அத்தியாயம் (19)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஷக்தி செய்திருந்த காரியத்தின் தீவிரத்தினை உணர சஞ்சனாவுக்கு சிறிது நேரமானது. ஆனால் உண்மை நிலை அவள் மூளைக்குள் உரைத்தவுடன் அவளால் அதை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் காணக் காண அவளது கண்கள் இரண்டும் இரத்தமாக சிவந்தது. அவளுக்குள் பொங்கி வந்த உணர்சிகளின் கொந்தளிப்பு ஷக்தியின் கன்னத்தில் அறையாக விழுந்தது.

இந்த அறை ஷக்தியும் கூட எதிர்பார்த்த ஒன்று தான். நிம்மதியாக நின்று இறைவனை சேவித்துக் கொண்டிருந்த பெண்ணில் கழுத்தில் சினிமாத் தனமாக தாலியை கட்டினால் எந்த பெண்ணாலும் ஏற்றுக் கொள்ள முடியாது தான். தன் திருமணத்தைப் பற்றி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசைகள் இருக்கும், கனவுகள் இருக்கும்,

ஒரு மஞ்சள் கயிறு கொண்டு அந்த ஒட்டு மொத்த ஆசைகளையும் ஒரே நொடியில் கட்டி, தூர எறிந்து விடுவதென்பது எவ்வளவு பெரிய தவறு. ஷக்தி செய்திருந்த காரியத்தின் பின்னாலிருந்த காரணம் வேண்டுமானால் நியாயமானதாய் இருக்கலாம். ஆனால் அவன் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறு என்பது அவனுக்கே தெரிந்திருந்தது.

ஆனால் அதற்காக அவன் மனம் வருந்தவில்லை. அவள் விரல்கள் பட்ட இடத்தை தன் விரல்கள் கொண்டு தடவி விட்டுக் கொண்டு அவளை மறுபடியும் நேராகப் பார்த்தான். அந்த இடத்தில் அவன் ஒரு கோழையாக நடந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவன் செய்திருந்த காரியத்தை நியாயப் படுத்துவது போல இருந்த அவனது பார்வை சஞ்சனாவுக்கு மென்மேலும் ஆத்திரத்தை அதிகரித்தது.

சுற்றும் முற்றும் பார்த்தாள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. ஷக்தியை கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு கோயில் குளத்தினருகே சென்றாள். ஷக்திக்கும் அப்பொழுது சஞ்சனாவின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்க அவளது வேகத்துக்கு ஈடு கொடுத்து அவளுடன் கூட சென்றான். வந்த வேகத்தில் படியிறங்கி குளத்தின் இறுதிப் படியை அடைந்ததும் ஷக்தியின் கையை விட்டாள் சஞ்சனா.

இப்பொழுது ஓரிரு அங்குலம் இடைவெளிவிட்டு இருவரும் முகத்துக்கு முகம் பார்க்க நின்று கொண்டு இருந்தனர். ஷக்தி இப்பொழுதும் அவளை நேர்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்பொழுது அவளது மன இறுக்கம் அழுகையாக வெடித்தது. ஷக்தியின் சட்டை காலரை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு வெறி கொண்டவள் போல அவனை பிடித்து ஆட்டினாள்.

''என்னடா பண்ணிட்ட?? என்ன காரியம் பண்ணிட்ட?? என் வாழ்க்கையையே சீரழிச்சிட்டியேடா பாவி...'' என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் அவள்.

ஷக்தி செய்த காரியத்துக்கு சஞ்சனா நிச்சயம் கோபப் படுவாள் என்பது அவன் அறிந்ததே. ஆனால் சஞ்சனா அவள் வாழ்கையில் இதுவரை அழுதது போதும், இனி மேல் அவள் கண் கலங்கக் கூடாது என எண்ணியே ஷக்தி அந்த முடிவை எடுத்து இருந்தான் ஆனால் அவள் அவன் கண் முன்னாலேயே தலையில் அடித்துக் கொண்டு அழுவது ஷக்தியை புரட்டிப் போட்டது.
''ஏன் சஞ்சனா உனக்கு என்னை பிடிக்கலையா??'' என்றான் தயக்கமாக.

இப்பொழுது சஞ்சனா அவனை சுட்டுப் பொசுக்குவதைப் போல பார்த்தாள். பின்னர் தன் புறங்கையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

''நீ சரியான ஆம்பளையா இருந்தாள் என் கழுத்துல இந்த கயித்த கட்றதுக்கு முன்னாடி என்கிட்டே நீ இதை கேட்டு இருக்கணும், எல்லாத்தையும் உன் இஷ்டம் போல பண்ணிட்டு இப்போ வந்து கேக்கற பிடிக்கலையான்னு??? இப்போ நான் பிடிக்கலைன்னு சொன்னா கட்டின தாலியை கலட்டி எடுத்துக்குவியா??? இந்தா கலட்டு... கலட்டுடா.. கலட்டிக்கோ............ என்று கழுத்து நரம்புகள் புடைக்க அவனை நெருங்கி வந்தவள் இப்பொழுது தாலியை அவன் முகத்திற்கு முன்னால் பிடித்துக் காட்டிக் கொண்டு பத்ரகாளியாக நின்றிருந்தாள்.

ஷக்திக்கு பேச நா எழவில்லை. அப்படியே கல்லாகி நின்றான். அவன் செய்த காரியத்திற்கு அவனிடம் காரணம் இருந்ததே தவிர, சஞ்சனா கேட்ட கேள்விகளுக்கு அவனிடத்தில் பதில் இல்லை. சஞ்சனாவின் முகத்தையும், அவன், அவள் கழுத்தில் கட்டியத் தாலியையும் அவன் மாற்றி மாற்றிப் பார்த்தான். இப்பொழுது அவனுக்கு உடல் இறுகியது. அனிச்சையாக ஒரு துளிக் கண்ணீர் அவன் கண்ணிலிருந்து சொட்டி அது குளத்தின் நீரோடு சேர்ந்து கலந்து மறைந்தது.

ஷக்தியின் கண்களில் கண்ணீரைக் கண்டவள் அதற்க்கு மேல் அவனிடம் சண்டையிட திராணியில்லாதவலாக அப்படியே சரிந்து அமர்ந்து கொண்டாள். தன் இரு கரங்களையும் தன் தலைக்கு கொடுத்து தலை சரிந்து விடாது பிடித்து தாங்கிக் கொண்டாள். பின்னர் கண்களில் கண்ணீர் வடிய மெதுவாகக் கூறினாள்:

''ஒருத்தன் வருவான், என்னை காதலிக்கறதா சொல்லுவான், அவன் தேவை தீர்ந்ததும் சொல்லிக்காமல் கூட போயிருவான், நான் என்ன நினைக்கிறேங்கறது பத்தி அவனுக்கு கவலையே கிடையாது!! இன்னொருத்தன் வருவான், ஆறுதல் சொல்றேன்னு சொல்லுவான், மறுநாளே என் கழுத்துல தாலியைக் கட்டி தொங்க விட்டுருவான், என் மனசுல என்ன இருக்குங்கறதைப் பத்தி அவனுக்கும் கவலையே கிடையாது!! என்னோட வாழ்க்கையை மாத்தி மாத்தி நீங்களே முடிவு பண்ணிக்குறீங்க.. அப்புறம் நான் எதுக்கு உயிரோட இருக்கேன்??'' கேட்டுவிட்டு சிரிக்க ஆரம்பித்தாள் சஞ்சனா.

அது ஒரு வரட்டுப் புன்னகை. வாழ்க்கையை முற்றும் துறந்தவர்களால், தொடர்ந்து வாழவே விரும்பாதவர்களால் தான் அப்படி சிரிக்க முடியும். இப்பொழுது ஷக்தியை பயம் வந்து தொற்றிக் கொண்டது. ஏற்கனவே ஒரு முறை டிப்ரெஷன் என்று சைக்கேட்ரிஸ்ட் வரை சென்று திரும்பிய பெண். மறுபடி பேய் பிடித்தவள் போல அழுகிறாள், சிரிக்கிறாள். அவன் ஏதோ செய்ய நினைத்து அது அவளை ஏதோ அதர பாதாளத்தில் கொண்டு சென்று தள்ளி விடப் போகின்றதோ என்று ஷக்தி கலங்கிப் போய் செயல் இழந்து நின்றான்.

சஞ்சனாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளால் ஷக்தியைத் தன் கணவனாக கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்பதை ஷக்திக்கு பொட்டில் அறைந்தது போல உணர்த்தி இருக்க அவன் உள்ளுக்குள் சில்லுசில்லாக உடைந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் எப்படிப் போனாலும் சஞ்சனாவுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்து விடாது காக்க வேண்டுமென அவனது சுயநலமில்லாத காதல் முடிவு செய்தது.

''இப்போ நான் என்ன பண்ணனுங்கற??'' என்றான் வெறுமையான குரலில், முடிவை அவள் கையில் விட்டு விட்டு.

''அது தான் எல்லாம் முடிஞ்சு போச்சே.. இன்னும் நீ பண்ண வேண்டியது வேற என்ன பாக்கி இருக்கு?? நைட்டுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ரெடி பண்ண வேண்டியது தான் பாக்கி'' என்றாள் அவனை நோக்கி ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு.

அந்த வார்த்தைகள் ஷக்தியை சுட்டது. கடைசியாக சமர்தையும் அவனையும் அவள் ஒரே பட்டியலில் சேர்த்து விட்டாலே என்று. அவனை அவள் உடம்புக்காக அலைகிறவன் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள். அவனது உயர்ந்த காதலை அவள் ஏற்காதது கூட பரவாயில்லை அந்த காதலையே கேவலப் படுத்தி விட்டாள். ஷக்தியின் கண்ணில் இருந்து இன்னொருத் துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.

ஷக்தி கேட்ட கேள்விக்கான பதிலைக் கூறாமல் அவனைக் குத்திக் காட்டுவதற்காக அவள் இறங்கிப் போய் பேசிய பேச்சு சஞ்சனாவுக்கே அபத்தமாகத் தோன்றியது. ஆனால் ஷக்தியின் இழப்பைப் பார்க்கிலும் சஞ்சனாவின் இழப்பு பெரியது . ஆகையால் ஷக்திக்காக அவள்  மனசாட்சி பரிந்து பேசாத வண்ணம் அதற்க்கு ஒரு முட்டுக் கட்டையிட்டாள். ஷக்திக்கு தன் முடிவை மிகத் தெளிவாக புரிய வைப்பது என்று முடிவு செய்து கொண்டாள்.

''இங்க பாரு ஷக்தி, நீ மனசுலே என்னத்தை வச்சிட்டு இப்படிப் பண்ணேன்னு எனக்குத் தெரியாது. ஆனால் அது எதுவா இருந்தாலும் அதை இதோட மறந்திரு!!! நம்ம கோயிலுக்கு வந்தோம், சாமி கும்பிட்டோம், வீட்டுக்கு கிளம்பி போனோம். நமக்குள்ள வேற எதுவுமே நடக்கலை. நான் கண் அசந்த நேரம் நீ ஒரு மஞ்சள் கயித்தை என் கழுத்துல கட்டினால் உடனே அது கல்யாணம் ஆயிடுமா???

நீ பண்ண இந்த முட்டாள்த் தனமான காரியத்தை நீயும் மறந்திரு நானும் மறந்திடறேன். மீறி நீ என்னை பொண்டாட்டின்னு சொல்லி என்கிட்டே அதிக உரிமை எடுத்துக்க நினைச்சாலோ, இல்லை இங்கே நடந்ததை ஊருக்குள்ள சொன்னாலோ அப்புறம் நீ இந்த சஞ்சனாவை உயிரோடவே பார்க்க முடியாது!!!'' என்று இறுதியாக கூறி விட்டு எழுந்து விறுவிறுவென படியேறி ஷக்தியின் கண்களை விட்டு மறைந்தாள் அவள்.

காரில் வீடு திரும்பும் போது தனக்கு தலை வலிப்பதாகக் கூறி, கண்களை மூடி அபியின் தோளில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். கார் வீட்டை சென்றடைந்ததும் சற்று நேரம் தூங்கி எழுவதாக கூறி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு நிஜமாகவே சிறிது நேரம் உறங்கினாள். அடுத்தடுத்து அவளது வாழ்க்கையில் ஏற்ப்பட்ட துன்பங்களை அவளால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. மூளை வேலை செய்ய மறுக்கும் தருணங்களில் சற்று நேரம் தூங்கி எழுவதை அவள் பழக்கப் படுத்திக் கொண்டு இருந்தாள்.

அவள் கண் விழிக்கும் போது மணி மதியம் ஒன்றைத் தாண்டி இருந்தது. புடவையை அவிழ்த்து எறிந்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தவள் அங்கு வைக்கப் பட்டிருந்த பெரிய கண்ணாடியின் முன் நின்று கொண்டு கண்ணாடியில் தெரியும் தன் விம்பத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்ணாடியில் தெரிந்த சஞ்சனாவோ ஜாக்கெட், பாவாடை சகிதம் நின்று கொண்டிருக்க ஜாக்கெட்டுக்கு வெளியே சற்று முன் ஷக்தி கட்டிய தாலி தொங்கிக் கொண்டு இருந்தது.

தன் கழுத்தில் அவன் தாலி கட்டியதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி ஷக்தியை மிரட்டி அவன் வாயை அடைத்து விட்டு படியேறி கோயிலுக்குள் வந்தவள் கண்ணில், அவள் கழுத்தில் நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்த தாலி பட்டது. அதை அவள் ஏன் இன்னும் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்ற கேள்வியே எரிச்சலைக் கொடுக்க அதை அறுத்து எறியும் நோக்கத்துடன் அதை ஒற்றைக் கையால் பிடித்து இழுத்தாள்.

அவளது பிடி தளர்ந்தது, அவளுக்கு கை எழ மறுத்தது. எதோ ஒரு காரணம் புரியாத உணர்வு அவள் கைகளை கட்டிப் போட்டது. எப்பேர்ப் பட்ட தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டு தாலியை சுருட்டி தன் ஜாக்கெட்டுக்குள் விட்டு, அது யார் கண்ணிலும் பட்டு விடாத வண்ணம் மறைத்துக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்து உறங்கிய போது அவளுக்கு தாலி பற்றிய சிந்தையே முற்றிலும் காணாமல் போயிருந்தது. அவள் உறங்கிய போது ஜாக்கெட்டுக்குள் சிறை பட்டிருந்த தாலி மறுபடியும் ஜாக்கெட்டுக்கு வெளியே வந்து விழுந்திருக்க, இப்பொழுது சஞ்சனா கழுத்தில் தாலி தொங்க கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தாள். கலைந்த கூந்தல், உதிர்ந்த மல்லிச்சரம், மஞ்சள் குளித்த புதுத் தாலிக் கயிறு!!! ஒரு நிமிடம் அவளுக்கு திருமணம் முடிந்தே விட்டதா என்று அவளே நம்பும் படியாக இருந்தது அவளது தோற்றம்.

அந்த எண்ணம் மனதுக்குள் உதித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் இருந்து தன் கண்களைத் திருப்பிக் கொண்டவள் இனி மேல் தேவைக்கதிகமாக கண்ணாடி முன் நிற்கவே கூடாது என்று முடிவு செய்து கொண்டு உடம்புக்கு ஊற்றிக் கொள்ள ஆரம்பித்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro