அத்தியாயம் (18)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. வாரத்தில் அவள் க்ளினிக்கிற்கு ஓய்வு கொடுக்கும் ஒரே நாள். சஞ்சனா காலை காபிக்காக படியிறங்கி வரும் பொழுதே வீட்டிற்கு கனகா அத்தையின் குடும்பம் வருகை தந்திருப்பதர்க்கான அறிகுறி தெரிந்தது. அவள் எதிர்பார்த்தது போல சோபாவில் ஆச்சி அமர்ந்து இருக்க, கனகா மற்றும் அபி பட்டு உடுத்தி பூச்சூடிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்த வண்ணம் இருந்தனர்.

சஞ்சனா கண்ணில் பட்டவுடன், வாசுகி அவளை கையைப் பிடித்து தரதரவென பூஜை அறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றாள். சஞ்சனாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. வாசுகி இழுத்த இழுப்புக்கு அவள் பின்னால் சென்றாள். பூஜை அறைக்குள் சென்றதும் அங்கிருந்த ஒரு தட்டைத் தூக்கி சஞ்சனாவின் கையில் கொடுத்து ''வாங்கிக்கம்மா'' என்றாள் புன்சிரிப்புடன்.

''என்னத்தை இதுலாம்??'' என்றாள் சஞ்சனா மறுக்காமல் தட்டை கையில் வாங்கிக் கொண்டு.

''எல்லாரும் குல தெய்வம் கோவிலுக்கு கிளம்புறோம். சீக்கிரம் போய் இந்த புடவையை கட்டிட்டு ரெடியாகிட்டு வா.. போ போ..'' என்று சஞ்சனவை பதில் பேச விடாமல் அவசரப் படுத்தினாள்.

சஞ்சனாவும் சரி என்று அதை வாங்கிக் கொண்டு மீண்டும் படியேற,

''என்னங்க டாக்டரம்மா இப்போதான் விடிஞ்சுதா?'' என்ற ஆச்சியின் குரல் காதில் விழுந்தது.

''கோச்சிக்காதிங்க ஆச்சி. இதோ ரெண்டு நிமிஷத்துல ரெடி ஆகி வந்துடறேன்'' என்று உற்சாகமாக ஆச்சிக்கு பதில் அளித்தவாறு தன் அறைக்குள் மீண்டும் புகுந்து கொண்டாள் சஞ்சனா.

வாசுகி கொடுத்த தட்டில் அரக்கு நிறப் பட்டுப் புடவையும், மேட்ச்சிங் ஜாக்கெட்டும், பூவும் இருந்தது. சஞ்சனா கூறியது போல ஒரு சில நிமிடங்களில் லாவகமாக புடவையை கட்டிக் கொண்டாள். அவசர அவசரமாக தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். கதவு தட்டப் படும் ஓசை கேட்டது.

''கதவு சும்மா தான் சாத்தி இருக்கு. யாரா இருந்தாலும் திறந்துட்டு உள்ள வாங்க. கைல வேலையா இருக்கேன்'' என்றாள் வாயில் க்ளிப்பும் கையில் பூவுமாக.

கதவைத் திறந்து கொண்டு ஷக்தி உள்ளே நுழைந்தான். பட்டு வேஷ்ட்டி பட்டு சட்டை அணிந்து வீட்டுக்குள் கறுப்புக் கண்ணாடி அணிந்து இருந்தான். அவனை அந்த கோலத்தில் கண்ட மாத்திரத்தில் சஞ்சனாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அவள் க்ளுக் என்று சிரித்து வைக்க, அவள் உதட்டில் வைத்து இருந்த க்ளிப் கட்டிலுக்கு கீழே சென்று விழுந்தது.

''இப்போ எதுக்கு சிரிக்கிற நீ??'' என்றான் ஷக்தி முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு.

''எனக்கு சிரிப்பு வந்திச்சு நான் சிரிக்கிறேன். நீ எங்கே இங்க வந்தே??''

''அம்மா தான் உனக்கு புடவை கட்ட தெரியாது, கட்டறதுக்கு ஹெல்ப் பண்ணுன்னு அனுப்புனாங்க'' என்றான் ஷக்தி சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு.

சஞ்சனா ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாலும் சீக்கிரமே இவன் தன்னிடம் விளையாடுகிறான் என்பதை கண்டு கொண்டாள்.

''நீ வருவேன்னு ரொம்ப நேரமா பார்த்துட்டு இருந்தேன். நீ வரலை. சரி அபிக்கு புடவை கட்டி விட போன இடத்துல லேட் ஆகி இருக்கும்ன்னு நானே கட்டிக் கிட்டேன்'' என்றாள் அவளும் சீரியசாக சொல்வது போல.

இப்பொழுது ஷக்திக்கும் சிரிப்பு வந்து விடும் போல இருந்தது. சிரிப்பை மறைத்துக் கொண்டு,

''நான் கட்டி விட்டு இருந்தா ஒழுங்கா கட்டி விட்டு இருப்பேன். நீ கட்டுன லட்சணம் தான் இடுப்புலாம் தெரியுது'' தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

அவன் கூறியது சஞ்சனாவுக்கு தெளிவாக கேட்ட பொழுதும் '' சொல்றதை எனக்கும் கேட்க்கும் படியா சொல்றது'' என்றாள்.

''ஒன்னும் இல்லை, நீ ரெடியாகிட்டியான்னு பார்க்கறதுக்கு தான் வந்தேன். நான் கிளம்புறேன். நீ சீக்கிரம் வந்து சேரு'' என்று கூறி விட்டு ஷக்தி கிளம்பினான்.

இரண்டு வண்டிகளில் அனைவரும் ஏறிக் கொண்டு குல தெய்வம் கோவில் நோக்கி சென்றனர். ஷக்தியின் வண்டியில் வாசுகி, ஆச்சி, சஞ்சனா மற்றும் அபி ஏறிக் கொண்டனர். வழி நெடுகிலும் சஞ்சனாவும் அபியும் ஏதாவது ஒன்றை பற்றி பேசிச் சிரித்துக் கொண்டே வந்தனர். ஷக்தியும் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டு அவர்கள் இருவரை கிண்டல் செய்தான்.

ஏன் சஞ்சனாக்கா நீங்க ஊர்லே என்ன டிரஸ் போட்டுப்பிங்க?? அங்கே கூட புடவைலாம் கட்டுவீங்களா?? என்றால் அபி.

"புடவை கட்டறது ரொம்ப கம்மி தான் அபி. ஹாஸ்பிடல் போறப்போ எனக்கு கம்ஃபர்ட்டபில்லா டிரஸ் பண்ணிக்கணும். சோ ஜாஸ்தி குர்த்தி அண்ட் ஜீன்ஸ் தான் ப்ரிஃபர் பண்ணுவேன்."

"பரவால்லையே புடவை கட்டி ஜாஸ்தி பழக்கம் இல்லைன்னா கூட புடவையை ரொம்ப நேர்த்தியா கட்டி இருக்கீங்க. நீங்களே கட்டிக்கிட்டிங்களா இல்லை யார்னா ஹெல்ப் பண்ணாங்களா??" என்று மிக சாதாரணமாய் கேட்டால் அபி.

அபி அவ்வாறு கேட்டதும், ஷக்தி தனக்கு புடவை கட்டி விட வந்ததாகக் கூறிக் கொண்டு காலையில் அறைக்குள் வந்ததை நினைத்து சஞ்சனாவுக்கு சிரிப்பு வந்தது. அபி அவ்வாறு கேட்டதும் கண்ணாடியின் ஊடாக சஞ்சனாவைப் பார்த்து ஷக்தியும் அசடு வழிந்தான். பின்னர் சஞ்சனா ஏதாவது சொல்லி வைத்து விடுவாள் என்று பயந்து கொண்டு அவனே பேசினான்.

ஏன் அபி.. இந்த புடவை, ஜாக்கெட், பாவாடை இதைத் தவிர உங்க ரெண்டு பேருக்கும் பேசிக்கறதுக்கு வேற மேட்டரே கிடையாதா??

இப்பொழுது அபி வெட்கப் பட்டாள். ஏனெனில் ஷக்தி இவ்வளவு இயல்பாக பேசி அவள் கேட்டதே இல்லை. அதுவும் அவளை பார்த்து பேசியது அவளுக்கு சந்தோஷமாகவும் அதே வேளை அவன் அவளைக் கிண்டல் செய்ததால் அவளுக்கு கூச்சமாகவும் இருந்தது. இவ்வாறான பேச்சுக்களினூடே வண்டி இரண்டும் கோவிலைச் சென்று அடைந்தது.

ஊர் எல்லையில் அமைந்து இருந்தது அந்த ஐநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த கருமாரியம்மன் கோயில். சுந்தரம் கனகா தம்பதிகள் ஒரு நேர்த்திகடன் செலுத்துவதற்க்காக குலதெய்வம் கோயிலுக்கு வருவதாக இருக்க, அதை அறிந்த முத்துப்பாண்டி, சஞ்சனா வந்து இருப்பதால் அவளையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வர விரும்பினார்.

அர்ச்சனை முடிந்து நேர்த்திக்க்கடன் செலுத்த பெரியவர்கள் கிளம்ப சஞ்சனா அபியுடன் கோயிலை சுற்றிப் பார்க்க விரும்பினாள். அபி அந்த இடத்தை விட்டு நகர முடியாத சூழ்நிலையில், ஷக்தி சஞ்சனாவுக்கு கோயிலை சுற்றிக் காட்டும் படிக்கு அழைத்துக் கொண்டு சென்றான். சஞ்சனா ஆற அமர கோயிலை சுற்றிப் பார்த்தாள், ஷக்தியை ஆயிரம் கேள்வி கேட்டாள்.

''தெரியாமல் வந்து மாட்டிக் கிட்டேனே இந்த பொண்ணு கூட. கோயிலை சுத்திக் காட்டுடான்னு கூட்டிட்டு வந்துட்டு ஒரொரு சந்துலயும் நின்னு சாமி கும்பிடுது'' சற்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டு அவள் பின்னால் சென்றான் ஷக்தி.

''என்ன முனங்கிட்டே வர?? முடியலைனா கிளம்பு நான் தனியாவே பார்த்துக்கறேன்'' என்றாள் அவனை ஓரக் கண்ணால் பார்த்த வண்ணம்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஒன்றும் பதில் பேசாமல் கூட நடந்தான் அவன். இப்பொழுது காமாட்சியம்மன் சந்நிதியில் சென்று நின்று கொண்டாள் சஞ்சனா.

''அம்மன். என்னோட இஷ்ட்ட தெய்வம். உன் மனசுல உள்ளதை சொல்லி வேண்டிக்கோ'' என்றான் ஷக்தி.

சஞ்சனா மிகவும் பயபக்தியுடன் கண்களை மூடிக் கொண்டு வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். ஷக்தியும் அவளுடன் சேர்ந்து நின்று இம்முறை அம்மனை வேண்டிக் கொள்ளத் தான் எண்ணினான். ஆனால் அவள் கண் மூடி கை கூப்பி நிற்க்கும் அழகு அவளே ஒரு காமாட்சி அம்மன் சிலை போல் இருக்க, கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.

அந்த மஞ்சள் முகத்தில் கொஞ்சம் கூட கள்ளம் கபடம் இல்லை. ஆனால் அப்பேர்ப் பட்ட பெண்ணுக்கு வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்து இருக்கின்றது. ஷக்திக்கு அப்படியே அவளை கடத்திக் கொண்டு யாரும் இல்லாத ஒரு தீவிற்கு போய் விடலாமா என்று இருந்தது. அவளை அப்படியே அள்ளிக் கொண்டு பறந்து சென்று அவளே திக்கு முக்காடிடும் வண்ணம் அவளை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்த வேண்டும் போல இருந்தது. சஞ்சனாவுக்கு இனி மேல் வாழ்க்கையில் எந்த சோகமும் வர இடம் தரக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது.

பல்வேறு பட்ட உணர்ச்சிகள் வந்து அவனைத் தாக்கின. நேற்று இரவு சஞ்சனா தன்னைப்பற்றி கூறியது முதல் எப்படியாவது அவளைத் தன்னவள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அவனுக்குள் வந்து கொண்டே இருந்தது. எதோ ஒரு அவசரம் எதோ ஒரு கலவரம். அதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. இப்பொழுது இந்த அம்மன் சந்நிதியில் அவளோடு கூட ஜோடியாக நிற்க்கும் பொழுது அந்த எண்ணம் அவனுக்கும் மேலும் அதிகரித்தது.

காமாட்சி அம்மனை கண்ணெடுத்துப் பார்த்தான், அம்மன் சிலையின் மடியில் ஒரு தாலிக் கயிறு இருந்தது. அது அந்த அம்மனே அவனைப் பார்த்து இவளை உடனே உன்னவள் ஆகிக் கொள் என்று சொல்வதை போல அவனுக்குத் தோன்றியது. அம்மன் சிலையின் அருகே சென்றவன் அந்தத் தாலிக் கையிற்றை தன் கையில் எடுத்துக் கொண்டான். தாலியோடு சஞ்சனாவை நெருங்கினான்.

காதல் தந்த தைரியத்தில், அவள் கண் திறக்கும் முன் அவள் கழுத்தில் அந்த மஞ்சள் கயிறு கொண்டு மூன்று முடிச்சிட்டான் ஷக்தி. அவள் கழுத்தில் ஷக்தியின் கை விரல்கள் உரச கண் திறந்து பார்த்தவள் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள். அவள் கண்கள் குளமாயின. அவள் பார்வையின் தீவிரம் அவன் உயிர் வரை சென்று சுட்டது.

''இன்னையோட 'யூ ஆர் நாட் மேரேஜ் மெட்டிரியல்'ன்னு யாரோ ஒரு பைத்தியக்காரன் உளறின, நீ கூட நிஜம்ன்னு நம்பிட்டு இருந்த அந்த வாக்கியம் பொய்யாகிரிச்சு. இந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கு பொண்டாட்டி '' அவளது கண்களைப் பார்த்து முழு மனதுடன் கூறினான் ஷக்தி.

அவன் கூறி முடித்த மறு நொடி சஞ்சனாவின் வலது கரம் 'பளாரென' அவன் இடது கன்னத்தில் விழுந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro