44. நந்தியா தேவி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கதிருக்கு ஆக்சிடென்ட் என்று கேட்ட மறுநொடி உலகமே இருள்வதை போல் உணர்ந்தாள் எழில்.

கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் கன்னம் தொட்டு கரைந்தோட அவளின் சுயத்தை உணரச் செய்தது மீனாட்சியின் வார்த்தை.

அறியா மழலை போல், வாயில் வருவதெல்லாம் வார்த்தை என சொற் தீயை அள்ளி வீசினார் அவர்.

"இப்போ உனக்கு சந்தோஷமா? மொதல்ல நீ நிச்சயத்தை நிறுத்தினப்பவே நான் உசாராயிருக்கணும்... நிச்சயம் நின்னதே நல்ல சகுனம் இல்ல... அதுவும் நீ நிறுத்தினது அதைவிட மோசம்... அப்படியே உன்னை தலைமுழுயிகிருந்தான்னா இந்நேரம் என் மகன் என்கூட இருந்திருப்பான்...

ஆனா எங்க யார் பேச்சையும் கேட்காம ஊருல இல்லாத ஊர்வசின்னு உன் பின்னாடியே சுத்தி வெளில இருந்த சூனியத்தை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டான்.

உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுல இருந்து என்னோட பையன் பட்ட கஷ்டம் எல்லாம் பத்தாதுன்னு இப்போ அவன் செத்தே போயிருவான் போல இருக்கு... உன்னோட ராசியும் ஜாதகமும் தான் இதுக்கு எல்லாம் காரணம்" என்று அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொண்டிருந்தவரை அடக்கியது அவரின் கணவர் குரல்..

"போதும் மீனா. முதல்ல ஹாஸ்பிடல் போவோம். உன்னோட கற்பனை எல்லாம் அப்புறமா சொல்லு" என்று அதட்டி விட்டு இரு குடும்பத்தாரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினர்.

என்னதான் கதிரின் அப்பாவும், அக்காவும் எழிலுக்கு சமாதானம் சொன்னாலும், மீனாட்சி சொன்ன வார்த்தை அவளை உயிருடன் கொல்ல தொடங்கியது.

அந்த வார்த்தையின் மாய உலகத்தில் சிக்கியவளுக்கு நிஜ உலக தொடர்பு இல்லை என்றானது.

ஹாஸ்பிடல் அடைந்த கதிர் மற்றும் எழில் குடும்பத்தினர் ரிசெப்ஷனில் உள்ள பெண்ணிடம் விசாரிக்க, அவளோ "அதோ அவரை அட்மிட் பண்ணவரு வராரு" என்று ஐசியு பக்கம் கை காட்ட, மொத்த குடும்பமும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றனர்.

முதலில் நினைவுலகம் வந்தது எழில் தான். கதிரின் "அழகி" என்ற வார்த்தை அவள் செவி தீண்ட பிரம்மை விட்டு விலகியவள் நொடியும் தாமதிக்காது அவனை அணைத்திருந்தாள்.

தன் முன் இரு குடும்பமும் குழப்பத்தில் நிற்க, முதலில் எழிலின் அழுகையை நிறுத்தியவன் பின் மெதுவாக தன் தந்தை பக்கம் திரும்பி, "என்ன பா நீங்க எல்லாம் ஏன் இங்க வந்தீங்க?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்.

அதற்குள், "கதிரு! இங்க வந்து உன்னை பார்க்கிறவரைக்கும் உயிரே இல்லை... என்னடா இதெல்லாம்?" என்று கண்ணீருடன் அவனின் தலையை மீனாட்சி கோத,

அவரின் வார்த்தைகள் மூளையில் நிழற்படமாய் ஓட, வெடுக்கென தீயை தொட்டது போல் கதிரிடம் இருந்து விலகி நின்றாள் எழில்.

அதற்குள் கலைவாணர் தம் வீட்டிற்கு போன் வந்ததையும் அவனுக்கு விபத்து நடந்து ஹாஸ்பிடலுக்கு தூக்கி சென்று உள்ளார்கள் என்பதையும் ஒருவர் கதிரின் போனில் இருந்து தகவல் சொன்னதாக சொல்ல.. இப்போது தான் தன் தொலைபேசி காணாமல் போனதை உணர்ந்தான் கதிர்.

"ஹய்யோ! அப்பா நான் பாலா கூப்பிட்டான் னு பைக் எடுத்துட்டு கெளம்புனேன்ல..? அப்போ எனக்கு முன்னாடி ஒருத்தர் ஓவர்டேக் பண்ணி போகும் போது பைக் முன்னாடி போன லாரி மேல மோதிருச்சு. அவரை ஹாஸ்பிடல் கொண்டு வர டென்ஷன்ல போன அங்கயே போட்டுட்டேன் போல.. அங்க இருந்தவங்க அது அக்சிட்டேன்ட் ஆனவரோட மொபைல் னு நெனச்சு உங்க கிட்ட சொல்லி இருக்காங்க" என்று சொல்ல அப்போது தான் நிம்மதி பெரு மூச்சு விட்டது இரு குடும்பமும்.

தன்னவனுக்கு ஒன்றுமில்லை என்ற உணர்ந்த நொடி எழிலின் மனம் நிம்மதியால் நிறைந்தது. அதே சமயம் மீனாட்சியின் வார்த்தைகள் அவளின் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது. என்ன நடந்தது என்று கதிர் சொல்லி கொண்டிருக்கும் போதே மெதுவாய் அங்கிருந்து விலகி சென்று இருந்தாள் எழில்.

பேசி கொண்டே கதிர் எழிலை தேட அவள் அங்கு இல்லை என்பதை உணர்ந்து ஒருவேளை ரெஸ்ட் ரூம் சென்று இருப்பாள் என எண்ணி அக்சிட்டேன்ட் ஆனவரின் வீட்டில் உள்ளவருக்கு போன் செய்ய சென்றான் கதிர்.

அவன் சென்ற மறுநொடி தன் மனைவியை ஒரு அறை வைத்தார் கதிரின் அப்பா கலைவாணர்.

தன்னை சத்தமாக திட்டி கூட யோசிக்கும் கணவர் பொது வெளியில் தன்னை அடித்ததை நம்ப முடியாமல் பார்த்தார் மீனா..

"என்ன பாக்குற? உன்னோட வாய் என்ன நல்லபாம்பு விஷமா? அவதான் சின்ன பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா.. ஆனா உனக்கென்ன வயசாகுது? அதுவும் நம்ம புள்ளைக்கு எந்த தீங்கும் வரக்கூடாதுன்னு இப்படி செஞ்சுருக்கான்னு தெரிஞ்ச பிறகும் இவ்வளவு மோசமா பேசுற? கொஞ்சம் கூட யோசிக்காம பேசி ஒரு பொண்ணோட மனசை கஷ்டப்படுத்தி இருக்க. இதே உன்னோட பொண்ண பத்தி அவ மாமியார் இப்படி பேசுனா நீ சும்மா இருப்பியா?" என்று கேட்க அப்போது தான் தன் தவறை முழுதும் உணர்ந்தார் மீனா..

அவர் கண்கள் எழிலை தேட, அவளோ அங்கு இல்லை என்பதை உணர்ந்து மெதுவாக திவ்யாவிடம் "எழில் எங்க சம்மந்தி அம்மா?" என்று வினவ அப்போது தான் மொத்த குடும்பமும் எழிலை தேடியது.

அந்த நேரம் தன் வேலை முடிந்து வெளியில் வந்த கதிர் இரு குடும்பத்தாரிடமும், "என்ன தேடிட்டு இருக்கீங்க? வேலை முடிஞ்சுது இனி அவங்க பார்த்துப்பாங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று கேட்க அனைவரும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் விழித்தனர்.

கதிரின் அப்பா தான்... எழிலை காணவில்லை என கூறிய நொடி கதிரின் முகம் ஒரு நிமிடம் வெளிறி போனது.

அப்படியே ஹாஸ்பிடல் சீட்டில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தவன் பொறுமையாக "என்ன ஆச்சு? எங்க போனா எழில்?" என்று இதயம் பதற கேட்டான்.

மொத்த குடும்பமும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதி காக்க, தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு மீண்டும் தன் அக்காவை பார்த்து, "வீட்டுல என்ன நடந்துச்சு அக்கா?" என்று கேட்டான்.

ஷியாமளா "அது கதிர் அம்மா" என்று தொடங்கி அங்கு நடந்ததை சொல்லி முடித்த நொடி, கதிரின் முகத்தை கண்ட குடும்பத்தார் ஒரு முறை தங்கள் எச்சிலை மிடரி கொண்டனர்.

மெதுவாக அவன் அன்னையிடம் வந்தவன் "என் அம்மா என்னோட ஆசைக்காக கொஞ்சம் வருத்தமிருந்தாலும் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்கன்னு உங்கமேல எவ்ளோ மரியாதை வச்சிருக்கேன். ஆனா, உங்க மனசுல இவ்ளோ விஷம் இருந்திருக்குன்னு எனக்கு தெரியாம போச்சு.. நீங்க என்னைக்காவது இப்படி பேசுவிங்கன்னு தெரிஞ்சிருந்தா எழிலை உங்ககிட்ட நெருங்கவே விட்டிருக்க மாட்டேன். அவ குழந்தைம்மா... அவ குணத்தை புரிஞ்சிக்காம இப்படி பண்ணிட்டீங்களே? என் எழிலுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி உங்க மகன் பிணம் கூட உங்களுக்கு கிடைக்காது" என்று கோபமாக கூறிவிட்டு ஹாஸ்பிடலை விட்டு வேகமாக வெளியேறினான்.

வேகத்திலும் நிதானத்தை இழக்காதவன் வெளியில் நின்ற வாட்ச்மேனிடம் அவளின் உடை மற்றும் அடையாளத்தை சொல்லி "அண்ணா இந்த பொண்ணு எந்த பக்கம் போச்சு?" என்று கேட்க, "அதோ அந்த சிவன் கோவில் பக்கம் தான் நடந்து போச்சு பா" என சொன்ன மறுநொடி கோவில் நோக்கி விரைந்தான் கதிர்.

கோவிலினுள் நுழைந்தவன் கண்கள் அவனவளை தேட வெறுமையே பரிசாய் கிடைத்தது.

'எங்கடி போன? நீ இல்லாம நான் இல்லைன்னு இவ்ளோ நடந்தும் உனக்கு புரியலையா?" என்று தலையில் கைவைத்து அப்படியே கோவிலுள் அமர்ந்தவனின் எண்ணங்களை கலைத்தது ஒரு குரல்.

"என்னப்பா உயிரா வந்தவ உயிருக்கு ஆபத்துனு மனசு சொல்லிட்டே இருக்கோ!!

உன்னோட உயிருக்கு வந்த ஆபத்த அவசரத்துல வந்தவன் வாங்கிட்டு போய்ட்டான்னு சொல்லாம இருந்தா... சொந்தமானவளுக்கு தெரியாம போயிருமா!!" என்ற கேள்வியோடு நின்ற பெரியவரின் குரல்.

'எனக்கு வந்த விபத்துல இன்னொரு ஆள் மாட்டுனான்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. இவருக்கு எப்டி தெரிஞ்சது?' என்று விழித்தவன் முதல் வரியை நினைக்க கண்களில் தன் எழிலின் சிரித்த முகம் தோன்றி மறைந்தது.

அதிர்ச்சியோடு அவரின் முகம் பார்க்க அவரோ மந்தகாச புன்னகையோடு கதிரின் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்.

கதிர் பேச வாயெடுக்கும் முன் அவரே, "என்னப்பா இந்த பைத்தியக்காரன் ஏதோ உளரீட்டு இருக்கானு நெனைக்கிறீயா?" என்று கேட்டார்.

கதிரோ "ஐயோ அப்படி எல்லாம் இல்லை பெரியவரே. இன்னும் என் வீட்டாருக்கு கூட தெரியாத விஷயம் எப்டி உங்களுக்கு தெரிஞ்சதுன்னு யோசிக்கிறேன்" என சொல்லி கொண்டே திரும்ப அவன் கண்களில் பட்டாள் எழில்.

எழிலை கண்டவன் சித்தம் எல்லாம் பெரியவரை மறந்து அவளை நோக்கி செல்ல கட்டளை இட்டது.

"என்ன ராசா ராசாத்திய பாத்துட்ட போல? போ போ.. ஆனா, நீயா என்னை தேடி வரும் காலம் வரும்.. அப்போ பேசிக்கலாம்" என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

அவர் சென்ற அடுத்த நொடி எழில் முன் நின்றிருந்தான் கதிர். அவன் வந்தது கூட தெரியாமல் கண் மூடி அமைதியாய் அமர்ந்திருந்தாள் அவனின் அழகி.

"அழகி" என அவன் அழைக்க மெதுவாய் கண் விழித்தவள் கதிரை பார்த்தும் பார்க்காதது போல் எழுந்து நடக்க தொடங்கினாள்.

கதிரோ "என்ன நெனச்சுட்டு இருக்க? உன் இஷ்டத்துக்கு யார்கிட்டயும் சொல்லாம வந்துருவியா?" என்றான் கோபமாக.

"நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. எடுத்ததுக்கெல்லாம் எல்லோர்கிட்டயும் அனுமதி கேட்க. நான் எங்க போறேன் வரேன் எல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல.. அது என்னோட தனிப்பட்ட விஷயம். நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? உங்க வீட்ல எல்லோரும் தேடுவாங்க. முதல்ல போங்க" என்று வேகமாக நடக்க தொடங்கினாள்.

அவளின் கரத்தை அழுத்தமாக பிடித்து, "இது கோவில்னு பார்க்கிறேன். இல்ல உன் கன்னம் ரெண்டும் பழுத்துரும். என்ன விட்டா ஓவரா பேசுற? என்னைக்கு உன்னை பார்த்தேனோ அன்னைலர்ந்து உனக்கு புருஷன் நான் மட்டும் தாண்டி... என்ன அமைதியா இருந்தா இந்த கதிர என்ன நினைச்சிட்டு இருக்க? இதெல்லாம் சரிப்பட்டு வராது.. இப்போவே இந்த நிமிஷம் உன் கழுத்து தாலி கட்டி என் பொண்டாட்டியா என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. அப்புறம் இருக்கு உனக்கு.. இந்த கதிர் யாருன்னு அப்போ பார்ப்ப" என்று மிகவும் கோபமாக எரிமலையின் சீற்றம் கொண்டு கர்ஜித்தான்.

உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் காட்டிக்கொண்டால் அது நம் அழகி இல்லையே?

"ஒஹ் நீ தாலி கட்ற வரைக்கும் என் கை என்ன பூ பரிக்குமா? ஒழுங்கா போய்டு... இந்த கல்யாண பேச்சு இதோட நின்னாச்சு.. அவ்ளோ தான்" என்றாள் அழகி.

மேலும் மேலும் அவனின் கோபத்தை கிளற, "சரி. என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வேற மாப்பிள்ளை பார்த்து வச்சிருகியோ?" கோபத்தில் விழுந்த வார்த்தைகளில் துடித்துப்போன எழில்.

"எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ சொன்னியோ அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு ஏழரை.. நீ போனாலே அதுவும் போய்டும்." என்று திமிராக எழில் கூற, அவளையே சிறிது நேரம் பார்த்த கதிர்...
சத்தமாக சிரித்து, "உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சவன்டி நான். இப்படி பேசினா உன்னை திரும்பி கூட பார்க்காம போய்டுவேன்னு நினைப்பு.. நான் செத்தா தான் அது நடக்கும்.. உனக்கு சம்மதமனா சொல்லு.. அதுக்கும் நான் ரெடி" என்று கதிர் முடிக்கும் முன், எழில் கை விரல்கள் ஐந்தும் கதிரின் கன்னத்தில் பதிந்திருந்தது.

"அறிவிருக்காடா உனக்கு? என்ன பேசுற?" என்று கண்ணீர் வழிய முறைத்தாள்.

அவள் அடித்தது வலிக்கவில்லை.. அவளின் உரிமை இனித்தது.

"போலாமா? அடம் பிடிக்காம வா" என்றான்.

அவளோ பொறுமையாக "நான் உன் கூட இருந்தா தான் உனக்கு ஆபத்துன்னு சொல்லுறாங்களே.. அப்புறம் ஏன் நான் உன்கூட இருக்கணும் இளா?" என விரக்தியாக கேட்க, கதிருக்கு அவளது மனதை தன் தாய் எவ்வளவு கஷ்டப்படுத்தி இருப்பார் என்று விளங்கியது.

"உன்கூட வாழ போறது நான் அழகி. என் அம்மாவோ இல்லை உன்னை கஷ்டப்படுத்துறவங்களோ இல்லை. என்ன பொறுத்தவரை நீ இல்லைனா தான் நான் சவத்திற்கு சமம். இப்போ என்கூட வர போறீயா இல்லையா" என கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு கேட்ட கதிருக்கு முடியாது என்ற பதிலை உரைப்பாளா என்ன? "போலாம் இளா" என்றாள் அவனின் அழகி.

கதிரும், எழிலும் ஒன்றாய் வருவதை கண்ட அகரன் தன் குடும்பத்தாரிடம் கூற, அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர் அவர்கள்.

ஹாஸ்பிடல் வாயிலை அடைந்தவன் ஒருவரிடமும் சொல்லாமல் அகரனிடம் கார் சாவியை வாங்கி கொண்டு எழிலை பார்க்க அவள் மெதுவாய் சென்று காரினுள் அமர்ந்தாள்.

எழிலின் தந்தையிடம் சென்று "மாமா! நான் கொஞ்ச நேரம் வெளில எழிலை கூட்டிட்டு போறேன். வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுறேன். நீங்க கிளம்புங்க" என்றவன் தன் தாயை கண்ணால் கூட சீண்டாமல் தன் தந்தையிடம் "அப்பா! எனக்கு தான் ஒன்னும் ஆகலையே.. இன்னும் ஹாஸ்பிடல் ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வீட்டுக்கு கிளம்புங்க" என்று சொல்லிவிட்டு காரை எடுத்து கொண்டு எழிலோடு அமைதியான இடம் நோக்கி பயணமானான்.

குடும்பத்தினர் அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க தயாளன் தான் முதலில் "வீட்டிற்கு
போவோம்" என்று அனைவரையும் அழைத்து சென்றார்.

எழிலை கூட்டி கொண்டு சென்றவன் நின்ற இடம் கடற்கரை!

"தென்றல் மகன்
காதில் உதிர்த்த
காதல் கேட்டு
வெக்கம் பூண்டு
சிவந்து நின்றாளோ
முகிலவள் - அந்திமாலை"

தென்றல் என கதிரும் அமைதியான கடற்கரையில் தன் காதலி முகிலாகிய எழிலுக்கு தன் காதலை என்ன முறையில் உரைத்தானோ, அந்திவானமென முகம் சிவந்து நடந்த அனைத்தையும் மறந்து அவனோடு கரம் கோர்த்து கடல் அலையில் கால் நனைத்து விளையாடி கொண்டிருந்தாள் எழில்.

********
Pratilipi id: நந்தியா தேவி கற்பனை காதலி

********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro