அத்தியாயம் (22)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதித்யா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ரஞ்சினி அவன் அருகில் நின்று பரிமாறிக் கொண்டிருந்தாள். வேறு வழி அறியாமல் பேருக்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தானே தவிர அவன் மனம் முழுவதும் ஆரோஹியே நிறைந்திருந்தாள்.

"நல்லா அள்ளி சாப்பிடுரா... பாரு எவ்வளோ இளைச்சிட்டேன்னு. தாடியை வேற வளர்த்து வச்சிட்டு... நீ என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்க? மரியாதையா மாடிக்கு போன கையோட ஷேவ் பண்ணிடு சொல்லிட்டேன்!!நாளைக்கு உங்க அம்மா வந்து கேட்டா நாங்க என்ன சொல்றதாம்?? இன்னைக்கி அவ வேற உன்னை இந்த கோலத்துல பார்த்துட்டாலா இப்போ அவ வேற யோசனை பண்ணிட்டு இருப்பா உன்னை நாங்க ஒழுங்கா கவனிச்சிக்கறது கிடையாதான்னு....." பொரிந்து தள்ளினாள் ரஞ்சினி.

"அவ எப்படி இருக்காலாம்? அங்க எல்லாம் சவுரியமா இருக்காமா? காலேஜ் ஸ்ட்டார்ட் ஆயாச்சா?" என்று தன் பக்க கேள்விகளை அடுக்கினான் ஆதி.

"ஆ... அங்க அவளை அவங்கள்ள ஒருத்தியைப் போல ரொம்ப நல்லாவே பார்ர்துக்கறாங்களாம். போட்டோஸ்லாம் சிலது அனுப்பிச்சு இருந்தாளே.... காட்டலியா நான் உனக்கு??? இதோ பாரு..." என்றவாறு தன் மொபைலில் ஆரு அவளுக்கு அனுப்பி இருந்த சில படங்களை அவனுக்குக் காட்டினாள் ரஞ்சினி.

இன்று நேரில் கண்டது போலவே இந்த இரண்டு வாரங்களில் பாரிஸ் அவளை தங்களில் ஒருத்தியாகவே மாற்றிக் கொண்டிருந்தது. இங்கு இருந்ததைப் பார்க்கிலும் பொலிவாகி மெருகேறி இருந்தாள் ஆரு. சில படங்களில் தனியாகவும் இன்னும் சிலதில் பல்லவி மற்றும் ப்ரித்வியோடும் இருந்தாள். ப்ரித்வி ஒரு படத்தில் அவளது தோலில் கை போட்டுக் கொண்டு இருந்தான்.

"யாரிந்த பையன்?" என்றான் ஆதி ரஞ்சினையப் பார்த்து.

"ராதா மோகன் சாரோட பசங்க. இவங்க வீட்ல தான் ஆரு தங்கி இருக்கா" என்றாள் ரஞ்சினி.

"ஓஹோ...." என்று விட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தினான் அவன். அந்த போட்டோ அவனுக்கு ரசிக்கவில்லை போலும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

ஆருவை வீடியோவில் கண்டது, அவளை வேறு ஒரு ஆணுடன் போட்டோவில் கண்டது என்று எல்லாமாக சேர்ந்து அவன் தூக்கத்தை கெடுத்தது. நடு இரவில் ரஞ்சினிக்கு கால் செய்து அந்த படங்களை தனக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கூறி படங்கள் வந்ததும் ப்ரித்வியை zoom செய்து பார்த்தான் ஆதி. ஆருவை வேறு ஒரு ஆணுடன் சேர்த்து பார்க்கும் தருணம் எப்படிப் பட்டது, அவன் உள்ளுக்குள் உணர்வது என்ன என்று அவனாலேயே சரியாக சிந்திக்க முடியாமல் இருந்தது. உள்ளுக்குள் லேசாக எட்டிப் பார்த்த பொறாமையை அவனால் மறைக்க முடியவில்லை. அவனை வசுவோடு சேர்த்து காணும் பொழுதுகளில் ஆருவும் இப்படித் தான் உணர்ந்திருப்பாளோ என்று எண்ணிப் பார்த்தான். போட்டோவில் இருக்கும் பையன் வேறு பார்ப்பதற்கு நல்ல மைதா மாவில் உருட்டி எடுத்தவன் போல ஆருவுக்கு தன்னைக் காட்டிலும் பொருத்தமாக வேறு இருக்கிறான். வாரக்கணக்கில் ஷேவ் செய்யப்படாத தன் முகத்தை லேசாக கையால் தடவிப் பார்த்தான் ஆதி.

மறுநாள் ஆதித்யாவின் பெற்றோர் ஶ்ரீனிவாசனும் ருக்மணியும் தங்களது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பி இருந்தார்கள். ஆதித்யா தான் காலையிலேயே காரை எடுத்துக் கொண்டு சென்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்தான். அன்று பெற்றோர் திரும்பி வந்து இருந்ததினால் அவன் ஆபீஸுக்கு விடுமுறை சொல்லி இருந்தான். ஆதித்யாவை கண்டது முதல் அவன் இருந்த கோலத்தைப் பார்த்து அவன் தாய் புலம்பிக் கொண்டே இருந்தாள். அம்மாவின் அலட்டல் தாங்காமல் இறுதியாக ஒரு வழியாக இரண்டு வாரங்களின் பின்னால் ஆதி ஷேவ் செய்து கொண்டான்.

"உன்னை ஷேவ் பண்ண வைக்கிறதுக்கு அம்மா அமெரிக்கால இருந்து வர வேண்டியது இருக்கு. அதான் அம்மா வந்துட்டேன்ல இப்பவாச்சும் சொல்லு என்னடா பிரச்சினை உனக்கு???" ஆதி கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து லேப்டாப்பில் எதையோ செய்து கொண்டு இருக்க. அவன் அருகில் அமர்ந்து அவன் கன்னத்தில் கை வைத்து வருடி விசாரித்தாள் ருக்மணி.

"ஒன்னும் இல்லைம்மா.. நான் நல்லா தான் இருக்கேன். ஆபீஸ்ல தான் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் அவ்ளோ தான்...." சமாளித்தான் ஆதி.

"அப்போ உனக்கும் ஆருக்கும் நடுவுல ஒன்னும் இல்லையா???" என்றாள் தாய் ஏக்கமாக.

"எனக்கும் ஆருக்கும் என்ன? அவ அங்க பாரிஸ்ல இருக்கா நான் இங்க அடையார்ல இருக்கேன் வேற என்ன???" என்றான் ஒன்றும் அறியாதவன் போல.

"பின்ன எதுக்கு நீ அன்னைக்கு போன் போட்டு உனக்கு சமைச்சு போட்டது யாரு? கதவு திறந்து விட்டது யாருன்னு என்னை புடிச்சு கத்துனே???" விடாமல் கேட்டாள் ருக்மணி.

"ஆமா கத்துனேன். நீ இருந்த வரை நீ பார்த்துக்கிட்டே, ஆரு இருந்த வரை அவ பார்த்துக்கிட்டா... அவளும் போனதுக்கு பின்னாடி என்ன பண்றது யாரை கேட்கறதுனு தெரியாமல், ஆபீஸ் ஸ்ட்ரெஸ் எல்லாம் ஒன்னா சேர உன்னை புடிச்சு சத்தம் போட்டுட்டேன் சாரி....." என்றான் அவன்.

"ப்ச்ச்ச்.... நீ சாரி சொல்லனுங்கறதுக்காக கேட்கலடா. சரி.. அப்படின்னா உனக்கு ஆரு மேல வேற எந்த அபிப்ராயமும் இல்லைனு அம்மா எடுத்துக்கலாமா???"

"ஹ்ம்ம்..." மட்டுமே பதிலாக வந்தது.

"ஒரு வரன் வந்துருக்கு. மைத்துவோட வீட்டுக்காரர் வழியில. உனக்கு இஷ்ட்டம்னா பேசி முடிக்கச் சொல்லி மைத்து சொல்லி அனுப்பிச்சா. பொண்ணு நல்ல லக்‌ஷணமா இருக்கா. இதை கொஞ்சம் பாரேன்......" என்று தன் பங்குக்கு தனது போனை ஆதியிடத்தில் நீட்டி அதில் இருந்த ஒரு பெண்ணின் போட்டோவை அவனுக்கு காண்பித்தாள் அம்மா.

அந்த பெண் என்னவோ சிரித்த முகமாக மகா லக்‌ஷ்மி போலத் தான் இருந்தாள். வீட்டில் வேண்டுமானால் frame போட்டு மாட்டி வைத்து காலையும் மாலையும் கை கூப்பி கும்பிடலாம். ஆனால் ஆதித்யாவுக்குத் தான் ரசிக்கவில்லை.

"என்னம்மா நீ வந்ததும் வராததுமா ஆரம்பிக்கிற? இப்ப எனக்கு பொண்ணு பார்க்கச் சொல்லி நான் உன்னைக் கேட்டேனா???" என்று எரிச்சலடைந்தான் ஆதி.

"30 வயசு ஆகுது! யாரையும் லவ்வும் பண்ணலைங்கிற, பொண்ணும் பார்க்க வேண்டாங்கற. என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ உன் மனசுல??" பதிலுக்கு கத்தி விட்டு எழுந்து சென்றாள் அம்மா.

மாலையில் கல்யாணப் பத்திரிக்கை வைப்பதற்காக ஆதித்யாவோடு கூடப் படித்த நண்பன் அபிநவ் வந்து இருந்தான். பல வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் இருவரும் நெடு நேரம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்து விட்டு இருட்டத் தொடங்கியதும் இருவரும் காரை எடுத்துக் கொண்டு ஆதித்யா வழமையாக செல்லும் Pub ற்கு சென்றார்கள்.

"அப்பறம் உனக்கு எப்படா கல்யாணம்?" என்றான் அபி கையில் கோப்பையை வைத்துக் கொண்டு.

"பண்ணிக்கணும் தான். இன்னும் பொண்ணு தான் கிடைக்கலை...." என்றான் ஆதி.

"ஏன்... உன் கீழ் போர்ஷன் பொண்ணு அவ பேரென்ன ஆராதனாவா.......??? அவளுக்கு என்ன ஆச்சு???"

"யாரை சொல்ற? ஆருவையா???"

"ஆ... ஆமா... ஆரோஹி. வந்ததுல இருந்தே கேட்கனும் நினைச்சிட்டு இருந்தேன். அவளுக்கும் உனக்கும் என்ன ஆச்சு?"

"அவளுக்கும் எனக்கும் என்ன? ஒன்னுமில்லையே.... அவ இப்போ கீழ இல்லை. பாரிஸ்ல இருக்கா....."

"ஓ.... நான் நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்..."

"ஏன் அப்படி நினைச்ச???" ஆச்சர்யமாக கேட்டான் ஆதி.

"என்னடா கேள்வி இது? அவளை மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு கீழ குடி இருக்கதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்டா... அப்படி ஒரு பொண்ணு பக்கத்துலயே இருந்தா எந்த ஒரு பையனுக்கும் லவ் வரத் தானேடா செய்யும்??? ஸ்கூல் டேஸ்ல எல்லாம் அவளை பார்க்கறதுக்காகவே உன் வீட்டுக்கு வருவோம்.... ஆனால் எவனையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டா.... கொஞ்சம் திமிர் புடிச்ச பொண்ணு தானோ??? உன்கிட்டயும் அவ அப்படித் தானா???" குடித்து விட்டு அவன் பாட்டுக்கு உலறினான் அபிநவ்.

ஆதித்யாவுக்கு சிரிப்பு வந்தது. ஆரு அவனிடம் மட்டும் எப்படி எல்லாம் தன்னை தாழ்த்திக் கொண்டாள் என்று எண்ணிப் பார்க்கும் போது கொஞ்சம் கண்ணீரும் வந்தது. பதில் பேசவில்லை அவன் அமைதியாக தன் கோப்பையில் இருந்ததை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

"நம்ம க்ளாஸ்ல அவளை சைட் அடிக்காதவன்னு ஒருத்தன் கூட கிடையாது மச்சா. ஆனால் நம்ம ஹரி தான் ஒரு படி மேலப் போய் அவளை சின்சியரா லவ் பண்ணி, அவளுக்கு லவ் லெட்டர்லாம் கொடுத்து அவகிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்." அபி தன் பாட்டுக்கு பழையதை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டு இருந்தான்.

ஆதி பதில் பேசாமல் அவன் கூறுவதை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தான்.

"என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு சிரிச்சிட்டு இருக்க? டேய்.. சொல்லுடா என்ன தான் நடந்துட்டு இருக்கு உங்க ரெண்டு பேத்துக்குள்ள? அவ மேல உனக்கு கடைசி வரை காதலே வரலைனு சொன்னா எவனும் நம்ப மாட்டான்....."

"வந்திச்சு மச்சா.... வந்திச்சு... ஆனால் நீ சொல்றா மாதிரி கடைசில தான் வந்திச்சு... But it was too... late..." என்றான் ஆதி. இப்பொழுதும் அதே புன்சிரிப்போடு.

"என்னடா சொல்ற நீ? கொஞ்சம் புரியிறா மாதிரித் தான் சொல்லேன்???"

"சின்னப்ப இருந்தே என்னை தான் சுத்தி சுத்தி வருவா, நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து என்னை மட்டும் தான் விரும்புனா. கூடவே சுத்திட்டு இருந்ததுனாலயோ என்னவோ நான் அவளை அந்த மாதிரி கற்பனை பண்ணிக் கூட பார்த்ததில்லை. எனக்குள்ள முதல் முதலா அவளுக்கான காதல் வந்தப்ப அவ என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா மச்சா....." என்றான் அவன் சுருக்கமாக.

"இது எல்லாம் ஒரு மேட்டராடா? பாரிஸ் தானே? கிளம்பிப் போடா போய் உன் காதலை அவகிட்ட சொல்லு. என்னைப் பொருத்த வரை காதல் தோல்வி கூட தோல்வி இல்லை. ஆனால் காதலை சொல்லாமல் மறைக்கிறது தான் மிகப் பெரிய தோல்வி. அவ எங்க இருக்கா, எப்படி இருக்கா, யார் கூட இருக்காங்கறதெல்லாம் மேட்டரே இல்லை. நம்ம மனசுல உள்ளதை நம்ம சொல்லிட்டா நமக்கு நிம்மதி. இல்லைனா கடைசி வரை காதலை சொல்லலைங்கற நினைப்பே நம்ம நிம்மதியை, தூக்கத்தை ஏன் வாழ்க்கையைவே கூட கெடுத்துரும்." போதையில் தான் ஆண்கள் தெளிவாகப் பேசுவார்களோ என்னவோ மிகத் தெளிவாகவும் சரியாகவும் பேசினான் அபி.

அபிநவ்வின் வார்த்தைகளில் இருந்த உண்மை ஆதித்யாவின் புத்திக்குள் சென்று உரைத்தது. அபி கூறிய வார்த்தைகளை மிக பத்திரமாக தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டான் ஆதி. நேரம் ஆகவே கல்யாணத்துக்கு நிச்சயமாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் அபிநவ். அபி சென்று சிறிது நேரத்தில் அம்மா காலையில் காண்பித்த பெண்ணின் புகைப்படத்தை அக்கா அவனது ஃபோனுக்கு வாட்சாப் செய்து இருந்தாள். அதை திறந்து அந்த பெண்ணை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். பின்னர் நேற்று இரவு ரஞ்சினி அனுப்பிய ஆருவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். ஒரு கட்டம் வரை அவன் கண்ணுக்கு பெண்ணாகவே தெரியாத ஆரு இப்பொழுது பெண்களுக்குள்ளேயே பேரழகியாய் தெரிந்தாள்.

ஆதித்யாவுக்கு அப்பொழுது ஒரு 14 வயதிருக்கும். ஆருவுக்கு ஒரு 10 இருக்கும். ஆனால் அந்த வயதிலேயே ஆரு ஆதியின் தோலளவு உயரமாக இருப்பாள். அப்பொழுது ஆதியிடம் ஒரு ஜோடி கருப்பு ரப்பர் செப்பல் இருந்தது. கடைக்கு செல்வதற்கு, டியூஷனுக்கு, பாட்டு க்ளாசுக்கு, நண்பர்களோடு கிரிக்கெட் ஆடுவதற்கு என்று எப்பொழுதுமே அவன் அந்த செப்பலைத் தான் மாட்டிக் கொண்டு இருப்பான். ஒரு வருடத்திற்கும் மேலாக அணிந்து அது ரொம்பவும் அடி வாங்கிய நிலையில் இருந்தது. பாட்டு க்ளாஸ் வாசலில் செப்பலைக் கலட்டி கால்களை கழுவிக் கொண்டு தான் க்ளாசிற்குள் செல்ல வேண்டும். ஒரு நாள் பாட்டு க்ளாசிற்கு ஆதியின் செப்பலை ஒத்த ஒரு செப்பலை தேடி வாங்கி அணிந்து கொண்டு வந்தாள் ஆரு. க்ளாஸ் முடியவும் ஆதியின் செப்பலை வாசலில் கண்டவள் அவளது ப்ளானின் படி ஆதி க்ளாஸ் முடிந்து வெளியில் வரும் முன்னாள் அவளது புது செப்பலை வைத்து விட்டு அவனது பழைய செப்பலை மாட்டிக் கொண்டு அவனுக்கு முன்னால் கிளம்பி சென்று விட்டாள். க்ளாஸ் முடிந்து வெளியே வந்தவன் தனது செப்பலை தேடினான். அவனது செப்பலுக்கு பதிலாக அதே போன்ற ஒரு ஜோடி புதிய செப்பல் தான் அங்கு இருந்தது. யாரோ தனது செப்பலை மாற்றி போட்டுக் கொண்டு போய் விட்டார்கள் என்று எண்ணியவன் வேறு வழி இல்லாமல் அங்கு கிடந்த புதிய ஜோடி செப்பலை மாட்டிக் கொண்டு வீடு போய் சேர்ந்தான். மறு நாள் காலை ஆரு ஆதியின் பழைய செப்பலை கழுவி வெளியே காய வைத்திருக்கக் கண்டவன் அவளிடம் சென்று இருவரின் செப்பலும் மாறி விட்டது என்று கூற இல்லவே இல்லை அது தன்னுடையது தான் என்று சொல்லி சாதித்தாள் அவள். அவளோடு மல்லுக்கு நிற்க முடியாமல் அதோடு ஆதி அந்த பேச்சை விட்டு விட்டான். தனது பழைய ஜோடி செறுப்பை திருடிக் கொண்டு சென்று அதை கழுவி பத்திரப்படுத்திய அந்த குட்டி காதலியை இப்பொழுது நினைத்து பார்க்கையில் Paris செல்வதற்கு பதிலாக தனது இளமை பருவத்திற்கு Time travel செய்து சென்று அந்த குட்டி ஆருவை அள்ளிக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது ஆதித்யாவுக்கு.

தொலைவான போது பக்கமானவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ
நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது
என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது
உன் கையிலே பூவலை போடவா
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro