6.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வாசுதேவனின் வண்டிச் சத்தம் கேட்டதும் வெளியே வந்தனர் விசாகனும் உதயனும்.. தன் நினைவுகளில் நிறைந்திருந்த கருப்பு வெள்ளைப் படங்கள் வண்ணங்களாய் உருப்பெற்று அவன் எதிரே வந்து கொண்டிருந்தது.. அதனூடே தாயின் நினைவும் வர, தன் மோன நிலையை கலைத்து வாசுதேவரை தன் பார்வையால் சுட்டெரிக்க முயற்சித்தான் உதயன்.

தந்தையின் கண்களிலோ தன் தணயனைப் பார்த்த பிரமிப்பு மட்டுமே இருந்தது.. அவரைக் கண்டதும் வெட்டி எறிந்துவிடும் ஆத்திரத்தில் இருந்தவனோ அவர் பார்வையின் தீட்சண்யத்தை தாங்க இயலாது பார்வையை திருப்பிக் கொண்டான்.  வாசுதேவன் அவர்களை " உள்ள வாங்க " என்றழைக்க,

அவர் சட்டையைப் பற்ற நினைத்து முன்னேறியவன் அவர் முகம் பார்த்ததும் அவ்வாறு செய்ய முடியாத தன்னையே மனதினுள் திட்டிக் கொண்டு

" என்ன நினைச்சிட்டு இருக்கிங்க நீங்க.. நாங்க உங்க வீட்ல உக்கார்ந்து விருந்து சாப்பிட வந்த மாதிரி உபசரிச்சிட்டு இருக்கிங்க. நான் எங்கம்மாவுக்கு நீங்க பண்ண துரோகத்துக்கு நியாயம் கேட்டு வந்துருக்கேன்" என்றதும்  இதுவரை தன் மகனைக் கண்ட ஆனந்தத்தில் இருந்தவருக்கு நிசர்சனம் புரிய, அவர் உதட்டில் இருந்த சிரிப்பு உறைந்தது.

"எல்லா பாவத்தையும் பண்ணிட்டு இப்படி எதோ ஒரு கிராமத்துல நல்லவர் வேசம் போட்டுக்கிட்டு இங்கிருக்கவங்களையும் ஏமாத்திகிட்டு, கட்டுன பொண்டாட்டியும் பெத்த பையனும் எப்படி இருக்காங்கனு கூட கவலைப்படாம நீங்க மட்டும் உங்க பொண்ணோட சந்தோசமா இருக்க எப்படி உங்களால முடியுது...

எப்பேர்பட்ட கேடு கெட்டவனா இருந்தா கூட தன் மனைவிய அந்தக் கோலத்துல பார்த்துட்டு இந்தமாதிரி நிம்மதியா இருக்க மாட்டான்.. இருக்கவும் முடியாது.. அதெல்லாம் நினைக்கும் போது நீங்க மனுசன்தானானு எனக்கு சந்தேகமா இருக்கு. சரி விடுங்க.. எனக்கு அதெல்லாம் தேவை இல்லாத விசயம்.. நான் இங்க வந்தது.. உங்கள இங்கிருந்து கூட்டிட்டு போயி எங்கம்மா கிட்ட மன்னிப்புக் கேட்க வைக்கத்தான்..எந்த வம்பும் பண்ணாம எங்கூட கிளம்புங்க.. " என தன் மனதில் உள்ளதை கூற,

அவன் பேசி முடிக்கட்டும் என்று பொறுமையாக இருந்தவர்

" என்னால வர முடியாது " என்று மறுத்தார்.

" ஏன் வர முடியாது " என்று மகன் எகிர,

தன்மையாகவே

" அதை என்னால சொல்ல முடியாது." என்றார்.

" நான் சொல்ல வைப்பேன் "

சிரித்துக் கொண்டவர்

" அதையும் பார்க்கலாம்" என்றார் புன்னகையோடு,

அவர் சிரிப்பில் சினம் கொண்டு

" பார்க்கத் தானே போறீங்க " என்று அவரை நெருங்கினான்.
தந்தை மகன் சண்டை முற்றிப் போய் அவன் வாசுவின் சட்டையைப் பற்றப் போக, இதுவரை பார்வையாளனாக இருந்த விசாகன் உதயனை தடுக்க நினைத்து உதயனின் தோளைப் பற்ற, அவனைத் தட்டி விட்டு வாசுவை நெருங்கினான்..

சரியாக அந்த நேரம் உத்ராவின் " ரோகிணி " என்ற அலறல் வீட்டிலிருந்து கேட்க, உதயன் இருந்த நிலையில் அவன் காதில் விழாது  தன் சண்டையை தொடர, வாசுவோ

ரோகிணிக்கு என்னவானதோ என்ற பயத்தில் உதயனைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்..

ரோகிணியை சமையலறைக்கு அழைத்துச் சென்ற அப்பத்தா அவளை உட்கார வைத்து

" இங்கன பாரு தாயீ.. உங்கப்பன் இதுநாள் வரை அவனப் பத்தியோ உன்னைய பத்தியோ எதுவுமே உங்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லி வெச்ச நாளதான் எதுமே உங்கிட்ட சொல்லாம இருந்தேன்.. இப்போதான் உரிமையானவங்க வந்துட்டாங்கல.. நீ ஒதுங்கிக்கறதுதான நியாயம் இராசாத்தி " என பதார்த்தமாக  ஆரம்பிக்க,

உத்ரா " பாட்டி.. என்ன இருந்தாலும் ரோகிணியும் உங்க பையனோட இரத்தம் தானே " என குறுக்க பேச வர,

" நீ எவடி அவ.. என்ற பேரங்கூட வந்தனால தான் உனைய உள்ளார விட்டேன்..இவளுக்கு பதுசா பேசறதுன்னா வாயை மூடிக்கிட்டு அப்பால உக்காரு.. அதான் ராசா மாதிரி அவனோட சொந்த ரத்தம் என் பேரான்டி வந்துட்டானே..  " என உத்ராவை மிரட்ட

" ஹேய் சூனியக்கார கிழவி..பழமொழிலா சொல்லி அவளுக்கு ஆறுதல் சொன்னதும் உன்னை ஒரு நிமிசம் நானே நல்லவங்கனு நினைச்சிட்டேனே.. அவள இப்படி நயமா பொய் பேசி தொறத்தி விடறாதுதான் உங்க திட்டமா?"

" அடியேய்.. எனக்கு நீ சொல்ற திட்டமெல்லாம் போட தெரியாதுடி.

என்ன சொன்னாலும் இவதான் ஊர்க்குருவி.. எம்பேரன்தான் பருந்து.. இவ ஆத்தா ஒன்ட வந்தவதானடி.. என் பையனோட பொண்டாட்டி இல்லையே " என உத்ராவிடம் கூறிவிட்டு

ரோகிணியின் தலையை ஆதரவாக வருடி..

" நான் சொல்றத நல்லா கேட்டுக்க  இவளே.. எம்பையன் வந்தா அவன எம்பேரங்கூட தாட்டி உட்டுரு.. அவன் உன்னைய கட்டாயம் கூப்பிடுவியான் தான்.. ஆனா நீ அவங்கூட போகக் கூடாது.. உன்னைய இத்தன நாள் வளர்த்ததுக்கு இதை ஒன்னும் மட்டும் பண்ணுடி ஆத்தா.. உனக்கு புண்ணியமா போயிடும் . " என்று கெஞ்சலாக அவர் கேட்டு வைத்தார்.

பிறந்ததிலிருந்து தந்தை என நினைத்துக் கொண்டிருந்தவர் தன் தந்தை இல்லை என்ற உண்மையையே ஏற்றுக் கொள்ள முடியாது உள்ளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து மனசாட்சியே இல்லாமல் அவரை விட்டு போக சொன்னால் அவள் தாங்குவாளா..

இத்தனை நாள் தன் அப்பத்தா தன்னை திட்டினாலும் அதில் வார்த்தைக்கு வார்த்தை உங்கப்பா..உங்கப்பா என்று சேர்த்து வைத்து சொன்னதாலயே அவர் என்ன பேசினாலும் பொறுத்து அமைதியாக போவாள்.. ஆனால் இன்று அவர் பேச்சில் மருந்துக்கும் தன் பேத்தி என்ற உரிமை இல்லையே என மனம் அடைக்க அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள் " சரிங்க அப்பத்" என்று அப்பத்தாவை கூட சொல்ல மனம் வராமல் அழுது கொண்டே தலையாட்டி விட்டு கத்தியை எடுத்துக் கொண்டு தன்னறைக்குள் ஓடி கதவை தாளிட்டுக் கொண்டாள்.

அப்பத்தாவை முரைத்துக் கொண்டிருந்த உத்ரா ரோகிணி கத்தியினை எடுத்துக் கொண்டு ஓடியதில் அவளைப் பிடிக்க பின்னாலே ஓடியவள் அது முடியாது போக " ரோகிணி " என்று கத்திய படியே கதவைத் தட்ட ஆரம்பித்தாள்.

அவள் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த வாசுவிடம் " அங்கிள் ..ரோகிணி..கத்தி." என பதறியபடியே கூற கதவைத் திறக்க முயற்சி செய்து கொண்டே" பாப்பா   .. அப்பா வந்துட்டேன்..கதவை தொறடா.. அப்பா சொன்னா கேட்பல்ல " என கெஞ்சிக் கொண்டிருந்தார்.

தேக்கு மரக் கதவு உறுதியாக இருந்ததால் பலசாலியான அவராலும் திறக்க முடியவில்லை.. சத்தம் கேட்டு ஓடி வந்த விசாகனும் சேர்ந்து முயற்சிக்க அது அசைவேணா என்றிருந்தது. 

விசாகன் " டேய்... உதயா.அங்க என்னடா பார்த்துட்டு நிக்கற.. வா..வந்து ஹெல்ப் பண்ணு " என்றழைக்கவும், கோபத்தால் சூழலை அறியாது நின்று கொண்டிருந்தவன் சுயநினைவு பெற்று கதவை உடைக்க உதவி செய்தான்..

மூன்ற பேரும் சேர்ந்து முயற்சிக்க நான்காவது தள்ளலில் கதவு திறந்து கொண்டது...  பதறி அடித்துக் கொண்டு  உள்ளே நுழைந்தவர்கள் கண்டது, கையினை அறுத்துக் கொண்டு இரத்த வெள்ளத்தில் தரையில் மயங்கிக் கிடந்த பெண்ணவளைத்தான்..

" பாப்பா " என்று அலறிக் கொண்டு அவளை தூக்கிக் கொண்டு வாசு வெளியே வர, விசாகன் வெளியே நின்றிருந்த தன் காரை உயிர்பித்து வாசல்புறம் கொண்டு வந்து நிறுத்தினான்..

விசாகன் வண்டியை ஓட்ட, உதயன் அவனுடன் முன்னிருக்கையில் அமர்ந்து பின்னாலே பார்த்துக் கொண்டு வந்தான்.

உத்ராவின் மடியில் ரோகிணி தலைவைத்துப் படுத்திருக்க, வாசு தன் மகளுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார்..  காயம் ஆழமாக இருக்க, இரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது..

" பாப்பா பாப்பா " என்று அவர் கதறிய கதறலைக் கண்டு வானம்  கூட கண்ணீர் வடிக்க ஆரம்பித்திருந்தது. அடுத்த பதினைந்து நிமிடங்களில் நகரத்தின் பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் ரோகிணி..

தற்கொலை என்பதால் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூற, அந்த வழிமுறையை, வாசுவின் நிலை அறிந்து விசாகன் செய்து கொண்டிருந்தான்.

வாசுவும் உத்ராவும் அவசர சிகிக்சைப் பிரிவையே பார்த்திருக்க

உதயன் தன்னால்தான் இப்படி ஆனதோ என்ற குற்றவுணர்வில் தகித்துக் கொண்டிருந்தான்.

மருத்துவர் வாசுவை அழைத்துச் செல்ல, அங்கே தனித்து விடப்பட்டனர் உதயனும் உத்ராவும். அவன் கண் முன்னே, தன்னை அண்ணனென்று ரோகிணி சொன்னது வந்து போக, தன் தாயின் நிலையை எண்ணி வருந்துவதா..தந்தையின் துரோகத்தை எண்ணி வருந்துவதா..இல்லை தனது தந்தையின் மகளின் நிலையை எண்ணி வருந்துவதா என்று தெரியாமல் இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை  கொட்டித் தீர்த்தான்.

தன் தோழியின் நிலையை எண்ணி கவலையில் இருந்தாலும் இவனின் இந்நிலையை காண சகியாது இருக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் அவனருகே வந்து ஆதரவாய் தோள்பற்ற, அதனை பற்றுதலாய் நினைத்தவன் அவள் கையை  கலங்கிய தன் கண்களில் ஒத்தி கரைய ஆரம்பித்தான்.

அவன் முகவாயை உயர்த்தியவள் " உங்க நிலை எனக்கு புரியுது.. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன்.. இன்னைக்கு வாசு அங்கிள் ரோகிணிக்காக எப்படி துடிச்சாரோ அதே துடிப்பதான் உங்கள ஹாஸ்பிடல்ல சேர்க்கும் போதும் நான் பார்த்தேன்... அவர் கண்கள்ள உங்களுக்கான பாசத்தை என்னால உணர முடிஞ்சுது.. அவர் நல்ல மனிதரா, கணவரான்னு என்னால சொல்ல முடியாது..ஆனா தன் பசங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கற நல்ல அப்பா.. அதை புரிஞ்சிக்கோங்க " என்று பொறுமையாக சொல்ல, அவனோ அவள் சொன்னதைக் கேட்டதும் இன்னும் வருந்த ஆரம்பித்தான்... தன் தாயிற்கு துரோகம் செய்து இன்னொரு பெண்ணை ஏமாற்றி மணந்தவரை தந்தையாக ஏற்றுக் கொள்ள அவனால் முடியவில்லை..  அவர் அவன்மேல் பாசம் வைத்திருந்தாலும் அந்த உண்மையை மறுக்க முடியாதே..

" கவலைப்படாதீங்க ..உதயன்.. சீக்கிரமா எல்லா பிரச்சனையும் சரியாயிடும்.. கடவுள் மேல நம்பிக்கை வைங்க " என ஆறுதல் படுத்தினான். அவனுக்கு தற்போது அந்த ஆறுதல் பேருதவியாக இருந்தது.

அப்போது மருத்துவர் அறையில் இருந்து வந்த செவிலிப் பெண் ஒருவர், அவர்கள் அருகே நின்று அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தார்.

" ஹலோ.. செபாஸ்டின்..நான் டீனா பேசறேன்.

ஆமா ஆமா அர்ஜென்ட் தான்.அவசரமா ஓ நெகட்டிவ் பிளட் தேவைப்படுது..

ம்.சின்னப் பொண்ணு.சூசைட் கேஸ்.மணிக்கட்டை ரொம்ப டீப்பா கட் பண்ணியிருக்கா..

உயிருக்கு ஒன்னும் புரோபளம் இல்ல.. ப்ளட் லீக்கேஜ ஸ்டாப் பண்ணியாச்சு..பட் ஹெவி பிளட் லாசேஜ்னால ஒரு யுனிட் மட்டும் தேவைப்படுது..

ஹேய்.. அந்தப் பொண்ணு பாவம்டா..எதோ பேமிலி புராப்ளம் போல..

நம்ம வாசுதேவன் ஐயா இருக்கார்ல அவர் பொண்ணுதான்..

அது எனக்கு தெரியாத.. அவர் பிளட் குரூப் மேச் ஆகல..

மேச் ஆகலைன்னா நான் என்னடா பண்ண முடியும்..

அடேய்.. அந்தப் பொண்ணு அவரோட வளர்ப்பு பொண்ணாம்டா..

ஐயோ அந்த விசயம் தெரிஞ்சதால தான் இந்த சூசைட் அட்டெம்ட்..

சரி சரி சீக்கிரம் வா " என தனது உரையாடலை முடித்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

உதயனுக்கு இதனைக் கேட்டதும் ஏதோ பெரிய ஆபத்திலிருந்து மீண்ட உணர்வு ஏற்பட்டது.. அப்படியெனில் தன் தந்தை நல்லவர்தானா.. தன் அன்னைக்கு துரோகம் செய்யவில்லையா.. அவர்தான் தவறாக நினைத்துக் கொண்டு பிரிந்து விட்டாரா.. அப்படியெனில் தன் தந்தையை அழைத்துச் சென்று தாயிடம் உண்மையைக கூறினால் விரைவில் அவரும் குணமாகி விடுவார் என நினைக்கும்போதே இதுவரை இருந்த சோககீதம் மறைந்து புதுத் தெம்பு கிடைத்ததைப் போல உணர்ந்தான். மகிழ்ச்சியோடு, தான் கரம் பற்றி இருப்பவளை பார்க்க, அவளும் அதே மகிழ்ச்சியோடு தான் அவனை பார்த்திருந்தாள்..

" ரொம்ப தேங்க்ஸ்ங்க " என்று அவன் சொல்ல, அவன் இன்னும் அந்த மரியாதை கலந்த பேச்சை எந்த நிலையிலும் விடமாட்டேன் என்கிறானே என செல்லமாக நொந்து கொண்டாள்.

டீனா சொல்லிய செபாஸ்டின் வந்தவுடன் இரத்தம் பரிமாற்று செய்யப்பட்டது..இன்னும் ஒரு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடுவாள் என்று மருத்துவர் சொன்ன பிறகே அனைவருக்கும் போன உயிர் வந்தது..

விசாகனும் காவலரை அனுப்பிவிட்டு வந்திருந்தான். வாசுதேவன் தன் மகளை அந்நிலையில் காண சகியாது வரவேற்புக்கூடத்திலே அமர்ந்துவிட்டார்.

உத்ரா அவருக்கு ஆறுதலாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

உதயன் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து விசாகன் கண்ணாடி வழியே ரோகிணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தனியறையில் இருட்டிற்கே பயந்து அழுதவள் துணிந்து கையினை அறுத்துக் கொண்டாள் எனில் அவள் மனம் எத்தனை துன்பம் அடைந்திருக்கும் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது..மனம் வலிக்க அவளையே பார்த்திருந்தவன் அவள் கைகள் அசையத் துவங்குவதை அறிந்து உள்ளே சென்றான்.

கண்களை மெதுவாக திறந்து அவள்  எதிரில் இருப்பவனைப் பார்த்ததும் அவள் முகம் பயத்தில் வெளிறியது.. அதைவிட அவனுக்கு தண்டனை எதும் வேண்டுமா.. நெஞ்சம் வலிக்க வெளியே வந்தவன் மருத்துவரிடம் அவள் கண் விழித்ததைக் கூறிவிட்டு உத்ராவிடமும் செவிலியர் மூலம்
தகவல் சொல்லி அனுப்பினான்.

வாசுதேவர் உள்ளே வந்ததும் அவள் உதட்டைப் பிதுக்கி அழுகத் தயாராக " பாப்பா.. நான் உன்னை திட்ட மாட்டேன்டா.. அழுகாத " என ஆறுதல் படுத்தி காயம் அடைந்த அவளது வலக்கையின் விரல்களை மென்மையாக வருடி,
" அப்பாவ தனியா விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படிடா மனசு வந்தது.. அப்பத்தா அப்டி சொல்லுச்சுனா அதை நீ எங்கிட்ட தானடா சொல்லி இருக்கனும்.. இல்லையா அவர் என்னோட அப்பா..நான் அவர விட்டுட்டு எங்கையும் போக மாட்டேனு சொல்லி இருக்கனுமா இல்லையா " என்க,

" சாரிப்பா.. அப்பத்தா உங்கள அண்ணாவோடு போக சொல்ல சொன்னதும்,  என்னால நீங்க இல்லாத உலகத்த நினைச்சுப் பார்க்க முடியலப்பா.. அதான்  நீங்க என்னை விட்டு போறதுக்குள்ள நானே போயிடலாம்னு " ரோகிணி சொன்னதும் தாங்கள் அழுதால் அவள்  உடைந்து விடுவாள் என்பதால் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த வாசு, உத்ராவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது..

ரோகிணியின் கூற்றைக் கேட்டதும் விசாகனும் உதயனுமே கலங்கித்தான் போனார்கள். தங்களது வரவுதானே இதற்கெலாம் காரணம் என்று.

" ஒரு உயிரைப் பறிக்கற உரிமை யாருக்குமே கிடையாது பாப்பா..
என்னோட பாப்பா இல்லைனா இந்த அப்பா இல்ல புரியுதா..இந்தமாறி முட்டாள்தனமான வேலைலாம் கனவுல கூட இனி செய்யக்கூடாது புரியுதா.. " என்றார் சற்று கண்டிப்புடன்.

சரியென்று தலையாட்டியவள் " அப்பா நான் ஒன்னு கேட்டா செய்வீங்களா " என்று எதிர்பார்ப்போடு கேட்க,
" இதுவரை என் பாப்பா கேட்டு அப்பா மறுத்திருக்கனா.. என்ன வேணும் சொல்லுடா " என்றார் வாசு பின் வரும் ஆபத்து அறியாமல்

" அப்பா நீங்க அண்ணாவோடு கிளம்பி போயிடறீங்களாப்பா " என்றாள் சற்று நடுங்கிய குரலில்.. அவர் அதிர்ந்து நோக்க, மற்றவர்களுக்கும் வாசு என்ன பதில் சொல்லுவார் என்று ஆர்வமாக கவனிக்க துவங்கினர்..

" அண்ணா பாவம்பா..எனக்கு அப்பாவ நீங்க இருந்தீங்க..
ஆனா அவருக்கு..
அவரும் அவுங்கப்பாவ மிஸ் பண்ணி இருப்பாங்கதான.. அவுங்களோட போங்கப்பா" என்றாள் கெஞ்சலாக, அவள் கள்ளமில்லா உள்ளம் கண்டு அனைவருமே வியந்து போயினர்.

அவர் இன்னும் தன் மகள் கேட்டதில் அதிர்ச்சியில் இருக்க, " அப்பா நீங்க என்னோட ஹீரோப்பா..நீங்க தப்பு பண்ண மாட்டீங்கனு எனக்குத் தெரியும்.. ஆனா
உங்கள யாரும் குறை சொல்றத என்னால ஏத்துக்க முடியலப்பா..எங்கப்பா எப்பவும் தலை நிமிர்ந்துதான் இருக்கனும்..
உங்க பேர்ல இருக்கற கலங்கத்த நீக்கி்ட்டு என்னைய உங்க மகளா வந்து  கூட்டிட்டு போங்கப்பா.. ப்ளீஸ்.. " என்றவள் உத்ராவிடம் " உதி கொஞ்ச நாளைக்கு எங்கோடயே இருக்கியா.. எங்க அப்பத்தாவ உன்னாலதான் சரிக்கட்ட முடியும் " என்று கூறி விட்டு

" என்னைய உத்ரா பார்த்துப்பா அப்பா..நீங்க கிளம்புங்க.. என்னைய பார்க்கிறதுக்காக வாச்சும் சீக்கிரம் பிரச்சனைய சரி பண்ணுங்கப்பா " என்றவள் உதயனிடம்
" நீங்க நம்ம அப்பாவ கூட்டிட்டு போங்க.. " என்று கூறி, கடைசியாக விசாகனை நோக்கி " இனிமே யாரையும் கடத்தி வெச்சு அடிக்காதீங்க.. பயமா இருக்கும்" என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.

" பாப்பா "

அவள் கண்களைத் திறவாமலே
" அப்பா போயிட்டு சீக்கிரம் வாங்கப்பா " என பதிலளித்தாள். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வரும்போது தைரியத்தையும் கூட்டி வந்திருப்பாள் போல..

தனது மகளின் நெற்றியில் இதழ் பதித்தவர்
அவளின் ஆசையினை நிறைவேற்ற அவர்களுடன் செல்ல சம்மதித்தார் வாசுதேவன்.
மகளின் முன் தந்தையின் பிடிவாதம் தவிடு பொடியானது.

😭😭😭😭😭😭😭 ஒரே அழுகாச்சியா போகுதா..கதை.. இனிமே அப்படிலா போவாது.. இனிமேதான் இந்த மூவேந்தர்களின் ஆட்டம் தொடங்கப் போகுது.. சரியா பிரண்ட்ஸ்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro