பகுதி - 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

யாவும் நீயாய்
மாறிப் போக நானும்
நான் இல்லையே மேலும்
மேலும் கூடும் காதல்
நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்

"என்ன தம்பி இதெல்லாம் " என்றவரின் சோர்ந்த குரலில்
வருந்தியவன்  யுவா,வசந்த் இருவரையும் முறைத்துக் கொண்டே

"அங்கிள் நீங்க வருத்தப்படாதீங்க!! ஒன்னும் இல்லை, யுவா ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு உங்க கிட்ட பேசுறாங்க , நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்" என்ற அன்பு

"யுவா ப்ளீஸ்! ஏன் இப்படி பிஹேவ்
பண்ணுறீங்க , வசந்த் சொல்லுறதையெல்லாம் கண்டுக்காதீங்க , சுதா கூட நீங்க சந்தோஷமா இருந்தா போதும் " என்றவனை ஏளனப் புன்னகையுடன் நோக்கினான் யுவா.

"வெல்! குட் ஆக்டிங் மிஸ்டர் அன்பு , நீங்க ஏன் ஆக்டிங் பீல்ட்க்கு டிரை பண்ணக் கூடாது ? எல்லாரையும் அடிச்சு தூக்கிட்டு பர்ஸ்ட் வந்துடலாம் " என்றவனை வசந்த் கடுப்புடன் நோக்க  அன்புவோ ஒருவித இயலாமையுடன் நோக்கினான்.

இவர்களின் வாக்குவாதம் தொடர்ந்துக் கொண்டே இருக்க பொறுமை இழந்த சிவராமனோ
"ப்ளீஸ் அமைதியா இருக்கீங்களா ? யுவா என்ன தான் ஆச்சு ? கொஞ்சம் எல்லாத்தையும் சொல்லுறீங்களா ?" என்றவரிடம் திரும்பியவன் காலையில் நடந்த அனைத்தையும் கூற சிவராமனோ வசந்தை முறைக்க ஆரம்பித்தார்.

"பத்த வெச்சுட்டானே ! இவன் என்ன ஒரு டைலாக் கூட மிஸ் பண்ணாம அப்படியே ஒப்பிக்கிறான் பெருசு நம்மள பாக்குதே அய்யய்யோ " என்று மனதில் புலம்பிய வசந்த் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொள்ள

"உங்களை நான் ரொம்ப நல்ல பையன் , பொறுப்பான பையன்னு இப்போதானே யுவா கிட்ட சொன்னேன்.உங்க கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கல அன்பு , என்னோட நிலைமைல இருந்து யோசிச்சா தான் உங்களுக்கு புரியும் , ஒரு பொண்ணை பெத்து, வளர்த்து , அவளை நல்ல இடத்துல கட்டிக் குடுக்கிறது சுலபம்னு நினைச்சுட்டீங்களா ? " கோபமாக ஆரம்பித்தவர் ஆதங்கத்துடன் முடிக்க

"சாரி அங்கிள் , நான் இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லை! சுதாக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை , அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோங்கனு தான் சொல்ல வந்தேன் ஆனால் வசந்த்னால அது வேற மாதிரி முடிஞ்சுருச்சு...எனக்கும் உங்க கஷ்டம் புரியும் அங்கிள் , என் தங்கைக்கும் நான் தானே அம்மா அப்பா எல்லாம்!!! ஆனால் என் தங்கைக்கு பிடிச்சா மட்டும் தான் அந்த கல்யாணத்தை நடத்துவேனே தவிர எனக்கு பிடிச்சிருக்குனு என் ஆசையை அவள் மேல் திணிக்க மாட்டேன் "  மனம் முழுவதும் சுதாவிற்கு நல்லது நடந்தால் போதும் என நினைத்து தோன்றியதை கூறிவிட்டான்.

"அப்போ என் ஆசையை அவ மேல நான் திணிக்கிறேனு நினைக்கிறீங்களா தம்பி " என்றவருக்கு "ஒருவேளை அப்படி இருக்குமோ " என்ற எண்ணம் வேறு வர அந்த ஏசி காபி ஷாப்பிலும் வியர்க்க ஆரம்பித்தது.

"அங்கிள் கூல் என்ன இது ? இந்தாங்க வாட்டர் கால்ம் டவுன் " என்று கூறி மெலிதாக புன்னகைத்து தன் கைகளைப் பற்றிக் கொண்ட யுவாவின் கைகளைப் பார்த்தவரின் கண்களில் ஒரு மெச்சுதல் இருந்தது மற்ற இருவருக்கும் நன்றாகவே தெரிந்தது.

"என்னடா இவன் இப்படி நடிக்கிறான் ?" என்று காதருகே வந்து முணுமுணுத்த வசந்தை அன்பு முறைத்துப் பார்க்க

"செத்தோம் ! இவன் என்ன கண்ணால் பார்த்தே நம்மளை எரிச்சுருவான் போலயே! ஆனாலும் எப்படியாவது இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தியாச்சும் அன்பு கூட சுதாவை சேர்த்து வெச்சுடணும்  "  என நினைத்தவன்  சிவராமனிடம் பேச ஆரம்பித்தான்

"உங்க பொண்ணை அளவுக்கதிகமா அன்பு காதலிக்கிறான் , அவளை ராணி மாதிரி பார்த்துப்பான் , நல்ல வேலை, நல்ல சம்பளம்னு எல்லாமே இருக்கு !! குறிப்பா நீங்க பார்த்த மாப்பிள்ளையை விட ரொம்ப நல்ல பையன் , அப்பா அம்மா இல்லைனு யோசிக்கிறீங்களா ? அப்படி யோசிச்சா நல்லா கேட்டுக்கோங்க நானும் இவங்க குடும்பத்துல ஒருத்தன் என் அம்மா அப்பா தான் இவனுக்கும் அம்மா அப்பா " என்றவனிடம் இல்லை என்று தலையசைத்தவர்

"அதெல்லாம் நான் எதிர்ப்பார்க்கல பா, என் பொண்ணை நல்லா பார்த்துக்கிட்டா போதும்னு தான் நான் நினைக்கிறேன் "
என்றவரைப் பார்த்து சிரித்தவன்

"அப்போ இவன் கண்டிப்பா பார்த்துக்க மாட்டான் " என்றவன் யுவாவைப் பார்த்து நக்கலாக சிரிக்க அவனோ கடுப்புடன் வசந்தை நோக்கினான்.

"அன்பு உங்க பொண்ணை நாலு வருஷமா காதலிக்கிறான் , ஆனால் இதுவரை அவன் பார்வையால கூட சுதாகிட்ட அவனோட காதலை சொன்னதில்ல ,ஏன் தெரியுமா ?
உங்க பொண்ணை அந்தளவு புரிஞ்சு  வெச்சிருக்கான் , அவளுக்கு உங்களை எந்தளவு பிடிக்கும்னு தெரியும் அதுக்காக தான் அவன் காதலை கடைசி வரை சொல்லவே இல்லை, இதோ இப்போ கூட அவனோட காதலை மனசுக்குள்ள பூட்டி வெச்சுட்டு சுதாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ யுவானு தான் யுவாகிட்ட கேட்க வந்துருக்கான் , நீங்களே தேடினாலும் இப்படி ஒருத்தன் கிடைக்க மாட்டான் அங்கிள் , இவனுக்கு கட்டி வைக்கலனா கூட பரவால இதோ இந்த தடியனுக்கு மட்டும் கட்டி வெச்சுராதீங்க! சுதா பாவம் " என்றவன் எழுந்து வெளியே சென்று விட

இதுவரை சொல்லாத சொல்லாத என்று வசந்தை தடுத்துக் கொண்டிருந்த அன்புவும் ஒரு கட்டத்தில் அமைதியாகி விட்டான்.
ஒரு தலைக் காதல் தந்த வலியால்!!

அனைத்தையும் கேட்ட சிவராமனுக்கு தலை சுற்றுவது போல் இருக்க இரத்த அழுத்ததும் அதிகமாக ஆரம்பித்தது.

காலையில் நடந்ததில் கோபத்தில் உலன்றுக் கொண்டிருந்தவன் ஒருவேகத்தில் சிவராமனிடம் சொல்லி விட்டான் ஆனால் அது இப்போது தவறோ எனத் தோன்றியது.

அன்புவின் காதலைக் கேட்டதும் சுதாவிற்கு அன்பு தான் சரி என்ற நினைப்பே கசந்தது.
ஆனால் அவனால் அன்புவைப் போல் இருக்க முடியாதே!
அதை யுவா விரும்பவும் மாட்டான் !!
என்னை எனக்காகவே சுதா ஏற்றுக் கொள்ள மாட்டாளா ? என மனம் ஏங்க எதையும் முகத்தில் காட்டாமல் இறுகிய முகத்துடன் இருந்தவன் அப்போது தான் சிவராமனைக் கவனித்தான்.

"அங்கிள் " என்று பதறிய யுவா அவருக்கு அதிகமாக வியர்வைத் துளிகள் வருவதைப் பார்த்து பயந்து உடனே வெளியில் அழைத்துச் செல்ல வலது கையைப் பிடிக்க அதே நேரத்தில் "வெளியே போகலாம் அங்கிள் " என அன்பும் இடது கையைப் பற்றியிருந்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் அதில் எந்த உணர்ச்சி இருக்கிறது என்பதை இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெளியே வந்ததும் கொஞ்சம் ஆசுவாசமானவர் இப்போது இருவரையும் நிமிர்ந்துப் பார்த்தார்.

"அங்கிள் நான் ஒன்னு சொல்லவா ?" என யுவா கேட்க

"ம்ம்ம் " என்றவர் மனதிலோ சுதாவிற்கு யுவாவைப் பிடித்திருக்கிறதா என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

"நம்ம சுதா கிட்டயே கேட்டுடலாம் அங்கிள் , ஒருவேளை சுதாவுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைனா நிறுத்திடலாம்! அப்பாவை நான் கன்வின்ஸ் பண்ணிக்கிறேன் எனக்கு பிடிக்கலை சொல்லிடுறேன் நோ ப்ராப்ளம் , ப்ளீஸ் நீங்க டென்சன் ஆகாதீங்க உங்களுக்கு பிபி அதிகமாகுதுனு நினைக்கிறேன் " என்றவனை இன்னும் இன்னும் தான் பிடித்தது சிவராமனுக்கு.

சரியென்பதாய் தலையசைத்தவர்
சுதாவிற்கு அழைக்க முதல் அழைப்பிலேயே அட்டெண்ட் செய்தவள்

"ப்பா " என்று கூற
அவள் குரலிலேயே அவள் அழுதிருக்கிறாள் என்பதை கண்டுக் கொண்டவர் பதறி "என்னாச்சு டா ? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு ? அழுதியா ?" எனக் கேட்க
அதே பதட்டம் மற்ற இருவருக்கும் இருந்தது.

அன்புவின் உடல் மொழிதள் அவன் பதற்றத்தைக் காட்டிக் கொடுக்க யுவாவின் கண்களில் மட்டும்  பதற்றம் தெரிய மிகச் சாதாரணமாக இருந்தவனைப் பார்த்து இவன் நல்லவன் தானோ என நினைத்த அன்புவிற்கு வெறுத்துப் போயிற்று.

"ஒன்னுமில்ல பா , என்னாச்சுப்பா இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க " என்றவள் தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

"அம்முமா அப்பா உன்கிட்ட ஒன்னு கேட்பேன் உண்மையை மட்டும் தான் சொல்லணும் " என்றவரிடம்

"ஏன் பா இப்படியெல்லாம் கேட்குறீங்க ? நான் உங்க கிட்ட உண்மையை மட்டும் தானே பேசுவேன் , பாரு கிட்ட மட்டும் தான் அடி வாங்க கஷ்டப்பட்டுட்டு பொய் சொல்லுவேன் " என்றவளின் பதிலில் மெலிதாக புன்னகைத்தவர்

"சரி டா மா , உனக்கு யுவியைப் பிடிச்சிருக்கா ? இந்த கல்யாணத்துல சம்மதமா ?" எனக் கேட்டவருக்கு என்ன கூறப் போகிறளோ என்ற பதட்டம் இருக்க

"இல்லைனு தான் சொல்ல போறா " என நினைத்த யுவாவிற்கு எதையோ இழந்தது போல தோன்றியது.
அவள் நடந்துக் கொள்வது தான் பிடிக்கவில்லையே தவிர அவளை மிகவும் பிடித்தது.

"பிடிக்கலைனு சொல்லிடு சுதா " என மனதினுள்ளே அன்புவும் வேண்டிக் கொண்டிருக்க

இருவரின் மனதையும் படித்தது போல அவளும் அதே பதிலைத் தான் கூறினாள்.

"ஆமா பா பிடிக்கல " என்றவளின் பதிலைக் கேட்டு அதிர்ந்த சிவராமன்
யுவா மற்றும் அன்புவை பார்க்க
அன்புவின் கண்கள் சந்தோஷத்தில்  விரிய யுவா இப்பொழுதும் சாதரணமாக தான் நின்றிருந்தான்.
அவன் எதிர்ப்பார்த்த பதில் தானே இது!!!

"அதை ஏன் டா அப்போவே சொல்லல ?முன்னாடியே சொல்லியிருக்கலாமே" அவருக்கும் மனதில் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்தது.முன்னாடியே கூறியிருந்தால் இந்த அளவு வந்திருக்காதே என நினைத்தவர் அதை அவளிடமே கேட்டும் விட்டார்.

"முன்னாடி சொல்லியிருந்தா என்ன ப்பா பண்ணியிருப்பீங்க ?" என்றவளிடம் என்ன கூறுவது எனத் தெரியாமல் அவர் யுவாவைப் பார்க்க

"கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்னு சொல்லுங்க அங்கிள் " மெதுவாக கூறியவனைப் பார்த்தவருக்கு அப்படி அவளிடம் கூறவே நா எழவில்லை.

"வேணாமே யுவா " என்றவரிடம் மறுப்பாக தலையசைத்தவன் சொல்லுங்க எனக் கூறி கண்ணசைக்க அவன் கூறியதை அப்படியே கூறியவர்

"அப்பா " என்ற சுதாவின் கோபக் குரலில் சிறிது பயந்து தான் போனார்.

" நீ தானே டா யுவாவைப் பிடிக்கலைனு சொன்ன " என்றவரின் பதிலில் அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

"ஆமாப்பா பிடிக்கல , பயமா இருந்துச்சு , அவன் வேணாம்னு கத்தி அழணும் போல இருந்துச்சு ,
கோபம் கோபமா வந்துச்சு , எனக்கு என்ன பிடிக்கும்ணு பார்த்து பார்த்து செய்யற நீங்களா இப்படி பண்ணுறீங்கனு வருத்தமா இருந்துச்சு ஆனால் " என்று நிறுத்தியவள்

"இப்போவும் எனக்கு அந்த லேம்ப் போஸ்ட்டை பிடிக்கல "என்றவள் அழ ஆரம்பித்தாள்.

அவளின் லேம்ப் போஸ்ட் என்ற அழைப்பில் வலிகளை மறைத்து இறுக்கமாக வைத்திருந்த முகத்தில் அவனையும் மீறி ஒரு மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.

"அழாதே டா , இப்போ நான் என்ன பண்ணுறது நீயே சொல்லு " என்றவரிடம்

"நான் என்ன சொன்னாலும் எனக்காக செய்வீங்களா ப்பா ?" சுதா கேட்க

"கண்டிப்பா டா அம்முமா " என்றவர் அவள் என்ன கூறப் போகிறாள் என ஆவலாய் எதிர்ப்பார்க்க அன்புவும் , யுவாவும் கூட அதே போல் தான் நின்றிருந்தனர்.

"அந்த லேம்ப் போஸ்ட் இருக்கான்ல பா என் கூட பேசவே இல்லை , பேசி நாலு நாளுக்கு மேல ஆகுது!! அவனை என்கூட பேச சொல்லுறீங்களா பா , அவன் கூட எனக்கு பேசணும் , லேம்ப் போஸ்ட்னு வெச்சிருந்த அவன் பெயரை யுவினு மாத்திட்டேன்னு சொல்லணும் பக்கத்துல ஒரு ஹார்ட் வேற வெச்சிருக்கேனு சொல்லணும், என் வால்பேப்பர்ல இருந்து வாட்ச்ப், இன்ஸ்டானு எல்லா டிபிலையும் அவனும் இருக்கானு சொல்லணும் , அவனை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் போல ப்பா , அதையும் அவன் கிட்ட சொல்லணும் ,  நீங்க சொன்னீங்களே கல்யாணத்தை நிறுத்தியிருப்பேனு அப்போ தோணுச்சு பா யுவி மட்டும் தான் எனக்கு வேணும்னு , யுவி போதும் பா எனக்கு !!! கல்யாணத்தைலாம் நிறுத்திராதீங்க பா  ப்ளீஸ் " என்றவள் தேம்பி தேம்பி அழுக
சிவாவிற்கு கண்கள் கலங்கியது.
யுவா மற்றும் அன்பு
இருவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்திருந்தது.

"ஏன் யுவா பேசல "  இத்தனை நேரம் லவுட் ஸ்பீக்கரில் அவள் பேசவதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்த யுவாவிடம் சிவராமன் கேட்டுவிட

"அங்கிள் அது " என்று இழுத்தவனின் குரலைக் கேட்டதும் அழுகையை நிறுத்தியவள்

"அப்பா யுவி இருக்கானா ?சொல்லுங்கப்பா ப்ளீஸ் ? எங்கே இருக்கீங்க ? யுவி யுவி நான் பேசுறது கேட்குதா ? ஏன் என்கூட பேசல ? " என்றவள் பேசிக் கொண்டே செல்ல அதற்கு மேல் அவனால் அங்கு நிற்கமுடியவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro