அத்தியாயம் (13)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"தட்... தட்... தட்...''
''தட்... தட்... தட்...''

சத்தம் காதைப் பிளப்பதைப் போலிருக்க சஞ்சனா கஷ்டப் பட்டு தன் கண்களைத் திறந்து கொண்டால். தூக்கம் கலைந்ததே தவிர அந்த நடு ஜாமத்தில் கண்களைத் திறந்து பார்ப்பது கூட அவளுக்கு கஷ்டமாக இருந்தது. கண்ணைத் திறந்தவளுக்கு சுற்றிவர ஒன்றுமே புலப்படவில்லை. ஒரே கும்மிருட்டாக இருந்தது.

கட்டிலில் படுத்த வண்ணமே கையை தலையணைக்கடியில் விட்டு துலாவி தன் கையடக்கத் தொலைபேசியை கண்டெடுத்து அதில் நேரம் பார்த்தாள் சஞ்சனா. தொலைபேசியில் நேரம் இரவு 01:45 என்பதைக் காட்டியது. தொலைபேசி டிஸ்ப்ளேயில் இருந்து கசிந்த மிதமான ஒளியில் தன் அறையை சுற்றி தன் பார்வையை வீசினாள். இப்பொழுது அவளுக்கு நன்றாகவே தூக்கம் தெளிந்து இருந்தது. தன் அறைக் கதைவைத் தான் யாரோ இப்படி தட்டுகிறார்கள் என்பதும் புரிந்தது. ஆனால் இந்த நேரத்தில் தன் அறைக் கதவை இப்படி இடிப்பதைப் போல தட்டுவது யார் என்று தான் அவளுக்குப் புரியவில்லை.

இப்பொழுது அவள் அவசர அவசரமாக எழுந்து அமர்ந்து கொண்டாள். கட்டிலுக்கு அடியில் கலட்டி வைக்கப் பட்டிருந்த தன் இறப்பர் காலணிகளை அணிந்து கொண்டு தொலைபேசி தந்த வெளிச்சத்தில் அறைக்கதவை நோக்கி நடந்தாள். கதவோரத்தில் இருந்த மின்குமிழை முதலில் தட்டி எரியவிட்டாள். பின்னர் கதவைத் திறந்தாள். சஞ்சனா கதவைத் திறக்க, கதவுக்கு வெளியே கவலை அப்பிய முகத்துடன் வாசுகி நின்று கொண்டு இருந்தாள். வீடு முழுவதும் அந்த நேரத்திலும் மின்குமிழ் எரிந்து கொண்டு இருந்தது. ஷக்தியின் அறைக்கதவு திறந்து இருக்க, சற்று தள்ளி ஷக்தியும், சின்னாவும் நின்று கொண்டு இருந்தனர். அந்த அசாதாரண சூழ்நிலை சஞ்சனாவின் நெஞ்சிலும் படபடப்பை அதிகரித்தது.

இந்த நேரத்தில் தனது அறை வாசலில் இவர்கள் அனைவரும் ஏன் இப்படி நின்று கொண்டு இருக்கின்றனர் என்று சஞ்சனா யோசனை செய்து முடிக்கும் முன்னர் வாசுகி சஞ்சனாவின் கரங்களை பதட்டமாக பற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்,

''அம்மாடி... நம்ம ராசையா பொஞ்சாதி பனிமலருக்கு பிரசவ வலி எடுத்துரிச்சாம்...'' என அழுவதைப் போல ஆரம்பித்தவள் பின்னர் சஞ்சனாவின் காதருகில் சென்று ரகசியமாக ஏதோவொன்று கூறினாள்.

வாசுகி கூறியதைக் கேட்டதும் சஞ்சனாவையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அவள் இப்பொழுது உடனடியாக அவ்விடத்துக்கு செல்ல வேண்டியதன் அவசியம் அவளுக்குப் புரிந்தது. தான் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மனதிற்குள் கணக்கிட்ட வண்ணம் வேகமாக தன் அறைக்குள் நுழைந்தாள். வாசுகியும் அவளைப் பின் தொடர்ந்தாள்.
அறைக்குள் நுழைந்த வேகத்தில் சஞ்சனா குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். தண்ணீர் குழாயைத் திறந்து விட்டு குளிர் நீரை முகத்தில் அடித்துக் கழுவினாள். பின்னர் அங்கு தொங்கிக் கொண்டிருந்த பூந்துவாளையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். குளிர் நீர் முகத்தில் பட்டதும் அவளுக்கு புத்துணர்ச்சி உண்டானது போல இருந்தது. அதன் பின்னர் வேக வேகமாக செயல் பட்டாள். மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டியை கையில் எடுத்து பொருட்களை சரி பார்த்துக் கொண்டவள், வாசுகியுடன் கூட அறையை விட்டு வெளியே வந்தாள்.

''சரி அத்தை கிளம்பலாம்''

''ராசையா வாசல்ல காத்துட்டு இருக்கான்மா. ஷக்தி வண்டியை எடுப்பான் சீக்கிரமா கிளம்புங்க''

ஷக்தி என்ற பெயர் காதில் விழ ஷக்தியை ஏறெடுத்துப் பார்த்தாள் சஞ்சனா. அவன் இன்னும் அங்கு தான் நின்று கொண்டு இருந்தான். ஆனால் வேறெங்கோ பார்த்த வண்ணம் இருந்தான். ஷக்தியுடன் தான் சென்றாக வேண்டும் என்பது புரிந்தவுடன்,

"இதைக் கொஞ்சம் புடிங்க அத்தை'' என்று தன் மெடிக்கல் கிட்டை வாசுகியின் கையில் திணித்து விட்டு தனது அறைக்குள் ஓடினாள் சஞ்சனா.

சஞ்சனா அன்று உறங்கும் பொழுது இளநீல வண்ணத்தில் ஒரு காட்டன் சுடிதார் அணிந்து இருந்தாள். எப்பொழுதும் போலவே அதன் துப்பட்டா ஒரு நாற்காலியின் மேல் அனாதையாக தொங்கிக் கொண்டு இருந்தது. ஷக்தியுடன் கிளம்ப வேண்டி இருப்பதால் சஞ்சனா ஓடிச் சென்று தன் துப்பட்டாவை அள்ளி தன் மார்பின் மேல் போர்த்திக் கொண்டாள். ஒரு ரப்பர் பேண்டைக் கொண்டு தன் கூந்தலை போனி டெயிலாக முடிந்து கொண்டு வெளியே வந்தாள்.

சஞ்சனா படியிறங்க அங்கு வாசலில் ராசையா முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டு இருந்தான். ராசையாவின் முதுகில் ஆறுதலாக தட்டி விட்டு ஷக்தி வண்டியைக் கிளப்ப சஞ்சனா பின் புற கதவைத் திறந்து முதலில் ராசையாவை ஏறிக்கொள்ள சொன்னாள். அவன் ஏறி அமர்ந்ததும் சஞ்சனா அவன் அருகில் ஏறி அமர்ந்து கொண்டாள். கதவு பூட்டப்பட ஷக்தி வேகமாக வண்டியை எடுத்தான்.
சஞ்சனா கூட வரும் பொழுதுகளில் ஷக்தி அவளுக்காக வண்டியின் முன் பக்க கதவினைத் திறந்து கொடுப்பது வழக்கம். ஆனால் அன்று அவன் இருந்த மனநிலையில் அவன் அதை செய்யத் தவறினான். சஞ்சனா அதை தன் மனதில் குறித்துக் கொண்டாள். ஆனால் அப்பொழுது அவளது ஆறுதல் ராசையாவுக்கு தேவை என்பதை மனதில் கொண்டு அவள் ராசையாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

வண்டி வேகமாக எஸ்ட்டேட்டுக்குள் நுழைந்தது. வண்டிக்குள் இருந்த யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஷக்தி கார் கண்ணாடியின் வழியாக அடிக்கடி ரகசியமாக சஞ்சனாவைப் பார்த்துக் கொண்டான். ராசையாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை, பதட்டத்தில் இருக்கையில் நெளிந்து கொண்டு இருந்தான். அவனைப் பார்க்க சஞ்சனாவுக்கு பாவமாகவும் அதே சமயம் வேடிக்கையாகவும் இருந்தது. அவனது பதட்டத்தை குறைக்கும் வண்ணம் அவளே பேசத் தொடங்கினாள்,

"பயப்படறதுக்கு ஒன்னும் இல்லைங்க. நீங்க பயப்படாமல் இருங்க, உங்க பொஞ்சாதியையும் பிள்ளையும் பத்திரமா உங்க கைலே ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு''

"சரிங்கம்மா'' என்று பயந்தவன் போல் கைகளைக் கட்டிக் கொண்டு பதில் அளித்தான் அந்த கூலித் தொழிலாளி.

"ரத்தம் வராமல் பிரசவம் பார்க்க முடியுமா அண்ணே?? பிரசவத்துக்கு சில நிமிஷம் முன்னாடி ரத்தம் படறது, பனிக்கொடம் உடைறது எல்லாம் எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்கறது தான். அதுக்கு போய் பயப்படலாமா??? நீங்க தான் இப்போ தைரியமா இருக்கணும் அண்ணே..''

ராசையாவுக்கும் பனிமலருக்கும் இது தலைப் பிள்ளை. அவர்கள் இருவருக்கும் இந்த ஊரில் சொந்தம் என்று யாரும் இல்லை. தன் மனைவியை அக்கம் பக்கத்து பெண்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு வந்து இருந்ததினாலும், பனிமலருக்கு இடுப்பு வலி ஆரம்பித்த பொழுது கொஞம் உதிரம் அவளது பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறி இருந்ததினாலும் அதை எதோ அசாதாரணம் என எண்ணி ராசையா வெலவெலத்துப் போய் இருந்தான்.

இப்பொழுது சஞ்சனா கூறிய அதே விளக்கத்தை அவனது பக்கத்துக்கு வீட்டில் இருந்த அம்மாவும் அவனுக்கு கூறி ஆறுதல் படுத்தி இருந்த போதிலும், சஞ்சனா அதை கூறிய விதமும், எந்த உறவுகளும் அற்ற அவனை அவள் அண்ணா என்று விளித்த விதமும் அவனுக்கு எதோ ஒரு நம்பிக்கையை மனதில் விதைத்தது.

பத்து நிமிடங்களுக்குள் ராசையாவின் வீட்டை வண்டி நெருங்கி இருந்தது. அது தோட்டத் தொழிலார்கள் வசித்து வந்த லைன் குடியிருப்புப் பகுதி. வீடுகள் குடிசை வீடுகளாக இல்லாமல் செங்கல் மற்றும் பலகை வைத்து கட்டிய சிறு வீடுகளாக காணப்பட்டன. ஒரு வீட்டின் முடிவில் இன்னொரு வீட்டின் சுவர் ஆரம்பமாகி இருந்தது. ராசையாவின் வீட்டு வாசலில் பெண்கள் நிறைந்து காணப்பட்டனர்.

வண்டியை விட்டு இறங்கிய ராசையா அங்கு குழுமி இருந்த கூட்டத்தைக் கலைத்த வண்ணம் சஞ்சனாவுக்கு வழி செய்து கொடுத்து வீட்டினுள் அழைத்து சென்றான். ஷக்தி, இது பெண்கள் சமாச்சாரம் ஆகையால், வண்டியின் உள்ளேயே தங்கி விட்டான். சஞ்சனா வீட்டுக்குள் வந்ததும் ராசையா கதவை அடைத்து விட கூட்டம் கலைந்தது. வீட்டின் உள் முற்றத்தில் ஒரு பாய் விரிக்கப்பட்டு அதில் பனிமலர் படுத்து கால்களை நீட்டியும் முடக்கியும் வைத்து வலியைத் தாங்கிக் கொண்டு இருந்தாள். வலி எடுக்கும் பொழுது கத்தி அழுதால், கால்களையும் கைகளையும் தரையில் ஊன்றி பாயைப் பற்றி கொண்டாள். அவளுக்கு 10 நிமிட இடைவேளைக்கு ஒரு முறை வலி எடுத்துக் கொண்டு இருந்தது.

அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்த சஞ்சனா வேக வேகமாக செயற்படத் தொடங்கினாள். தன் மெடிக்கல் கிட்டைத் திறந்து அருகில் வைத்துக் கொண்டு அதனுள் இருந்த கையுறைகளை எடுத்து கைகளில் மாட்டிக் கொண்டாள்.

"ஒன்னும் பயமில்லைம்மா... இங்க பாருங்க.. நான் சொல்றது போல பண்ணுங்க. உங்களுக்கு வலி வர்றதை வச்சு பார்த்தால் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள குழந்தை வெளியே வந்துரும்'' என்று பனிமலரின் கரங்களைப் பற்றி கூறினாள்.

பனிமலர் அவள் கைகளை வலியின் மிகுதியால் பிடித்து இறுக்கி பிணைந்தாள்.

''அண்ணா எனக்கொரு சுத்தமான வேட்டியை எடுத்து கொடுத்துட்டு நீங்க வெளிலே காத்து இருங்க'' என்று சஞ்சனா கட்டளையிட அவ்வனம் செய்து விட்டு வெளியே சென்றான் ராசையா. சரியான கரங்களில் தன் மனைவியை ஒப்படைத்து விட்ட திருப்தியில் அவன் சற்று தைரியம் அடைந்து இருந்தான். சஞ்சனா இப்பொழுது அந்த வேட்டியை இரண்டாக மடித்து பனிமலரின் இடுப்புக்கு கீழே வைத்தாள். பின் பனிமலரின் உள் பாவாடையை அகற்றி விட்டு கால்கள் இரண்டை குத்தங்காலாக மடித்து, கைகள் இரண்டால் கால்களை இறுக்கமாக பற்றிக் கொள்ளுமாறும், கையை எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்றும் கட்டளை இட்டாள்.

ஆனால் வலி எடுக்கும் பொழுது அப்படி பிடித்துக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கால்களை எவ்வளவுக்கு எவ்வளவு அகற்றி இடம் கொடுக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இலகுவாக குழந்தையால் வெளியே வர முடியும் என சஞ்சனா அறிவுறுத்த அவள் அப்படியே செய்தாள்.
சஞ்சனா கூறியதன் படி அந்தப் பெண் செய்ய, ''டப்'' என்ற சத்தத்துடன் பனிக்குடம் உடைந்து வெள்ளை நிற கெட்டியான திரவம் ஒன்று வெளியேறியது. வலி எடுத்து அவள் சத்தம் இட்டு அழுதது கதவையும் தாண்டி ஷக்திக்கும் ராசையாவுக்கும் கேட்டது. இன்னும் ஓரிரு பெண்களும் அவர்களுடன் கூட வெளியே காத்து இருந்தனர்.

ராசையாவும் அந்த பெண்களும் சத்தமாகவே கடவுளை வேண்டிக் கொண்டு இருக்க, இப்பொழுது ஷக்தியையும் நிலைவரத்தின் தீவிரம் தொற்றிக் கொள்ள அவனும் பதட்டத்தில் என்ன செய்வது என்று புரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.

''பனிக்குடம் உடைஞ்சிரிச்சு. இப்போ பாப்பா வெளிலே வரது உங்க கைலே தான் இருக்கு. வலி எடுக்கறப்ப நல்லா முக்கி மூச்சை வெளிலே விடுங்க''

''ஆஹ்... அப்படித் தான் நல்ல அழுத்தமா.......''

"மூச்சை உள்ளே இழுக்காதிங்க அப்புறம் பாப்பா மேலே நெஞ்சுக்கு வந்துரும், நல்லா மூச்சை கீழே இழுத்து விடுங்க.. அப்படிதான்... அப்படிதான்..''

வலி ஏற்படுகிற சமயம் சஞ்சனா கூறியது போல மூச்சை வெளியே இழுத்து விடுவது வலியைக் குறைப்பதைப் போல இருந்தது. சஞ்சனாவின் அறிவுறுத்தலின் படி பனிமலர் செய்ய செய்ய அவளது பெண்ணுறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொடுத்து உதிரத்தை வடிக்க, குழந்தையின் தலை எட்டி பார்த்தது.
இப்பொழுது குழந்தையின் தலை மயிர் அவள் பெண்ணுறுப்பை மறைத்துக் கொண்டு வெளியே தெரிந்தது. பனி மலர் ''ஐயோ அம்மா'' ''என்னங்க'' என்று பலவாறாக கத்தினாள். ராசையாவுக்கு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று விடலாமா என்று இருந்தது.

''இன்னும் கொஞ்சம் தான். சத்தம் போடாமல் மூச்சை இழுத்து விடுங்கம்மா. உங்க முழு பலத்தையும் கொண்டு இழுத்து விடுங்க பாப்பாவோட தலை வந்துரிச்சு. நீங்க இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணா பாப்பா வெளிலே வந்துரும்'' என்று சஞ்சனா ஊக்கம் கொடுக்க,

ஆஹாஹ்....................................................................................................................................... என்று பெரும் சத்தமிட்டு பனிமலர் தன் முழு பெலத்தையும் கொண்டு முக்க, குழந்தையின் தலை அவள் பெண்மையை பிளந்து கொண்டு வெளியே வந்தது. சஞ்சனா அவள் அடி வயிற்றில் கை கொண்டு அழுத்தி விட இப்பொழுது ''க்ளுக்'' என்ற சத்தத்துடன் வழுக்கிக் கொண்டு வந்து பனிமலரின் கால்களுக் கிடையே தஞ்சம் புகுந்தது அந்த குட்டி உயிர்.

பனிமலர் எதையோ சாதித்த நிம்மதியுடன் தன் கால்களை ''தடக்'' என விடுவித்துக் கொண்டு கண் அயர்ந்தாள். அது ஒரு அழகான ஆண் குழந்தை. சஞ்சனா குழந்தையைத் தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டாள். பனிக்குடத்துக்குள் இருந்த நீர் குழந்தையின் உடலில் பசை போல ஒட்டிக் கொண்டு வழுக்கியது.

குழந்தையின் தொப்புள் கொடி சாம்பல் நிறத்தில் பலூன் போல நீளமாக சஞ்சனாவின் மடியில் தவழ்ந்தது. ஒரு பிளாஸ்டிக் கிளிப் கொண்டு குழந்தையின் தொப்புள் கொடியை முடிந்து விட்டு மிகுதியை கத்தரிக்கோல் கொண்டு வெட்ட குபீர் என்று ரத்தம் பாய்ந்தது. இப்பொழுது குழந்தை அழ ஆரம்பித்தது.

சஞ்சனா பனிமலரை அவள் புடவையால் பொத்தி விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள். சஞ்சனா கதவைத் திறக்க வெளியே காத்திருந்த அனைவரும் ஆர்வமாக ஓடி வந்து குழந்தைப் பார்த்தனர். ராசையா ஆர்வமாக குழந்தையை வாங்க கைகளை நீட்டினான்.

''அண்ணா... உங்களுக்கு ஆண் குழந்தை பொறந்து இருக்கு. ஆனால் குழந்தையை இன்னும் சுத்தம் பண்ணலை. உள்ளே வந்து குழந்தைக்கு வாங்கி வச்சு இருக்க மாத்துத் துணி இருந்தா எடுத்துக் கொடுங்க. குழந்தையை சுத்தம் பண்ணிட்டு கைலே கொடுக்குறேன்'' என்று சஞ்சனா கூற ராசையா அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தான். பாயில் களைப்பாக படுத்து இருந்த பனிமலரையும் சஞ்சனாவையும் மாற்றி மாற்றிப் பார்த்தான்.

''அவங்க களைப்புல தூங்கறாங்க. அவங்களையும் சுத்தம் பண்ணனும். சுத்தம் பண்ணி முடிச்சதும் தானா எழுந்துருவாங்க'' என்று சொல்லி சஞ்சனா புன்முறுவல் புரிய ராசையா குழந்தைக்கு மாற்றுத் துணி எடுத்துக் கொடுத்தான்.

சஞ்சனா குழந்தையை வெண்ணீர் கொண்டு சுத்தமாக துடைத்து ஒரு கம்பளியால் பொத்தி ராசையாவின் கைகளில் கொடுத்தாள். அவன் அங்கு சப்பணமிட்டு அமர்ந்து குழந்தையை பார்த்தும் கொஞ்சியும் மகிழ்ந்து கொண்டு இருந்தான். ஷக்தியும் உள்ளே வந்து குழந்தையை பார்த்து விட்டு, சஞ்சனாவையும் பெருமையாக பார்த்து விட்டு சென்றான். அவனது கண்களுக்கு சஞ்சனா அப்பொழுது ஒரு மரியாதைக்குரிய டாக்டராக மாத்திரமே தெரிந்தாள்.

பின்னர் சஞ்சனா மறுபடியும் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு பனிமலரை சுத்தம் செய்தாள். அவள் வயிற்றில் இருந்த அசுத்தம் அனைத்தையும் கை வைத்து அழுத்தி வெளியே எடுத்து அவளை சுத்தமாக துடைத்து, அவளது காலிடுக்கில் நாப்கின் வைத்து அவளுக்கு நைட்டி ஒன்றை தலையால் மாட்டி விட்டாள்.

அங்கிருந்த ஒரு பெண் பனிமலருக்கு புகட்ட சூடாக காய்ச்சிய பால் எடுத்து வர பனிமலர் கண் விழித்தாள். கண்ணீருடன் தன் குழந்தையை கையில் வாங்கி நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டாள். கண்ணீருடன் கூட சஞ்சனாவுக்கு நன்றி தெரிவித்தாள்.

'' ரொம்ப நன்றி டாக்டர் அம்மா.. நான் உங்களை என் உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். எங்களுக்கு இந்த ஊர்ல உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லை. நீங்க மட்டும் வரலைனா இந்நேரம் நானும் என் குழந்தையும் என்ன ஆகியிருப்போம்னே தெரியாது'' என்றால் பனிமலர் கண்ணீர் குரலில்.

''அழக்கூடாது பனிமலர். குழந்தையை நல்ல படியா பார்த்துக்கங்க. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தைக்கு பால் குடுங்க. எதாச்சும் உதவி வேணும்னா எப்போ வேணும்னாலும் தயக்கம் இல்லாம என்னை கூப்பிடுங்க சரியா?? அப்போ நான் கிளம்பட்டுமா??

பனிமலரிடமும் ராசையாவிடமும் விடை பெற்றுக் கொண்டு சஞ்சனாவும் ஷக்தியும் விடை பெற்றனர். இம்முறை ஷக்தி வழமை மாறாமல் சஞ்சனாவுக்காக கார் கதவை திறந்து கொடுக்க சஞ்சனா ஷக்தியின் அருகே ஏறி அமர்ந்து கொண்டால். பயணம் தொடர்ந்தது ஆனால் ஷக்தி சஞ்சனாவின் முகத்தை திரும்பிப் பார்க்கவோ, அவளுடன் பேசவோ இல்லை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro