5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பார்வதி கதவை திறந்ததும் வேகமாய் வந்து கட்டி கொண்டாள் சுமதி.

"என்னம்மா இது? எப்படி நடந்தது?  அப்பா நம்மளை விட்டு இவ்ளோ சீக்கிரம் போவார்னு எதிர்பார்க்கலை. ஏன் எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம்ல?" என்று அழுது கொண்டே இருந்தாள்.

வாசலில் அவளின் கணவனும் இருக்க, "உள்ள வாங்கப்பா." என்று சுமதியும் உள்ளே அழைத்து சென்றார்.

"சுமதி ம்மா அம்மா என் சுயநினைவுலேயே இல்லை டா. மன்னிச்சுரு குட்டிமா. உனக்கு எப்படி தெரியும்? நீ ஊருக்கு தானே போனே?" என்றார்.

"நீங்க தான் சொல்லல போங்க... எனக்கு எப்படியோ தெரிஞ்சுது." என்று முகத்தை திருப்பி கோபித்து கொண்டாள்.

வாஞ்சையாக அவளின் தலையை தடவியவர், "அதுக்காக இந்த நேரத்துலையா உன் புருஷனை கூட்டிட்டு வரது?" என்றார்.

அவரை செல்லமாய் முறைத்தவள்.

"அப்பா உன்னை சொல்றது கரெக்ட் தான் பாரு. நானே பதறியடிச்சு ஓடி வந்துருக்கேன். உனக்கு உன் மருமகனை கூட்டிட்டு வந்தது தான் பெருசா தெரியுதோ?" என்று பொய்யாய் முறைத்தாள்.

"வாய் வாய் எப்படி சமாளிக்கிறாரோ?" என்று தன்னையும் மறந்து லேசான புன்னகை உதித்தது.

"அப்பாக்கு திடீர்னு என்ன ஆச்சு? ஏன் இப்படி?" என்றாள்.

"ரெண்டு நாளா வழக்கத்துக்கு மாறா அதிகமா என்னை சுத்தி வந்துட்டே இருந்தாரு. ரொம்ப கலகலப்பா பேசிட்டு இருந்தாரு. கெஞ்சி கெஞ்சி அவருக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி சாப்பிட்டாரு. நைட் நல்லா பேசிட்டு இருந்தாரு. ரொம்ப நேரம் தூங்கலை. என்கூடவே தூங்கினார். சரி வயசாகிறதினால இப்படி இருக்கார்னு நானும் பெருசா எடுத்துக்கலை. ஆனா காலைல முழிச்சு பார்த்தா எப்பவும் சீக்கிரம் எழுந்திருக்கிறவரு கண் விழிக்கவே இல்ல. பயந்து அண்ணனை கூப்பிட்டேன். டாக்டர் வந்து பார்த்துட்டு தூக்கத்துலையே ஹார்ட் அட்டாக்கனு சொல்லிட்டாங்க. அவ்ளோ தான் என்கூடவே என்னை சுத்தியே வந்தவர் இப்போ இல்ல. என்னை மட்டும் எப்படி தனியா விட்டுட்டு போகலாம்? அதான் சண்டை போட்டுட்டு இருக்கேன்." என்றார் கணவனின் படத்தில் இருந்து விழி அகற்றாமலே.

"அம்மா... அப்பா எப்பவும் உங்க பக்கத்துலையே தான் இருப்பார். நீங்க அழுதா அவருக்கு பிடிக்காது. அழுது அழுது உங்களுக்கும் உடம்புக்கு ஏதாவது வந்துர போகுது." என்றவள் பார்வதியை அணைத்து கொண்டாள்.

"ரெண்டு பேரும் சாப்டிங்களா?" என்றார்.

"சாப்பிட்டோம். நீங்க?"

"அண்ணி தான் சொல்ல சொல்ல கேக்காம ஊட்டி விட்டாங்க." என்றார்.

"தம்பி உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டாளா?" என்றார் வருத்தமாக.

"அதெல்லாம் எதுவும் இல்லை ஆன்டி. அவ கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா. எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேரு. அவங்க வீட்டுக்கு போறதுக்கோ அவங்களை கவனிச்சுக்க ஏதாவது தடை சொன்னிங்கன்னா நம்ம கல்யாணத்தை பத்தி யோசிக்க வேண்டி இருக்கும்னு. அதுவுமில்லாம உங்க மேல எவ்ளோ பாசம் வச்சுருக்கான்னு தான் எனக்கு தெரியுமே. எந்த பிராப்லமும் இல்ல ஆன்டி. இதுக்கெல்லாம் கூட இல்லன்னா எப்படி?" என்று அவர் அருகில் அமர்ந்தான்.

"சரி நேரமாகுது. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க." என்றதும்.

"என்னை துரத்துரதிலேயே இரும்மா. அதெல்லாம் நான் எங்கையும் போகலை. உங்கக்கூட தான் ஒருவாரம் டேரா. எல்லாத்துக்கும் ரெடி செஞ்சுட்டு தான் வந்துருக்கேன்." என்றாள்.

"சரி போய் தூங்குங்க." என்று கெஸ்ட் ரூமை காட்டினார்.

இருவரும் சரியென்று உறங்க சென்ற பின் தன்னறைக்குள் நுழைந்தவுடன், அவ்வறையில் கணவனின் ஞாபங்கங்கள் நிறைந்திருக்க மீண்டும் தடுமாற தொடங்கினார் பார்வதி.

****
நேற்று முன்தினம் காலையில் விழிக்கும் முன் தன் பாதங்களில் ஏதோ அழுத்துவது போல் இருக்க, மெதுவாக கண் விழித்து பார்வதி பதறி எழுந்து அமர்ந்தார்.

அவரை முறைத்த பாலு, "இப்போ எதுக்கு எழுந்திருச்ச?" என்றார்.

"என்னங்க நீங்க? என்ன செஞ்சுட்டு இருக்கிங்க? எதுக்கு இங்க உட்கார்ந்து இருக்கிங்க? வாங்க வந்து படுங்க." என்று அழைக்க, "எதுக்கு பாரும்மா இவ்ளோ பதட்டம்? நாள் முழுக்க நிக்குற? வீட்டலயும் வேலை ஸ்கூல்லயும் வேலை... நீயும் சாதாரண மனுஷி தானே? இன்னைக்கு ரொம்ப சோர்ந்து போயிருந்ததை நான் கவனிச்சேன். நீ தான் சொல்ல மாட்டியே? அதான் கொஞ்சமா தைலம் போட்டு லேசா அழுத்தி விட்டேன். அதுக்குள்ள கண்ணு முழிச்சுட்ட... நீ தூங்கு இன்னும் கொஞ்ச நேரம் அழுத்தி விடறேன்." என்றார் அன்பாய்.

அவரின் அன்பில் உள்ளம் நெகிழ்ந்தாலும் அவருக்கும் வயது ஏற தானே செய்கிறது.

"அதெல்லாம் போதும்... வாங்க வந்து படுங்க. நல்லா ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னா கேட்கிறதே இல்ல." என்று புலம்பவும் அமைதியாய் வந்து பார்வதியின் தோளில் தலை சாய்த்து படுத்து கொண்டார்.

"நீ டென்சன் ஆகாத. நீ சொன்னவுடன் சமத்து பிள்ளையா வந்து படுத்துட்டேன்ல இப்போ தூங்கு." என்று அவரின் தலையை கோதி விட்டார் பாலு.

கணவனின் முகத்தை பார்த்தவாறே உறங்கியும் போனார்.

****

கணவனை பற்றிய நினைவில் உறங்காமல் இருக்க, கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் சுமதி.

"உன்னை தூங்க தானே சொன்னேன். நீ இங்க என்ன பண்ற?" என்றார்.

"மா. நீங்க தூங்காம அப்பாவை பத்தி நினைச்சுட்டு இருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி தூக்கம் வரும்? அதான் வந்துட்டேன்." என்று அருகில் அமர்ந்தாள்.

எதுவும் பேசாமல் அமைதியாய் கணவனின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பவரை நினைக்க பயமாய் இருந்தது.

"மா ஏன் அழாம இவ்ளோ அமைதியா இருக்கிங்க? மனசுல எவ்ளோ வலி இருக்கு... அழுத்தம் குறைய அழுதுடுங்க... இப்படி இருக்காதீங்க." என்றாள்.

மௌனம் மட்டுமே பதிலாய் இருக்க, சுமதியின் போன் அடித்தது. எடுக்காமலேயே அது யார் என்று தெரியும் பார்வதிக்கு.

"எனக்கு ஏற்கனவே தெரியும் உனக்கு எப்படி விஷயம் தெரிஞ்சுதுன்னு. இப்போ உறுதியாகிடுச்சு. எடுத்து பேசு. என்னன்னு கேளு." என்றார் பார்வதி.

"ம்ம்" என்றவள் எடுத்து, "அண்ணா!" என்றாள்.

"...."

"வந்துட்டேன்ண்ணா. அம்மாகூட தான் இருக்கேன்."

"...."

"சாப்பிடங்களாம்."

"..."

"நானும் சாப்பிட்டேன். நீ சாப்ட்டியா?"

"...."

"அண்ணா நடந்தது நடந்துருச்சு. என்ன பண்றது? அப்பா நம்ம கூடத்தான் எப்பவும் இருப்பார். நீ முதல்ல சாப்பிடு." என்றாள்.

"..."

"அழலை அது தான் எனக்கு பயமா இருக்கு." என்றாள் சுமதி.

"...."

"ஹ்ம்ம் சரிண்ணா. இரு தரேன்." என்றவள் பார்வதியிடம்,

"அம்மா அண்ணா உன்கிட்ட பேசனுமாம். பேசும்மா." என்று போனை கொடுக்க வாங்கி காதில் வைத்த பார்வதி எதிர்புறம் கேட்ட குரலில் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் கரைபுரண்டோடும் வேகமாய் பொங்கி வழிய கணவனின் மறைவால் ஏற்பட்ட துன்பத்தை அழுது கரைத்தார்.

"அம்மா போதும். உங்க உடம்பையும் பார்க்கணும்ல... வாங்க." என்று தண்ணீர் கொடுத்து அமர வைத்து, "அண்ணன் இதுவரைக்கும் இருந்த வனவாசத்துக்கு முடிவு வந்துருச்சுன்னு சொல்லுச்சும்மா. இன்னும் ஒரு மாசத்துல இங்க உங்கக்கூட இருப்பேன்னு சொல்ல சொல்லுச்சும்மா." என்றதும் அதிர்ச்சியாய் பார்த்தார் பார்வதி.

"வேண்டாம். அவன் அங்கயே இருக்கட்டும். இங்க வர வேண்டாம்." என்றார் திட்டவட்டமாக.

"அம்மா என்ன பேசறீங்க? உங்களோட எவ்ளோ வருஷ தவம்? கூடிய சீக்கிரம் சரியாக போகுது. இப்போ போய் வர வேணாம்னு சொல்றிங்க?" என்றாள் சுமதி.

"அவன் என்கூட இல்லைன்னாலும் உயிரோட எங்கேயோ நல்லா இருந்தா போதும் மா. அவன் உயிரோட இருக்கிறது தெரிஞ்சா அவன் உயிருக்கு ஆபத்தும்மா. எனக்குன்னு இருக்கிறது அவன் மட்டும் தான். அவனையும் நான் இழக்க விரும்பலை." என்று அழுதார்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro