😍புது உணர்வே!!!😍

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

December 2023
Karaikal, Pondicherry.

டிசம்பர் மாத குளிருக்கு இதமாய் தலை முதல் பாதம் வரை கம்பளியை மூடி துயில் கொண்டிருந்தாள் அம்மு.

ஜன்னல் வழி கேட்ட சாரலின் சத்தமும், அதையடுத்து  மூக்கு உணர்ந்த மண்வாசமும் அவளின் மூடிய  இமைகளைத் திறந்திடச் செய்தது.

தன் வலது கையால் பெட்டைத் தடவியவள்;அங்கு ஏதும் புலப்படாமல் வெற்றிடமாய் இருக்கவே ; தலையிலிருத்த கம்பளியை உதறிவிட்டு ; சுவர் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

அதில் பெரிய முள் ஆறிலும் சின்ன முள் ஏழிலும் இருக்க..."ஆ...மணி ஏழரையா!" எனத் தனக்குள் கேட்டவாரு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து;காலைக் கடனை முடித்து ,பல் துளக்கியவள் டைனிங் டேபிளில் காபி கப்பின் அருகில் இருந்த சிறு தாளைக் கண்டாள்.

"Gd Mrng Ammu...Went for workout...will be at 9...drink yours before u start to cook breakfast.
                        With love,
                           Yours."
அதனைப் படித்தவளின் இதழ்கள் மெல்லிய புன்னகையை சிந்த ; கைகள் கப்பை எடுத்துக் கொள்ள; கால்களோ பால்கனியை நோக்கி நகர்ந்தது.

கப்பில் அவளுக்கு மிகவும் பிடித்தமான பூஸ்ட் இருக்க அதனை மிடறு மிடறாய் ருசித்தவள் சிந்தையை அவளின் கணவனே வியாபித்திருந்தான்.

"எழுந்ததும் எதாச்சு ஹெல்த் டிரிங் குடி அம்மு...வெரும் வயித்தோட வேல செய்யாத" எனவும்

"இந்த குளிர்லயும் ஆறிப் போன பூஸ்ட்டயே குடிக்காம...சூடா காபி,டீ குடி ரெப்ரஷிங்கா இருக்கும் அம்மு" எனவும் கூறுபவன் ஒரு நாளும் அவளுக்குப் பிடித்தமான டிரங்கை கலந்து டேபிளில் வைக்க தவறியதில்லை.

மனைவியிடத்து ஆதிக்கத்தை செலுத்தாத மலையளவு அன்பைக் கொட்டும் கணவனை தந்ததற்கு இன்றும் மனதார கடவுளுக்கு நன்றி கூறியவள் கைகள் மழைத் துளிகளைத் தட்டி விளையாடின.

மின்சாரக் கம்பத்தில் நின்ற சிட்டுக் குருவிகளைப் பார்த்தவாரு; வாடைக் காற்று உடலைத் தழுவியதில் பரவிய ஏகாந்தத்தை அனுபவித்தாள்.

கருவிழிகளை வலப்புறமாய் திருப்பி எதிர் வரிசையில் இருக்கும் பிளாட்டின் மொட்டை மாடியைப் பார்க்க...

அங்கு இருபது வயது பாவைத் தன் கையில் இருக்கும் புத்தகத்தில் ஒரு கண்ணும், அபார்ட்மெண்ட் வாயிலில் நின்றிருந்த இளைஞன் மேல் ஒரு கண்ணுமாய் இருக்க ; அதில் தன்னுடைய பருவ வயது நினைவில் ஆழ்ந்தாள் அம்மு.

9 வருடங்களுக்கு முன்....
February 2015
Chennai, Tamilnadu.

பிருந்தாவன் காலனி என பொரிக்கப்பட்டிருந்த பச்சை நிற போர்டின் அருகில் உள்ள பெரிய குப்பைத் தொட்டியின் பின் உடலை மறைத்துத் தலையை வெளியே நீட்டியிருந்த அம்முவும் அவள் உயிர்த் தோழி சுவேதாவும் பள்ளி சீருடை,ரெட்டைப் பின்னல் சகிதம் இருந்தனர் .

"ஹேய் அம்மு...லேட்டாயிடுச்சு டீ....வாடீ...போலாம்"என சுவேதா அம்மு காலைத் தட்ட

"இருடீ...இன்னும் 5 மினிட்ஸ்ல போயிடலாம்.என் செல்ல சுவீட்டில"என அவள் கண்ணம் கிள்ளினாள் அம்மு.

"டீ...டெய்லி ஸ்கூல் பெல் அடிச்ச பின்னாடி போயிட்டு இருக்கோம்.இன்னிக்காச்சு சீக்கிரமா போலாம் வா..அம்மு..பிளீஸ்"என சுவேதா கெஞ்ச

அதை காதிலே வாங்காத அம்மு தங்களை கடந்து சென்ற சுசுக்கி ஆக்ஸஸ் 125ஐ "ஈ..."என பார்த்துக் கொண்டிருந்தாள்.

தனக்கு பதில் வராது போகவே அம்மு பார்த்த திசையைக் கண்ட சுவேதா..."அதான் பாதாச்சுல்ல வா போலாம்" என மற்றயவள் கையில் கிள்ளினாள்.

அதில் சுயம்பெற்ற அம்முவும் தோழியின் பின்செல்ல ; தங்களின் சைக்கிளை எடுத்துக்கொண்ட இருவரும் பள்ளி நோக்கி விரைந்தனர்.

வழமைபோல் ஸ்கூல் பெல் அடிக்கப்பட்டிருக்க...தாமதமாக வந்த மாணவர்களை கிரவுண்டைச் சுற்றி ஓடச் செய்திருந்தார் உடற்பயிற்சி ஆசிரியர்.

அவர் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தங்கள் வகுப்புக்கு வந்தனர்.

"May i come in sir" என இவர்கள் கேட்க...உள்ளிருந்த கணித ஆசிரியர் தன் நெற்றிக் கண்ணைத் திறந்திருந்தார்.

"அம்ருதா & சுவேதா...பெல் அடிச்சு எவ்வளவு நேரம் ஆச்சு...டெய்லி பஸ்ட் ஹவர் லேட்டா தான் வரிங்க...நீங்க என்ன சின்ன பிள்ளைகளா...இந்த வருஷம் 12th போர்ட் எக்ஸாம் எழுதப் போறிங்க...படிச்சா மட்டும் போதாது ஒழுக்கமும் வேணும்"என வறுத்தவர்.

"அடுத்த பீரியடும் நான் தான்.ரெண்டு ஹவரும் வெளியவே நில்லுங்க அப்பதான் இனிமே சீக்கிரம் வருவிங்க"என்றவர் தான் விட்ட கணக்கை செய்யத் தொடங்கிவிட்டார்.

அவர் திட்டியதிலும் , முழுதாய் ஒரு மணி நேரம் நிற்க சொன்ன கடுப்பிலும் அம்முவை ஏகத்துக்கும் முறைத்தாள் சுவேதா.

இதையரியாத நம் அப்பாவி அம்முவோ நடந்ததற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்பதுபோல் சுவரில் வாகாய் சாய்ந்து கொண்டு தான் ஸ்கூட்டியில் பார்த்தவனை நினைத்து மனதில் டூயட் பாடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் கால் வலி எடுக்கவே;கால் மாற்றி நின்ற இருவரையும் காக்கவென அடித்தது இரண்டாவது ஹவர் முடிந்து இடைவேளைக்கான மணி.

வகுப்பில் இருந்து வெளியே வந்த ஆசிரியர் இவர்களை முறைத்துவிட்டு நகர ; முதலாய் உள்சென்று தனது இடத்தில் புத்தகப் பையை வைத்துவிட்டு அமர்ந்துவிட்டாள் சுவேதா.

அவளையடுத்து உள்ளே வந்த அம்மு சுவேதாவின் அருகில் அமர ; "என்னாச்சு அம்மு..இன்னிக்கு என்ன பண்ண? சுவீட்டி முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குது"என கேட்டவாரு சுவேதாவின் அருகில் அமர்ந்தாள் காயத்ரி.

"வேறென்ன செய்யப்போறா! மூணு மாசமா என்ன செஞ்சுட்டு இருக்காளோ அதாதான் இருக்கும்.என்ன அம்மு நான் சொன்னது சரிதான"என வினவியவாரு காயத்ரியின் அருகில் நின்றாள் பூர்ணிமா.

"ஆத்தி...மூனும் ஒன்னு கூடிடுச்சா...அட்வைஸ் பண்ணியே சாவடிச்சிடுவாங்களே..."என மனதுள் அலறியவள்;தன் தோழிகளின் இமைக்காப் பார்வையில் சமாளிப்பாய் சிரித்துவிட்டு; அவர்கள் அறியாமல் தன் பையில் இருந்த பஞ்சை எடுத்து காதில் வைத்துக் கொண்டு...மனதுள் 1...2...3... Start என்க...

அதேநேரம்"இவப் பண்றது கொஞ்சமும் சரி இல்ல...இதப் பத்தி வித்யா ஆண்ட்டிக்கிட்ட பேசதான் போறேன்"என சுவேதா தொடங்க

"இங்க பாரு அம்மு..இந்த வயசுல ஒரு பையனப் பாத்து நம்ம பீல் பண்றதுலாம் லவ் இல்ல.its just an attraction.பாத்தோமா ஸைட் அடிச்சோமானு போயிடனும்.அத விட்டுட்டு தெரு முனைல நின்னு அவனப் பாத்துட்டு தான் ஸ்கூலுக்கு வருவேனு அடம் பிடிக்கிறது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர்"என காயத்ரி இழுக்க

"இதால உன்னோட ஸ்டடீஸ் கெட்டுடக்கூடாதுனு தான் பயப்படுறோம் அம்மு "என பூர்ணிமா முடித்தாள்.

இவர்கள் மூவரிடம் இருந்தும் அம்முவைக் காப்பாற்ற அடுத்தப் பாடவேளைக்கான மணி அடிக்க வேதியியல் ஆசிரியர் வந்துவிட்டார்.

அனைவரும் அவர் நடத்திய சமன்பாடுகளை கவனித்திருக்க இவர்கள் நால்வரும் அம்மு திட்டு வாங்க காரணமான நாளை நினைவு கூர்ந்தனர்.

(Flashback குள்ள ஒரு குட்டி flashback)

மூன்று மாதங்களுக்கு முன்...

அது ஒரு நவம்பர் மாத ஞாயிற்று கிழமை...பிருந்தாவன் காலனியின்'B' தெருவின் 38ஆம் வீட்டில் ஏகபோக அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.

வேற யாருக்கு... நம்ம அம்முக்கும் அவளோட ஏழு வயது குட்டித் தங்கை அக்ஷூக்கும் தான்.

அக்ஷூவின் கலர் பென்சிலை குடுக்காமல் அவளை அம்மு அழ வைக்க..."இன்னிக்கு ஒரு நாள் தான் எனக்கும் லீவு.நான் வீட்டு வேலையப் பாக்கவா உங்களுக்கு பஞ்சாயத்துத் தீர்க்கவா? காலேஜுல அத்தன பிள்ளைகள ஈசியா சமாளிக்க முடியுது.வீட்ல இந்த இரண்டு எரும மாடையும் என்னால சமாளிக்க முடியல"என அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் அம்முவின் அம்மாவும் ,கல்லூரி பேராசிரியருமான வித்யா.

"ஏய் அம்மு!பாப்பாவ அழ வைக்காத.. நான் எடுத்து வச்சிருக்க டிரஸப் போட்டு சீக்கீரம் ரெடி ஆகி வாங்க...எதுத்த வீட்டு பால் காய்ச்சு பங்ஷனுக்குப் போகனும்."

"இத்தன நாளாப் பூட்டியே இருந்துச்சு..இன்னிக்கு ஆள் வந்தாச்சா.."என கேட்டுக்கொண்டே அன்னை எடுத்து வைத்த ஆடையை அம்மு பார்க்க...

"அம்மா...இந்த ஸ்கார்ட் ரொம்ப லென்த்தியா இருக்கும்மா...இதப் போட்டா கீழ விழுந்துடுவேன் "என்றாள்.

"அம்மு...இந்த டிரஸ்ஸ நீ ஒரு தடவதான் போட்ருக்க..உள்ளயே வச்சு எல்லா டிரஸையும் சின்னதா ஆக்கிட்டு  புதுசா டிரஸ் கேட்டா எடுத்துத் தர மாட்டேன்."

"அம்மா...பீளிஸ் வேற போட்டுக்கிறேன்"என அம்மு சிணுங்க.

"அம்மா..எடுத்து வச்சதப் போட்டுக்கோ அம்மு.அது உனக்கு அழகா இருக்கும்"என்றார் அம்முவின் அப்பாவும், கல்லூரி HODயுமான சுந்தர்.

"போப்பா...என தலையை ஒரு பக்கமாய் சாய்த்தவள் தங்கையை அலங்கரித்து,தானும் உடையணிந்து வெளியே வந்தாள்.

நால்வரும் எதிர் வீட்டினுள் நுழைந்ததும்...அப்பா, அம்மா, தங்கை மூவரும் முன் சென்று விட...

தனது பெரிய பாவடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு அவ்வீட்டின் தோட்டத்தை அம்மு கடக்க...மூன்று வயது சிறுவன் அவளின் ஒரு பக்க பாவடையில் ஏறி நின்றுவிட்டான்.

அதில் தடுமாறி விழ இருந்த அம்முவை ஒரு வலிய கரம் இடுப்போடுப் பிடித்து நிறுத்த...தன் கண் திறந்து பார்த்தவள் விழிகளுக்கு மினி சைஸ் தொப்பைத் தெரிய...நிமிர்ந்து பிடித்தவன் முகம் பார்த்தவள் மெய் மறந்து தான் போனாள்.

இன்னொரு கையால் விழ இருந்த சிறுவனைத் தூக்கியவன்..."குட்டிப் பையா...அக்கா ஸ்கார்ட்ல ஏறினா ரெண்டுபேரும் விழுந்திடுவிங்க...உள்ள போய் விளையாடு "என அவனை இறக்கிவிட்டவன்.

அம்மு இடுப்பில் இருந்த கையை எடுத்துக் கொண்டு "பாப்பா...பாத்து நடமா...ஸ்கார்ட்ட தூக்கிப் பிடிச்சுக்கோ...இல்ல மறுபடி யாராச்சுத் தெரியாம மிதிச்சிரப் போறாங்க.."என்றவன் உள்ளே சென்று விட்டான்.

அவன் போன பிறகும் மந்திரித்து விட்ட கோழியைப் போல் தனக்குத்தானே சிரித்தவள் அடி மேல் அடி வைத்து வீட்டினுள் சென்றாள்.

உள்ளே அவன் ஓடியாடி வேலை செய்வதைக் கண்டவள் தன் பக்கத்தில் நின்றி ஆண்ட்டியிடம் இவன் யாரெனக் கேட்க..."இந்த வீட்டுக்குக் குடி வந்திருக்கவங்களோட இரண்டாவது மகன்" என அவர் சொன்னதைக் கேட்டவள் உள்ளம்
"அம்மு!உன் காட்ல மழதான்...இனி தினமும் அவனப் பாக்கலாம்"என குதுகலித்தது.

வந்திருந்த அனைவருக்கும் பாலும்,ஸ்வீட்சும் தட்டில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அவன்;அம்முவிடமும் தட்டை நீட்டினான்.

அவள் எடுத்ததும் சினேகமாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டுச் செல்ல ;அதில் மயங்கியே விட்டாள் அம்மு.

"அப்பப்பா...சுண்டுனா ரத்தம் வர்ர கலரு ; என்னா ஷார்ப்பான ஐசு; ரோசாப் பூ நிறத்துல உதடு ; அதுக்குமேல முறுக்கிவிட்ட மீச ; டிரிம் பண்ண தாடி..."என அவன் முகத்தில் ரீங்காரமிட்ட கண்களை அம்மு கீழ் இறக்க

"என்ன! தொப்பக் கொஞ்சம் போட்ருக்கு...ஹான்...அம்முவின் ஆளுக்கு சிறுத் தொப்பையும் அழகுதான்"என மானசீகமாய் அவனுக்குத் திருஷ்டி எடுத்தவள்.

"இவன் பேரு என்னனு தெரிலயே"என யோசிக்க...

அந்நேரம் "ஆதி இங்க வாப்பா"என பெரியவர் ஒருவர் அழைக்க.."இதோ வரேன் தாத்தா" என இவன் ஓட

"ஓ...நம்ம ஆளு பேரு ஆதியா....சிறப்பு.."என மகிழ்ந்தவள் உள்ளம் அவனது பெயரை ஆயிரம் முறை சொல்லி பார்த்தது.

அவன் தொட்ட இடம் தந்த சிலிர்ப்போ, குரலில் இருந்த ஆழுமையோ, இதழில் மலர்ந்த புன்னகையோ, சுறுசுறுப்பாய் வேலை செய்த பாங்கோ அம்முவை ஆதியை நோக்கி இழுத்தது.

அதன் பலனே மூன்று மாதங்களாய் தெரு முனையில் காத்திருந்து வேலைக்கு செல்லும் ஆதியைப் பார்த்துவிட்டே பள்ளி செல்கிறாள்.

தன்னை ஆட்கொண்டிருந்த புது வித உணர்வு ஈர்ப்பா, காதலா என பிரித்தறிய முடியாமல், ஆதியை தனது நாயகனாய் பாவிக்கத் தொடங்கிவிட்டாள் அந்த பதின் வயது சிறுமி.

                                             தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro