அத்தியாயம் (36)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சந்தேகம் ஒரு மனிதனுக்கு வரவே கூடாத வியாதி. அதுவும் அது குடும்பத்துக்குள் வந்து விட்டால் புற்றீசல் போல கொஞ்ச கொஞ்சமாக அது அந்த குடும்பம் என்ற கூட்டையே சிதைத்து சின்னாபின்னம் ஆக்கி விடும். சந்தேகம் மனிதனை மிருகமாக்கும். அது ராதாமோகனையும் விட்டு வைக்கவில்லை. காய்கறி விற்பவன் தன் மனைவியை பார்க்கிறானோ என்று சந்தேகம், பால்க்காரன் ஏன் அவளிடம் சிரித்துப் பேசுகிறான் என சந்தேகம், கடைக்கு சென்றாள் பொருள் வாங்குவதைக் காட்டிலும் யார் யார் தன் மனைவியை பார்க்கிறான் என்பதிலேயே மனம் சென்றது, ஒருவேளை தான் வீட்டில் இல்லாத சமயத்தில் வேறு யாரேனும் வீட்டுக்கு வந்தால்... என்று புத்தி கீழ்தரமாக யோசித்தது. சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டால் அதற்கு காரணம் தேவையில்லை. தேவை எல்லாம் சந்தேகம் மட்டும் தான். ராதாமோகன் கொஞ்ச கொஞ்சமாக வாஹினியுடன் சண்டை போட ஆரம்பித்தார், கொச்சையான வார்த்தைகளை அவள் மீது உபயோகிப்பதும் வாஹிணியை இழிவுபடுத்துவதும் அவர்களுக்குள் வாடிக்கையாகிப் போய் இருந்தது. ப்ரித்வி பிறந்து அவனுக்கு பேர் சூட்டி தொட்டிலில் இட்ட கையோடு ராஜாத்தி பாட்டி ஊருக்கு சென்று விட்டாள். ஆனால் பாட்டி சிறுகச் சிறுக ராதாமோகனின் மனதில் பற்றவைத்த நெருப்பு இப்பொழுது ராதாமோகனின் மனதுக்குள் தகதகவென பற்றி எறிய ஆரம்பித்து இருந்தது. வாஹிணியின் மாசற்ற அழகும், தாய்மை அவளுக்கு அழித்திருந்த புதுப் பொலிவும் ராதாமோகனுக்கு அவளைக் காணும் போதெல்லாம் ஒரு வித எரிச்சலைக் கொண்டு வரும். இவை எல்லாமே யாரையோ மயக்க வாஹிணி கையாளும் யுக்திகள் என ராதாமோகனின் மனதில் அழுத்தமாகப் பதிந்து போயிருந்தது. வாஹிணியை இழிவு படுத்தி அவளை கலங்கச் செய்வதில் அவருக்கு ஒரு குரூர திருப்த்தி கிடைத்தது. எந்நேரமும் கண் கொத்திப் பாம்பாய் வாஹிணியின் நடவடிக்கைகளை வேவு பார்க்க ராதாமோகன் ஆரம்பித்தார். வாஹிணியின் கையால் ஒரு சிறு தவறு நடந்து விட்டால் போதும் மனதில் உள்ள மொத்த வன்மத்தையும் அதைக் காரணமாகக் கொண்டு பழி வாங்கி விடுவார். ராதாமோகனின் நடவடிக்கைகளுக்கு தன்னை பழக்கப் படுத்திக் கொண்டிருந்த வாஹிணி ஒரு நடை எடுத்து வைக்கும் முன் அதன் பின் விளைவுகளை பத்து முறை யோசித்தாள். ராதாமோகனுக்கு தேவைப் பட்டதெல்லாம் ஒரு சிறு புள்ளி மட்டும் தான் அதில் ஆரம்பித்து அதை கைகலப்பு வரை கொண்டு சென்று கடைசியில் எப்படி வாஹிணியின் உடம்பில் ஒரு தழும்பை வைக்க வேண்டும் என்ற சூட்சமம் அவர் அறிவார்.

அப்பொழுது ப்ரித்விக்கு 2வயது. வாஹிணி மீண்டும் நடனப்பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அதை நேரடியாக தடுக்க முடியாத ராதாமோகனோ அதற்கும் ஒரு வழியை கண்டு பிடித்திருந்தார். அது வாஹிணியின் வயிற்றில் ஒரு பிள்ளையைக் கொடுப்பது என்பது. ராதாமோகன் வாஹிணியுடன் உறவு வைத்துக் கொண்டதும் கூட மிகவும் கொச்சையாகத் தான். படுக்கையிலும் அவளை தரக் குறைவாக பேசினார். போக்கிடமற்ற வாஹிணியோ தன்னைத் தானே ஒரு ஈனப் பிறவியாக ஒரு கேடுகெட்ட ஜென்மமாக எண்ணிக் கொண்டு ஒரு உயிரற்ற ஜடமாக அவரது தேவைகளை நிறைவேற்றினாள். ஆனால் யாரைக் காட்டிலும் வாஹிணி ராதாமோகனின் செயல்களையும் அதன் அர்த்தங்களையும் அறிந்திருந்தாள். அவளது வயிற்றில் பிள்ளையைக் கொடுப்பது ஏன் என்பதும் அவளுக்குத் தெரியும், ஆனால் அதை எதிர்த்து என்ன செய்வது எங்கு செல்வது என்று தான் அவளுக்குத் தெரியாது. ப்ரித்விக்கும் பல்லவிக்கும் இடையில் வாஹிணிக்கு மூன்று முறை கருச் சிதைவுண்டானது. உடலாலும் மனதாலும் வாஹிணி மிகவும் நொந்து போய் இருந்தாள். கட்டாயப்படுத்தி குழந்தையைக் கொடுத்தாலும் வயிற்றுக்கு வந்த பின்னாலே அவள் தானே அந்த குழந்தைக்கு அம்மா. ஒவ்வொரு கருச்சிதைவின் போதும் ஒரு தாயும் சிதைந்துத் தான் போகிறாள்! இன்னும் சில நாட்களுக்கு கட்டாயமாக வாஹிணி கருவுறக் கூடாது மீறி கருவுற்றால் அது அவளது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறியிருந்த நிலையில் ராதாமோகன் வாஹிணியை ஓரிரு வருடங்களாக விட்டு வைத்திருந்தார். வாஹிணியும் நடனப் பள்ளிக்கு செல்வதை முற்றிலுமாக நிறித்திக் கொண்டிருந்தாள்.

வாஹிணி திருமணம் முடித்து வந்து முழுதாக ஐந்து வருடங்கள் ஆகி இருந்தன. ப்ரித்வி ஆரம்ப பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருந்தான். எதற்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றே தெரியாத ஒரு வாழ்க்கையை ப்ரித்வியின் குழந்தை முகத்தையும் எல்லா காயத்துக்கும் மருந்து போடும் அவளது நடனத்தையும் மட்டுமே ஆதாரமாக பற்றிக் கொண்டு வாஹிணி வாழ்ந்துக் கொண்டு இருந்தாள். திருமணம் முடித்து வந்து அவள் எந்த சந்தோஷத்தையும் இது வரை காணவில்லை. அழகாக பிறந்தது தான் அவள் வாழ்வில் செய்த மகா பாவம் என அவள் நம்ப ஆரம்பித்து இருந்தாள். அவளையே அவள் வெறுத்தாள், கண்ணாடியை பார்த்தாலே அவளுக்கு கோபமாக வந்தது, அழகாக உடுத்துவதையும் தன்னை அழகு படுத்திக் கொள்வதையும் சுத்தமாக நிறுத்தி இருந்தாள். வாஹிணி ஒன்றும் அப்படி அதிகப்படியாக அலங்காரம் செய்து கொள்வதுமில்லை. நேர்த்தியாக புடவை கட்டுவாள் (அவளது உயரத்திற்கு புடவையை சாதாரணமாக சுற்றிக் கொண்டாளே நேர்த்தியாகத் தான் இருக்கும்) கண்ணுக்கு கொஞ்சம் மை தீட்டிக் கொள்வது மட்டும் தான் சிறு வயது முதல் வாஹிணிக்கு மிகப் பிடித்தமான அலங்காரம். இப்பொழுதானால் ஆசையாக ஒரு புடவை வாங்கிக் கொள்ளவோ, கண்ணுக்கு மை தீட்டிக் கொள்ளவோ கூட அவள் மனம் இடம் கொடுப்பதில்லை. சர்வமும் வெறுத்துப் போயிருந்தது அவளுக்கு.

இந்த நிலையில் ராதாமோகனின் பக்கத்து வீட்டிற்கு வெளி நாட்டிலிருந்து ஒரு குடும்பம் குடி வந்தது. வந்த நாள் முதல் அந்த கணவனும் மனைவியும் (ரமேஷ், சௌந்தர்யா) தாமாக வந்து ராதாமோகன் மற்றும் வாஹிணியுடன் நட்பு பாராட்டினர். ஆரம்பத்தில் கொஞ்சம் தொந்தரவாக இருந்த போதிலும் பின்பு இவர்களும் அவர்களோடு நல்ல விதமாக பழகத் தொடங்கினார்கள். சௌந்தர்யாவுக்கு ப்ரித்வியின் வயதில் ஒரு குழந்தை இருந்தது ஆகவே குழந்தையையும் அழைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் அக்கா என அழைத்தவாறு வாஹிணியையே அவள் தேடி வந்தாள். ரமேஷ் காலையில் வெளியே சென்றாள் ராத்திரியில் தான்  வீடு திரும்பும் ரகம். ஆகவே அந்த குடும்பத்தை ஒட்டி ராதாமோகனுக்கும் வாஹிணிக்கும் எந்த முரண்பாடும் இல்லை. சௌந்தர்யா படித்த பெண், அம்மா கிடையாது. ஆகவே வாஹிணி சௌந்தர்யாவுக்கும் அவள் குழந்தை வருணுக்கும் இன்னொரு தாயைப் போல மாறிப் போனால். இதற்கிடையில் வாஹிணி மீண்டும் கருவுற்று பல்லவியை பெற்றெடுத்தாள். ஆனால் அதன் பின்னர் இருந்ததிலும் பார்க்க வாஹினி மிகவும் சோர்ந்து போனாள். ராதாமோகனின் வீட்டுக்குள் சகஜமாக நுழையக் கூடிய ஒரே நபர் என்ற அடிப்படையில் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு சிறிது நாட்களிலேயே ராதாமோகனுக்கும் வாஹிணிக்கும் இடையே எதுவோ சரியில்லை என்பதையும் வாஹிணி post pregnancy depression இல் இருக்கிறாள் என்பதையும் சௌந்தர்யா கண்டு கொண்டாள். கண்டு கொண்டது மட்டும் அல்லாது வாஹிணி மீது கொண்ட அன்பின் நிமித்தம் அதைப் பற்றி வாஹிணியோடு பேசவும் செய்தாள். இது வரை தான் அனுபவிக்கும் வேதனையை யாரிடமும் சொல்லி இராத வாஹிணி முதல் முறையாக சௌந்தர்யாவிடம் மனம் திறந்தாள். வாஹிணி கூறியதை எல்லாம் கேட்டு வாஹிணிக்காக மனம் இழகினாலும் தன்னுடன் இதை பகிர்ந்து கொள்வதால் மட்டுமே வாஹிணியின் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதையும், ராதாமோகன் திருந்துவது என்பது கனவிலும் நடவாது என்பதையும் குழந்தை பல்லவியின் நன்மையையும் கருத்தில் கொண்டும் வாஹிணிக்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு எடுத்தாள் சௌந்தர்யா.

அந்த ஊரில் இருந்த ஒரு நல்ல Counsellor ஐ தேடிப் பிடித்து வாஹிணியை Convince செய்து வருணையும் ப்ரித்வியையும் பார்க்கிற்கு அழைத்து செல்லும் சமயத்தில் குழந்தை பல்லவியை வேலைக்கார அம்மாவிடம் கொடுத்துவிட்டு ராதாமோனுக்கு சந்தேகம் வராத வகையில் வாஹிணியை Counseling ற்காக அழைத்துச் சென்றாள் சௌந்தர்யா. ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் கட்டாயத்திற்காக சென்ற வாஹிணியும் நாட்கள் செல்லச் செல்ல அந்த Counseling தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து தானாகவே போய் வர்த் தொடங்கினாள். வாஹிணி தன்னை மனதளவில் பெலப்படுத்திக் கொள்ளவும், தைரியத்தை வளர்த்துக் கொள்ளவும் அது அவளுக்கு மிகவும் உதவிற்று. ஒரு வருட காலம் வரை வாஹிணி Counseling செல்கிறாள் என்பதை ராதாமோகனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வாஹிணியின் Counselor அவளை இப்பொழுது ஒரு therapist ற்கு அறிமுகம் செய்து வைத்திருந்தாள். இப்பொழுது வாஹிணி therapy sessions ற்கும் போய் வர ஆரம்பித்திருந்தாள். ஆனால் வாஹிணி அடிக்கடி வெளியே சென்று வருவது ராதாமோகனை உறுத்தத் தொடங்கவே வாஹிணியை சௌந்தர்யாவுடன் சேர்ந்து வெளியே செல்ல ராதாமோகன் தடை விதித்தார். இத்தனை நாள் ஊமையாக இருந்த வாஹிணி முதல் முறையாக தன் உரிமைக்காக வாய் திறந்தாள். வாஹிணி எதிர்த்து பேச ஆரம்பித்த பின்னர் ராதாமோகனின் பலம் குறைந்தது. ராதாமோகனை மீறி வாஹிணி வீட்டை விட்டு வெளியே சென்று வர ஆரம்பித்தாள். ஆனால் ராதாமோகனின் மூர்க்கத் தனமோ மாறாக தலை விரித்து ஆடத் தொடங்கியது. வாஹிணியை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார். மனவலிமையை கை விடாத வாஹிணியோ தொடர்ந்து therapy க்கு சென்று வந்தாள். ஆத்திரம் முற்றிப் போன ராதாமோகன் வேலைக்கு செல்லும் போது வாஹிணியையும் குழந்தைகளையும் வீட்டுக்குள் போட்டு வெளியில் தாழ்ப்பாழ் போட்டு விட்டு போக ஆரம்பித்தார். ப்ரித்வியை பள்ளிக்கு அனுப்புவதில்லை. சௌந்தர்யாவையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இடை இடையே சொல்லாமல் கொள்ளாமல் நோட்டம் பார்க்கவென்று வீட்டுக்கு வந்து விடுவார். ஆனால் வாஹிணி இது ஒன்றையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. மனதை கல்லாக்கிக் கொண்டு பேசாமல் இருந்தாள். ஒரு வாரமாக therapy க்கு வராத காரணத்தினால் வாஹிணி கொடுத்து இருந்த இலக்கத்திற்கு வாஹிணியின் therapist அழைத்தார். தொலைபேசியை எடுத்த ப்ரித்வி 'அம்மா உங்களுக்கு தான்' என்று வாஹிணியை அழைத்து தொலைபேசியை கொடுத்தான். ராதாமோகன் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அந்த தொலைபேசி அழைப்பை சற்றும் எதிர்பாராத வாஹிணியோ மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அந்த அழைப்புக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க இடையில் புகுந்து தொலைபேசியை பறித்து காதில் வைத்த ராதாமோகன் மறுமுனையில் ஒரு ஆண் குரல் சிரித்து பேசுவது கேட்கவே எதிர் முனையை கண்டமேனிக்கு திட்டி தொலைபேசியை வைத்தார். அதன் பின்னர் வீடு ரணகளம் ஆனது.

இத்தனை வருடங்களாக ராதாமோகன் வாஹிணியை சந்தேகப்பட்டது, அவளை துன்புறுத்தியது எல்லாமே காரணமே இல்லாத ஒரு சந்தேகத்தின் பேரில் தான். இப்பொழுது ஒரு ஆண் வாஹிணியை தொலைபேசியில் அழைத்து பேசுகிறான் என்றதும் ராதாமோகனிற்குள் இத்தனை நாள் ஒழிந்து கொண்டிருந்த அரக்க குணம் முழுவதுமாக வெளியே வந்தது. ஒரு நாள் முழுவதும் அது யார், அவனின் தொலைபேசி இலக்கம் என்ன என்று கேட்டு வாஹிணியை அடித்து துன்புறுத்தினார். ஆனால் அவர்கள் பிரச்சினையில் எக்காரணம் கொண்டும் ஒரு படித்த பெரிய இடத்தில் உள்ள மனிதரை அதுவும் ஒரு டாக்டரை கோர்த்து விட்டுவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்த வாஹிணியோ அந்த தொலைபேசி அழைப்பு பற்றி வாய் திறக்கவில்லை. அது ராதாமோகனின் ஆத்திரத்திற்கு தீனி போட்டது போலானது. இதற்கு மேல் நமக்கிடையே எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு அத்தனை வருடங்களின் பின்னர் முதன்முறையாக வாஹிணியின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களின் பெண் கூத்தடிக்கும் லட்சணத்தை வந்து பார்க்கும் படியாக அவசரமாக அவர்களை வீட்டுக்கு வரவழைத்தார். அந்த முதியவர்க்ள் இருவரும் என்னவோ ஏதோவென ராவோடு ராவாக பஸ்ஸைப் பிடித்து வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த பின்னர் அவர்கள் பெண் ஒரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறாள் என்று மிகக் கேவலமாக அவர்கள் முன்னிலையில் பேசி அந்த முதியவர்களை தலை குனியச் செய்தார். வாஹிணி வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. தரையைப் பார்த்த படி ஒரு மூலையில் நின்றிருந்தாள். அப்பொழுதும் அவள் மௌனம் சாதிக்கவே அதை தாங்கிக் கொள்ள முடியாத ராதாமோகனோ அவளது பெற்றோரின் முன்னிலையிலேயே உண்மையைக் கூறும் படி அவளை Belt ஆல் அடித்தார். கையாளாகாத அந்த முதியவர்கள் இருவரும் தரையைப் பார்த்து கண்ணீர் சிந்தினர், ப்ரித்வி பயம் மிகுதியால் சுவரோடு ஒட்டி நின்று கொண்டான், பல்லவி பாப்பா வேலைக்காரம்மா கையில் இருக்கவே அவளும் அந்த காட்சியை காண மாட்டாமல் வேறு புறம் பார்த்துக் கொண்டாள், ஏதோ அசம்பாவிதம் நடப்பது போல தோன்றவே வாசல் வரை வந்து எட்டிப் பார்த்த சௌந்தர்யாவும் கூட ஸ்தம்பித்து நின்று விட்டாள். போலிஸில் வைத்து குற்றவாளியை அடிப்பது போல கட்டிய மனைவியை நடு வீட்டில் நிறுத்தி வைத்து சுற்றி நின்ற அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க வாஹிணியை நாக் கூசத்தக்க வசை எல்லாம் பாடியவாறு தோலுறித்துக் கொண்டு இருந்தார் ராதாமோகன் என்ற பெரிய மனிதன்.

வாஹிணிக்கு உடம்பில் சுத்தமாக வலி இல்லை. ராதாமோகனை கட்டி வந்த இந்த ஏழு வருடங்களில் அனேக முறை அடி வாங்கிப் பழகிய உடம்பு தான். ஆனால் கணவன் மனைவி தனிமையில் அது நடப்பது வேறு, அவளை தன் பெற்றவர்கள் முன்னாள், அவள் பெற்ற பிள்ளையின் முன்னாள், வீட்டு வேலைக்காரியின் முன்னாள், தன் தோழியின் முன்னாள் ஒரு தாசியைப் போல வசை பாடி பிறர் பார்க்க அவளை அடிப்பதை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடலில் கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருந்த மானம் மரியாதையும் கூட இன்றோடு போய் விட்டதைப் போல வாஹிணி உணர்ந்தாள். அதை விட கொடுமை அவளை இத்தனை பேர் பார்க்க அடித்த போதிலும் அதை தட்டிக் கேட்க முடியாத அவல நிலையில் அவளை சுற்றி இருந்த அனைவரும் நின்றிருந்தது தான். வாஹிணியை அடித்துக் களைத்துப் போன ராதாமோகனோ அவராகவே அவளை அடிப்பதை நிறுத்தி Belt ஐ சுழற்றி தூரப் போட்டு விட்டு Sofa வில் அக்கடாவென அமர்ந்தார். இரண்டு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு வாஹிணியை அழைத்துக் கொண்டு செல்லுமாறு வாஹிணியின் பெற்றோரிடத்தில் ஜாடையாலே கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். அவர் அந்த இடம் விட்டு சென்ற பின்னர் வாஹிணியை நோக்கி ஓடி வந்த வாஹிணியின் தாய் வாஹிணியின் காயம் பட்ட உடம்பை கையால் தடவியவாறு தேம்பி அழுதாள், தங்கள் கையாலாகாதத் தனத்தையும் ராதாமோகனோடு எதிர்த்து நிற்க முடியாத தங்கள் ஏழ்மையையும் எண்ணி வாஹிணியின் தந்தை தலையில் அடித்துக் கொண்டார். 'உன்னையும் உன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்று உங்களுக்கும் சேர்த்து கஞ்சி ஊற்றிக் காப்பாற்ற எங்களுக்கு திராணி இல்லையம்மா, கணவனை அனுசரித்து வாழப் பழகிக் கொள்' எனறு கடைசியில் பெண்ணுக்கு புத்திமதி சொல்லிவிட்டு அந்த முதியவர்கள் கண்ணை கசக்கிக் கொண்டு திரும்பி சென்றார்கள். அவர்கள் சென்ற பின்னாலே சௌந்தர்யா வந்து வாஹிணியின் கால் மாட்டில் அமர்ந்து 'இந்த இழிவு வாழ்க்கை உனக்கு வேண்டாம் அக்கா' என்று தன் பங்கிற்கு அழுதுவிட்டுச் சென்றாள். ஆனால் இதை விட்டால் வாஹிணி எங்கு செல்வது என்ற கேள்விக்கு பதில் அவளுக்கும் தெரியாது. ஆனால் வாஹிணி யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் மனம் எதையோ தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தது. எல்லோரும் அங்கிருந்து சென்ற பின்னாள் எழுந்து சென்று தன் பிள்ளைகள் இருவரையும் அழைத்து வந்து மடியில் கிடத்திக் கொண்டு ஒரு சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தாள், தரையில் அமர்ந்த வண்ணமே பல்லவிக்கு பாலூட்டினாள். பின்னர் குழந்தைகள் இருவரையும் வேலைக்காரம்மாவிடம் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் அப்படியே எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தவள் தான் வாஹிணி.

அதற்கு மேல அவளால் அந்த வீட்டில் வாழ முடியாது. அதற்கு மேல் அவள் அங்கு இருப்பது அந்த வீட்டில் அவள் நிர்வாணமாய் உலா வருவதற்கு சமம். தற்கொலை செய்து கொள்ள எண்ணித் தான் வாஹிணி விட்டை விட்டு வெளியேறியது. ஆனால் எங்கு செல்வது என்று தெரியாத வாஹிணி நேராக சென்றது தனது therapist இடம். வாஹிணி இருந்த நிலை கண்டு அவர் தான் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் வாஹிணியை தொலைபேசியில் அழைத்தது அவர் கேரளாவிற்கு இடமாற்றம் ஆகப் போகிறார் என்பதையும் வாஹிணியோடு கலந்தாலோசித்து அவளுக்கு வேறு ஒரு therapist ஐ recommend செய்வத்ற்காகத் தான். ஆனால் இடையில் ஏதேதோ நடந்து விட, வாஹிணியின் நிர்கதியான நிலை அறிந்தவர் ஏதோ வகையில் அதற்கு தானும் ஒரு காரணம் ஆகையால் வாஹிணியை பேசி சம்மதிக்க செய்து அவளை தன்னோடு கேரளாவிற்கு அழைத்துச் சென்றார். தற்கொலை எண்ணத்தில் இருந்து அவளை மீட்டெடுத்ததும் அவர் தான். அவர் பெயர் டாக்டர் வசீகரன். வாஹிணி டாக்டரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இன்னும் அவரது அடைக்கலத்திலேயே இருந்தாள். இன்று அவளுக்கு இந்த உலகத்தில் இருப்பதெல்லாம் அவர் மட்டும் தான். வாஹிணி இது வரை தன் பெற்றோரைக் கூட தொடர்பு கொள்ள முயற்சித்ததில்லை. தன் குழந்தைகளை நிச்சயம் ராதாமோகன் நல்ல படியாக வளர்ந்த்தெடுத்து இருப்பார் என்ற நம்பிக்கையே அவள் வாழ்க்கையின் அடிநாதமானது. ஒரு திருமணம் முறிந்து விட்டாள் சரியோ தவறோ முக்கால்வாசி நேரம் அந்த பலி முழுவதும் அந்த பெண்ணையே சார்ந்து விடுகிறது. அதுவும் குழந்தைகள் கணவனிடம் வளரும் பட்சத்தில் அந்த பெண் நடத்தை கெட்டவளாகவே சித்தரிக்கப் படுகிறாள். பல நேரங்களில் ஒரு குடும்பம் பிரிவதற்கு பின்னாலான காரணங்கள் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் பொத்தம் பொதுவாக அவள் ஓடிப் போய் விட்டாள் என்று சொல்லி முடித்து விடுவது! வாஹிணியின் வாழ்விலும் அதுவே நடந்தது.

காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro