31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

" அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லை. உன் அம்மா தம்பி இவங்கதான் முக்கியம். ஆமா நான் உனக்கு எப்படி முக்கியமா இருப்பேன். பிடிக்காத புருஷன் மூலமா பிறந்தவதானே நான்" என்ற ஜனனியின் பேச்சை சாரதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் மகள் எப்பொழுதும் அவளிடம் வாயடிப்பவள்தான். ஆனால் இன்று அவர்களுக்குள் உண்டான வாதம் சற்று வித்தியாசமானது. உலகில் எந்த ஒரு தாயும் மகளும் சந்தித்திராத தருணம் அது. மனைவியை இழந்த தந்தைக்கு கூட மகள்கள் இன்னொரு பெண்ணை மணமுடித்து கொடுப்பதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் ஒரு தாய்க்கு அவளின் மகள், மணமகன் தேடுவதை ஏற்றுக்கொள்ள தயங்கும். இதுதான் நாம் வாழும் சமூகத்தின் நீதி. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி. பெண் என்பவள் எத்தனை கஷ்டங்களைத்தான் தாங்குவாள். விபச்சாரி, விதவை போன்ற பெண்ணை குறிக்கும் வார்த்தைகளுக்கு ஆண்களைக் குறிக்கும் வார்த்தைகள் தமிழில் உண்டா?

" உன்கிட்ட இனிமே பேசி எதுவும் ஆக போறதில்ல ஜனனி. நீ என்னதான் குட்டிக்கரணம் அடிச்சாலும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை". சாரதாவின் வைராக்கியத்தை முதல் முறையாக ஜனனி இன்றுதான் பார்க்கின்றாள். கடைசியாக ஒரு முறை தன் தாயிடம் கெஞ்சி பார்க்கலாம் என நினைத்தவள் சாரதாவின் அருகில் சென்று அவள் கைகளை பிடித்துக் கொண்டாள்.

" அம்மா ப்ளீஸ்மா. ஜீவாவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்மா. நீ ஹ்ம் நு ஒரு வார்த்தை சொல்ல. எனக்கு ஒரு அப்பாவும் உனக்கு ஒரு நல்ல துணையும் கிடைக்கும். நம்மளும் மத்தவங்க போல ஒரு குடும்பமா சந்தோசமா வாழலாம். அப்பா பாசம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது. ஆனா அப்பா இருந்தா அந்த உறவு நமக்கு கொடுக்கும் பாதுகாப்பு உணர்வ நான் ஜீவாகிட்ட உணர்ந்திருக்கேன். உனக்கு நானும் எனக்கு நீ மட்டும்தானேமா இருக்கோம். நம்ம கூட ஜீவாவும் சேர்ந்தா எவ்வளவு அழகா இருக்கும். வயசென்னமா வயசு. உன்ன பார்த்த எனக்கு அக்கா மாதிரிதான் இருக்க. உனக்கு இருபத்தி ஐந்து வயசுக்கு மேலன்னு யாருமே சொல்ல மாட்டாங்க. அம்மா கெஞ்சி கேட்குறேன்மா. ஜீவா உனக்கு துணையா வேணாம்னாலும் எனக்கு அப்பாவா வேணும்மா. ப்ளீஸ்மா. உன்ன கெஞ்சி கேட்குறேன்மா" என்றாள்.

ஜனனி எதற்கும் கெஞ்சுபவள் கிடையாது. அவளுக்கு ஒன்று வேண்டும் என்றால் வேண்டும்தான். சாரதாவும் இதுவரை அவளுக்கு எதிலுமே முட்டுக்கட்டை இட்டதில்லை. ஆனால் அவளின் இந்த கெஞ்சுதல் சாரதாவின் மனதில் சிறிது சலனத்தை உண்டாக்கியது. இருந்தாலும் அவளால் ஜனனியின் கோரிக்கைகளை ஏற்க முடியவில்லை.

" இல்ல ஜனனி, என்னால என் அம்மாவ மீறி எதுவுமே பண்ண முடியாது. நான் இங்க படிச்சி வேலைக்கு சேரும் போதே தெளிவா சொல்லித்தான் அனுப்பினாங்க. குடும்ப மானம் போற மாதிரி ஏதும் பண்ணா உன்னையும் என்னையும் கொன்னுடுவாங்கன்னு. என்ன ஏதும் பண்ணா கூட எனக்கு கவலை இல்லை. ஆனா என்னால உனக்கு ஏதும் ஆகிடக்கூடாது. என்னால எங்கம்மாவ மீறி எதுவும் பண்ண முடியாது" என்றாள். ஜனனியின் பொறுமை காற்றில் பறந்தது.

" என்னவிட அந்த கிழவிதான் முக்கியமா போய்ட்டால்ல, உனக்கு இந்த ஜனனி முக்கியம் இல்ல. எனக்கு பதினாழு வயசுதான். ஆனா மெச்சூரிட்டி ஜாஸ்த்தின்னு சொல்லுவ. அதுவும் நான் உங்க அம்மா, அதான் என் பாட்டி மாதிரி நினைச்சத சாதிச்சி முடிக்கிற தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ளவள்னு அடிக்கடி சொல்லுவ. அப்போலாம் அந்த கிழவிய என்கூட ஒப்பிடும் போது உடம்பெல்லாம் கூசும். இப்போ கேட்டுக்கோ சாரதா. அந்த கிழவிய விட எனக்கு வைராக்கியம் ஜாஸ்த்தி இருக்கு. நீ என்னமோ பண்ணிக்கோ. ஆனா நான் பண்ண போற காரியத்துல இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது. காலத்துக்கும் நான் பண்ண போற காரியத்த நினைச்சி நீ கண்ணீர் வடிக்க போற" என்று ஆவேசமாக பேசினாள்.

சாரதாவுக்கு புரியவில்லை, ஜனனி அடுத்து என்ன செய்யப் போகின்றாள் என்று. எதுவாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்பது சாரதாவின் எண்ணம். உடனே சாரதாவின் போனை எடுத்து ஜனனி யாருக்கோ கால் செய்தாள். ஜனனி யாருக்கு கால் செய்கின்றாள் என்று சாரதாவுக்கு புரியவில்லை.

" மாமா நான் ஜனனி பேசுறேன். என்ன கட்டிக் கொடுக்க சொல்லி எங்கம்மாகிட்ட எப்போமே கேட்பேல்ல, இப்போ நான் சொல்றேன். இந்த வாரத்துக்குள்ள என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னா நான் உங்கள கட்டிக்கிறேன். எனக்கு படிக்க இஷ்டமில்ல. இந்த ஊர்ல இருக்கவும் இஷ்டமில்லை. எதுவா இருந்தாலும் உடனே யோசிச்சி சொல்லுங்க" என்றவள் போனை கட் செய்து சாரதாவிடம் தூக்கி போட சாரதாவுக்கு உலகமே இருளில் மூழ்கியது போலானாது.

" ஜனனி இப்போ என்ன பண்ண. அவன் வயசென்ன உன் வயசென்ன" என்று கூற சாரதாவை எகத்தாளமாக பார்த்தவள்,

" நீ உன் புருசன் கட்டிக்கிட்டப்போ இருந்த வயசு வித்தியாசத்த விட கம்மிதான். எங்களுக்குள்ள ஜஸ்ட் பதின் மூன்று வருசம் தான் வித்தியாசம். அதைப்பத்தி எனக்கே கவலை இல்லை. உனக்கென்ன கவலை. இனிமே நீ யாரோ நான் யாரோ. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன. ஐஸ் க்றீம் வாங்க காசுக்கு உன்கிட்டதான் வரனும்னு சொன்னேல்ல. நான் கேட்டா எனக்கு காசு கொடுக்க ஆயிரம் பேரு இருக்காங்க, ஆனாலும் நான் அப்படி பண்ணா அது உனக்குத்தான் அவமானம். உனக்கு என்னால எந்த அவமானமும் வராது. ஆனா அதுவே உன் தம்பிய கட்டிக்கிட்டா யாரும் எந்த கேள்வியும் என்ன கேட்கவும் முடியாது, உனக்கு எந்த அவமானமும் வராது. என்ன சின்ன வயசு கல்யாணம். கேட்டா நான் எங்க மாமாவ ரொம்ப லவ் பண்ணி கட்டிக்கிட்டேன்னு சொல்வேன். இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு கால் வரும். ஊருக்கு போக பெட்டி எல்லாம் ரெடி பண்ணனும். கொஞ்சம் விலகி நில்லு" என்றாள்.

சாரதா இப்படி ஒரு செக் மேட்டை ஜனனியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஜனனி ஏதாவது விளையாட்டுத்தனமாக செய்வாள் என்று யோசித்தவள் இப்படி அவளது வாழ்க்கையையே தனக்காக அடகு வைப்பாள் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இதற்கு முடிவு என்ன என்றும் சாரதாவுக்கு தெரியவில்லை. ஜனனியின் அறைக்குள் சென்ற சாரதா,

" ஜனனி ப்ளீஸ்டா. உங்க மாமாவுக்கு கால் பண்ணி சொல்லு. அம்மா கூட சண்டை போட்ட கோவத்துல இப்படி பேசிட்டேன். எனக்கு படிக்கனும்னு சொல்லுடா பளீஸ். என் வாழ் நாள் முழுவதையும் உனக்காகத்தான் செலவு செஞ்சிருக்கேன். அதை பாழ்படுத்திடாத ஜனனி ப்ளீஸ்" என்று கெஞ்ச ஜனனி அதை காதிலேயே வாங்கிக் கொள்ள வில்லை. அவள் ஊருக்கு செல்ல தேவையான ஆடைகளை அடுக்குவதில் கவனமாக இருந்தாள்.

" சரி ஜனனி, நீ சொல்றத நான் கேட்குறேன். ஆனா நீ டென்ந்த் எக்சாம்ல நல்ல மார்க்ஸ் எடுக்கனும். அப்படி எடுத்தின்னா நீ எது சொன்னாலும் கேட்குறேன்" என்றாள்.

ஜனனியின் மனதுக்குள் குளு குளு என்றிருந்தது. முடியவே முடியாது என்று கூறிய தன் தாய் இப்போது நிபந்தனையுடன் தனது கோரிக்கையை செவி சாய்க்க ஆரம்பித்துவிட்டாள். இனி எப்படியும சாரதாவை பணிய வைத்து விடலாம் என்று அவளுக்கு தெரிந்தது. ஆனால் சாரதாவுக்கோ ஜனனி பதில் ஏதும் கூறாமல் இருப்பதை கான அவளின் வைராக்கியத்தை எண்ணி கோவம் வந்தது.

" சரி, நீ எது சொன்னாலும் கேட்குறேன். ப்ளீஸ். உன் மாமாவுக்கு கால் பண்ணி சொல்லு. நீ விளையாட்டாத்தான் சொன்னேன்னு. ப்ளீஸ் ஜனனி" என்றாள். ஆனால் அதே நேரம் சாரதாவின் போன் அலறியது. அதை எடுத்து பார்த்தவளுக்கு முகமெல்லாம் வியர்த்தது.

" என்னக்கா, என் பொண்டாட்டி என்ன சொல்றா. மாமா மேல எவ்வளவு ஆசை பார்த்தியா அவளுக்கு. உடனே கட்டிக்கனுமாம்ல. நீதான் எப்ப பார்த்தாலும் அவளுக்கு படிப்பு இருக்கு முடியட்டும்னு சொல்லுவ. ஆனா என் செல்லத்த பாரு. என்ன கட்டிக்க எவ்வளவு ஆர்வமா இருக்கான்னு. நான் இப்பவே கிளம்பி அங்க வரேன். நீயும் ஜனனியும் ரெடியா இருங்க. பெருசா சாமான் எதுவும் எடுக்க தேவை இல்ல. எப்படியும் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் நீ எங்க கூட ஊர்லதான் இருக்க போற. அங்க தனியா ஜனனியும் இல்லாம நீ மட்டும் என்ன பண்ணுவ. நீ இங்கயே வந்திடு. மாமாவும் இங்கதான் இருக்காறு. என்ன இருந்தாலும் அவரு உன்ன தொட்டு தாலி கட்டின புருஷன். உங்க ரெண்டு பேருக்கும் இடையில சமாதானம் பேசி ஒன்னு சேர்த்திடலாம்" என்று கூற சாரதா மந்திரத்துக்கு கட்டுண்டவள் " சரி தம்பி" என்றாள்.

ஜனனிக்கு சாரதாவை பார்க்க கோபமாக வந்தது. ஒரு வார்த்தை கூட அவள் எதிர்த்து பேசாதது அவளுக்கு கோபத்தை மேலும் அதிகமாக்கியது. உடனே அவளின் கையை பிடித்து தர தர வென்று இழுத்தவள் சாரதாவை அறைக்கு வெளியே தள்ளி கதவை தாழிட்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro