💖13💖

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திடீரென மின்னல் வெட்டி, பயங்கர சத்தத்துடன் இடி முழங்கவும், அரண்டு போன சுபத்ரா, ஜிஷ்ணுவின் கைகளை பிடித்தவாறு, கண்களை இறுக மூடிக்கொண்டு, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

'என்னடா இது? இன்னைக்கு யார் முகத்தில் முழிச்சேன்? நான் நெனச்சு பார்க்காத தெல்லாம் நடந்துட்டு இருக்கு... சூப்பர் சந்தர்ப்பம்டா ஜிஷ்ணு! விட்டுவிடாதே! பயந்தவளை அரவணைப்பது போல், மெல்ல அணைத்துக்கொள்!' என்று ஜிஷ்ணுவின் மூளை அவசர ஆணை பிறப்பிக்க,

வலது கையால் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு, இடது கையால் தன் தோளில் சாய்ந்திருந்த சுபத்ராவின் தலையை மெல்ல வருடி, "ஒன்னுமில்ல! ஒன்னுமில்ல! நான் தான் பக்கத்தில இருக்கிறேன்ல?.." என்று கூற,

"என்னாச்சு? கண்ணத் திறந்துகிட்டே கனவு காணுற மாதிரி இருக்கு!! ஜீப் இன்னைக்குள்ள கிளம்புமா?" என்று சுபத்ராவின் கிண்டல் குரல் கேட்க,

சுபத்ராவின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து, ஜிஷ்ணு திரும்பி தன் தோளில் சாய்ந்து இருந்த சுபத்ராவைப் பார்க்க, என்ன ஒரு ஆச்சரியம்! அதுவரை அவன் தோளில் பயந்து நடுங்கியவாறு சாய்ந்து இருந்த அவள், அருகில் இருந்த சீட்டில், அதுவும் ஜன்னலை ஒட்டி அமர்ந்துகொண்டு, ஜிஷ்ணுவை பார்த்தாளே ஒரு பார்வை!! இந்த ஜென்மத்துக்கு அவனால் மறக்க முடியாத பார்வை அது!

அப்பொழுதும், என்ன நடந்திருக்கிறது? என்பது ஜிஷ்ணுவிற்கு புரிந்தும், புரியாமலும்,

" என்னாச்சு?" என்று சுபத்ரா விடமே கேட்டான்.

சுபத்ரா ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்து குறும்பாக சிரிக்க, ஜிஷ்ணுவிற்கு மூளை வேலை செய்யத் தொடங்கிவிட்டது...

'ஆஹா இவ இடி சத்தத்துக்கு பயப்படல போலயிருக்கே? அப்போ, என் தோளில் சாய்ந்து இருந்ததெல்லாம்! என் கற்பனையா? மானத்தை வாங்கிட்டியே டா ‌ஜிஷ்ணு!' என்று நினைத்தவன்,

   'நான் என்னமாதிரி கற்பனையில மிதந்தேன்னு இவளுக்கு தெரிஞ்சிருச்சோ?' என்று சுபத்ராவை அவள் அறியாதவாறு கடைக் கண்ணால் பார்க்க, அவள் தன் கைகளால் வாயை மூடியபடி இன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

'சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது?' என்று தெரியாமல், தனது சீட்டில் விரைப்பாக அமர்ந்தவாறு, ஸ்டைலாக செருமிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.

ஜிஷ்ணுவின் இந்த செய்கை சுபத்திராவுக்கு மேலும் சிரிப்பை உண்டுபண்ண, உதடுகளை அழுந்த மூடியவாறே, ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்.

ஜீப் மெதுவாக நகர ஆரம்பிக்கவும், லேசாக திரும்பி ஓரக்கண்களால் ஜிஷ்ணுவை பார்த்தாள் சுபத்ரா.

அவள் பார்ப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்த ஜிஷ்ணு, அவள்  கண்களில் மின்னும் குறும்புக்கான காரணத்தை நினைத்து, சிறிது சங்கோஜத்துடன், இரு தோள்களையும் சற்று ஏற்றி இறக்கி, கெஞ்சும் பாவனையில் கண்களால், 'போதும் விட்டுடேன்!' என்பது போல் பார்த்தான்.

இத்தனை நாட்களில் பொறுப்பான ஆபிசராக, வீட்டிற்கு வந்தபோது, மரியாதைக்குரிய விருந்தாளியாக தெரிந்த ஜிஷ்ணு, முதன்முறையாக ஒரு கல்லூரி மாணவனாக, விளையாட்டுப்பிள்ளையாக, குறும்பு செய்து மாட்டிக் கொண்டு விழிக்கும் இளைஞனாக, சுபத்திராவின்   கண்களுக்குத் தெரிந்தான்!

    இந்த ஜிஷ்ணுவை சுபத்ராவிற்கு மிகவும் பிடித்திருந்தது... அவனை மேலும் சீண்ட தோன்றியது...

'இவன் எப்பொழுதும், இந்த மாதிரி இருந்தால், இவனுடன் பழகுவதற்கு இலகுவாக இருக்கும்.' என்று எண்ணிய சுபத்திரா,

ஜிஷ்ணுவைப் பார்த்து, மென்மையான புன்னகை ஒன்றை சிந்தி விட்டு, ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

அதுவரை சுபத்ராவை பார்த்துக்கொண்டிருந்த ஜிஷ்ணு, 'இவ்வளவு நேரம் நம்மாலேயே குறுகுறுன்னு பார்த்தா... ஏதாவது பேச போறாளோ?ன்னு பாத்துட்டு இருக்கேன்... ஒரு டைப் ஆ சிரிச்சுட்டு, திரும்பிக்கிட்டா!!... 'இவ மனசுல என்ன தான் இருக்கு?' என்று யோசித்தவனாக ரோட்டைப் பார்த்து ஜீப் ஐ ஓட்டினான்.

அதே நேரத்தில் சுபத்திராவும், ஜிஷ்ணுவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்...

  ஜிஷ்ணு வை முதல்முதலாக பார்த்தது... ஆபிஸில் பிஏ வாக சேர்ந்த முதல்நாள் ஜிஷ்ணு செய்த குறும்பு...
தனக்காக அலுவலத்தில் பணியாற்றுபவர்களிடம் கர்ஜித்த ஜிஷ்ணு... ஜாகிங் உடையில் தன் வீட்டு ஷோபாவில் அமர்ந்து, பாடிக்கொண்டு வந்த தன்னைப் பார்த்த ஜிஷ்ணு...‌ இதோ சிணுங்கிய மனநிலையில் ஜீப் ஓட்டும் ஜிஷ்ணு.... என்று மாறி மாறி சுபத்ராவின் கண்களுக்குள் வந்து ஜிஷ்ணு சிரித்தான்.

   ஜிஷ்ணுவை நினைப்பதே, சுபத்ராவிற்கு, மனதுக்குள் பன்னீர்பூ மழை பொழிந்தது போலிருந்தது. பன்னீர் பூவின் வாசனையாக அவள் உயிர் வரை கலந்தான்... நெஞ்சுக்குள் இன்பமான படபடப்பு.... புரிந்தும் புரியாமலும் உணர்ந்தும் உணராததுமான ஒருவகையான சந்தோசம் அவள் தலைக்குள் ஸ்லோமோஷனில் பவனி வந்தது...

ஜிஷ்ணுவின் அருகில் அமர்ந்து, அம்மலைப் பாதையில் பயணிப்பது, சுபத்ராவிற்கு ஏதோ ஒரு வகையான சுகானுபவமாக இருந்தது...

   இந்த வித்தியாசமான உணர்வில் பிணைக்கப்பட்ட சுபதாராவின் முகத்தில் தேஜஸ் கூடி பளபளத்தது... ஏனென்றே விளங்காமல், அவள் தனக்குள்ளேயே சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள்....

சுபத்ராவின் மன நிலையை உணராத ஜிஷ்ணு,

  'இன்னைக்கு இவ்வளவு போதும்.... இதற்கு மேல் ஏதாவது செய்து, இந்த நல்ல சூழ்நிலையைக் கெடுக்க வேண்டாம்...' என்று எண்ணியபடி, மீண்டும் ஏதோ ஒரு பாடலை விசிலடித்தபடி, ஜீப் ஐ சாதாரண வேகத்தில்  ஓட்டினான்.

இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாவிட்டாலும், அவ்வப்போது திரும்பி, ஒருவரைப் பார்த்து ஒருவர், புன்னகை செய்து கொண்டனர்....
உதடுகள் தான் பேசவில்லையே தவிர மனம் பேசுவதை, இருவருமே உணர்ந்தனர்....

என்னதான் சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தாலும் மலைப்பிரதேசம் என்பதால் இதமான குளிரும், அதனுடன் சேர்ந்து வந்த மூலிகை வாசமும் சேர்ந்து இருவரையும் நிஜமாகவே சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதை போலிருந்தது.

  ஃபேக்டரிக்கு வந்ததும்,  இருவருமே வேலையில் கவனமாயினர்...

   அவர்கள் இருவரையும் எதிர்பார்க்காத ஃபேக்டரி தொழிலாளர்கள், வேலை செய்வதுபோல் பாவனை செய்தபடி ஜிஷ்ணுவையும் சுபத்ராவையுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.

  அதில் சிலர் தங்களுக்குள் ஜிஷ்ணுவையும், சுபத்ராவையும் பற்றி தங்களுடைய கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தனர்....

  அதைக் தற்செயலாகக் கேட்ட ஃபேக்டரி சூப்பர்வைசர், "வேலையில் இருக்கிறதுக்கு இஷ்டம் இல்லையா? அன்னைக்கே சொன்னார்ல? கண்டபடி பேச கூடாதுன்னு... ஒழுங்கா வேலைய பாருங்க... இல்ல, வீட்டுக்கு நடையைக் கட்டுங்க! உங்களுக்கெல்லாம் நயமா  சொன்னா புரியாது!" என்று தொழிலாளர்களை எச்சரித்தார்.

  இது அனைத்தையும் கவனித்தாலும், எதுவுமே நடக்காதது போல் நடந்து கொண்டாள் சுபத்ரா.

  இன்று, ஏனோ அவர்கள் மீது, சுபத்ராவுக்கு கோபமே வரவில்லை! இன்னும் ஆச்சரியமாக அவள் அதை ரசிக்க வேறு செய்தாள்!

  அதே நேரத்தில் ஜிஷ்ணுவின் மௌனம், சுபத்திராவிற்கு ஆச்சரியத்தை அளித்தது!

    'அன்னைக்கு, அந்தப் பொங்கு, பொங்கினான்!!! இவர்கள் என்னையும், இவனையும், இணைத்து பேசியது அவன் காதில் விழவில்லையா என்ன? அந்த அளவுக்கா வேலையில் மூழ்கிவிட்டான்?' என்று எண்ணியவள், ஜிஷ்ணுவின் முகத்தை ஆராய்ச்சியாக பார்க்க, அவன் முகத்தில் லேசான புன்னகை இருப்பது போல் தோன்றியது!...

  'இவன் சிரிக்கிறான்!!! ஆனா இப்ப எதுக்கு சிரிக்கிறான்? இவர்களின் கிசுகிசுவை இவனும் ரசிக்கிறானோ?' என்று அதிர்ந்தவள்,

  'ச்சீ லூசு உன் இஷ்டத்துக்கு கற்பனை பண்ணாத! அவன் முகமே சிரித்தபடி தான் இருக்கிறது....' என்று எண்ணமிட்டவளுக்கு, இன்று தனது நினைவுகளின் போக்கு, தனக்கே வித்தியாசமாக தெரிவதை உணர்ந்தாள்.

  ஜிஷ்ணுவும் தொழிலாளர்கள், பேசியதை கேட்டுக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவனுக்கும் அவர்கள் தன்னையும், சுபத்ராவையும் சேர்த்து வைத்துப் பேசியது, பிடித்து இருந்த காரணத்தால் கவனிக்காதது போல் அமர்ந்திருந்தான்.

   ஆனால் அது சிறிது நேரமே...

   'இந்த மாதிரி பேச்சுக்கள் தனக்கும் சுப்தராவுக்கும் பிரச்சனையை உண்டாக்கும்.... தான் ஒரு தொழிலில் ஒரு நிலையான இடத்தை அடையும்வரை, இப்படிப்பட்ட பேச்சுக்கள் வெளிவருவது, தனக்கும், சுபத்ராவுக்கும் ஆபத்தாக முடியும்' என்று தோன்ற ஜிஷ்ணு, சூப்பர்வைசரை அழைத்தான்.

  "அங்க என்ன பிரச்சனை?" என்று தெரியாதது போல் சூப்பர்வைசரிடம் கேட்டான் ஜிஷ்ணு.

   "ஒன்னும் இல்ல சார்! சும்மா வெட்டி அரட்டை! அதான் பேசுறத நிறுத்திட்டு வேலைய பாருங்க! ன்னு சொல்லிட்டு வந்தேன்."

  'சூப்பர்வைசர் சமாளிக்கிறார்!' என்று தெரிந்ததும், ஜிஷ்ணு, தொழிலாளர்களை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையே, 'இன்னொரு முறை பேசிப் பார்!' என்று சவால் விட்டது அவர்களுக்கு!!

  அவ்வளவுதான்! அவர்கள் அனைவருக்கும் கதிகலங்கி விட்டது... சட்டென்று ஜிஷ்ணுவின் கண் மறைவாக சென்றுவிட்டார்கள்...

  'ம்ம்... இந்த பயம் இருக்கணும்!' என்று நினைத்துக்கொண்டான்.

  ஜிஷ்ணு, சூப்பர்வைசரை பார்த்து, "அவங்க பேச்சு சரி இல்லை! இனி இந்த மாதிரி பேச்சுக்கள் என் காதில் விழுந்தால், அடுத்த நிமிஷம் வேலை போய்விடும்! இன்னொரு முறை சொல்லிட்டு இருக்கமாட்டேன்!" என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை, கடித்து துப்பிவிட்டு, விறுவிறுவென்று மேனேஜர் இருக்கும் இடத்திற்கு சென்றான்.

  இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சுபத்ராவிற்கு, ஏனென்றே தெரியாமல் மனதில் மிகப் பெரிய வலி ஏற்பட, 'இன்னும் கொஞ்சம் தாமதித்தால் கண்ணிலிருந்து நீர் வந்துவிடுமோ?' என்று பயந்தவள், வேகமாக ஜிஷ்ணுவை பின்தொடர்ந்தாள்.

  ஜீப் ல் அலுவலகம் வந்து சேரும் வரை, சுபத்ரா எதுவும் பேசாமல் புருவங்கள் நெறிபட ஏதோ கவலையுடன் இருப்பதை கவனித்த ஜிஷ்ணுவிற்கு,

  'சுபத்ரா வும் தொழிலாளர்கள் பேசியதை கவனித்துவிட்டாள்... அந்தப் பேச்சுக்கள் சுபத்ராவை மிகவும் காயப்படுத்திருச்சு போல... அதனால தான் இவ்வளவுதூரம் கவலையா இருக்கா'... என்று வருந்திய ஜிஷ்ணுவிற்கு, 'என்னையும் இவளையும் சேர்த்து பேசுவது, சுபத்திராவுக்கு பிடிக்கவில்லையோ? என்று தோன்றியது.

  "எப்படி ஜிஷ்ணு பிடிக்கும்! அவள் இப்போதான் உன்னுடன், சுமூகமாக பேசவே ஆரம்பிச்சிருக்கிறா! அதற்குள் இந்த மாதிரி பேச்சுக்கள், அவளை மிகவும் கஷ்டப்படுத்த தானே செய்யும்?" என்று ஜிஷ்ணுவின் மனசாட்சி கூறியது.

  "ஆனால் இன்னைக்கு காலைல ஜீப்பில் வந்துகிட்டிருந்தபோது, அவளுடைய பார்வையில் ஒரு அந்நியோன்யம் இருந்ததே?" என்று எடுத்துக் கொடுத்தது ஜிஷ்ணுவின் காதல் கொண்ட மனது.

  "அதுதான் நிஜம்னா, தொழிலாளர்களின் பேச்சைக் கேட்டு நீ  சந்தோசப்பட்டது போல், அவள் சந்தோசப்படா விட்டாலும் பரவாயில்லை, இந்த அளவு கவலைப்பட்டு கண்கலங்கத் தேவை இல்லையே?" என்று கேட்டது மனசாட்சி.

  "அப்போ காலையில் அவள்  நடந்து கொண்ட விதத்திற்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டது காதல் கொண்ட மனது.

  "பொதுவா நாலு சுவத்தை விட்டு வெளியே வந்தா, மனசுக்கு ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கும்... அந்த மாதிரி ஒரு சந்தோஷத்துல அவள் இருந்திருப்பா. மத்தபடி நீ நினைக்கிற மாதிரி, அவ மனசுல நீ எல்லாம் இல்லை!" என்று கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் கூறியது ஜிஷ்ணுவின் மனசாட்சி.

  "இல்லை ஜிஷ்ணு!  உன்னை இந்த மனசாட்சி குழப்புகிறான்... இவன் பேசுவதை நம்பாதே!  சுபத்திரா மனதில் நீ இருக்கிறாய்!" என்று மனசாட்சியுடன் சண்டை போட்டது ஜிஷ்ணுவின் காதல் கொண்ட மனம்.

  "நீ சொல்ற மாதிரி சுபத்திரா மனசுல ஜிஷ்ணு இருக்கிறான்னா! பின்ன எதுக்கு இப்படி 'உம்'முனு வந்துட்டு இருக்கா?' என்று கேட்டது மனசாட்சி.

"அந்த தொழிலாளர்கள் பேசுவதை கேட்டு முதல்ல நீ சந்தோஷப்பட்டாலும், அப்புறம் கவலைப்படலையா? இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது ன்னு உனக்கே தோணும்போது, சிறு பெண் அவள்! பயந்திருக்க மாட்டாளா? உங்களுக்குள் மனசு விட்டு  ஒன்னும் பேசிக்கிறாத நிலையில, ஊருக்கு தெரிவது, ஒரு பெண்ணிற்கு எந்த அளவுக்கு பிரச்சனையை கொடுக்கும் னு நெனச்சு, பயந்திருப்பா! அந்த பயத்துலதான் இந்த மாதிரி அமைதியா, கவலையா இருக்கா. மத்தபடி அவ மனசுல நீதான் இருக்க. அந்த மனசாட்சி, மண்ணாங்கட்டி பேசுறதெல்லாம் கேட்காத, அவன் எப்பவும் நல்லது சொல்ல மாட்டான்... நான் உன் இதயம் உனக்கு நல்லது தான் சொல்லுவேன்!" என்று கூறியது ஜிஷ்ணுவின் காதல் கொண்ட மனது.

   ஜிஷ்ணு, அவனுடைய இதயத்தோடும், மனசாட்சியோடு போராடிக் கொண்டிருந்ததால், அவன் முகம் சற்றே சுளித்ததுபோல் இருந்தது. அதைப்பார்த்த சுபத்திராவுக்கு, மேலும் கவலையாகிவிட்டது.... 'அந்தத் தொழிலாளர்கள் பேசியது இந்தளவுக்கா இவன காயப்படுத்தியது? இன்னும் கோபத்துடன் இருக்கானே?' என்று கவலையுடன் விஷ்ணுவை பார்த்தாள் சுபத்ரா.

  'சுபத்ரா தன்னை விரும்புகிறாளா? இல்லையா?' என்று தன் மனதுடனும், மனசாட்சியுடனும் போராடிக் கொண்டிருந்த ஜிஷ்ணு, கொஞ்சம் திரும்பி, அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுபத்ராவின் கண்களைப் பார்த்திருந்தால், சரியான விடை கிடைத்திருக்கும்! ஆனால் அவனோ சுபத்ராவின் முகபாவனையை கவனிக்காமல், தனக்குள்ளேயே போராடிக் கொண்டு, வந்து கொண்டிருந்தான்.

   'தன் மனதில் என்ன இருக்கிறது?' என்பதையே சரியாகப் புரிந்து கொள்ளாத சுபத்திரா...

    'சுபத்திரா மனதில் தான் இருக்கிறோமா?' என்பதை அறியாத ஜிஷ்ணு,

    இருவரும் அவரவர் கவலையில் மூழ்கியபடியே, ஃபேக்ட்டரிக்கு வரும் போது இருந்த சந்தோஷத்தை தொலைத்து, அலுவலகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்...

  
  💖  நீ வந்து தங்கிய நெஞ்சில்              நினைவலைகள் தோடரும் 💖   

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro