11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வினீத் பேசி சென்றதும் மரகதத்திற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. அவன் மறுபடியும் திரும்பிவர காரணம் கண்டிப்பாக இவர்களை அவன் பிரிந்த துயர் அல்ல என்றும் வேறு ஏதோ வலுவான காரணத்திற்காகவே அவன் உடனே திரும்ப வந்துள்ளான் என்பது அவருக்கு பட்டவர்த்தனமாக புரிந்தது. சிறுவயதில் இருந்தே வினீத்தை பற்றி நன்கு அறிந்தவர் மரகதம். ஷ்யாம் எந்த விடயத்திலும் அவசரப்படு முடிவெடுத்து ஒன்று அது சரியென வாதிடுவான்.. இல்லை எனில் உடனே தான் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்வான். ஆனால் வினீத்தோ எந்த விடயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நன்றாக யோசித்து அதில் உள்ள சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்த பின்னரே தெரிவுசெய்வான். ஆனால் அவன் தேர்வு செய்த முடிவானது பிழை என்று தெரிந்தாலும் அவன் செய்ததுதான் சரி என்று கடைசிவரை வாதிடுவான். சிறு வயதில் இருந்தே தனக்கு ஏதும் பிரச்சினைகள் அல்லது மனக்கசப்புகள் ஏற்படும் போது அவன் யாரிடமும் கூறாமல் இப்படி தலைமறைவாவது வாடிக்கை. இது மரகதம்,ஷ்யாம் ,மீனாக்‌ஷி மூவருக்குமே நன்றாக தெரியும். அதை அவனிடம் மாற்றிக்கொள்ளும்படி எவ்வளவு கூறியும் அவனால் அது முடியவில்லை. என்னதான் ஒருவன் பெரிய மகானாக இருந்தாலும் அவனிடம் கூட ஒரு கெட்ட பழக்கம் இருக்கும் என்பதே உண்மை. இல்லை எனில்  அவன் தேவதூதனாக இருக்க வேண்டும்.

மரகதத்திடம் பேசிவிட்டு வெளியில் வந்த வினீத்தை கட்டிப்பிடித்த ஷ்யாம்

"சாரிடா, நான் கோபத்துல உன்ன அடிச்சிட்டேன்... என்ன மன்னிச்சிடுடா" என்றவனை வினீத் அனைத்துக்கொண்டான். இது இப்படித்தான் முடியும் என்று முன்கூட்டியே தெரிந்த மீனாக்‌ஷி தலையில் அடித்துக்கொண்டு

"உனக்காக போய் இவருகிட்ட சண்ட போட்ட பாரு,  என் புத்திய செருப்பால அடிக்கனும்" என்று தனக்கும் மட்டும் கேட்குமாறு பேசுகிறேன் என்று அவர்கள் இருவருக்கும் கேட்கும் படி கூறினால். இதை கேட்ட இருவரும் புன்னகைக்க ஷ்யாம் உடனே வினீத்தின் கையைபிடித்து

"டேய் உன்னோட எல்லா அவார்ட்டும் என்கிட்ட தான் இருக்கு. நீ காணாம போய் இரண்டு நாள்ள ஆரம்பிச்சி இப்போ தேசிய விருதோட சேர்த்து ஆறு அவார்ட் கிடைச்சிருக்கு. எல்லாமே நான் தனியா வெச்சிருக்கேன்"என்று கூறி அவனின் அறைக்குள் அழைத்து சென்று வினீத்தின் விருதுகள் அழகாக ஒரு கண்ணாடி கப்போர்ர்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு விருதையும் யார் கொடுத்தார் என்று ஒவ்வொன்றாக கையில் எடுத்து வினீத்துக்கு காட்டி அதை அவனிடம் கொடுத்துக் கொண்டிருந்தான் வினீத்தின் படத்துடைய நாயகன். இருவரும் விருதுகள் பற்றி பேசி முடித்த பின் ஷ்யாம் எதுவோ கேட்க தயங்குகிறான் என புரிந்த வினீத்

"ஷ்யாம், தயவு செஞ்சி நான் ஏன் வீட்ட விட்டு போனேன்னு மட்டும் கேட்காத. அதை மட்டும் சொல்ல மாட்டேன்" என்றவனை இவனும் முறைத்து

"நீ சொல்ல தேவையில்லை. இன்னும் கொஞ்சம் நாள்ள எனக்கே தெரிஞ்சிடும்" என்றவன்

"இனிமே உன்ன நம்பி நாங்க மீனாக்‌ஷிய உன்கூட அனுப்பி வைக்க முடியாது. நீ அடுத்து எப்போ காணாம போவேன்னு தெரியாது. சோ அதனால அவ இனிமே இங்கேதான் இருப்பா" என்று கூற வினீத்தோ சற்று யோசித்தவன்

"இல்லை அவ வயசுப்பொண்ணு. நீயோ பேமஸ் ஹீரோ. உன்வீட்டுல அவ தொடர்ச்சியா இருந்தா அவளோட எதிர்காலத்துக்கு ஏதும் ப்ராப்ளம் ஆக வாய்ப்பிருக்கு" என்று கூற அங்கு வந்த மரகதம்

"இவ்வளவு விவரமா பேசுற ஆளு, தான் வீட்ட விட்டு காணாம போகறதுக்கு  முன்னாடி யோசிச்சிருக்கனும். ஊரு என்ன சொன்னாலும் பரவாயில்ல,  மீனாக்‌ஷி என்கூடத்தான் இருப்பா. உனக்கு இஷ்டம்னா இங்க இரு,  இல்லையா நீ உன் வீட்டுல போய் தனியா இருந்துக்க" என்று கூற மரகதத்தின் உள் நோக்கம் அறியாத வினீத் சரி என்று தலை அசைத்தான். மரகதத்திற்கு முன் அவனால் எதிர்த்து பேச முடியவில்லை என்ற போதும் மீனாக்‌ஷி அவர்கள் வீட்டில் தொடர்ந்து இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.

மீனாக்‌ஷி தங்கி இருக்கும் அறைக்குள் சென்ற வினீத் அவளிடம் பேச முற்பட அவளோ அவனுக்கு முகம்கொடுக்காமலேயே இருந்தாள். சிறுது நேரம் அவளின் பாராமுகத்தை கண்டவன்

"இப்போ எதுக்கு என்கிட்ட பேசாம இருக்க?" என்று கேட்க அவள் ஒரு சிறிய குறிப்பு புத்தகம் ஒன்றையும் ஒரு சில போட்டோக்களையும் அவன் முன் வைக்க வினீத் சிறிது ஆடிப்போனான். அவனருகில் வந்த மீனாக்‌ஷி

"என்ன இதெல்லாம், இதுக்காகத்தான் இப்படி எல்லாம் பண்ணியா?" என்று கேட்க என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தவன்

"இல்ல இது படத்துக்கு எடுத்தது" என்று தட்டு தடுமாறி பேச அவளோ

"அண்ணா உனக்கு பொய் சொல்ல வராது. ரொம்ப கஷ்டப்பட்டு அத வரவைக்காத. நீதானே எப்போமே சொல்லுவ , நம்ம மற்ற ஒருத்தருக்காக ஏதும் செய்யனும்னா அவங்க அதுக்கு தகுதி உடைய ஆளா இருக்கனும்னு. ஆனா இப்போ நீ பண்ணதுக்கு இவ தகுதியானவளா? காசுக்காக கண்டவன்கிட்ட போறவளுக்காக போய் நீ" என்று கூற வினீத் கோபமாக

"வாய மூடு மீனாக்‌ஷி, என்ன பேசுற. இப்படி பேச எங்க கத்துகிட்ட?.. அவளுக்கு என்ன ப்ராப்ளமோ, அத விடு எந்த ஒரு குற்றத்துக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கும். அது என்னனு  தெரியாம நம்ம இஷ்டத்துகு பேச கூடாது. கற்பழிக்கிறத தவிற மற்ற எல்லா குற்றத்துக்கும் ஒரு சரியான காரணம் குற்றவாளி பக்கத்துல இருக்கும், இப்படி இருக்கும் போது பேப்பர், டிவில வந்தத வெச்சு எப்படி நீ ஒரு முடிவுக்கு வரலாம்" என்று கூற அவளோ

"என்ன காரணம் வேணா இருந்துட்டு போகட்டும். அவ எனக்கு அண்ணியா வரக்கூடாது. எவன் கூடயோ போய் கூத்தடிச்சிட்டு அதுவும் காசுக்காகத்தான் பண்ணேன்னு ப்ரஸ்மீட்ல சொல்லிட்டு திரியிறவளுக்காக நீ பண்ணது கொஞ்சம் கூட சரியில்லண்ணா. உன்னோட காதலுக்கு அவ தகுதியானவ இல்ல" என்று கூறியவள் மேலும்

" ஆமா அவளுக்கென்ன ப்ராப்ளம், பெரிய ஹீரோயினா ஆகனும்னா உன்னோட ஒரு நாலு படத்துல நடிச்சாலே அவ டாப் ஹீரோயின் ஆகிடுவா. ஆமா அவ எதுக்கு உன்ன ரிஜக்ட் பண்ணா? உன் காதல ஏத்துக்கிட்டா அவ இஷ்டத்துக்கு இருக்க முடியாதுன்னா?" என்றவளை தன் தங்கை தன் மீது கொண்ட பாசத்தாலேயே  இன்னொரு பெண்ணை மோசமாக பேசுகிறாள் என்பது தெளிவாக புரிந்தது வினீத்திற்கு. ஏனென்றால் மீனாக்‌ஷியின் இயல்பு மற்றவர்களை மோசமாக பேசுவதோ அல்லது இன்னொருத்தரை பற்றி மோசமாக எண்ணுவதோ இல்லை. ஆனால் தன்னை ஒரு பெண் நிராகரித்துவிட்டால் என்பது அறிந்ததும் அந்த பெண் மீது இவளுக்கு இவ்வளவு கோவம் வரும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஒரு அரேபிய வாசகம் ஒன்று உள்ளது. 'ஒரு மலை தான் இருக்கும் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறி இருக்குன்னு சொன்னா கூட நம்பலாம். ஆனா ஒருவனுடைய பிறவிக்குணம் மாற்றம் அடைந்தது என்றால் அதை நம்ப முடியாது'.
ஆனால் இங்கு ஒருவனின் குணம் மாற்றமடைய தான் இருக்கும் இடம், காலம், நேரம் ரொம்பவும் முக்கியம் என்பதற்கு மீனாக்‌ஷியே சிறந்த உதாரணம்.

தன் தங்கையை பார்த்த வினீத்

"மீனாக்‌ஷி இங்க பாரு. நமக்கு ஒருத்தங்களோட உண்மையான சிட்டுவேசன் தெரியாம அவங்க பண்ண காரியத்துக்கு நம்மலால அது சரியா தவறா என்று முடிவு சொல்ல  முடியாது. உனக்கு அவள பத்தி என்ன தெரியும். அவளுக்கு காசுதான் முக்கியம்னு நினைச்சிருந்தா எதுக்கு அவ இப்போ எல்லோர் கூடவும் சண்டை போடனும். அவ விக்னேஷ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போயிருந்தாலே போதுமே அவளோட சினிமா கனவு வேற லெவலுக்கு போய் இருக்கும். ஆனா அவ அத பண்ணல. என்னோட காதல அவ ஏன் ரிஜக்ட் பண்ணானு எனக்கு தெரியல. ஆனா நான் காதலிச்ச பொண்ணுக்கு இப்போ ஒரு ப்ராப்ளம்னு சொல்லும் போது என்னால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியல" என்று கூற அவனை பார்த்து முறைத்தவள்

"அவகிட்ட எத பார்த்து நீ காதலிச்சண்ணா. நீ என்ன வேணா சொல்லிக்க.என்னால அவள எல்லாம் அண்ணினு சொல்ல முடியாது. நான் இப்பவே சொல்றேன். மறுபடியும் அவகிட்ட போய் ஏதும் சொல்லி நீ அவமானப்பட்ட, என்ன அமைதியா பார்க்கவே மாட்ட" என்று கூற அவனோ அமைதியாக அவளை பார்த்தவன் மெதுவாக

"பிருந்தா கெட்டுப்போனவன்னுதான் உனக்கு அவமேல கோவம். வேற யாரையாச்சும் நான் காதலிக்கிறேன்னு சொல்லிருந்தா உடனே நீ அவள அண்ணின்னு சொல்லிருக்க மாட்ட?.. உன்னால அவளோட பாஸ்ட் லைப்ப வெச்சி அண்ணியா அக்சப்ட் பண்ணிக்க முடியல அதுதானே. நீ வாழ்ந்த முறையும் அவ வாழ்ந்த விதமும் டோட்டலி டிபரண்ட்" என்று கூற அவள் உறுதியாக

"நீ என்ன வேணா சொல்லிக்க, ஐ டோண்ட் கேர். என்னால அவள அண்ணினு சொல்ல முடியாது" என்று சென்றாள். இவர்கள் பேசிய எல்லாவற்றையும் வெளியில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஷ்யாமிற்கு பிருந்தா மேல் கொலைவெறியுடன் கூடிய வெறுப்பு வந்தது.

-----------------
என்னால் முடிந்தவரை ஞாயிறு , மற்றும் வியாழன் அன்று கதையை பதிவிட முயற்சி செய்கின்றேன்.
புதிய எழுத்தாளர்கள் யாருடைய கதைகளை இங்கு அறிமுகப்படுத்த விரும்பினால் இன்பாக்ஸ் செய்யவும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro