6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலையில் ப்ரொடியூசரிடம் இருந்து பிருந்தாவுக்கு கால் வந்தது.

"சொல்லுங்க சார்" என்று கூற

"இன்னைக்கு 11 மணிக்கு ப்ரஸ் மீட் ஏற்பாடு செஞ்சிருக்கு நீ வந்துடுமா" என்று கூற அவள் எதுவும் தெரியாதவள் போல

"எதுக்கு சார் ப்ரஸ் மீட்" என கேட்க

"சூட்டிங்க் ஸ்பாட்ல அன்னைக்கு உனக்கும் விக்னேஷுக்கும் ஏதோ ப்ராப்ளம் ஆச்சின்னு தெரியும்..சோ அத க்ளியர் பண்ணிடலாம்னுதான் ப்ரஸ் மீட் ஏற்பாடு பண்ணியிருக்கோம். விக்னேஷ் தான் இத ஏற்பாடு பண்ணிருக்காரு,  நீ டைம்கு வந்துடு" என்று கூற இது தனக்கு வைக்கப்பட்ட பொறி என்பது அறியாமல் அவளும் சரி என்றால்.

ப்ரஸ்மீட் ஆரம்பமானதும் விக்னேஷ்

"ஹாய் ப்ரெண்ட்ஸ், எங்க சூட்டிங்க் ஸ்பாட்ல நடந்த ஒரு சின்ன ஒரு சம்பவத்த வைச்சி நீங்க எல்லோரும் ஏதேதோ ஏகத்துக்கும் எழுதிட்டிங்க. அந்த சம்பவம் கூட எங்க படத்தோட சீன் தான்பா. கொஞ்சம் எங்களையும் வேலை செய்ய விடுங்கப்பா. இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன சீனுக்கும் எங்களை ப்ரஸ் மீட் வச்சிட வைக்காதீங்க. இல்லைன்னா உங்க எல்லோரையும் நாங்க எங்களோட  டீம்ல சேர்த்துக்கிட்டு ஊர் ஊரா கூட்டிக்கிட்டு திரியனும்" என்று கூற ப்ரஸ் மீட்டில் இருந்த எல்லோரும் சிரிக்க ஒரு நிருபர்

"அப்போ எல்லாமே படத்துக்காகத்தான்னு சொல்றிங்களா? அப்போ ஏன் சார் அன்னைக்கு அந்த சம்பவத்துக்கு அப்புறம் சூட்டிங்க்க பேக்கப் பண்ணிக்கிட்டு போயிட்டீங்க" என்று கேட்க புன்னகையுடன் விக்னேஷ்

"அட என்னப்பா நீங்க, பேக்கப் பண்ணதுக்கெல்லாமா ரீசன் கேட்பீங்க. சீ கய்ஸ், நான் இப்போ வளர்ந்து ஒரு பெரிய இடத்துல நிற்கிறேன். ஆனா இந்த படத்தோட ஹீரோயின் இப்போதான் வளர்ந்து வரும் ஒரு ஹீரோயின். பொதுவான இப்படியான அல்லீகேசன்ஸ் வரும் போது நாங்க பெருசா எடுத்துக்க மாட்டோம். பிருந்தாவுக்கு ஆரம்பத்துலயே கெட்ட பெயர் வந்ததுன்னா அது அவங்க சினிமா வாழ்க்கைக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். அதனாலதான் இப்படி ஒரு ப்ரஸ் மீட் ஏற்பாடு பண்ண வேண்டியதா போயிடிச்சி, அப்புறம் இன்னுமொரு முக்கியமான் விசயம், இவங்க என்ன நிஜமாவே அடிச்சிருந்தா நான் எதுக்கு இவங்களுக்காக பரிஞ்சி பேசிக்கிட்டு இருக்கனும். ஜஸ்ட் திங்க் அபவ்ட் இட் கய்ஸ், இதுக்கு மேலயும் இது பத்தி பேச வேணாமே" என்று கூற அவனது பதிலில் திருப்தி அடைந்த பத்திரிகையாளர்கள் படத்தை பற்றிய மற்றவிடயங்களை டைரக்டருடன் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

தனது மொபைலுக்கு மெசேஜ் வர அதை எடுத்து பார்த்த பிருந்தாவுக்கு கோவம் தலைக்கேறியது.
'இல்லாத பிரச்சனைய இருக்குறதா காட்ட முடியும். இருக்குற பிரச்சனைய  இல்லாமலாக்கவும் என்னால முடியும்னு காட்டத்தான் இந்த ப்ரஸ் மீட்.  உனக்கு புரியும்னு நினைக்கிறேன். இதுக்கு மேலயும் என்ன அனுசரிச்சி போறதும் போகாததும் உன் கைலதான் இருக்கு. அனுசரிச்சி போனேன்னா உன் சினிமா வாழ்க்கைக்கு நல்லது. இல்லைன்னா இன்னொரு ப்ரஸ்மீட் போட்டு உன்ன பத்தி இல்லாதது பொல்லாததையும் என்னால சொல்ல முடியும். அதையும் இந்த முட்டாள் நிருபர்கள் நம்புவாங்க. சோ யோசிச்சி முடிவு பண்ணு' என்றிருக்க அதை படித்ததும் ஆத்திரம் வந்தவள் அநத படத்தின் இயக்குனர் பேசிக்கொண்டிருந்த மைக்கை பிடுங்கியவள்

"நான் அன்னைக்கு விக்னேஷ அடிச்சது உண்மை. நான் இங்க நடிக்கத்தான் வந்தேன். கண்டவன் கூட எல்லாம் படுக்க வரல்ல" என்று கூறி அந்த இடத்தை விட்டு செல்ல அவள் கூறிய பதிலில் என்ன சொல்வது என்று புரியாமல் படக்குழுவினர் எல்லோரும் திகைத்து நிற்க பிருந்தாவோ அவ்விடத்தை விட்டு சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் லட்சுமி அவளிடம்

"என்ன காரியம் பன்னடி  அவனே ப்ரஸ் மீட் அரேஞ்ச் பண்ணி நம்ம ப்ராப்ளத்த சால்வ் பன்றேன்னு சொல்றான். நீ எதுக்கு அவசரக்குடுக்கை மாதிரி பண்ண?" என்று கேட்க அவளது மொபைலுக்கு வந்த அவனது மெசேஜை காட்டினாள். அதை பார்த்த லட்சுமி

"சரி அவந்தான் இப்படி மெசேஜ் பண்ணிருக்கான்னா நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே" என்று கூற லட்சுமியை முறைத்த பிருந்தா

"எப்படி அவன் சொன்ன மாதிரி அனுசரிச்சி போயிருக்கலாம்னு சொல்றியா " என்று கேட்க அவளால் எந்த பதிலும் கூற முடியவில்லை. இப்போது லட்சுமி எது சொன்னாலும் பிருந்தா கேட்க மாட்டாள் என்று புரிந்த லட்சுமி

"சரி இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற, இப்போ உன்கைல எட்டு படம் இருக்கு. அத எப்படியும் நீ முடிச்சி கொடுத்தே ஆகனும் இல்லைன்னா உன் மேல லீகல் கேஸ் போடுவாங்க. எப்படியும் இந்த எட்டு படம் முடியறதுக்குள்ளேயே  உன்னோட சினிமா கரியர் முடிஞ்சிடும். ஏன்னா உனக்கு இருக்குற கோவத்துக்கு நீ என்ன வேணாலும் பண்ணுவேன்னு நல்லாவே தெரியுது. சரி சொல்லு உன்னோட ப்யூச்சர் ப்ளான் என்ன?"  என்று கேட்க விரக்தியாக சிரித்த பிருந்தா

"இங்க பாரு லட்சுமி, நீ எனக்கு ப்ரெண்ட்தானே. நீ ஏன் என்ன கார்னர் பண்ற மாதிரியே பேசுற. எனக்கு ஆருதலா ஒரு வார்த்தையாச்சும் பேசுறியா? உனக்கு என்ன உன் மகன நல்லா படிப்பிக்க பணம் தேவை அதானே. என்கிட்ட இருக்குற காசுல ஒரு ஐம்பது லட்சத்த உனக்கு தரேன். நீ  அத வச்சு உன் மகன நல்லா படிக்க வச்சிக்கோ. நீயும் கண்டவன் கூட எல்லாம் போகாம நல்ல  வருமானம்  வர்ற  ஒரு வியாபாரமா பார்த்து செய்" என்று கூறியவளை எரிச்சலுடன் நோக்கிய லட்சுமிய பார்த்து மேலும்

"எங்கம்மாவுக்காக நான் இரண்டு தடவை பண்ண தப்பே போதும்டி. என்னால இதுக்கு மேலயும் என் உடம்ப வித்து காசு சம்பாதிக்க முடியாது. அப்படித்தான் சம்பாதிக்கனும்னா நான் பேசாம செத்து போயிர்றேன். என்னால எத்தனையோ நல்லவர்களுக்கு கெட்ட பெயர். என்னோட நடிப்பு திறமைய பார்த்து எனக்கு வாய்ப்பு கொடுத்த வினீத் கிட்டயே அவரோட மனசு நோகும்படியா நடந்துக்க வேண்டியதா போயிடிச்சு. கடைசில பார்த்தியா அம்மாவோட ஆபரேசனுக்கக நான் பண்ண வேலையால இப்போ என்னோட எதிர்கால வாழ்க்கையே எந்த ஒரு குறியீடும் இல்லாம இடையில் விடப்பட்ட வாக்கியம் போல இருக்கு. இப்போ எனக்கு அம்மாவும் இல்லை, என்னோட எதிர்காலமும் இல்ல. இனி நான் உயிரோட இருந்து என்ன செய்ய. எந்த காரணத்துக்காகவும் தற்கொலை மட்டும் பண்ணக்கூடாது என்பது என்னோட நிலைப்பாடு, அது ஒன்னுக்காகத்தான் நான் இன்னும் சாகாம இருக்கேன்" என்றவளை

"ஏன் பிருந்தா என்ன பார்த்தா உனக்கு உன்ன வெச்சி பணம் சம்பாதிக்கிற பொம்பள  மாதிரியா தெரியுது. ஏண்டி இப்படி பேசுற. உன்காசுல நயா பைசா எனக்கு வேணாம். எனக்கு நீ பேசின சம்பளத்த மட்டும் கொடு. நானும் இந்த நாசமா போனவங்கனுக்கிட்ட இருந்து எப்படிடா தப்பிக்கலாம்னுதான் இருந்தேன். கடவுளா பார்த்து உன்ன எனக்கு அறிமுகம் படித்திருக்காரு. இல்லைன்னா இந்நேரத்துக்கு கண்ட கண்ட நோயும் வந்து நான் செத்திருப்பேன். எனக்கு நீ தெய்வம் மாதிரிடி .கடைசியா உங்கம்மா என்கிட்ட என்ன தெரியுமா சொன்னாங்க
'பிருந்தாவ எனக்கு அப்புறமா நீதான்மா பார்த்துகனும்' அப்படின்னு சொன்னாங்க. அதத்தான் இவ்வளவு நாள நான் செஞ்சுகிட்டு இருக்கேன். உனக்கு நல்லதுன்னு சொல்ல இப்போ ஆயிரம் பேரு இருக்காங்க.ஆனா எதையும் தர்க்கரீதியாக யோசிச்சி உனக்கு எது மிக மோசமான தாக்கத்த ஏற்படுத்தும் என்று யோசிச்சு  அதுக்கு ஏத்த மாதிரி திட்டமிட யாருமே இல்லை. அதத்தான் நான் பண்றேன். உனக்கு நான் பண்றது தப்பா தோனிச்சின்னா நான் இப்பவே உன்ன விட்டு போயிடுறேன். உன் காசு எல்லாம் எனக்கு வேணாம்" என்று கூற தன் தோழியின் கூற்றை கேட்டவள் கண்களில் கண்ணீருடன் அவளை இறுக்கி  அணைத்துக் கொண்டாள்.

இவ்வளவு நாளும் ஏன் லட்சுமி எதை எடுத்தாலும் எடக்கு மடக்காக பேசுகிறாள்  என்று புரியாமல் இருந்த பிருந்தாவுக்கு இப்போது லட்சுமி கூறிய விளக்கம் அவளை தோழி என்ற ஸ்தானத்துக்கும் மேலாக வைத்துப்பார்க்க சொல்லியது.

"இங்க பாரு பிருந்தா ரொம்பலாம் யோசிக்காத. உன்னையும் ஒரு சக மனுசியா மதிச்சி உன்ன கல்யாணாம் பண்ண ஒருத்தன்  வருவாண்டி  பரம்பரை பரம்பரையா தொழில் பண்ற பொண்ணுங்களையே திருத்தி இப்போ பசங்க கல்யாணம் பண்ணிக்குறாங்க. நீ அம்மாவுக்காகத்தான் இப்படி பண்ணேன்னு தெரிஞ்சா கண்டிப்பா உன்ன ஏத்துக்குவாங்க. உனக்கு ஒரு நல்ல லைப் கிடைக்கும்" என்றவளை பார்த்த பிருந்தாவுக்கு வினீத்துக்கும் அவளுக்கும் இடையில் நடந்த விடயம் லட்சுமிக்கு தெரியவில்லை என்பது இப்போதுதான் புரிந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro