…? சும்மா மாமா மாமான்னு கூப்பிட்டுக்கிட்டு …. எத்தனை முறை சொல்லி இருக்கேன், மாமான்னு கூப்பிடாத எப்பவும் இந்த உறவு முறை நிலைக்காதுன்னு…” அவள் கோபமாக தம்பியை கடியவும், 

கல்யாணி ரேவதியை மருமகளாய் ஏற்றுக் கொண்டதை மகிழ்வுடன் சொல்ல வந்த கார்த்தித்  கதவு குமிழியில் கை வைத்து திறந்து,  இதை எல்லாம் கேட்கவும், சரியாக இருந்தது‌.

அவன் ரேவதியின் வாய் மொழியில் இதை கேட்டதும், இறுகிய முகத்துடன் உள்ளே முன்னேறாமல் அமைதியாக அங்கேயே நின்று விட்டான். 

“பச் என்னக்கா மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுனா மாதிரி திரும்பி பழைய மாதிரியே பேசுற…? கார்த்திக் மாமா அப்படி எல்லாம் நினைச்சி இருக்க மாட்டாரு க்கா… அவருக்கு உன் மேல அன்பும் அக்கறையும் அதிகம்” அவன் அதிருப்தியுடன் அக்காவை பார்த்தான்.

“ஓ… வேற எப்படி சொல்ல சொல்ற சிவா… அவர் பாவம் பாத்து என் கழுத்துல போட்ட தாலிய வைச்சி உரிமை பாராட்ட சொல்றியா….? அவர் நினைக்கலனாலும் அது தானே உண்மை… அவர் என்னை விரும்பினாரா இல்லை நான்தான் அவருக்காக காத்திருநதேனா… இந்த அன்பு அக்கரை எல்லாம் இந்த ஒரு கயித்தால் வந்தது… எதிர்பாராமல் நடந்ததை இனி…. எதிர்பார்காகமலே  இருக்கறது தான் நமக்கு நல்லது”.

“அக்கா… கார்த்திக் மாமா இதுக்காக மட்டும் உன்னை அன்பா பாத்துக்கிட்டா மாதிரி எனக்கு தெரியல… நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசுறன்னு நினைக்கிறேன்” தனக்கு புரிந்ததை அவன் அக்காவிற்கு  புரியவைக்க முயல,

“எனக்கு புரிஞ்ச வரை போதும் சிவா‌.. நம்ம தேவைக்கு அடுத்தவங்கள சோதிக்க கூடாது…  இது தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடிச்சி பதம் பாக்குற மாதிரி ஆகிடும்… நம்ம வசதிக்கும் அவங்க வசதிக்கும் ரெண்டு மாடி இல்லை, மூடி மாடி மேல  ஏறி நின்னாக கூட அவங்க உசரத்துக்கு நம்மால போக முடியாது…”  கேலிப்போல் தங்கள் நிலையை கூறியவளின் இதழ்கள் விரக்தியில் வளைந்தது.

அவனை நினைக்கும் போதே சிவந்த கன்னங்களில்  அவனை சேர முடியாதே என்ற நிதர்சனம் உரைத்ததில் கண்ணீர் வழிந்தது…

“என் தராதரத்துக்கு எல்லாம் அவரை நினைச்சி கூட பாக்க முடியாது…  இதுல நான்‌ அங்க போய் வாழ முடியுமா…? நடக்கறதை பேசுடா… அதுவும் இல்லாம நமக்கு உதவி செய்ய போயி அவரு இவ்வளவு கஷ்டப்படுறாரு‌.. இப்ப அவரோட தங்கை கல்யாணமே  கேள்வி குறியா நிக்குது… அவர் கல்யாணமும்  நின்னுடுச்சாம் இதை எல்லாம்  என்னால் தானே… என்னால அவர் வாழ்க்கையில  ரொம்பவே அடி பட்டுட்டாரு… அவங்க வீட்டுலயும் பிரச்சனை மேல பிரச்சனை  அவர் பெயரும் என்னோட சேர்ந்து அசிங்கமாகிடுச்சி…”

  அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து கலங்கினாலே அன்றி அவனுடன் தன் பெயர் இணைந்து வந்ததில் உள்ளுர மகிழ்ச்சியில் முத்தாடிக் கொண்டு தான் இருந்தாள். 

“வீட்டுக்கு போனதும் முதல் வேலையா  அவரை கல்யாணம் பண்ண இருந்த பொண்ணை பாத்து பேசனும்…” இது சொல்லும் போதே குரல் கமரலாகத்தான் வந்தது… அதை வெளிக்காட்டாமல் தொண்டையை சரிபடுத்திக் கொண்டவள்,  “அவங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடனும்…  அவரு என்னை காப்பத்த தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு அவங்களுக்கு தெரிஞ்சா அவரை ஏத்துக்க தயங்க மாட்டாங்க நானும் குற்றவுணர்ச்சி இல்லாம இருப்பேன்…” சோர்வுடன் சொல்லி கண்களை மூடிக்கொண்டவளுக்கு விழிகளின் ஓரத்தில் நீர் துளிர்த்து காதோரம்  இறங்கியது.

“அக்கா…”.  சிவா அவள் பேசியது தாளா மாட்டமால்  அழைக்கவும், 

“ஒன்னும் இல்லடா… கொஞ்சம் டையர்டா இருக்கு… நான் தூங்கறேன்…” தம்பியிடம் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க,  வார்த்தைகளை வெளியிட முடியாமல் தொண்டைக் குழியில் சிக்கி தவித்தவள்,  தூங்குவது போல கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் ரேவதி.

அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் இவன் உள்ளத்தில் ஊசியாய் குத்தி ரணத்தை அதிப்படுத்தி கொண்டிருந்ததே, ஒழியே வலியை சற்றும் குறைத்தபாடில்லை… ‘காலையில் என்னுடன் இணக்கமாக இருந்தாளே அது எல்லாம் பொய்யா… அவள் மனதில் நான் இல்லையா…? மாலை வருவதற்கும் அப்படியே நேர்மாறாக இருக்கிறாளே இல்லை இது உண்மையா…?’ உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்  சிக்கி கொண்டு சின்னாபின்னாமாக சிதறிக் கொண்டிருந்தான் கார்த்திக்…  

‘சிவா சின்ன பையன்… அவனுக்கு தெரிந்த அளவிற்கு கூட  என் மனசு , உனக்கு தெரியலை…’ அத்தனை வலியுடன் ரேவதியை பார்த்தவன், விழிகளும் கலங்கி போய் தான் இருந்தது… நரம்புகள் புடைக்க கோவத்தை கட்டுப்படுத்தியவன் இத்தனை நாட்களில் ஒரு இடத்தில் கூட என் மனம் உனக்கு புரியவில்லையே…!!  என்ற ஆதங்கம் அவன் கரங்களை கட்டி போட்டு விட சத்தம் செய்யாமல் வந்த விழியே திரும்பி சென்று விட்டான். கார்த்திக்.

……

கண்ணீரை துடைக்க துடைக்க அது வற்றாத  ஆறாய்  காஞ்சனாவின் கன்னங்களை நனைத்துக்கொண்டே இருந்தது.

கஜேந்திரனை சந்தித்து வந்ததிலிருந்து இப்படித்தான் உள்ளுக்குள் மறுகிக்கொண்டே இருக்கிறார்.

அவன் பேசியதை எல்லாம் நினைக்க நினைக்க அத்தனை அவமானமாய் இருந்தது… பாவி என்னென்னா பேச்சு பேசிவிட்டான்…  இப்போது அதை நினைத்தாலும் பயத்தில் முகம் எல்லாம் வெளிரி விட்டது….

பயத்தில் முகமெல்லாம் வியர்த்து விட, கண்களை இறுக்கமாக முடிக் கொண்டார்… தலை சுற்றுவது போல ஒரு பிரம்மை…  அவன் சொன்னது போல ஏதாவது நடந்துவிட்டால் காஞ்சனாவிற்கு மகளின்  வாழ்க்கையை நினைத்து  அச்சமாக இருந்தது.

நீதிமன்றத்தில் நடந்த நிகழ்விற்கு பின்னால் ஒருவேளை கஜா இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தை  மீனா சொல்லி இருக்க,  நாலு கேள்வியை கேட்காமல் விடப்போவதில்லை என்று ஆவேசமாக சென்றவரை தான் இப்படி பயத்தில் படுக்க வைத்து விட்டான் அவன்.

மத்திய சிறைச்சாலையில் அவனை விசாரணை கைதியாக அடைத்து வைத்திருக்க, காஞ்சனாவே அவனை சந்திக்க சென்றிருந்தார். 

ஏற்றி கட்டிய லுங்கியும், கண்களில் குரோதத்துடன் வந்த கஜாவை பார்த்து ஒரு நொடி நம் பயந்து தான் போனார் காஞ்சனா…

 அவர் பார்த்த கஜேந்திரன் இவன் இல்லையே… அக்கா என்று பாசமாய் அன்புடன் அழைக்கும் அவனுக்கும், இதோ கொலைவெறியுடன் அவர் முன்னே நின்றிருக்கும்  இவனுக்கு  நூறூ வித்தியாசங்களை சொல்லி விட முடியும்…

“என்ன  இவ்வளவு தூரம்…?” நக்கலாக பார்த்த தம்பியை கோபத்துடன் முறைத்தவர்,

“உனக்கு நாங்க என்னடா பாவம் பண்ணோம்… ஏன்டா என் பொண்ணோட வாழ்க்கைய அழிக்க நினைக்கிற…” ஆதங்கத்துடன் கேட்டவரை ஏளனமாக பார்த்தவன்,

“இது எல்லாம் சேம்பல் பீஸ் தான்… இதுக்கே இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா எப்பிடி…? இன்னும் பயாஸ்கோப் இருக்கே 

அதுக்கெல்லாம் என்னப் பண்ணப்போறிங்க?” எள்ளலாக காஞ்சனாவை பார்த்தான் அவன்.

“பாவி… படுபாவி… உன்னை தம்பியா நானே டா பாத்தேன்… நாசமா போறவனே என் பொண்ணை ஏண்டா இப்படி வாட்டி வதைக்குற…?” அவர் தலையில் அடித்துக் கொண்டே கேள்வி கேட்க,

“நீ தம்பியா பார்த்தா…? அதுக்கு நான் என பண்றது…? ஏன்‌ தம்பிக்கு அக்கா மகளை கட்டிக்க உரிமை இல்லையா…? எனக்கு தேவை உன் பொண்ணு அவ என் வழிக்கு வரலை… அதான் அவ வழிக்கு நான் போயிட்டேன்…” சிறிதும் வெட்கமின்றி முகம் விகாரமாக கோணல் சிரிப்புடன் சொல்லும் அவன் முகத்தில்  அத்தனை வஞ்சம் இருந்தது…

காஞ்சனாவிற்கு நெஞ்சில் நீர்வற்றிய உணர்வு…   முகம் எல்லாம் இருண்டு விட்டது…. அவன் தோற்றத்தில், காஞ்சனாவிற்கு முன்னே கொடிய அரக்கனாய் மாறி நின்ற தம்பியை பார்த்தவரது கண்கள் இரண்டும் அருவியாய் நீரை இறைத்து கொண்டிருந்தது.

ஒரு கணம் நிதானித்து, கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவர், “ உன்னை கெஞ்சி கேட்குறேன் சாமி என் புள்ளை விட்டுறு… உன்னை நல்லவன்னு நினைச்சிதானே என் பொண்ணோட வாழ்க்கையை உன்னை நம்பி உன்கிட்ட ஒப்படைச்சேன்… நீயே அவளை நாசமாக்க துடிக்கலாமா… அவ வாழ்க்கைய அழிக்க நினைக்கலாமா…? நீ பார்த்து வளர்ந்த பொண்ணு தானே அவ…”.  அவர் நியாவானிடம் நியாயம் கேட்க

அந்த அறையே  அதிர சத்தமாய் சிரித்தவன், “இன்னும் நீ நல்லவன் நம்பி என்கிட்ட பேசுற பாத்தியா,  உன்னை நினைக்கும் போது பாவாமா தான் இருக்கு… ஆனா என செய்ய… எனக்கு உன் பொண்ணு தான் வேணும்?” கேலியாக இதழை வளைத்தவன்  “ஆனா இவ்வளவு தூரம் அந்த குட்டிக்காக வந்த பிறகு இனி பின் வாங்கினா இந்த கஜாவுக்கு என்ன பெருமை  இருக்கு சொல்லு…. இனி உன் பொண்ணோட வாழ்க்கை என் கூடத்தான்… என்ன டா இவன் ஜெயில்ல இருக்கான்  எப்படி வெளியே வருவான்னு தானே யோசிக்கிற‌… ?”

“இப்படி இப்படி சொடுக்கு போட்டு முடிக்கறதுக்குள்ள இந்த கேஸையே ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன்… சட்டத்துல எத்தனை சந்து, பொந்து, இருக்குன்னு அதை படிச்ச வக்கீலை விட தினம் தினம் அது கூட வாழ்ந்துக்கிட்டு இருக்க எனக்கு தெரியாதா…?”  அவன் பெரிய உலக சாதனையை செய்விட்ட மிதப்போடு பேச, 

இத்தனை தப்புக்களை செய்திருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு நப்பாசை தம்பி தன் சென்னால் கேட்பான்‌ என்ற  நம்பிக்கையோடு வந்தவரை உடைத்து ஒன்னுமில்லாத செல்லாக்காசிக்கிய பெருமை அவனையே சேரும்…

உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தவரின்  உயரத்திற்கு குனிந்து “நாளை எண்ணிக்கிட்டே இருங்க…  என்கிட்ட இருந்து அவளை யாராலும் காப்பாத்த முடியாது…”  கடுமையாக பேசியவன் முகத்தில்  துவேஷம் கொட்டிக் கிடந்தது….

கஜேந்திரனின் பார்வையில் காஞ்சனாவிற்கு உள்ளுக்குள் குளிர் பரவியது, முற்றிலும் உண்மை…   அத்தனை வெறியும் கண்களில் தேக்கி வைத்திருந்தானே….

 தன் மகளுக்கும் மருமகனுக்கும் வாழ்க்கையில் என்ன கொடுமைகளை செய்ய காத்திருங்கிறானோ என்று நினைக்கையில், அவருக்கே அங்கேயே படப்படப்வென்று வந்துவிட்டது…  

அதே எண்ணத்துடன் வீட்டிற்கு வந்தவருக்கு நிமிடத்தில் தலையை சுத்திக்கொண்டு வர, மயங்கி கீழே சரிந்திருந்தார்…  பள்ளியிலிருந்து வந்த சிவா, தான் அவரை பார்த்து  தண்ணீரை தெளித்து, எழுப்பி மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தான். இதோ இப்போதும் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் மறுக்கிக் கொண்டிருந்தார்.

……

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro