பாகம் 10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Published: July21, 2021




மொட்டை மாடியின் இடது பக்கமாய், கட்டிடங்களும், தார் சாலையும் மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை. வானமகளை விட்டு பிரிய மனமில்லாத ஆதவனோ, அவளை தீண்டி சிவக்கச் செய்து விடைபெற ஆயத்தமாகி கொண்டிருந்த கோலம் கண்முன் விரிந்து கிடந்தது, மற்றொரு பக்கத்தில். அந்த ரம்மியமான காட்சியில் தன்னை தொலைத்திருந்தான் விஷ்வா.

"சூரியன் எங்கேயும் போகலை, அது நிக்குற இடத்துல தான் இருக்கு, பூமி பொஸிஷன் மாறுது அதை நாம சூரியன் நகர்ந்து போறதா சொல்லிட்டு இருக்கோம். இதை பிராக்டிகலா தெரிஞ்சும் இப்படி நினைக்கிறது வேடிக்கையா இல்லை?" அவன் கையில் காபி குவளையை கொடுத்துவிட்டு, கைப்பிடி சுவரில் சாய்ந்தவாறு பேசத் தொடங்கினாள் பூரணி.

"பெர்பெக்ட்! ஒரு ரொமான்டிக் செட்டிங்க்ல, லாஜிகல் எக்ஸ்பிளனேஷன் குடுத்து மொத்தமா எல்லாத்தையும் ஆப் (off) பண்ணிட்ட..."

அவள் கலகலத்து சிரிக்க, உள்ளுக்குள் எழுந்த வெப்பத்தை காபியின் வெப்பத்தால் அடக்க முயன்றான் விஷ்வா.

"என்ன டீச்சர், பசங்களுக்கு க்ளாஸ் எடுக்குறதுக்கு முன்ன என்கிட்ட ரிகர்ஸலா?" முகத்தில் மாற்றம் இல்லாவிட்டாலும் விஷ்வாவின் குரலில் குறும்பு கொப்பளித்தது.

"இல்லை விஷ்வா ஸார், பாடமே உங்களுக்கு தான்" சுவற்றில் சாய்ந்தவாறு பக்கவாட்டில் அவனை நோக்கி திரும்பினாள். "நீ நல்ல பாஸ்கெட் பால் ப்ளேயர் தானே விஷ்வா, அதுவும் நேஷனல்ஸ் போற அளவுக்கு. ஏன் புல் டைம் ப்ளேயர் ஆகலை? ஏன் இந்த ஆர்கிடெக்ட் படிப்பை தேர்ந்தெடுத்த?"

"அது...செல்... சின்ன வயசுலேருந்தே கட்டிடங்கள், அதனோட வடிவமைப்பு, கோயில்கள் இது மேல ஒரு அதீத ஆர்வம். அதாவது, ஒரு detective க்கு எப்படி ஒரு சேலெஞ்சான கேஸ் கிடைச்சா ஆர்வமாவாங்களோ அந்த மாதிரி. ஸ்போர்ட்ஸை என்னோட மெயின் ப்ரோபஷனா மாத்துற ஐடியா என்னைக்கும் இருந்தது இல்லை". கண்கள் மின்ன ஆர்வத்தோடு அவன் கட்டிட கலைப் பற்றி பேசிக் கொண்டு போக, மெய் மறந்து ரசித்து கொண்டிருந்தாள்.

"அப்படி ஒரு passion, its like the love of my life. என்னோட செகண்ட் லவ்.." ஒரு கணம் தன்னை மறந்து பேசிவிட்டு திருதிருவென விழித்தான்.

"பாயிண்ட் நோட்டட் (noted) அந்த கச்சேரி இன்னொரு நாளைக்கு. இப்ப இதுக்கு பதில் சொல்லு.."

வெளிவந்த வெட்க புன்னகையை மறைக்க தலையை மறுபுறம் திருப்பி உதடு கடித்தான்.

"உன்னை ஆர்கிடெக்ட் ஆக கூடாதுன்னு கட்டாயபடுத்தியிருந்தா என்ன செய்வ?"

"என்னோட லட்சியம், என்னோட எய்ம் எல்லாமே இது தான். சின்ன வயசுலேந்து கண்ட கனவு இந்த ப்ரொபெஷன்ல சாதிக்கணும்னு. எப்படி விட்டு குடுப்பேன்?"

"இப்ப நீ வாங்குறதை விட அதிக சம்பளம் வேற துறைல தராங்கனு வை. ஜாயின் பண்ணுவியா?"

"கண்டிப்பா மாட்டேன். கொஞ்சம் சம்பளம் கம்மியானாலும் சரி,இந்த லைன்ல தான் வேலை பண்ணுவேன் அதுக்காக வேற லைன் போகமுடியாது" பேசிக் கொண்டிருந்தவனை கை தொட்டு நிறுத்தினாள்.

"விஷ்வா, வேலை தொழில்னு இந்த சாதாரண விஷயத்துக்கே இவ்வளவு பிடிப்பும் தீர்மானமும் நமக்கெல்லம் இருக்கே. சாதாரண மனுஷன் யோசிக்காத ஒரு விஷயம் பிறவி பயன் என்ன அப்படிங்கறது. அந்த யோசனை வரதுக்கே ஒரு கொடுப்பினை வேணும். அப்படி யோசிச்சு அதுக்கான விடை கிடைச்சு உன் அப்பா சந்நியாசம் வாங்கினாங்க. அதுவும் எவ்வளவு புண்ணியமான காரியம் பண்றாங்க, பெரிய அம்மு சொன்னாங்க அவரை பத்தி."

தன் தந்தையை பற்றி விசாரித்திருக்கிறாள் என்பதே ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.

"அந்த ஆசிரமம் மூலமா இல்லாதவங்களுக்கு உதவி செய்யிறது, மருத்துவ முகாம்கள், படிப்பு, வெள்ள நிவாரணம் இப்படி நிறைய சேவை செய்யிறாங்களாமே? உன் ஒருத்தனுக்கு மட்டும் தகப்பனா இல்லை அவரு, அத்தனை பேருக்கு தகப்பனாவோ ஆசானாவோ நண்பனாவோ இருந்து உதவி செய்யிறாரு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம. எவ்வளவு பரந்த மனசு வேணும்? எல்லா மனுஷங்களையும் அறவணைச்சு அன்பும் கருணையும் மட்டும் பிரதானம்னு நினைச்சு அவங்களுக்காக தன் வாழ்க்கையை அற்பணிச்சிருக்காரு விஷ்வா. இது எப்பேர்பட்ட முடிவு? நீ பெருமை படணும், அவர் மகன்னு சொல்லிக்க பெருமை படணும்."

இருவரது கண்களும் பனித்தன, அவனது மனம் கனத்தது.

"அவர் நிழல் இல்லாம வளர்ந்தது கஷ்டம் தான், உன் வலி புரியுது. ஆனா அவரு தப்பான காரியம் பண்ணலியே விஷ்வா. இது தான் அவரோட destiny,  அவரோட எய்ம், ஆம்பிஷன், அதை தடுக்க  நாம யாரு? அவரு தன் இஷ்டபடி நடக்கணும்னு அவரோட அத்தையும் அப்பாவும் கட்டாயப்படுத்தினாங்க. நீயும் உன் இஷ்டத்துக்கு அவர் இல்லைனு வருத்தபடுற. இதுல என்ன வித்தியாசம்?"

யோசிக்க சில வினாடி இடைவெளி கொடுத்தாள்.

"உனக்கும் உன் அம்மாவுக்கும் பணம் சேத்து வச்சிட்டு உன் எதிர்காலத்துக்கு வழி பண்ணிட்டு தான் அவர் வழியை பாத்துகிட்டாரு?" கூர்ந்து அவளை நோக்கினான்.

"அப்பா இல்லாத, கணவன் இல்லாத குறையை பணம் நிச்சயம் சரிகட்டாது. ஒத்துக்குறேன். ஆனா யோசி, அவர் சம்பாதிச்சு சேத்து வைக்காம அன்னைக்கே புறப்பட்டு போயிருந்தா, நீ ஆசைப்பட்ட படிப்பை படிச்சிருக்க முடியுமா? இப்ப இருக்குற வசதி வாய்ப்புகள் இருந்திருக்குமா? படிப்பை பாதியில நிறுத்தி வேலைக்கு போயிருக்கணும், இல்லை பீஸ் கம்மியான கோர்ஸ்ல சேந்து, பிடிக்காத  படிப்பை பிடிச்சு பிடிக்காத வேலைக்கு போயிருப்ப. அவர் குடும்பத்தை தவிக்கவிடலை, நீ வளர்ந்து பெரியவனாகி உன் அம்மாவை கவனிச்சுக்குற பக்குவம் வர்ற வரை காத்திருந்தாரு".

"என் அப்பா மாதிரி, பொறுப்பில்லாம.." குரல் அடைத்தது, "இனி உன் அப்பா பத்தி தவறா பேசாத, ப்ளீஸ்!" அழுதே விட்டாள்.

"ஐயோ பூரணி, என்ன?" நெஞ்சை கசக்கி பிழிவது போல இருந்தது, அவள் கண்ணீரை துடைக்க விழைந்தாலும் இயலாமல் அமைதி காத்தான். "சரி இனி அவரை பத்தி எதுவும் தவறா பேசலை. ப்ளீஸ் அழாத. என்னமா எதாச்சும் பிரச்சினையா வீட்டுல?" அவள் உடைந்து அழ, இவன் குரல் பிசிறடித்தது.

பார்வை எங்கோ சாலையை வெறித்திருக்க, அழுகையை அடக்க முற்பட்டாள்.

"ஒண்ணும் இல்லை, வேலை விஷயமா ஊருக்கு போயிருக்காரு அப்பா, ஒரு வாரம் ஆகுது. அப்பாகிட்ட நாலு வருஷமா பேசலை ஒரு சின்ன சண்டை, இப்ப அவரு இல்லைனதும் கொஞ்சம் கில்டியா இருக்கு."

"அவரை மிஸ் பண்ற, ஆனா கோவம். இதை சொல்லறதுக்கு  தயக்கம். உக்காந்து பாட்டியம்மா எனக்கு அட்வைஸ் பண்றா, மக்கு" தலையில் செல்லமாக தட்டினான்.

வாகன இறைச்சல், விளையாடும் குழந்தைகளின் கூக்குரல்கள், குடியிருப்பின் நித்திய சலசலப்புகள் அனைத்தையும் மீறி இருவரிடையேயும் ஒரு அதீத மௌனம் நிலவியது.

'என் வாழ்க்கையோட இருண்ட பக்கம், சுகந்திகிட்ட கூட மறைச்சிட்ட ஒரு விஷயம் விஷ்வா கிட்ட பகிர முடியுமா? அது தெரிஞ்சா இப்படி சகஜமா இருப்பானா? ஏன் எனக்கு இப்படி..? இதை எப்படி எடுத்துக்குவான்? பெண்களோட ஒழுக்கம், கற்பு இதெல்லாம் தான முக்கியமா பார்க்கபடுது சமூகத்துல. ஒரு வேளை என்னை தப்பா நினைச்சுட்டா? என்னை சின்ன வயசுல பாத்தது, இத்தனை வருஷத்துக்கு பிறகு இப்ப தான பாக்குறான், என் கேரக்டர் எப்படின்னு அவனுக்கு தெரியாது. ஜஸ்ட் பிரண்டா இருக்கான். அதை ஏன் கெடுத்துக்கணும்? ஆனா ஏன் அதை அவன்கிட்ட பகிர்ந்துக்க துடிக்கிறேன்?

எல்லாத்தையும் தவறா எடுக்கற டைப்பா இருந்தா நீ ஒரு மணி நேரம் லெக்ச்சர் அடிச்சியே அப்பவே உன்னை கண்டிச்சு என் விஷயத்துல தலையிடாதேன்னு சொல்லியிருப்பான்.'

எதிரும் புதிருமாய் மனசாட்சி விவாதித்து கொண்டிருந்தது.

"பூரணி நான் அசோசியேஷன் ஆபீஸுக்கு போறேன், டியூஷன் பசங்க வந்திருவாங்க".

"நானும் வரேன்".

யமுனாவிடம் ஆபிஸ் சாவி வாங்கி செல்ல வீட்டு வாயிலில் நின்றான். அவர் எழுவதற்குள் பூரணி உள்ளே சென்று சாவியை எடுத்து வந்தாள்.

"பெரிய அம்மு, அடுத்த வியாழன் வெள்ளி நான் க்ளாஸ் எடுக்க முடியாது. அம்மா கூட வர்க் பண்றவங்க வீட்டு கல்யாணம். மாமா கிட்ட சொல்லிடுங்க."

-----

பூங்கா காலனியின் நலச்சங்கம் மூலமாக, அங்கு வீட்டு வேலை செய்யும் பெண்கள், அருகே ஆட்டோ நிறுத்ததில் இருக்கும் டிரைவர்கள், இஸ்திரி வண்டி போட்டிருப்பவர், என இவர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக மாலையில் டியூஷன் வகுப்புகள் எடுப்பது என தீர்மானித்து பல வருடங்களாக நடந்து வருகிறது.

மாணவர்கள், ஓய்வுபெற்ற பெரியவர்கள், என ஆர்வமுள்ளவர்கள் அலுவலகத்தில் பதிவு செய்து சுழற்சி முறையில் அவரவர் விருப்ப பாடத்தை குறிப்பிட்ட வகுப்பு பிள்ளைகளுக்கு கற்பிப்பது என பட்டியலிட்டு வைத்து நடத்திவந்தனர். பூரணி, சுகந்தி இருவரும் தமிழ் ஆங்கிலப் பாடங்களையும் தேவைப்படும் போது மற்ற பாடங்களையும் எடுக்க ஒப்புக்கொண்டனர்.

வேலை கிடைக்கும் வரை தானும் உதவி செய்வதாய் ஒப்புக்கொண்ட விஷ்வாவும் சென்னை வந்ததிலிருந்து இந்த பணியில் தன்னை இணைத்துக் கொண்டான்.

பிள்ளைகள் வந்ததும் பாயை விரித்து, இரண்டு குழுக்களாக பிரித்துவிட்டு தங்களைச் சுற்றி அரைவட்டமாக அமர வைத்துக் கொண்டனர் இருவரும்.

"பூரணி அக்கா சுகந்தி அக்கா இல்லீங்களா"? ஒரு ஐந்தாம் வகுப்பு பெண்பிள்ளை கேள்வி எழுப்பியது.

"இல்லை, அவங்க இன்னைக்கு லீவு. இன்னைக்கு வீட்டு பாடம் இருக்கா?" இருவரும் அதன்பின் மும்முரமாக குழந்தைகளோடு ஒன்றிவிட்டனர், அடுத்த இரண்டு மணிநேரம்.

விஷ்வா பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பாடத்தை நடத்த, பூரணி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் உதவினாள். வாயிலில் அரவம் கேட்டதும், அனைவரது கவனமும் சிதறியது, ஓர் இளம் பெண் உள்ளே நுழைந்தாள்.

"க்ளாஸ் முடிஞ்சதா சொல்லவே இல்லையே". விஷ்வாவின் குரல் கண்டிப்போடு வந்ததும், அத்தனை தலைகளும் திரும்பியது.

"ஸாரி அண்ணா" என்றனர் பிள்ளைகள் கூட்டாக. அடுத்த இருபது நிமிடமும் அவர்களின் பாடங்களை சரிபார்த்து அவர்களை வழியனுப்புவதில் நகர்ந்தது, அந்த பெண் ஓரமாக நின்றிருந்தாள், பார்வை முழுவதும் விஷ்வாவின் மீது பதிந்திருந்தது.

அவர்கள் எழுந்ததும், பூரணியும் விஷ்வாவும் அந்த இடத்தை ஒதுக்கிவைத்து கொண்டிருந்தனர்.

"ஹாய் என்ன மௌன விரதமா?" வந்த பெண் கேள்வியெழுப்ப, பூரணியும் விஷ்வாவும் 'இப்ப பேசியே ஆகணுமா' என்பதை போல பார்த்து கொண்டனர்.

"விச்சு நான் யாமினி, உன் பிரண்ட் ஆதர்ஷோட சிஸ்டர்" அவனருகே சென்று கைநீட்டினாள்.

அவன் கையை விரித்து, "ஸாரி கையெல்லாம் ink பசங்க பென் லீக் ஆயிடுச்சு" என்றுவிட்டு வொயிட் போர்டு, மார்க்கர் ஆகியவற்றை எடுத்து வைத்தான். "ப்ளீஸ் அடுத்த முறை க்ளாஸ் நடக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க."

"ஸாரி"

"ஹாய் நீ... ப்ரேமி தான? அர்ஜுன் பியான்ஸேவோட பிரண்டு?" பூரணியின் முகம் கருத்தது.

'ஆடு வாலன்டியரா வந்து சிக்கியிருக்கு', விஷ்வா ஆர்வமானான்.

"என் பேரு அன்னபூரணி, யெஸ் D block சுரேஷ் அங்கிள் பத்மா ஆன்டியோட பொண்ணு சுகந்தியோட பிரண்டு தான் நான். அவ கூட இங்க பதினேழு வருஷமா குடியிருக்காளே அவளேதான்."

"ஓ! அன்னபூரணி ஓகே! முன்ன பின்ன பேசினதில்லை, தெரியலை"

'அது சரி உனக்கு தான் பொண்ணுங்க கண்ணுக்கே தெரியமாட்டாங்களே.' மனதில் அவளை வறுத்து கொட்டினாள்.

"இங்க எங்க?" பூரணி கேள்வி எழுப்ப

விஷ்வாவின் புறம் திரும்பினாள்,
"இந்த டியூசனுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு.. நான் என்ஜினியரிங் ஸ்டூடண்ட் விச்சு".

படீர் என்று இதயம் வெடிக்கும் சத்தம் பூரணிக்குள்.
'உலக நடிப்புடா சாமி' அவள் முகம் போன போக்கை பார்த்து விஷ்வா சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டான்.

"I prefer, விஷ்வா or விஸ்வநாதன். விச்சுனு கூப்பிட வெளி ஆட்களுக்கு அனுமதியில்லை. அப்புறம் க்ளாஸ் எடுக்க விருப்பம் இருந்தா நீங்க என் சித்தப்பா கிட்ட அதாவது அசோசியேஷன் பிரஸிடெண்ட் மூர்த்தி கிட்ட, இல்லை செகரெட்டரிகிட்ட பேசணும். வா பூரணி".

அவர்களை தொடர்ந்து அலுவலகத்திலிருந்து யாமினியும் வெளியேறினாள், கதவை பூட்டினான்.

அவள் எதோ பேச வாய் திறக்க, "பூரணி நீ வேணா பாமினி கூட பேசிட்டிரு. நான் வீட்டுக்கு போகணும்".

விஷ்வா நழுவ, "யாமினி. என் பேரு யாமினி விஷ்வா. இட்ஸ் ஸோ ஈஸி டு ரிமெம்பர்". தோளை குலுக்கி தலையை சிலுப்பினாள், பர்பியூம் வாசம் தலை சுற்றியது.

"சுகந்தி பூரணி கூட ஈஸி டு ரிமெம்பர் தான யாமினி, அதுவும் அவங்களை நீ இதே காலனியில இத்தனை வருஷமா பாத்துட்டு இருக்க" அவன் மடக்கியதும் திணறினாள்.

விஷ்வா முன்னே நடக்க தொடங்கினான்.

"ஆமா பூரணி உன் வீடு எங்க?" அவள் இடத்தை கூறியதும், "நீ ஏன் எப்ப பார்த்தாலும் இங்கேயே இருக்க? இங்க பாய்ஸ் யாரையாச்சும் சைட் அடிக்கிறியா?"

விஷ்வாவிற்கு கோபம் தலைக்கேறியது.

"எல்லாரையும் உன்னை மாதிரியே நினைச்சா எப்படி மிஸ். பாமினி? உலகத்துல எல்லாரோட ஆம்பிஷனும் ஒண்ணாவேயா இருக்கும்?" பூரணி நிதானமாக கேள்வியெழுப்ப, சுரீரென்றது யாமினிக்கு.

'சந்திரமுகி சும்மாவே ஆடுவா, இதுல சலங்கைய வேற கட்டி விட்டுடா யாமினி' விஷ்வா இரண்டடி முன்னே நடந்து கொண்டிருந்தான்.

"ரெண்டு மாசத்துக்கு முன்ன மாத்ஸ் டியூசனுக்கு உன்னை வந்து கேட்டது நானும் சுகந்தியும் அப்ப இதுக்கெல்லாம் டைம் இல்லை, அதுவும் free க்ளாஸ்லாம் எடுக்க முடியாதுன்னு எங்ககிட்ட சொன்னவ நீ. இப்ப நீ எதுக்கு வந்தேன்னு எனக்கு தெரியாதா?" விஷ்வாவின் பக்கம் அவள் சென்று மீண்டதும், யாமினியின் முகம் பேயறைந்தாற் போல ஆனது. அவள் பதிலுக்கு காத்திராமல் அர்ஜுன் வீட்டிற்கு சென்றாள் பூரணி.

"என்ன டீ மூஞ்சியில எள்ளும் கொள்ளும் வெடிக்குது?" புத்தகம் வாசித்து கொண்டிருந்த யமுனாவின் அருகில் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு உட்கார்ந்தாள்.

"நான் ஏன் இங்க வரேன், ஏன் இங்கேயே கிடக்கறேன்னு கேக்கறா பெரிய அம்மு. நான் இங்க வரக்கூடாதா? சொல்லுங்க!" கண்கள் சிவந்து, அழுகை வெடித்துகொண்டு வந்தது. உதடு பிதுக்கி அழும் பிள்ளை போல இருந்தவளை வெகு சுவாரஸ்யமாய் கவனித்து கொண்டிருந்தன ஒரு ஜோடி கண்கள்.

"க்ளாஸுக்கு தான டீ போன? என்ன ஆச்சு? யாரு என்ன சொன்னாங்க?" குழம்பினார் யமுனா.

"அதான் உங்க காலனி ப்யூட்டி குவீன் ஒருத்தி இருக்காளே."

"யாரு யாமினியா?"

"பாத்தியா! அவ பேரை சொல்லாமலேயே எல்லாருக்கும் தெரியுது, என்னையும் சுகுவையும் மட்டும் தெரியாதாம். நீங்க சொல்லுங்க நான் வரலாமா கூடாதா?" முகத்தில் கண நேரத்தில் நவ ரசங்களையும் காட்டி, பொரிந்து தள்ளி, கண்களில் அருவி ஊற்றெடுத்தது. வாசற்படியில் நின்று அவளை ரசித்து கொண்டிருந்தான் கள்வன். 

"அட டா, இப்ப என்ன வந்துச்சு உனக்கு?" அவளை தன் தோளில் சாய்த்து கொண்டார் யமுனா. "ஏய் பாப்பா! இங்க பாரு, உன்னை என் பொண்ணா தான் நினைக்கிறேன் இதை எத்தனை தரம் சொல்றது? நீ இந்த வீட்டுக்கு வர எல்லா உரிமையும் இருக்கு".

அவள் முகத்தை நிமிர்த்தி, "என் புள்ளையை பரிச்சிகிட்ட சாமி உன்னை என் கண்ணுல காட்டுச்சு. சுகந்திகிட்ட கூட அந்த உணர்ச்சி வரலை டீ." அவர் குரல் தழுதழுத்தது.

"உன்னை நாலு வயசுல ஸ்கூல்ல பார்த்தப்ப என் பொண்ணையே யூனிபார்ம்ல பார்த்த மாதிரி இருந்துச்சு தங்கம். இதை எத்தனை முறை சொல்லியிருக்கேன். உன்னோட சின்ன வயசு போட்டோவும் என் பொண்ணோட போட்டோவும் பாத்தியா இல்லையா? எவ்வளவு உருவ ஒத்துமை? அப்பறம் என்ன டீ?"

"அவ..அவ.. என்னை.. நீ இங்க யாரையாச்சும் சைட் அடிக்க வரியானு கேக்கறா அம்மு. நான் என்ன பாய்ஸ் பின்னாடி சுத்துறவளா? நான் அப்படி பட்ட பொண்ணா? நான் யார் கூடவும் பேசமாட்டேன்ல" நடத்தையை குறித்து அவள் கேள்வி எழுப்பியதும் விசும்பலை கட்டுபடுத்த முடியாமல் குழந்தை போல கேவினாள்.

'ஐயோ பேபி அழாதடீ' விஷ்வா பரிதவித்து கொண்டிருந்தான்.

"அவ கிடக்குறா! எவளாவது கேட்டா நான் என் மூர்த்தி மாமா வீட்டுக்கு வரேன் உனக்கு என்னனு கேளு. அவ பேசுறதுக்கெல்லாம் அழுதுட்டு. நாளைக்கு அவ அம்மவை என்னானு கேக்குறேன். பொண்ணை வளக்க சொன்னா கோயில் காளைய வளத்து வச்சிருக்கா, இதுல என் தங்கத்தை என்ன பேச்சு வேண்டிகிடக்கு. நீ விடு டீ" அவள் முகத்தை சேலை தலைப்பால் அழுந்த துடைத்துவிட்டார்.

"முகத்தை கழுவிட்டு வா, போ" விஷ்வாவின் புறம் திரும்பி, "டேய் தம்பி இவளை வீட்டுல விட்டுட்டு வா டா. அர்ஜுன் பைக் ரிப்பேராம் வர லேட்டாகுமாம்".

"ஐயோ பெரிய அம்மு நானே போயிடுவேன். அவங்க எதுக்கு?"

"அதெல்லாம் தனியா அனுப்ப முடியாது. தம்பி நீ போறியா இல்லையா?"

"எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை சித்தி". உள்ளுக்குள்ளே இளையராஜாவின் ஆர்கெஸ்ட்ரா பின்னணி இசை வாசித்து கொண்டிருந்தது.

      





Author's note:

விஷ்வா பூரணி கொஞ்சம் கொஞ்சமா நண்பர்களாகிட்டு வராங்க.

இதுல புது அடிஷன் யாமினி... இன்னும் சில முக்கியமான கதாபாத்திரங்களை நாம பார்க்கவேயில்லை. அடுத்து வர
பகுதிகள்ல அறிமுகம் ஆவாங்க.

Please read, share and comment. 😍😍😍


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro