பாகம் 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Published: August12, 2021




"அப்பா போதும்!"

"அம்முலு ஒண்ணே ஒண்ணு, என் கண்ணுல்ல.. லாஸ்ட்... அது! என் செல்லம்! எத்தனை வருஷம் ஆச்சு டா உனக்கு ஊட்டி விட்டு". கண் கலங்கியது பரந்தாமனுக்கு.  பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவர்கள் உண்ணும் அழகே பெற்றவர்கள் மனதையும் வயிற்றையும் நிறைத்து விடும். நான்கு வருடங்களுக்கு பின் தன் கையால் செல்லமகளுக்கு சோறூட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார் பரந்தாமன். இருவரையும் கண்ணிலும் மனதிலும் நிறைத்து கொண்டு நெகிழ்ந்து போனார் கோகிலா.

"அப்பா...எனக்கு ஊட்டினது போதும் அடுத்து.."

"நீ எனக்கு ஊட்ட போறியா?" என்றார் மகளின் தலையை இடது கையால் கோதியபடி.

தொண்டையை செருமி அவர் மனைவியை அழைப்பது போல, "கலா மா. பரமுவுக்கு சாப்பாடு ஊட்டிவிடு".

பரந்தாமன் சிரிக்க, கோகிலாவோ, "அடி கழுதை என்ன சந்தடி சாக்குல அப்பாவையும் பேரு விட்டு கூப்பிடுற?" செல்லமாக கடிந்துகொண்டார்.

"நான் கூப்பிடாம வேற யாரு கூப்பிடுவாங்க? என் பேரு என்ன? அன்னபூரணி தான? அதாவது உங்க மாமியார் பேரு, இவரோட அம்மா பேரு. அப்ப நான் கூப்பிடாம வேற யாரு கூப்பிடுவாங்க ம்ம்ம்....அடடா, வெட்டி பேச்சு, ஒரு பயம் இல்லை மாமியாரை பாத்து. ஆகட்டும் ஆகட்டும், சாப்பாடு போடு தட்டுல சீக்கிரம்". கண்ணை உருட்டி அவரை அதட்ட, அவள் காது தந்தையின் கையில் சிக்கியது. "ஆஆ அப்பா".

சிறிது நேரத்தில் இரவு உணவை முடித்து கொண்டு அவள் கல்லூரி பாடங்களோடு உள் அறையில் ஐக்கியமாகி விட, கோகிலா சமையலறையில் பாத்திரம் கழுவி கொண்டிருந்தார்.

"கலா மா" அவர் அருகே மேடையில் சாய்ந்து நின்றார் பரந்தாமன். கைவேலையை விடாமல் அவர் முகத்தை நோக்கினார் கோகிலா.

"எப்படி திடீர்னு அம்முலு என்னை மன்னிச்சு பேசுனா?நானே அவகிட்ட இன்னிக்கு பேசணும்னு நினைச்சேன்."

"எனக்கும் தெரியலை, அவ வந்து மன்னிப்பு கேட்டு உங்க கிட்ட பேசுவான்னு எதிர்பார்க்கலைங்க. இந்த ஒரு வாரம் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனான்னு தோணுது." கைகளை சேலை தலைப்பில் துடைத்துவிட்டு அவர் பக்கம் திரும்பினார். "பரமு நீங்க எடுத்துருக்கற முடிவு எனக்கு உண்மையிலேயே ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டு ஒண்ணு சேர்ந்தோம், அந்த வாழ்க்கையை வாழாமையே, உங்களை அந்த குடிக்கு இழந்துருவேனோன்னு பயமா இருந்தது. அவளுக்காக வெளிய காட்டிக்காம இருந்தேன். ரொம்ப சோர்ந்து போயிட்டேன் பா.."
அழத்தொடங்கிய மனைவியை தோள்சாய்த்து தேற்றினார்.

"என்னை மன்னிச்சிரு கலா. என்னால எவ்வளவு கஷ்டம் உனக்கும்  நம்ம பொண்ணுக்கும். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன் இந்த குடிப்பழக்கத்தை விட, காதலிச்சு கல்யாணம் பண்ணின பொண்டாட்டி, தேவதை மாதிரி ஒரு பொண்ணு எல்லாம் இருந்தும் அதை கட்டி காப்பாத்திக்காம, சந்தோஷமா வாழாம முட்டாளா இருந்துட்டேன்" குற்ற உணர்வில் அவர் குரல் அடைத்தது.

"நான் எதையும் பாக்கலை! நான் எதையும் பாக்கலை" கண்களை கை கொண்டு மறைத்து தட்டு தடுமாறி சமையல் அறை உள்ளே வந்த மகளை பார்த்து சிரித்தனர் இருவரும். "உங்க ரொமான்ஸை நான் பாக்கலை தண்ணி குடிக்க தான் வந்தேன்." கையை துழாவி தண்ணீர் பானையை தேடி கொண்டிருந்தாள் ஒற்றை கண்ணை இடுக்கியபடி.

"ஏய் குட்டி கழுதை வாடி இங்க" அவளையும் இழுத்து தங்களோடு அணைத்து கொண்டார் கோகிலா.

"வாவ் க்ரூப் ஹக்!" கள்ளமில்லாமல் குதூகலித்த மகளை உச்சியில் முத்தமிட்டார் பர்ந்தாமன்.

"அம்முலு! நான் de addiction சென்டர்ல ரெஜிஸ்டர் ஆகிட்டேன். குடிக்காம இருக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். முதல்ல வீட்டுல இருந்தபடியே டிரை பண்ணி பாக்கணும், அப்புறமா அங்க அட்மிட் ஆகணும். அப்ப ஃபுல் டிரீட்மெண்ட் ஆரம்பமாகும்."

பெற்றோர் இருவரையும் விழி அகல மாறி மாறி பார்த்து பூரித்து போனாள். கண்கள் கலங்க தொடங்கியது.

"நான் எவ்வளவு சீக்கிரம் குணமாகுறேனோ அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திரலாம். என்னோட அந்த பழைய பிஸினஸ் சம்பந்தமா கொஞ்சம் வேலை இருந்துச்சு அதைமுடிக்க தான் ஊருக்கு போயிருந்தேன். இன்னும் ஒரு வாரம் பத்து நாளுல அது முழுமையா குளோஸ் ஆகிடும். என்னை மன்னிச்சிரு மா. என்னால நீங்க ரொம்ப கஷ்டபட்டீங்க".

மூவரின் கண்களிலிருந்தும் வெளியேறிய கண்ணீர், நிம்மதியினால் மட்டுமே. பெற்றோருக்கு மிகவும் தேவைப்பட்ட தனிமையை கொடுத்துவிட்டு மகள் உள் அறைக்கு சென்று ஆனந்தமாய் உறங்கிவிட்டாள்.

கால சுழற்ச்சியில் ஏற்றமும் தாழ்வும், இன்பமும் துன்பமும், என எதிர்மறைகள் ஒன்றின் பின் ஒன்றாக மனித வாழ்க்கையில் சம்பவித்தே தீரும் இது சர்வ நிச்சயம். இது இயற்கைக்கு கூட பொருந்தும். அப்படி ஏறத்தாழ பதினைந்து வருடங்களாக கஷ்டங்களை எல்லா விதத்திலும் அனுபவித்து வந்த இந்த குடும்பத்திற்கு, வெகு காலமாக காத்திருந்த அந்த விடியல் அவர்களை நோக்கி தன் பொற்கரங்களை நீட்டுமா? பல காலங்களுக்கு பிறகான அவர்களின் சஞ்சலமில்லா உறக்கத்தை தொடரட்டும் நாம் அவர்களின் கடந்த காலத்தை அறிந்து கொள்வோம்.

*கோகிலா பரந்தாமனின் கதை*

கோகிலா, செங்கல்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த சுந்தரபெருமாள் மற்றும் தங்கம்மாளின் இரண்டாவது வாரிசு. கலையரசன் அவர்களின் மூத்த வாரிசு, பேராசிரியராக கல்லூரிகளில்  சேரவேண்டி மனு போட்டுவிட்டு இடைப்பட்ட காலத்தில் அருகில் இருந்த தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தான்.  பள்ளியில் பணியமர்த்தல் ஆனவுடன் கலையரசனுக்கு தன் சொந்த தங்கை மகளான செல்வியை திருமணம் செய்து வைத்தார் பெருமாள்.

கலையரசன் வேலை செய்த பள்ளியில் அவளும் பணிக்கு சேர்ந்தாள் திருமணத்திற்கு பிறகு. அப்போது  கோகிலா பத்தாம் வகுப்பு. கலையரசனுக்கு தங்கை மீது அபரிமிதமான பாசம், செல்வியும் சொந்தம் என்பதால் அவர்களின் மூத்த மகளாகவே அவளை பாவித்தனர். ஓராண்டில் செல்வி மகனை ஈன்றெடுக்க, அண்ணன் மகன் அரவிந்தும், தனது படிப்புமே உலகமென ஆகிபோனது கோகிலாவுக்கு. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றதும் அவள் ஆசைப்படி பி.காம் படிப்பில் சென்னையின் சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்தது.

கல்லூரியில் அடியடுத்து வைத்த நேரத்தில் பரந்தாமன் இதயத்திலும் இடம் பிடிப்பாள் என அவளும் எதிர்பார்க்கவில்லை. அதே டிபார்ட்மென்டில் மூன்றாமாண்டு படித்து கொண்டிருந்த பரந்தாமன் சீனியர் என்ற முறையில் அறிமுகமானார். கலை நிகழ்ச்சிகள், துறை சம்பந்தமான சந்திப்புகள், மாணவர் போராட்டம் என தொடங்கியது சந்திப்புகள். கலையரசனுக்கு சென்னை நகரத்தின் ஒரு தனியார் யுனிவர்ஸிட்டியில் பேராசிரியர் வேலை கிடைத்ததும், செங்கல்பட்டிலிருந்து அழகிய சென்னை மாநகரினுள் குடி பெயர்ந்தது குடும்பம்.

கோகிலா பரந்தாமன் நட்பு உறுதி பெற்று காதலில் இணைந்தது காலபோக்கில். பரந்தாமன் எம்.காம் படிப்பையும் அங்கேயே தொடர்ந்தார். கோகிலா இளநிலை பட்டப் படிப்பை முடித்து முதுநிலைக்கு விண்ணப்பிக்க முடிவுசெய்த நேரத்தில் பரந்தாமன் அங்கேயே எம்.பி.ஏ.விற்கு விண்ணபத்தார். எப்போதும் பொற்காலமாக அமைதியாக  கடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது? பரந்தாமனின் நண்பர்கள் மூலம் அவருக்கு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து பதட்டமானார் கோகிலா, அன்று பரந்தாமனுக்கு தேர்வு. அவரை காண ஆவலாய் காத்திருந்த கோகிலாவிற்கு பலத்த அதிர்ச்சி, பரந்தாமன் கப்பல் போன்ற காரில் சிப்பந்தி உதவியோடு வந்து இறங்கியதில்.

நண்பர் குழாமோடு எப்போதும் பேருந்தில் பயணித்த பரமு எப்படி செல்வந்தர் போல இப்படி? அவர் நண்பனிடம் விசாரிக்க, "கலா சிஸ்டர் அவன் யாருன்னு தெரியாதா? அவன் சொல்லலையா?" என மேலும் பீதியை கிளப்பினான்.

"வீட்டுல அப்பா அம்மா அண்ணன் அண்ணி இருக்காங்கனு சொன்னாரு. அப்பா பிஸினஸ்ல சேர பிடிக்கலை சொந்த முயற்சில கிடைக்கிற வேலைல தான் சேருவேன்னு சொன்னாங்க.." தலை சுற்றியது கோகிலாவிற்கு.

"அவன் அப்படி தான். தான் யாருன்னு காட்டிக்க விருப்பம் இல்லாதவன். ஜம்புலிங்கம் குருப் கேள்விபட்டதுண்டா? பிரபல ஏற்றிமதி இறக்குமதி நிறுவனம். உணவு பொருள் தொடங்கி கார்மென்ட்ஸ் வரை எல்லா துறையிலேயும் கொடிகட்டி பறக்குறவங்க."

"அந்த ஸ்கூல்" பிரபல தனியார் பள்ளி ஒன்றை குறிப்பிட்டு "அதுவும் அவங்களுது தான அண்ணா?" அவர் ஆமோதித்ததும் "என் அண்ணனும் அண்ணாவும் அவங்களோட செங்கல்பட்டு ஸ்கூல்ல டீச்சரா வர்க் பண்ணாங்க" மூச்சு திணறியது கோகிலாவிற்கு.

"அந்த ஜம்புலிங்கத்தோட இரண்டாவது மகன் தான் தாமு. இவன் கொஞ்சம் வித்தாயாசமான ஆளு. பணம் ஆடம்பரம் எதுவும் விருப்பம் இல்லை. நானும் அவனும் ஸ்கூல்லேயிருந்து ஃபிரண்ட்ஸ். இங்க காலேஜுல கூட ஒண்ணு ரெண்டு நண்பர்கள் தவிர யாருக்கும் அவன் குடும்பம் பத்தி தெரியாது."

பரந்தாமனின் சமூக அந்தஸ்து கோகிலாவை பயமுறுத்தியது. விலக முடிவு செயதார். ஆனால் பரந்தாமன் விடுவதாயில்லை. பெற்றோர் சம்மதம் கிடைக்கும் என நம்பிக்கை அளித்தார். பரந்தாமனின் காதல் விவகாரம் அவர் வீட்டில் தெரிய வர, கோகிலாவின் வீடு தேடி வந்து மிரட்டிவிட்டு போனார் பரந்தாமனின் அண்ணன் நாகராஜன்.

ஆனால் பரந்தாமன் வந்து அவள் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டதோடு, "நான் உங்க மகளை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனா உங்க அனுமதி இல்லாம அவளை கட்டிக்கமாட்டேன் என்னை அந்த நிலைக்கு தள்ளிடாதீங்க. எனக்கு சொத்து பணம் அந்தஸ்து தேவையில்லை. உங்க மகளை கட்டிவைங்க போதும்" எவ்வளவு மன்றாடி கேட்டும் அவள் தந்தை பெருமாள் மறுத்தவிட்டார்.

கோகிலாவின் படிப்பு முடியும் வரை அவளோடு கல்லூரிக்கு துணையாக வருவதும் போவதும் என கண்காணிக்க தொடங்கினார் பெருமாள். பரந்தாமன் வீட்டிலும் பிரச்சினை பெரிதானது. அவர் படிப்பு முடிந்ததும் மும்பையில் அலுவலகம் ஒன்றை தொடங்கவேண்டி வேலைகளை கவனிக்க அனுப்பி வைக்கப்பட்டார் பரந்தாமன். போனவர் இரண்டே நாட்களில் காணாமல் போனதாக ஊடகங்களில் வெளியாகின. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பத்து நாட்களுக்கு பிறகு அவருடைய பெட்டி, உடைமைகள் எல்லாம் ஒதுக்குபுறமான சாலை ஒன்றில் கண்டெடுக்கபட தொழில் முறை போட்டி காரணமாக கடத்த முயன்று யாரேனும் அவரை கொன்றிருக்கலாம் என முடிவுக்கு வந்தது போலீஸ். மொபைல், சிசிடிவி கேமராக்கள் இல்லாத காலம் என்பதால் காவல் துறை அதோடு முடித்துவிட்டது. இடிந்து போனார் கோகிலா.

ஒரு வாரம் படுக்கையில் விழுந்தார் சுயநினைவற்று. அண்ணன் அண்ணி அதரவாக துணை நிற்க, தேறி வந்ததும் ஒருவாறு படிப்பை முடித்து, வேலைக்கும் போக தொடங்கினார். ஆனால் உற்சாகம் தொலைத்து, நடைபிணமாக. இப்படி ஒரு வருட காலம் நகர, வீட்டில் திருமண பேச்சை தொடங்கினார்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை கோகிலா. பரந்தாமன் சகோதரன் அவ்வப்போது இவர்கள் வீடு தேடி வந்து வசைப்பாடிவிட்டு போவது வழக்கம். உண்மையில் அவருக்கு தம்பி மீது பாசம் இல்லை சொத்தில் ஒரு பங்கு எப்படியும் பரந்தாமனுக்கோ அவர் வாரிசுக்கோ சேரும் என்பது முடிவு செய்யபட்டிருந்தது. ஒரு வேளை கோகிலா பரந்தாமனின் வாரிசு என குழந்தையோடு வந்த நின்றால் பங்கு கொடுக்க வேண்டிய நிலை வருமே. அதனால் வந்த கவலை இது.

"நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கலைனா நாங்க எல்லாரும் விஷத்தை குடிச்சட்டு செத்துடுறோம். அந்த ஆளு வந்து நிதம் அவங்க வீட்டு பிள்ளையை நாம தான் கொலை செய்தமாதிரி பேசுறது கேட்க முடியலை. ஒண்ணு அப்பா பார்க்குற மாப்பிளையை கட்டிக்க இல்லை இந்தா இதை நீயே எல்லார்  சாப்பாட்டுலயும் கலந்துரு" அன்னை கையில் திணித்த ஒரு பொட்டலத்தை பார்த்தார் கோகிலா. எதிரே பெற்றவர்கள், பெற்றவரை விட பாசமான அண்ணன் அண்ணி, தன் மகனைப் போல சீராட்டிய அண்ணனின் ஆறு வயது பிள்ளை, அண்ணியின் வயிற்றில் இரண்டாவது பிள்ளை. ஆழ்ந்து மூச்செடுத்தார் கோகிலா.

"கல்யாணததுக்கு ஏற்பாடு பண்ணுங்க." மருந்தை குப்பையில் வீசிவிட்டு வேலைக்கு புறப்பட்டார். பெண் பார்க்கும் படலம் அவ்வப்போது நடந்தேற, உயிரற்ற பதுமையாய் அலங்காரம் செய்து கொண்டு பெரியோர்கள் கூறியபடி நடந்தாள். மாதங்கள் உருண்டோடியது, திருமணம் கைகூடவில்லை.

ஆட்களை ஏவி விட்டு பரந்தாமன் தந்தை அவள் திருமணத்தில் தடை ஏற்படுத்த முயற்சி செய்வது தெரியவந்தது. "என் வாரிசு இந்த மூதேவியை காதலிச்சதால தான இப்படி அனாதையா போயிட்டான். இவ மட்டும் நல்லா வாழ விட்டுருவேனா" என கங்கணம் கட்டிகொண்டு அலைந்தார்.
கோகிலாவின் தாயார் அதிர்ச்சியில் நோய்வாய்பட, பெருமாள் கோகிலாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

"கலா" அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவருக்கு பரந்தாமன் குரல் கேட்டதில் அதிர்ச்சி. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பிரமை என நினைத்திருக்க மீண்டும் அவர் குரல். குரல் வந்த திசையில் பரந்தாமனின் பால்ய நண்பர் நின்றிருந்தார்.

"அண்ணா நீங்க.."

"எனக்கு கொஞ்சம் பேசணும் மா. இங்க வேண்டாம். உன்னை சிலர் கண்காணிச்சுட்டு இருக்காங்க. நீ என் வீட்டுக்கு நாளைக்கு வா, என் மகனோட பிறந்தநாள் விழாவுக்கு உன்னை இன்வைட் பண்ற மாதிரி வீட்டுக்கு நானும் ஃவைப்பும் வரோம். பரமு பத்தி கொஞ்சம் பேசணும். ப்ளீஸ் வரமாட்டேன்னு சொல்லாத".

விழா முடியும் வரை காத்திருந்து, விருந்தினர் புறப்பட்டதும் உள் அறைக்கு அழைத்து சென்றார் நண்பரின் மனைவி. அங்கு யாரோ ஒரு ஆண் அமர்ந்திருக்க, குழம்பினார் கோகிலா.

ஒல்லியான உடல்வாகு, கன்னங்கள் ஒட்டி, உதடுகள் உலர்ந்து, மொட்டை தலையோடு, கசங்கலான மலிவான ஆடையும், உழைத்து களைத்த தோற்றமும் பார்க்கவே பாவமாக இருந்தார் அவர். இளைஞர் தான் ஆனால் அவருடைய சோர்வான தோற்றம் அவர் வயதை கூட்டி காட்டியது.  அவர்கள் உறவினராக இருக்க கூடும், ஆனால் இவருக்கு பரமு பற்றி என்ன உண்மை தெரிந்திருக்க கூடும்?

"கலா மா" சுவாசம் தடைபட்டது மார்பு கூட்டுக்குள்ளேயே கோகிலாவிற்கு.
"என்ன அடையாளம் தெரியலையா? நீயும் அடையாளம் தெரியாத அளவுக்கு இளைச்சி போயிட்டே". பேசுபவர் பரந்தாமனா? தன்னுடைய பரமுவா? திக்கி திணறினார் கோகிலா.

"நானே தான் மா" உறுதி படுத்த, கோகிலா பரிசளித்த வெள்ளி மோதிரத்தை அடையாளம் காட்டினார். ஆச்சரியம், சந்தோஷம், அழுகை, நிம்மதி என உணர்ச்சி போராட்டம் மூண்டது.

"நாம கல்யாணம் பண்ணிகிட்டா உங்க குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படுத்த ப்ளான் பண்ணியிருந்தாங்க அப்பாவும் அண்ணனும். மும்பை போறதுக்கு முன்ன தான் விஷயம் தெரிய வந்தது. வேற வழியில்லாம தான், நான் காணாம போன மாதிரி நாடகம் ஆடிட்டு தலைமறைவாகி இப்படி அடையாளத்தை மாத்திகிட்டேன். சர்டிபிக்கேட் கையில இல்லாததால சாதாரண வேலை தான் கிடைச்சது. கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன், ஒரு வீடு வாடகைக்கு பாத்து வச்சிட்டேன். நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா சரி, இல்லைனா..நான் தொந்தரவு பண்ணலை."

"இத்தனை காதலா என் மேல? உயிரை பணயம் வச்சு, அந்தஸ்து சொந்தம் எல்லாம் தூக்கி போட்டுட்டு, இவ்வளவு கஷ்டம் அனுபவிச்சு.. ஏன் பரமு? அப்படி என்ன நான் உசத்தி?"

ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ஒப்புதல் அளித்துவிட்டார் கோகிலா. கையோடு அவள் வீட்டிற்கு சென்றவர்கள், திருமணத்திற்கு சம்மதம் வேண்ட தீர்மானமாக மறுத்தார் பெருமாள்.

"மாப்பிள்ளை நீங்க அவளை கூட்டிட்டு போங்க." கலையரசன் சம்மதிக்க, அவசரமாக அவள் உடைமைகளை பெட்டியில் போட்டு கொடுத்தார் செல்வி, "போய்ட்டு வாடி நல்லாயிரு!"

கோகிலா தன்மீது கிடந்த தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு, "கோடி ரூபாய் சொத்தையும் குடும்பத்தையும் எனக்காக வேண்டாம்னு ஒதுக்கினவரை நீங்க இந்த ஆறு பவுன் தங்கத்துக்காக சந்தேகப்பட்டா என்ன பண்ணுறது. எனக்கு வேண்டாம்" தந்தையிடம் ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

பரந்தாமனும் அவர் குடும்பத்து  சொத்தில், வியாபாரத்தில் பங்கு வேண்டாம் என கூறி வக்கீல் மூலமாக எழுதிக்கொடுத்து விட்டார்.  கோகிலாவோடு சென்று தன் அன்னையை சந்தித்து ஆசி பெற்று சான்றிதழ்களை மட்டும் எடுத்துவந்தார். உறவுகளோடு சில கசப்புகள் என்றாலும் அவர்கள் வரையில் சந்தோஷமாய் தொடங்கியது வாழ்க்கை. அவரவர் பார்த்த வேலையை தொடர, திருமணமான இரண்டாவது ஆண்டு பூச்செண்டாய் மகளை ஈன்றார் கோகிலா, மறைந்த தன் தாயின் நினைவாக அன்னபூரணி என அழைத்தார் பரந்தாமன். பூரணி பிறந்ததும் நேரில் சென்று பார்க்க முயன்றனர், ஆனால் வாயிற்கதவை அடைத்து அவர்களை வெளியேற்றினார் பெருமாள். பின்னொரு நாள் அண்ணன் குடும்பத்தினர் மட்டும் வந்து பார்த்துவிட்டு போனார்கள்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு என பரந்தாமனின் திறமைக்கும் உழைப்புக்கும் பலனாக வந்து சேர்ந்தது. ஆனந்தமாய் உருண்டோடியது ஆண்டுகள்.

கோகிலாவின் குடும்பத்தினர் அவள் தந்தையின் பிடிவாதத்தால் வேறு ஊருக்கு இடம்பெயர்ந்துவிட அவர்களின் தொடர்பும் விட்டு போனது. விதி ஒரு நட்பின் ரூபத்தில் விளையாட துவங்கியது. பரம்பரையாக வியாபாரம் தொழில் செய்தவர்கள் என்பதால் இயற்கையாகவே திறமைசாலியாக இருந்தார் பரந்தாமன். கம்பெனியில் சில சிக்கல்களை இவர் தீர்த்து வைக்க, நிர்வாகத்தின் பாராட்டை பெற்றார். பலர் இவர் மீது பொறாமை கொள்ளதொடங்கினர். 

அவர்கள் அலுவலகத்திற்கு வரும் கான்டிராக்டர் ஒருவர் பிஸினஸ் தொடங்குவது பற்றி இவரை மூளை சலவை செய்ய தொடங்கினார். ஆலோசித்து முடிவெடுத்தவர், கோகிலா மறுத்தும் வியாபாரம் தொடங்க முடிவு செய்தார். குழந்தைகள் ரெடிமேட் ஆடைகளை கோயம்புத்தூர் நிறுவனத்திடமிருந்து வாங்கி விற்பது என்று முடிவானது. ஆரம்பத்தில் சற்று திணறி, பின் நிலையாக நின்று, மேலும் முன்னேறியது. நிகர லாபம் என கையில் தங்க இரண்டு ஆண்டுகள் பிடித்தது. மெல்ல விஸ்தரிக்க முடிவாக அடுத்த கட்டத்தை எட்டியது தொழில்.

மிகப் பிரபலமான துணிக்கடையின் மேலாளர் ஒருவர் அவர்களின் புது கிளைக்கு சப்ளை செய்ய வேண்டி ஆர்டர் கொடுத்தார். கோயம்புத்தூர் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து முன் பணம் செலுத்தி வேலை சூடு பிடித்தது. சரக்கு குறிப்பிட்ட நேரத்தில் நிறுவனத்திலிருந்து அட்டை பெட்டிகளில் பேக் செய்து லாரியில் ஏறியது. ஆனால் சென்னையை வந்து அடையவில்லை என ஆடையகத்தின் மேலாளர் சண்டையிட, டெலிவெரி செய்ததாக நிறுவன ஆட்கள் கூறி ரசீதை காண்பிக்கவும் அது போலி என தெரிந்தது. கடைக்குச் சொந்தகாரரை சென்று பார்த்து பேசினர் பரந்தாமனும் நண்பரும், ஆனால் அவரோ குறிப்பிட்ட மேலாளரை மோசடி செய்ததாக பணிநீக்கம் செய்து ஓராண்டு ஆகிவிட்டதாக தெரிவித்தார். தலையில் பெரிய இடி விழுந்தது பரந்தாமனுக்கு, பல லட்ச ரூபாய் நஷ்டமானதோடு அந்த மேலாளர் தலைமறைவாகிருந்தான்.

சில நாட்களில் ஓரளவு பணம் மட்டுமே ஏற்பாடு செய்து ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்க முடிந்தது, அவர்கள் காத்திருந்துவிட்டு மோசடி வழக்கு பதிவு செய்ய பரந்தாமனையும் அவர் நண்பரையும் கைது செய்தனர் காவல்துறையினர். கோகிலாவும் நண்பரின் மனைவியும் சொல்லொணா துயரங்கள் அனுபவித்தனர் கணவன்மார்களை விடுவிக்க. கோகிலா பரந்தாமன் வீட்டிற்கு சென்றார் எட்டு வயது பூரணியோடு, உதவி கேட்டு. அவர் அண்ணன் அவரை அவமானப்படுத்தி வெளியேற்றி விட்டார்.

இறுதியில் மூர்த்தியின் மூலமாக கடன் வாங்கி சில தவணைகளை கட்டினார். பின் அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தினரை சந்தித்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கட்டிவிடுவதாகவும், தவறினால் தன்னை கைது செய்து கொள்ளலாம் எனவும் எழுதிகொடுத்து காலில் விழுந்து கதறினார் கோகிலாவும் நண்பரின் மனைவியும். கேஸ் வாபஸ் பெறப்பட்டது. பரந்தாமன் விடுதலையானார், ஆனால் நண்பரின் தவறான வழிகாட்டுதலால் போதைக்கு அடிமையானார். ஒரு விதமாக போராடி பரந்தாமனை வேறு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து, அந்த சம்பளத்தை கொண்டு கடனை மெதுவாக அடைத்தார். நண்பரின் மனைவியும் அவர் பிறந்தவீட்டின் சொத்தை விற்று வந்த பணத்தில் கடனை அடைத்து விட்டு, கணவரின்  நடவடிக்கை பிடிக்காமல் அவரை பிரிந்துவிட்டார்.

~~~~~~

உற்சாகமாக கல்லூரிக்கு புறப்பட்டாள் பூரணி. முதலில் தோழியை பார்த்து இந்த சந்தோஷ செய்தியை பகிரவேண்டும் என துள்ளியது உள்ளம். காலைமுதல் தரையில் கால்படாமல் பட்டாம்பூச்சியாய் சிறகடித்த மகளை சந்தோஷமாக இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்து சென்றார் பரந்தாமன். கல்லூரியில் சுகந்தியிடம் முதல் நாள் வீட்டில் நடந்தவற்றை முழுவதும் ஒப்பித்து முடித்த பின்னரே ஓய்ந்தாள். மாலையில் விஷ்வாவிடம் நேரில் சந்தித்து விஷயத்தை பகிர ஆவலாக காத்திருந்தாள்.

அந்த வாரம் அர்ஜுனின் பணி காரணமாக தாமதமாகவே வர, அவளை வீட்டில் விடும் பணி விஷ்வாவிடம் வந்து சேர்ந்தது. இதில் இருவருக்கும் மனதிற்குள் சந்தோஷமே. வார இறுதியில் கோகிலாவுடன் பணியாற்றும் அவரது தோழியின் மகளின் திருமணத்திற்காக இருவரும் பயணப்பட, பரந்தாமன் அலுவல் காரணமாக சென்னையில் தங்கிவிட்டார். அந்த இரண்டு நாட்களும் திருமண வீட்டின் கொண்டாட்டங்களும், மகிழ்ச்சியும் எல்லாமே தாமரை இலைமீது தண்ணீராய் அவளைக் கடந்து சென்றது. தன்னையும் மீறி இதயம் அவன் பக்கம் சரிந்துவிட்டதை பரிபூரணமாக உணர்ந்தாள். ஒரு மாத கால இடைவெளியில் நிச்சயம் நடக்க வாய்ப்பில்லை, 'ஒரு வேளை... நான்... என்னோட first crush ஆக இருந்திருப்பானோ? இந்த மறதினால..'
அன்னையின் கை வாஞ்சையாய் தலைகோதியது.

"என்ன அன்னம் ஏன் டல்லா இருக்க?"

"இல்லை மா, செமஸ்டர் வருது அந்த பயம். அதோட ஒரு மாதிரி டயர்டா, ஃபீவர் வர மாதிரி இருக்கு. நீங்க போங்க நான் ரெடி ஆகிட்டு வரேன்". இஷ்டமில்லாமல் திருமண வரவேற்பிற்கு தயாராகி சென்றாள்.

ஞாயிறு இரவு சென்னை திரும்பியதும், திங்களன்று பூங்கா காலனிக்கு செல்ல பரபரத்தது உள்ளமும் உடலும். காரணம் என்னவோ? அங்கு சென்றதும் விஷ்வாவின் வீடு பூட்டியிருக்க காவேரி அர்ஜுன் வீட்டில் இருந்தார்.
வாட்ஸ் ஆப்பில் கேள்வி கணைகள் பறந்தது.

'பூரணி ஒரு ஜாப் இன்டர்வியூ, அதனால விடியற் காலை ஃப்ளைட் பிடிச்சு மும்பை வர வேண்டியதாயிடுச்சு. அர்ஜுன் கம்பெனியில என்னை முதல் கட்டம் தேர்வு முடிஞ்சு இங்க அனுப்பியிருக்காங்க.'

'அப்ப வேலை கிடைச்சா அங்க போயிடுவியா?' குறுந்தகவல் பரிமாற்றத்தில் உணர்ச்சிகள் புரிந்துவிடுமா? கிட்டதட்ட அழும் நிலைக்கு போய்விட்டாள் பதில் வருவதற்குள்.

'இல்லை இது சென்னை ப்ராஜெக்டுக்கு தான்'. கள்ளன் சிரித்துகொண்டான்.

'நிச்சயம் உனக்கு இந்த வேலை கிடைக்கும். பீ கூல்' அவனுக்கு உறுதியளித்து விட்டு தானும் கூல் ஆனாள்.

அடுத்த இரண்டு நாட்களில் விஷ்வாவிற்கு வேலை உறுதி ஆனது. விஷ்வா வேலையில் சேர வேண்டியிருந்ததால், மாலை நேர டியூஷன் வகுப்புகளில் யாமினி இணைந்து கொண்டாள். அப்போது யாரும் எந்த வித சந்தேகமும் கொள்ளவில்லை. செமஸ்டர் தேர்விற்கு படிக்க வேண்டியிருந்ததால் பூரணியும் சுகந்தியும் அதில் கவனம் செலுத்தினர். வார இறுதியிலும்  சந்தித்து கொள்ள இயலாமல் போனது தேர்வின் காரணமாய். ஒரு மாத காலம் கடந்து போக. ஒரே நேரத்தில் இரண்டு ஆயுதங்களால் தாக்கபட்டது போன்ற நிகழ்வு நடந்தேறியது, செமஸ்டர் விடுமுறையில்.

 


Author's note:

வணக்கம் மக்களே! அடுத்த அப்டேட் கொடுத்தாச்சு. 🙏 please do read, comment and vote.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro