வருவான் 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வேலு, பூவினா, கிரேசா, விஜய் நால்வரும், வேலு வீட்டை நோக்கி சென்றனர். வீடு நெருங்கவும்,

"உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்காங்க? நாங்க அங்கே வர்றதை விரும்புவாங்களா? உங்கள் வீட்டுக்கு ஃபோன் செய்து அனுமதி வாங்குங்களேன். ." என்று பூவினா கூற,

"எங்க வீட்ல இப்போ எங்கம்மா மட்டும்தான் இருப்பாங்க... அப்பா ஏற்றுமதி தொழில் பண்றதால, பெரும்பாலும் வெளிநாடு, வெளி மாநிலத்தில் தான் இருப்பார்.. எங்கம்மா கிட்ட அனுமதி கேட்கத் தேவையில்ல..." என்று கூறி சிரித்தான்.

"உங்க அப்பாம்மாவுக்கு நீங்க ஒரு பிள்ளைதானா? " என்று கேட்டாள் பூவினா.

"இல்லை! எனக்கு ஒரு தங்கை இருக்கா... கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு."

"அவங்க பேர் என்ன?"

"வித்யாலெட்சுமி."

"ஒ!"

வீட்டிற்கு சென்ற நால்வரையும் வேலுவின் அம்மா ஷோபியா வரவேற்றார். பார்ப்பதற்கு அப்படியே வேலுவின் சாயலில் இருந்தார்.

"நாங்க ஒரு வித்யாசமான விஷயத்த பத்தி பேசுறதுக்காக இங்க வந்துருக்கோம்மா. இடைஞ்சல் இல்லாமல் பேசனும், அதான் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல ஜெயராமும் வந்துடுவான்." என்று கூறினான் வேலு.

"சரி! உட்காருங்க.. இதோ வர்றேன்." என்று கூறி விட்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில் ஒரு பெண் குடிப்பதற்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

"உங்கம்மா சாப்பாடு தயார் பண்ணப் போறாங்க சார்...வேண்டாம்னு சொல்லுங்க." என்றான் விஜய்.

"எல்லா அம்மாவும் ஒரே மாதிரி தான் விஜய். தடுக்க முடியாது... இன்னைக்கு நீங்க எல்லாரும் இங்கதான் சாப்பிடனும்..." என்று சிரித்தான் வேலு.

  சிறிது நேரத்தில் ஜெயராம் உள்ளே வந்து வேலுவின் அருகில் யோசனையுடன் அமர்ந்தான்.

  'ரெண்டு பொண்ணு இருக்கு! இதுல யார செலக்ட் பண்ணன்னு கேட்க போறானா? ஒரு பொண்ண லவ் பண்றான் னு நினைச்சேனே? இவனுக்கு எப்படி ரெண்டு ரெண்டா மாட்டுது?  என்று  மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்த ஜெயராமை,

  "டேய்! என்னடா? கண்ண திறந்துவச்ச்சுக்கிட்டே கனவுகண்டுகிட்டிருக்க!!" என்று வேலு, ஜெயராம் முகத்தின் முன் கையாட்ட,

  தூக்கத்திலிருந்து விழித்ததுபோல், "ம்ம் சொல்லு வேலு, இப்ப என்ன? யாரு உனக்கு பொருத்தமா  இருக்காங்கன்னு சொல்லனும் அதானே? கொஞ்சம் யோசிக்கவிடு வேலு."

  "என்னது?!!" என்று ஒரே நேரத்தில் நால்வரும் ஜெயராமைப் பார்த்து எகிற,

  'தப்பா ஃபீல் பண்ணிட்டேனோ? ' என்று மீண்டும் ஆழ்ந்த சிந்தனைக்குள் போன ஜெயராமை, 'அவன் என்ன சொன்னான்' என்பது தெளிவாக புரிந்தாலும், காட்டிக்கொள்ளாமல்...

  "சும்மா விளையாடாத ஜெயராம்... நாங்க உன் ஃபிரண்ட் ரகுவை பத்தி கேட்க வந்தோம்..." என்று வேகமாக விஷயத்துக்கு வந்தான் வேலு.

இந்த இரண்டு பெண்களில் ஒருத்திக்காக, ரகுவிடம் தன்னை காதல் தூது போகச் சொல்கிறானோ? என்று நினைத்த ஜெயராம்,

  "ரகுவா? அவன விட்டுடுங்க வேலு... அவர் பாவம் லவ் ஃபெயிலியர்...." என்று சட்டென்று கூறியவனுக்கு, ரகுநந்தன் கண்கலங்கி நின்ற கோலம் தெள்ளதெளிவாக ஞாபகத்திற்கு வந்தது.

  "டேய்! எங்களை பேசவிடுடா. .. நீயா எதாவது பேசாத..." என்று வேலு கூறிக் கொண்டிருக்கும் போதே,

  "ரகுநந்தன் லவ் ஃபெயிலியரா? யார லவ் பண்ணார்? அந்தப் பொண்ணு இப்ப எங்க இருக்காங்க?" என்று அடுத்தடுத்து பூவினா கேட்க,

  இவ வந்த வேலை என்ன? இப்ப கேட்டும் கேள்வி என்ன?' என்று நினைத்த வேலு,

  "அந்த பொண்ணு  யாருன்னு தெரிஞ்சுக்க ஏன் இவ்வளவு அவசரம்?  வந்த வேலைய பார்ப்போமா?" என்று கடுப்பான குரலில் கூறிவிட்டு,

  "உன் ஃபிரண்ட் டை அன்னைக்கு காலேஜில் பார்த்த பிறகு வேற எங்காவது பார்த்தாயா?" என்று ஜெயராமிடம் கேட்டான் வேலு.

  "எனக்கு உடம்பு சரியில்லாதப்ப எங்க வீட்டுக்கு வந்தார்."

  "என்ன சொல்றீங்க?" என்ற கிரேசா அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டாள்.

  'இப்ப எதுக்கு இந்த பொண்ணு இவ்வளவு அதிர்ச்சி அடையுது? ரகு விற்கு தெரிஞ்ச பொண்ணா இருக்குமோ? ' என்று நினைத்த ஜெயராம், வேலுவிடம்,

"என்னாச்சு வேலு ஏதாவது பிரச்சினையா?" என்று கவலையுடன்  கேட்டான் ஜெயராம்.

இது எதையும் கவனிக்காத வேலு,
'ஜெயராம் வீட்டிற்கு ரகுநந்தன் சென்றானா?' என்று யோசித்தவன்,

  "ரகு, உன் வீட்டுக்குள்ள வந்தாரா?... இல்லை... வீட்டு வாசல்ல நின்னாரா?" என்று சந்தேகமாக கேட்டான் வேலு.

  "வாசல்ல நின்னா எனக்கெப்படி தெரியும் வேலு... இரவுமுழுவதும் என் கூடவே இருந்து வைத்தியம் பண்ணினார்."

  "உங்களைத் தொட்டா வைத்தியம் பார்த்தார்." என்று கிரேசா கேட்க,

  "ஆ...மாம்! டாக்டர் ன்னா தொடாம எப்படி வைத்தியம் பார்ப்பார்? நீங்க ஏன் ரகுவைப்பத்தி விசாரிக்கிறீங்க?" என்று கிரேசாவிடம் கேட்டான்.

  "ரகுநந்தனை எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா?" என்று வேலு இடைவெட்டி கேட்க,

  "அவர் வந்தா அறிமுகப்படுத்துறேன்."

  "ஒரு அவசரமான வேலை இருக்கு ஜெயராம்... என்ன ஏதுன்னு கேட்காம எங்களை, அவர் இருக்கும் இடத்துக்கு  கூட்டிட்டு போறியா?" என்று கேட்டான் வேலு.

  "அவர்... இந்நேரம் எங்க இருப்பார்னு தெரியாதே!" என்று வருத்தப்பட்டான் ஜெயராம்.

   "ஆஸ்பத்திரில போயி பார்ப்போம் வேலு. எனக்கு இப்ப தான் ஞாபகத்துக்கு வருது... நாங்க ரெண்டு தடவை, ரகுவை பார்க்க  ஆஸ்பத்திரிக்கு போனோம். ஆனா  ரகுநந்தன் வரலைனு தான் சொன்னாங்க... மத்தபடி வேற எதுவும் சொல்லல... அங்க போயி விசாரிப்போமா?" என்று வேலுவிடம்  கேட்டாள் பூவினா.

  "இதுவரை இந்திரலோகத்துல இருந்தியா வினி? இப்ப வந்து சொல்ற?"

  "அன்னைக்கு நாங்க ரகுநந்தனை பார்க்க போனது உங்களுக்குத் தெரியாதாக்கும் ..."

  "ஆனா! 'அவர பார்க்கலை'ன்னுதான் நீ சொன்ன வினி...ஆஸ்பத்திரில  இருந்தவர்,  'ரகு, ஆஸ்பத்திரிக்கு வரலை'ன்னு சொன்னதா சொல்லலை. ரெண்டு பதிலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு வினி."

  "கொஞ்சம் நிறுத்துங்க.... நீங்க  எதுக்கு ரகுவை தேடுறீங்க? காதலா?
இல்ல, அவருக்கு கல்யாணம் பேசுறாங்களா?" என்று கேட்டான் ஜெயராம்.

  "காதலா?!! ஆமாஆஆ, வரும்போதே ஒரு முடிவோட தான் வந்தியா? " என்று கேட்டான் வேலு.

  "இல்ல வேலு... இங்கே வந்த பிறகுதான்.... நீ ரெண்டு பொண்ணு கூட இருக்கிறத பார்த்த பிறகுதான் ... குழம்பிட்டேன்."

  "இப்ப இதுவா முக்கியம்? வாங்க ரகுநந்தனை பார்க்க போகலாம்" என்று எழுந்தாள் கிரேசா.

இரண்டு முறை பூவினா, ஆஸ்பத்திரிக்கு  சென்று, ரகுவை கேட்ட பொழுது, 'அவர் வரலைன்னு ஏன் சொல்லனும்? அப்படினா, ரகு உயிருடன் இருப்பதாகத்தானே அர்த்தம்?!! இதுல வேற ஏதாவது வில்லங்கம் இருக்குமோ?.... இப்பொழுதும் பூவினாவுடன் சென்று விசாரித்தால், அவர்கள் உண்மையை மறைக்க வாய்ப்பிருக்கிறது.' என்று நினைத்த வேலு பூவினாவிடம்,

      "ஆஸ்பத்திரிக்கு போனதும், நீ, கிரேசா, விஜய் மூவரும் ஆஸ்பத்திரிக்கு வெளியவே நின்றுகொள்ளுங்கள், நான் ஜெயராமை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குள்ள போய்,  அங்கே ரகுநந்தனை சந்தித்தால்! மொபைலில் அழைக்கிறேன்.பிறகு நீங்க வாங்க." என்று கூறிவிட்டு, ஜெயராமுடன் சென்றான்.

   வேலுவும், ஜெயராமும் ஆஸ்பத்திரி காம்பவுண்ட் க்கு உள்ளே செல்ல, ஆஸ்பத்திரியில் திடீரென்று காற்று பலமாக வீசத்தொடங்கியது.

  "வா!" என்று யாரோ அழைப்பதுபோல் வேலுவின் காதுகளில் தெளிவாகவே கேட்டது... ஒருவேளை காற்று பலமாக வீசுவதால் இப்படி ஓசை கேட்கிறதோ?'
என்று நினைத்த  வேலு, ஜெயராமைப் பார்க்க, ஜெயராமின் முகத்தில், அவ்வளவு  பலமான காற்று அடித்தபோதும் வியர்வை வழிந்தது... அவன் கண்களில் பதட்டம் தெரிந்தது... இவனுக்கு  ஏன் இப்படி வேர்க்கிறது? பயப்படுகிறானா? !! இவனிடம், இதுவரை  நடந்ததைக் கூறவில்லையே?' என்று யோசித்த வேலு,

  "ஜெயராம்! என்னாச்சு? ஏன் இந்த மாதிரி முழிக்கிற?"

  "வேலு! நான் இங்கே... வேலு! எனக்கு இங்கே. ... வேலு, ரகு... " என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, ஜெயராம், "ரகுஊஊ" என்று கத்திக்கொண்டு, மெயின் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஒட ஆரம்பித்தான்.

'இவனுக்கு என்ன ஆச்சு?' என்று பதறிய வேலு,

  "ஜெயராம் இந்த பக்கம் எங்கே போற? நில்லுடா. .." என்று கத்தியபடியே பின்னால் ஓடினான் வேலு.

  'பிரேதபரிசோதனை கூடம்' என்று போர்டு தொங்கிய கட்டிடத்தை நோக்கி ஜெயராம் ஓட, வேலு, ஜெயராமை எட்டி பிடித்து விட்டான். தன்னுடைய கைகளை பிடித்து நிறுத்திய வேலுவைப் பார்த்த ஜெயராம்,

  "என்ன சார் பண்றீங்க? என் அவசரம் புரியாம, என்னை ஏன் பிடிச்சு நிறுத்துறீங்க?" என்று கோபமாக கேட்டான் ஜெயராம். 'இவனுக்கு கோபமெல்லாம் வருமா?' என்று நினைத்த வேலு,
  
   "சார் -ராஆ !!" என்னடா ஆச்சு உனக்கு?" என்று கேட்க,

  "நீங்க யார் சார்? என்னை எப்படி
ஒருமையில் கூப்பிடுறீங்க? விடுங்க சார், அங்கே என் நண்பரை தடுத்தே ஆகனும். என் கையை விடுங்க.." என்று கூறி கையை உதறிவிட்டு, மீண்டும் ஓடத்தொடங்கிய ஜெயராமின் குறுக்கே வந்து நின்ற வேலு,

  "ஜெயராம் உனக்கு என்ன ஆச்சு? ஏன் வித்யாசமா பேசுற?" என்று கேட்டான்.

  வேலுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவனை விலக்கிவிட்டு, ஓடப்போனவனை மீண்டும் கையைப்பிடித்து இழுத்து, ஜெயராமின்  தோள்களை இரண்டையும் இறுகப் பற்றிக் குழுக்கினான் வேலு. கண்கள் சொருக, தலையைப்பிடித்துக் கொண்ட ஜெயராம்,

  "சார்! நான் பிழைக்க மாட்டேன். ஆனால் ரகுவை காப்பாத்துங்க ப்ளீஸ்" என்று அலறியபடி தலையை இரு கைகளாலும் பிடித்தபடி அப்படியே சரிந்தான் ஜெயராம். அவன் கண்களில் மரணவேதனை தெரிய பதறிப்போன வேலு,

  "யாராவது இருக்கீங்களா? வாங்க!" என்று சுற்றிலும் பார்த்து, கத்தியபடி ஜெயராமைப் தூக்க குனியும் போதே, ஜெயராமைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடினான் ரகுநந்தன்!!!... 

  இப்போழுதும் ரகுநந்தனின் முகத்தை பார்க்க முடியாவிட்டாலும், வேலுவிற்கு நன்றாக தெரிந்தது அவன் ரகுநந்தன் தான் என்று.

  "ரகு! நில்லு! ஜெயராமை எங்கே கொண்டு போற? ரகு!" என்று கத்தியபடி ரகுநந்தனின் பின்னால் ஓடினான் வேலு...

  எவ்வளவு வேகமாக ஓடியும் ரகுநந்தனை பிடிக்க முடியவில்லை... ரகுநந்தன் ஒரு அறைக்குள் கொண்டு சென்று, ஜெயராமை படுக்கவைத்து அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்க, ஜெயராமிடம் அசைவே இல்லை...

  "என்னாச்சு ஜெயராமுக்கு? உன்னை தேடித்தான் வந்தோம்... முதல்ல உன் முகத்தை காட்டு, " என்று கூறி, தனக்கு முதுகை காட்டி நின்ற ரகுநந்தனின் தோள்களை பிடித்து திருப்ப முயற்சிக்க, ரகுநந்தன், ஓங்கி ஒரு  அறைவிட்டான் ஜெயராமை. பதறிப்போன வேலு, ரகுநந்தனை விட்டு விட்டு, ஜெயராமை நெருங்க, ஜெயராம் கண்விழித்தான். கண்விழித்த ஜெயராம் ரகுநந்தனை பார்த்து,

  "ரகு! உனக்கு ஒன்னும் ஆகலையே? வைதேகி கிட்ட பேசினேன். .. அவங்க உன்னை புரிஞ்சுக்கிட்டு உன்னை பார்க்கனும் னு சொன்னாங்க... அதை சொல்லத் தான் வேகமா வந்தேன் எனக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சு... நான் வர்றதுக்குள்ள உனக்கெதுவும் ஆயிடக் கூடாதேன்னு பயந்தேன்... நல்லவேளை! உனக்கு ஒன்னும் ஆகல. .." என்றவன் ரகுநந்தன் தோள்களிலேயே சாய, ஜெயராமை அப்படியே படுக்க வைத்த ரகுநந்தன், வேலுவை திரும்பி பார்க்காமலே,

  "இவனுக்கு ஒன்னுமில்லை... இப்ப கண் முழிச்சுடுவான்... இதோ இப்ப  வர்றேன்." என்று கூறி விட்டு வேறுபுறம் திரும்பி நடக்க,

  "ரகு! நில்லு! ஏன் உன் முகத்தை எனக்கு காட்டாம திரியற? இன்னைக்கு உன்னை விடப்போறதில்லை." என்று கூறி வேகமாக ரகுவை தொட கை நீட்ட,

  "யார் சார் நீங்க? இங்க எப்படி வந்தீங்க?" என்று குரல் கேட்டு,  வேலு திரும்ப அங்கே ஒரு நர்ஸ் நின்றுகொண்டிருந்தாள்.

  "இவரைத் தேடிவந்தோம். " என்று ரகு வைக் காட்ட,  அதற்குள் ரகு எங்கோ சென்றுவிட்டான். அந்த பக்க கதவு வழியாக சென்று பார்க்க, வராண்டா காலியாக இருந்தது.

  "இங்கேயெல்லாம் வரக்கூடாதுங்க. .. யார் இவரு? இங்க வந்து படுத்திருக்காரு." என்று ஜெயராமைப் காட்டி கேட்க, நர்ஸ் அருகில்  வந்த வேலு,

  "இவன் என் நண்பன். திடீர்னு மயங்கி விழுந்துட்டான். எங்களுக்கு தெரிஞ்ச டாக்டர்தான் இங்க கொண்டு வந்தார்." என்று வேலு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெயராம் கண்ணத்தில் தட்டி எழுப்ப முயற்சி செய்தபடி,

  "எந்த டாக்டர் இங்கே கொண்டு வந்தார்? முதலுதவி செய்யக்கூட இந்த அறையில் எதுவும் இல்லையே?" என்று கூறியபடி கொஞ்சம் பலமாக ஜெயராமின் கண்ணத்தை தட்ட, ஜெயராம் கண்விழித்தான்.

  "வேலு எனக்கு என்ன ஆச்சு? ரகுவை பார்த்துட்டியா?" என்று எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக கேட்டான். வேலுவால் எதையும் நம்பமுடியவில்லை.  ஜெயராமை கூர்ந்து பார்த்த வேலுவிற்கு, 'ஜெயராமும், ரகுவும் சேர்த்து கொண்டு நடிக்கிறார்களோ?' என்று சந்தேகம் வந்தது.

  "ஒன்னுமில்லை வா! இறங்கு. வீட்டுக்கு போவோம்."

  "ரகுவை பார்க்கவில்லையா?" என்று அப்பாவியாக ஜெயராம் கேட்க, அவன் கண்களை கூர்ந்து பார்த்த வேலு,

  "எந்திரிச்சு வா! போய்  விசாரிக்கலாம்." என்று  கூறி ஜெயராம்  இறங்குவதற்கு உதவினான்.

  "யாரப் பார்க்க வந்தீங்க?" என்று நர்ஸ் மீண்டும் கேட்டாள்.

  "என் ஃபிரண்ட் ரகுநந்தன் இங்கே டாக்டரா இருக்கார். அவரை பார்க்க வந்தோம் சிஸ்டர்" என்றவனை கவனித்து பார்த்தான் வேலு.

  இருவரையும் ரிசப்ஷனுக்கு கூட்டிச்சென்றார் நர்ஸ். ரிசப்ஷன் ஹாலுக்குள் வேலு, ஜெயராமை பின்தொடர்ந்து செல்ல, அங்கே, பூவினா, விஐய், கிரேசா மூவரும் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தவர்கள்,  வேலுவும் ஜெயராமும் வருவதைப் பார்த்து விட்டு அவர்களை நோக்கி வந்தனர்.

  "எங்கே போனீங்க வேலு?" என்று கேட்டபடி வந்த பூவினாவிடம், "ரகுநந்தனைத் தான் தேடுகிறோம்." என்றான்.

  "ரகுநந்தனை பார்த்தீர்களா? நேரம் ஆக ஆக பயமா இருந்துச்சு அதான் நாங்களும் உள்ளே வந்துட்டோம்." என்று கூறினாள்பூவினா.

  கிரேசா, "வாங்க! இந்தப் பக்கம்தான் டாக்டர்ஸ் அறை இருக்கு." என்று கூறி முன்னால் நடக்க, ஜெயராம் தொடர்ந்தான். வேலு, நர்ஸுக்கு நன்றி சொல்வது போல் பின்தங்க, பூவினாவும், விஜய்யும் வேலுவிற்காக நின்றனர். பத்தடி முன்னால் ஜெயராம் சென்றதும், வேலு பூவினாவிடம்,

  "ரகுவை பார்த்துவிட்டேன் மறுபடியும் தப்பிவிட்டான்... நான் கேட்கிறதுக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு." என்று பூவினாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டான் வேலு.

  "சரி" என்று கூறி தலையசைத்தாள் பூவினா.

  "ஜெயராமையோ, ரகுநந்தனையோ, இந்த ஆஸ்பத்திரில ரகுநந்தனை பார்க்கிறதுக்கு முன்பு, எங்காவது பார்த்திருக்கிறாயா? என்று கேட்டான்.

  "இல்லை!" என்று பூவினா தலையாட்ட, சிறிது யோசித்த வேலு

  "உனக்கு எப்பவாவது ஆக்ஸிடன்ட் ஆயிருக்கா?"

  "எனக்கு விபரம் தெரிஞ்சு இல்லை." என்று பூவினா கூறவும், தன்னுடைய மொபைல் ஃபோனில் யாருடைய நம்பரையோ அழுத்தியபடி, பூவினாவிடம் கேட்டான்.

  "யாராவது ஆக்ஸிடன்ட் ஆகி ரோட்ல கிடக்கும்போது அவங்களை காப்பாத்தாம, பயந்து
அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறியா?"

  "ஆக்ஸிடெண்ட் ஆனா,... நான் பக்கத்துலேயே போகமாட்டேன். நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடந்ததில்லை...ஏன் இப்படி கேட்கிறீங்க?" என்று கேட்டாள் பயந்தவளாக.

"கொஞ்சம் பொறு!"என்று பூவினாவிடம்  சைகை காட்டிவிட்டு,

  "சார்! நான் வேலு பேசுறேன்.. பூவினாவிற்கு எப்பொழுதாவது பெருசா ஆக்ஸிடன்ட் ஆகி யிருக்கா?" என்று கேட்டான். 

  ஜெயராமும், ரகுநந்தனும்,வேலு சந்தேகப்படுவது போல் நடிக்கிறார்களா? ஏன்?

  பூவினாவிற்கு ஆக்ஸிடன்ட் ஆனதா இல்லையா?

  அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். . .
      💍💍💍💍💍💍
 

 

 

  
  
 

 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro