அத்தியாயம் (19)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதி குடிப்பதை நிறுத்தி இருந்தான். நேரத்துக்கு வீடு திரும்பினான். நள்ளிரவில் அவனாகவே கேட்டைத் திறந்து கொண்டு வருவது அவனுக்கு பிடிக்கவில்லை. அது ஆருவை நினைவு படுத்தியது. கேட் திறந்து இருக்கும் பொழுதே வீட்டுக்கு வந்துவிடப் பழகி இருந்தான். சாப்பாட்டுக்கு ஆருவின் வீட்டில் காலையும் மாலையும் போய் உட்கார வேண்டி இருந்தது கொஞ்சம் கஷ்டமாக  இருந்தது. யாராவது ஒருவர் அவளை ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். "உன்கிட்ட பேசினாளா, என்ன சொல்றா" என்று நிலமை புரியாமல் ஆயிரம் கேள்விகள். ஆருவின் வீட்டில் அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் அங்கு போய் இயல்பாக இது வேண்டும் இது நல்லா இல்லை என்று உரிமையாக கேட்க முடியவில்லை. காபிக்கும் டபனுக்கும் அங்கு போய் நிற்பது எத்தனை தான் பழக்கப்பட்ட இடமாக இருந்தாலும் ரொம்பவும் அவஸ்தையாக இருந்தது. லீவு நாளில் காபி டிபன் மாடிக்கே வந்து விடும் ஆனால் அதை அவனாக கழுவி கொண்டு போய் கீழே கொடுக்கும் வரை அது அங்கேயே கிடந்தது. வீடெல்லாம் ஒரே குப்பையாக இருப்பது போல உணர்ந்தான். "நம்ம வீட்டுக்கு வேலைக்காரம்மா வர்ரது கிடைதாதா..." என்று யோசித்தான்! முதல் முறையாக அம்மா இத்தனை நாளாக போய் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை எண்ணி அவனுக்கு கோபம் வந்தது. அவனாக ஒரு போதும் அம்மா அப்பாவுக்கு கால் செய்வதில்லை. அவர்கள் கால் செய்தால் பேசுவதோடு நிறுத்திக் கொள்வான். இன்று காரணமே இல்லாமல் கோபம் கோபமாக வரவும் அவனாக அம்மாவை அழைத்துப் பேசினான்.

அம்மா: ஆதி சொல்லுடா.. சௌக்கியமா இருக்கியா?

ஆதி: நான் தண்ணி அடிக்கிறது உனக்கு தெரியும்லமா? (என்றான் எடுத்த எடுப்பில்)

அம்மா: என்னடா இப்படி திடீர்னு கால் பண்ணி அம்மாவை என்னென்னமோ கேக்குற? (அம்மாவுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை)

ஆதி: சொல்லும்மா உனக்கு தெரியுமா தெரியாதா? (அவன் ஒரு முடிவோடு தான் இருந்தான்)

அம்மா: தெரியும்டா... (என்றாள் வேறு வழி இல்லாமல்)

ஆதி: நான் குடிச்சிட்டு லேட்டா வீட்டுக்கு வர்ரப்போ எனக்கு டின்னர் எடுத்து வைக்க வேணான்னு தானே உன்கிட்ட சொல்லுவேன்...

அம்மா: ஆமா..... இப்போ அதுக்கென்ன??? (அவன் என்ன சொல்ல வருகிறான் என்றே புரியவில்லை அம்மாவுக்கு)

ஆதி: அப்பறம் ஏன் தினம் எனக்கு ஹாட் பாக்ஸ்ல சாப்பாடு எடுத்து வெச்சிட்டு தூங்குவ நீ? (அடுத்த கேள்வியை கேட்டான்)

அம்மா: அது நான் இல்லைடா. ஆரு தான் ஏதாவது ஸ்பெஷலா பண்ணி இருக்கேன் இது ஆதிக்குன்னு சொல்லி தினம் எதையாச்சும் உனக்குன்னு எடுத்து வெச்சிட்டு போவா... நீயும் அதை தினமும் சாப்பிட்டு தானேடா தூங்குவ. இப்போ அதுக்கென்ன? (சத்தியமாக புரியவில்லை அம்மாவுக்கு)

ஆதி: எனக்கு தினமும் சாப்பாட்டுல ஒரு வேளையாச்சும் உருளைக் கிழங்கு கறி வெச்சது யாரும்மா? (அடுத்த கேள்வி)

அம்மா: உனக்கு தான் உருளைக் கிழங்கு கறி இல்லாமல் சாப்பாடு செறிக்காதேடா. நான் பண்ற உருளைக் கிழங்கு பொறியல் உனக்கு பிடிக்காதுன்னு தினமும் ஆரு தான் ஒரு வேளையாச்சும் உனக்குன்னு தனியா உருளைக் கிழங்கு கறி பண்ணிடுவா... (டீச்சருக்கு பதில் கூறுவது போல பயபக்தியாக சொல்லிக் கொண்டு இருந்தாள் அம்மா)

ஆதி: நீ அமெரிக்கா போகும் போது வேலைக்காரம்மாவை வரச் சொல்லிட்டு போகலையாம்மா? (கடைசிக் கேள்வி)

அம்மா: இல்லடா. அது தான் கீழே ஆரு, மாமி எல்லாம் இருக்காங்களே அவங்கல்லாம் உன்னை பார்த்துக்க மாட்டாங்களான்னு ஆரு தான் வேணாம்னுட்டாப்பா... (அவ்வளவு தான்)

ஆதி: ஆரு... ஆரு... ஆரு...!! எதுக்கெடுத்தாலும் ஆரு!! எனக்கு நீ அம்மாவா இல்லை அவ அம்மாவா??இதுவரை எனக்கு ஒன்னொன்னும் அவ தான் பார்த்து பார்த்து பண்ணாலா? அம்மான்னு நீ எதுவுமே பண்ணலயா?? (கத்தி விட்டு phone ஐ விசிரி அடித்தான் ஆதி. நடுங்கிப் போனாள் அம்மா)

ஆதிக்கு சத்தமாக கத்தி அழ வேண்டும் போல இருந்தது. யாரையாவது அடிக்க வேண்டும் போல இருந்தது. வீட்டில் இருந்த பொருள் எல்லாவற்றையும் போட்டு உடைக்க வேண்டும் போல இருந்தது. கை முஷ்டி இரண்டையும் மடக்கிக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தான். அவனுக்கு அவன் மேல் தான் கோபம். இத்தனை நாளாக இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்த அவன் மீது தான் அவனுக்கு கோபம்! பெற்ற தாய்க்கு மேல், கட்டிய மனைவிக்கு மேல் ஒருத்தி அவனை அக்கறையாக பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அதை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறான். அவள் இல்லை என்று ஆனதன் பின்னர் தான் அவனுக்கு ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்து இருந்தது. எழுந்து சென்று ஶ்ரீரங்கம் எடுத்து சென்ற Traveling bag இல் இருந்து அழுக்குத் துணிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து தூக்கி போட்டு விட்டு அதனுள்ளே தனியாக ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு எடுத்து வைத்திருந்த ஆரு அவனுக்கு பரிசளித்த, அவன் ஶ்ரீரங்கத்துக்கு அணிந்து கொண்டு சென்ற, கழுவாமல் அப்படியே பையில் போட்டு கவனமாக எடுத்துக் கொண்டு வந்த அந்த ஷர்ட்டை கையில் எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டான். ஷர்ட்டில் இருந்து அவளது வாசனை வந்தது, அன்று அவள் அவன் நெஞ்சின் மீது தலை சாய்த்து அழுத போது அவளது கண் மை கண்ணீரோடு கலந்து அவன் ஷர்ட்டில் லேசாக அப்பியிருந்தது. அவள் அன்று அழுத கண்ணீரின் தடம் கூட அவன் சட்டையிலிருந்து இன்னும் போயிருக்காத நிலையில் அவள் மட்டும் அவனை விட்டு விட்டு நெடு தூரம் போயிருந்தாள். சட்டையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஆதித்யா. யாரோ படியேறி மேலே வரும் சத்தம் கேட்டது. முகத்தில் எதையும் காட்டாமல் இயல்பாக அமர்ந்து கொண்டான். அன்று விடுமுறை நாள். ராமும் ரஞ்சினியும் தான் மேலே ஏறி வந்தனர்.

ஆதியின் முன் வந்து அமர்ந்த ராம் வந்ததுமே ஆரம்பித்தான்.

"என்னடா பிரச்சினை உங்களுக்குள்ள?"

"என்ன பிரச்சனை?" என்று திரும்பிக் கேட்டான் ஆதி.

"டேய் நடிக்காத. நான் உன்மேல ரொம்ப கோபமா இருக்கேன்."

"என்னடா சொல்ற? எனக்கு நிஜமா புரியல" என்றான் சிரிப்பினூடே ஆதி.

"நீ ஏன் ஆருவை ஏர்போர்ட்ல டிராப் பண்ண வரல?"

"இதுக்கு தான் ஒரு வாரம் கழிச்சு வந்து சண்டை போடுறியா?"

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு நீ..."

"டேய் நீ நினைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்லடா. அன்னைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை ரொம்ப டென்ஷன் அது தான் வர முடியல. நான் தான் அன்னைக்கு காலைலயே அவளை பார்த்துட்டு தானே ஆபீஸ் கிளம்பி போனேன்"

"ஆதி உனக்கும் ஆருவுக்கும் நடுவுல நாங்க என்னைக்குமே தலையிட்டதில்லை. ஆனால் இப்போ எனக்கு பயமா இருக்கு. நீங்க இரண்டு பேரும் என்ன பண்ண போறிங்களோன்னு..." ராமின் முகத்தில் நிஜமான வருத்தம் தெரிந்தது.

"டேய் என்னடா நீ? உன்னை விட என்னையும் ஆருவையும் யாருக்குடா தெரியும்? நானும் ஆருவும் சண்டை போட்டுக்குறதும் சேர்ந்துக்குறதும் ஒன்னும் புதுசில்லையே. We are just upset with each other. இன்னும் இரண்டு நாள்ல எல்லாம் சரியா போய்டும். நீ ஒன்னும் வர்ரி பண்ணிக்காத...."

"நீயும் ஆருவும் எப்பவும் போடுற சண்டை தான் இதுன்னா இது பத்தி பேசுறதுக்கு நான் வந்திருக்க மாட்டேன்டா. உங்களுக்குள்ள என்ன தகராறுன்னு எனக்கு தெரியாது ஆனால் ஆரு போறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிட்டு போனா "அவள் இனி மேல் அவள் வாழ்க்கைல சந்திக்கவே கூடாதுன்னு நினைக்கிற நபர் நீ தான்னு". ஆரு யாரையும் தூக்கி எரிஞ்சு பேசுற பொண்ணே கிடையாது ஆதி! நான் கூட ஆரம்பத்துல அதை அவ்வளவு சீரியசா எடுத்துக்கல. ஆனால் இப்போ நீ பண்ணிட்டு இருக்கதை எல்லாம் பார்த்தால் எனக்கு என்னமோ நல்லாவே இல்லைடா. என் மனசுல உள்ளதை நான் சொல்லிட்டேன். நான் போனதுக்கு அப்பறமா நான் சொன்னதை நீ நிதானமா உட்கார்ந்து யோசிச்சு பாரு...." சொல்லிவிட்டு எழுந்தான் ராம்.

ஆரு சொல்லி விட்டு சென்றதாக ராம் கூறிய வார்த்தைகள் ஆதியின் மூளைக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருந்தது. இருவரின் உரையாடலை ரஞ்சினி அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தாள்.

"ரஞ்சி நான் கீழே போறேன். நீ இருந்து பேசிட்டு வா" என்று மனைவியிடம் சொல்லி விட்டு கீழே இறங்கி சென்றான் ராம்.

"அம்மாவுக்கு கால் போட்டு சண்டை போட்டியா?" முறைப்பாக கேட்டாள் ரஞ்சினி.

"............ அதுக்குள்ள உனக்கு தகவல் வந்துரிச்சா???" என்றான் கீழே பார்த்துக் கொண்டு.

"என்னடா பிரச்சினை உனக்கு? ஆருவுக்கும் உனக்கும் என்னங்கறது எல்லாம் எனக்கு தேவையில்லை. ஆனால் நாங்க என்ன உனக்கு கொடுமையா பண்றோம்? உனக்கு என்ன வேணும்னு வாயை திறந்து உன்னால கேட்க முடியாதா எங்க கிட்ட? ஆருவை தவிர எங்களை எல்லாம் இத்தனை நாளா அன்னியமா தான் நினைச்சிட்டு இருந்தியா நீ?" பொரிந்து தள்ளினாள் ரஞ்சினி.

"ஐயோ.... அப்படி இல்ல ரஞ்சி. நீ வேற புரிஞ்சிக்காமல் பேசுற" தலையை பிடித்துக் கொண்டான் ஆதி.

"பின்ன நீ அம்மாவுக்கு கால் பண்ணி பேசினதுக்கு எல்லாம் என்னடா அர்த்தம்???"

"தப்பு தான் சாரி. மேல படி ஏறி வந்தது தான் வந்த எனக்கு கொஞ்சம் வீடெல்லாம் க்ளீன் பண்ணிக் குடுத்துட்டு போ" சொல்லி விட்டு சிரித்தான் ஆதி.

அவன் இயல்பு நிலைக்கு திரும்பியது திருப்தி அளிக்க எழுந்து அவன் அள்ளிப் போட்டிருந்த ஆடைகளை பொறுக்கி எடுத்தாள் ரஞ்சினி.

"அந்த சட்டை என்ன கழுவுறதுக்கா... இங்க குடு?" ஆதி கையில் வைத்திருந்த சட்டையை காட்டிக் கேட்டாள் அவள்.

"இதுவா? இல்லை... இல்லை... இது புது சட்டை...." என்றான் பதட்டமாக.

அவன் முகத்தை ஒரு முறை நன்றாகப் பார்த்து விட்டு கையில் இருந்த ஆடைகளை கொண்டு போய் வாஷிங் மெஷினில் போட்டு விட்டு வந்தாள் ரஞ்சினி.

"ஏன் ரஞ்சி.. அம்மா போனதுக்கு அப்பறமா ஆரு தான் எங்க வீட்டு வேலை எல்லாம்  பண்ணிட்டு இருந்தாலா?" என்றான்.

"நீ காலைல எழுந்துக்குறதுக்கு முன்னாடியே உனக்கு காபி, டிபன்லாம் கொண்டு வந்து வச்சிட்டு, வீட்டை க்ளீன் பண்ணி, ராத்திரி சாப்பிட்ட பாத்திரம்லாம் கீழே கொண்டு வந்துடுவா. நீ என்னன்னா உங்கம்மா வேலைக்காரி வச்சு இதெல்லாம் பண்ணச் சொல்லி சொல்லியிருக்கான்னு நினைச்சிட்டு இருந்திருக்க...." வீட்டை பெறுக்கிக் கொண்டு பதில் சொன்னாள் ரஞ்சினி. ஆதி அமைதியாக அமர்ந்து இருந்தான்.

"நீ அவளை லவ் பண்றியாடா?" அவன் முகத்தை பார்க்காமல் கேட்டாள் அவள்.

"தெரியல" என்றான் அவனும் கீழே குனிந்தவாறு.

அவனோடு பேசிப் பேசி வீட்டை சுத்தம் செய்து முடித்தாள் ரஞ்சினி.

"மதியம் சாப்பாட்டுக்கு என்ன வேணும் சொல்லு? இனி மேல் மெனு உன்னைக் கேட்டு தான் பண்ணனும்னு புருஷன் உத்தரவு" என்றாள்.

அந்த குடும்பம் அவன் மீது வைத்திருந்த அன்பை எண்ணி நெகிழ்ந்தான். முழு தப்பையும் அவன் மீது வைத்துக் கொண்டு சுற்றி இருப்பவர்கள் மீது கோபப்பட்டதை நினைத்து வெட்கப்பட்டான்.

"உருளைக் கிழங்கு கறி" என்றான்.

அவனுக்கும் உருளைக் கிழங்குக்குமான காதலை எண்ணி சிரித்தாள்.

"உன்னோட ஆரு அளவுக்கு உன் மனசரிஞ்சு, உன் ருசியறிஞ்சு எனக்கு சமைக்கத் தெரியாதுடா. என்னால முடிஞ்சதைப் பண்ணித் தாரேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... ஆனால் உன்கிட்ட இருந்து எதையுமே எதிர்பார்த்து அவ உனக்காக இதை எல்லாம் பண்ணலடா. குறைஞ்ச பட்சம் உன்கிட்ட இருந்து பதிலுக்கு காதலை கூட அவள் எதிர்பார்க்கல! அவ உன் மேல வச்சிருந்த காதலுக்காக மட்டுமே தான் அவ உனக்காக இதை எல்லாம் பண்ணா. அவளை மாதிரி பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அபூர்வம் ஆதி. அப்படி ஒரு பொண்ணு நம்ம வாழ்க்கைல வந்தா அவளை கெட்டியா புடிச்சிக்கணும். விட்டுட்டோம் வாழ்க்கை பூரா வருத்தப் படுவோம்! உன்னை என் தம்பி மாதிரி நினைச்சு இதை எல்லாம் உன்கிட்ட சொல்றேன். தப்பா எடுத்துக்காத. நான் வாரேன்." என்று சொல்லி விட்டு சென்றாள் ரஞ்சினி!

பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ சேராததால் நிழல் இல்லை
உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro