13.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கைகளில் விலங்கு பூட்டப்பட்டு இருக்க அதனை பார்த்தவாரே அமைதியாக படுத்திருந்தார் பாஹீ.. அன்பின் மறு உருவமாய் திகழ்ந்த தன் தாயின் இந்நிலையை பிள்ளைகளால் காண சகியவில்லை..

உதயன் மெதுவாக " அம்மா" என்றழைக்க அவர் கண்களில் வழிந்த கண்ணீர், தற்போது இருப்பது ஈஸ்வரி என்பதனை உணர்த்த புன்னகையோடு அவரை நெருங்கி உதயனும் விசாகனும் ஆளுக்கொருபுறம் அமர்ந்தனர். என்னைப் பற்றி அனைத்தையும் அறிந்து விட்டீர்களா.. நான் பாவி என்பது உங்களுக்கும் தெரிந்து விட்டதா என்பதுபோல அவர் பார்வை இருந்தது.. 

" நான் பைத்தியமா கண்ணா " என பாவமாக அவர் கைவிலங்கைக் காட்டிக் கேட்க, அதனைக் கேட்ட பிள்ளைகளின் நிலையை சொல்லவா வேண்டும்.. மனதின் வலியை அளவிடும் கருவியை யார் கண்டுபிடிப்பது.. இந்த வலியை அனுபவித்திடக் கூடாது என்பதற்காகத்தான் வாசு ஓடிவிட்டான் போலும்..

" அத்தை உங்களுக்கு ஒன்னுமில்ல..பிரசர் அதிகமானதால மயங்கிட்டிங்க " என்ற விசாகனின் நடுங்கிய குரல் ஒன்றே போதுமே அவனின் வலியைச் சொல்ல.

" விசு.. உங்க மாமா இந்த நிலை எனக்கு வரக் கூடாதுன்னு தான எனைய விட்டுட்டு போனாரு.. இப்போதான் நான் முழு பைத்தியமா மாறிட்டேன்ல இனியாவது அவர எங்கிட்ட வரச் சொல்வியா" என்றவரது குரலில் வருத்தத்தைக் காட்டிலும் அவர் இங்கிருக்கிறாரா என்கிற ஆர்வம் அதிகமாகத் தெரிந்தது..

" அம்மா அப்படினா அவர் செஞ்ச தப்பையெல்லாம்  மன்னிச்சி ஏத்திக்கப் போறீங்களா.. கணவனே கண் கண்ட தெய்வம்னு அவர் உங்கள விட்டு போன பின்னாடி கூட அவர வெறுக்காம திரும்பவும் அவரோட வாழ நினைக்கிறீங்களா..வேணாம்மா அவர் " என உதயன் பேச்சை ஆரம்பிக்க பாஹீயின் முகபாவம் மாறத் துவங்கியது... சிவந்த அவர் கண்களை கண்டபின் தன் பேச்சை நிறுத்தினான் .

யாரிடமும் பேசாது தன் பலம்  கொண்டு அந்த விலங்கை உடைக்க முயல, பாஹீயை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இரஞ்சித், அவர்களுக்கு மீண்டும் மயக்க மருந்தைச் செலுத்தினான்.

" உதயன் கொஞ்சம் அவுங்க நிலைய புரிஞ்சிட்டு இனிமே எதையும் பேசுங்க..அவுங்களுக்கு அதிகமா மயக்க மருந்து கொடுத்துட்டே இருந்தா அது பக்கவிளைவுகள ஏற்படுத்தும். அவுங்கள இப்படி அடிக்கடி கோபப்படுத்தறது போல நடந்துக்காதீங்க.. " என்றதும் தனது தவறை உணர்ந்தவன் அவனிடம் மன்னிப்பைக் கேட்டு வெளியேறிவிட விசாகன் அவனை சமாதனப்படுத்துவதற்காக கூடவே சென்றான்.

உதயனுமே ஏதோ அவசரத்தில் பேசிவிட்டோனே ஒழிய தனது தாயும் தந்தையும் சேர்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லைதான்.  ஆனால்  பாஹீ எடுத்த உடனே அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ள நினைப்பதை தனது தாயின் நிலை அறிந்தும் அதனை முட்டாள்தனமாகவே கருதினான்.. அதனால் தன் தாய் எடுத்ததெற்கெலாம் கோபப்படுவார் எனத் தெரியாது பேசி விட்டான்.

அவன் சென்றதுமே வாசு உள்ளே வந்து வலியோடு பாஹீயையே பார்த்திருக்க,
" வாசு சார்.. அவுங்க நிலைல உங்கள பார்த்த பிறகு நிறைய முன்னேற்றம் தெரியுது.. தன்னுடைய குடும்பத்துமேல வெச்சிருந்த பாசத்தையும் மீறி அவுங்களோட கணவனான உங்களை தேட ஆரம்பிச்சிருக்காங்க.. அதனால இனி பயப்படாம உங்க மனசில இருக்கறத எடுத்து சொல்லி அவுங்கள நார்மல் ஆக்குங்க..அது தான் அவுங்க மனச அமைதிப் படுத்தும்.. குறி்ப்பா உங்க பேச்சுல எக்காரணத்தைக் கொண்டும் தேவாவைப் பற்றியோ இவுங்க குடும்பத்த பத்தியோ பேசாம, முழுக்க முழுக்க உங்களப்பத்தி மட்டும் நினைக்க வைக்கிற மாதிரி அவுங்ககிட்ட பேச்சுக் கொடுங்க.. அவுங்களுக்கு கம்மியான டோசேஜ் தான் மருந்து கொடுத்திருக்கேன்..மயக்கம் சீக்கிரம் தெளிஞ்சிடும் " என்றவன் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிவிட்டு " ஆல் தி பெஸ்ட் " என்று வாழ்த்தி கதவை சாத்தி விட்டும் சென்றான்.

கைவிலங்கை விடுவித்தவன் தன்னவளின் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்..
எவ்வளவு துடுக்கான பெண் இன்று எப்படி படுத்திருக்கிறாள்.. மஞ்சள் மதி முகம் பேருக்கும் ஜீவன் இல்லாது வெளுத்துப் போயிருந்தது..அவள் சிரிப்போடு சேர்ந்து ஜொலிக்கும்  ஒற்றைக் கல் மூக்குத்தி அவளது சிரிப்போடு தானும் காணாது போக, அதன் அடையாளமாய் சிறு புள்ளியாய் வெறும் தளும்பு மட்டுமே அந்த மாசற்ற முகத்தில் இருந்தது, மயக்கத்தில்
கூட புருவங்கள் முடிச்சிட்டு ஏதோ யோசனையோடு இருப்பது போலவே காட்சியளித்தது.. அவள் அணிந்திருந்த
வெண்ணிற ஆடையில் ஆங்காங்கே சில இரத்தத்திட்டுகள் கரையாய் படிந்திருக்க,அவள் கணவனின் இரத்தமே அவளது அமங்கல ரூபத்தை மங்கலமாய் மாற்றியிருந்தது..

பாஹீயின் தலையை ஆருதலாய் வருடியவன் நெற்றியில் தனது இதழைப் பதித்து விட்டு அவள் தலையின் மீது தலை வைத்து அப்படியே அமர்ந்து வாய்விட்டு கதறி விட்டான்.. எந்த கணவன் தன் மனைவியை இந்நிலையில் கண்டு திடமாக இருப்பான்.

" பாஹீ போதும்டி..பைத்தியக்காரி எழுந்திரு....எப்போடி நாமளும் மத்தவங்க மாதிரி சந்தோசமா இருக்கறது.. என்னமோ எங்கூட நூறு வருசம் சந்தோசமா வாழனும்னு சொல்லிட்டே இருப்பியே.. ஏன்டி உனக்கு இந்தக் கோலம்..போதும்டி.. என்னால உனைய விட்டு இருக்க முடியலடி.. உன்னோட அன்பும் அரவணைப்பும் மறுபடியும் எப்போ கிடைக்கும்னு மனசு துடிச்சிப் போய் கிடைக்குதுடி.. நான் தைரியமா கெத்தா இருந்தாத்தான் புடிக்கும்னு சொல்லுவ..நீ இல்லாத இந்த கருப்புச் சட்டைக்காரனுக்கு தைரியம்னா என்னனே மறந்தே போயிடுச்சுடி.. நீதான் என்னோட தைரியம்.. என்னோட நம்பிக்கை..என் ஆசை..வாழ்க்கை எல்லாமே..
எங்கூட வந்துடு கண்ணம்மா..  இப்படி பிரிஞ்சு வாழறதுக்கா நீ எனைய துரத்தி துரத்தி காதலிச்ச..என்னை பார்த்தா உனக்கே பாவமா தெரிலயா.. என்னை எல்லோரும் துரோகி மாதிரி பாக்குறாங்கடி..
அவுங்க எல்லோர்கிட்டயும் சொல்லுடி.. என் கருப்புச் சட்டைக்காரனுக்கு உன்னை விட்டா வேற எதுமே தெரியாதுன்னு.. நான் எந்த தப்பும் செய்யலைன்னு.. என் மேல நம்பிக்கை இருக்குனு.. நீ என்னை நம்புனா போதும்டி.. எனக்கு வேற எதுமே வேணாம்..

நான் சொன்ன காரணத்துகாக கோபமே படாம இருந்தியே  இப்பவும் நானே சொல்றேன்.. எல்லாத்தையும் மறந்துட்டு நாமளும் சந்தோசமா வாழலாம்மா.. நீ நான் நம்ப பசங்க நம்ப பொண்ணு எல்லோரும் ஒரே குடும்பமா சந்தோசமா வாழலாம்டி..ரோகிணி பாப்பா பாவம்டி..தாய்ப்பாசம்னா என்னனே தெரியாம வளர்ந்துட்டா.. நாமதான் அவளையும் பாத்துக்கனும்..ராஜிக்கு பொண்ணுனா நமக்கும் பொண்ணுதான்டி..
விச்சுவ எப்படி வேறயா நான் பாக்குறது இல்லையோ அதேமாதிரி தான்டி பாப்பாவும்.. அவளும் நமக்கு வேணும்டி..
எல்லோருமே உன் இரத்தம்டி.. அதைப் புரிஞ்சிக்கோ..நாம யாரையும் பழி வாங்க வேண்டா. தண்டனை கொடுக்க வேணா..நாம நம்ம வாழ்க்கைய மட்டும் வாழலாம்டி.. நான் சொன்னா கேட்பல்ல.. தூங்குனது போதும் எழுந்துக்கோடி.. இல்லைனா உன்ன இப்பவும் மதுரை வீரன்மாதிரி தூக்கிட்டு போயிருவேன் பாஹீ..எழுந்து வந்துருடி.. உண்மையா இப்போ நீ இல்லாம எனக்குத்தான் பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு பாஹீ.. " எனத் தன் பாட்டிற்கு அழுதவாரே பேசிக் கொண்டிருக்க தற்போது தான் கவனித்தான் பாஹீ அவன் வயிற்றில் தலைப்புதைத்து தன் கைகளால்  அவன் இடுப்பை சுற்றியவாறு படுத்துக் கொண்டிருப்பதை..

"பாஹீ " என அவன் இன்னும் சத்தமாய் கதற ஆரம்பிக்க அவளும்  அழுக ஆரம்பித்தாள்..
" வாசு... என்னை விட்டு போகாத வாசு..வாசு.. வாசு..வாசு..போவாத.. "

" நான் எங்கையும் போவலடி.. "

" போ மாட்டேன்டி "

" நீ பொய் சொல்றடா..நீ என்னை விட்டு போயிருவ.. "

" நீதான்டி எனைய போக வெச்ச"

" நான் அப்படி சொன்னா நீ என்னை விட்டு போயிருவியாடா.. என் கன்னத்துல நாலு அரை விட்டு எனக்கு புத்தி சொல்ல மாட்டியா.. " என்றவள் தனது மனதில் இருபத்தி மூன்று வருடங்களாய் பூட்டி வைத்திருந்த தனது மனக்குமறலை தனது வாசுவிடம் கதறலாய் கூற ஆரம்பித்தாள்.

" ஏன் வாசு எனைய விட்டுட்டு போன.. நீயில்லாம நான் எவ்ளோ கஷ்டப்படுவேன்னு தெரிஞ்சும் ஏன்டா பெரிய இவனாட்டம் போன.. நான் பைத்தியம்னு உனக்குத் தெரியுமா தெரியாதா.. பைத்தியம் தப்பு பண்ணா தண்டனை இல்லைன்னு தெரிஞ்சும் எனக்குமட்டும் ஏன்டா இத்தனை வருச தண்டனை.. நீ கட்டுன தாலிய எங்கையாலயே அவுக்க வெச்சிட்டல்ல..அந்தப் பாவத்துக்கு தான் எனக்கு இந்த தண்டனையா.. என் அன்ப உன்ன மாறி வார்த்தையால நிரூபிக்க தெரிலடா எனக்கு.. நீ தான்டா என் உலகம்.. நீ எனக்கு சுலபமா கிடைச்சிட்டேனு தான சுலபமாவே எனைய விட்டுட்டு போயிட்ட.. நீ இன்னைக்கு வந்துர மாட்டியா.. நாளைக்கு வந்தர மாட்டியானு நாட்கள கடத்த தெரிஞ்ச எனக்கு உனைய பார்த்த உடனே என்ன பண்ணனும்னு தெரிலடா.. எனக்கு மட்டும் ஏன்டா இந்த வியாதி.. எனக்கு எதுக்குடா இவ்ளோ கோபம் வருது.. சொல்லு ஏன் இந்தக் கோபம் வருது.. " என இதுவரை அழுகையாய் பேசிக் கொண்டிருந்தவள் உண்மையாகவே கோபப்பட்டு எழுந்து அவன் சட்டையைப் பற்றினாள்.. அப்போதுதான் அவனது சட்டையைப் பார்த்தவளது மனம் தானாக அமைதி அடைந்தது..

ஆசையாக அவன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தவள் அவனைப் பார்த்து " நாம கல்யாணம் பண்ணிக்கலமா வாசு " என்று பாவமாக கேட்க, உருகிப் போனான் அவன்..
அவள் கண்களையே பார்த்திருந்தவன்
" எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லடி..ஆனா நம்ம பையன் சம்மதிப்பனானு தெரிலயே " என விளையாட்டாகச் சொல்ல, அவள் மனதில் இவ்வளவு நேரம் மறந்து போயிருந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.. முகமும் கண்களும் செந்நிறம் பூசியது போல மாற, அவனை விட்டு விலகியவள்
" வாசு என்னை விட்டு போயிரு.. நீ என் கூட இருந்தா நானே உன்னை கொன்றுவனோனு பயமா இருக்கு.. போயுடு " என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இவ்வளவு நேரம் அவனிடத்தில் தோன்றிய மகிழ்ச்சி கானல் நீராய் போக, நம்ப முடியாது அவளையே பார்க்க
" போ வாசு.. உன்னைப் பாக்கும் போது எனக்கு உனைய கொல்னும் போல தோணுது..எம்மனசுக்கு தெரியுது நீ என் வாசுன்னு..ஆனா உண்மை என் கண் முன்னாடி நிக்குதே.. ராஜியோட பொண்ணுதான் முக்கியம்னு எனைய விட்டு போனதுகூட எதுனால.. நீ தேவாங்குறனால தான"

" இல்ல என் வாசுக்கு என்னை தவிர வேற எந்தப் பொண்ணு கூடயும் ஒழுங்கா பேசக் கூட தெரியாது.. அவன் தப்பு பண்ணி இருக்க மாட்டான்.. அப்போ நீ யாரு.. சொல்லு நீ யாரு " என கத்த,
வாசுவும் பொறுத்துப் போனது போதும் என  அதே குரலில் .
" நான் யாருன்னு உன் மனசக் கேட்டுப் பாருடி..அது சொல்லும்.. " என்றவன் அவளை நெருங்கி வந்து " என்னடி சொல்லச் சொல்ற, நான்தான் நான் தெய்வமா நினைச்ச என் ஐயாவ, என்னோட உயிர் நண்பன, கூட பொறக்கலைனாலும் என்மேல மதிப்பு மரியாதை வெச்சு சொந்த அண்ணனா நினைச்ச அந்த வாயில்லா பூச்சி ரேவதிப் பொண்ணை எல்லாத்தையும் நான் தான் கொன்னனு சொல்லச் சொல்றியா.. சொல்லுடி..எதைடி சொல்லச் சொல்ற " பாஹீயின் திமிறலை மீறியும் அவளைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன்

" உம்மனசில எம்மேல நம்பிக்கை காதல் எல்லாம் வெச்சிருந்தா மட்டும் போதாது..அத சரியான நேரத்துல காட்டனும்.. சொல்லுடி நான் என்ன மிருகமா.. என்னை சேர்ந்தவங்களையே கொல்ல.." என உறுமியவன்
" அந்தப்புள்ள ராஜி என்னடி பண்ணுச்சு..நீ எம்மேல வெச்சிருந்த நம்பிக்கைய உன் குடும்பம் அவமேல வெச்சிருந்தா அவ செத்திருப்பாளா..உனக்கு தங்கச்சினா எனக்கும் தங்கச்சி தானடி..அதைக் கூட புரிஞ்சி்க்க மாட்டியா நீ " என்ற வாசு அவளது கையை உதறிவிட்டு திரும்பி நின்று கொண்டான்..

பாஹீ அவன் முதுகையே விறைக்க பார்த்துக் கொண்டிருக்க " என்னால முடியலன்னு அப்பவே சொன்னேனே பாஹீ..அது உனக்கு புரிலயா.. இப்போ என்ன என் உசுரு தான வேணும்.. தேவாவா எனைய நினைச்சிக்கிட்டு என்னை கொன்னுடு.. நீயாச்சும் நம்ப பசங்களோட சந்தோசமா இரு " என்றவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து விட்டான்.. அவன் பேசுவது அவளுக்கு வலிக்கும் என்று அவனுக்கும்தான் தெரியும்.இருந்தும் அவள் அந்த மாயவலையிலிருந்து விடுபட அவன் கடுமையாகத்தான் நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது..

பாஹீக்குள்ளும் ஆயிரம் போராட்டங்கள்..அதற்கு அவளது உடல்நிலையும் ஒத்துக் கொள்ளவில்லை.. ஒரு மனம் அவனது வயிற்றைக் கிழித்து குடலை உருவ வேண்டும் என ஆணையிட இன்னொரு மனமோ அவன் மார்புக் கூட்டுக்குள் தஞ்சம் புகுந்து கொள் என ஆணையிட்டது.. இரண்டில் எதன் பேச்சைக் கேட்பது..
தன் கண் முன்னே அமர்ந்திருப்பது தனது கணவனா..இல்லை அந்தக் கயவனா என்று குழம்பிப் போனவள் அந்த ருத்ர கோபத்திலும் அவனது கண்களில் வழியும் கண்ணீரைக் காண சகியாது அவளும் அவன் முன்னே அமர்ந்து விட்டாள்..

தற்போது அவள் கண்களுக்கு அவன் அவளது கருப்புச் சட்டை காதல்காரன் மட்டுமே..தன்மீது அளவில்லா காதலை வைத்திருக்கும் அவனது வாசு மட்டுமே.. அவனது மார்பில் தஞ்சம் புகுந்து
"  வாசு.. " என பெருங்கூவலெடுத்து கத்தியவள் அவன் நெஞ்சாங்கூட்டில் அடங்கிப் போனாள்.. அவளை அவனிடமிருந்து வாசுவால் கூட விலக்கமுடியவில்லை.. அவளது பிடியில் அத்தனை இறுக்கம்.. அவள் உதடுகள் வாசு என்றே ஜெபித்துக் கொண்டிருக்க அவனும் அவளை இறுக்கிக் கொண்டான்..  இங்கே இருபத்தி மூன்று வருட கால பிரிவு முடிவுக்கு வந்து சேர்ந்தது.. அவனுக்கு இந்த ஆனந்தம் நிரந்தரமா என்று தெரியாவிட்டாலும் அந்த நொடியில் அவன் மட்டுமே இவ்வுலகில் மிகுந்த மகிழ்ச்சியான மனிதன். தனது பாஹீ தன்னுடன் முழு மனதோடு சேர்ந்து வாழும் நாள் மிகுந்த தூரம் இல்லை என்று சந்தோச வானில் பறந்து கொண்டிருந்தான் அவன்.
பாஹீயும் தன் கூட்டிற்கு வந்து சேர்ந்த பறவையை போல இத்தனை வருட தூங்கா இரவுகளின் கொடுமைகளை எல்லாம் தோற்கடித்து தனது மன்னவனின் நெஞ்சினை பஞ்சணையாக்கி நித்திராலோகத்திற்கு சென்றுவிட்டாள்.நடந்த நிகழ்வுகளால் அவள் மூளை சோர்வடைந்ததோடு ஒருவித நிம்மதியும் பிறக்க அவளை தூக்கம் ஆட்கொண்டுவிட்டது. அவனும் அவள் தன் கைவளைவிற்குள் இருந்தாலே போதும் என எண்ணி தரையில் அமர்ந்தவண்ணம் அவளைத் தாங்கிப்பிடித்திருந்தான். அவளது தூக்கம் கலைந்த பின் அவள் இதேபோல இருப்பாளா என்பது அவனுக்குமே சந்தேகம் தான்..அதனால் இருக்கும் நொடிகளை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

விசாகன் உதயனைப் பின் தொடர்ந்து செல்ல, உதயனோ தவறு செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியில் நொந்தபடி நடந்து கொண்டிருந்தான்.. உதயன் திரும்பும்போது வேகமாக வந்த ஒருவன் அவனைத் தெரியாமல் தள்ளிவிட, புதியவன் அவனிடம் மன்னிப்பைக் கேட்டு அவன் முகம் நோக்க, அதிர்ந்துதான் போனான் அவன்.. அந்த அதிர்வு ஒரு நொடி மட்டுமே..தன்னை சுதாரித்துக் கொண்டு வேகமாய் அவனைக் கடந்து செல்ல ஆரம்பித்தான்.. அவன் பின்னால் வந்த விசு உதய் கீழே விழப் போகிறான் என்ற பதற்றத்தில் அவனை நெருங்கிய நேரம் அந்தப் புதியவனைக் கண்டு கொண்டான்..

" உதயா..அவனை பிடி..அவன்தான் தேவா " என்று கத்தியபடியே அவர்களை நோக்கி ஓடிவர உதயனும் சூழ்நிலை அறிந்து தேவாவை பிடிக்க அவனை நோக்கி ஓடினான்..

தேவாவை இவர்கள் பிடித்துவிடுவார்களா..
தூங்கி எழுந்த பாஹீயின் நிலை என்னவாக இருக்கும் என்பதை அடுத்த பதிவில் காண்போம் மக்களே..
( என்னப்பா கதை கொஞ்சம் போரிங்கா போகுதா.. நீங்க நினைக்கறத பகிர்ந்துக்கங்கபா.. அப்போதான் என்னாலையும் அதை தெரிஞ்சிக்க முடியும் )☺️☺️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro