13. மது கிருஷ்ணா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

13. மது கிருஷ்ணா:

"ஏன் ஆது பேபி அழுகுற உனக்கான பொம்ம தான் உன்கிட்ட இருக்கே , அப்போ நீ கரெக்டா தான பாக்குற" அவனது வார்த்தைகளில் அதிர்ச்சி ஆகி அவனை பார்த்தவள் விஐய் என முனக "ஆமா பேபி உன் விஐய் தான்" என்றான் அவன்.

      சுற்றம் மறந்து அவன் அணைப்பில் அவள் நின்றதென்னவோ ஒரு நொடி மட்டுமே.. மறுநொடியே அவனிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டவள்.

"இன்னமும் ஏன்டா நடிக்கிற?" என ஆக்ரோஷமாக வினவினாள்.

      சற்றே தடுமாறியவன், "என்ன ஆதுமா..? நான் உன் இந்.. விஜய் தான்" என வார்த்தைகளைக் கோர்க்க.. தடுமாற.. அவனைக் கோவமாக ஏறிட்டவள்.

"உன்னால விஜய்ன்ற பேரைக் கூட தடுமாறாம என்கிட்ட யூஸ் பண்ண முடியலை.. நீ விஜய்னு நான் நம்பனுமா?" என அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள்.

     'நீ ஆதர்ஷினி துருவேந்திரன்' என்று கச்சிதமாகச் சொன்னவனால், 'நான் விஜய்' எனச் சொல்ல முடியாமல் தடுமாறினான் அவள் அழுகையை நிறுத்த தான் விஜய் எனக் கூறிக் கொண்ட 'துருவ்'.

      தன் தடுமாற்றத்தை நொடியில் மறைத்துக் கொண்டவன் "ஹப்பா.. கண்டுபிடிச்சுட்டியா..? நான்கூட அந்த வீணாப் போனவன் பெயரைச் சொல்லித்தான் உன்னை சமாதானம் பண்ணனுமோன்னு ரொம்ப பயந்துட்டேன். நௌ ஐம் ரிலாக்ஸ்ட்" எனத் தோளைக் குலுக்கியவன் ஆதர்ஷினியின்  பார்வையில் எரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்.

"உன்கிட்ட தாலி வாங்கிட்டேன்றதுக்காக நீ என்னை ரொம்ப அன்டர்எஸ்டிமேட் பண்ணிடாதே.. அதான் உன் நெத்தியில நான் விட்ட பூரான் பளிச்சின்னு தெரியுதே..! இன்னமும் நீ விஜய்னு சொன்னா.. 'வந்துட்டிங்களா அத்தான்னு' நம்பிக்க நான் எய்டீஸ் ஹீரோயினா?" என்று படு நக்கலாக வினவியவளை கண்டு துருவின் மில்லிமீட்டர் புன்னகை சென்டிமீட்டர் அளவிற்கு விரிந்தது.

      தங்கள் இருவரின் முதல் சந்திப்பான சுதாவின் பிறந்தநாளில் இருந்து இப்போது வரை அதிர்ச்சிகளை மட்டுமே அறிந்து கொண்டிருந்தவள்.. தன் அழுகையில் இருந்து மீண்டதே அவனிற்கு போதுமானதாய் இருந்தது. விஜய் செய்த குளறுபடிகளை மறந்து மனம் சற்றே இளகுவாகியதால் அது புன்னகையாய் விளைந்தது.

      விளைந்த அப்புன்னகை ஆதுவின் எரிமலைக் குழம்பில் சற்று மிளகாய்த் தூள் போட்டு விட, "என்ன காது வரை இளிக்கிற?" என்று ஆது என்னும் லாவா(எரிமலை குழம்பு) கொதித்தது.

      அதில் இன்னும் விரிந்த சிரிப்புடன், "இல்லை.. நானே விஜய்னு சொன்னாலும் நீ மறுத்து துருவ் தான்னு சொன்னியே.. அந்த சந்தோஷம் தான்" என்றவனை மறுத்து அவள் ஏதோ பேச வர, "உடனே விஜயை எனக்கு நல்லாத் தெரியும்னு எதுவும் மொக்கையா சொல்லிடாதே" என அவனே இடைவெட்டினான்.

     தன் பால்ய நண்பன் தனது எண்ணப்படியே தன் கண் முன்னால் நிற்கும் இந்த நொடியைக் கூட அனுபவிக்க முடியாமல்.. இந்த விஜய் துருவ் குழப்பங்கள் அவளை நிலைகொள்ள விடாமல் தடுத்தது.

      அவனைச் சோர்வுடன் பார்த்தவள்..

"நீ ஏன் என் பப்புவா திரும்ப வரலை துருவ்..? உன்னோட இந்த முகத்தைப் பார்க்க பார்க்க எனக்கு நான் என்னவோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி.. என்னோட கேரக்டரை நானே கொஸ்டின் பண்ணிட்டு இருக்கேன்" என்று தன்னிரக்கம் தலைக்கேற அவள் புலம்புவதைக் கண்டவனுக்கு விஜய் மீது எல்லையற்ற ஆத்திரம் வந்தாலும்.. இவளை இந்நிலையில் நிறுத்திய தன் மீதும் அதே அளவு கோவம் வந்தது.

      சோபாவில் தொய்ந்து அமர்ந்திருந்த ஆதர்ஷினியின் காலடியில் மண்டியிட்டவன்.

"ஆதுமா" என்று மெல்ல அழைக்க.. வழக்கம் போல அந்த அழைப்பு அவளை நிலை பிறழச் செய்தாலும்.. ஏனோ இப்போது அது அவளுக்கு சுவைக்கவில்லை.

       அதை உணர்ந்த துருவ்வும், "ஆதுமா.. உன் மனசுல நீ நினைச்சுட்டு இருக்க மாதிரி விஜய்யை விரும்பலை.. என்னோட ரிசம்பளென்ஸை விரும்பியிருக்க.. அது உனக்கே புரியலைடா பேபி?" என்று கேட்கவும், 'என்ன உளறுகிறாய்?' என்று அவனை கேள்வியாய் பார்த்தாள் ஆதர்ஷினி.

      அவனோ அவள் தன்னை அரைலூசு என எண்ணுவதை உணர்ந்தாலும், "ஆதுமா.. சுதாவோட பர்த்டே வரைக்கும் உனக்கு அந்த அன்நோன் மெசேஜ் அனுப்பற பர்சனைப் பார்க்கனும்னு க்யூரியாசிட்டி இருந்துச்சு இல்லையா..? ஆனா, சுதா பர்த்டே அன்னைக்கு உனக்கு அனுப்பின மெஸேஜை பார்த்து,  அவன் மேல உனக்கு சொல்ல முடியாத அஃபெக்ஷன் வந்துச்சு தானே..? ஏன்னா அன்னைக்கு உன்கிட்ட டெக்ஸ்ட் பண்ணது நான் தான்டா" என்று அவளின் குழம்பிய மூளையை இன்னும் தெளிவாய்க் குழப்பினான்.

        அவளோ "போதும் துருவ்.. ஏற்கனவே என் லைஃப்ல என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலை.. இதுல நீ ஃபேன்டஸி ஸ்டோரி மாதிரி ஃபீல் பண்ண வைக்காதே.. நீ இடையில வராம இருந்திருந்தா நான் விஜய்கிட்ட தான் என் லவ்வை சொல்லியிருப்பேன்.. ப்ளீஸ்" என்றாள் சோர்வாக.

         "அதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மி ஆதுமா" என உறுதியாக உரைத்தவன்.. அவள் கைகளைத் தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டு, "ஆதுமா நல்லா யோசனை பண்ணிப்பாரு.. உன்னோட டிரஸ் கேவலமா இருக்குன்னு நான் சொன்னப்ப உனக்கு என்னோட நியாபகம் வரலையா.. அவன் அவ்வளவு நாள் உனக்கு மெசேஜ் பண்ணப்ப வராத அந்த ஃபீல் என்னோட செகண்ட் மெசேஜ்ல உனக்குத் தோணுச்சு டி.. நான் அதை என் கண்ணால பாத்தேன்" என்றவனை உச்சகட்ட குழப்பத்தில் பார்த்தாள் ஆதர்ஷனி.

       அதைத் தெளிவாக்க.. தான் அவளைப் பிரிந்த நாளில் இருந்து.. விஜயைக் கண்டது.. அவன் அப்பாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரிந்தது.. தாத்தாவின் வருகை..மும்பையில் வளர்ந்தது.. தாயின் இறப்பு.. ஆதர்ஷனிக்கான தேடல்.. அதை உணர்ந்த விஜயின் தலையீடுகள்.. இறுதியாக விஜய் ஃபோனில் இருந்தே அவளிடம் பேசியது.. தங்கள் திருமணம் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லியிருந்தான்.

   அனைத்தையும் சொல்லிவிட்டு ஆர்வமாக அவள் முகத்தைப் பார்க்க, "யார்டா நீங்க..? என்னோட அனுமதி இல்லாம நீங்க ரெண்டு பேரும் எப்படி டா என் வாழ்க்கையில வந்திங்க..? எல்லாத்தையும் பண்ணிட்டு பால் குடிக்கிற பாப்பாக்கு பெட் டைம் ஸ்டோரி சொல்ற மாதிரி எனக்கு கதை சொல்ற நீ" என்று தன் கையை அவனிடமிருந்து வெடுக்கெனப் பறித்தவள் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

    துருவ்வும் அவள் அருகேயே அமர்ந்து, "ஆதுமா.. அம்மாவையும் உன்னையும் பிரிஞ்சு இருந்த அந்த மோசமான நாட்களைக் கடக்க எனக்கு உன்னோட நியாபகம் மட்டும் தான் துணையா இருந்துச்சு டி.. அவனுக்கு அம்மா அப்பான்னு எல்லாரும் இருக்காங்க.. ஆனா, எனக்குன்னு நீ மட்டும் தானே இருக்க..? உன்னோட பப்புவா உன் முன்னாடி வந்து நிக்கறதுக்குள்ள அவன் நடுவில வந்துட்டான்" என்ற அவனது தனிமைத் துயரும்.. தன்னிலை விளக்கமும் அவளுக்கு தனது ஏமாற்றத்தின் துலாக்கோலின் முன் சிறியதாகவே இருந்தது.

      கண்களில் கனலுடன் அவனைத் திரும்பிப் பார்த்தவள், "தயவுசெய்து இதுக்கு மேல எதுவும் பேசி என்னோட ஏமாளித்தனத்துக்கு ஸ்க்ரீன் ப்ளே கொடுக்காதே. இரண்டு பேர் என்னை வச்சு விளையாடுறாங்கன்னு தெரியாமயே இருந்துருக்கேனே. உங்க குடும்ப சண்டையில நான் எந்த இடத்தில வந்தேன்?" என்றாள் திடமாகவே.

      இப்போது அழுகை அனைத்தும் குறைந்திருந்தது.. தன்னை ஏமாற்றத் துணிந்த இருவர் மீது தான் கோவமும் ஆத்திரமும் இருக்க. 'அடுத்து என்ன செய்வது?' என யோசிக்க அறிவு துணை வந்தது.
      
        அவள் யோசிப்பதை உணர்ந்த துருவ்வும்.. ஒரு நெடுமூச்சுடன் அவளுக்குத் தனிமை அளித்து விலக எத்தனிக்க, "ஒரு நிமிஷம்" என்ற ஆதுவின் குரலில் திரும்பி அவளைப் பார்த்தான்.

          "ஆமா.. எதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி.. நானும் விஜய் தான்னு நீ சொல்லிகிட்ட?" என்று 'நீ யார்டா கோமாளி' மாடுலேஷனில் அவள் கேட்டாள்.

       'ம்ம்.. வாக்குல போற கழுதையை அது போக்குல போய்த்தான் திருத்தனும்னு நினைச்சு அந்த வீணாப் போனவன் பேர் சொல்லிட்டேன்.. நீ இத்தனை தெளிவா இருப்பேன்னு நான் கனவா கண்டேன்?' என முனகியவனை அவள் புருவங்கள் நெறியப் பார்க்கவும்..

       தன்னை சமாளித்துக் கொண்டவன், "அதுவந்து ஆதுமா.. நீ ரொம்ப அழுதுட்ட.. அவன் பேரைச் சொன்னாலாவது உன் அழுகை நிக்குதான்னு பாக்கத்தான்.. யோசிக்காம அப்படி சொல்லிட்டேன். சாரி" என தலையைக் குனிந்து கொண்டான்.

      "யாரை லவ் பண்ணேன்னு தான் தெரியலை சரி.. எவனைக் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு கூடவா எனக்குத் தெரியாது..? அவன் தான் வாட்ஸ்ஆப், மெசெஞ்சர் காலத்துல நார்மல் மெசேஜ் பண்ணான்.. நீ அவனை விடப் பின்னாடி போய் நம்பியார் காலத்து டெக்னிக் யூஸ் பண்ணியிருக்க" என்று கண்களாலேயே காறித் துப்பிவிட்டு, "இனி நீ இப்படிச் சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்" என எச்சரித்தவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

                            ****
      நாட்காட்டி தன்னிடமிருந்த தாள்களில் மூன்றை இழந்திருக்க.. ஆதர்ஷனிவின் இருப்பின்றி அவள் வீடு களையிழந்து போயிருந்தது.. மகளின் திருமணம் என்பது பெற்றோர்களின் வாழ்நாள் கனவல்லவா.. ஆனால் அதை எண்ணி மகிழ முடியாமல் நடந்த விஷயங்கள் அனைத்தும் அவர்களை சோர்வுறச் செய்திருந்தது.

       அதிலும் ஆதுவின் அம்மாவும்.. தன் அம்மாவும் அழுகையில் கரைவதைக் கண்ட நவி.. வேறுவழியின்றி அவளிடம் சென்று பேசுவதாக முடிவு செய்தான்.

          முதல் நாள் அழுது கோவத்தில் கரைந்த ஆதர்ஷினி.. அதன்பின் ஒருவித அழுத்தத்துடனே இருந்தாள்.

துருவ் அருகில் வந்தாலே 'பேசாம போறியா.. வாய்க்குள்ள கத்தியை விட்டு சுத்தவா?' என்பது போல அவள் பார்க்கவும்.. துருவ் மண்டையைப் பிய்த்துக் கொண்டான்.

ஆனாலும் பார்வையால் அவளைத் தொடர்ந்து தன்னை உணர்த்த அவன் தவறுவதே இல்லை.

        துருவ்வின் நிலை இப்படி இருக்க, விஜய்யின் நிலை அதைவிட மோசமாக இருந்தது. மாதுவை அவன் ஆது என நினைத்துப் பேசி அவள் புறக்கணித்ததும் உடைந்து போனவன், அவளைத் தேட இரண்டு நாட்களுப் பின் அவள் திருமணச் செய்தி இடியாய் வந்தது.

       அதுவும் துருவ்வுடன்.. இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியாமல் ஆதர்ஷினியிடம் இறுதி முயற்சியாய் தன் காதலை மட்டுமாவது நிரூபித்துவிட வேண்டும் என நினைத்து அவளைக் காண முடிவெடுத்து தன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

      அவன் மனநிலை புரியாமல் அன்னையோ அவனிடம் ஒரு ஃபோட்டோ கவரைக் கொடுத்து "விஜய்.. என்னப்பா இவ்வளவு வேகம்.. இந்த பொண்ணு ஃபோட்டோவைப் பாரேன்" என ஆர்வமாகச் சொல்லவும்..

       தந்தையின் சுயநலத்தால் நொந்து இருந்தவரை தானும் வதைக்க முடியாமல்.. ஒரு பெருமூச்சுடன் தன்னை சமன் செய்தவன் "ம்மா.. ஒரு அவசர வேலையாப் போய்ட்டிருக்கேன்.. வந்து பேசலாம்" என்றான் பொறுமையாகவே.

        ஆனால் அறிவழகியோ, "டேய்.. பொண்ணு அழகா இருக்காடா.. நீ ஓகே சொன்னா இப்பயே அம்மா அவங்ககிட்ட பேசுவேன்டா" என்றார் குழந்தையின் குதூகலத்துடன்.

      அதைக் கெடுக்க மனமில்லாமல், "ரூம்ல வைங்கம்மா.. வந்து பாக்கறேன்" எனச் சொல்லிவிட்டு ஓடுபவனைக் கண்டு அவன் அன்னையின் கையில் நிழற்படமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் 'மாது'.
          
                              ****

        நவிந்தன் ஆதர்ஷினியின் ஒதுக்கத்தை எண்ணி சற்றே தயங்கியவாறே தான் துருவ்வின் வீட்டிற்குள் சென்றான்.

ஆனால் அங்கே சுழ்நிலை ஏற்கனவே கலவரமாகத் தான் இருந்தது.

       கேட்டிற்குள் நுழைந்ததும் அவன் கண்டது துருவ் அவன் சாயலை உடைய ஒரு இளைஞனின் சட்டையில் கை வைத்திருப்பதைத் தான்.. ஆதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள்.

        துருவ் "உன்கிட்ட ஆல்ரெடி சொல்லியிருக்கேன்.. உன் அம்மா பண்ண மாதிரியே நீயும் என் வாழ்க்கையில இடையில வராதேன்னு.. அதையும் மீறி என்ன தைரியம் இருந்தா நீ என் ஆதுமாட்ட பேச வந்திருப்ப?" என கத்திக் கொண்டிருந்தான்.

      விஜயோ, "ப்ளீஸ் துருவ்.. நியாயப்படி எங்கம்மா தான் பாவம்.. அவங்களைத் தப்பா பேசாதே" என்றான் வலியுடன் கூடிய குரலில்.

       இருவரையும் குழப்பமாகப் பார்த்தபடியே நெருங்கிய நவி, "துருவ்" என்று பதட்டமான குரலில் அழைத்து "என்னடா நடக்குது இங்க?" என்று கேட்டான்.

       அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஆதர்ஷினி,  "வேற என்ன நவி..? வாழைப்பழக் காமெடிக்கு ஆன்சர் கிடைச்சிருக்கு.. ரெண்டுமே இங்க தான் இருக்கு.. ஆனா வேஸ்ட்" என இருவரையும் வெறுப்புடன் பார்த்தவள், நவியுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஆதர்ஷினியின் வெறுப்பின் பின் உள்ள காதலை துருவ் மீட்டெடுப்பானா??
விஜய்யின் வாழ்வில் மாதுவின் இடம் என்னவாக இருக்கும்?? அடுத்த அத்தியாயங்களில்...

**********
எழுத்தாளர்: மது கிருஷ்ணா

ஐடி: 

**********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro