17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மீனாக்‌ஷி க்ரிஷ்ஷிடம் காதலை சொன்னது வியாழக்கிழமை. வெள்ளி அன்று அவன் காலேஜுக்கு செல்லாமல் இருக்க அடுத்து வந்த இரு நாட்களும் அவனுக்கு தன் காதல் பற்றி யோசிக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தது. ஆம் தன் காதல்தான். மீனாக்‌ஷி போன்ற ஒரு பெண் காதலிப்பதாக கூறி அதை மறுப்பவன் மிகப்பெரிய முட்டாளாகத்தான் இருக்க வேண்டும். அவளின் வில் போன்ற புருவத்திற்கே அவளை காதலிக்கலாம். அந்த புருவங்களை மட்டும் நாட்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம். பருவ வயதில் பன்னிக்குட்டி கூட அழகாக இருக்கும் என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டது உண்டு. ஆனால் மாசு மரு இல்லாமல் இருக்கும் மீனாக்‌ஷி போன்ற ஒருத்தியை அவன் ஏன் காதலிக்க கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தான். ஆனால் இறுதியில் மீனாக்‌ஷியின் காதலை ஏற்றால் அவனுக்கு பல பிரச்சினைகள் வரும் என்று தோன்றியது. முதலில் வரப்போவது ஈகோ பிரச்சினை.

மீனாக்‌ஷி காலேஜில் நன்றாக படிப்பாள். க்ரிஷ்ஷோ பார்டரில் பாஸ் செய்யும் சாதாரண இளைஞன். அதே போல மீனாக்‌ஷி எல்லோருடனும் சகஜமாக பேசும் ஒருத்தி. ஆனால் க்ரிஷ்ஷோ பெண்களிடம் அதிகம் பேசாதவன். இது எல்லாவற்றிற்கும் மேல் அவளுக்கும் இவனுக்கும் இரண்டு வருடம் வயது வித்தியாசம் இருந்தது. இது எல்லாம் யோசித்தவன் கடைசியில் மீனாக்‌ஷியின் வேண்டுகோளை நிராகரிப்பது என்று முடிவெடுத்தான்.

திங்கள் கிழமை காலேஜுக்கு எல்லோரும் சென்றனர். க்ரிஷ் தன் வாழ்வின் ஒரு சிறந்த ஒரு முடிவை எடுத்ததாக எண்ணினான். மீனாக்‌ஷியும் ரேஷ்மாவும் க்ரிஷ்ஷின் வருகைக்காக காத்திருந்தனர்.

" மீனாக்‌ஷி, ஒரு வேலை க்ரிஷ் மாட்டேன்னு சொல்லிட்டான்னா என்ன பண்ணுவ" என்று ரேஷ்மா கேட்க மீனாக்‌ஷி

" கைய அறுத்துக்கிட்டு செத்துடுவேண்டி. என்னால அவன் இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சி கூட பார்க்க முடியாது?" என்று கூற ரேஷ்மாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

" ஹேய் என்னடி சொல்ற?" என்று அதிர்ச்சியாக கேட்க

" ஹாஹா, என்ன பயந்துட்டியா? இங்க பாரு ரேஷ்மா. என்ன உனக்கு ஸ்கூல்ல இருந்தே தெரியும்ல. ஆனா ஸ்கூல்ல நம்ம ரொம்ப க்லோஸ் கிடையாது. இப்போ ஒரு விசயம் சொல்ரேன் கேட்டுக்க.நான் ஆல்ரெடி இரண்டு பசங்கள லவ் பண்ணிருக்கேன். ஆனா என்ன காரணமோ தெரியல கொஞ்ச நாள்ள அது புட்டுகிச்சி. நீ சொன்னியே காதல் வர்றதுக்கு நம்ம காரணம் எதுவும் தேட கூடாதுன்னு. சோ அதே போல நான் என்னோட காதல் ப்ரேக் அப் ஆனதுக்கு காரணம் தேடல்ல. இப்போ மூணாவதா க்ரிஷ்" என்று கூற வாயை பிளந்த படி இது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ரேஷ்மா

" அப்போ ஸ்கூல் டைம்ல உன்ன பத்தி வந்த எல்லா விசயமும் உன்மைதானா?" என்று கேட்டாள்.

" நீ என்ன கேள்விப்பட்டேன்னு எனக்கு தெரியல. ஆனால் இரண்டு பசங்க என்ன லவ் பண்ணது உன்மை. நானும் அவங்கள லவ் பண்ணேன். ஆனா அது ப்ரேக் அப் ஆச்சி. முதல் லவ் ஏன்னே தெரியாம பிரேக் அப் ஆச்சி. செகண்ட் லவ், எங்கக்கா காணாம போனதுல எங்கக்காவ கட்டிக்க இருந்த பையனோட ஜாதிக்காரங்கதான் ஏதோ பண்ணிடாங்க என்ற பயத்துல போயிடிச்சி. ஏன்னா அந்த பையனும் அதே ஜாதிதான். சோ இரண்டு பேருமே பயத்துல மியூட்சுவலா பிரிஞ்சிட்டோம். வாழ்க்கைக்கு காதல விட உயிர் முக்கியம். நிஜமாவே எங்கக்கா உயிருக்கு அந்த ஜாதிக்காரங்களாலதான் ஏதும் ஆகியிருந்தா கண்டிப்பா எங்க உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. சோ நாங்க பிரிஞ்சிட்டோம். ஆனா அதுக்குன்னு நான் ஆம்பளைக்கு அலையிறவன்னு மட்டும் நினைச்சிடாத.

ஒரு பையன் மூணு பொண்ண லவ் பண்ணா அது கெத்து. ஆனா ஒரு பொண்ணு அவ லைஃப்ல மூணு பையன லவ் பண்ணா அவள ஐட்டம்னு சொல்லிடுவானுங்க. ஆனா ஐ டோண்ட் கெயார். பிகாஸ் என்னோட வாழ்க்கைய வாழ போறது நான். சோ நாந்தான் அதை டிசைட் பண்ணனும்" என்று கூற ரேஷ்மா மீனாக்‌ஷியை ஆச்சரியமாக பார்த்தாள்.

" ஏண்டி லவ் மட்டும்தானா இல்ல எல்லாமே முடிஞ்சதா?" என்று கேட்க அவளை முறைத்த மீனாக்‌ஷி

" அவனுங்க ரெண்டு பேரோட சுண்டு விரல் கூட என்மேல பட்டதில்ல. ஸ்கூல் டைம்ல எப்படிப்பா ஒன்னா சுத்துறது. மேய் பி க்ரிஷ் ஓக்கே சொன்னா பார்க்கலாம்" என்று மீனாக்‌ஷி கண் அடித்தாள்.

" ஹாஹா, ஆமா நீ லவ் சொன்னதுக்கே க்ரிஷ்ஷிற்கு காய்ச்சல் வந்திடிச்சி. இதுல மேட்டர் வேறயா? ஒரு வேல நீ போய் அவன் கிட்ட மேட்டர் பத்தி கேட்டா அவன் பயத்துல கோமாவுக்கு போனாலும் போயிடுவான்" என்றாள்.

வகுப்புக்குள் வந்த க்ரிஷ் மீனாக்‌ஷியை பார்த்து மெலிதான ஒரு புன்னகையை தன் இதழ்களில் இருந்து விடுவித்தான். இதை கண்ட ரேஷ்மா

" ஹேய் பயபுள்ள ஓக்கே சொல்லிடுவான் போலடி" என்று அவள் இடையில் இடிக்க மீனாக்‌ஷிக்கு வெட்கம் வந்தது. இதை கண்ட ரேஷ்மா

" தெய்வமே நீ என்ன கன்றாவி வேணும்னாலும் பண்ணு. இந்த வெட்கத்த மட்டும் பண்ணி தொலைச்சிடாத. என்னால அந்த கொடுமைய பார்க்க முடியல" என்று கலாய்த்தாள்.

லஞ்ச் நேரத்தில் ரேஷ்மாவை க்ரிஷ் தனியாக சந்தித்தான்.

" ரேஷ்மா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்று கூற அவள்

"என்ன" என்று கேட்டாள்.

" சும்மா நடிக்காத. உன்கிட்ட அவ எல்லாத்தையும் சொல்லிருப்பான்னு எனக்கு தெரியும். என்னால மீனாக்‌ஷிய காதலிக்க முடியாது. அதுல நிறைய சிக்கல் இருக்கு" என்றவன் ரேஷ்மாவிடம் அவர்கள் எதிர்நோக்க போகும் பிரச்சினைகளை கூறினான்.

" நீ சொல்ரதும் கரக்ட்தான் க்ரிஷ். காலேஜ் லைஃப்ல வர்ற காதல்ல இந்தளவுக்கு யாருமே யோசிக்க மாட்டாங்க. ஆனா நீ இவ்வளவு யோசிச்சிருக்க. நீ இதை மீனாக்‌ஷிகிட்ட நேரடியா பேசுறதுதான் நல்லது. நான் ஈவ்னிங்க் அவள லைப்ரரிக்கு கூட்டி வர்றேன். லைப்ரரிக்கு வெளியில இருக்குற மாடிப்படிக்கிட்ட சந்திக்கலாம்" என்றவள் மீனாக்‌ஷியை பார்க்க சென்றாள்.

க்ரிஷ்ஷிடம் பேசியவற்றை அவளிடம் கூற மீனாக்‌ஷி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள். ஈவ்னிங்க் ஆனதும் இருவரும் லைப்ரரி செல்ல, அவர்கள் செல்வதை கண்டவன் அவனும் அவர்களின் பின்னாள் சென்றான்.

மாடிப்படியின் கீழ் மீனாக்‌ஷியும் ரேஷ்மாவும் நிட்க அவர்களிடம் சென்றவன் சிறு புன்னகையுடன் பேச ஆரம்பிக்க முன் மீனாக்சி

" ஐ லவ் யூ க்ரிஷ். என்னோட லைஃப்ப நான் உன்கூட வாழனும்னு நினைக்கிறேன்" என்று கூற க்ரிஷ் மந்திரித்து விட்டவன் போல

" எனக்கும் உன்ன பிடிக்கும் மீனாக்‌ஷி. ஐ லவ் யூ டூ" என்றான்.

தான் பேச வந்தது என்ன, இப்போது பேசியது என்ன என்றெல்லாம் சிந்திக்கும் நிலையில் க்ரிஷ் இல்லை. மீனாக்‌ஷி போன்ற ஒருத்தி அவள் காதலை தன் கண்ணை பார்த்து கூறும் போது அவனால் அதை எக்காரணம் கொண்டும் மறுக்க முடியவில்லை.

ரேஷ்மாவுக்கு தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. அவர்களுக்கு தனிமையை கொடுத்து அவ்விடத்தை விட்டு அவள் செல்ல பார்க்க மீனாக்‌ஷி அவள் கைகளை பிடித்துக்கொண்டாள். என்னதான் தோழர்களாக இவ்வளவு நாள் பழகியிருந்தாலும் காதல் என்று வந்தபின் தயக்கமும் வெட்கமும் தானாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்துவிடுகின்றது.

" அப்போ நாங்க போகட்டா?" என்று மீனாக்‌ஷி கேட்க க்ரிஷ்

" இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமா?" என்று கேட்டான். இவர்கள் இருவரையும் கேவலாமாக ஒரு பார்வை பார்த்த ரேஷ்மா

" டேய் இதெல்லாம் கொஞ்சம் ஓவர். இவ என்னடான்னா தெரியாத ஒருத்தன்கிட்ட லவ்வ சொன்ன மாதிரி வெட்கப்படுறா. நீ என்னடான்னா இது வரை அவகிட்ட பேசாதவன் மாதிரி இன்னும் கொஞ்சம் நேரம் பேசலாமான்னு கேட்குற. என்ன பார்த்தா கேனக்கிறுக்கச்சி மாதிரியா தோனுது" என்று கேட்க இப்போது க்ரிஷ் வெட்கப்பட்டான்.

" டேய் டேய் ஆல்ரெடி இவ வெட்கப்பட்டு என்ன கொல்றா. இதுல நீ வேற பொண்ணுங்க மாதிரி வெட்கப்படாத. நாங்க இப்போ போகனும் டைம் ஆச்சி. நீ இவளுக்கு கால் பண்ணி பேசு. ஆமா இவ நம்பர் உன்கிட்ட இருக்குள்ள? இல்லை நான் வாங்கி தரட்டுமா?" என்று நக்கலாக கேட்க அவன் ரேஷ்மாவை முறைத்தான்.

" இதுதான் உனக்கு செட் ஆகுது. நீ வெட்கப்படுற விட்டுட்டு அடிக்கடி இப்படி முறைச்சிக்கிட்டு இருக்குறதுதான் உனக்கு பொருத்தமா இருக்கும்" என்றாள். இவள் பேசுவது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத மீனாக்‌ஷி க்ரிஷ்ஷையே விழுங்குவது போல பார்த்துக்கொண்டிருந்தாள். இவளின் பார்வையின் வீரியம் தாங்காமல் க்ரிஷ் அவளை பார்த்து புன்னகைக்க அவள் கண்களாலேயே 'போய் வருகிறேன்' என்று கூற அவனும் பார்வையாலேயே சம்மதம் தெரிவித்தான்.

எப்போதும் வாய் கிழிய பேசும் இவர்கள் பார்வையால் வார்த்தைகளை பரிமாறுவதை கண்ட ரேஷ்மா இருவரையும் பார்த்து "த்த்தூ " என்று எச்சில் வராமல் துப்பினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro