அத்தியாயம் (39)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மறு நாள் காலை ஆதியும் ருத்ரியும் கிளம்பி வந்த போது வாஹிணி வீட்டு முற்றத்தில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டு இருந்தாள். ஆரோஹி வாஹிணியை தலையில் வைத்து தாங்கினாள். வாஹிணியை சமையற்கட்டில் நின்று அவளோடு பேசிக் கொண்டிருப்பதற்கு கூட ஆரு அனுமதிப்பதில்லை. 'நீங்க போய் ரெஸ்ட் எடுங்கம்மா நான் பார்த்துக்கறேன்' என்று சொல்லியே வாஹிணி அங்கு இருக்கும் வரை தன் பிள்ளைகளோடு நேரம் செலவிடும் படி பார்த்துக் கொண்டாள் ஆரோஹி. பல்லவியும் ப்ரித்வியும் இரவு சரியாக தூங்காததால் விடிந்ததும் தெரியாமல் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க வாஹிணி வெளியே அமர்ந்து பேப்பர் படித்த படி காபி அருந்திக் கொண்டு இருந்தாள். ஆரு மதியம் சமையலுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கவே உள்ளே வந்த ஆதியும் ருத்ரியும் வாஹிணியோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். வாஹிணியைப் பற்றி நேற்று தான் ருத்ரி ஆதிக்கு கூறி இருந்தாள். வாஹிணி ருத்ரியின் குரு என்ற முறையில் அவள் ஆதியை ருத்ரியின் fiancé என்று தான் அறிந்திருந்தாள். ருத்ரி பாரிஸ் வரும் முன்னதாகவே தனக்கு வீட்டில் ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாயும் அவர் தனது நடன நிகழ்ச்சியைக் காண பாரிஸ் வர இருப்பதாயும் மரியாதையினிமித்தம் வாஹிணியிடம் கூறி இருந்தாள். வாஹிணிக்கு ஆருவுக்கும் ஆதிக்கும் இடையிலான உறவு பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே ஆருவை தன் மகனோடு சேர்த்து கனவு காண ஆரம்பித்து இருந்தாள் அந்த தாய். அது போதாததற்கு தன் ஆசையை ஆதியின் காதிலேயே சொல்லியும் வைத்தாள்.

"என்ன மேடம் பாரிஸை விட்டு போக மனசு வர மாட்டேங்கிதா? நாளைக்கு நைட்டு நமக்கு flight" என்றான் ஆதி. ஆருவின் காபியை ரசித்து பருகியக் கொண்டு இருந்த வாஹிணியைப் பார்த்த படி.

"ஆமாம்ப்பா... எதுக்காகவோ பாரிஸுக்கு வந்து கடைசில என்னென்னமோ நடந்து போச்சு..." என உச் கொட்டினாள் வாஹிணி.

"பேசாமல் உங்க பசங்களையும் உங்க கூட இந்தியாக்கே கூப்பிட்டுக்கங்க. ப்ரித்வி தானே... ஆரம்பத்துல அடம் புடிக்கத் தான் செய்வான் அப்பறம் தன்னால வழிக்கு வந்துருவான்" என்றான் ஆதி இதுவரை அவன் ப்ரித்வியைப் பற்றி அறிந்ததை வைத்து.

"விரும்பினாலும் விரும்பாட்டாலும் அவங்க இந்தியா வந்து தான்ப்பா ஆகணும். அவங்கப்பா அவர் அஸ்த்தியை அவர் சொந்த ஊர் தஞ்சாவூர்ல தான் கரைக்கணும்னு சொல்லி இருக்காறாம். நம்ம போன பின்னாடி இவங்களும் கிளம்பி வர வேண்டியதா தான் இருக்கும்" என்றாள் யோசனையோடு வாஹிணி.

ஆதிக்கும் ருத்ரிக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்த ஆரு "யார் பின்னாடி யார் கிளம்பி வர வேண்டியது???" எனக் கேட்டவாறு காபியை நீட்ட,

"ப்ரித்வி அப்பாவோட அஸ்த்தியை கரைக்கறதை பத்தி சொல்லிட்டு இருந்தேன்ம்மா. ப்ரித்வி என்ன முடிவு பண்ணி இருக்கான்??" என ஆருவை கேட்டாள் வாஹிணி.

"அப்பா கடைசியா கேட்டுக்கிட்டதில்லை. அதெல்லாம் பண்ணிருவான்ம்மா.. அப்பாவோட எட்டு முடிஞ்சதும் நெக்ஸ்ட் வீக்ல டிக்கெட் போடறேன்னு பல்லவிட்ட சொன்னானாம்" என்றாள் ஆரு.

"ப்ரித்வியும் பல்லவியும் இந்தியா கிளம்பி வந்துட்டா நீ என்ன ஆரு பண்ணப் போற?" என ஆதி ஆர்வமாகக் கேட்க,

"ப்ரித்விக்கும் பல்லவிக்கும் அவங்க அப்பாவோட கடைசி ஆசை எவ்வளவு முக்கியமோ எனக்கும் அவ்வளவு முக்கியம். நானும் summer holidays ல தானே இருக்கேன். So எனக்கும் சேர்த்து டிக்கெட் போட சொல்லி இருக்கேன். என்ன ஹாப்பியா??" எனக் கேட்டு ஆதியின் தலையை கலைத்து விட்டு உள்ளே சென்றாள் ஆரு.

"யாரும்மா இந்த பொண்ணு... இவ பொண்ணு இல்ல சாமிம்மா. இந்த குடும்பத்தை காப்பாத்த வந்த சாமி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த சின்ன வயசுலயே எவ்வளவு பொறுப்பா இருக்கா பாரேன். இவ மட்டும் இல்லைனா இன்னைக்கி என் பசங்க இரண்டு பேரும் என்ன ஆகி இருப்பாங்க..." என்று ருத்ரியிடம் கூறி கண் கலங்கினாள் வாஹிணி.

"சரி... சரி... இப்போ நீங்க எதுக்கு அழுறீங்க. அழாதிங்கம்மா..." என வாஹிணியை தட்டிக் கொடுத்தாள் ருத்ரி.

"ப்ரித்வி அப்பா சாகறதுக்கு முன்னாடி ப்ரித்வி ஆருவை கல்யாணம் பண்ணிக்கிறது தான் அவரோட கடைசி ஆசைனு சொல்லிட்டு போயிருக்காரு. அதை தான் அவங்கப்பா கடைசி ஆசை தான் தன்னோட ஆசைனு இவ பூடகமா சொல்லிட்டு போறாப் போலருக்கு. ப்ரித்விக்கு இவளை விட்டா பொருத்தமான பொண்ணு எங்க போய் தேடினாலும் கிடைக்க மாட்டா. தங்கம் தம்பி இந்த பொண்ணு" என இம்முறை வாஹிணி ஆதியை பார்த்து சொல்லவும் ஆதியின் முகம் அஷ்ட்ட கோணல் ஆகிப் போனது. காபி கப்பை எடுத்து வைக்க கிளம்புவது போல எழுந்து வீட்டினுள் சென்றான் ஆதி.

ஆதியை காபி கப்போடு கண்டதும் "என்னடா நீ எதுக்கு இதை எடுத்துட்டு வந்த? நான் வந்து எடுத்துக்க மாட்டேனா?" என்றவளைப் பார்த்து,

"நாங்க கிளம்புறோம் ஆரு" என்றான்.

"என்னடா இப்போ தானே வந்திங்க அதுக்குள்ள எங்க போறீங்க. நீ வந்திருக்கேன்னு நான் உருளைக் கிழங்கு கறிலாம் பண்ண ரெடி பண்ணிட்டேன்டா..." என்று சொல்லி அவள் முகம் சுருங்க,

வாஹிணி சொன்னதைக் கேட்டு அவனும் முகம் கோணலாகிப் போய் தான் உள்ளே வந்தான். ஆனால் தனக்காக உருளைக் கிழங்கு செய்கிறேன் என்று சொன்ன ஆருவிடம் தன் கோபம் எல்லாம் காணாமல் போக,

"பாரிஸ் வந்ததுல இருந்து என்னென்னமோ நடந்து போச்சு. இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்ப வேண்டியது. ஊருக்கு போகும் போது சில gifts லாம் வாங்கிட்டு போக வேண்டியது இருக்கு. பாவம் ருத்ரி அவளும் ப்ளான் பண்ணது படி எதுமே செய்யலை. நான் கொஞ்சம் ருத்ரியை அழைச்சிட்டு ஷாப்பிங் போய்ட்டு வந்துறட்டுமா?" என்றான்.

இந்த வீட்டுக்குள் தனக்காக ஆதி அடி எடுத்து வைக்க, அவனுக்காக ருத்ரி கூட வர கடைசியில் அவர்களது holiday என்பதே பாழாய் போய் விட்டதே என்ற உண்மை குற்ற உணர்ச்சியைத் தூண்ட "Sorry ஆதி எல்லாம் என்னால தான்" என்றாள் ஆதியிடம் வந்து அவன் முன்னால் தலை குனிந்து நின்று.

"ச்சா.. ச்சா.. அப்படிலாம் ஒன்னும் கிடையாது. Actually இங்க இப்படி இருக்கும் போது ஷாப்பிங் போறேன்னு சொல்றதுக்கு எனக்கு தான் guilty ஆ இருக்கு" என்று சொல்லி ஆருவின் நாடியை ஒரு விரலால் பிடித்து அவள் குனிந்த தலையை நிமிர்த்தி விட்டான் ஆதி.

அதற்குள் ப்ரித்வி மாடியில் இருந்து கீழே இறங்கி வர ஆருவும் ஆதியும் மிக அருகாமையில் நின்று கொண்டு இருப்பதைக் கண்டவன் தொண்டையை செறுமிய படி கிச்சனுக்குள் நுழைந்து வீம்புக்கு "ஆரு காபி" என்றான். ஆரு அவனை வித்தியாசமாக பார்த்து விட்டு காபி போட ஆரம்பிக்க ஆதி அவனிடமும் சொல்லிக் கொண்டு ருத்ரியை அழைத்துக் கொண்டு அவன் காலையில் எடுப்பித்திருந்த rent a car இல் ஷாப்பிங் கிளம்பினான். ஆதி ஷாப்பிங் செல்வதை ஒரு சாட்டாக சொல்லி அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செய்தானே தவிர அவன் மனம் எதிலுமே ஒட்டவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத வெறுமையும் பயமும் வந்து சூழ்ந்து கொண்டு மனதை தைத்தது. பல்லவி தன் தந்தையின் கடைசி ஆசை என்று ஆருவும் ப்ரித்வியும் திறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியது, இன்று வாஹிணி கூறியது எல்லாமே கண் முன் வந்து வந்து போனது. பேருக்கு ஷாப்பிங் செய்து ஒரு சில பொருட்களை ஊருக்கு எடுத்து செல்வதற்காக வாங்கிக் கொண்டான். ருத்ரி தனது ஷாப்பிங்கை முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தான். ருத்ரி அவளுக்கு தேவையானவை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கி முடித்த கையோடு அவளோடு கூட ஒரு ரெஸ்ட்டாரண்ட்டுக்கு சென்று மதிய உணவு உண்டு விட்டு அவளோடு மேலும் கொஞ்ச நேரம் ஊரை சுற்றி விட்டு இரவு அவளை அவள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்று ஹோட்டல் ரூம் வரை அவளோடு கூட நடந்து சென்றான். எதிர்பாராது அடுத்தடுத்து நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னர் இன்று தான் மறுபடியும் வாழ்க்கையில் ஒரு இயல்பான நாள் திரும்ப வந்தது போல இருந்தது ருத்ரிக்கு.

"Thanks ஆதி. I had a good time today." என்றாள் ருத்ரி ரூம் வாசலில் நின்று.

"நான் தான் உன்னை thank பண்ணனும். நீ எனக்காக பண்ணிட்டு இருக்கது எல்லாத்துக்காகவும். வேற பொண்ணா இருந்தா இந்நேரம் ஓடியே போயிருந்திருப்பா..."

"அந்த வீட்டுக்குள்ள முதல் முதலா என்னை அழைச்சிட்டு போனது வேணும்னா நீயா இருக்கலாம். ஆனால் இந்த ஒரு வாரத்துல எனக்கே தெரியாமல் நானும் அவங்கள்ல ஒருத்தியா ஆகிட்டேன். ப்ளீஸ் என்னை பிரிச்சு பார்த்துடாத ஆதி..." என்று சொல்லி தலை குனிந்துவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான் ஆதி.

"இப்போ எதுக்கு நீ அழற" என்றான் ருத்ரியின் கண்ணீர் அவன் கையை நனைத்தது.

"Sorry.. Sorry.. நான் அழலை. I'm just over whelmed. ஒரு வாரத்துல எத்தனை புது மனுஷங்களை சந்திச்சு ஒரு குடும்பமா ஒன்னா நின்னு. I just can't believe all this happened for real..." என்றாள் ருத்ரி.

"I know it's over whelming for you. அதான் ஆரு கிட்ட சொல்லிட்டு வந்தேன். ஊருக்கு புறப்பட இன்னும் ஒரு நாள் தானே இருக்கு. நாளைக்கு உனக்கு எங்கயாச்சும் போகணும் பார்க்கணும்னு இருந்தா சொல்லு நான் வந்து அழைச்சிட்டு போறேன். என்ன?" என்றான்.

"Thanks.." என்று சொல்லி ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு ருத்ரி தன் அறைக்குள் சென்று கதவடைக்க ஆதி வண்டியை எடுத்துக் கொண்டு தான் இருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். ஆதியால் எந்த பக்கம் புரண்டு படுத்த போதும் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. விடிய விடிய உரங்காமல் எதையோ தீவிரமாக யோசனை செய்து கொண்டிருந்தான்.

அங்கு ப்ரித்வியின் இல்லத்திலும் யாருக்கும் தூக்கம் இல்லை. நேற்று இரவு யாரும் தங்களது அறைகளுக்கு போகாமல் கூடத்திலேயே விடியும் வரை அமர்ந்திருந்ததாலும் யாரும் இதுவரை சரியாக தூங்காததாலும் இன்று நான்கு பேரும் ஒன்றாக தூங்கலாம் என்று வீட்டின் லிவ்விங் ஏரியாவில் உள்ள ஃபர்னிச்சர்களை கொஞ்சம் ஓரமாக நகர்த்தி விட்டு அனைவரும் ஒன்றாக படுத்துக் கொள்ளும் படி தரையில் மெத்தை விரித்து அதன் மேல் படுக்கை விரிப்புகளும் கணத்த கம்பளிகளும் விரித்து தலையணை வைத்து தூங்கும் இடத்தை தயார் செய்தால் ஆரோஹி. அம்மா கீழே மெத்தை மேலே அமர்ந்திருக்கவும் பல்லவி ஆசையாக ஓடி வந்து அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டாள். ஆரு மெத்தையின் இன்னொரு மூலையில் அமர்ந்து யோகா செய்து கொண்டு இருந்தாள். ப்ரித்விக்கு இதை எல்லாம் பார்த்த போது கோபம் கோபமாக வந்தது. அவன் இன்னுமும் வீட்டில் யாருடனும் முன்பு போல பேசுவதில்லை. அதில் ஆருவும் அடக்கம். நேற்று இரவு அவளை கட்டிக் கொண்டு அழுது தீர்த்ததோடு சரி. விடிய விடிய வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து சிகரட் பிடித்துக் கொண்டு இருந்தான். ஆரு எவ்வளவோ சொல்லியும் உள்ளே வரவில்லை. விடிந்த பின்னர் தான் அவனது அறைக்கு சென்று கொஞ்சம் படுத்து எழும்பினான். இன்று காலையில் ஆருவை ஆதியோடு பார்த்து விட்டு இருமியது அவனாகவே வந்து காபி போட்டு கேட்டது எல்லாமுமே கொஞ்சம் விசித்திரமாக இருந்த போதிலும் அதன் பின்னர் சாதாரணமாக பேசுவான் என்று பார்த்தால் ஆதி சென்ற பின்னர் அவன் பழைய படி அவளை நிமிர்ந்தும் கூட பார்த்தான் இல்லை. இவன் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான், இவனுக்கு என்ன செய்கிறது என நினைத்த போது ஆருவுக்கு கொஞ்சம் கஷ்ட்டமாகவும் இருந்தது. ஆனால் அனைவரும் ஒன்றாய் படுத்துக் கொள்ளும் இந்த ஏற்பாட்டில் எரிச்சலடைந்த ப்ரித்வியோ தனது அறைக்கே திரும்பி சென்று விட்டான்.

இன்னொரு புறம் நாளை மறுதினம் ஊருக்கு திரும்ப வேண்டும் அதற்கு முன் ஒரே ஒரு முறை தன் மகன் தன்னோடு பேச மாட்டானா, தன் அருகில் வர மாட்டானா என வாஹிணியின் தாயுள்ளம் அடித்துக் கொண்டது. வாஹிணி எத்தனையோ முறை அவனை நோக்கி சென்ற போதும் அவன் ஒரு முறை கூட கொஞ்சமும் கருணை காட்டினான் இல்லை. அவனை மனதில் சுமந்து கொண்டும் பல்லவியை மடியில் சுமந்து கொண்டும் சுவற்றில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தாள் வாஹிணி. வீம்பாக தனது அறையை நோக்கி சென்ற ப்ரித்விக்கும் உறக்கம் மருந்துக்கும் வரவில்லை. தனிமை எதை எதையோ நினைவு படுத்த, ஒரு நாளும் இல்லாமல் இரவின் அந்தகாரம் அவனை கிட்ட நெருங்கி வருவது போல் தோன்ற, சிறு வயது ஞாபகங்கள், இளமைக் காலத்து அப்பாவின் உருவம், நேற்று இரவு அம்மா கூறக் கேட்ட கதைகள் என எல்லாம் ஒன்று சேர்ந்து வந்து தன் கழுத்தை நெறிப்பதைப் போல் தோன்ற அதற்கு மேல் அந்த தனிமை தாங்காமல் மெல்ல படியிரங்கி மீண்டும் கூடத்துக்கு வந்தான் அவன். ஆரு இன்னும் சுவற்றில் சாய்ந்த படி அமர்ந்து அம்மாவோடு பேசிக் கொண்டு இருந்தாள். அம்மாவும் அதே வண்ணம் அமர்ந்திருக்க பல்லவி அனைத்தும் மறந்து அம்மாவின் மடியில் சுகமாக படுத்திருந்தாள். நேரம் நள்ளிரவு 1:45 எனக் காட்டியது. ஏதோ எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டதாயும் கடைசியில் அவன் மட்டும் அனாதையாய் நிற்பது போலவும் தோன்றி அவனுக்கு கண்ணைக் கரித்தது. கலங்கிய கண்களோடு ப்ரித்வி படி இறங்கி வருவதைக் கண்ட வாஹிணி தன் கைகள் இரண்டை அவனைப் பார்த்து நீட்டி 'வா' என்பது போல அவனை அழைத்தாள். அவன் தன் தாயை நோக்கி வருவதை ஆருவும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். நேராக நடந்து வந்தவன் வாஹிணியிடம் செல்வதற்கு மாறாக ஆருவின் மடியில் வந்து தன் தலையை சாய்த்து தன்னை சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டான். அம்மாவுக்கு ஒரு புறம் ஏமாற்றமாயும் இன்னொரு புறம் சந்தோஷமாயும் இருந்தது. கொஞ்ச நேரம் பேசாமல் கண் மூடி இருந்தவன் மடியில் படுத்தவாறு அவள் கைகள் இரண்டை எடுத்து தன் தலை மேலே வைத்துக் கொண்டு அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து "ஒரு பாட்டு பாடு ஆரு" என்றான். அவள் பாடினாள். அவன் நிம்மதியாய் உறங்கினான்.

பால் கொடுத்த நெஞ்சிலே
ஈரம் இன்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro