பாகம் 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Published: August 16, 2021


மெல்ல துயில் கலைய, விரல் நுனியிலும், உடலிலும் லேசான ஈரப் பதத்தை உணர்கிறேன். பனித்துளிகள்! இதமான புல்வெளியில் படுத்திருக்கும் உணர்வு மெல்ல புரிபடுகிறது, நாசியை தீண்டும் மண் வாசனையால். மயில்தோகையாய் வருடும் தென்றல் காற்றோடு மல்லிகையின் மணமும் கலந்து சுண்டியிழுத்தது. சலசலத்து ஓடும் நீரோடையின் சப்தமும், பறவைகளின் சங்கீதமும் என்னை வந்தடைய, அங்கேயே இருந்துவிட ஏங்குகின்றது நகரத்தின் இரைச்சலுக்கு பழக்கப்பட்ட பஞ்ச இந்திரியங்களும். இயற்கை தந்த இதத்தில், என்னை கேட்காமலே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டுவிடுகிறது இதழ்களில்.

ஒரு சொட்டு மழைகூட கிடையாது என போக்கு காட்டிவிட்டு, நீல வானம் மொத்ததையும் துடைத்து வைத்துவிட்டு முறுக்கி கொண்டு வெளிநடப்பு செய்துவிட்டிருந்தன மேகங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலம். நீலம் மட்டுமே.
கண்மூடி, சிந்தனைகளை அதே போல துடைத்துவிட முயல்கிறேன்.

'ம்க்கும்ம்..பேராசை தான்' இடித்துறைக்கிறது மனம்!

மழை முகிலாய் அல்லாமல் வானவில்லாய் வந்து என்னுள் நிறைந்து விடுகிறது ஒரே ஒரு உருவம் மட்டும். மார்கழி மாதத்தின் முன்பனி மறைக்க முயலும் ஆதவனைப் போல, குழப்பங்கள் சூழ்ந்த என் நினைவுகளினூடே ஒளிந்து மறைந்து விளையாடுகிறான். ஒவ்வொரு முறையும் இந்த கனவு வரும்போது விரைந்து ஓடி அவனை பிடித்து விட எத்தனிக்கிறேன், விரல் தீண்டும் முன் நழுவிவிடுகிறான் மாயக்காரன். கண்ணாமூச்சி ஆடுகிறான் நான்கு ஆண்டுகளாய், என் நினைவு மெல்ல திரும்ப தொடங்கியதிலிருந்து.

பதினாறு வருடங்கள் நான் வாழ்ந்ததற்கான உணர்வையும் நினைவையும் இழந்து விட்டிருந்தேன். துடைத்து வைத்த கரும்பலகையை போல இருந்தது எல்லாமே. விபத்திற்கு பிறகான அறுவை சிகிச்சை முடிந்து கண்விழித்ததும். புதிதாய் பிறந்த குழந்தை போல இருந்தேன். பாதுகாப்பாய் உணர்ந்தது பெற்றோரிடம் மட்டுமே. நட்பும் அவர்களோடு இணைந்த உறவும் துணை நின்றது, என்னை நானே கண்டறிய துவங்கிய இந்த போரில்.

எல்லாம் இருந்தும் எதையோ பறிகொடுத்த உணர்வு...

நிரப்ப படாத ஓர் வெற்றிடம் அகத்தினுள்...

சுற்றமும் நட்பும் சூழ்ந்திருந்தபோதும் யாரையோ காணாமல் தேடும் தவிப்பு..
ஒரு மாய விசை ஈர்ப்பது போல, உள்ளுக்குள் ஒரு வினோத உணர்வு..

காந்தத்தை நோக்கி ஈர்க்கபடும் உலோகம் போல..

கண்ணுக்கு புலப்படாத புவியீர்ப்பு விசை போல...

என் புத்திக்கு விளங்காத எதோ ஒன்றை என் மனமும் உணர்வும் தேடி தத்தளிக்கிறது.

ஒரு வலி நிறைந்த குரல் என் செவியில் எதிரொலிக்கிறது!

ஆர்பரித்து பாறைகளில் மோதும் கடல் அலையாய் இதயத்தின் சுவர்களை அரித்து கொண்டிருக்கிறது இந்த ஏக்கம்.

ஒவ்வொரு முறையும் இந்த கனவின் மூலம் கண்டுபிடித்துவிட துடிக்கிறேன், அவனை. ராதையை அலைக்கழித்த மாயக் கண்ணனாய் என்னை அழவைக்கிறான்.

கடந்து சில நாட்களாக தினமும் வருகிறது இந்த கனவு, அவனை நிஜத்தில் விரட்டி பிடிப்பது போல அயர்ந்து போகிறது உடலும், உள்ளமும்.

மென்மையாக என் மீது எதோ விழும் உணர்வு, கண் திறந்தால் என் மீது மல்லிகை பூக்கள் வாரி இறைக்கபட்டிருக்கும் என்பது தெரிந்ததே. கண் திறக்கிறேன், சந்தேகமில்லாமல் அதே தான். எழுந்து அமர்ந்து அதை கையில் சேகரித்து நுகர்கிறேன். மனம் மையல் கொள்கிறது.

அதோ அந்த பூக்களை யாரோ எடுத்து வந்த தடம், வழியெங்கும் பூ இறைந்து கிடக்கிறது. அதை தொடர்ந்து சென்றால்தான் விடை தெரியும்.

புல்வெளிக்கு இடது புறம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளி. வலதுபுறம் ஒரு சிறிய மாந்தோப்பு. தோப்பின் உள்ளே நுழைந்தால் வழி நெடுகிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூக்கள் உதிர்ந்த தடம். தோப்பின் மறுபுறம் ஒரு அழகான பாரம்பரியமான கிராமத்து வீடு.


சாணம் தெளித்து, மாக்கோலம் போடப்பட்ட வாயிலை கடந்து உள்ளே நுழைந்து, முற்றத்தை கடந்தால் தரை தளத்தில் ஆள் அரவம் இல்லை. மாடிப்படியில் தாவி ஏறி ஓடுகிறேன், என் வாழ்க்கை புதிருக்கு விடை தேடி. மூன்று அறைகளில் கடைசி அறையில் தான் இருக்கிறது எனக்கான விடை என்பது தெரியும். கதவை திறந்தால் கனவு கலைந்துவிடும் அபாயம், மூளை எச்சரிக்கிறது. திறக்கவில்லையெனில்? அதற்கு வாய்ப்பே இல்லையென்கிறது மனம், இவைகளின் வாய்க்கால் தகராறு யுகங்கள் தாண்டும்!

மாரத்தான் ஓட்டம் ஓடுகிறது இதயமும், நுரையீரலும். இதன் வேகம் கூடுவதும் அவனால், சீராவதும் அவனால். என்னையும் என்னைச் சார்ந்த அனைத்தையும் ஆட்டி படைக்கிறான். மன்னன் என்ற நினைப்போ? அவனை தேடி வரும் என்னை மட்டும் வெறுங்கையோடு அனுப்புவதேன்?

'இன்றேனும் எனக்கு விடையளித்துவிடு, இத்தனை வருடங்கள் நான் மேற்கொண்ட தவத்திற்கு மனமிறங்கிடு!

உடைந்து சிதறி கிடக்கும் என் வாழ்க்கை துகள்களை இணைத்துவிடும் அந்த மந்திர சக்தியை இன்றாவது கொடுத்துவிடு!

என்னை அழைக்கும் அந்த ஜீவன் யாரென உணர்த்திடு. இனியும் இந்த மாய விளையாட்டை எதிர்கொள்ளும் துணிவு என்னிடம் இல்லை. ஐந்து வருடங்களா? அப்படி என்ன தான் தீங்கிழைத்தேன்?'

என்னையே உருக்கி; இறையிடமும், பிரபஞ்சத்திடம் சமர்ப்பித்து முன்னேறினேன் அறையின் உள்ளே.

என்னை பேயாய் அலைய விட்டு, சிதராத புன்னகையோடு, சித்திரம் போல அமர்ந்திருக்கிறான் ஜன்னலருகே.
'சிம்மாசனத்துல உட்கார்ந்திருக்குற இளவரசன்னு நினைப்பு' நான் சடைத்து கொள்ள..

'சிம்மாசனம் தான். உன் இதய சிம்மாசனம்'. காற்றோடு கலந்து வருகிறது அவன் குரல் காதலாய்.
என் மனதை தெரிந்து கொண்டவன் என்னை அலைக்கழிக்கும் விந்தை!

மெல்ல முன்னேறுகிறேன் அவனை நோக்கி, பனிமூட்டத்தின் நடுவே நடப்பது போல தெளிவில்லாமல் இருக்கிறது பார்வை.

'நீ யாரு?'

'உனக்கு தெரியும் செல்லம்மா'.

'ஏன் உன் முகத்தை பாக்குறதுக்கு முன்ன மறைஞ்சிடுற?'

'உன் மனசுக்கு உண்மை தெரியும், அதை ஏத்துக்குற பக்குவம் உனக்கு வந்தா தன்னால தெளிவாகும்.'
புதிர் போடுகிறான் என இதயத்துள் நான் தூக்கி சுமக்கும் வேதாளம்.

இந்த புதிருக்கு விடை தெரிந்தால் தான் அவன் இதய சிம்மாசனம் ஏற விடுவானா? முரண்டு பிடிக்கிறது சிறு பிள்ளையாய் இதயம்.

'ஒரு வேளை வரலைன்னா? என்னை விட்டு போயிடுவியா?'
கேவலோடு கேள்வி வெளிப்பட, கண்ணை கரித்துகொண்டு வருகிறது.

'விட்டு போகணும்னு இருந்தா இத்தனை வருஷம் காத்துட்டு இருந்திருக்க மாட்டேன்'.

ப்ளீஸ்.. எனக்கு பயமா இருக்கு. காலம் கை நழுவுற மாதிரி ஒரு பயம்... உண்மை தெரியாம.. நீ யாருன்னு தெரியாம போயிடுமோனு பயமா இருக்கு... என்னை விட்டு போயிடாத'.

என்னையும் அறியாமல் என் கை அவனை நோக்கி நீள, தலையில் இடி இறங்கியது போன்ற வலி இருதயத்தில் ஆயிரம் குத்தீட்டிகள் பாய்ந்து பிளந்துவிடும் வேதனை, கண்கள் பஞ்சடைக்க, ரத்த ஓட்டம் உறைந்தது போல, உடலெங்கும் குளிர் பரவ தொடங்குகிறது.

'நீ.... உன் பேரு...'
நா குழற, சிந்தை தெளிவிழக்க, உடல் துவளுகிறது. என் உயிர் பிரிந்த பின்னரேனும் அவன் தன்னை வெளிப்படுத்தி கொள்வானா? கன்னங்களில் தடம்பதிக்கிறது கண்ணீர்...

'என்னை நீ விட்டு கொடுக்க தயாராகிட்டியா செல்லம்மா? எப்பவும் அடுத்தவங்களை பத்தி மட்டுமே நினைக்கிற, உனக்காக எப்ப டீ யோசிக்க போற? யாரோ சொன்னதை நம்பி என்னை விட்டு விலக முடிவு பண்ணிட்ட இல்ல? அவ்வளவு தானா உன் அன்பு?'

'நீ.. என்ன சொல்லுற.. யாரு?'

யாரை குறிப்பிடுகிறான்?
அவன் சட்டையின் மீது எதோ கிடந்து ஒளிர்ந்தது, கை நீட்டி அதை பற்றியிழுத்து கூர்ந்து நோக்க முயல்கிறேன்.

'சிவலிங்க டாலர்'
சுவாசம் மார்பு கூட்டில் சிக்கி சுழல, மூளைக்குள் ஆயிரம் மின்னல்கள். இதை பார்த்திருக்கிறேன்...

புத்தியை மறைத்திருந்த திரைவிலக, கண்கள் கண்ணீர் திரையிட்டு கொண்டு, இருளை கவிழ்த்து கொண்டது உண்மை அறிந்த சந்தோஷத்தில்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

தேகம் பதற உறக்கத்திலிருந்து விழித்தாள் பூரணி. சுற்றுமுற்றும் நோக்க, கனவென்பது உறுதியாயிற்று. முன்பு எப்போதேனும் வரும் கனவு கடந்த சில நாட்களாக தினசரி நிகழ்வானது. கைபேசி மணி நான்கு என காட்டியது, இனி உறங்க வாய்ப்பில்லை.

ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கல்லூரி துவக்கம். அது மட்டும் அல்ல, ஏற்த்தாழ ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர் இன்று மீண்டும் பூங்கா காலனிக்குள் நுழையவிருக்கிறாள். முதல் நாள் மாலை நடந்தவற்றை நினைவு கூர்ந்தாள் படுக்கையில் கிடந்தபடி.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

"ஏய் சைத்தான்! நாளைக்கு நீ வரலை அங்க...அப்படியே கொன்னுடுவேன் பாத்துக்க.' கழுத்தை நெறிப்பது போல சைகை காட்டிவிட்டு,

"அதோட உனக்கு ஒரு அக்கா இருக்கான்னும் மறந்திரு" தன்னை தாளித்து வறுத்துகொண்டிருந்த ஷர்மிளா எனும் அவளின் மிலி அக்காவை கண்டு குற்ற உணர்ச்சியில் வாயடைத்து போயிருந்தாள் பூரணி.

"பூ குட்டி" சுகந்தி அவளை அணைத்துக் கொண்டதும்..

"பூ குட்டியாம் பூ குட்டி! தூக்கி வச்சு தாலாட்டு பாடு டீ அவ பண்ண வேலைக்கு அது தான் குறை" எண்ணெய் கொப்பறையாய் கொதித்து கொண்டிருந்தாள் ஷர்மிளா.

"ஐயோ அக்கா சும்மா இருங்க" சுகந்தி அவளை சமாதானப் படுத்தினாள்.


"ஏன் டீ பூரி? என்ன பிரச்சனை உனக்கு? உடம்புக்கு எதும் பண்ணுதா? எங்க யாரையும் பாக்க பிடிக்காத அளவுக்கு அப்படி என்னடீ நடந்தது? உன்னை பாக்காம எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் இன்னும் கொஞ்ச நாளுல. அப்பவாச்சும் வருவியா?" கண்கள் நீரூற்றாய் பொங்கி வழிய, அவளை விடுவித்தாள் சுகந்தி.

"அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லரும் ரொம்ப மிஸ் பண்றாங்க டீ உன்னை. அர்ஜுன் என்கிட்ட கூட சரியா பேசமாட்டேங்கறான். கார்த்தி ஜோனல் மேச்சுக்கு போறதுக்கு முன்ன உன்ன பாக்கணும்னு அடம் பண்ணதால அன்னிக்கு அப்பா இங்க கூட்டிட்டு வந்தாரு."


'இவங்க மட்டும் தானா?' வேறு ஒரு நபரை எதிர்பார்த்து மனம் ஏங்கி தவிக்க, கேள்வியை உள்ளுக்குள் புதைத்தாள். தனக்கு ஏது அந்த உரிமை என நினைத்து. அவனைப் பற்றி அவள் கேட்பாளோ என எதிர்பார்த்து இவர்கள் ஏமாந்தனர்.

அவளருகே இருந்த இருவரும் கலங்கி நிற்க, வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியை மனதில் சுமந்தவளோ 'எனக்கே குழப்பமா இருக்கு சுகன், நான் உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்'?
வலியை மனதிலும், மௌனத்தை இதழிலும் தேக்கி வைத்து, கண்களில் கண்ணீரோடு குழப்பத்தையும் சுமந்து நின்றவளை தோள் சாய்த்து தேற்றினாள் சுகந்தி.

காதலும், காதலிப்பவளும் இருந்தும் தனிமரமாய், விரக்தியில் உலாவரும் நண்பனை நினைத்து கவலை கொள்வதா?
ஒரு பெண் ஆளாக கூடாத வேதனைக்கு ஆட்பட்டு, தன் அடையாளத்தை இழந்து, உயிருக்கும் மேலாய் நேசிக்கபடுவது தெரியாமல், திருமண பந்தத்தை வெறுக்கும் இந்த சிறு பெண்ணை நினைத்து கவலை கொள்வதா?
ஷர்மிளா மனம் உடைந்து போனாள்.

உயிர் நண்பன் என்பதோடு விஷ்வாவை சகோதரன் என்ற இடத்தில் வைத்திருப்பவள் ஷர்மிளா, அவனுள் பூரணிக்காக காதல் பூத்த தருணத்திலிருந்து இந்த நொடி அவன் அவளைப் பிரிந்து தவிப்பது வரை அனைத்திற்கும் ஐவிட்னஸ் இந்த ஷர்மிளா/ஷம்மு/மிலி/ஷம்ஸ்.

விதி வலியது, கொடியது, இரக்கமில்லாதது. ஏன் இந்த இருவரும் முன்பே அவரவர் வாழ்வில் சந்தித்த துன்பங்கள் போதாதா? இன்னமும் எத்தனை நாள் இப்படி? இவர்கள் சேர வாய்ப்பில்லையெனில், ஏன் காதலிக்கும்படி நேர்ந்தது?
மனதிற்குள் அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு, கண்களை துடைத்துகொண்டாள் ஷர்மிளா.

"ஏய் பேபி!, நீ உண்மையை சொல்ல உனக்கு நாளைக்கு தான் லாஸ்ட் டே டைம். நாளைக்கு என் பர்த்டே நீ எப்பவும் போல வீட்டுக்கு வர. இங்க பாரு நீ யாரை பத்தியும் கவலை படாத, உன்னை பத்தி மட்டும் யோசி. ஒரு சில சில நேரம் தனக்காக யோசிக்கிறது தப்பு இல்லை பேபி.'
இளையவளின் முகத்தை கையில் ஏந்தி, மூத்த சகோதரியாய் அறிவுறை கூறி கொண்டிருந்தாள் ஷர்மிளா.

"இது செல்பிஷ் இல்லை டா.
ஐயோ, அநத வாய்ப்பை தவற விட்டுடோமேன்னு வாழ்க்கையில காலம் கடந்து வருத்தபடுறதுல ஒரு லாபமும் இல்லை. கோபம், காதல், மன்னிப்பு எதுவுமே காலம் கடந்து ஷேர் பண்ணும் போது, எக்ஸ்பிரஸ் பண்ணும் போதும் அதுக்கு விலை இல்லாம போயிடும்.

அதே போல தான் மனசுல இருக்குற வேதனையும். என்ன டா நடந்துச்சு? ஏன் எல்லாரையும் ஒதுக்கிட்டு இப்படி ஒரு மாசமா வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கற. உன் பேரண்ட்ஸ் மட்டும் இல்லை, ஆன்ட்டி அங்கிள் எல்லாரும் ரொம்ப வருத்தபடுறாங்க டீ. இது மூஞ்சியை பாரு. ஏன் உன்னையே பாரு கண்ணாடியில, ரெண்டு பேரும் இளைச்சு போய், பேஷண்ட் மாதிரி இருக்கீங்க. என்னதான் டீ ப்ராப்ளம்?"
இருவரின் முகமும் பொலிவிழந்து கிடந்தது உண்மை தான்.

"நான்... எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நிச்சயமா மனசு விட்டு பேசறேன் உங்கள்ட்ட"

உயிராய் நினைக்கும் உறவுகளை பிரிந்து நிற்கையில் பூரணியின் மனதிற்குள் பெரிய எரிமலை குமுறி கொண்டிருக்கிறது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

'நான் அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருந்தப்ப, அதுக்கு பிறகு இந்த போராட்டமான காலகட்டத்துல எனக்கு உறுதணையா இருந்தவங்களை தவிக்கவிடுறது என்ன நியாயம்?' தன் தவறை உணர்ந்தாள். தன்னை மீறி வெளிப்பட்ட விசும்பலை அடக்க முடியாமல் அழுதவள் மறுநாள் அவர்களை சந்திப்பதாக ஒப்பு கொண்டாள்.

-----------

Flashback:

'Soul sisters' என பள்ளி சகாக்கள் கொடுத்த பட்டப்பெயரை சுமக்கும் இந்த அபூர்வ தோழிகள் அறிமுகமானது மழலை தொலைக்காத நர்சரி பருவத்தில். அழுது தேம்பிய முகத்துடன் வந்த சுகந்தியை முதல் பார்வையிலேயே பிடித்து போய்விட்டது பூரணிக்கு. முதல் இரண்டு நாட்கள் புதிய சூழல் கொடுத்த பயத்தில் அழுது தீர்த்தவளுக்கு நட்பு கரம் நீட்டினாள் பூரணி.

'உன் கும்மி அயகா இக்கு'
படிய வாரி இழுத்து கட்டிய சுகந்தியின் இரட்டை குடுமியை காட்டி சிலாகித்தாள்.

'என்து பிக்கலை நீ உன்து தரியா?'
( உன் குடுமி அழகா இருக்கு)' என்னுடையது பிடிக்கலை நீ உன்னுடையது தருவியா)

அழுகையை மறந்து சுகந்தி சிரித்ததும், கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு
'பாப்பா அயகா இக்கு' என பாராட்டு பத்திரம் கொடுத்தாள்.

அதன் பிறகு இருவரும் அணிந்திருந்த கவுன் அதன் வண்ணம் என பேச்சை வளர்த்து அவளது அழுகையை நிறுத்தினாள் அந்த பெரிய மனுஷி. அன்னையர் இருவரும் இவர்களின் சம்பாஷணையை ரசித்து கொண்டிருந்தனர்.

'நான் பூர்ணி. உன் பேரு என்ன?'

'சுகந்தி. உன் பேரு...பூனி யா?'

'ம்ஹூம் பூர்ணி. சொல்லு பூர்ணி' எத்தனை முறை முயன்றும்
"பூ(நீ)னி" தான் வந்தது.
இரண்டு நாட்கள் முயற்சித்து, முடியாமல் போகவே, வார இறுதியில் தன் தோழிக்கான செல்ல பெயருடன் வந்து சேர்ந்தாள்.

'பூனி நான் உன்ன பூ குட்டி தா கூப்புவேன்' என பெயர் சூட்டு விழா நடந்தேறியது ஊஞ்சலில் சேர்ந்து ஆடுகையில். அன்று முதல், சுகு குட்டியும் பூ குட்டியும் இரட்டை பிறவிகளாக வலம் வந்தனர்.

பயந்த சுபாவமும், அப்பாவியுமான பெண்ணை சீண்டுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. சுகந்தியை பலர் அவ்வாறு சீண்ட பூரணி அவளது பாடிகார்ட் (bodyguard) ஆனாள். பூரணியை பற்றி தெரிந்தவர்கள் சுகந்தியை நெருங்க மாட்டார்கள். சின்ன பொண்ணு என அசட்டையாய் நினைத்து அசடாய் வாங்கி கட்டி கொண்ட மாணவர்கள் ஏராளம்.

பள்ளியிலும், காலனியிலும் இவர்கள் இருவருக்கும் பாதுகாவல் அர்ஜுன், விஷ்வா, ஷர்மிளா, சந்தீப். இந்த பட்டாளத்திற்கு பெரியவர்கள் வைத்த பெயர் வானர சேனை.
பழைய நினைவுகள் பூரணியின் மனத் திரையில் எப்போதோ பார்த்த படக்காட்சி போல ஓடியது.

*flashback ends*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

"அன்னம்" மகளின் தோள் தொட்டார் கோகிலா. கண்ணாடி முன் நின்றிருந்தவள் அவரை ஏறிட்டு நோக்க "என்ன யோசனை?"

"வானர சேனை! சின்ன வயசுல வானர சேனை பண்ணுன வேலை ஞாபகம் வந்துச்சு.."

சில வினாடி இடைவெளியில் தான் பேசியது உணர்ந்து; குழப்பம், வியப்பு, சந்தோஷம் என உணர்ச்சிக் கலவையாக மகளின் முகம் மலர்ந்தது கண்டு கோகிலாவும் வியந்தார்.

"மா... இப்ப நான் பழசு நினைவு வந்துச்சுனு சொன்னேன் இல்ல?"
அவர் கையை பற்றியபடி பரபரத்தாள்.

"சுகு என்னை பூ குட்டின்னு ஏன் கூப்பிட ஆரம்பிச்சா ... அப்புறம்... ஸ்கூல்ல அவளுக்காக நான் சண்டை போட்டது, நாங்க ஏழு பேரும் சேந்து எப்பவும் சுத்துறது... ஒண்ணா விளையாடுறது. ஃபுல்லா இல்லை மா ஒரு...ஒரு கனவோட மிச்சம் மாதிரி ஞாபகம் வருது மா."

கண்கள் கலங்க பரவசத்தோடு மகள் பேசுவதை கோகிலாவும் பரந்தாமனும் கேட்டுவிட்டு. நீண்ட பெருமூச்சோடு மகளை வாரி அணைத்து கொண்டனர். உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவர்களால் கண்ணீர் சிந்தி மட்டுமே உறுதி படுத்த முடிந்தது.

மற்றவர்கள் சொல்லி இத்தனை நாளும் பல விஷயங்களை கிரகித்து கொண்டு வாழ்ந்தவளுக்கு மெல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள் மீள தொடங்கியிருந்தது பல ஆண்டுகள் முன். ஆனால் கோர்வையாக, நினைவுகளின் பெரும் பகுதி சட்டென மீள்வது இப்போது தான் முதல் முறை.

அவளது கௌன்சிலருக்கு அவசரமாக அழைப்பு விடுத்தார் கோகிலா. அதே மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர் என்ற காரணத்தோடு, பூரணியின் உளவியல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு அந்த சலுகையை வழங்கியிருந்தார்.

"மேம், அவளுக்கு சைல்ட்ஹூட் மெமரி ரிட்டர்ன் ஆகுது."

பூரணியிடம் கைபேசியை கொடுத்தார் கோகிலா. அவரிடம் தனக்கு நினைவு வந்தவற்றை அவள் விளக்க,

"ஓகே! ரொம்ப எக்ஸைட் ஆகாம இரு, ஸ்டிரெயின் பண்ணி ரீ கலெக்ட் பண்ணாத. ஒரு ஆர்வத்துல அதை செய்ய வாய்ப்பு இருக்கு. இன்னிக்கு முடிஞ்சா ஹாஸ்பிடல்ல வந்து என்னை பாரு." என்று அறிவுறுத்திவிட்டு இணைப்பை துண்டித்தார்.

Author's note:
வணக்கம் மக்களே! 🙏 வழக்கம் போல அமைதியாகவே வந்துட்டு, வந்த சுவடு தெரியாம படிச்சிட்டு ஓடிடுற அருமை சகோஸ்.

படிச்சிட்டு தவறாம, லைக் போட்டு, கமெண்ட்ஸும் குடுத்து, அடுத்து அப்டேட்க்கு ஆவலாக காத்திருக்கும் என் குட்டி சிஸ்டர் Harshu26Thamizhini (பாசக்கார புள்ள🥺❤❤❤)
எல்லாருக்கும் நன்றி! ❤❤❤❤❤

Stay safe, stay happy! 🙏🙏🙏🙏

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro