🌚3🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஏழு வருடங்களின் பின்னர் நடைபெறும் அக்கிராம திருவிழாவைக் காண மக்கள் அலைமோதிக் கொண்டிருந்த வேளையில் மக்களோடு மக்களாக காணாமல் போனாள் அவள்.

தரித்திரியம் ஒழிந்தது என்ற நிம்மதியில்,  துளியளவேனும் கவலை  இல்லாமல் சேனாதிராஜாவின் குடும்பத்தவர்கள் இருக்க, தன் அண்ணன் மகளை எவ்வாறோ கொடுமையிலிருந்து பாதுக்காக்க முதல் அடியை எடுத்து வைத்துவிட்டேன் என்ற நிம்மதியில் விஜய் இருந்தான்.

ஆம்,
அந்த பெண் குழந்தையை திட்டமிட்டு கடத்தியது அக்குழந்தையின் சித்தப்பாவான இருபத்தேழு வயதான விஜய் சேனாதிராஜா தான்.

இன்று சென்னையில் ஒரு பிரபலமான கம்பனியில் விற்பனை முகாமையாளராக கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கிறான் விஜய்.

அவனுக்கு தன் மகளை தன்னோடு தங்க வைத்துக்கொள்ள ஆசையாக இருந்தாலும் அவளது பாதுகாப்பு மற்றும் அவனது திடீர் வெளியூர் பிரயாணங்கள் அதுமட்டும் இல்லாமல் அவளுக்கு தேவையான வழிகாட்டல்கள் தன்னால் சரியான முறையில் வழங்க முடியாமல் போகுமோ என்ற சந்தேகம் ஆகியவற்றின் காரணமாக அவளை தன்னோடு தங்க வைத்துக்கொள்வது அசாத்தியமானது என்று புரியவே அவனது ஆருயிர் நண்பன் ஒருவனின் அக்கா கடந்த பத்து வருடங்களாக நடத்திக்கொண்டிருக்கும் இல்லமொன்றில் அவளை தங்க வைத்தான்.

அந்த இல்லத்தை நல்ல முறையில் எந்த களங்கமும் வராமல் கடந்த பத்து வருடங்களாக நடாத்திக்கொண்டிருப்பவர் தான் நிஷாந்தினி. தனது காதல் கணவனைக் கைப்பிடித்து ஆறு மாதங்களிலேயே விபத்தொன்றில் அந்த சரிபாதியை இழந்தார். அப்போது அவருக்கு வெறும் இருபத்தி மூன்று வயதே ஆகும்.

சிறுவயதில் இருந்தே சமூக சேவைகளில் அதீத ஈடுபாடுகொண்டவரான நிஷாந்தினிக்கு அவரது தந்தையின் ஒத்துழைப்பும் கிடைக்கவே எந்தவித நிதி ரீதியான  சிரமமும் இன்றி தனது சேவைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

கணவனின் இழப்புக்கு பின்னர் வீட்டவர்கள் எவ்வளவு மறுமணத்திற்கு வற்புருத்தியும் அதை ஏற்றுக்கொள்ளாமல் இந்த இல்லத்தை தொடங்கி சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்றார்.

அங்கு இருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் தந்தையும் தாயுமாக இருந்து அன்பையும் அரவணைப்பையும் வழங்கி சிறந்த முறையில் வழிகாட்டல்களையும் வழங்கி,  வழிநடத்தலுடன் வளர்த்துக்கொண்டிருக்கிறார் நிஷாந்தினி. இந்த இல்லத்தில் தான் அவளும் சேர்க்கப்பட்டாள்.

விஜய்யை நன்றாக அறிந்தவர் என்பதால் நிஷாந்தினியிடம் விஜய் அவளது கடந்த காலம் தொடர்பாக அனைத்தையுமே ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டிருந்தான்.

இங்கு அவனுக்கு தனது குடும்பத்தின் மடத்தனம் வெளியே வந்து சங்கடமாகுவதை எண்ணி உண்மைகளை மறைப்பதை விட அவளின் சிறந்த நடத்தையே முக்கியம் ஆகையால் தனது குடும்ப மானத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு அனைத்தையும் ஒன்றுவிடாமல் பகிர்ந்து கொண்டான்.

அவள் அங்கு சேர்ந்து ஒரு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் அவளை தன் கண்காணிப்பில் வைத்துக்கொண்டிருந்த நிஷாந்தினிக்கு அவளது நடத்தைகளில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.

பாடசாலையில் சேர்த்து ஒரு கிழமையே ஆகியிருந்த நிலையில் முதல் இரண்டு நாட்கள் எந்த குழப்பமும் இல்லாமல் பாடசாலை சென்றவள் அடுத்த மூன்று நாட்களும் இல்லாத தலைவலியையும் வயிற்று வலியையும் கூறி இல்லத்திலேயே இருந்து விட்டாள்.

ஏழு வருடங்களாக படிப்பை பற்றியே சரியாக அறிந்திறாதவள் முதல் நாள் அதீத ஆர்வத்துடன் பாடசாலை சென்றாலும் அடுத்த நாள் கலக்க முகத்துடனே சென்றாள். அதற்கு அடுத்து வந்த மூன்று நாட்களும் பாடசாலை பக்கமே போகவே இல்லை.

இறைவன் என்னதான் அவளது வாழ்வில் இன்பங்கள் என்பதை எழுதி வைக்காமல் இருந்துவிட்டாலும் மிதமிஞ்சிய கல்வியறிவை வாரிவழங்கி இருந்தான். அதனால் தான் நிஷாந்தினியின்  பரிந்துரையுடன் அந்த பிரபல கலவன் பாடசாலையில் நேரடியாக இரண்டாம் வகுப்பிலே அவள் சேர்க்கப்பட்டாள்.

அவளை அந்த பாடசாலையில் சேர்க்க சட்டரீதியான சிக்கல்கள் சிலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டதே தவிர ஏனைய அறிவு சார்ந்த தகுதிகாண்களின் போது எந்தவிதமான சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படவில்லை. அவளது அறிவுசார் திறன் அந்தளவு வளர்ந்திருந்தது.

அவளது திறன் வளர்ந்திருந்தது...
ஆனால் அவளது உள்ளம்...?

ஆம்,
அவள் பாடசாலை செல்லாமல் மூன்று நாட்கள் இல்லத்திலேயே இருந்ததற்கு காரணம் அங்கு இருக்கும் ஆண்களே ஆகும்.

சிறுவயதில் இருந்து ஆண்களால் பல உளரீதியான தாக்கங்களை சந்தித்து வளர்ந்த அவளது உள்ளம் அந்த சூழல் மாறியதும் மெதுமெதுவாக மாறத்தொடங்கியிருந்தது.

ஆண்களைப் பார்த்தாலே இனம்புரியாத பயத்துக்கு உள்ளாகும். இவளது கைகள் தானாகவே நடுங்கத்தொடங்கி கண்கள் கண்ணீரை தத்தெடுத்துக்கொள்ளும்.

விஜய்யை மட்டுமே அவளது உள்ளம் ஒரு சிறந்த ஆண் மகனாக  ஏற்றுக்கொண்டிருந்தது. இனியும் அவன் மட்டுமே என்றால் அவளது எதிர்கால வாழ்க்கை....?

என்ன தான் பெண்ணினவாதிகள் பெண்ணியம் பேசினாலும் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்வில் ஒரு ஆணின் துணை என்பது அவசியமாகும். அது எந்த உறவு ரீதியில் இருந்தாலும் சரி. அந்த ஆண் தந்தையாக இருக்கலாம் சகோதரனாக இருக்கலாம் நண்பனாக இருக்கலாம் கணவனாக இருக்கலாம். யார் யாராக இருந்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரின் துணை நமக்கு அவசியமான ஒன்றாகும்.

எவ்வாறோ அவளது இந்த பயத்தை கண்டுபிடித்த நிஷாந்தினி அவளை விஜய்யின் உதவியோடு பெண்கள் பாடசாலை ஒன்றில் சேர்த்தார்.

விஜய் என்னதான் வேலைப்பழுவோடு இருந்தாலும் வெளியூரில் இருக்கும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் இவளை சந்திக்காமல் வீட்டுக்கு செல்வதே இல்லை. இவளது குழந்தை முகம் அவனை முழுமையாகவே  அன்பு என்னும் பிணைப்பால் கட்டிப்போட்டிருந்தது.

எப்படியோ தனது பாடசாலை கல்வியை பெண்கள் பாடசாலையில் மிகவும் வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்தாள் அவள்.

இளமைக்கே உரிய பொலிவோடும் வயதிற்கே உரிய வளர்ச்சியோடும் இவள் வளர்ந்திருந்தாலும் இவளது சகவயதினரிடம் இருந்த துள்ளல், குறும்பு எதுவும் இவளிடம் இருக்கவில்லை. இவளும் இவளது பாடும் என்ற ரீதியில் தான் இவளது நடத்தைகள் இருந்தது.

இவளது முகத்தில் புன்னகை இருந்தாலும் அதையும் தாண்டி வெளியில் வரும் அவளது சோகம் கலந்த முகத்தைப் பார்க்கும் போதே விஜய்யின் உள்ளம் தினம் மரணவலியை உணரும்.

இடையில் வந்த காலத்தில் விஜய் திருமணம் முடித்திருந்தான். அவனது மனைவியாக வந்திருந்த தர்ஷிகா இவள் மீது விஜய்யை விட அன்பு செலுத்தினாள். இவளை அவர்களது வீட்டுக்கு அழைத்துச்செல்ல பல முயற்சிகளை தர்ஷிகா செய்தாலும் இவள் தான் போகாமல் மறுத்துவிட்டாள். ஏனோ இந்த சூழலை விட்டு செல்ல இவளது மனம் மறுத்தது.

என்றாலும் தர்ஷிகா இவளை அப்படியே விட்டுவிடவில்லை. வாரத்தில் இரண்டு மூன்று தடவைகளாவது அவர்களது வீட்டுக்கு அழைத்துச்சென்று இல்லத்தில் கொண்டுவந்து விட்டுவிடுவாள்.

தர்ஷிகாவோடு நேரம் செலவிட இவளுக்கும் பிடித்தமானதாகவே இருந்தது. ஆனால் மறந்தும் இவள் தன் மனதில் இருக்கும் எதனையும் தன் சித்தியோடு பகிர்ந்து கொண்டதில்லை.

மனதில் இருக்கும் கவலைகளை நாம் மறக்கவேண்டும்...
இல்லாவிட்டால் யாருடனாவது பகிர்ந்து கொண்டு அக் கவலைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்...

இது இரண்டும் இல்லாமல் போகும் போதே மனிதனுக்கு உளநலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மனிதன் எனப்படும் ஜீவன் ஒரு உளநலப் பிராணி ஆகும். முன்னைய காலங்களில் இவ்வாறான உளநலம் என்ற விடயங்கள் பேசுபொருளாகவே இருக்கவில்லை. ஆனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் என்னதான் மனிதன் வளர்ச்சியடைந்தாலும் அவனது உளநலம் கேள்விக்குறியாகவே தான் இருக்கின்றது. அதற்கு முதல் காரணமாக இருப்பதுவும் இந்த தொழில்நுட்பமே ஆகும்.

வல்லரசுகளின் எல்லாம் வல்லரசராக இருக்கும் அமெரிக்காவில் இருபது கோடி மக்கள் தூக்க மாத்திரை இல்லாமல் தூக்கத்திற்கே செல்லமாட்டார்கள். அந்தளவு உளநலம் என்பது இன்று கேள்விக்குறியான நிலையில் இருக்கின்றது.

மனிதனின் செயற்பாடுகளுக்கும் அவனது உறுப்புக்களில் மிக முக்கிய உறுப்புக்களான மூளை மற்றும் இதயத்திற்கு நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

எனவே தான் நமது கவலைகளை இரண்டில் ஒரு விதத்தில் நிவர்த்தி செய்து கொள்ளவோ இல்லாவிட்டால் குறைத்துக்கொள்ளவோ நாம் முயற்சி செய்வது மிக அவசியமாக இருக்கின்றது.

பல உளநல ஆலோசனையாளர்களை சந்தித்து, அவர்களை எல்லாம் தாண்டி வந்தவள் தான் இவள். இவளை சிறந்த உளநல ஆலோசகர் ஒருவரிடம் ஆரம்பத்திலே அழைத்துச்சென்றான் விஜய். அந்த முயற்சி தோல்வியில் முடியவே இப்பொழுது இன்னொருவரிடம் அழைத்துச்சென்று கொண்டு இருக்கிறான்.

ஆனால் பல அமர்வுகள் முடிந்திருந்தும் இவள் இதுவரை தன் மனதை திறந்து அவரோடு பேசியதில்லை. உளவியலை பொறுத்த வரையில் இவள் இன்னும் சிக்கலான சேவைநாடியாகத் (Difficult Client) தான் இருக்கிறாள்.

ஆனால் நிச்சியமாக இவளது இந்த நிலை மாறலாம்...
மாறவேண்டும்...

அந்த நேரம் வெகு விரைவில் அல்லது வெகு தொலைவில்...!

பாடசாலை கல்வியை முடித்ததன் பின் மீண்டும் பிரச்சினை தலைதூக்கியது. அவளை எந்த கல்லூரியில் சேர்ப்பது என்பதே அந்த பிரச்சினை ஆகும். அவளிடம் கேட்டபோது பெண்கள் கல்லூரியில் தான் சேரவேண்டும் என்றாள்.

ஆனால் இப்படியே இவளை விட்டுவைக்க விருப்பம் இல்லாத விஜய்யால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படியே போனால் இவளது எதிர்காலம் எப்படி என்பதே விஜய்யின் அப்போதைய கேள்வியாகும். கேள்விக்கு அவனிடமே விடை கிடையாது.

ஆனால் அவனது விருப்பம் இந்த விடயத்தில் எடுபடவில்லை. அவளின் விருப்பப்படி பெண்கள் கல்லூரியில் தான் சேர்ந்தாள். சென்னையில் இருக்கும் பிரபல பெண்கள் கல்லூரி.  எந்த சிக்கல்களும் இல்லாமல் நல்ல முறையில் தன் கல்லூரி படிப்பை பூர்த்தி செய்த இவள் தான் காலேஜ் டோப்பராக தெரிவு செய்யப்பட்டாள்.

ஆனால் அங்கும் அவளுக்கு யாரும் நெருங்கிய நண்பிகள் கிடையாது. இல்லத்தில் இருப்பவர்கள் உடன் மாத்திரமே இவளது நட்பும் இருந்தது.

காலேஜ் செல்ல ஆரம்பித்ததும் உளநல ஆலோசகரை சந்திப்பதை நிறுத்திக்கொண்டாள் இவள். விஜய் எவ்வளவு எடுத்துக்கூறியும் இவள் உடன்படவில்லை. மேலும் வற்புறுத்த முடியாமல் இயலாமையுடன் இவ்விடயம் தொடர்பாக பேசுவதையே நிறுத்தியிருந்தான் விஜய்.

ஆனால் இப்பொழுது அவளுள் ஒரு உத்வேகம் ஏற்பட்டிருந்தது. அது தான் அவள் வேலைக்கு போக வேண்டும் என்ற அவளது எதிர்பார்ப்பு.

இவளை இவளாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிறுவனமே இப்போதைக்கு இவளுக்கு அவசியமாகும். வேலைகளை திறனாக இவள் முடித்துவிடுவாள் என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை. காரணம் இவள் அந்தளவு திறமைசாலி ஆகும்.

ஆனால் பிரச்சினை இவளது நடத்தையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிறுவனம் கிடைக்குமா என்பதாகும்.
இவளுக்கு சாதகமான ஒரு நிறுவனம் கிடைக்குமா...?

"ரிதூ...."

"........."

"ரிதூ...."

"......."

"ரிதுர்ஷிகா...!"

தன் தோள் மேல் விழுந்த கை யாருடையது என்பதை உணர்ந்து கொண்டவள்,

இவ்வளவு நேரம் தான் மூழ்கியிருந்த தன் இறந்தகால நினைவுகளில் இருந்து வெளியே வந்தாள்.

அவள் தான் "ரிதுர்ஷிகா அஜய்"....!!!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro