அத்தியாயம் (39)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சஞ்சனா கண் விழித்து பார்த்த போது மணி காலை 8:30. அவள் காலையில் 6 மணிக்கு எழுந்து கொள்வது வழக்கம். இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமே என்று பார்த்தால் ஷக்தியும் எழுந்திருக்காது பக்கத்தில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். இரவு எத்தனை மணிக்கு வந்தானோ பாவம் அசந்து தூங்குகிறான். அவன் எத்தனை மணிக்கு எழுந்தால் தான் என்ன அவன் அபீஸ்க்கு என்ன பஸ் பிடித்தா செல்ல வேண்டும்? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கட்டும் என எண்ணியவள் மெதுவாக அவன் தூக்கம் கலையாமல் அவன் ஒரு கையைத் தூக்கி தள்ளி வைத்து விட்டு போர்வையை விலக்கி கட்டிலை விட்டு இரங்கிக் கொள்ள முயற்சி செய்ய இன்னொரு கை அவளை பிடித்து மறுபடியும் போர்வைக்குள் இழுத்துக் கொண்டது.

அதை சற்றும் எதிர்பார்க்காத சஞ்சனாவோ "ஆஹா... இது என்னடா வம்பா போச்சு இவன் என்ன இப்பல்லாம் காலைல காலைல ஒரு ட்ரைலர் காட்றான்" என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

தூக்க கலக்கத்தில் ஹஸ்க்கி வாய்சில் "எங்க கிளம்பிட்டிங்க டாக்டர்?" என்றான் அவன்.

"காலங்கார்த்தால எங்க கிளம்புவாங்க? க்ளினிக்குக்கு தான்."

"இன்னைக்கு க்ளினிக் லீவு"

"யார் விட்டது?"

"நான் தான்"

"அது என் க்ளினிக். நீ யாரு என் க்ளினிக்குக்கு லீவு விட?"

"ஒகே அப்போ இன்னைக்கி டாக்டர் சஞ்சனா லீவு"

"அது யாரு விட்டது"

"அவ புருஷன்"

சஞ்சனா க்ளுக் என சிரித்து விட்டாள். இருவரும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பு பேசிக் கொண்டு பத்து மணி வரை கட்டிலின் மேலேயே இருந்து விட்டு பத்து மணிக்கு மேல் ஷக்தி கோயிலுக்கு சென்று வரலாம் எனக் கூற சஞ்சனா ஆர்வமாக தன்னிடம் இருந்த புடவைகளிலேயே தனக்கு மிகவும் பிடித்தமானதொன்றைக் கட்டிக்கொண்டு அவனோடு ஆசையாக கிளம்பிச் சென்றாள். சஞ்சனா பூம்பொழிலுக்கு வந்த நாளில் இருந்து கோயிலுக்கு சென்று வந்ததோ ஒரு முறை தான். அன்று தான் ஷக்தி சஞ்சனா கழுத்தில் தாலியை கட்டியது. அதன் பின்னர் இருவரும் ஜோடியாக இன்று தான் கோயிலுக்கு செல்வது. ஷக்திக்கு பெரிய கடவுள் நம்பிக்கை எல்லாம் ஒன்றும் கிடையாது. என்ன நினைத்தானோ இன்று அவனாகவே முன் வந்து அவளை கோயிலுக்கு அழைத்துச் சென்றான்.

கோயிலில் அர்ச்சனையை முடித்துக் கொண்டு வந்து படியில் அமர்வதற்கும் வாசுகியும் சின்னாவும் படியேறி அவர்கள் முன் வரவும் சரியாக இருந்தது. ஷக்தியை கண்டவுடன் வேறெதுவும் யோசிக்காமல் வாசுகி ஓடி வந்து ஷக்தியை ஆறத்தழுவிக் கொண்டாள். ஒருவர் மாறி ஒருவர் கட்டிக்கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர்.

"ஐயா வரலையாம்மா?"

"இல்லப்பா. இன்னைக்கி காலைல எழுந்த்ததுல இருந்து என்னென்னமோ நடந்து போச்சுப்பா என்று ஆரம்பித்து சுந்தரம் அபிராமிக்கு அவசரக் கல்யாணம் செய்ய திட்டமிட்டது, அபிராமி ராவோடு ராவாக லெட்டர் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றது, காலை 5 மணிக்கெல்லாம் சுந்தரமும் கனகாவும் பெண்ணைக் காணவில்லை என தங்கள் வீட்டுக்கு வந்து ஐயாவின் காலில் விழுந்து அழுதது, இப்பொழுது ஐயாவும் சுந்தரமும் 4,5 வண்டிகளில் ஆட்களை ஏற்றிக் கொண்டு அபியை தேடிச் சென்றிருப்பது வரை கண்ணீரோடு கூறி முடித்தாள். வாசுகி சொல்லக் கேட்க கேட்க சஞ்சனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. வாசுகியோடு சேர்ந்து சஞ்சனாவும் கண் கலங்கினாள். ஷக்தியும் அதுக்கு தோதாய் உணர்ச்சிவசப்படுவது போல கொஞ்சம் நடித்து வைத்தான்.

"அபி தப்பான முடிவு ஒன்னும் எடுத்திருக்க மாட்டளேப்பா....." என்று சொல்லி வாசுகி விம்மத் தொடங்க அந்த அழுகையில் சஞ்சனாவும் சின்னாவும் கூட கலந்துக் கொண்டனர்.

"இல்லைம்மா அபி ரொம்ப தைரியமான பொண்ணு. தற்கொலை தான் அவ எண்ணமா இருந்தா அவ வீட்டை விட்டு வெளிய வந்திருக்க மாட்டா. அபி கிடைச்சிடுவா. நீ பயப்படாத. மாமா அத்தையைவும் தைரியமா இருக்க சொல்லு. எங்களை சந்திச்சதை பத்தி யார்கிட்டயும் சொல்லாத. முதல்ல நம்ம அபியை தேடி கண்டு பிடிக்கிற வழியை பார்க்கலாம். நீ சீக்கிரம் சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போய் ஆக வேண்டியதை பாரு. நானும் போய் அவளை தேடிப் பார்க்கிறேன்"

ஷக்தியையும் சஞ்சனாவையும் பார்த்த சந்தோஷத்தில் மனம் நிறைய, ஷக்தி கொடுத்த நம்பிக்யை கொண்டு மனதை தேற்றிக் கொண்டு வாசுகி அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு சின்னாவோடு கோயிலுக்குள் சென்றாள்.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஷக்தி. அபி சின்ன பொண்ணு. அவளுக்கு ஒன்னும் நடந்திருக்காதுல்ல? எங்கயாச்சும் பத்திரமா இருப்பால்ல?" வழி நெடுகிலும் அபியைப் பற்றியே நினைத்து அழுது கொண்டு வந்தாள் சஞ்சனா. ஷக்தி சஞ்சனாவுக்கு ஆருதல் சொன்னான் ஆனால் என்ன நினைத்தானோ தெரியாது நேற்று இரவு நடந்தது எதையும் பற்றி அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.

தூக்க மாத்திரையின் உதவியோடும் உடலும் மனதும் நாள்க்கணக்காய் சோர்ந்து போய் இருந்த்ததினாலும் அபிராமி அன்று அசந்து தூங்கினாள். அவள் எழுந்து மணியை பார்த்த போது மதியம் 1:30 மணி. ஒரு நிமிடம் தான் எங்கு இருக்கிறோம், இந்த நேரத்தில் என்ன தூங்கிக் கொண்டு இருக்கிறோம் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. தான் எங்கு இருக்கிறோம் என்ன நடந்தது என்பது அவளுக்கு புரிய ஒரு சில நிமிடங்கள் ஆனது. எது எப்படியோ அந்த புதிய சூழ்நிலை ஒரு புது உற்சாகத்தை கொடுக்க எழுந்து சென்று தலைக்கு ஊற்றி விட்டு வந்து பீரோவில் இருந்த ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். அபிக்கு பாவாடை தாவணி தான் அணிந்து வழக்கம். அஷோக்கின் அக்காவின் சுடிதாரை அணிந்து கொள்ள கூச்சமாய் இருக்க அதற்கு புடவையே பரவாயில்லை என்று புடவையை அணிந்து கொண்டாள் அவள். புடவை அணிந்து கண்ணாடி முன் நின்று பார்க்க புதிதாக பிறந்தது போல இருந்தது அவளுக்கு. பசி வயிற்றை கிள்ளுவதை உணர்ந்த்தவள் தயக்கத்தோடு கதவைத் திறந்து கொண்டு மாடிப்படி இறங்கி கீழே சென்றாள். கீழே சாப்பாடு தயாராய் இருப்பதற்கு அறிகுறியாய் மேஜை மீது பாத்திரங்கள் மூடிகள் சகிதம் காணப்பட சோபா மீது அமர்ந்து சிறு பிள்ளை போல வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டு இருந்தான் அஷோக். அபியை எதேர்ச்சையாக கண்டவன் "குட் மார்னிங் அபிராமி வாங்க கார் ஓட்டலாம்" என்று அவளுக்கு கேம் விளையாட அழைப்பு விடுத்தான். அபி என்ன பதில் சொல்வதென்று புரியாமல் தயங்கி நிற்க கேம்மை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அவள் புறம் திரும்பினான்.

"சாப்பாடு எப்பவோ ரெடி. நீங்க வரும் வரை தான் பசியோடு வெய்ட்டிங். சாப்பிடலாமா?" என்றான் அவள் பசியறிந்து.

விருந்து போல வகைவையாய் பரத்தப்பட்டு இருந்த உணவு வகைகளும் பசியும் ருசியும் ஒன்று சேர அபி தான் இருக்கும் இடம் மறந்து நன்றாக சாப்பிட்டாள். அவளோடு கூட அமர்ந்து சாப்பிட மட்டும் செய்யாமல் இடை இடையே ஆஷோக் அவளுக்கு பரிமாரவும் செய்தான். சாப்பிட்டு முடிந்து இருவரும் சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள அவன் அவளை மறுபடியும் கேம் ஆடுவதற்கு அழைத்தான். தனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது என்று மறுத்தவளை "இது என்ன பெரிய விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புற மேட்டரா என்ன... " என்றவன் படிப்படியாக விளையாட்டின் நுனுக்கங்களை அவளுக்கு விளக்கி ஒரு வழியாக அவளோடு கூட சேர்ந்து விளையாடவும் செய்தான். அஷோக்கும் அந்த புதிய சூழ்நிலையும் தனக்கு வேறு கதி இல்லை என நேற்று வரை நம்பி இருந்தவளுக்குள் ஒரு புது நம்பிக்கையை விதைத்திருந்தது. அபி ஒரு சாதாரண குடும்பப் பெண். ஆச்சியின் மறைவும் அதன் பின்னர் நடந்த சம்பவங்களும் தான் அவள் குடும்பத்தையே தலைகீழாக கவிழ்த்திப் போட்டது. மற்ற படி பணத்துக்கு குறைவில்லாத குடும்பம் ஆனால் ஆச்சி பழக்கப்படுத்தியதன் படி பாவாடை தாவணி தவிர வேறெதுவும் அணிந்து பழக்கம் இல்லை. தங்கை சிவகாமி வீட்டுக்கு ஆண் வாரிசு போல வழக்கப்பட்டவள். அவள் கேம் ஆடுவாள், சில சமயங்களில் வாயாடுவாள், நன்றாக படிக்கவும் செய்வாள். அபி ஒரு வாய் இல்லா பூச்சி. வீட்டு வேளைகளையும் வீட்டில் உள்ளோரையும் தவிர அவளுக்கு வேறெதுவும் தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்று அவளுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்த்தது. தெரிந்தோ தெரியாமலோ பேசிப் பேசியே அவள் மனதில் ஷக்தி மீதுண்டான காதலை வளர்த்து விட்டது அவள் குடும்பம் தான். அவளது காதல் வேண்டுமானால் தோற்றுப்போய் இருக்கலாம். ஆனால் அந்த காதல் அவளுக்கு நிறைய கற்றுத்தந்து இருந்தது. அதில் ஒன்று தான் அவளது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவளுக்கு உண்டு என்பது. குறைந்தது தன் மனதுக்கு பிடித்தாள் மட்டும் தான் திறுமணம் செய்து கொள்வது என்பது. மிகுதி வாழ்க்கையையேனும் இயந்திரத்தனமாக இல்லாமல் ரசித்து வாழ விரும்பினாள் அவள்.

ஒருபுறம் தன் கவலை மறந்து அபிராமி அஷோக்கோடு வீடியோ கேம்ஸ் ஆடிக்கொண்டு இருக்க மறுபுறம் ஷக்தி தன் மனைவிக்கு பணிவிடை செய்துக்கொண்டு இருந்தான். மதிய உணவுக்குப் பின்னர் ஷக்தி லாப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்க சஞ்சனா சில நெய்ல்ப்பாலிஷ் பாட்டில்கள் சகிதம் வந்து ஒரு சிங்கிள் சோபாவில் ஏறி சமணங்காலிட்டு அமர்ந்து கொண்டாள். பின்னர் ஒரு காலை முன்னாள் தூக்கி வைத்து அந்த கால்முட்டியில் தன் தாடையை வைத்து மும்முரமாக தான் ஏற்கனவே பூசியிருந்த ஊதா வண்ண நெய்ல்பாலிஷை ரிமூவர் கொண்டு அழிக்க ஆரம்பித்தாள். சஞ்சனா கடல் நீலத்தில் காட்டன் புடவை கட்டி இருந்தால், தலை முடி சுருட்டப்பட்டு ஒரு கொண்டையாக போடப்பட்டு இருந்தது. நெய்ல்பாலிஷ் போடப்படும் பாதத்திலிருந்து கணுக்கால் மட்டும் தெரியும் வண்ணம் புடவை லேசாக உயர்த்தப்பட்டு இருந்தது. கணுக்காலில் தங்க நிறத்தில் கொழுசு. தான் செய்து கொண்டு இருந்த வேலை மறந்து ஷக்தி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

"இந்த பொண்ணு மட்டும் எப்படி எந்த போஸ்ல பார்த்தாலும் கோயில் சிலை மாதிரியே இருக்கா" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் என்ன நினைத்தானோ சஞ்சனாவை நோக்கி சென்று இன்னொரு சிங்கிள் சோபாவை இழுத்து போட்டு அவனும் அதில் ஏறி சமணங்காலிட்டு அமர்ந்து கொண்டான். அவள் நீல வண்ண நெய்ல்பாலிஷை போட ஆரம்பித்ததும் "குடு நான் போட்டு விடுறேன்" என்று சொல்லி அவளது பாதத்தை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டு மிகவும் சிரத்தையாக அவளுக்கு அதை பூசிவிட ஆரம்பித்தான். சஞ்சனாவுக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது ஆனால் அவனை தடுக்கவில்லை. அவள் அதை ரசித்துக் கொண்டு இருந்த்தாள். எல்லா விரலுக்கும் பூசி முடித்தவன் எதையோ பெரிதாய் சாதித்து விட்டவன் போல அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். எதேர்ச்சையாக காலையில் கோயிலில் குங்குமம் வைக்கப்பட்ட அவளது தாலி அவன் கண்ணில் பட தாலிக்கயிற்றுக்குள் தன் ஒற்றை விரலை நுழைத்து அவள் முகத்தை அவன் முகம் நோக்கி இழுத்தான்.

அவளது காதுக்குள் "உன் தாலிக்கு ஆயுசு கெட்டி" என்றான் ஒரு நமுட்டு சிரிப்புடன்.

அவன் கூறியது ரசிக்காமல் "ஏன் இப்போ அதுக்கு என்ன என்றாள்...." குழப்பமாக.

அவள் மனது சஞ்சலப்பட்டதை உணர்ந்தவனாக தாலியில் இருந்து கையை எடுத்து "அதுக்கென்ன சும்மா தான் சொன்னேன் என்றான்.

"பொய் சொல்லாத. நீ இப்போ ஏன் திடீர்னு தாலி ஆயுசுன்னு ஏதேதோ பேசின?" என்றாள் அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்து.

வசமாக மாட்டிக் கொண்டதை உண்ர்ந்தவன் வேறு வழி இல்லாமல் "இல்லை நேத்திக்கி நைட் வண்டில வரப்போ ஒரு லாரிக் காரன் திடீர்னு வந்து குறுக்க போட்டுட்டான். நூழிலைல தப்பிச்சேன்" என்றான் சமாளித்துக் கொண்டு.

ஆனால் அவன் கூறிய பாதி பொய்யும் பாதி உண்மையும் அவளை என்ன செய்ததோ அவனைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழத்தொடங்கினாள் அவள்.

"ஏய் லூசு இப்ப ஏண்டி இப்படி அழுற? அதான் இப்ப உன் முன்னாடி குத்துக்கல்லாட்டம் வந்து நிக்கிறனே அப்புறம் என்ன?" அவளது தலையை வருடி விட்டான். அவள் அவன் கையைத் தட்டி விட்டு மீண்டும் அழுதாள். அவளது அழுகையை அடக்க வேறு வழி தெரியாதவன் அவள் இதழ்களை தன்வசப்படுத்தி அவளுக்கு ஒரு முரட்டு முத்தம் இட்டான்.

"அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றென்னைக் கை விடுமே
விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கைவருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனமெல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்

நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன்"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro